Archive for திரை

சில இந்தியத் திரைப்படங்கள் – 01

உலகம் முழுக்க சிறந்த படங்களாகப் போற்றப்படும் உலகத் திரைப்படங்களின் டிவிடி விசிடிக்களைக் கொஞ்சம் முனைந்தால் வாங்கிவிட முடிகிறது. ஆனால் சிறந்த இந்தியப் படங்களை வாங்கிப் பார்ப்பதென்பது கிட்டத்தட்ட முடியாத காரியமாகவே இருக்கிறது. பதேர் பாஞ்சாலி போன்ற திரைப்படங்களை கொஞ்சம் முனைந்தால் அதிக விலை கொடுத்தேனும் வாங்கி விடலாம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு வழியே இல்லை என்கிற நிலைதான் நீடிக்கிறது. இதிலும் மோசம் சிறந்த தமிழ்ப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் இல்லை என்பது. எனி இந்தியன் பதிப்பகம் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொள்ள பாரதி மணியன் வந்திருந்தார். றெக்கை படத்தில் அவரைப் பார்த்தபோது, இவரை வேறெந்தப் படத்திலேயோ பார்த்திருக்கிறோமே என யோசித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி சட்டென்று பாபாவில் வருவார் என்றார். அப்போதும் எனக்கு பிடி கிட்டவில்லை. திடீரென்று ஒரு தினத்தில் ஒருத்தி திரைப்படத்தில் கிடையை மறிக்கும் கீதாரியாக வருபவர்தான் அவர் என்று பொறி தட்டியது. அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது குருக்ஷேத்திரம் படத்தில் நடித்திருப்பதாகவும் சொன்னார். அந்த படம் எப்போது வெளியாகும் என்று கேட்டபோது, அது ஆறுமாதங்களுக்கு முன்பே வெளியாகி யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்றார். என்னால் நம்பவேமுடியவில்லை. ஜெயபாரதி இயக்கி சத்யராஜ் நடித்த திரைப்படம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கோடம்பாக்கத்து சுவர்களில் குருக்ஷேத்திரம் படத்தின் விளம்பரங்களைப் பார்த்த நினைவிருக்கிறது. பின் தினமலரிலோ வாரமலரிலோ ஜெயபாரதி இயக்கி சத்யராஜ் ஹிட்லராக நடிக்கிறார் என்கிற செய்தியைப் பார்த்த ஞாபகமும் இருக்கிறது. ஆனால் அந்தப் படம் வந்ததும் தெரியாது; போனதும் தெரியாது. இப்போது கூட அந்தப் படம் வெளி வந்து, யாராலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பதை என்னால் நம்பமுடியாமல்தான் இதை எழுதுகிறேன்.

இதுபோன்ற விருதுப் படங்களில் ஆர்வம் உள்ள ஒருவருக்கே அந்தப் படம் எப்போது வருகிறது, போகிறது என்கிற விவரம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களுக்கு இந்தப் படம் பற்றிய அறிவு என்னவாக இருக்கும்? இத்தனைக்கும் தமிழில் கிட்டத்தட்ட 7 முக்கியமான தொலைக்காட்சிகள் (சன், கே டிவி, ராஜ், ராஜ் டிஜிடல், ஜெயா, தமிழன், விண்) சினிமாவே கதி என்று தங்கள் ஒளிபரப்பைச் செய்துவருகின்றன. இவற்றில் எதிலும் இத்தகைய திரைப்படங்களைப் பற்றிய செய்தி வந்ததாக நான் பார்க்கவில்லை. மகேந்திரனின் சாசனம் திரைப்படம் கடந்த ஒரு வருடத்திற்குள் வெளியானது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது என நினைக்கிறேன். என்னால் பார்க்க இயலாமல் போனது. இன்றுவரை அதன் சிடி கிடைக்கவில்லை. சாலையோரங்களில் எல்லா டிவிடியும் விசிடியும் விற்கிறார்கள். சாசனம் படத்தைக் கேட்டால் ‘கிடைக்காது சார்’ என்கிறார்கள். அரவிந்த்சாமி கொஞ்சம் தெரிந்த நடிகர் என்பதால் ‘கிடைக்காது சார்’ என்றாவது சொல்கிறார்கள். இல்லையென்றால் ‘அப்படி ஒரு படம் எப்ப வந்தது’ என்றுதான் கேட்டிருப்பார்கள்.

ஒன்றிரண்டு சிறந்த படங்கள் கிடைக்கின்றன. சில நேரங்களில் சில மனிதர்கள், வீடு போன்றவை. ஆனால் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன், மறுபக்கம், சந்தியா ராகம், அக்ரஹாரத்தில் கழுதை, டெரரிஸ்ட், மல்லி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், நண்பா நண்பா, ஊருக்கு நூறு பேர், றெக்கை, கண் சிவந்தால் மண் சிவக்கும், உச்சி வெயில் போன்ற படங்களை வாங்குவதென்பது மிகவும் கடினம். தமிழ்ப்படங்களுக்கே இந்தக் கதி என்றால் இந்தியாவின் மற்ற மாநிலத் திரைப்படங்களைப் பார்ப்பது பற்றி நினைப்பதுவே பாவம். கொஞ்சம் அலைந்தால் மலையாளத் திரைப்படங்கள் சிலவும் பெங்காலி திரைப்படங்கள் மிகக்கொஞ்சமும் கிடைக்கலாம். மற்ற மொழித் திரைப்படங்களைப் பார்க்கவே முடியாது. மேலும் அந்த அந்த மொழிகளில் சிறந்த திரைப்படங்கள் எவை எனவும் அறியமுடிவதில்லை.

மக்கள் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்பு சிறந்த இந்திய விருதுத் திரைப்படங்களை ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட 9 படங்களை ஒளிபரப்பியது என நினைக்கிறேன். (அதில் ஒரு தமிழ்த்திரைப்படம்கூட இடம்பெறவில்லை என்பது சோகம்!) இந்த சிறந்த முயற்சியை திடீரென்று நிறுத்திவிட்டார்கள். இனி இது போன்ற சிறந்த படங்களைக் காணமுடியாது என நினைத்துக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பி, லோக் சபா சானலைப் பார்க்கச் சொன்னார். எனக்கு அப்படி ஒரு சானல் வருவதே தெரியாது. அடித்துப் பிடித்து ட்யூன் செய்து பார்த்தேன். சுரேஷ் கண்ணனுக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்பி அந்தப் படத்தைப் பார்க்கச் சொன்னேன். ஷ்யாம் பெனகலின் திரைப்படம். அடுத்த வாரமும் இதே நேரத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் ஒளிபரப்பாகுமா என்கிற ஏக்கத்தில் நாங்கள் மூன்று பேருமே அவரவர் விட்டு தொலைக்காட்சி முன்பு காத்திருந்திருப்போம் என நினைக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக பிரதி சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு பல்வேறு இந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட விருதுத் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. மக்கள் தொலைக்காட்சியைப் போலவே, இவற்றிலும் இதுவரை ஒரு தமிழ்ப்படம்கூட ஒளிபரப்பப்படவில்லை என்பது இன்னொரு சோகம். தென்னிய மொழித் திரைப்படங்களில் இதுவரை ஒரே ஒரு மலையாளத் திரைப்படம் (பூத்திருவாதர ராவில் – லோக் சபா சானலில், மக்கள் தொலைக்காட்சியில் மங்கம்மா என்கிற மலையாளத் திரைப்படம்) மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிகமாக ஹிந்திப் படங்களும் பெங்காலி படங்களும் இடம்பெறுகின்றன. எல்லா படங்களுமே சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது அத்தகைய முயற்சியை நோக்கிய படங்கள் என்ற அளவில் அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவையல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை பொதிகையில் எப்படியாவது ஒரு நல்ல திரைப்படத்தை ஒளிபரப்புகிறார்கள். சந்தியா ராகம், றெக்கை (இந்தப் படம் விருதுப்படம் என்கிற பிரிவில் வந்தாலும் இது மோசமான திரைப்படம். இத்தகைய செயற்கையான திரைப்படத்தைப் பார்த்ததே கொடுமை) மறுபக்கம் (தங்கத்தாமரை விருது பெற்ற திரைப்படம்) போன்ற திரைப்படங்களைக் காண முடிந்தது. தற்செயலாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞாயிறு இரவில் டிடி நேஷனல் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிதி என்கிற கன்னடத் திரைப்படத்தைக் காண முடிந்தது. மறுவாரம் அதே நேரம் டிவியின் முன்பு காத்துக்கொண்டிருந்தபோது, பெரிய தடாகத்தில் மழை நீர் சொட்டுச் சொட்டாகச் சொட்டிக்கொண்டிருக்க, யாரோ ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதுபோக இன்னும் சில திரைப்படங்களை நண்பர்களிடமிருந்து வாங்கிப் பார்த்தேன். உலக மொழிகளில் இருக்கும் படங்களைப் பார்த்தாலும், இந்திய மொழி பற்றிய படங்களைப் பற்றியாவது எழுத வேண்டும் என்கிற நினைப்பு எனக்கு வலுத்துக்கொண்டே வந்தது. ஆனால் எழுதவே முடியாமல் போனது. தேடித் தேடிப் பார்த்த படங்களைப் பற்றி அன்றே எழுதிவிட வேண்டும் என்று நினைத்துக்கொள்வதோடு சரி. இதுவரை அப்படிச் செய்ய முடிந்ததில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், அப்படி செய்திருந்தால் மிகச் சிறந்த ஒரு கருவூலத்தை உருவாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. இதுவரை பார்த்த படங்களைப் பற்றிய சிறிய குறிப்புகளை, குறைந்த பட்சம் நாளைக்கு நானே புரட்டிக்கொள்கிற மாதிரி, எழுதி வைக்க நினைத்தேன். அதுதான் இந்த முயற்சிக்கான காரணம்.

01. சாருலதா:

இயக்கம்: சத்யஜித் ரே

நான் பார்க்கும் சத்யஜித் ரேயின் முதல் படம். ரபீந்த்ரநாத் தாகூர் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். 1964-ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படம்.

பூபதியும் சாருலதாவும் குழந்தையற்ற தம்பதிகள். பூபதி கொல்கத்தாவில் அரசியல் பத்திரிகை நடத்துபவர். இந்தியாவின் சுதந்திர இயக்கங்களில் நம்பிக்கையும் அதீத ஆர்வமும் உள்ளவர். சாருவின் மீது பூபதி அன்பாக இருந்தாலும், அவரது நேர்மின்மையால் சாரு ரசிக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களை அவரால் பகிர்ந்துகொள்ள முடியாமல் போகிறது. சாருலதா இலக்கியத்தில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர். பூபதிக்கு அது பற்றித் தெரியும் என்றாலும் அதை ஊக்குவிக்கவோ, அதைப் பற்றி விவாதித்து சாருவை சந்தோஷம் கொள்ளச் செய்யவோ அவருக்கு நேரமில்லை. பூபதிக்கு வேலையில் உதவியாக இருக்கிறார் சாருவின் சொந்தக்காரர் ஒருவர்.

