Archive for கவிதை

உள்ளேயிருந்து ஒரு குரல் – கவிதை

உள்ளேயிருந்து ஒரு குரல்

எங்கோ
கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல்
தேடி அருகில் செல்லச் செல்ல
மாறிக்கொண்டே இருந்தது அதன் இடம்
மாயாவி விளையாட்டில்
உடல் சோர்ந்தபோது
மிக அருகில் கேட்கிறது அக்குரல்
என் தலைக்குள்ளிருந்து
கூவும் குயிலொன்றுக்கு
இசை பாடுகிறது
தெருப்பறவை
பதறிக் கண்விழித்த நேரத்தில்
மினுங்கிக் கொண்டிருந்த
மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தோடு
அறையெங்கும் அமைதி.
எங்கிருந்தோ என்னைத் தொடர்கிறது
பிறக்காத குழந்தையின் அழுகுரல்.

Share

கொஞ்சம் மெண்ட்டல் ப்ளாக்

நீண்ட நாள்களாக எதுவுமே எழுதவில்லை. கொஞ்சம் மெண்டல் ப்ளாக். 🙂

நேற்று வந்த ஒரு லிங்க்கை க்ளிக் செய்யக்கூடாது என்று நினைத்துக்கொண்டே ஞாபகமாக க்ளிக் செய்தேன். உடனே ‘தமிழ்க் கவிதைகள் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுவிட்டது’ என்றார்கள். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. எப்போதெல்லாம் ஃபீட் பர்னரில் கவிதைகள் வருமோ அப்போதெல்லாம் எனக்குக் கவிதைகள் வருமாம். சரி, என்ன பெரிய என்று இருந்துவிட்டேன்.

இன்றே ஒரு கவிதை வந்தது.

இன்று சம்பள நாள் என்பது கவிதைத்தலைப்பு. மங்களகரமாகத் தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்று மேற்கொண்டு படித்தேன்.

பால்காரனுக்கு இவ்வளவு…
பள்ளிக் கட்டணம் இவ்வளவு…
மளிகை சாமானுக்கு இவ்வளவு…
வீட்டு வாடகைக்கு இவ்வளவு…
தீபாவளி செலவுக்கு இவ்வளவு…
என வரிசையாய்
கணக்கு போட்டபடி
அலுவலகம் வந்து சேர்ந்தேன்…

மாலைக்குள் அத்தனை வேலையையும்
முடித்து விட்டு சம்பளத்திற்காகக்
காத்திருந்தேன்..!
அழைத்துச் சொன்னார் முதலாளி
இம்மாதம் சம்பளமில்லை
அடுத்த மாதம் பார்க்கலாமென்று.

என்னுடைய அத்தனை
கணக்குகளும்
இந்தியனின் எண்கணிதக்
கண்டுபிடிப்பில் வந்து நின்றன..!

ஏமாற்றத்தோடு
வீடு திரும்பினேன்…
சிரித்தபடி வரவேற்ற
என் இல்லாள்
விபரமறிந்ததும்
வாடி நின்றாள்..!

எனைப் பார்த்து ஓடி வந்த
என் நான்கு வயது மகன்
வெற்றுக் காகிதத்தைக் காட்டி
சிரித்தபடி கேட்டான்
‘அப்பா..! இதோ என் சம்பளம்…
உன் சம்பளம் எங்கே..?’

அவனுடைய சம்பளத்தைப் பார்த்தேன்
அந்த வெற்றுக் காகிதம்
எனைப் பார்த்து சிரித்தது..!

உடனே அன்சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.

இந்த மாதிரி கவிதைகளையெல்லாம் படித்து, எழுதித்தான் வளர்ந்தோம் என்பது உண்மைதான். நான் இதுபோன்று கவிதைகள் எழுதியபோது, அதனை வாசித்தவர்கள் எப்படி தவித்திருப்பார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. பாவம் அவர்கள். அவர்களின் வயிற்றெரிச்சல் என்னைத் தொடர்ந்து வந்து மிரட்டுகிறது போலும். இப்படி கவிதை எழுதுபவர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல கவிதைகள் எழுதிவிடமுடியும் என்பதும் உண்மைதான். இந்தக் கவிதையை எழுதியவர் சீக்கிரமே மிக நல்ல கவிதைகள் எழுதத் தொடங்கிவிடுவார் என்று நம்புவோம்.

