Archive for கவிதை

சில கவிதைகள்

1.

நதியின் படிக்கட்டில்
நீரில் எழுதிய கோடுகள்
விரிந்து விரிந்து
ஒன்றோடு ஒன்றிணைய
இடையில் கிடக்கின்றன
நீரால் நனைக்கப்படாத
கட்டங்கள்
என் கவன ஈர்ப்பாக.

-oOo-

2.

அவன் புன்னகைப்பதற்குள்
நகர்ந்துவிடத்தான் நினைத்தேன்
அதற்குள் சிரித்துவிட்டான்
நானும் சிரித்துவைத்தேன்
இப்படியே நான்கைந்து முறை ஆகிவிட்டது
எவ்வளவு யோசித்தும்
யாரென்றே சிக்கவில்லை
அவனிடமே கேட்டபோது
‘அடிக்கடி பார்க்கிறோம்ல அதான்’ என்றான்,
எங்களிடையே ஒரு பூ மலர.

-oOo-

3.

கடும் மழையிலும்
பூ விற்கிறாள் கிழவி
ஐந்து முழம் வாங்கினேன்
தலையை சுற்றியிருக்கும்
கோணிப்பை அகற்றி
மலர்ச்சியுடன் தந்தாள்
மொட்டு மல்லிகைகளை
எனக்கும் அவளுக்கும் மட்டுமான
மழை பெய்துகொண்டிருக்கிறது
நிறைவான இசையின் தாளத்தோடு.

-oOo-

4.

பூட்டிய வீட்டுக்குள்
செத்துக்கிடந்தது
தெரு நாயொன்று
எப்படி உள்ள போச்சு என
எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க
என் நினைவை அழுத்துகிறது
தனிமையைக் கண்டுவிட்ட
தெரு நாயின் சாபம்.

-oOo-

5.

நேற்றிரவு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்
உறுதியாகத் தெரியவில்லை என்றார்கள்
அவன் செல்·போன் எண் என்னிடம் இருக்கிறது
ஆனாலும் அவனை அழைக்கவில்லை.

-oOo-

Share

சில கவிதைகள்

புதுஎழுத்து

நீண்ட வாக்கியங்களில்
நம்பிக்கையற்றுப் போனபோது
வார்த்தைகளில் விழுந்தேன்
அவையும் அதிகமென்றானபோது
எழுத்துகளைப் பிடித்துக்கொண்டேன்
ஒற்றையெழுத்துகளும் சலித்தபோது
மொழியின் போதாமையில்
என்னை புதைத்துக்கொண்டது மௌனம்
மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகிறது என் மொழி

யாருமற்ற தனிமை

அடைந்து கிடந்த அறையினுள்ளிருந்து
முதலாமவன் வெளியேறினான்
அவன் சொன்ன வார்த்தைகளை நினைவூட்டி
அவனுக்கு முகமன் கூறினார்கள் மற்றவர்கள்
இரண்டாமவன் போனபோது
அவன் நற்செய்கைகளை காட்டி
வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தார்கள்
மூன்றாமவன் போனபோது
சந்தோஷமான நிமிடங்களை
நான்காமவன் நினைத்துக்கொண்டான்
கடைசியாக அவனும் விடுவித்துக்கொண்டபோது
தனித்து விடப்பட்டது அந்த அறை

அடைந்து கிடந்தபோது
அவர்கள் பரிமாறிக்கொண்ட
அன்பான வார்த்தைகளை விட்டுவிட்டு
அவர்களைச் சொல்லி
திட்டிக்கொண்டிருந்தது அறை

சின்னஞ்சிறு கவிதைகள்

சிதைப்புகையை
ஆழ்ந்து உள்ளிழுக்க,
இனியென்னை
வாழ்வெங்கும்
துரத்தப்போகும்
மணம்

-oOo-

ஒரு பூனையின் நிமிடங்கள்
ஒரு எலியின் நிமிடங்கள்
ஒரு பூனை மற்றும் எலியின் நிமிடங்கள்
முடிந்துவிடுகிறது பேருலகம்

