Archive for திரை

ஆடுகளம் – கதையின்மை என்னும் பொய்

நன்றி: தமிழ் பேப்பர்

வெற்றிமாறனின் ஆடுகளம். அப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. கதையில்லை என்னும் புலம்பல்களுக்கு மத்தியில், எல்லாக் கதைகளுமே எடுக்கப்பட்டுவிட்டன என்னும் தப்பித்தல்களுக்கு மத்தியில் ‘ஆடுகளம்’ மிகச்சிறப்பான கதையைக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்குச் சரியான பெயர் ‘சண்டைக்கோழி’ என்பதாகவோ ‘ஆடுகளம்’ என்பதாகவோதான் இருக்கமுடியும். அந்த வகையில் ஆடுகளம் என்ற பெயரை இதுவரை யாரும் வைக்காததற்கு வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரைப்பட இயக்குநர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார். 🙂

முதலிலேயே ‘சேவற்சண்டை’ மனிதர்களைக் கொல்லும் வரை செல்லும் என்று சொல்லி, படம் பார்ப்பவர்களைத் தயார் செய்துவிடுகிறார். மேலும் படம் முழுக்க அதுவே கதை என்பதையும் தெளிவாக உணர்த்திவிடுவதால், தேவையற்ற எதிர்பார்ப்புகள் குறைந்து, நேரடியான கதைக்களம் ஒன்றுக்குத் தயாராகிவிடுகிறோம். இடைவேளை வரை படத்தின் வேகம் சண்டைச்சேவல் வேகம்தான். ஒன்றிணைந்து கிடக்கும் துருவங்கள், மெல்ல மெல்ல எதிரெதிராக விலகிப் போவதையும், அதனுள்ளே மனிதனின் ஆதிகுணமான பொறாமையும் வன்மமும் குடிபுகுவதையும், பார்ப்பவர்கள் நம்பிக்கை கொள்ளும்வண்ணம் காட்டியிருப்பது முக்கியமானது.

இடைவேளை வரை நேரடியாகப் பங்குபெறும் சேவற்சண்டை, இடைவேளைக்குப் பிறகு, திரைக்கதையின் பின்புலமாகிப் போகிறது. ஓர் உன்னதத் திரைப்படத்துக்கு, சுவாரஸ்யத்தைவிட அனுபவம்தான் முக்கியம் என்றாலும், இடைவேளைக்குப் பிறகு வராத சேவற்சண்டையை நினைத்து ஏங்க வைத்துவிடுகிறார் வெற்றிமாறன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதனால் படம் இடைவேளை வரை படுவேகமாகவும், இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் மெல்லச் செல்வதாகவும் ஒரு தோற்றம் ஏற்பட்டுவிடுகிறது.

இப்போதிருக்கும் நடிகர்களில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களுள் தனுஷும் ஒருவர் என்பதை இப்படம் நிரூபிக்கிறது. எந்த ஒரு இடத்திலும் இம்மி பிசகாத மதுரை சண்டியர் தோரணை. திறமைத் திமிர். சோகம் வரும்போது அடையும் முகக்கலக்கம். தனுஷ் கலக்குகிறார். பேட்டைக்காரராக வரும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு முதிர்ச்சி, நடிப்பில் யதார்த்தம். அவரே பின்னணிக் குரலும் என்றால், அதற்கும் ஒரு பாராட்டு. தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்க வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது. சிறந்த புதுமுக நடிகர் என்று சொல்லி, வ.ஐ.ச.ஜெயபாலனைக் குறைக்காமல், சிறந்த குணச்சித்திர நடிகராக அவரும் தேர்ந்தெடுக்கப்படுவாரானால் மகிழ்ச்சியே.

ஹீரோயினுக்கு அதிக வேலை இல்லை. அழகாக வந்து போகிறார். ஒளிப்பதிவு அட்டகாசம். இசையில் பாட்டுகள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டன. இதுபோன்ற வித்தியாசமான படங்களுக்கு இசையமைக்க இளையராஜா உச்சத்தில் இல்லையே என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. ஜி வி பிரகாஷ் திணறுகிறார். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது இசையமைத்த படங்களில் பெரும்பாலானவை குப்பை. ஆதாரக் கதையோ திரைக்கதையோ இல்லாதவை. பாடல்களும் பின்னணி இசையும் மட்டும் ஒட்டாத உயரத்தில் நிற்கும். இன்று பல புதிய இயக்குநர்கள் பல புதிய கனவுகளோடு வருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள், இளையராஜாவின் பின்னணி இசையில் பெறவேண்டிய அடுத்தகட்ட நகர்வைப் பெறாமலேயே போயிவிடுகின்றன. இது மிகப்பெரிய துரதிஷ்டம். எப்படியோ பாலா மட்டும் தப்பித்துக்கொண்டு விடுகிறார்.

இப்படத்தின் ஒரே ஒரு சின்ன குறையாகச் சொல்லவேண்டியது – இதைக் குறை என்ற வார்த்தையால் குறுக்கமுடியாது என்றாலும் – இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள், முக்கியமாக நம்பிக்கைத் துரோகம் என்பது குருதிப்புனலை நினைவுபடுத்துகிறது. இது குருதிப்புனலின் அளவுக்கதிகமான தாக்கத்தால் இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பேட்டைக்காரரைப் பார்க்க தனுஷ் வரும் இடம்.

ஒரு படத்தின் முடிவு என்பதில் கட்டிப் போடப்பட்டிருக்கும் பொதுப்புத்தி இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். அதுவே இப்படத்தின் கமர்ஷியல் பலவீனமாகவும் அமையலாம். ஆனால், நல்ல படங்களைச் சிந்திக்கும்போதே, கமர்ஷியலாகவும் வெற்றி பெற நினைக்கும் புதிய இயக்குநர்களின் வரவும், அவர்களின் ஆக்கங்களின் தரமும் தமிழ்த்திரைப்படங்கள் மீது பெரும் நம்பிக்கைக் கொள்ள வைக்கின்றன. அந்தவகையில் வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குநராக உருவெடுக்கிறார்.

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ் வாழ்வைப் பேசாமல், எதையோ ஒன்றை, உலகத்தரம் என்னும் முலாமில் முக்கிப் பேசிவிட்டுத் தப்பிவிடுகின்றன. அக்குறையை நீக்க வந்திருக்கும் இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமானது.

Share

காவலன் – கொலையரங்கம்

நன்றி: தமிழ் பேப்பர்

சன் பிக்சர்ஸ் தயாரிக்காத, வினியோகிக்காத திரைப்படம் என்பதால், காவலன் திரைப்படத்தைத் திரையிட தியேட்டர்களே கிடைக்கவில்லை. பெரிய பாடுபட்டுத்தான் இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதிமுக பினாமிகள்தான் படத்தை ரிலீஸ் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வேறு வழியில்லாமல் இப்போது விஜய் அதிமுக ஆதரவாளராகவே தன்னைக் காண்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே அரசியலில் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விஜய், இனிமேல் அந்த ஆட்டத்தைக் குறைத்துக்கொண்டு அதிமுகவின் நன்றி விசுவாசியாகக் கொஞ்சம் காலத்தையாவது ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம். இப்படிப்பட்ட முன்னாள் விசுவாசிகளெல்லாம் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் யோசித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படத்தின்போது தான் அனுபவித்த தேன்நிலவுக் காலத்தின் இன்னொரு முகம் இப்போது விஜய்க்குப் புரிந்திருக்கும். இது மெல்ல ரஜினிக்கும், கமலுக்கும் நேர்வதைத் தவிர்க்கமுடியாது. அன்றுதான் சன் பிக்சர்ஸின் மாயவலையைப் புரிந்துகொள்வார்கள் அவர்கள். இது எத்தனை சீக்கிரம் நடக்கிறதோ அத்தனை சீக்கிரம் நடப்பது நல்லது.

