Archive for கவிதை

கூத்து – கவிதை

த்ரௌபதி சேலையுரியப்பட்டபோது
அவள் பேசிய நீண்ட வசனங்களில்
அதிக நடிப்புக்கு அவள்-அதிக அழுகைக்கு அவர்கள்;
அர்ச்சுனன் தபசில்
ஒவ்வொரு படிக்கும்
நீண்ட பாடலை
பொறுமையுடன் கேட்ட
பெருமக்கள்-இவர்கள்
பேரன் பேத்திகள்
பார்வையாளர்களிலிருந்து
தங்களை நடிகர்கள் வரிசைக்கு
மாற்றிக்கொண்டவர்கள்

ராஜா மார்த்தாண்டவர்மன்
கையிருந்த பளபள அட்டைக் கத்தியைப்
(“சோதி முத்து” ரொம்பக் கஷ்டப்பட்டுத் தூக்குவானாம்!)
பத்திரமாக வைத்திருப்பதைப் பார்த்துப் போகிறார்கள்
இரசனை மிக்க
நவீன தேசத்துக்காரர்கள்

கூத்து மேடையின் படியெங்கும்
பதிந்திருக்கும்
கால்ரேகைகளிலும்
கிருஷ்ணனின் தலைக்கவசத்திலும்
பீமனின் கதையிலும்
செத்துப்போன சோதிமுத்து வீட்டில் கிடக்கும் சில
கூத்துப் பொருள்களிலும்
இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது
இன்னும் வரப்போகும் ஜென்மங்களில்
அழியப்போகிற கூத்து

த்ரௌபதியிடம் சொல்லிவைக்கவேண்டும்
துச்சாதனனால் அவளுக்குத் தொல்லையில்லை என்றும்
அவளால் கிருஷ்ணனுக்கு வேலையிருக்காது என்றும்.

Share

நிழல் – கவிதை

ஒரு மனிதனின் பல புறவடிவங்களை
கேள்விக்குள்ளாக்கி
நிழல்களின் வடிவங்கள்
பட்டியலிட முடியாததாய்
சிறுத்தும் ஒடுங்கியும் நீண்டும், ஆனாலும்
கருமை மட்டும் பொதுவாய்

வெளிச்சமற்ற பொழுதிலும் கூட
நிழல்கள்
கூடவே இருக்கின்றன
இதை உருவேற்றிக்கொள்ளும்போது
தனிமையிலும்,
கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாய்
நாம் விரும்பாதபோது
புறந்தள்ளக்கூடியதாய்
விரும்பும்போது
ஏற்படுத்திக்கொள்ளக்கூடியதாய்
இலகுவான தோழமை

ஏதோ இருவரின் நிழல்கள்
சங்கமித்துக்கொள்ளும்
எது எவரது என்று இனம் காண இயலாதவாறு
காற்றுச் செல்லும் இடைவெளி
இருவருக்குமிருந்த போதும்

நிழலுருவத்தை வரையும் ஒருவனால்
நிழலை மட்டுமே வரைய முடியாது
வரைய வரைய
அது நிஜமாகிக்கொண்டே இருக்கும்

நினைவுகளினூடே
என்னைக் கடந்து
தன் திசைமாற்றி
என் கைப்பிடிக்குமோ
நான் முன்னகர முன்னகர
பின் நீளும்
என்
நிழல்?

[எனது இந்தக் கவிதை பிப்ரவரி கணையாழியில் வெளியாகியுள்ளது.]

Share

பிறிதொன்றில்லாத கணங்கள்-கவிதை

எப்போதும்

கனவொன்றில் பிம்பங்களை

கைபிடிக்கப்பார்க்கவும்

விழித்திருக்கும்போது

கனவின் தடங்களைத் தேடியும்.

     பிறிதொன்றில் ஆழக்கிடக்கும்போது

     சாரல் மழையாகிவிடுகிறது

     ஒரு குழந்தை சிரித்தடங்க

     ஒரு கவிதை முடிந்துவிடுகிறது.

     ஒரு வண்ணத்துப்பூச்சி

     கண்பார்வையிலிருந்து மறைந்துவிடுகிறது

திறந்திருந்த ஜன்னல் வழி சூரியன்

உள்வந்த சிவப்புக் கதிர்

அறையைச் சிவப்பாக்கி வைத்திருந்தது;

மஞ்சளாக்கிவைத்திருந்தது;

பின்வந்த நிறமற்ற கதிரோ

என்னை எழுப்பிவிட்டது.

     காலிடறும் நேரமும்

     கைதவறும் பீங்கானும்

     அப்பொழுதில்

     சாரலையும்

     ஒரு கவிதையும்

     ஒருசேரக் கொண்டுவருகின்றன

     பிறிதொன்றில்லாத கணங்களில்.

Share

பயணம் – கவிதை

–எப்போதும் வறண்டு கிடக்கும் ஏரியில்

நிறைந்திருந்த நீரில்

காத்திருந்தன

இரண்டு வெள்ளை நிற நீர்ப்பறவைகளும்

ஒரு சாம்பல் நிற நீர்ப்பறவையும்.

–வழியெங்கும்

குட்டைப் புதர்ச்செடியில் பூத்திருந்தன

வண்டுகள் சுற்றாத

மணமற்ற

சிறிய

மஞ்சள் நிறப்பூக்கள்.

–பெருங்காற்றில்

கிழிந்திருக்கும் வாழை இலைகளில்

காய்ந்திருக்கிறது பறவையின் எச்சம்.