இந்நிலையில் அமல் என்கிற, பூபதியின் உறவினர் அங்கு வருகிறான். அவனுக்கும் சாருவுக்கும் ஒரே வயது. சாருவைப் போலவே அமலுக்கும் அதீத இலக்கிய ரசனையும், வங்காள நாடகங்கள் மற்றும் இலக்கியங்களின் மீதான விமர்சனமும் இருக்கின்றன. கவனிப்பாரற்றுக் கிடக்கும் தன் இலக்கிய ரசனை மூலமும், தொடர்ந்து நடக்கும் விவாதங்கள் மூலம் அமலை நெருங்குகிறாள் சாரு. அவளே அறியாத பொழுதில் அது காதலாக மலருகிறது. அமல் பூபதியின் மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் உள்ளவன். சாருவின் இலக்கிய ரசனை மீது அமலுக்கு உயரிய மதிப்பு இருக்கிறது; மேலும் சாருவை ஏதேனும் எழுதச் சொல்லி வற்புறுத்துகிறான். ஆனால் சாரு மறுக்கிறாள். அமல் அறியாமல் சாருவின் படைப்பு ஒன்று பத்திரிகை ஒன்றில் வெளியாகிறது. அதை அறியும் அமல், சாருவைப் பற்றி அவனுக்கே தெரியாமல் அவன் மனதில் இருந்த நம்பிக்கையின்மையை அறிகிறான். அதைத் தொடர்ந்து அவள் மீது அவன் அதிக மரியாதை கொள்கிறான். பின்னொரு சமயத்தில் சாரு தன் மீது கொண்டிருக்கும் காதலை உணர்கிறான் அமல். அதுமுதல் அவனை குற்ற உணர்ச்சி பீடித்துக்கொள்கிறது. அவன் மெல்ல அவளிடமிருந்து விலக முயல்கிறான். அதை அறியும்போது தன் மீதே வெறுப்பேற்படுகிறது சாருவுக்கு.

Thanks: http://www.filmreference.com

இந்நிலையில், பூபதியின் வேலைக்கு உதவியாக இருக்கும் சாருவின் உறவினர் பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிறார். பூபதியின் நிலை மிகவும் மோசமாகி, பத்திரிகை மூடப்படுகிறது. அமல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியூருக்குப் பயணமாகிறான். இதை அறியும் சாரு மனதளவில் உடைந்து போகிறாள். ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள். அமல் ஏன் சென்றான் என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் பூபதி. உண்மையில் அனைத்தும் தன்னை விட்டுப் போனபோது, அமலின் உதவியால் தான் மீண்டும் வெற்றி பெற்ற தொழிலதிபராக வலம் வரலாம் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் அவர். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் போராடுவது என்று முடிவெடுக்கிறார். சாருவின் இலக்கிய சாதனை பற்றி அறிந்துகொண்டு, அரசியல் பத்திரிகை ஒன்றும் இலக்கிய பத்திரிகை ஒன்றும் நடத்த முடிவெடுக்கிறார். வாழ்க்கையில் புதிய வழி கிட்டிவிட்டதாகக் குதூகலிக்கிறார்.

அந்த சமயத்தில் அமலிடமிருந்து கடிதம் ஒன்று வருகிறது. அமல் இங்கிலாந்து செல்லப்போவதாகவும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கடிதம் சொல்கிறது. பூபதியின் முன்பு அந்தக் கடிதம் பற்றிக் கண்டுகொள்ளாதவாறு இருக்கிறாள் சாரு. பூபதி வீட்டை விட்டு வெளியேறிய பின்பு, அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதறி அழுகிறாள். தற்செயலாக வீட்டுக்குள் நுழையும் பூபதி நடந்ததை அறிந்து, பெரும் குழப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகிறார். தன் கணவர் பார்த்துவிட்டார் என்பதை அறிந்துகொள்கிறாள் சாரு. வீட்டை விட்டுச் செல்லும் பூபதி நகரெங்கும் இலக்கில்லாமல் அலைகிறார். மீண்டும் வீடு திரும்புகிறார். அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாருவின் கையை பிடிப்பதுடன் சாருவின் மீதான பெரும் நம்பிக்கையை முன்வைப்பதோடு முடிவடைகிறது திரைப்படம்.

மனித உறவுகளின் சிக்கல் மீது நடத்தப்படும் இந்தத் திரைப்படம் உச்சகட்ட உணர்ச்சிகளின் தொகுப்பாக உள்ளது. முக்கியமான விஷயம், இந்த உணர்ச்சிகளை நடிகர்கள் வலிய ஊட்டாமல், படம் பார்ப்பவர்கள் தாங்களாகவே கண்டுகொள்வது. தொடர்ந்து இலக்கியத்தைப் பற்றி விவாதிக்கும் அமலும் சாருவும் வரும் காட்சிகளின் ஒளிப்பதிவுக் கோணம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சாரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே இருக்க, அமல் கவிதை எழுத முயலும் காட்சி மிகச் சிறப்பான ஒன்று. தன் மனைவி எழுதிய படைப்பொன்று ஒரு பத்திரிகையில் வந்திருப்பதைக் கூட அறியாத பூபதி, அதை அறியும் காட்சியில் அடையும் குழப்பமும் சந்தோஷமும் இன்னொரு சிறந்த காட்சி. சாருவின் முகபாவங்கள், ஏக்கம், கோபம், ஆத்திரம் என எல்லாவற்றையும் மிக நளினமாக வெளிப்படுத்துகின்றன. தனது படைப்பு வந்துவிட்டதை அறிந்த சந்தோஷத்தில், தன்னால் முடியாது என்கிற எண்ணம் கொண்ட அமல் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற வெறியில், அந்தப் பத்திரிகையை மடித்து வைத்து அமலின் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறார். வசனங்களே இல்லாமல், அவர் படைப்பு பத்திரிகையில் வந்தது, அமலின் அடிமனதில் இருந்த சாருவின் மீதான தாழ்மதிப்பீடு, சாருவின் கர்வம் என எல்லாம் ஒரே காட்சியில் விரிவடைகிறது. படத்தின் இன்னொரு மிகச்சிறந்த காட்சி இது.

அமலுக்கும் சாருவுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை எப்படி பூபதி அறிந்துகொள்ளப் போகிறார் என்பதை படம் நெடுக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு நாடகம் போல அமைந்துவிட்டது அக்காட்சி. கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு, யாருமற்ற வேளையில் சத்தமாகப் புலம்புகிறார் சாரு. அதைக் கேட்டு பூபதி அதை அறிந்துகொள்கையில், அதை ஒரு மேடை நாடகத்தின் பகுதியாகவே என்னால் பார்க்கமுடிந்தது.

படத்தின் முடிவு இன்னொரு சிறப்பு. இலக்கின்றி அலையும் பூபதி, அமலுக்கும் சாருவுக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய ஒரு தெளிவு கொள்கிறார். வீடு திரும்பும் அவர் சாருவின் கையை அழுத்தி பிடிக்கும் காட்சியில் உறைந்து திரைப்படம் முடிவடைகிறது.

1964இல் வெளிவந்த திரைப்படம் என்று நானறிந்தபோது எனது ஆச்சரியம் இன்னும் அதிகரித்துவிட்டது. இந்தியத் திரைப்படங்களில் சத்யஜித் ரேயின் அனைத்துப் படங்களையும் பார்க்கவேண்டும் என்கிற எண்ணத்தை மேலும் அதிகரித்தது இத்திரைப்படம்.

ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் ஜெயகாந்தன் இப்படி எழுதுகிறார்.

“Illustrated weeklyயின் அப்போதைய ஆசிரியராய் இருந்த ஏ.எஸ்.ராமன் மிகப்பிரபலமான தனது ‘சியராஸ்குரே’ பகுதியில் இரண்டு முறை மிக நீளமான விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார். அதில் Jayakanthan’s unnai pol oruvan is shade better than Sathyajith Ray என்று சொல்லியிருந்த வரிகள் அதீதமானவை அப்போதே எனக்குத் தோன்றியது உண்டு. ஆனால் A.S.R.இன் இந்தக் கணிப்பு எனக்குப் பெருமையாகவும் இருந்தது. சத்யஜித் ரேயின் படங்களில் உள்ள romanticism இல்லை. இதில் (உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்தில்) realism இருக்கிறது என்று தனது கட்டுரை திரு.இராமன் விளக்கியும் எழுதி இருந்தார். … முதல் பரிசுக்கும் மூன்றாம் பரிசுக்கும் சாருலதாவும் உன்னைப் போல் ஒருவன் படமும் போட்டியிட்டன. அந்தத் தேர்வில் எனக்கும் ஒரு ஓட்டுரிமை தரப்பட்டிருந்தால், நானும் கூடச் சாருலதா படத்திற்குத்தான் எனது ஓட்டைப் போட்டிருப்பேன்; உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு அல்ல.”

Share

Life is beautiful – தொடரும் பதட்டம் (திரைப்பார்வை)

Thanks:movies.yahoo.com

Joshua orefice (ஜோஷ்வா ஆர்ஃபிஸ்) தன் தந்தையின் தியாகத்தைப் பற்றிச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. Guido Orefice (கைடோ ஆர்ஃபிஸ்) என்கிற இத்தாலி நாட்டுக்கார யூதர் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் சமயத்தில் இத்தாலியின் ஒரு நகரத்திற்கு புத்தகக் கடை வைப்பதற்காக வருகிறார். அங்கு Dora (டோரா) என்னும் ஆசிரியரைச் சந்திக்கிறார். டோரா இத்தாலி நாட்டுப்பெண் என்றாலும் யூதப்பெண் அல்ல. தொடர்ச்சியாக நேரும் திடீர்ச் சந்திப்புகளில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலருகிறது. டோரா ஏற்கனவே ஒரு நாஜிக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். அவர்கள் நிச்சயதார்த்தத்தின் போது கைடோ அவளைக் கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறான். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஐந்து வருடங்கள் இனிமையான வாழ்க்கை. ஜோஷ்வா என்னும் மகன் பிறக்கிறான்.