திரைப்படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சன் பிக்சர்ஸ் இந்தத் திரைப்படத்தை வெளியிட தியேட்டர்கள் தராததற்கு நன்றிதான் சொல்லவேண்டும் எனத் தோன்றிவிட்டது. (கலையரங்கம் தியேட்டர் ஒரு தனிக்கொடுமை!) சன் டிவியில் வரும் மெகா சீரியல்கள் இதைவிடக் கொஞ்சம் தரமானதாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

மலையாள கமர்ஷியல் இயக்குநர்கள் மலையாளத் திரைப்படங்களை சீரியல்கள் போலவே வைத்திருக்கப் படும்பாடு நாம் அறிந்ததே. அவர்களே தமிழில் படமெடுக்கும்போது, அதே பாணியில் எடுத்து நம்மைப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள பெரிய மனோபலம் வேண்டும். முதலில் ஒரு ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, பின்னர் படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்னர் அதனை முடித்து, திடீரென ஒரு டிவிஸ்ட் கிளைமாக்ஸ் கொடுத்து, நம்மைப் படுத்தி எடுக்கும் அதே ஃபார்முலா கதை. குறைந்த பட்ஜெட், நிறைய செண்டிமெண்ட், யூகிக்கக்கூடிய காட்சிகள், வளவள வசனம், மினிமம் கேரண்டி.

கொஞ்ச நாளாக பெரிய ஹிட் இல்லாத விஜய், விக்ரமனும் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை என்னும் தைரியத்தில், மினிமம் கேரண்டியான செண்ட்டிமெண்ட் + காமெடியில் இறங்கிவிட்டார். சோகம் என்னவென்றால், லோ கிளாஸ் செண்டிமெண்ட், லோ கிளாஸ் காமெடி.

இந்த லோ கிளாஸ் காமெடி பழகிப்போய், சில இடங்களில் வடிவேலு நம்மைச் சிரிக்க வைத்துவிடுவதும் உண்மைதான். பின்னர் ஏன் சிரித்தோம் என்று வழக்கம்போல யோசிக்கதத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சாமானிய மனிதர்களும், பெண்களும் விடாமல் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் என் மனைவி கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறியதைக் குறிப்பிடவேண்டியது என் கொடுப்பினையா தலையெழுத்தா என்பது தெரியவில்லை.

அசின், ஐஸ்வர்யா ராய்க்குப் போட்டியாகப் பாட்டியாகிவிட்டார். பாடல்களில் ‘யாரது’ பாடல் மட்டும் காதில் ரீங்கரிக்கிறது. இரண்டு விஜய் வரும் பாடல் பார்க்க சுவாரஸ்யம். மற்றபடி பெரிய நடிகர் பட்டாளத்தின் இம்சை இலவச இணைப்பு. லாஜிக்கே கிடையாது என்பது பம்பர் பிரைஸ். நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்து, இது மலையாள இயக்குநர் ஒருவரின் படம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் படம் எடுக்காத பாஸில்தான் எவ்வளவு நல்லவர் என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறார் சித்திக்.

ஏன் ஒருவர் பாடிகார்டாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏன் அவர் யூனிஃபார்ம் போட்டுத் தொலைக்கவேண்டும், ஏன் அவரை கல்யாணம் செய்துகொள்ளும் இரண்டாம் கதாநாயகியின் அப்பா மௌனமாக இருக்கவேண்டும், ஏன் போலிஸுக்குப் பதில் சாதாரண ஒருவர் பாடிகார்டாக போகவேண்டும் என இப்படிப் பல ஏன்கள்? அதில் இன்னொன்று, ஏன் ரோஜா என்பதும் அடங்கும். இத்தனை கொடுமைகளையும் ஒரே ஆளாகச் சுமக்கிறார் விஜய்.

சொல்லாமலே, காதல்கோட்டை, ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ (காலமெல்லாம் காதல் வாழ்க) போல இன்னொரு ஃபோன் காதல். நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போல விஜய். சுறா, எறா என்றெல்லாம் பார்த்துவிட்டு, இப்படி விஜய்யைப் பார்க்கவே கொஞ்சம் ஆச்சரியமாக (நிறைய பரிதாபமாகவும்!) இருந்தது உண்மைதான். அத்தனையையும் மெல்ல மெல்ல மறக்கடித்துவிடுகிறார். அதிலும் தனது காதலியைப் பார்க்கப் போகிறோம் என்ற காட்சிகளில் அவரது பரிதவிப்பு அருமை. பல கொடுமைகளுக்கு இடையில் கொஞ்சமாவது நம்மை சந்தோஷமாக வைத்திருந்தது விஜய்யும் வடிவேலுவும்தான்.

இத்தனை பெரிய செண்டிமெண்ட் மொக்கை என்று இந்தப் படத்தைக் குறிப்பிடும் வேளையில், இன்னொன்றையும் சொல்லவேண்டும். விஜய்க்கு தொடர் ஃப்ளாப்பாக இருந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், பெண்கள் கூட்டத்தால் இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். சன் பிக்சர்ஸ் தவிர வேறு யார் படம் தயாரித்தாலும் அப்படத்தைச் சுதந்தரமாகத் திரையிடக்கூட முடியாது என்ற நிலையில் இந்தப் படம் வெற்றி பெறவேண்டியது முக்கியத் தேவை.

Share

வம்சம்

உலகத் திரைப்படங்கள் தங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யும்போது தமிழ்ப்படங்கள் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதன் அபத்தத்தைப் புரிந்துகொண்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் சொற்பமே. ஹே ராம், விருமாண்டி படங்களைப் பார்த்தபோது, கதைகளுக்குப் பஞ்சம் என்னும் அபத்த வாதத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. கதைக்கென யோசிக்க, மெனக்கெட யாரும் தயாரில்லை. குறைந்த யோசிப்பில் அதிக லாபம் அல்லது கைக்கடிக்காத படம் என்பதில்தான் அனைவருமே கவனம் செலுத்துகிறார்கள். தமிழில் வாழ்க்கையைப் பேசவேண்டுமானால், அரசியல், மத, ஜாதி வராத மாதிரி யோசிக்கவேண்டும் என்னும் ஒருவித நிர்ப்பந்தத்துக்குள் இயக்குநர்கள் உழல்வது புரிகிறது. எதற்குத் தேவையில்லாத பிரச்சினை என்னும் எண்ணம் காரணமாக இருக்கலாம். கமல் இதனை எளிதாக எதிர்கொண்டுவிடுவதால் அவரால் சிறந்த கதைகளைக் கொண்ட படங்களைக் கொடுத்துவிடமுடிகிறது.

ஜாதியை வெளியே வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை எடுப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரதிராஜா அதனை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவார். கமல் தேவர் மகனில் நேரடியாகச் சாதியைப் பற்றிப் பேசினாலும், அதிலிருந்த ரொமாண்டிசைசேனும், ஹீரோயிஸமும் அதனை ஜனரஞ்சகப் படமாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். விருமாண்டியில் கமல் ஹீரோயிஸத்தையும் ஜாதி பற்றிய விவரணைகளையும் மிக அறிவுபூர்வமாகக் கலந்திருந்தார். அதிலும் கமல் என்னும் நடிகருக்குள்ளான இமேஜ் தந்த எல்லையைக் காணமுடிந்தது. கமல் அவரது நிலையில் கவனமாக இருப்பதும் நல்லதுதான். அமீரின் பருத்திவீரன் தெளிவாக வெளிப்படையாக ஜாதியை முன் வைத்திருந்தால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கக்கூட வாய்ப்புள்ளது. ஆனால் அந்தப் படத்தின் அடிநாதமே அதுதான். அமீர் எந்த எண்ணத்துடன் அதனை எடுத்தார் என்பது தெரியாது. ஆனால் மிக முக்கியமான விஷயம்தான் அவர் தொட்டது.