(பின்குறிப்பு: மெண்டல் ப்ளாக்கைத் தடுக்கு இனி இது போன்ற டைரிக் குறிப்புகள் அடிக்கடி வரும்!)

Share

சில கவிதைகள்

மேகத்துடன் ஒரு பயணம்

களைப்புடன் சிக்னலில் காத்திருந்தபோதுதான்
கவனித்தேன்
என் கண்ணெங்கும் சூழ
உலகமே ஒருநிமிடம் பின்னகர
தலைக்குப் பின்னே
கழுத்தோடு வழிந்து
பின்னமர்ந்துகொண்டது அம்மேகம்
பக்கத்து வண்டிக்காரன்கள்
எதுவும் நடக்காதது போல
ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கொண்டிருந்தான்கள்.
மெல்லக் கை முளைத்து
கால் முளைத்து
தலை முளைத்தபோது
என்னை இறுகப் பிடித்துக்கொண்டு
பொருளில்லாமல் சிரிக்கத் தொடங்கியது
வீடு வந்ததும் கீழே குதித்து
‘இன்னொரு ரவுண்டு போலாமா’ எனக் கேட்டது.
மெல்லிய காற்றில்
காற்றெனக் கலைந்து போனது
வானத்தை நோக்கி.
மேகத்தின் இடத்தில் பூத்திருந்தது
இரு துளி நீர்.

-oOo-

அலையென வரும் நிழல்

நடுத்தெருவில் நின்றிருந்தபோது
என்னைக் கடந்தது மேகம்
ஒரு பூனையின் நிழலில்
நகங்கள் என் மீது கீறாதிருக்க
மெல்ல விலகினேன்
மேல் வழிந்தோடியது வெயிலும்
பூனையின் வாலும்
பூட்டிக் கிடக்கும் கதவுகளுக்குள்ளே
இம்மேகத்தைத் தொலைத்துவிட்டவர்கள்
என்ன செய்துகொண்டிருப்பார்கள்?
என்னைத் தழுவி
ஜன்னலின் கதவிற்பட்டு
மீள்கிறது
மேகம் அனுப்பியிருந்த காற்று.

-oOo-

அகம்

மரங்களின் கிளைகள் மெல்ல அசைய
பறக்கும் ப்றவைகள் போக
உதிரும் இலைகள் போக
அதிலேயே இருக்கின்றன
பறக்காதவையும் உதிராதவையும்.
சிறுவன் ஒருவன் கல்விட்டெறிய
பறந்தோடும் உதிர்ந்தோடும் கூட்டங்களோடு
கிளைகளிலிருந்து சத்ததோடு சிதறுகின்றன
உடைந்த கண்ணாடித் துண்டுகள்
இவ்வுலகத்தின் பிம்பத்தைக் காட்டியும்
என்னுருவைக் காட்டிக்கொண்டும்.

-oOo-

Share

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

கட்டுரையை வாசிக்க – தமிழ் ஹிந்து.காம் செல்லவும்.

Share

கவிதை

வெக்கை மிகுந்த
வியர்வை இரவொன்றில்தான் கண்டேன்
வீட்டுக்குள் வளர்ந்து கிடக்கும்
தனித்த மரமொன்றை.
கிளைகள் வீட்டு உத்தரத்தை உரசியிருக்க
வேர்கள் வீடெங்கும் பரவிக்கிடந்தன
கைக்கெட்டிய அரிவாளும் கோடாலியும்
உலோக ஒலியெழுப்பி
மரத்தின் கீழ் மண்டியிட்டன
தனியறைக்குள் உறங்கிக் கிடக்கும்
மெல்லிய சுவாசத்தை அடக்கி
அதிர்ந்தன மரத்தின் இலைகள்.
மரத்தின் கிளைகள் மேலும் நீண்டபோது
வெளியிருந்து ஒரு குருவி
சிறகடித்துப் பறந்து
உள்வந்து அமர்ந்தது.
மரத்தை சூழத் தொடங்கியது
குருவியின் இசை.

Share

இரண்டு கவிதைகள்

பதிவு வகை: கவிதை

தெரு

அதிகாலையின் நிசப்தத்தில்
நீண்டும் சிறுத்தும்
இருவழி திறந்தும் ஒருவழி மூடியும்
அலைந்து நெளியும் என் தெருவில்
பரவி நிலைத்துக் கிடக்கும்
இருளில்; ஒளிவெள்ளத்தில்
விரவியிருந்தன பல வீடுகளின் குரல்கள்
கடையைத் திறக்கும் கதவுச் சத்தத்தில்
கலைந்தோடும் நினைவுகளைச் சுமந்தபடி
புலரும் பொழுதின் நினைவுக் குமிழ்களில்
என்னைத் தேடிக்கொண்டு கடந்தபோது
அடுத்த தெரு வந்துவிட்டிருந்தது.