படம் தனது இரண்டாவது பயணத்தைத் தொடர்கிறது. இரண்டாம் உலகப் போர் முடிவை நெருங்கும் சமயம். ஜோஷ்வாவின் பிறந்தநாளன்று யூதர்கள் அனைவரும் நாஜி வதைமுகாமுக்கு (Nazi Concentration Camp) வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப்படுகிறார்கள். அப்படி அழைத்துச் செல்லப்படும் 8000 பேர்களில் கைடோவும் ஜோஷ்வாவும் அடக்கம். அலங்கோலமாகக் கிடக்கும் தனது வீட்டைப் பார்த்தவுடன் டோரா புரிந்துகொள்கிறாள். நாஜி வதை முகாமுக்குச் செல்லும் புகைவண்டியில் தானும் செல்ல பிடிவாதம் பிடித்து, வண்டியில் ஏறிக்கொள்கிறாள்.

தன் மகன் ஜோஷ்வா பயந்துவிடக்கூடாது என்பதற்காக இது ஒரு விளையாட்டு என்று சொல்லி நம்ப வைக்கிறான் கைடோ. தொடர்ந்து விளையாட்டின் விதிகளைக் கூறி, ஆயிரம் புள்ளிகளை யார் வெல்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என்றும் சொல்லி வைக்கிறான். வெற்றிப் பரிசாக நிஜமான பீரங்கி வண்டி கிடைக்கும் என்று சொன்னவுடன் – ஏற்கனவே பீரங்கி வண்டி பொம்மையின்மீது ஆர்வமாக இருக்கும் ஜோஷ்வா – இந்த விளையாட்டிற்குச் சம்மதிக்கிறான்.

வதைமுகாமில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாக அடைக்கப்படுகிறார்கள். அனைவரும் கட்டாயம் வேலை செய்யவேண்டும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வேலை இல்லை. சில நாள்களில் இவர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் தான் படும் கஷ்டங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் விளையாட்டு என்று சொல்லி, அதற்கான புள்ளிகளைச் சொல்லி, தன் மகனைக் குதூகலமாக வைத்திருக்கிறான்.

அமெரிக்கப் படைகள் வதைமுகாமை நெருங்குவதைக் கேள்விப்பட்டவுடன், எல்லா யூதர்களையும் கொன்றுவிட்டு, அங்கிருக்கும் ஆவணங்களையும் தீவைக்க முயல்கிறார்கள் நாஜிகள். இனியும் காத்திருந்தால் தன் மனைவியை இழக்க நேரிடும் என்று நினைக்கும் கைடோ, தன் மகனை ஒரு மர அலமாரியில் ஒளிந்திருக்கச் சொல்கிறான். என்ன ஆனாலும் வெளியே வரக்கூடாது என்றும் அன்று மட்டும் அப்படி ஜோஷ்வா வெளியில் வராமல் இருந்துவிட்டால் ஆயிரம் புள்ளிகளை வென்று விடலாம் என்றும் நிஜமான பீரங்கி வண்டி கிடைத்துவிடும் என்றும் சொல்கிறான். ஜோஷ்வாவும் சம்மதிக்கிறான். பின்னர் பெண் வேடமிட்டுக்கொண்டு, தன் மனைவியைத் தேடி, பெண்கள் பகுதிக்குள் நுழைகிறான். அங்கு மாட்டிக்கொள்ளும் அவன், நாஜிகளால் கொல்லப்படுகிறான்.

விடிகிறது. அலமாரியிலிருந்து வெளிவரும் ஜோஷ்வாவின் முன்னே வந்து நிற்கிறது நிஜமான பீரங்கி வண்டி. தனது வெற்றிக்கான வண்டி என நினைத்து சந்தோஷப்படுகிறான் ஜோஷ்வா. ஜோஷ்வாவும் அவனது அம்மா டோராவும் ‘நாம் வென்று விட்டோம்’ என்று சொல்லி இணைவதுடன் முடிகிறது திரைப்படம்.

ஆரம்பக் காட்சிகளைப் பார்த்துவிட்டு, தமிழ்ப்படம் போல இருக்கிறதே என்று என்னை நினைக்க வைத்த திரைப்படம், இறுதியில் என்னைப் பதட்டம் கொள்ளச் செய்துவிட்டது. படம் முடிந்த சில மணி நேரங்கள் அந்தப் பதட்டத்தை உணர்ந்தேன். ஒரு தந்தைக்கும் மகனுக்குமான ஒரு பாசத்தை இப்படி ஒரு கோணத்தில் முன்வைத்த படம் என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. கைடோவும் டோராவும் காதல் செய்யும் காட்சிகளையெல்லாம், அவை அபத்தமாக இருந்தாலும், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் பெரும் வதையை பார்வையாளர்கள் உணரத் தேவையான களமாக மாற்றியதில் இயக்குநரின் திறமை அசாத்தியமானது. இயர்க்குநர் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்த Robert Benigini. (ராபர்ட் பெனிகி.) அவரது மனைவியாக நடித்த நடிகை அவரது நிஜ மனைவியாம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் வசனங்களும் காட்சிகளும் பின்னர் எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை யோசிக்கும்போது, திரைக்கதையின் உச்சம் புரிகிறது. ஒரு காட்சியில் கைடோ ஒரு மனிதனிடம் ‘உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்கிறான். அந்த மனிதன் சண்டையிடும் தன் மகன்களை நோக்கி, ‘பெனிட்டோ, அடாஃப்! நல்ல பையன்களாக இருங்க’ என்கிறான். சொல்லிவிட்டு மீண்டும் கைடோவை நோக்கி, ‘என்ன கேட்டீங்க?’ என்கிறான். கைடோ அந்தக் கேள்வியை மீண்டும் கேட்காமல், ‘மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டேன்’ என்று சொல்லி முடித்துக்கொள்கிறான். தன் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்திருக்கும் நாஜிக்கு யூத வெறுப்பு எவ்வளவு இருக்கும் என்பதைச் சட்டென புரிந்துகொண்டுவிடுகிறான் கைடோ.

கைடோவும் ஜோஷ்வாவும் கடைக்குச் செல்கிறார்கள். அங்கு ஒரு அறிவிப்புப் பலகை, ‘நாய்கள் மற்றும் யூதர்கள் அனுமதி இல்லை’ என்கிறது. ஜோஷ்வா ஏன் இப்படி எழுதியிருக்கிறது என்று கேள்வி கேட்கிறான். வழக்கமான முறையில் கைடோ ஒரு கற்பனை பதிலைச் சொல்கிறான். இந்தக் கற்பனையே அவனுக்குக் கடைசிவரை கை கொடுக்கிறது. பெரிய ஆபத்திலிருக்கும்போதுகூட இப்படி ஒரு கற்பனை விளையாட்டைச் சொல்லியே அவன் த மகனைச் சந்தோஷமாக வைத்திருக்கிறான்.

வதை முகாமில் அடைக்கப்பட்டவுடன், தான் சொல்லும் விளையாட்டு சம்பந்தமான கதைகளைத் தன் மகன் நம்பவேண்டும் என்பதற்காக, நாஜியின் முன்னிலையில் ஜெர்மனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறான். நாஜி அதிகாரி வதைமுகாமின் சட்டங்களைச் சொல்லச் சொல்ல, அதை விளையாட்டின் விதிகளாக ஆங்கிலத்தில் சொல்கிறான். ஜோஷ்வாவும் இந்த விளையாட்டு உண்மையே என்று நம்பிவிடுகிறான். கொஞ்சம் தவறினாலும் கைடோ உயிரிழக்கும் அபாயம் அதிகம். இப்படியே கடைசி வரை ஒவ்வொரு விஷயத்திலும் chance எடுக்கும் கைடோ, ஒரு கட்டத்தில் தன் அன்பான மகனை விட்டுவிட்டு உயிர் துறக்கிறான்.

தான் கொல்லப்பட அழைத்துச் செல்லப்படும்போதுகூட, தன் மகனுக்கு, தன் உடலை அஷ்ட கோணலாகச் செய்து காட்டி சிரிக்க வைத்துவிட்டுப் போகிறான். விஷயம் புரியாத ஜோஷ்வா அந்த அலமாரியின் திறப்பு வழியாக, சிரித்துக்கொண்டே செல்லும் தன் தந்தையைப் பார்க்கிறான். அதுவே தான் தன் தந்தையைக் கடைசியாகப் பார்க்கப்போவது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் இவை அனைத்தையும் அறிந்துகொள்ளும் பார்வையாளர்கள் அடையும் மனநிலையை விவரிக்க முடியாது.

சில காட்சிகளை வாழ்நாளில் மறக்கமுடியாது என நினைக்கிறேன். வதைமுகாமில் தன் மகனைத் தோளில் தூங்க வைத்துக்கொண்டு இருளில் நடந்து வரும் கைடோவின் கண்முன் விரிகிறது ஒரு காட்சி. அங்கு மலையாக பிணங்களும் எலும்புகளும் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கைடோ அடையும் திடுக்கிடல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

தன் தந்தையைக் கொல்லத்தான் கூட்டிச் செல்கிறார்கள் என்பது தெரியாமல், ஆயிரம் புள்ளிகளுக்காக, மர அலமாரியில் ஒளிந்த்திருக்கும் மகனின் கண் வழியும் விரியும் காட்சியாக ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் திறப்பின் வழியே, கைடோ நடந்து செல்வதைக் காட்டும் காமிராவின் பதிவு அது. மிகச்சிறந்த காட்சிகளில் இதுவும் ஒன்று.

நான் சொன்னால் மேரி நிச்சயம் உதவுவாள் என்று சொல்லி அதைச் செய்வதும் அதைப் பார்த்து டோரா அசந்துபோவதுமான காட்சிகள், காமெடி என்று சொல்லப்படும் காட்சிகள், டெலிபதியில் ஒருவரைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று நம்பிச் செய்யும் காட்சிகள் போன்ற சில, நாம் பார்த்து அலுத்துப்போன காட்சிகள்கூட, கைடோவின் கதாபாத்திரத்தை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

கைடோ ஒரு வெயிட்டராக வாழ்க்கையைத் துவங்குகிறான். அவன் வேலை செய்யும் ஹோட்டலுக்கு வரும் நாஜி ஒருவர், கைடோவின் திறமையை நினைத்து வியக்கிறார். எப்பேற்பட்ட புதிரையும் எளிதில் விடுவிக்கிறான் கைடோ. இந்த நாஜியை வதைமுகாமில் இருக்கும்போது சந்திக்கிறான் கைடோ. (அப்போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் எனக்குப் புரியவில்லை. அந்த நாஜி கைடோவுக்கு உதவ முற்படுகிறார். அவரின் உதவியை கைடோவும் எதிர்பார்க்கிறான். அந்த நாஜி மீண்டும் ஒரு புதிரைச் சொல்லி அழுகிறார். அதற்கு விடை கட்டாயம் தெரியவேண்டும் என்கிறார். இக்காட்சி எனக்குப் புரியவில்லை. உண்மையில் அவர் கைடோவுக்கு உதவுகிறாரா அல்லது தன் விடுகதையில்தான் குறியாய் இருக்கிறாரா, எதற்கு இக்காட்சி என்பது விளங்கவில்லை. விளங்கியவர்கள் சொல்லவும். நான் இன்னொரு விதமாகப் புரிந்துகொண்டது, தன்னால் உதவமுடியாத நிலையில் இருப்பதாகவும் வாத்துக்கூட்டங்கள் போலத்தான் செயல்படமுடியுமென்று அவர் சொல்வதாக.)