இந்நிலையில் வம்சம் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இது ஓர் அருமையான திரைப்படம் அல்ல. ஒரு தமிழ்த் திரைப்படத்துக்கே உரிய எல்லைகள், பிரச்சினைகள் இப்படத்துக்கும் உள்ளன. ஹீரோயிஸ அடிப்படையில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ், ஃப்ளாஷ் பேக் காட்சிகளின் இழுவை போன்றவை. அதனையும் மீறி, மறவர் சமூகத்தின் கதை என்ற அளவில், அதனை மிகவும் வெளிப்படையாகவே சொல்லி வம்சம் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இப்படமும் மற்றப் படங்கள் போலவே ஜாதிய மேன்மையை முன்வைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனையும்கூட இப்படம் மிகத் தெளிவாக வெளிப்படையாகவே முன்வைக்கிறது. கருத்தியல் அடிப்படையில் இந்த ஜாதி மேன்மை, அதிலும் மேல்ஜாதி மேன்மையை பறைசாற்றும் படங்கள் தரும் எதிர்மறை விளைவுகள் யோசிக்கத் தகுந்தவையே.

ஆனால், ஒரு திரைப்படம் என்ற அளவில், இதனையும் பதிவு செய்வது மிக மிக அவசியமே. மறவர்களின் பல வம்சங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை, ஈகோக்களை முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அவர்களின் ஈகோவும் பிரச்சினையும் எப்போதும் வெட்டுக் குத்தோடு தொடர்புடையதுதான் என்பதனைச் சொல்லவும் கொஞ்சம் தைரியம் வேண்டும். அது இயக்குநருக்கு இருக்கிறது. ஒருவேளை இது வெளியில் அப்பட்டமாகத் தெரியாமல் இருப்பதற்காகத்தான் ஜாதி மேன்மை என்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டாரோ எனத் தோன்றுகிறது.

இலங்கையில் புத்தகக் கண்காட்சியின்போது ஒரு மறவ நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மறவர்கள் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பல விஷயங்கள் இந்தப் படத்தில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கள்ளச் சாராயமும் பன்றிக் கறியும் இப்படத்தின் வெற்றிக்கான குறியீடாகவே மாறியுள்ளன. இவர்கள் பெண்களைக் கேவலப்படுத்துவதில்லை என்பதையும் இப்படத்தில் சொல்லிவிடுகிறார் இயக்குநர். இதனால் பெண்களைக் கேவலப்படுத்தும் சம்பிரதாயமான தமிழ்ப்படக் காட்சிகளில் இருந்து எளிதாக வெளிவந்துவிடுகிறார். அதேசமயம், கதாநாயகி நடுத்தெருவில் வில்லன் மீது சாணியைக் கரைத்து ஊற்றும் காட்சிக்கும் அதனைப் பயன்படுத்திக்கொண்டுவிட முடிகிறது. இப்படத்தின் சிறப்பான காட்சி இதுவே. அதேபோல் அந்த கதாநாயகியைக் கேவலப்படுத்த, இன்னும் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு வில்லன் கும்பல் சுற்றுவதும் நல்ல யோசனைதான்.

கருணாநிதியின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு நடிகர் நடித்திருந்தும், படத்தை இப்படி எடுத்திருப்பது ஆச்சரியம்தான். அவருக்கான காட்சிகள் பிற்பகுதிகளில் வந்து படத்தையே புரட்டிப் போட்டுவிட்டாலும்கூட, ஒரு பேண்ட் கூட இல்லாமல், படம் முழுக்க வேட்டி, லுங்கிகளில் வலம் வரவும் இன்றைய கதாநாயகர்களும் தில் வேண்டியிருக்கிறது. ஒரு மறவருக்கான திமிர் அருள்நிதியின் தோற்றத்துக்கு இல்லை. ஆனால் இதையே இன்றைய நிலையிலான ஒரு மறவப் பொதுப் பிம்பமாக வைப்பதில் பாண்டிராஜ் சொல்ல வரும் சேதியும் அடங்கிவிடுகிறது. அந்த உருவம் மக்களின் பொதுப்புத்தியில் எப்படிப் பதிந்திருக்கிறது என்பதைப் பயன்படுத்திக்கொண்டு, சரியான கல்வியே இவர்களைப் பண்படுத்த வல்லது என்பதை அவர் சொல்லாமல் சொல்லிவிடுகிறார். கிராமத்தில் இருந்துகொண்டு கிராம வாழ்க்கை வாழாமல் இருப்பதும்கூட இதிலிருந்து வெளிவர உதவும் என்று இயக்குநர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கதாநாயகன் பேண்ட் ஷர்ட் வண்ணம் இறங்கிச் செல்லும்போது, அவரது மகன் எதிரியாக இருந்தவனின் மகனைத் திருவிழாவுக்கு அழைக்கிறான். பேண்ட் போட்டுக்கொண்டு, காரின் அருகில் நடந்தால் சகிப்புத்தன்மை வந்துவிடுகிறதா என்ன?

எப்பாடு கொண்டாவது பிற்பாடு கொடாதவர் உள்ளிட்ட பல்வேறு வம்சங்களின் பெயர்களைச் சொல்வதே கூட தமிழில் அரிது. ஒருவகையில் இது ஆழமாகப் பேசப்படுவதால், பொதுவான ஒரு படம் என்பதிலிருந்து விலகி, அப்பகுதியைச் சேர்ந்த அந்த மக்களுக்கான படம் என்று காணப்படக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதுவே இப்படத்துக்கு நேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். படம் முழுக்க, கிராமத் திருவிழாவின்போது நடக்கும் கொண்டாட்டங்களைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இது கொஞ்சம் அலுப்பதைத் தருகிறது. என்றாலும், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இன்று இப்படி நடப்பதெல்லாம் அருகி வருகிறது என்னும் நிலையில், பெரிய மகிழ்ச்சியுடன் பார்த்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. நடிகர்கள் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜெயப்ராகாஷின் அமுல்பேபி முகம் வில்லனுக்கு ஒப்பவில்லை. கதாநாயகனின் அம்மாவாக வருபவரும் ஒட்டவில்லை. பாண்டிராஜ் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கவேண்டும்.