ஒரு தற்கொலையும் கொலையும்

ஒரு குரல் என்னை எழுப்பியது
அக்குரல் என்னை தூண்டியது
யோசனையைக் கைவிடச் சொல்லி
சில முடிவுகளைச் சொல்லிச் சென்றது
ஒவ்வொன்றையும் செய்துமுடிக்க முடிக்க
அடுத்தடுத்த குரல்கள் எழுந்துகொண்டே இருந்தன
யோசிக்கத் திராணியற்ற,
ஆனால் என்றேனும் ஒருநாள் எழந்தே தீரும்
என் குரல்
உங்களைத் தூண்டும்போது
குற்றசசாட்டுக் குறிப்புகளோடு வந்து நிற்பவர்களுக்கு
சமர்ப்பிக்கிறேன் என்னை எழுதிச் செல்லும் இக்குரலை.

Share

நீராம்பல் – கவிதை

பதிவு வகை: கவிதை

நீராம்பல்

கிளி தன் எஜமானனுக்காகக் கத்தியது
ஒரு நெல்லை அவன் தட்டவும்
ஒரு சீட்டை எடுத்தது
அவன் கட்டை விரலைத் தேய்க்கவும்
கூண்டுக்குள்ளே சென்றது
மரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
பூனையைப் பற்றி அதற்குத் தெரியவில்லை
எல்லாரும் அதை வியந்தார்கள்,
அதுவும் கிளிக்குப் புரியவில்லை
அடுத்த நெல்லுக்காகக் கிளி காத்துக்கொண்டிருந்தது
கிளியின் கூண்டுக்கு வெளியே
எல்லையற்ற வானம்
கிளியறியாமல் கரைந்துகொண்டிருந்தது

Share

மூன்று கவிதைகள்

இருக்கை

எனக்கு முன்னுள்ள இருக்கையில்
முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்தது
பின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்
ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்
யோகி போல் வேடமணிந்த
சிறு குழந்தை ஒன்றமர்ந்தது
யாருமற்ற பெருவெளியில்
தனித்திருக்கும்
அவ்விருக்கையில்
நான் சென்று அமர்ந்தபோது
என் வெளியேறுதலுக்காகக்
காத்திருக்கிறது பெருங்கூட்டம்

துடுப்புகளற்ற படகு

அமைதியற்ற நதியொன்றில்
பயணம் செய்து வந்தவன்
படகுகளை தந்துவிட்டுச் சென்றான்
மேலெங்கும் நீர் தெறித்துக் கடக்க
துடுப்புகளை வாங்க மறந்தேன்
நான் பயணத்தில் எதிர்கொண்ட பேரலைகள்
என்னை நனைத்துவிட்டுச் சென்றன
கரை மீள
படகுகளைப் பெற்றுக்கொண்ட புதியவன்
மறக்காமல் துடுப்புகளைக் கேட்டான்
ஆற்றின் ஆரவாரத்தை
துடுப்புகளின்றி எதிர்கொண்டவன் சொன்னேன்,
படகுகளும் அவசியமற்றவை.

குழந்தையின் வீடு

வீட்டின் கதவைத் திறந்ததும்
ஓடி வந்து கட்டிக்கொள்கிறது குழந்தை
ரத்தம் கேட்டு அலைந்துகொண்டிருந்த
பூனையொன்று ஜன்னல் தாண்டி ஓட
ஒரு மூலையில் பூக்கிறது
அதிமணம் கொண்ட மலர்
குழந்தை
முத்தமிடுகிறது
கழுத்தைக் கட்டிக்கொள்கிறது
காரணமே இன்றி சிரிக்கிறது, குதிக்கிறது.
அதன் நெற்றியை மெல்ல வருடுகிறேன்
குழந்தையையும் படைத்து
மிருகத்தையும் படைத்தவன்
குரூரனாக இருந்தாலும்
ஒரு மிருகம்
ஒரு குழந்தையை
பெற்றுக்கொள்ளுமாறு படைத்தவன்
கடவுளாகத்தான் இருக்கமுடியும்.

நன்றி: பண்புடன் குழுமம்

Share