-oOo-

தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்

-oOo-

வீடெங்கும் தவழும்
இசையில் இருப்பதில்லை
ஆயத்தமற்ற
நொடிக்கோபத்தில் விளையும்
அமைதியின் குறிப்புகள்

-oOo-

Share

ஒரு குழந்தையின் நிமிடங்கள் – கவிதை

ஏதோ காரணத்துக்காக அழுதது
சுவரில் அசையாமல் அமர்ந்திருக்கும்
வண்ணத்திப் பூச்சியின்
மெல்ல அசையும் சிறகையும்
ஆயிரம் எறும்புகள்
ஊர்ந்து செல்லும் ஆச்சரியத்தையும்
அதிசயமாய் நோக்கி மலர்ந்தது குழந்தை
சிறிய சறுக்கில் ஒருமுறை சறுக்கி சிரித்தது
தெருவில் செல்லும் ஜவ்வுமிட்டாய்க்காரன்
எதிரே நின்று காசில்லாமல் கைநீட்டியது
கைதட்டிக்கொண்டிருக்கும் பொம்மையின்
அசையும் கைகளுக்குள்
சிறைப்பட்டுப்போனது அதன் உலகம்

என் தலைமீது கவிழக்
காத்துக்கொண்டிருக்கும் வானத்தை
பார்வையிலேயே நிறுத்தி வைத்தேன்.

Share

ஒரு கவிதை, சில ஹைக்கூக்கள்

முடிவு

இணைகோட்டின்
ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டு
நான் கல்லெறியத் தொடங்கினேன்
நீ எச்சிலை உமிழ்ந்தாய்
சில யுகங்கள் காலச் சுழற்சியில்
நம்மிரு இடங்களும் மாறின
அப்போது நான் எச்சில் உமிழ
நீ கல்லெறியத் தொடங்கினாய்

சில ஹைகூக்கள்

இரண்டு பக்கமும்
திறந்துகிடக்கும் வீட்டில்
மீன் தொட்டி

-oOo-

பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்

-oOo-

மரம், அதன் நிழல்
சின்னச் சின்னதாய்
வெயில்

-oOo-

அமர்ந்திருக்கும் ஈ
சத்தமின்றி நெருங்கும் பல்லி
ஒலிக்கிறது செல்ஃபோன்

-oOo-

குடைக்குள்ளிருந்து
அழுகிறான் சிறுவன்
காகிதக் கப்பலில் மழை நீர்

-oOo-

மரண வீட்டில்
ஊதுபத்தி
சிரிக்கும் குழந்தைகள்

-oOo-

Share

இரு கவிதைகள்

புகைப்படம் எடுத்தல்

மிகுந்த களேரபத்திற்குப் பின்னரே
குடும்பத்தின் புகைப்படம் எடுத்தோம்
ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் பாட்டியை
ஐந்து நிமிடம் பேசாமல் இருக்க வைக்க பெரும்பாடு ஆகிவிட்டது
அண்ணியை முதலில் அழைக்கவில்லை என்று அண்ணனுக்கு கோபம்
நம்மை அழைக்கிறார்களா பார்க்கலாம் என்று சிலர்
அப்பா ஃபோட்டோவுக்கு மட்டும் எப்போதும் தயார்
அக்கா அத்தானை சீக்கிரம் வரச்சொல்லி ஃபோன் பேசிக்கொண்டிருந்தாள்
நான் என் மனைவியுடன் எப்போது தனியறைக்கு அனுப்புவார்கள் என காத்துக்கொண்டிருந்தேன்
ஃபோட்டோகிராஃபர் அழகான பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
ஒருவழியாக ஃபோட்டோவும் எடுத்தார்
படத்தில் அனைவரும் அழகாக, மிக அழகாக, குறிப்பாக இயல்பாக, சிரித்துக்கொண்டிருந்தோம்,
படத்தில் தோற்றம் மறைவு விடுத்து வாழும் நாளின் குறிப்பேற்ற முடியாதது போல.