ஜாதி என்பதைப் பொத்திப் பொத்திப் பேசுவதும், அல்லது மேம்போக்காக அணுகி அதனை ஒட்டுமொத்தமாக ஒரு சாதி என்றாக்கி, அதற்குண்டான நுண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டுப் பேசுவதும்தான் தமிழ்ப் படங்களின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. பிராமணர்கள் மட்டும் விதிவிலக்கு. பிராமணர்கள் பற்றிய படங்களை மட்டும் வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். வேற்று ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால், மிகக் கவனமாகவே பேசுவார்கள். எல்லா மேல்சாதிகளையுமாவது ஒன்றாக வைத்துப் பேசவேண்டும் என்ற உணர்வுகூட இவர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது. அந்த வகையில் இந்தப் படம் ஒரு முதற்படி. இனியும் அடுத்தடுத்த, பிராமணர்களோடு சேர்த்து மற்ற மேல்சாதிகளின் குணங்களையும் தோலுரிக்கும் படங்கள் வரட்டும். இதனை எதிர்பார்ப்பதே அதிகம்தான் என்றாலும், இந்தப் படம் அது நடக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படம் மறவர் வம்சத்த்தின் மேன்மையோடு தேங்கிவிட்டாலும், பருத்திவீரன் போன்ற கதையில், அதைவிட ஆழமாக அடுத்த படிக்குச் செல்லும் படைப்புகள் வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Share

எந்திரன் – சன் டிவி – தொடரும் குமட்டல்

இந்தக் கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.tamilhindu.com/2010/10/suntv-n-enthiran-the-abominable-nexus/

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘யார் இந்தியாவின் நிஜமான சூப்பர் ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. இந்தியாவெங்கும் இருந்து மக்கள் எஸ் எம் எஸ் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. 88% பேர் ரஜினிதான் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று சொல்லியிருந்தார்கள். 3% பேர் அமிதாப், 3% பேர் ஷாருக், 3% பேர் சல்மான் – ஏறக்குறைய இப்படி இருந்தது மக்களின் தீர்ப்பு. ரஜினியின் திரைப்படங்களுக்கு ஏன் இந்த பிரபல்யம் என்று அலசத் தொடங்கினார்கள். அமிதாப், ஷாருக் போன்ற நடிகர்களிலிருந்து ரஜினி எப்படி மேலேறிச் செல்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 1970களில் அமிதாப் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது கிடையாதாம். தனது படங்கள் வெளியானபோதுகூட அதைப் பற்றிப் பேசமாட்டாராம். ஆனால் இப்போதெல்லாம் தனது படங்களுக்கு விளம்பரம் செய்ய வருவதும், ஏதேனும் தொலைக்காட்சித் தொடரில் (டாக் ஷோ) தோன்றினால் அதற்கான முன்னேற்ற நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் இயல்பாகிவிட்டது. தங்களது படங்கள் வெளியாகும்போது ஷாருக்கும் சல்மானும் பெரிய பெரிய பிரமோக்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் ரஜினி ஈடுபடுவதில்லை என்று சொன்னது அந்தத் தனியார்த் தொலைக்காட்சி சானல்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருநாள் முழுக்க சன் டிவியில் ரஜினி தோன்றி கிளிமாஞ்சாரோ பாடலைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். ரஜினி வாக்கு கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதனை ரஜினியே மேடையில் சொன்னார். எந்திரன் திரைப்படம் சன் பிக்சர்ஸின் கையில் வந்தபோது, இதற்கான பிரமோக்களில் தான் பங்கேற்பதாக ரஜினி வாக்குக் கொடுத்திருந்தாராம். ஆனால் படம் முடிந்ததும், அந்த பிரமோ என்பது தன் குணத்துக்குச் சற்றும் பொருந்துவல்ல என்பது ரஜினிக்கு உறைத்திருக்கிறது போல. அதிலிருந்து பின்வாங்கி விட்டார். ஆனால் அதனையும் கலாநிதி மாறன் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டாராம். ரஜினி ஒரு மேடையில் ஏறிவிட்டால் எப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்பது நாம் அறிந்ததே. எந்திரன் வெளியீட்டு மேடைகளில் அவர் கலாநிதிமாறனைப் புகழ்ந்த விதமும் அப்படியே. அதற்கான வணிகக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. வணிகக் காரணங்கள் மட்டுமே எப்போதுமே ரஜினியை நிர்ணயித்துவிடுவது வருத்தமளிக்கும் ஒன்றுதான்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் என்னும் ஒற்றை கம்பெனியின் ராட்சதப் பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் சிக்கிக் கொண்டுவிட்டது. அதிலிருந்து வெளியேறும் வழி என்னவென்று பார்த்தால், அங்கே வரவேற்கக் காத்துக்கொண்டிருப்பவர்கள் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள். வங்குவத்தி வங்குவத்தின்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு வங்குவத்தி திங்கு திங்குன்னு ஆடிச்சாம் கதைதான் இப்போது இங்கே நடந்துகொண்டிருக்கிறது. கருணாநிதி பேரன்கள் கையில் ரஜினி சிக்காமல் சன் பிக்சர்ஸில் அவர் மாட்டிக்கொண்டது ஒரு வகையில் அவருக்கு நல்லதுதான். ஆனால், மணிரத்னத்தின் வீட்டில் குண்டு விழுந்த பின்பு, தமிழ்நாட்டிலேயே குண்டு வெடிப்புகள் நடக்கின்றன என்பது சட்டென நினைவுக்கு வந்து, ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?

இதில் போதாக் குறைக்கு சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளை தனது கைப்பிடியில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும், அதற்குப் போட்டியாக கருணாநிதியின் பேரன்களே களமிறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. உழைப்பு, தொழில், முன்னேற்றம் என்றெல்லாம் காரணங்கள் சொன்னாலும், பதவியும் ஊடகமும் தரும் செல்வாக்கில்லாமல் இதுவெல்லாம் சாத்தியமில்லை என்பதை எந்த ஒரு பாமரனும் உணரமுடியும். ஒரு குடும்பத்தின் கைப்பிடிக்குள் தமிழ்த் திரையுலகம் இப்படி சிக்கிக்கொள்வது ஆரோக்கியமானதல்ல. இதுபோக, சன் டிவிக்கோ கலைஞர் டிவிக்கோ திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கான உரிமம் கொடுப்பதில் நடக்கும் கூத்துகள் தனி. இன்றைய கருணாநிதியின் அரசியல் புலத்துக்கு முன்னால், சன் பிக்சர்ஸின் ஊடகப் புலத்துக்கு முன்னால் எந்த இயக்குநரால், எந்த நடிகரால் எதிர்த்து நின்றுவிட முடியும் என நினைத்துப் பாருங்கள். ரஜினி போன்ற உச்ச நடிகரே இப்படி வீழ்ந்து கிடந்தால், மற்றவர்களின் பரிதாப நிலை நமக்குப் புரியும்.

suntv-endhiran

முன்பெல்லாம் ரஜினி படம் வெளியாகிறது என்றாலே சில படங்கள் அந்த சமயத்தில் வெளிவராது. இதன் காரணம் ரஜினி என்னும் உச்ச நடிகரின் படத்தோடு போட்டி போடுவது அவசியமற்ற வேலை என்பதுதான். இது தயாரிப்பாளர்களும், நடிகர்களும், இயக்குநர்களும் தாங்களாக எடுக்கும் ஒரு முடிவு. இன்று அப்படியல்ல. நீங்கள் போட்டி போட நினைத்தாலும், உங்களுக்கு தியேட்டர் கிடைக்காது. அதை மீறி வெளியிட்டால் உங்கள் திரைப்படம் சன் டிவியின் திரை விமர்சனம் (இப்போது இந்தப் பகுதி பெரும் நகைச்சுவைப் பகுதியாகிவிட்டது வேறு விஷயம். நேற்று வரை சன் பிக்சர்ஸ் தயாரித்த தில்லாலங்கடி திரைப்படம்தான் திரை விமர்சனம் பகுதியில் முதல் இடம் என்று கேள்விப்பட்டேன். நான் இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்பதால், ஒரு நண்பர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியவந்தது) பகுதியில் குதறப்படலாம். தனது ஒரு படம் குதறப்பட்டதை எதிர்த்து பேசிய சத்யராஜ் இன்றெல்லாம் வாய் திறப்பாரா என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அன்று சன் டிவி ஒரு சானல் மட்டுமே. இன்று திரையுலகில் அது ஒரு சக்ரவர்த்தி. டிவி, திரைப்படம் என்பது போதாதென்று, தினமும் 10 லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகை, இது போக வார இதழ்கள், இந்தியாவெங்கும் பண்பலை – இவர்களை எதிர்த்துப் பேச உண்மையான தைரியம் இருக்கவேண்டும் அல்லது முட்டாளாக இருக்கவேண்டும். இந்த நிலை இப்படியே நீடிப்பதைத்தான் ரஜினி விரும்புகிறாரா என்ன?