வதை முகாமில் குளிப்பது என்றால் மரணத்திற்கு உட்படுத்துவது என்று பொருள். இது தெரியாத கைடோ, வழக்கம்போல் குளிக்க மறுக்கும் தன் மகன் ஜோஷ்வாவை, குளிக்க வற்புறுத்துகிறான். இதுவும் பார்வையாளர்களைப் பதட்டம் கொள்ளச் செய்யும் இன்னொரு காட்சி. வயதான யூதர்கள் மற்றும் குழந்தைகளை வதைமுகாமில் வாயுக்கலத்தில் (Gas Chamber) வைத்துக் கொல்கிறார்கள். (சிலர் ஓவனில் வைத்தும் கொல்லப்படுகிறார்கள்.) அவர்களைக் கொல்ல அழைத்துச் செல்லும்முன், நாஜிகள் தொடர்ந்து இப்படி அறிவிக்கிறார்கள். “அவரவர்கள் ஆடையை பத்திரமாக அவரவர்கள் இடத்தில், அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எண்ணுடன் சேர்த்து வைக்கவும். அப்போதுதான் திரும்ப வந்த பின்பு அதை அணிந்து கொள்ளமுடியும்.” அறிவிக்கும் நாஜிகளுக்கு நன்றாகத் தெரியும், இப்போது குளிக்கச் செல்லும் வயதான யூதர்கள் யாரும் திரும்ப வரப்போவதில்லை என்று. ஆனாலும் அதைப் பற்றிய எந்தவொரு உணர்ச்சியும் இன்றி அவர்கள் சொல்கிறார்கள்.

தற்செயலாகத் தடுக்கி விழும் ஒரு நாஜி பெண் அதிகாரியைப் பார்த்து, யூதப் பெரியவர் ஒருவர் அந்தப் பெண்ணை மெல்லத் தொட்டு, “அடிபட்டு விடவில்லையே” என்று கேட்கிறார். அந்த நாஜி அதிகாரி பதில் சொல்லாமல் அந்தப் பெரியவரை வெறுப்புடன் பார்க்கிறார். அந்த ஒரு பார்வையிலேயே தெரிந்துவிடுகிறது, அவள் யூதர்கள் மேல் கொண்டிருக்கும் வெறுப்பு. அது ஒரு தனி மனிதன் மேல் கொண்டிருக்கும் வெறுப்பல்ல. இன வெறுப்பு.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பான அம்சம், ராபர்ட் பெனிகி அரசியல் கருத்தாக எதையும் உரக்கச் சொல்லாமல் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் பக்கமே விட்டுவிடுவது. டோராவைப் பார்ப்பதற்காக மாறு வேடத்தில் செல்லும் கைடோ, இத்தாலியின் இனத்தைப் பற்றிச் சொல்வதாக வரும் வேடிக்கைக் காட்சி மட்டுமே, நாஜிகளின் மீது வைக்கப்படும் விமர்சனம் என்று சொல்லவேண்டும். மற்ற எல்லாமே பார்வையாளர்களே திர்மானித்துக்கொள்ள வேண்டும். கைடோ தனது கடையின் பெயரை Jewish Store என்று வைத்திருக்கிறார்.

ராபர்ட் பெனிகியின் நடிப்பும் அவரது மனைவியின் நடிப்பும் சிறுவனாக வரும் நடிகனின் நடிப்பும் யதார்த்தமான நடிப்புக்கு உதாரணமாக விளங்குகின்றன.

படம் ஏற்படுத்திய பாதிப்பு இரண்டு நாள்களுக்காவது நீடிக்கும் என நினைக்கிறேன்.

வாய்ப்பு கிடைக்கிற அனைவரும் நிச்சயம் பார்க்கவும்.

சில குறிப்புகள்:

01. ஜெர்மன் பெயர்களை எப்படி சரியாகத் தமிழில் உச்சரிக்கவேண்டும் எனத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

02. நாஜி என்கிற பதத்தை, தன் இனத்தை உச்சமாகக் கருதும் இத்தாலியின் ஜெர்மனியின் இராணுவ வீரர்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

Share

டிடி பொதிகையில் ஒருத்தி திரைப்படம்

Thanks: Chennaionline.com

ஒருத்தி திரைப்படம் நாளை (ஞாயிறு, 17.06.07 அன்று) இந்திய நேரம் மாலை 4.20க்கு பொதிகையில் ஒளிபரப்பாகிறது. இத்திரைப்படம் கி.ராஜநாராயணனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘கிடை’ நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்டது. இயக்கம் அம்ஷன் குமார். இசை எல்.வைத்தியநாதன்.

Share

சிவாஜி – A quick review

இன்னொரு முறை பார்த்துவிட்டுத்தான் விமர்சனம் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். இணையத்தில் தேடிப்பார்த்த வரையில் தமிழ் விமர்சனங்கள் என் கண்ணில் படவில்லை. அதனால் சிவாஜி பற்றி சில வார்த்தைகள்.

காலை 4.30 மணிக்காட்சி. திருவிழா போல கூட்டம். சரியான மழை. தியேட்டரின் முன் முழங்கால் அளவு தண்ணீர். சிவாஜி படம் பார்க்க போனதே ஒரு சிறந்த அனுபவமாக அமைந்துவிட்டது.

Thanks:img.indiaglitz.com

மழையில் நனைந்துகொண்டு, மின்னல் இடிக்கிடையில், காலை 3.30 மணிக்கு தூறலில் பைக் ஓட்டிக்கொண்டு சென்றது மறக்கமுடியாத அனுபவமே.

ஜெண்டில்மேன், இந்தியன், அந்நியன் கதையின் இன்னொரு பதிப்பு. கருப்புப் பண விவகாரம் என்று லேபிள் ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். மற்றபடி அதே கதை. லஞ்சம், லாவண்யம், ஊழல். அதை இந்த முறை எதிர்ப்பவர் ரஜினி. அவ்வளவுதான். ஒரு பெரிய கோடீஸ்வரன் எல்லா சொத்தையும் இழந்து கையில் ஒரு ரூபாயுடன் நடுத்தெருவுக்கு வந்துவிட்டால் அவன் எப்படி மீள்வான் என்பது இரண்டாவது முடிச்சு. ஒரு நல்ல விஷயத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற உலக ஹீரோக்களின் ஃபார்முலா. இதுபோதாதா ஒரு ரஜினி படத்திற்கு. இடைவேளை வரை மிகவும் ஜாலியாக செல்கிறது படம். ஒரு காட்சி ரஜினியின் கனவு, இன்னொரு காட்சி ரஜினியின் காதல் என்று மாறி மாறிக் காட்டுகிறார்கள். இடைவேளையில் ரஜினி எல்லா சொத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார். அராஜக வழியில் எப்படி வில்லன்களை சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை. அதற்காக ரஜினி செய்யும் வேலை லாஜிக்கே இல்லாதது. லாஜிக் இல்லாத ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்துகொண்டு, அதன் மேலே லாஜிக்கான விஷயங்களாக அடுக்கிவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கருப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கார் டிரைவர்கள், எதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். மறுப்பவர்கள் ஆபிஸ் ரூமில் வைத்து விசாரிக்கப்படுகிறார்கள். இரண்டாவது முறை, ஒத்துக்கொள்ள மறுப்பவர்களிடம் ஆபிஸ் ரூம்ல வெயிட் பண்ணுங்க என்று ரஜினி சொல்லும்போது தியேட்டர் கலகலக்கிறது. தாசில்தார் என்று ரஜினி சொன்னதும் ஆபிஸ் ரூமிலிருந்து தாசில்தார் பறந்துவந்து விழுகிறார். ரஜினி படம் என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டுப் போகிறார்கள். ஆபிஸ் ரூம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று விவேக் சொல்லி படம் முழுதும் ரஜினிக்கு பின்னாலேயே வருகிறார்.

முதல் பாதியில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் அவருடைய வயதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. இரண்டாவது பாதியில் ரஜினியின் இளமை (மேக்கப்) ஆச்சரியப்பட வைக்கிறது. ஏன் முதல் பாதியில் அப்படி ஒரு ஹேர் ஸ்டைல் என்பதே புரியவில்லை. படத்தின் ஓப்பனிங் பாடல் பெரிய ட்ரா பேக். அதிரடிக்கார மச்சான் பாட்டும் ஒரு கூடை சன் லைட்டும் படத்தின் உச்சபட்சமான கைத்தட்டலைப் பெறுகின்றன. சஹானா பூக்கள் என்கிற நல்ல பாடல் செட்டிங் போட்டுப் படமாக்கப்பாட்டிருக்கிறது.

ரஜினி இறந்த போதே கதை முடிந்திருந்தால் இது பேசப்படும் படமாயிருக்கும். ஆனால் ஓடியிருக்காது. அதுவே க்ளைமாக்ஸ் என்கிற உணர்வைத் தந்துவிட்டதால், அதற்குப் பின் வரும் இரண்டாவது க்ளைமாக்ஸ் காட்சி போரடிக்க வைக்கிறது. அதிலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, மூன்று மிமிக்ரி கலைஞர்கள் வருகிறார்கள். நல்ல காமெடி. சாலமன் பாப்பையா, ராஜா, ரஜினி, ஷ்ரேயா, விவேக் வரும் காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருக்கின்றன என்றாலும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. முதல் பாதி முழுக்க ரஜினி பழக வாங்க என்று சொல்வது அசத்தல். சுஜாதாவின் வசனங்கள் (நீங்க ஆதி ஷேஷன்னா நான் அல்ஷேஷன்) ஒரு கமர்ஷியல் படத்திற்கு, அதுவும் ரஜினி படத்திற்கு எது தேவையோ அதைத் தருகிறது. சுமன் எடுபடவில்லை. ஏ.ஆர். ரகுமானின் பாடல்களின் தரம், குறிப்பாக ஒரு கோடி சன் லைட், அதிரடிக்கார மச்சான், உச்சம்.

கண்டிப்பாக கலெக்ஷனை அள்ளும். அதில் சந்தேகமே இல்லை.