பேரமைதி

ஒரு கண் விழிப்பில்
தங்கள் வாசல்களை இழந்தன
வீடுகள் அனைத்தும்
தெருக்கள் அனைத்தும் கலையிழந்துவிட்டிருக்க
எந்தக் கோலத்தை எங்கு பொருத்த என்றறியாமல்
சுற்றிக்கொண்டிருந்தன பூனைகள்
திறந்து கிடக்கும் வீடுகள் வெளியிட்ட சத்தங்களில்
பறவைகள் பதறிப் பறக்க
மனித சத்தத்தை அறிந்து
பயந்தன நாய்கள்
நடுங்கிப் போன கடவுள்
கடும் தலைவலியோடு
கதவுகளுக்கு ஆணையிட்டான்
வாசலைப் பொருத்திக் கொள்ள
அந்நொடியில் பேரமையிதில் ஆழ்ந்தது இவ்வுலகம்.

Share

மூன்று கவிதைகள்

1.இன்றைய பொழுது

அணிலை வரைய தேடியெடுத்த
வெள்ளைக் காகிதங்களில்
மிச்சமிருக்கின்றன சில கோடுகள் மட்டும்

என் விருப்பப் பாட்டு
அறையெங்கும்
வெறும் சொல்லாக மிஞ்சிக் கிடக்கிறது

என் கையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்கிறது
நான் பிடித்து வைத்திருந்த ஒளி
அதற்கான உலகுக்குள்

கடிகாரத்தின் நொடிச் சபதம்
பெரும் ஒலியாகி என் காதுள்
பிரளயத்தை எறிகிறது

ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும்
இடையேயான சிறுபொழுது
விஸ்வரூபமெடுக்கிறதென்றால் நீங்கள் நம்புவீர்களா?

எரியும் மெழுகுவர்த்தியில் லயித்திருக்கும்
என் கண்களில்
ஆழப் பரவுகிறது அதன் வெளிச்சம்

காற்றிற்கேற்ப அசையும் சுடரின் நிழலில்
தெரிந்தும் மறைந்தும் சுவர்ப்பல்லி

(இடைச்செருகல்: இரவுகளில் உறங்குவன் இவற்றைக் காண்பதில்லை
                              இவற்றைக் காணவென்றே
                              விழித்திருப்பவன் அடையப்போவதுமில்லை
                              அதனதன் போக்கில் அதது)

என்றேனும் ஒரு நாளில்
அணில் கண்டடையும் அதற்கான தாளை
என் கைவந்து சேரும் என் ஒளி
சொற்கூட்டங்கள் ஒன்று சேர உருவெடுக்கும் இசை
இன்று ஏன் இப்படி ஆகிவிட்டது என்பதல்ல
நான் சொல்ல வருவது,
‘சில சமயம்
இப்படியும் ஆகலாம்.’

2.நிமிடங்களிலிருந்து விடுதலை

எனக்கு முன்னே எழுந்துவிடுகிறது என் கடிகாரம்

கனவுகளில்கூட அதன் வீரிடல்
அதன் முட்களை ஏன் ஈட்டியாகக் கண்டேன்?
அதன் பால்கள்
சதா உண்டாக்கிக்கொண்டே இருக்கின்றன
எனக்கான நிமித்தங்களை
கழுத்தில் கயிற்றைக் கட்டி
தூக்கமுடியாத பாரத்தில்
கடிகாரத்தையும் கட்டிவிட்டவனைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உங்களைப் போலவே
மூன்று முட்களையும் சேர்த்துக் கட்டிவிட்டு
நிறுத்தவேண்டும் உலகின் கடிகாரத்தை.