இதில் எந்திரன் வெளியீடு என்று சொல்லி சன் டிவி அடிக்கும் கும்மாளம் குமட்டலை வரவழைக்கிறது. முன்பும் எத்தனையோ ரஜினி படங்கள் வந்திருக்கின்றன. இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். அது ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் அங்கங்கே நடந்த ஒரு விஷயமாக அமுங்கிவிடும். ஆனால், இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு நடிகருக்கு இப்படி நடப்பதெல்லாம் பெரிய எரிச்சல் தரும் விஷயங்கள். இது ஒரு ரசிகரின் அல்லது சில ரசிகர்களின் தனிப்பட்ட விஷயமல்ல. சமூகம் எப்படி திரைப்படத்தினால் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இது. முன்பே இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். இந்த முறை இதனையும் சன் டிவி மார்க்கெட்டிங் உத்தியாக்கிவிட்டது. ரஜினி படத்துக்காக பால் குடம் எடுப்பதும், 1500 படிகள் கொண்ட கோவிலுக்கு முழங்காலில் நடந்து படியேறிப் போவதும், பாலாபிஷேகம் செய்வதும், தேர் இழுப்பதும், ரசிகர்கள் பச்சைக் குத்திக் கொள்வதும், அலகு குத்திக் கொள்வதும் – என்ன ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இதனைத் தொடர்ந்து ஒரு சாகசமாக ஒரு முக்கியமான சானல் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தால், வளரும் இளைஞர்கள் மனதில் இதெல்லாம் நல்ல விஷயம் என்பதாகப் பதிந்துவிடாதா? ஆனால் இதையெல்லாம் யோசிக்கும் நிலையில் இல்லை சன் பிகசர்ஸ். அதன் இலக்கு தான் போட்ட 150 கோடிக்கு நிகராக எத்தனை மடங்கு லாபம் சம்பாதிக்கமுடியும் என்பது மட்டுமே.

suntv-endhiran

ரஜினி போன்ற நடிகர்கள் இந்த குமட்டல்களையெல்லாம் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இன்னொரு குமட்டல். படம் வெளி வந்த பின்பாவது ரஜினி இது குறித்துப் பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தான் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதில்லை என்னும் சாக்கு போக்கெல்லாம் எடுபடாது. ஜெயலலிதா ரஃபி பெர்னாட்டுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இப்படித்தான் சொன்னார். தான் எத்தனை முறை சொல்லியும் தன் காலில் அமைச்சர்களும் தொண்டர்களும் விழுகிறார்கள் என. காலில் விழுந்த இரண்டு அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பியிருந்தால், அடுத்த எந்த அமைச்சர் காலில் விழுந்திருப்பார்? ரஜினியும் தனக்கு பாலாபிஷேகம் செய்யும், தேர் இழுக்கும் ரசிகர்களை எல்லாம் சரியாகக் கண்டித்திருந்தால் அவர்களும் நிச்சயம் கேட்டிருப்பார்கள்.

தன் மகள் கல்யாணத்துக்கு நிச்சயம் வரக்கூடாது எனச் சொல்லி, அதனைச் செய்துகாட்டவும் தெரிந்த ரஜினிக்கு இது ஒன்றும் பிரமாதமான காரியமல்ல. ரஜினிக்கு இப்படி நடக்கும்போது, ரஜினியாக வரத் துடித்துக்கொண்டிருக்கும் இளைய தளபதிகளும், அல்டிமேட் ஸ்டார்களும் இதனையே நகலெடுக்கவே விரும்புவார்கள். அப்படி ரஜினி செய்யாவிட்டால், இன்றைக்கு ரஜினிக்கு அவர் ரசிகர்கள் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டின் திரை கலாசாரமாக மாறும். எனவே ரஜினியே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். அஜித் தனது பேருக்கு முன்பாக இனிமேல் அல்டிமேட் ஸ்டார் என்றெல்லாம் போடக்கூடாது என்று சொன்னார் சமீபத்தில். கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதேபோன்ற ஒரு சுய பரிசோதனையை ரஜினி செய்யவேண்டும்.

ரசிகர் மன்றங்களால் சில நற்பணிகள் அங்கங்கே நடக்கிறது என்றாலும், பெரிய அளவில் இந்த ரசிகர் மன்றங்கள் என்ன சாதித்தன என்பது தெரியவில்லை. எந்த ஒரு நடிகரும் ரசிகர் மன்றத்தை நம்பி இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் வெளியில் எந்த ஒரு நடிகரும் இதனைச் சொன்னதில்லை. ரஜினி தனது எல்லா ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டு, அதில்கூட முன்மாதிரியாக இருக்கலாம் ரஜினி. நடிப்பு என்பது ஒரு தொழில். திரைப்படமும், நடிப்பும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதனைப் பாருங்கள், பாராட்டிவிட்டுச் செல்லுங்கள், அது போதும் என்று ரஜினி அறிவித்தால்தான் என்ன?

எந்திரன் வெளியீட்டை ஒட்டி மேடையில் பேசிய அத்தனை நடிகர்களும் தங்கள் ரசிகர்களையே நகலெடுத்தார்கள். ஒவ்வொரு நடிகரும் ஒரு விசிலடிச்சான் குஞ்சாக வந்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்கெல்லாம் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. நடிகர்களின் வழியேதான் ரசிகர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. தன்மானமுள்ள நடிகர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொண்டு முன்பு குரல் கொடுத்த நடிகர்கள் எல்லாம் ஓடிப் போன சுவடே தெரியவில்லை.

suntv-endhiran

ரஜினி முன்பெல்லாம் புகை பிடிப்பவராகப் பல படங்களில் தோன்றுவார். ஸ்டைல் என்பதே தன் அடையாளம் என்று ரசிகர்களை அவர் அடைந்த விதமே இந்த புகையின் வழியாகத்தான் எனலாம். திடீரென்று பாமக குரல் கொடுத்தது. ரஜினியால் பல இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று. ஒரு படி மேலே போய் ரஜினியை அக்கட்சி மிரட்டியது என்றே சொல்லவேண்டும். ரஜினி புகை பிடிப்பது போன்ற படங்கள் வந்தால் அதனை வெளியிட விடமாட்டோம் என்றார்கள். உண்மையில் இது ஜனநாயகத்துக்கு எதிரானது. ரஜினி புகை பிடிக்கும் படங்களால் இளைஞர்கள் கெடுகிறார்கள் என்று நீங்கள் பிரசாரம் செய்யலாம். அமைதி வழியில் அதனை எதிர்த்துப் போராடலாம். தொடர்ந்து ரஜினியுடன் பேசலாம். ஆனால் அப்படி வரும் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்பது அராஜகம். ரஜினி இதற்குப் பணிந்து போனார். வணிகக் காரணங்கள். அடுத்த படத்தில் சுயிங்கம் மென்று கொண்டு வந்தார்.