Share

பெரியார் திரைப்படம் – ஓர் அபத்த செய்தித் தொகுப்பு

95 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதரின், தமிழகம் பல்வேறு வகைகளில் இன்னும் நினைவு வைத்திருக்கும், இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கும், இன்னும் விமர்சனம் செய்துகொண்டிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதில் உள்ள சிக்கல் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்த சலுகையையும் மீறி மிக மோசமாக எடுக்கப்பட்டிருக்கிறது பெரியார் திரைப்படம். ஞானசேகரனுக்கு ஒரு படத்தின் அடைப்படைக்கூறுகள் கூடத் தெரியாதோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடுகிறது படத்தின் வடிவம். துணுக்குத் தோரணங்களால் அமையும் ஒரு சராசரி தமிழ் நகைச்சுவைப் படம் போல, துணுக்குக் காட்சிகளில் ரொப்பப்பட்ட படமாக பெரியார் திரைப்படம் அமைந்துவிட்டது மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

Thanks: movies.sulekha.com

படத்தில் எந்தவொரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பே இல்லை. வானொலி நாடகங்கள் போல எல்லாவற்றையும் வசனத்தில் சொல்கிறார்கள். அதோ சுப்ரமணியே வந்துட்டாரே, தங்கச்சி செத்துப்போனாலும் தங்கச்சி பொண்ணுக்கு நல்லா கல்யாணம் பண்ணனும்னு, ராமாம்ருதம்மா வாங்க என்று கதாபாத்திரங்கள் வசனங்கள் பேசி படத்தை நாடகமாக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் ஜோதிர்மயி தவிர மற்ற எல்லா நடிகர்களும் படம் நெடுக எதையோ யோசித்துக்கொண்டே நடிக்கிறார்கள். அதிலும் அண்ணாவும் வீரமணியும் மணியம்மையும் சதா எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள். மணியம்மையின் கதாபாத்திரம் தாய் போன்ற கதாபாத்திரம் என்று சொல்லப்பட்டிருக்கும் போல. எப்போதும் கனிவை கண்வழியே கொண்டு வந்து கொட்டிக் கொட்டி அன்பையும் நெகிழ்ச்சியையும் ஒழுக விடுகிறேன் என்று பயமுறுத்திவிடுகிறார். ஜோதிர்மயியின் திறமைக்கு காட்சிகள் மிகக்குறைவு.

தேவையற்ற விஷயங்கள் அளவுக்கு அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன. பெரியாரை முன்னிறுத்த வேண்டிய விஷயங்கள் பல இருக்க, அவர் குளிக்க விரும்பாத விஷயம் நான்கு முறை குறிப்பிடப்படுகிறது. பெரியார் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடுகிறார். கடவுள் உலகத்தைப் படைச்சான் பாடலுக்கே நான் அதிர்ந்துபோனபோது, ஜோ ஜோ சந்தா என்று ஜேசுதாஸ் பாட பெரியார் நடிகர் சிவாஜி கணக்கில் நடந்துபோகும்போது, ஞானசேகரன் பெரியாரைத் தாக்கப் படம் எடுத்தாரோ என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது. கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர். வருகிறார்கள் போகிறார்கள். அண்ணா ஏன் அவ்வளவு யோசித்து யோசித்துப் பேசுகிறார் எனத் தெரியவில்லை. கருணாநிதி அண்ணாவையே முறைத்துப் பார்ப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது எனக்கு. ஏனென்று தெரியவில்லை. அண்ணா, கருணாநிதியைக் காண்பித்துவிட்டு எம்.ஜி.ஆரைக் காண்பிக்காமல் விட்டால் அரசியல்வாதிகளுக்கு யார் பதில் சொல்வது. எம்.ஜி.ஆர் வரும் காமெடிக் காட்சியும் உண்டு. 95 லட்ச ரூபாய் கொடுத்ததற்காக, கடைசியில் கருணாநிதியுடன் படத்தை முடித்துவிட்டார்கள் போல.

எல்லாரும் தமிழ் பேசுகிறார்கள். காந்திக்குக் கூட தமிழ்ப்பற்று அதிகம். அவரும் தமிழ்தான் பேசுகிறார். அவர் தமிழ், ஹிந்தி, ஆங்கில எனக் கலந்து எல்லாமும் பேசுகிறார். நல்ல காமெடியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் தமிழ் பேசுகிறார்கள் ஒரு பேரல்லல் படமாக வந்திருக்கவேண்டிய முயற்சி என்கிற எண்ணம் இயக்குநருக்குச் சிறிதும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. திடீரென்று ரஷ்யப் பயணம். திடீரென்று பர்மா பயணம். அங்கு ஒரு நடிகர். அதுவும் யாருடைய கதாபாத்திரம். அம்பேத்கர். சும்மா பெரியார் வாழ்க்கையில் அவரும் உண்டு என்று சொல்வதற்கு ஒரு காட்சி. ஒரு கருத்து. இன்னொரு காட்சியில் பெரியார் செல்லும் வழியில் குயவர்கள், உழவர்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர். அனைவருக்கும் சேர்ந்து ஒரு கருத்து. ஒரே கருத்து. விவேக் சொல்வது போலத்தான் இருக்கிறது. பெரியாரைக் காணோம். ஸ்ர் ராகவேந்திரர் படத்தில் ரஜினி ஊர் ஊராகச் சென்று உபதேச மழையாகப் பொழிவார். இந்த விஷயத்தில் ஞானசேகரனுக்கும் எஸ்.பி.முத்துராமனுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை.

பிராமண எதிர்ப்பாகவே சொல்கிறேமே என்று இயக்குநர் நினைத்தாரோ என்னவோ. தீடீரென்று மழை, பிராமணப் பெண், பிரசவம், பெரியாரின் மனித நேயம், பிரமாணர் மனம் நெகிழ்ந்து பெரியாரைப் பாராட்டும் இடம். மீண்டும் ஒரு நாடகத்தன்மை கொண்ட காட்சி. இப்படி ஒட்டுமொத்த படத்தையும் ஐந்து ஐந்து நிமிடக் காட்சிகளாகப் பிரித்துவிடலாம்.

ராஜாஜியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். படத்தின் நகைச்சுவை மற்றும் வில்லன் கேரக்டர் கலந்த ரோல் அவருக்கு. என்றைக்கும் இளமையாக இருக்கிறார். வயதாகிப் பெரியார் படுக்கையில் கிடக்கும்போது பார்க்க வருகிறார் ராஜாஜி. எப்படி? மான்போலத் தாவி வருகிறார். பார்த்துவிட்டுப் போகும்போது வயதாகிவிடுகிறது போல. மெல்ல, நிதானித்து, நொண்டி நொண்டி நடக்கிறார். இப்படி இவர் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல காமெடிக் காட்சிகள் பல உள்ளன. ரயிலில் சந்திக்கும் பெரியார் அங்கிருந்து சென்றவுடன், இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார். இதன் மீது ஏற்றப்படும் கவனம் அடுத்த ஒரு காட்சியில் ஒரு நிமிடம் மட்டுமே வருகிறது. அண்ணா மேடையில் இந்த சந்திப்பைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார். அத்துடன் அதன் தொடர்ச்சி அறுந்துபோகிறது. இப்படியே எல்லாக் காட்சிகளும் அமைந்து இருக்கின்றன.

தேவதாசி ஒழிப்பு முறையும் வைக்கம் போராட்டமும் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கும் முறை, அது மிக எளிமையான ஒன்று என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு இயக்குநரால் குழந்தைத்தனமாக இயக்கமுடியுமா என வியக்கவைக்கின்றன இக்காட்சிகள். அத்தனை மோசமான இயக்கம்.

ஆரம்பக் காட்சிகள் சத்யராஜுடன் இணைவதில் சிரமங்கள் இருந்தாலும், போகப் போக நாம் சத்யராஜை சுத்தமாக மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் சத்யராஜ் காட்டியிருக்கும் குரல் வேறுபாடுகள், உடலசைவின் நுணுக்கங்கள் பாராட்டத்தக்கவை. விருது வெல்ல வாய்ப்பிருக்கிறது. படத்தின் ஒரே ஆசுவாசமும் அவர்தான்.

இசையும் கேமராவும், சரியாகச் சொல்வதானால், தண்டம். ரஜினி படத்திற்கும் விஜய் படத்திற்கும் இசை அமைப்பதுதான் எளிது என்று வித்யாசாகர் புரிந்துகொண்டிருப்பார். ஆனால், அவரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லாக் காட்சிகளுமே ‘முக்கியமான காட்சிகள்’ போல படமாக்கப்பட்டிருப்பதால், எல்லாக் காட்சியிலும் வயலினும் கையுமாக இசையமைக்க உட்கார்ந்துவிட்டார் போல. கேமரா எவ்வித வித்தியாசங்களையும் காட்ட முயற்சிக்காமல் சும்மா அப்படியே இருக்கிறது. கிணற்றிலிருந்து ஜோதிர்மயியைத் தூக்கிக்கொண்டு வரும் காட்சி மட்டுமே கொஞ்சம் கவனிக்கும் விதமாக இருந்தது.

பெரியாரின் அனைத்து விஷயங்களையும், அனைத்து நண்பர்களையும் ஒரு படத்திற்குள் நுழைத்துவிட வேண்டும் என்று இயக்குநர் முயற்சிக்கும்போதே படம் அதள பாதாளத்துள் வீழ்ந்துவிடுகிறது. ஒரு நல்ல கலைப்படத்திற்குத் தேவையான பொறுமையும் யதார்த்தமும் இல்லை. வசனங்களைப் பேச வைப்பதில் இருக்கும் சிரத்தை, காட்சியமைப்பிலும் நடிப்பிலும் காட்டப்படவில்லை. படம் என்பது காட்சி ரீதியானது என்கிற எண்ணத்தையெல்லாம் கைவிட்டுவிட்டு பேசிப் பேசியே கொல்கிறார்கள். எல்லாவற்றையும் வசனம் மூலமே சொல்கிறார்கள். ஒரு வரியில் சொல்லி, மற்றவற்றைக் காட்சியில் காண்பிக்கவேண்டிவற்றை, சுலபமாக வாயால் சொல்ல வைத்து விடுகிறார்கள். இது படத்தை மிகச் சாதாரணமாக்கிவிடுகிறது.

பெரியார் படத்தில் எதைச் சொல்லவேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து, சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநருக்கு கவனம் எல்லாம் பெரியாரின் விசுவாசிகளைத் திருப்திபடுத்துவதிலேயே இருப்பது புரிகிறது. இதுவே படத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம். நிஜமான பெரியார் படத்தை யாராவது இனிமேல் எடுத்தால்தான் உண்டு.