3.Stamp கவிதை

நான் சொன்னது சாதாரணமாகத்தான்
அவனாய் ஒரு விளக்கம் சொல்லி
அதைத்தான் நான் சொன்னதாகச் சொன்னான்
so what என்றேன்.
நான் சொல்லாதவொன்றைச் சொல்லி
அதுதான் என் கருத்தாக இருக்கமுடியும் என்றான்
நான் ஏதும் சொல்லாதபோதும் கூட.
இருக்கலாம் என்றவுடன்
அவனெழுப்பிய
உத்தேவகக் குரலில்
அமுங்கிப் போயிற்று
என் அடுத்த வாக்கியம், ‘இல்லாமலும் இருக்கலாம்.’
எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்,
Who bothers him.
இன்னொரு சந்தர்ப்பத்தில்
என்னால் வேறெப்படி யோசிக்கமுடியுமென்றான்
அதன் தொடர்ச்சியாக
என் சிந்தனையை எனக்கு விளக்கினான்
இப்படியாக
எனக்கு அவனை நன்கு விளங்கியது;
என்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Share

பள்ளியின் ஜன்னல் – கவிதை

வெறிச்சோடிக் கிடக்கும் மைதாங்களில்
சுருட்டி எறியப்பட்ட காகிதக் குப்பைகள் இல்லை
சிறுநீர் படாமல் கொஞ்சம் செழித்திருக்கிறது சிறுசெடி
மணிச்சத்தம் கேட்காமல்
‘மாசில் வீணையும்’ கேட்காமல்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கிறது கடுவன் பூனை
வறாண்டாக்களின் தவம்
மாடிப்படிகளிலேறி
வகுப்பறைகளில் முடிவடைய
சொட்டும் தண்ணீரின் சத்தம்
பூதாகரமாகி குலுக்கிப் போடுகிறது கட்டடத்தை
குறுக்குச் சந்தில்
திருட்டுத்தனமாய் தம்மடித்த சரவணனும்
சத்துணவுக்கூடத்துப் பின்பக்கம்
அவசரம் அவசரமாய்
முத்தமிட்டுக்கொண்ட பிரான்சிஸும் கோமதியும்
பள்ளியை மறந்துவிட்டிருக்க
திறந்திருக்கும் ஜன்னல் காத்திருக்கிறது
காணாமல் போய்விட்டவர்களை எதிர்நோக்கி.

Share

இரண்டு கவிதைகள்

உடலின் மீது நகரும் உயிர்

வெளிச்சத்தின் மீது அலையும் இரவைப்போல
அங்குமிங்கும் அலைந்தது
உடலின் மீது உயிர்
காலிலிருந்து தலைக்குத் தாவி
வயிற்றில் நிலைகொண்டு
நெஞ்சில் நின்றபோது
திரையில் ஓடின
திக்கற்ற படங்கள்
கட்டவிழுந்து போன ஞாபகங்கள்
ஒரு திசையில் மனம் குவிக்க எண்ணி
சதா முயலும் கண்களில்
குத்திட்டு நின்றது
அறையின் ஒட்டுமொத்த வெளிச்சம்
தன்னிச்சையாய்
விரிந்து மூடும் கைகளில்
இளங்காலத்து மார்பின் மென்மை
நாசியெங்கும் பால் வாசம்
தொடர்ச்சி அறுந்து
சில்லிட்ட நொடியில்
வியாபித்தது காலம்


கேள்வி பதில்களற்ற உலகம்

பதில்களற்ற கேள்விகளாய் எடுத்து கோர்க்க
நீண்டு கொண்டே சென்றது மாலை
ஆதியில் ஒரே ஒரு கேள்வியில்தான் தொடங்கியது அம்மாலை
முடிவற்றுத் திரியும் கேள்விகளுக்குள்ளே
விரவிக் கிடந்த பதில்களைத் தேடியபோது
திறந்துகொண்டது பதில்களாலான உலகம்
ஆதியில் அங்கேயும் ஒரே ஒரு பதிலே இருந்தது
கேள்வியும் பதிலும்
தொடர்ச்சியாக
ஒன்றையொன்று நிரப்பிக்கொண்டபோது
ஒலி இழந்தன வார்த்தைகள்
வெறும் திட்டுத் திட்டாய்
தெறித்துவிழும் மௌனத்தில்
ததும்பும் சங்கேதங்களில்
முற்றுப்பெறுகிறது இவ்வுலகு

Share