புகை பிடிப்பதால் இளைஞர்கள் கெட்டுவிடுவார்கள் என்று போராட்டம் நடத்திய பாமக இன்று ஏன் விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது? ஒரு நடிகருக்கு நடக்கும் இத்தனை குமட்டல்களையும் ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது? சன் டிவியில் பரப்பல்களைப் பார்த்து வெறுமனே அமைதியாக இருப்பது ஏன்? எந்திரன் கருணாநிதியின் ஆசியையும் பெற்று விட்டது என்பதற்காகவா? ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் விதமாக தொடர்ந்து சன் டிவி ரஜினி ரசிகர்களைக் காட்டிக்கொண்டிருப்பது குறித்து பாமக வாய் திறக்காதது ஏன்? நாளை கிடைக்கவிருக்கும் சீட்டும் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காகவா? இப்படி ரசிகர்கள் என்னும் போர்வையில் ஒரு சமுதாயத்தின் மக்களைக் கீழ்மைப்படுத்துவது தவறு என்று ரஜினிக்கு எதிராகப் பாமக இன்று எதுவும் பேசாமல் கள்ள மௌனத்துடன் இருப்பது, அது சன் பிக்சர்ஸைப் பாதித்து, அரசியலில் தன்னையும் பாதித்துவிடும் என்பதற்காகவா?

முதலில் ரஜினி ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். படத்துக்கான மார்க்கெடிங் போர்வையில் சன் டிவி நிகழ்த்திக்கொண்டிருப்பது ரஜினியின் சுயமரியாதையின் மீதான தாக்குதலே அன்றி வேறல்ல. தனது ரசிகர்களின் சர்க்கஸ்களைக் காட்டிக்கொண்டிருப்பதன் மூலம் தன்னைக் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினி உணரவில்லை என்றால், பொதுமக்களின் மத்தியில் ரஜினியின் இமேஜ் நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும். அது ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்பதும் ஓரளவு உண்மையே. ரஜினி என்னும் தனிமனிதரின் மனித இருப்புக்கும், இப்போது நடந்துகொண்டிருக்கும் அவலங்களுக்கும் தொடர்பே இல்லை என்பது பலருக்குத் தெரியும். அதை எல்லோருக்கும் தெரிந்ததாக ஆக்க ரஜினி முயல்வது அவருக்கு நல்லது. இல்லை என்றால் ஒரு தன்மானமற்ற கும்பலை நாளைய சந்ததியாக உருவாக்கி வைத்துவிட்டுப் போவதில், என்னதான் சன் டிவியின் எரிச்சலூட்டும் அதீத பரப்புரை காரணமாக இருந்தாலும், ரஜினிக்கு பெரும் பங்கு உண்டாகியிருக்கும். பின்பு அதனை நீக்குவது என்பது பெரும்பாடாகிவிடும். சன் டிவியின் கேவலப்படுத்தும் ப்ரமோக்களுக்கு ரஜினி உடனே ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. 60 வயதுக்குப் பிறகு, ஒரு சூப்பர் ஹிட் எந்திரனுக்குப் பிறகு, இனி சன் பிக்சர்ஸில் ரஜினி நடிக்காமல் இருந்தால், அவருக்கோ நாட்டுக்கோ ரசிகர்களுக்கோ என்ன ஒரு பெரிய நஷ்டம் இருந்துவிடப் போகிறது?

நடிகராகத் தன் பலத்தை ரஜினி அறிந்துகொள்வது அவர் சார்ந்திருக்கும் திரையுலகத்துக்கும், அவரது ரசிகர்களான நாளைய தலைமுறைக்கும் நல்லது.

Share

எந்திரன் – பெரிதினும் பெரிது கேள்

எனது எந்திரன் விமர்சனம் தமிழ்பேப்பர் இணையத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. வாசிக்க இங்கே சொடுக்கவும். http://www.tamilpaper.net/?p=258

டெல்லி எருமை என்று திட்டினால் கோபம் வரும், அதையே கொஞ்சம் மாற்றி பசு போல என்று சொன்னால் பெருமையாக நினைத்துக்கொள்வார்கள் என்பார்கள். அதேபோல, காதில் பூ சுற்றிப் படம் பார்க்கச் சொன்னால் கோபப்படுவார்கள். அதையே அறிவியல் புனைகதை என்று சொல்லிப் பார்க்கச் சொன்னால், அந்தப் படம் நன்றாகவும் இருந்துவிட்டால், பெருமையாகப் பார்த்துவிட்டுப் போவார்கள். எந்திரன் – அறிவியல் புனைகதையின் வழியே நம் காதில் பூ சுற்றுகிறது. இதுவரை ஆங்கிலப் படங்கள் சுற்றி வந்த அதே பூவை ஒரு தமிழ்ப்படம் சுற்றுகிறது. அது நமக்குத் தெந்திருந்தும், வியப்பு ஏற்படாமலில்லை. ஏனென்றால் 150 கோடி பெறுமானமுள்ள பூ இது.

பொதுவாகவே ரஜினியின் திரைப்படங்களில் அவர் தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்டாகவும் சூப்பர்மேனாகவும்தான் வலம் வருவார். ஒரு அடி அடித்தால் பத்து பேர் எப்படி எகிறி விழுவார்கள் என்று சீரிய திரை விமர்சகர்களும் ஆய்வாளர்களும் ரஜினியை மட்டும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அறிவியல் புனைகதை என்று சொல்லி அதற்கு சாமர்த்தியமான ஓர் அடித்தளத்தைக் கொடுத்து அவர்கள் வாயையும் அடைத்துவிட்டார் ஷங்கர். ஆனாலும் அவர்கள் சும்மா இருக்கப்போவதில்லை. இப்படத்தில் இருக்கும் அறிவியல் ஓட்டைகளையும், கலாசாரப் பழமைவாதத்தையும், சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் காட்சிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து எழுதுவார்கள். நாம் ரோஜாவை ரோஜாவாக அணுகுவோம்.

அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பில்…

ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

தங்களது படங்களில் வரும் பாடல் காட்சிகளில் கிராபிக்ஸை ஊறுகாய் போல மட்டுமே தமிழ் இயக்குநர்களுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்ற வசைச்சொல் பல காலமாக இருந்தது வந்தது. அதனை ஓரளவு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் போக்கியது. இத்திரைப்படம், தமிழ்த் திரைப்படங்களில், கிராபிக்ஸில் பெரிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறது.

பெரிதினும் பெரிது கேள் என்பதை ஷங்கர் தன் வழியில் புரிந்துகொண்டிருக்கிறார். இரண்டு ரஜினி போதாது என்று நினைத்தாரோ என்னவோ, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்குத் திரையெங்கும் ரஜினியின் உருவங்கள். ஒரு ரஜினி ரசிகனுக்கு இது வாழ்நாள் ட்ரீட்டாக இருக்கும். அத்தனை ரஜினியைப் பார்த்து ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் மூழ்கிப் போன நான் இன்னும் அதே நினைப்பிலேயே இருக்கிறேன்.

திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.

படத்தில் சில காட்சிகள் தேவையில்லாமல் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கொசு வரும் காட்சி, ஐஸ்வர்யா ராயை ரோபோ கடத்தும்போது வரும் கார் சேஸிங் காட்சி, கிளிமாஞ்சாரோ பாடலுக்கு முன்னால் கலாபவன் மணி வரும் காட்சி போன்றவை. அதேபோல் நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.

பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.

ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான். ஏ.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.

இதே படத்தில் கமல் நடித்திருந்தால் அது வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும். கூடவே கமலின் சில தன்முனைப்பு எரிச்சல்களும் சேர்ந்திருக்கும். இயக்குநரின் நடிகரான ரஜினி நடித்ததில், இப்படம் வேறொரு பரிமாணத்தைப் பெற்றுவிட்டது. கூடவே ரஜினியின் மாஸும் சேர்ந்துகொண்டதில், இப்படம் மிகப் பெரிய பிரம்மாண்டத்தைக் கண்முன் நிறுத்திவிட்டது.

மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.

Share

எந்திரன் – சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

சுரேஷ்கண்ணனுக்கு நன்றி!