Share

மொழி, பருத்திவீரன், பச்சைக்கிளி முத்துச்சரம், குரு மற்றும் சாரு

என்ன நேர்ந்துவிட்டது சாரு நிவேதிதாவிற்கு என்பது புரியவில்லை. யானை இளைக்காமல் இருந்தால்தான் அழகு என்பார்கள். திட்டாத சாருவைப் பார்த்தால் இளைத்த யானை போன்று தோன்றுகிறது. தமிழில் கடுமையான விமர்சனத்திற்குப் பெயர்போனவர்களில் ஒருவர் சாரு. ஆனால் அவர் எழுதிய திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் மிகச் சாதாரணமான நிலையில் எழுதப்படுவதைப் போலத் தோற்றம் பெறுகின்றன. அவரது எழுத்துவன்மையால் பக்கங்களையும் அவர் தரப்பு வாதங்களையும் அவர் கூட்டிக் கூட்டிச் சேர்க்கிறாரோ என்கிற சந்தேகம் எழத் தொடங்குகிறது. புதுப்பேட்டை படம் பற்றிய அவரது பார்வை எனக்கு ஒத்துப்போவதாக இருந்தது. ஆனால் அதையும் பலர் குறை கூறினர்.இப்போது சாரு எழுதியிருக்கும் ‘மொழி,’ ‘பருத்திவீரன்,’ ‘குரு,’ ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களின் மீதான விமர்சனங்கள் வெறும் ‘உயர்ந்தேத்தி’ எழுதும் அறிமுக எழுத்தாளரின் எழுத்தைப் போல அமைந்துள்ளன. அதிலும் மொழி படத்திற்கும் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற பைசா பெறாத படத்திற்கும் (கௌதம் படத்தில் ஏப்பை சாப்பை காட்சிகள் இல்லை என்கிறார் சாரு; கண்ணையும் மூடிக்கொண்டு காதையும் பொத்திக்கொண்டு படம் பார்த்தால் கூட கௌதம் படங்களில் எத்தனை காட்சிகள் ஏப்பை சாப்பையானவை என்பது புரியும்!) சாரு எழுதிய விமர்சனம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மொழி ஒரு சாதாரண சினிமா. தமிழ் சினிமாவிற்கு இது போன்ற படங்களே தேவை என்று எழுதினார் ஞாநி. இதுபோன்ற தமிழ்ப்படங்கள் பத்தோடு பதினொன்றாகவே அமையும். நாம், அழகிய தீயே போல. இந்த இரு படங்களைப் போலவே மொழியிலும் வளவள என்று வசனம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜின் நகைச்சுவை நடிப்பு மிகவும் அந்நியப்பட்டு நிற்கிறது. அவ்வப்போது வரும் நகைச்சுவை வசனத்தில் பிழைத்துக்கொள்கிறது மொழி திரைப்படம். வாய் பேசமுடியாத, காது கேட்காத ஜோதிகா (நன்றாக நடித்துள்ளார்) திடீரெனப் பேசுவதுபோல் கதாநாயகன் நினைத்துக்கொள்ள, அதற்கு ஒரு உருவம் கொடுக்க, அதை ஜோதிகா எதிர்க்க என ஒன்றோடும் ஒட்டாத, அறிவோடு கூடிய முட்டாள்தனமான காட்சிகள் ஏராளம். ஜோதிகாவிற்கு இசை மூலம் காதலைப் புரிய வைக்கும் காட்சி இன்னொரு பூச்சுற்றல். ஏன் ஜோதிகா கதாநாயகனை வெறுக்கிறார் என்பதே தெளிவாக்கப்படவில்லை. அப்பா மீது கோபம் என்பதே காரணம் என்பதெல்லாம் தமிழ்ப்படத்தில் மட்டுமே சாத்தியம். பிரம்மானந்தத்தின் கதாபாத்திரம், பாஸ்கரின் கதாபாத்திரம் போன்றவை வெகுஜன ரசனையின் மீது எழுப்பப்பட்டவை. இப்படி பல ஓட்டைகள். சாருவையும் ஞாநியையும் இதை நல்ல படம் என்று சொல்லவேண்டிய கட்டயாத்திற்குத் தள்ளியிருக்கிறது தமிழுலகத்தின் மற்றத் திரைப்படங்கள்.

மொழியையாவது ‘நல்ல சினிமா’ என்ற கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் பச்சைக்கிளி முத்துச்சரம் எவ்வகையிலும் சேர்த்தியில்லை. கௌதமின் இன்னோரு சொதப்பல். ஏன் ஜோதிகாவை வில்லியாகப் போடவேண்டும் என்பதே தெரியவில்லை. உண்மையில், இந்தப் படத்திற்கு முன்புவரை, ஜோதிகாவிற்குத் தமிழ் சினிமா ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இமேஜே இப்படத்தில் ‘வித்தியாசம்’ என்ற ஒன்று இருப்பதாகச் சொல்லவைக்கிறது. மற்ற வகைக்கு, ஜோதிகா சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். எந்த வகையிலும் பாத்திரத்தன்மையில் ஆழமில்லாத படைப்பில் எப்படி ஜோதிகா நடிக்க ஒத்துகொண்டார் எனத் தெரியவில்லை என்று ஜோதிகாவிற்காகத்தான் வருத்தப்படவேண்டியிருக்கிறது. இந்தக் குறையை நீக்கியிருக்கிறார்கள் சரத்குமாரும் கதாநாயகியும். இருவரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு படத்தைக் கொஞ்சமேனும் பார்க்கவைக்கிறது. கௌதமின் திறமையைப் பார்த்து வியக்கும் சாரு, உச்சக்கட்ட காட்சிகளைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை. வழக்கம்போல் சரத்குமார் பெரிய கூட்டத்தையே வீழ்த்திவிட்டு, திடீரென ஆவேசமாகப் மாற்றி வீணடிக்கப்பட்டிருக்கும் ஜோதிகாவைக் கொல்கிறார். ஜோதிகா கேட்கும் வசனம் (என் கணவனைத் தரமுடியுமா என்பது போன்றது) மிகச்சிறப்பானது என்று சொல்லும் சாரு, இப்போதுதான் தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சிவாஜி கணேசன் தொடங்கி ஆளாளுக்கு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள், ‘ என் புள்ள¨யைத் தரமுடியுமா?,’ ‘என் பொண்டாட்டியைத் தரமுடியுமா?’ என. பார்த்திபன் சொன்னாராம், ஆங்கிலப் படத்தில் தமிழ் வசனங்கள் எப்படி என்று. பார்த்திபன் சொல்வதையெல்லாம் கோட் செய்தால் சாரு என்கிற பிம்பம் என்னாவது? சாரு, எனக்குத் தலை சுற்றுகிறது. மீண்டும் சொல்கிறேன், யானை இளைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

பருத்திவீரனுக்கு சாரு அளித்திருக்கும் பாராட்டுப் பத்திரம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது. ஆனாலும், கிழவிகளை உட்கார வைத்து ப்ரியாமணி பாடும் காட்சி, எந்த வகையிலும் படத்துடன் ஒட்டாமல் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றியது. அதையும் பாராட்டியிருக்கிறார் சாரு. பாராட்டென்றால் எப்படி? இதற்காகவே பலமுறை படம் பார்க்கலாம் என்கிற ரேஞ்சில்! அப்படி ஒன்றுமே அந்தக் காட்சியில் இல்லை என்பதே என் முடிவு. அதேபோல், படத்தின் முடிவு என்பது எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாக அமைந்துவிட்டது. கதாநாயகி வன்புணர்ச்சி செய்யப்பட்டதைப் பற்றிச் சொல்லவில்லை. அதைச் செய்தவர்கள் யார் என்கிற யோசனையில் அமீர் கொஞ்சம் கீழே விழுந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். எந்த வகையிலும் கதைக்குச் சொந்தமில்லாதவர்கள் திடீரென வன்புணர்வில் ஈடுபடும்போது, ‘தப்புச் செஞ்சான் தண்டனை கிடைச்சது’ என்கிற நீதியின் ஒரு பகுதியாக இப்படத்தை அணுகிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுவரையில் அமீர் மிகவும் கஷ்பட்டுக் காப்பாற்றி வந்த யதார்த்தம் தொலைந்து, நீதி தலைதூக்கி ‘நிற்க வைக்கப்படுகிறது.’ அதிலும் பருத்திவீரனின் நண்பர்கள் என்று காண்பிப்பது எதனாலோ? பருத்திவீரனின் ஜாதியை வைத்து ‘கருத்தேற்றிய’ காட்சியா அல்லது தவறு செய்பவர்களுக்கும் கிடைக்கும் நீதிக்காகவா? தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய பலம். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் பத்து நிமிடப் பாடல் படமாகப்பட்ட விதமும், இப்படிக் காண்பித்தாலும் படம் வெல்லும் என்கிற அமீரின் துணிச்சலும் – நிச்சயம் தமிழ் திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் இத்திரைப்படம். பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பது போல, சரவணன், ப்ரியாமணி, கார்த்திக் போன்ற அனைத்து நடிகர்களையும் மிஞ்சுகிறார் ப்ரியாமணியின் தாயாக வரும் நடிகை. என்னவொரு யதார்த்தம்! அசல் நடிப்பு என்பது இதுதான்.