–பிளந்திருந்த மரமொன்றில்

உயிர்த்திருக்கிறது காளான்

இப்படியாக

குறித்து வைத்த படிமங்கள் போக

ஒரு பயணக்கவிதை எப்போது பேசப்போகிறது

இடப்புறச் சன்னலினூடாக

கண்ணுக்கு வராமல்

தொலையும் கவிதைகளை.

Share

தோட்டத்து வெளியில் ஒரு பூ – கவிதை

தோட்டத்து வெளியிலும் சில பூக்கள் என்கிற வண்ணதாசனின்

சிறுகதைத் தலைப்பை எங்கேயோ பார்த்தேன். அந்த வரி தந்த

பாதிப்பில் வந்த கவிதை இது.

தோட்டத்து வெளியில் ஒரு பூ

கண்ணெதிரே பூத்துக்குலுங்கும்

மலர்களையொதுக்கி

பிறவொன்றைத் தேடும் என் பிறவிக்குணம்

பெரும் சம்மட்டியடி வாங்கியிருக்கிறது

வழியெங்கும் என்னுடன் நடந்துவரும்

பருவகாலங்களை விலக்கி வைத்து

எங்கோ அலைந்துகொண்டிருக்கும்

வசந்த காலத்தைத் தேடும் நிமிடங்கள்

கடந்த காலங்களாக

நிகழ்கால வேர்வை நெஞ்சுக்குழிக்குள்

கொஞ்சம் இதமாயும்

ஜீவனற்றுப் போயிருந்ததாக

நானே உருவாக்கிக்கொண்ட நிலத்தில்

என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது

வெய்யில் சூட்டில்

நிறைய பளபளப்பு

தோட்டத்திற்குச் சொந்தமான,

தோட்டத்து வெளியில் ஒரு பூ

Share

உயிர்த்தெழும் மரம் – கவிதை

காலையில் கண்விழிக்கிறது மரம்

இரவின் மௌனத்திற்குப் பின்

பறவைகளின் கனவுக்குப் பின்

பூமியிறங்கும் பனியுடன்

அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்

பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது

பெருங்காற்றில் அசையும்போது

விலகும் தாளம், சுருதி பேதத்தை

அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்

வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது

முன்பனியில்

அல்லது பின்னோர் மழைநாளில்

உயிர்த்தெழுகிறது

குழந்தைக்கான உத்வேகத்துடன்

இத்தனையின் போதும்

எப்போதும் ஓய்வதில்லை

மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்

அதன் பேரமைதிக் கச்சேரி

Share

முதலாம் சந்திப்பு – கவிதை

சாதாரண சம்பாஷணையினிடையே

அந்த மூன்றாம் கேள்வியும் கேட்கப்பட்டுவிட்டது.

முதலிரண்டு கேள்விகளுக்குச் செய்தது போலவே

தெரிந்த ஒன்றை சொல்லப் பிரியப்படாதது போன்ற அசைவுகளுடன்

கேள்விகளைச் சுற்றிச் சுற்றி என் மனம்

கேட்போனில் முடிகிறது

கேட்போன் எப்போதுமே

என் பதிலுக்காகக் காத்திராமல்

என் மௌனத்துக்காகவே கேட்கிறானாய் இருக்கலாம்

இந்த சுவாரஸ்யமான ஒருகை “செவ்வி”யின்

அடுத்த கேள்விக்குப் போகுமுன்

ஒரு கேள்வி நான் கேட்கவேண்டியிருக்கிறது

அவன் என்ன சாதியென.

அதன் பின் அச்செவ்வி

மீவேகம் எய்தலாம்

அல்லது

சிநேகபாவம் கூடலாம்

இரண்டில் எந்தவொன்றையும் சரிசெய்யும் என் அடுத்த கேள்வி

அவனின் அடுத்த கேள்விக்கு முன் தயாராகிவிட்டால்

கைகுலுக்கல், சிகரெட், பீர், இன்னபிற என்பதாக நான்.

என்னை வரையறுக்கும் வேகத்தில் அவன்.

இடையில் கிடக்கின்றன

சில சொற்களும்

அவை நிரப்பாமல் விட்ட ஒரு பெரிய பள்ளமும்

இன்னும் பயன்படுத்தப்படாத சில பிரயோகங்களும்.

Share

மௌனம் – கவிதை

நமதே நமதான நம் மௌனம்

படுக்கை அறையின் தடுப்பைத் தாண்டிய போது

தன்னைச் செறிவாக்கிக்கொண்டது

மூன்றாம் கட்டைக் கடந்தபோது

கொஞ்சம் கூர்மையாக்கிக்கொண்டது

சமையலறையைத் தாண்டியபோது

நிறம்கூட்டிக்கொண்டது

செறிவான, கூர்மையான, கடும் நிறத்துடன் கூடிய மௌனம்

பின்வாசலைக் கடக்குமுன்

அதைப்பற்றிய பிரக்ஞையில்லாமல்

நானோ நீயோ

என்னையோ உன்னையோ தொடாமல்

ஜன்னலுக்கு வெளியில் அலையும்

ஒன்றுமில்லாத ஒன்றை ஊன்றிக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்

அதற்குள் இன்னொரு மௌனம் தலைதூக்கிவிடும் அபாயத்தை அறிந்தும்

தூங்கிக்கொண்டிருக்கிறது

நமதே நமதான ஆசைகளும், வெளிர் நீல வெளிச்சத்தில் நிர்வாணங்களும்;

அப்போது

அங்கே

உருவாகிவிட்டிருந்த, சீக்கிரம் வெடிக்கப்போகிற

பலூனின் வாழ்நாளில் அமிழ்ந்திருக்கிறது

நம் தன்முனைப்பின் ஆழமான அடையாளங்கள்

Share