Archive for கவிதை

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம் – கவிதை

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.

அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு ஒதுங்கிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாசனை.

வெயிலின் உக்கிரம், வியர்வை;
இடுக்காட்டின் முன் பாட்டாசு.

கிட்டத்தட்ட அனாதை என்றார்கள்;
தெருவில் இரு ஓரத்திலும்
காத்திருந்தது பெருங்கூட்டம்.

ஊர்வலத்தின் பின் நீளும்
வண்டிகளின் சக்கரங்களில்
நசுங்கிக்கிடக்கும் மலர்களுள்
அவனுக்குப் பிடித்ததெதுவோ.

சீக்கிரம் சவ வண்டி கடந்துபோக
காத்திருக்கும் நீண்ட வரிசையில்,
அவனின் சாதனைகள் பற்றிய
யோசனையுடன்
அடுத்த நொடியில்
அவனை மறக்கப்போகும்
நான்.

Share

திரை – கவிதை

காற்றில் ஆடும் ஜன்னல் திரையில்
மலர்ந்திருக்கின்றன போலிப்பூக்கள்
என்னைப் பார்த்தவண்ணம்.

படுக்கைக்கு மேலே
உத்திரத்தில் தொங்குகிறது
நிலவும் பிறையும்
சில நட்சத்திரங்களும்;
திரைக்கு வெளியில் அலையும் கேலக்ஸி
படுக்கையறைக்குள்ளே ஒரு விளக்கணைப்பில்.

இரவுகள் பகலாகவும்
பகல்கள் போலியாகவும்
அங்குமிங்கும் அலைகின்றன
சிறிய திறப்பைத் தேடி

உள்ளங்கைக்குள் வேர்த்தடங்கிக்கிடக்கும் வெளி

கையைத் திறக்க
மெல்ல கசிகிறது
நெகிழும் திரையின் வழியே
என் படுக்கையறை
உலகுக்கு.

Share

முகம் – கவிதை

எப்போதோ அணிவித்தார்கள்
எனக்கான ஜென்டில் மேன் பட்டத்தை.
இளகிய ரப்பராலான பட்டம்
மெல்ல
கனத்துக் கனத்து
முகத்திற்கு மாட்டப்பட்ட
இரும்புறையாய் மாற
என் அலறல்
முகச்சிரிப்பில் சிறிதும் அலங்காத
நரம்புகளில் மோதி
என் காதுக்குள்ளேயே எதிரொலிக்கிறது
எப்படியேனும் போராடி
என்றேனும் வென்று
சுயம் மீட்கும்போது
அரண்டு
ஓடி
குலைக்காமலிருக்கவேண்டும்
வீட்டு நாய்.

Share

அவளின் படம் – கவிதை

எப்படி இத்தனை நாள் அந்தப் புகைப்படத்தை
நினைக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை.
இப்படித்தான் நிறைய மறந்துவிடுகின்றது.
சேது வீட்டில் ஆல்பம் பார்த்துக்கொண்டிருந்தபோது
கண்ணில் பட்டது அந்த ஃபோட்டோ
வெகு கம்பீரமாய்
கால் மேல் கால் போட்டு
முகத்தில் புன்னகை கொப்பளிக்க
வயதுக்குரிய கொணட்டல்களுடன்
அவள் வீற்றிருக்க, பயந்த முகத்துடன்
நான் பின்னின்றிருக்கிறேன்.

நேற்றிரவு எழுந்த கனவில் கூடப்
பின்னின்றிருந்தாள்
இப்போது
உறக்கத்தில் கூட
நான் வலப்புறமாய்ப் படுத்திருக்க
என் முதுகு நோக்கி அவள்.
எப்போதும் எனக்குப் பின்னாலே
இருந்த நினைவுதான் தேங்குகிறது.
ஏழாம் வகுப்பில்
மஞ்சள் பை சுற்றிக்
காற்றில் பறந்த போதும்
பின்னின்றிருந்தாளாம்,
கேட்டபோது கலக்கமாயிருந்தது.
தாலி ஒன்றைக் கட்டிவிட
வீட்டில் கலகங்களில்
தெருவின் குரைப்புகளில்
ஆகாசக் கோட்டைகளில்
கற்பனைகளில்
எப்போதும்
எல்லா இடங்களிலிலும்
பின்னால்தான்.