மொழியையாவது ‘நல்ல சினிமா’ என்ற கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம் என்றால் பச்சைக்கிளி முத்துச்சரம் எவ்வகையிலும் சேர்த்தியில்லை. கௌதமின் இன்னோரு சொதப்பல். ஏன் ஜோதிகாவை வில்லியாகப் போடவேண்டும் என்பதே தெரியவில்லை. உண்மையில், இந்தப் படத்திற்கு முன்புவரை, ஜோதிகாவிற்குத் தமிழ் சினிமா ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இமேஜே இப்படத்தில் ‘வித்தியாசம்’ என்ற ஒன்று இருப்பதாகச் சொல்லவைக்கிறது. மற்ற வகைக்கு, ஜோதிகா சுத்தமாக வீணடிக்கப்பட்டிருக்கிறார். எந்த வகையிலும் பாத்திரத்தன்மையில் ஆழமில்லாத படைப்பில் எப்படி ஜோதிகா நடிக்க ஒத்துகொண்டார் எனத் தெரியவில்லை என்று ஜோதிகாவிற்காகத்தான் வருத்தப்படவேண்டியிருக்கிறது. இந்தக் குறையை நீக்கியிருக்கிறார்கள் சரத்குமாரும் கதாநாயகியும். இருவரின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு படத்தைக் கொஞ்சமேனும் பார்க்கவைக்கிறது. கௌதமின் திறமையைப் பார்த்து வியக்கும் சாரு, உச்சக்கட்ட காட்சிகளைப் பார்த்தாரா எனத் தெரியவில்லை. வழக்கம்போல் சரத்குமார் பெரிய கூட்டத்தையே வீழ்த்திவிட்டு, திடீரென ஆவேசமாகப் மாற்றி வீணடிக்கப்பட்டிருக்கும் ஜோதிகாவைக் கொல்கிறார். ஜோதிகா கேட்கும் வசனம் (என் கணவனைத் தரமுடியுமா என்பது போன்றது) மிகச்சிறப்பானது என்று சொல்லும் சாரு, இப்போதுதான் தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. சிவாஜி கணேசன் தொடங்கி ஆளாளுக்கு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள், ‘ என் புள்ள¨யைத் தரமுடியுமா?,’ ‘என் பொண்டாட்டியைத் தரமுடியுமா?’ என. பார்த்திபன் சொன்னாராம், ஆங்கிலப் படத்தில் தமிழ் வசனங்கள் எப்படி என்று. பார்த்திபன் சொல்வதையெல்லாம் கோட் செய்தால் சாரு என்கிற பிம்பம் என்னாவது? சாரு, எனக்குத் தலை சுற்றுகிறது. மீண்டும் சொல்கிறேன், யானை இளைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.பருத்திவீரனுக்கு சாரு அளித்திருக்கும் பாராட்டுப் பத்திரம் ஏற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது. ஆனாலும், கிழவிகளை உட்கார வைத்து ப்ரியாமணி பாடும் காட்சி, எந்த வகையிலும் படத்துடன் ஒட்டாமல் இருப்பதுபோலவே எனக்குத் தோன்றியது. அதையும் பாராட்டியிருக்கிறார் சாரு. பாராட்டென்றால் எப்படி? இதற்காகவே பலமுறை படம் பார்க்கலாம் என்கிற ரேஞ்சில்! அப்படி ஒன்றுமே அந்தக் காட்சியில் இல்லை என்பதே என் முடிவு. அதேபோல், படத்தின் முடிவு என்பது எந்த வகையிலும் ஒட்டாத ஒன்றாக அமைந்துவிட்டது. கதாநாயகி வன்புணர்ச்சி செய்யப்பட்டதைப் பற்றிச் சொல்லவில்லை. அதைச் செய்தவர்கள் யார் என்கிற யோசனையில் அமீர் கொஞ்சம் கீழே விழுந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். எந்த வகையிலும் கதைக்குச் சொந்தமில்லாதவர்கள் திடீரென வன்புணர்வில் ஈடுபடும்போது, ‘தப்புச் செஞ்சான் தண்டனை கிடைச்சது’ என்கிற நீதியின் ஒரு பகுதியாக இப்படத்தை அணுகிவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுவரையில் அமீர் மிகவும் கஷ்பட்டுக் காப்பாற்றி வந்த யதார்த்தம் தொலைந்து, நீதி தலைதூக்கி ‘நிற்க வைக்கப்படுகிறது.’ அதிலும் பருத்திவீரனின் நண்பர்கள் என்று காண்பிப்பது எதனாலோ? பருத்திவீரனின் ஜாதியை வைத்து ‘கருத்தேற்றிய’ காட்சியா அல்லது தவறு செய்பவர்களுக்கும் கிடைக்கும் நீதிக்காகவா? தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜாவின் இசை மிகப்பெரிய பலம். படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் பத்து நிமிடப் பாடல் படமாகப்பட்ட விதமும், இப்படிக் காண்பித்தாலும் படம் வெல்லும் என்கிற அமீரின் துணிச்சலும் – நிச்சயம் தமிழ் திரைப்படங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் இத்திரைப்படம். பாரதிராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருப்பது போல, சரவணன், ப்ரியாமணி, கார்த்திக் போன்ற அனைத்து நடிகர்களையும் மிஞ்சுகிறார் ப்ரியாமணியின் தாயாக வரும் நடிகை. என்னவொரு யதார்த்தம்! அசல் நடிப்பு என்பது இதுதான்.

குரு படத்தை நான் பார்க்கவில்லை. எனவே சாருவின் “இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்’ என்கிற வரி (அம்ருதா, பிப்ரவரி 2007) குறித்து எந்தவொரு முன்முடிபான தீர்மானமும் எடுக்க விரும்பவில்லை.

சாருவுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், இலக்கியம், கவிதை என்றெல்லாம் சில காட்சிகளைச் சொல்லும்போது, அளவுக்கு அதிகமாக சில காட்சிகளைப் புகழ்கிறீர்களோ என்று தோன்றுகிறது. இரண்டாவது இன்னொன்று உண்டு. அசோகமித்திரன் சிறந்த சில நூல்களைப் பற்றிச் சொல்லியிள்ளார். அதேபோல் ஒன்றுக்கும் பெறாத சில நூல்களுக்கு அளிக்கும் முன்னுரையில் அந்நூலைப் பற்றி மிகமிஞ்சிப் புகழ்ந்திருக்கிறார். இப்படி நேரும்போது, அசோகமித்திரன் புகழ்ந்திருக்கும், அவரது புகழ்ச்சிக்கு ஏற்புடைய புத்தகத்தைப் பற்றியும் எழுத்தாளரைப் பற்றியும் சந்தேகம் வந்து சேர்கிறது. இந்த நிலை சாருவுக்கு வந்துவிடாமல் அவர் பார்த்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பு: பச்சைக்கிளி முத்துச்சரம், மொழி, பருத்திவீரன் படங்கள் பற்றி சாரு தன் கருத்துகளை ‘உயிர்மை, ஏப்ரல் 2007’ இதழில் எழுதியிருக்கிறார்.

Share

ஏக் தின் அச்சானக் – ஒருநாள் திடீரென்று

மக்கள் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் நேற்று மிகச்சிறப்பான ஒரு திரைப்படத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நேற்று மதியம் தற்செயலாக மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘ஏக் தின் அச்சானக்’ திரைப்படம் பற்றிய முன்னறிவிப்பு கண்ணில்பட்டது. அப்போதே திரைப்படத்தைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன். என்னால் அத்திரைப்படத்தை இருபது பேர் பார்த்திருப்பார்கள்.

ரு மழைநாளில் வெள்ளம் மிகுந்த சூழ்நிலையில் பேராசிரியர் (ஸ்ரீராம் லகூ) ஒருவர் வீட்டை விட்டுப் போகிறார். அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் அவரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். அவரைத் தேடுகிறார்கள். அந்தப் பேராசிரியர் அன்றிரவு மட்டுமல்ல, பின் வீடு திரும்பவே இல்லை. அப்படியான சூழலில், வீட்டிலிருக்கும் பேராசிரியரின் மனைவி (உத்தரா போக்கர், இவருக்கு இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது கிடைத்தது,) மகன், மகள்கள் மீண்டும் மீண்டும் பேராசிரியரை நினைப்பதன் மூலமும் அவரைப் பற்றி தர்க்கிப்பதன் மூலமும் அவரை மறு உருவாக்கம் செய்கிறார்கள். பேராசிரியரைப் பற்றி அவர்களின் மதிப்பீடுகள் மாறுகின்றன அல்லது உறுதி செய்யப்படுகின்றன. சில நாள்களில் தந்தையின் நினைவு தினசரி நிகழ்ச்சியாகிவிட, அப்பாதிப்பிலிருந்து மீள்கிறார்கள். அவரவர்கள் அவரவர்களின் யதார்த்த உலகுக்குள் நுழைந்து கொள்கிறார்கள். பேராசிரியரின் மனைவியால் அத்தனை சீக்கிரம் அவரின் நினைவிலிருந்து மீளமுடியவில்லை. எப்போதும் பேராசிரியரின் நினைவோடே இருக்கிறாள்.
Thanks:mrinalsen.orgபேராசிரியரின் புத்தக அலமாரியிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பில், அவர் ‘அபர்ணா அபர்ணா’ என்று கிறுக்கியிருப்பது தெரியவருகிறது. அபர்ணா (அபர்ணா சென்) பேராசிரியரின் மாணவி. மிகுந்த புத்திசாலியான பெண்மணி என்று பேராசிரியர் பலமுறை அவளைப் பாராட்டியிருக்கிறார். பேராசிரியரின் மனைவியின் எண்ணங்கள் தறிகெட்டு ஓட, பேராசிரியர் காணாமல் போனதற்கு இதுவே காரணம் என்கிற ஓர் எண்ணம் அவளுக்குள் வலுப்பெற்றுவிடுகிறது. பேராசிரியரின் புத்தகங்கள் பல ஒரு கல்லூரிக்கு நன்கொடையாகக் கொடுக்கப்படுகிறது. அபர்ணா ஒருசமயம் வீட்டுக்கு வர, தன் மீது படிந்திருக்கும் சந்தேக நிழலை நினைத்து வருந்தி, தான் அத்தகையவள் அல்ல என்று சொல்லி அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பேராசிரியரின் மனைவிக்குக் குழப்பம் மிகுகிறது. இதற்குள்ளாக அடுத்த ஆண்டின் மழை பெய்யத் தொடங்குகிறது. தங்களது தந்தை வீட்டைவிட்டுச் சென்று ஓராண்டு கழிந்துவிட்டதை நினைத்துக் கொள்கிறார்கள் அவரின் மகனும் மகள்களும். அப்போது தங்கள் தந்தை மீதான தங்கள் எண்ணங்கள் எவ்வளவு உண்மையானவை என்று மீண்டும் உறுதிசெய்கிறார்கள். அந்தநேரத்தில், பேராசிரியரின் மனைவி, பேராசிரியர் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக அவளிடம் சொன்னதைச் சொல்கிறார்: ‘வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையை மீண்டும் வாழமுடியாது என்பதே.’

பேராசிரியர் ஏன் காணாமல் போனார் என்பது பற்றிய சரியான தீர்வு படத்தில் சொல்லப்படவில்லை. இதுவே படத்தை யதார்த்ததிற்கு மிக அருகில் கொண்டுவருகிறது. தன் தந்தையைப் பற்றி நீதா (பேராசிரியரின் மூத்த மகள், ஷபனா ஆஸ்மி) ஒரு காட்சியில் கடுமையான விமர்சனத்தை வைக்கிறாள். தந்தையின் எண்ணத்தில் கழிந்துகொண்டிருக்கும் நாள்களிலிருந்து மீண்டு, அவள் தன் காதலுடனும் படத்திற்குச் செல்கிறாள். அன்றைய இரவு, அவள் தந்தையின் மீதான கடுமையான விமர்சனத்தை வைக்கிறாள். பேராசிரியரான தந்தை சாதாரண மனிதர் மட்டுமே என்றும் அவரைத் தாங்கள்தான் வித்தியாசமானவர் என எண்ணச் செய்துவிட்டோம் என்று கூறுகிறாள். அடுத்த நொடியிலேயே தன் தந்தையைப் பற்றி இப்படி மதிப்பிட்டுவிட்டதற்காக அழுகிறாள். உண்மையில் தந்தையின் நினைவுகளை மீறி இயல்பான வாழ்க்கையில் கலந்துவிட்டது அவளுக்கு ஒரு குறுகுறுப்பைத் தந்துவிடுகிறது. அதன்வழியேதான் அவள் அவளது தந்தையைப் பற்றிய உண்மையான பிம்பத்தை அடைய முயற்சி செய்கிறாள். அது அவளை மேலும் அதிர்ச்சியடையச் செய்கிறது.

