Archive for கவிதை

விரிசல் – கவிதை

சட்டென புலப்பட்டது
சுவரில் விரிசல்
நேற்றுவரை இல்லாமலிருந்ததோ
என்கிற கேள்விக்கு விடையில்லை
கொஞ்சம் உற்றுப் பார்க்கும்போது
அழகாகப் பட்டது
சுவரில் மின்னல் போல
மெல்ல தடவிப் பார்க்கும்போது
கிளரும் விரல்கள்
உள்ளே ஒரு விதை வைத்தால்
பெருமரம் முளைக்குமோ?
வீட்டுக்குள்ளே ஓர் ஆலமரம்!
விரிசலில் ஊதினேன்
மண் வாரி கண்ணுக்குள் விழ
லேசாய் உறுத்தியது
இன்னொரு சமயம்
பலமாய்க் கதவடைத்து மூடியபோது
சிற்சில எறும்புகள் உதிரின
என் உடலை
விரிசலுக்குள் புகுத்தி
வெளி வந்தபோது
மேலெங்கும் கவிதை வரிகள் ஒட்டியிருந்தன
எறும்புகள் கவிதைகளைத் தின்கின்றனவா?
பின்னொரு சமயம் யோசிக்கவேண்டும்
விரிசலை மறைக்கும் விதமாய்
ஒரு கண்ணாடியை மாட்ட
முகத்தில் அறைந்தது என் முகம்
இப்போது
என் முகத்தின் பின்னே
மறைந்திருக்கிறது விரிசல்
இன்னொரு சமயம் நீங்கள் வரும்போது
அக்கண்ணாடியை அவசியம் காணவும்.

Share

மூன்றாம் கட்டத்திலிருந்து துவங்கும் ஆட்டம் – கவிதை

வெகு நேர மோதலுக்குப் பின்
எனக்குத் தீக்குச்சியும்
உனக்குக் கல்லுமென முடிவானது,
யதேச்சையாய் என்றாலும் வெகு கச்சிதமாய்.

சோழிகள் உருட்டப்பட்ட தருணங்களிலெல்லாம்
உன் கண்களில் தொடங்கி அடங்கியது ஜ்வாலை
எனது ஜ்வாலையை விழுங்கி விட்டிருந்தன
என்னிரு கண்கள்

வெகு முன்பு நானும் நீயும் ஆடிய
தொடக்க கால ஆட்டங்களிலிருந்த
பரஸ்பர புரிந்துணர்வும் வாஞ்சையும்
இப்போதும் இருப்பதாகச் சொல்லிக்கொள்வோம்
சொல்லி வைத்த மாதிரி

ஒரு தாயம் விழும் தருணம்
எரிமலை

உனது கைக்குள் அடங்காமல் தெறித்துவிழும்
சோழியைப் பற்றி எடுக்கிறேன்
உன் கையின் தகிப்பு சோழிக்குள்

கடைசியாய் எனக்கு ஒரு தாயம் விழுகிறது.
தீக்குச்சி பற்றி எரிய
மூன்றாம் கட்டத்திலிருந்து ஆட்டத்தைத் துவக்குகிறேன்
முதலிரண்டு கட்டங்களைப் பற்றிய உணர்வே உனக்கில்லை.
நாம் சோழியை மட்டும் உருட்டிக்கொண்டிருக்கிறோம்.

Share

அவன் எறிந்த கல் – கவிதை

தெளிந்த நீரோட்டத்தின் கீழே
வெகு கீழே
அலைந்து கொண்டிருந்தது கலங்கல்
ஒரே ஒரு கல் போதும்
எத்தனை சொல்லியும் கேளாமல்
அக்கல்லுடன் வந்தான் அவன்
மரங்களிலிருந்து பேரிரைச்சலுடன் பறந்தன பறவைகள்
அத்தனை பெரிய இடி
பச்சை மரம் ஹோவென பற்றி எரிந்தது
அன்றிரவு அம்மா செய்த கார்த்திகை அடை
கல்லை விட்டு எழவே இல்லை
பிய்ந்தே போனது
முடிவில் அவன் கலங்கிய நீரோட்டத்தில் குதித்தான்
என் புறங்கையில் கண்ணீர்த்துளி

-oOo-

Share

இப்போது வேண்டாத மழைக்கு – கவிதை

இம்மழை எனக்காகவே பெய்கிறது, நானறிவேன்
நான் இம்மழையைக் கவிதையில் பிடிக்க விரும்புகிறது
எதிர்பாராத ஒரு நேரத்தில்
இம்மழை அதற்காகவே பெய்கிறது
மூடியிருக்கும் கதவிடுக்கின் வழியே
வழிந்து வரும் நீர் ஏக்கத்துடன் பார்க்கிறது
என்னை எழுதேன் என்று
வெளியில் கேட்டுக்கொண்டிருக்கும்
ஹோவென்னும் சத்தத்தை மீறிக்கொண்டிருக்கிறது
அறைக்குள் சுற்றும் ஃபேனின் சத்தம்
நான் மழைக்குச் சொல்லவில்லை
வானெங்கும் என் கண்கள்
கொஞ்சம் வெயிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதென்று
என்னையும் மழையையும்
பிரித்திருக்கும்
சுவர்களின் கீறல்களின் வழியே
இன்னும் உள் வடிந்துகொண்டிருக்கிறது மழை நீர்