பொதுவாக சுரேஷ்கண்ணன் ரஜினி படம் வருவதற்கு முன்பு ஒரு தடவைதான் திட்டுவார். இந்த முறை இரண்டு மூன்று முறை திட்டியதாலோ என்னவோ படம் எக்கசக்கமாக நன்றாக இருந்துவிட்டது. ரஜினி ரசிகர்கள் ஒவ்வொருவரும் சுரேஷ் கண்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள். வணிக சினிமாவுக்கு எதிராக அவரது போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். அடுத்தடுத்த ரஜினி படத்துக்கும் இப்படி அவர் திட்டி பதிவெழுதி, எஸ்பிபி முதல் பாட்டு பாடினால் எப்படி ரஜினி படம் ஹிட்டாகிவிடுமோ அதுபோல, இவர் திட்டினாலே ஹிட்டாகிவிடும் என்னும் உண்மையை நிலைநிறுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.

படம் – சான்ஸே இல்லை. ரஜினியின் தீவிர ரசிகர் ஷங்கரைப் பார்க்க நேர்ந்தால் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்துவிடுவார்.

படம் பற்றிய எனது உணர்வு ரீதியான ரஜினி ரசிகனின் விமர்சனம் தமிழ் பேப்பரில் நாளை வெளிவரும். கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களை சுரேஷ்கண்ணன்கள் எழுதுவார்கள். இப்படியாக விமர்சகர் சுரேஷ்கண்ணன் ஒரு குறியீடாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ் பேப்பரில் நாளை பார்க்கலாம்.

Share

ஏ.ஆர். ரகுமானின் பேட்டியும், நிறுத்தப்பட்ட எனது கமெண்ட்டும்

இந்த சிறிய விஷயத்தை ஒரு பதிவாகப் போடுவதற்கே அசிங்கமாகத்தான் உள்ளது. ஆனாலும் பதிந்து வைப்போம் என்பதற்காக இதனைப் போட்டு வைக்கிறேன்.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி உதயம் என்ற வலைப்பதிவில் (http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html) வெளிவந்திருந்தது. வாசித்துவிட்டு, நேற்று முன் தினம் நான் ஒரு சிறிய கமெண்ட்டைப் போட்டேன். பேட்டி குறித்த நெகடிவ் கமெண்ட் அது. அது அங்கு வெளியிடப்படவில்லை. அந்த கமெண்ட்டைப் போய் ஏன் நிறுத்தப் போகிறார்கள் என்று நினைத்து நேற்று மீண்டும் இன்னொரு கமெண்ட் போட்டேன், எனது கமெண்ட் ஏன் வரவில்லை ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா என்று கேட்டு. அதுவும் இதுவரை வெளிவரவில்லை.

நான் போட்ட கமெண்ட்டுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளவில்லை. நான் போட்ட முதல் கமெண்ட் இப்படி இருந்தது.

நல்ல காமெடியான பேட்டி. ஏ.ஆர். ரகுமான் இவ்வளவு மோசமாகப் பேட்டி கொடுத்து இதுவரை நான் பார்த்ததில்லை.

//தமிழில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதற்கேற்ற மாதிரி படம் இல்லையென்றால், படம் ஃபிளாப் ஆகிறது. படத்திற்குப் பதிலாக ஆல்பம் பண்ணலாம். படம் பண்ணும்போது என்னாகிறதென்றால், பாட்டு நன்றாக போட்டுக்கொடுத்துவிட்டு ஒரு எதிர்பார்ப்பையும் கிளறி விட்டுவிட்டபின் தியேட்டருக்கு வந்து பார்த்துவிட்டு திட்டிவிட்டுப் போகிறார்கள். ‘ஏன் இந்தாளு இந்தப்படத்துக்கு மியூசிக் போட ஒத்துக்கிட்டாரு, இவனை நம்பி படம் பார்க்க வந்தால், இது என்ன இப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள். அப்படியல்லாமல், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் படம் கிடைத்தால் கண்டிப்பாகத் தமிழில் படம் பண்ணுவேன். நான் பட்ஜெட் பற்றிப் பேசவில்லை. ஐடியா பற்றிப் பேசுகிறேன். நூறு கோடியில்தான் படம் பண்ண வேண்டும் என்றில்லை. ஒரு கோடியிலும் இருக்கலாம். பத்து லட்சத்திலும் இருக்கலாம். ஆனால், புதிதாகப் பார்வையாளர்களுக்கு ஏதாவது வேண்டும்.//

சரி, கேட்டுக்கிட்டோம்.


இதுதான் நான் போட்ட முதல் கமெண்ட், ஏறக்குறைய இப்படித்தான் இருந்தது.

இரண்டாவதாக நான் போட்ட கமெண்ட், ஏறக்குறைய இப்படி.

நான் போட்ட கமெண்ட் வெளிவரவில்லை. ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினையா அல்லது மட்டுறுத்தலா?


இதுவும் வெளிவரவில்லை.

ஏ.ஆர். ரகுமானின் பேட்டி மீது வைக்கப்படும் மிக மேலோட்டமான குற்றச்சாட்டுக்கூட வெளியிடப்படாமல் ஏன் இருக்கவேண்டும்? அந்த அளவுகூட எதிர்ப்பை விரும்பவில்லை பதிவர் என்பது தெரியவில்லை. திரைத்துறையில் இருப்பதால் அதீத கவனம் எடுத்துக்கொள்கிறாரோ என்னவோ. அல்லது பாராட்டுகள் மட்டும் காதில் கேட்டால் போதும் என்கிற எண்ணமா எனத் தெரியவில்லை.

எல்லாம் அவன் செயல்!

Share

அங்காடித் தெரு – நாம் வாழும் தெரு

வெகு சிலமுறை நான் சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருக்கிறேன். எல்லாம் நம்ம ஊருப் பசங்க என்பதைக் கேட்டு, பெருமையுடன் காணச் சென்ற எனக்கு அங்கே முதலில் தோன்றியது குழந்தைத் தொழிலாளர் சட்டம் இருக்கிறதா என்பதுதான். பின்னர் அதுவே பழகிவிட்டது. ஒருதடவை ஒரு பையனிடம் என்னப்பா வயசு என்ற கேட்டபோது பதினாறு என்று சொல்லிவிட்டு, உடனே சட்டென்று மாற்றி பதினேழு என்று சொன்னான். ஆனால் அவன் வயது உண்மையில் 14வது இருக்குமா என்ற சந்தேகம் வந்தது எனக்கு. பதினாறுன்னு சொன்னாலும் பதினேழுன்னு சொன்னாலும் ரெண்டும் ஒண்ணுதான் என்றேன். அந்தப் பையன்களை நினைக்கும்போது பாவமாக இருக்கும். எனக்குத் தோன்றும் பாவம் வெறும் ஒரு வரிப் பாவம். ஆனால் வசந்தபாலன் இவர்களுக்குப் பின்னே இருக்கும் உலகத்தையே காட்டிவிட்டார். சென்னையில் வாழும் ஒவ்வொரு மனிதரையும் இந்தப் படம் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பாதிக்கும். அடுத்த முறை சரவணா ஸ்டோர்ஸ் போன்ற இடத்துக்குச் செல்பவர்களது எண்ணம், பார்வையில் கொஞ்சமாவது மாற்றம் இருக்கும். இந்தப் பசங்களோட கஸ்டமர் சர்வீஸ் மோசம் என்றெல்லாம் யாரும் சொல்வார்களா எனக்கூடத் தெரியவில்லை.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸின் களமும் ரெங்கநாதன் தெருவும் ஒரு மிகப்பெரிய வில்லனைப் போலத் தோற்றம் அளிக்க வைக்கும் முயற்சியில் வசந்தபாலன் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் சிரிப்பில் தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் செந்தில் முருகன் ஸ்டோர்ஸால் விழுங்கப் படுகிறார்கள். அங்கே அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், காதல், காமம், கும்மாளம் என எல்லாவற்றையும் இத்திரைப்படம் சிறப்பாக முன்வைக்கிறது. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் உலகத்தில் நமக்குத் தெரியாத பலவற்றை நாம் பார்த்ததுபோல, இத்திரைப் படத்தில் இது போன்ற இளைஞர்களுக்கு நடக்கும் நமக்குத் தெரியாத பல்வேறு காட்சிகள் நம் கண்முன் விரிந்து நம்மைப் பதற வைக்கின்றன.