அந்த ஃபோட்டோவைக்
கேட்டு வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டேன்.

Share

தவறுகளின் கோட்டை – கவிதை

நானறியாத ஒரு பொழுதில்
தவறுகளின் கோட்டைக்குள் விழுந்தேன்.
கதவோவியம் கேலி பேசியது
நான் மறந்ததாக நினைத்துக்கொண்டிருந்த
நொடிப்பொழுதின் பிரதியாக நின்று.
வாசல் கடந்த அறைகளின்
பக்கச் சுவர்களில் பலப்பல ஓவியங்கள்
என் முகச்சாயலுடன்.
சிலவற்றின் குரூரப்பார்வை
மனத்தின் மூலைகளில் சவுக்கடித்தது.
சிலவற்றை அமைதியின் உறைவிடமென
யாரும் கூறக்கூடும் (யார் உள்நுழைந்துவிட
முடியும் என்னைத் தவிர)- ஆனால்
அவற்றின் உள்ளோடும் நினைவுகள்
எனக்கு மட்டுமே அத்துப்பிடி.
பற்பல அறைகளில் மேலும் பல
நிறையப் பேசி
என்னைப் பிய்த்து எறிந்தன.

என் நிர்வாணம்
எனக்கெதிரே
சரிந்து கிடந்தபோது
திடீரென்று திறந்துகொண்டது
பெருங்கதவு.
உள்ளே
கடவுளாக அறியப்படும்
ஆன்மாவின் சிலையொன்று.

Share

தெருக்கள் – கவிதை

தெருக்கள்
இப்படியில்லாமல்
‘ப’ – வாகவோ
‘ட’ – வாகவோ இருந்திருக்கலாம்
ஒரு தொடக்கத்துடனும்
ஒரு முடிவுடனும்
மனிதர்கள்
இப்படி அப்படி எப்படியும்
நடந்து நடந்து
அவர்களைப் போலவே
மாறிவிட்டதோ என்னவோ
ஒரு தெருவிலிருந்து
எந்த வித முகமுமில்லாமல்
திடீரென வளைகிற
இன்னொரு தெருவின்
தோற்றவாயிலில்
கலங்கி நின்றிருக்கிறேன்,
இரண்டு தெருக்களும்
அப்புள்ளியில்
தம்மை இழந்து விட்ட
சோகத்தை நினைத்து.

Share

அந்த நிமிடம் – கவிதை

அந்த நிமிடத்திற்கான
காத்திருப்பு
அவஸ்தை நிரம்பியது
எதிர்பார்ப்பு நிறைந்தது
படபடப்பைக் கொண்டது
சந்தோஷம் தருவது
துக்கம் தருவது
ஏதோவொன்றாக
அல்லது எல்லாமுமாக
நீண்ட காத்திருப்பு அது
வருடங்கள், மாதங்கள்
நாள்கள் எனக் கழிந்து
நிமிடங்கள் எனக் குறைந்து
நொடிகளாகி
ஒரு சொல் தொடங்கும்போதே
முடிந்துவிடுவதுபோல
கடந்து போனது
அந்நிமிடம்.
இனி அந்நிமிடத்தைப் பற்றிச்
சொல்ல ஒன்றுமில்லை.

Share

பிம்பம் பற்றிய கவிதைகள்

கை நழுவிக் கீழே விழும்
கண்ணாடிக் கோப்பை
தரையைத் தொடுமுன்
கைநீட்டியிருக்கவேண்டும்
தேவதை
உன் பிம்பத்தைக் காப்பாற்ற

*

உடைந்த பலூனின் சிதறல்கள்
பெரிதும் சிறிதுமாய்
கலைந்தபோன கோலக் கம்பிகளுக்குள்
தெறித்துப்போன உன் பிம்பம் போல
ரசமுள்ள கண்ணாடியா என்ன
ஒவ்வொன்றும் தனித்துவம் பெற?

*

பிம்பமற்ற
பிம்பத்துக்குள்
அடங்கிவிட வேண்டும்
அதுவே பிம்பமென!

*

மறைத்து வைத்திருக்கும்
முகச் சலனங்கள்
ஓடும் நீரின் மேற்பிம்பத்தில்
தெளிவாக, மிகத் தெளிவாக.

*

Share