Share

மரணத்தின் நிகழ்வு – கவிதை

யாராலும் தடுக்கமுடியாத
இந்நிகழ்வின் மரணம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
இக்கணத்தை
கால ஓட்டத்தில்
மனப்பிரதியில்
அச்செடுத்து வைக்கிறேன்
ஓர் தலைசிறந்த பார்வையாளனாக
வெற்றுக் கடமையுணர்வுடனல்லாமல்
உள்ளார்ந்த ஐக்கியத்துடன்
இந்நிகழ்வு
நிகழ்ந்துகொண்டிருக்கும்
இந்நேரம்
மிக இரம்மியமானது, இனிமையானது
நீங்கள் அறிவீர்களா?
மேல்மூச்சு வாங்கிக்கொண்டிருக்கும்
கிழவியைச் சுற்றிப் பெருங்கூட்டம்
அவள் வைத்த வாதா மரத்திலிருந்து
வாதாங்கொட்டை கீழே விழும் ஒலி
சொத்.

Share

சௌந்தரம்மாளின் நினைவுகள் – கவிதை

சௌந்தரம்மாளைப் பார்க்கவேண்டும்
நேற்றுதான் அவள் பெயரை அறிந்திருந்தேன்
காகிதக் கப்பல்கள் பொதுமிக் கிடந்த நாளொன்றில்
நிறைய ஃபோன்களுக்குப் பின்
சௌந்தரம்மாள் வீட்டைக் கண்டேன்
வீடெங்கும் தோசை மணம்
சௌந்தரம்மாள் ஒரு சிறிய அறையில் படுத்திருந்தாள்
நான் உள்ளே செல்லவில்லை
கையிலிருந்த ஆவணத்தைத் தந்து கையெழுத்து வேண்டுமென்றேன்
மகனின் முகத்தில் அகற்றவியலாத சோகம் அப்பியிருந்தது
திரையில் மெல்ல நகரும் கலைப்படம் ஒன்றின்
கதாநாயகன் போல அதை வாங்கிச் சென்றான்
மறுநாள் சௌந்தரம்மாள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
பார்வதி தியேட்டரை அடுத்துள்ள சந்தில் நுழைந்து மீளும்போதெல்லாம்
என்னளவில் வயது ஒரு நாளேயான
நான் பார்த்திராத சௌந்தரம்மாள் பிறந்துகொண்டேயிருக்கிறாள்

Share

ஆளுமை – கவிதை

எதிர்பாராமல்
யாரோ எறிந்த பந்தின்
விசை தாங்காமல்
நொறுங்கியது கண்ணாடிச்சுவர்
மீஉறுதியின் உச்சப்புள்ளி
உடைந்து போன சில்லுகள்
கொஞ்சம் மிச்சத்துடன்
என் கேள்வியோ
மீண்டு
உட்குவிந்த வலையாய்
துப்பும்போது
விசை தாங்குமோ
வலையாகுமோ
அவ்வாளுமை

-oOo-

Share

கூத்து – கவிதை

த்ரௌபதி சேலையுரியப்பட்டபோது
அவள் பேசிய நீண்ட வசனங்களில்
அதிக நடிப்புக்கு அவள்-அதிக அழுகைக்கு அவர்கள்;
அர்ச்சுனன் தபசில்
ஒவ்வொரு படிக்கும்
நீண்ட பாடலை
பொறுமையுடன் கேட்ட
பெருமக்கள்-இவர்கள்
பேரன் பேத்திகள்
பார்வையாளர்களிலிருந்து
தங்களை நடிகர்கள் வரிசைக்கு
மாற்றிக்கொண்டவர்கள்

ராஜா மார்த்தாண்டவர்மன்
கையிருந்த பளபள அட்டைக் கத்தியைப்
(“சோதி முத்து” ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்குவானாம்!)
பத்திரமாக வைத்திருப்பதைப் பார்த்துப் போகிறார்கள்
இரசனை மிக்க
நவீன தேசத்துக்காரர்கள்

கூத்து மேடையின் படியெங்கும்
பதிந்திருக்கும்
கால்ரேகைகளிலும்
கிருஷ்ணனின் தலைக்கவசத்திலும்
பீமனின் கதையிலும்
செத்துப்போன சோதிமுத்து வீட்டில் கிடக்கும் சில
கூத்துப் பொருள்களிலும்
இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது
இன்னும் வரப்போகும் ஜென்மங்களில்
அழியப்போகிற கூத்து

த்ரௌபதியிடம் சொல்லிவைக்கவேண்டும்
துச்சாதனனால் அவளுக்குத் தொல்லையில்லை என்றும்
அவளால் கிருஷ்ணனுக்கு வேலையிருக்காது என்றும்.

Share