ஒவ்வொரு சிறிய காட்சியையும் முக்கியக் கதையோடு இணைப்பதில் இயக்குநர் காட்டியிருக்கும் ஆர்வம் பழைய உத்தி. சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தன்னம்பிக்கையைக் காட்டுவதற்கோ, அல்லது பின்னர் கதாநாயகன் நாயகிக்கு உதவுவதற்கோ சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்துவிடுகிறது. இதுபோன்ற சில குறைகள் நிறையவே இருக்கின்றன. படத்தின் பின்பாதியில் கொஞ்சம் இழுவை அதிகம். தேவையற்ற, செயற்கைத்தனம் கூடிய வசனங்கள் உண்டு. படம் முடிந்த பின்பு மீண்டும் இழுக்கப்படும் திரைப்பட உச்சக்கட்டக் காட்சி உண்டு. உச்சக்காட்சி என்ற ஒன்றில்லாமல் தமிழர்களுக்கு முழுத்திரைப்படம் பார்த்த உணர்வு வராது என்பதாலோ என்னவோ வசந்தபாலன் இப்படி செய்திருக்கவேண்டும். அதிலும் நல்ல ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார். படத்தோடு தொடர்பே இல்லாத ஒரு கிளைமாக்ஸை முதலிலேயே காட்டிவிட்டு, உச்சக்காட்சிக்கு முன்னரே வந்துவிடும் உச்சக்காட்சி மனோபாவத்தைக் குறைத்துவிட்டார்.

கதாநாயகியின் தங்கை பெரியவளாகும் கதையெல்லாம் சுற்றி அடிக்கிறது. இக்காட்சி இல்லாமலேயே, கதாநாயகி கதாநயாகனை மீண்டும் எற்பதற்கான சரியான முகாந்திரங்கள் உள்ளன. ஜெயமோகனின் கூர்மையான வசனங்கள் அசத்துகின்றன. கதாநாயகன் கதாநாயகியிடன் மிகக் கோபமாகப் பேசும் வசனமே போதுமானது கதாநாயகி மனம் மாறுவதற்கு. கதாநாயகியின் தங்கை வரும் காட்சிகளெல்லாம் வலிந்து சேர்க்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதிலும் அந்தப் பெண் இருக்கும் வீடு – தமிழ்த் திரையுலகில் அது யார் வீடாக இருக்கமுடியும்? அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். தீட்டு என்று சொல்லி வீட்டுக்குள் சேர்க்கமாட்டேன் என்கிறார்கள். நாய் கட்டிப்போட்டிருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் தட்டுமுட்டுச் சாமான்களோடு அவள் கிடக்கிறாள். ஆமாம், அது பிராமண வீடு.

பின்னணி இசையைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் கர்ண கொடூரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லை என்றால் நம்பிக்கைத் துரோகம் என்று சொல்லலாம். இத்தனை ஆழமான, உணர்வு ரீதியான படத்துக்கு பின்னணி இசை செய்யும் மாபாதகத்தை மன்னிக்கவே முடியாது. ஒரு காட்சி தரவேண்டிய சோகத்தை, பதற்றத்தை இசை வழியாகத் தந்துவிட நினைத்து இசையமைப்பாளர்(கள்) செய்யும் குரங்குச் சேட்டைகளை என்னவென்று சொல்ல. தலையெழுத்து. இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக உள்ளன.

கதாநாயகன் நன்றாக நடித்திருக்கிறார். அடுத்த படங்களில் புருவத்தை இப்படி நெறிக்கவேண்டியதில்லை. கதாநாயகி – அசத்தல். இவர் கற்றது தமிழ் படத்தில் நடித்தவர் என நினைக்கிறேன். அந்தப் படத்திலேயே நன்றாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அசுரப் பாய்ச்சல். சிரிப்பு, வெட்கம், கோபம் எல்லாவற்றையும் நினைத்த மாத்திரத்தில் முகத்தில் கொண்டு வருகிறார். இதுவே படத்தின் பலம். என்னைக் கவர்ந்த விடுகதை நீனா, மின்சாரக் கனவு கஜோல், சிதம்பரத்தில் அப்பாசாமி நவ்யா நாயர் வரிசையில் அங்காடித் தெரு அஞ்சலியும் சேர்ந்துகொள்கிறார்.

நடிகர்களைப் புறந்தள்ளிவிட்டு இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் சிறப்பாக நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். பெரும் குணச்சித்திர தொழில்முறை நடிகர்களே அசரும் வண்ணம் நடிக்கிறார்கள். அவள் பெயர் தமிழரசி படத்தில் தியடோர் பாஸ்கரனும் வீரச்சந்தானும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தமுறை பழ. கருப்பையா. இப்படத்தில் அண்ணாச்சியாக வந்து அட போட வைக்கிறார்.

இன்னொரு பலம் ஜெயமோகன். பல வசனங்கள் மிகக்கூர்மையாக உள்ளே இறங்குகின்றன – காட்சியோடு. காட்சியோடு இறங்கும் வசனம் என்பதுதான் முக்கியம். காட்சி உக்கிரமாக இல்லாமல் வசனம் மட்டும் முழித்துக்கொண்டு நிற்கும் படங்கள் பாலசந்தர்த்தனப் படங்களாக எஞ்சிவிடும். அந்த அபாயம் இப்படத்துக்கு நேரவில்லை. எத்தனை ஆழமாக எழுதினாலும் எப்போதும் ஜெயமோகனுக்குள்ளே விழித்திருக்கும் பெரும் நகைச்சுவையாளர் ஒட்டுமொத்த படத்தையே ஹைஜாக் செய்துவிட்டார் என்றே சொல்லவேண்டுன். நான் கடவுள் படத்தில் எப்படி இதே நகைச்சுவையாளர் படத்தை வேறு தளத்துக்கு மாற்றினாரோ அப்படி இங்கேயும் மாற்றுகிறார். ஜெயமோகன் கதை வசனம் எழுதும் படத்தில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். ஒன்றிரண்டு இடங்களில் வரும் தேவையற்ற வசனங்கள், இயக்குநரால் மக்களின் புரிதலுக்காக சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் நல்ல படம். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் வெட்டித் தள்ளியிருந்தால் மிக நல்ல படமாக இருந்திருக்கும். விருதுத் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களைப் போலவே, இது போன்ற நல்ல திரைப்படங்களும் தேவை. அந்த வகையில் இத்திரைப்படம் முக்கிய இடத்தைப் பெறும். சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரு முதலைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் என்ன உணர்வு அடைவார்கள் என்பதை யோசிக்க யோசிக்க இப்படம் இன்னும் பிடிக்கத் தொடங்குகிறது.

(இந்த விமர்சனத்தை இட்லிவடைக்கு அனுப்பியிருந்தேன். அவர் திடீரென்று காணாமல் போய்விட்டதாலும், இதை இதுவரை வெளியிடாததாலும் நானே வெளியிடுகிறேன். வழக்கம்போல இட்லிவடைக்கு நன்றி!)

Share