பேராசிரியர் தனது மகன் மிகப்பெரிய ஒரு ஆளாக வருவான் என்றும் தன்னைப் பின்பற்றி வாழ்வான் என்றும் எதிர்பார்க்கிறார். நிகழ்வில் அவரது மகன் படிப்பில் ஆர்வமற்றவனாகவும் வியாபாரத்தில் நாட்டம் உள்ளவனாகவும் இருக்க, பெரிய ஏமாற்றத்திற்குள்ளாகிறார் பேராசிரியர். அவரது மகன் அமர் கேட்கும் தொகையைத் தருவதற்கு முன்பாக அவர் பேசும் பேச்சில் எரிச்சலடையும் மகன் தனக்குப் பேராசிரியரின் பணம் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறான். அதைக் காணும் பேராசிரியரின் மனைவி கடும் கோபத்தில் பேராசிரியரிடம் அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறாள். இது பெரிய அளவில் பேராசிரியரைத் தகர்க்கிறது. குடும்பத்திற்கெனவும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றியும் பேராசிரியர் என்றைக்குமே அக்கறை கொண்டதில்லை என்கிற குற்றச்சாட்டு அவரை மிகவும் கலவரப்படுத்துகிறது.

பேராசிரியரைப் பற்றி அவரது மூத்த மகளும் அவரது மனைவியும் வைக்கும் விமர்சனங்களே மிகமுக்கியமானவை. ஏனென்றால் அவர்கள் இருவர் மட்டுமே பேராசிரியருடன் நெருக்கமான ஒரு பிணைப்பைக் கொண்டிருப்பவர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

அபர்ணா பேராசிரியரின் மாணவி. எப்போதும் படிப்பு, எழுத்து எனக் கிடக்கும் பேராசிரியர் ஒரு புத்திசாலி மாணவியிடம் ஈர்ப்புக் கொள்கிறார். இந்த ஈர்ப்பு தவறான கண்ணோட்டத்தில் எழுவதல்ல. ஒரு பேராசிரியருக்கும் மாணவிக்குமான ஈர்ப்பு. அபர்ணா பின்னிரவுகளில் கூட பேராசிரியரை அழைத்துப் பேசுகிறாள். ஒரு காட்சியில் பேராசிரியர் எழுதிய கட்டுரைக்கு எழும் எதிர்வினை குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பேசிக்கொள்கிறார்கள். இப்படிப் போகும் இவர்கள் உறவு, பேராசிரியர் கிறுக்கியிருக்கும் “அபர்ணா அபர்ணா” என்ற குறிப்பின் வழியே பல சந்தேகங்களை எழுப்பிவைக்கிறது. யோசித்துப் பார்த்தால், பேராசிரியருக்கு அபர்ணாவின் மீது ஏதோ ஒரு வகையான இனம்புரியாத ஈர்ப்பு இருப்பதைக் கவனிக்கலாம். அது காமம் என்றோ அன்பு என்றோ குறுகலான ஒரு அடைப்பில் அடைபடக்கூடியதல்ல. அதையும் தாண்டிய ஈர்ப்பு அது. பேராசிரியரியரின் மனைவி, தன்னிடம் பேராசிரியர் சொன்னதாகக் கடைசியில் சொல்லும் வாக்கியங்கள், இந்த ஈர்ப்பைப் பற்றி அதிகம் யோசிக்கவைக்கின்றன.

சாதுக்களிடம் மக்கள் கொள்ளும் ஈர்ப்புப் பற்றியும் மிக மேலோட்டமான விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குநர். ஒரு சாதுவைப் பார்க்கக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒரு நோயாளிக்கு உடல்நலம் மேலும் மோசமாகிறது. இக்காட்சி சாதுக்களின் மீதான முட்டாள்தனமான நம்பிக்கையைப் பற்றிக் கேலி செய்கிறது. அப்படித்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஒரு மனிதர் காணாமல் போவதும் அவரைப் பற்றிய நினைவுகளும் எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்துப் பார்க்கலாம். ஒரு கட்டத்தில், இனி பேராசிரியர் திரும்பி வரமாட்டார் என முடிவு கட்டி, அவரது புத்தகங்களை ஏதேனும் கல்லூரிக்குக் கொடுத்துவிட்டால் அது சிறந்த முடிவாகவும் பயனுள்ளதாகவும் அமையும் என்று நினைத்து அவரது புத்தகங்களைக் கல்லூரிக்குக் கொடுக்கிறார்கள். அப்போது பேராசிரியரின் மனைவி மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறார், “இனி நான் யாருடன் வாழ்வேன்? எதனுடன் வாழ்வேன்?” உண்மையில் பேராசிரியரின் மனைவியின் வாழ்க்கைப்பிடிப்பிற்கு அப்புத்தகங்கள் தேவையான ஒன்றாகவே இருக்கிறது. அல்லது பேராசிரியர் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. பேராசிரியர் இல்லாத நிலையில் அப்புத்தங்களுடனான அவளது பரிவு தேவையான ஒன்றாகிறது. ஆனாலும் கடைசியில் புத்தகங்களைக் கல்லூரிக்குத் தரச் சம்மதிக்கிறாள்.

பேராசிரியர் காணாமல் போய் சில தினங்கள் கழித்து, அவளது மூத்த மகள் மாடியிறங்கி வரும்போது, எதிர்ப்படும் ஒரு கிழவர் கேட்கிறார், “எதாவது விஷயம் தெரிஞ்சதா?” அவருக்கு அவரது இயல்பான வாழ்க்கையில் ஒன்றாகிறது இக்கேள்வி. அதுமட்டுமில்லாமல், அவரது மூத்த மகள் இன்னொரு காட்சியில் சொல்கிறாள், “அப்பா காணாமல் போனதற்கு நாம்தான் காரணம் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்.” சமூகத்தின் தெளிவான வரைபடம் இது. இதை ஒன்றிரண்டு காட்சிகளிலும் மிகக் கூர்மையான வசனங்களிலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார் மிருணாள் சென்.

வசனங்கள் மிகக் குறைவாகவும் ஆழமாகவும் அமைந்து படத்திற்கு அழகு சேர்க்கின்றன. பேராசிரியரின் மனைவியும் அவரது மகனும் சொல்லும் வசனங்கள் பேராசிரியரின் பிம்பத்தை வெகு சீக்கிரத்தில் கட்டமைத்துவிடுகின்றன. “என்னைக்கு சொல்லிட்டுப் போனார் இன்னைக்கு சொல்லிட்டுப் போறதுக்கு” என்கிறாள் பேராசிரியரின் மனைவி. மகன் அமர், “அவர் என்னைக்குமே நம்மைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை” என்கிறான். மூத்தமகள் நிதா கூட தந்தையைப் பற்றிப் புது விமர்சனம் ஒன்றை – அதற்காக அவள் வருத்தப்பட்டாலும் – கண்டடைகிறாள். இவை எல்லாமே மிகச் சொற்பான வசன பிரயோகங்களில் நிழந்துவிடுகின்றன.

நினைவோடை உத்தியில் கட்டமைக்கப்படும் பேராசிரியரின் பாத்திரம் எவ்விதச் சிக்கலுமில்லாமல் நேர்த்தியாகக் கட்டமைப்படுகிறது. நினைவோடை உத்தியை எங்குத் தொடங்கி எப்படி முடிக்கவேண்டும் என்பதில் இயக்குநரின் மேதமை தெரிகிறது. இசையும் ஒளிப்பதிவும் எவ்வித இடையூற்றையும் ஏற்படுத்தாமல் படத்தோடு ஒன்றாகப் பயணிக்கின்றன.

இரண்டு விஷயங்கள் தெளிவில்லாமல் விடப்பட்டுள்ளன. தந்தை காணாமல் போன மறுநாள் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும்போது, யாரோ கதவைத் தட்டுகிறார்கள். மூத்த மகள் நிதா சென்று கதவைத் திறக்கிறாள். வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரும் என்ன, என்ன ஆச்சு என்று பதறுகிறார்கள். கதவை மூடிவிட்டு உள்ளே வரும் நிதா, “நான் எதையாவது உங்க கிட்ட மறைக்கிறேனா, என்கிட்ட ஏன் சொல்லலை” என்கிறாள். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பது புரியவில்லை. இன்னொன்று, பேராசிரியரின் மாணவி அபர்ணா சம்பந்தப்பட்டது. பின்னிரவுகளில் கூட பேராசிரியரை அழைத்து அவருடன் பேசும் இயல்புள்ளவள் அபர்ணா. பேராசிரியர் காணாமல் போன பிறகு, அவள் ஏன் அவரைத் தொடர்புகொள்ளவே இல்லை என்பது தெளிவாக்கப்படவில்லை. இத்தனைக்கும் அபர்ணாவுக்குச் சிறப்பான வேலை கிடைக்கிறது. வேலை நிமித்தமாக இடம் பெயர்கிறாள். திருமணமும் நடந்துவிடுகிறது. இவ்வளவு முக்கியமான விஷயங்கள் அபர்ணா வாழ்க்கையில் நடந்திருக்க, அவள் ஏன் பேராசிரியரைச் சந்திக்க வரவே இல்லை என்பது தெளிவாக்கப்படவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே வருகிறாள். அவள் எடுத்திருக்கும் புகைப்படங்களைத் தந்துவிட்டுப் போகிறாள். அதன்பின் ஏன் அவள் பேராசிரியரைப் பார்க்க முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகக் காட்டப்படவில்லை.

ஒரு சிறந்த படத்தைத் தந்ததற்காக மக்கள் தொலைக்காட்சியை மீண்டும் பாராட்டவேண்டியிருக்கிறது. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி.

ஹிந்தி படத்திற்குப் போடப்பட்ட சப்-டைட்டில்கள் சில சரியான விளக்கங்களைத் தாங்கியதாக இல்லை. இன்னும் கவனம் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த முயற்சியே பெரிதும் பாராட்டப்படவேண்டியது என்பதில் இரண்டாம் கருத்தில்லை.

[இந்தப் படம் பற்றிய எனது முந்தைய பதிவு மிருணாள் சென்னின் “ஏக் தின் அச்சானக்” – மக்கள் தொலைக்காட்சி அந்தப் பதிவு திடீரென்று காணாமல் போகிறது. எனது ப்ளாக்கரிலும் வருவதில்லை. அதனால் அது இங்கே சேமிக்கப்படுகிறது.]

இன்றிரவு 8.00 (26.11.2006) மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஏக் தின் அச்சானக் என்கிற ஹிந்தித் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. இயக்கியவர் மிருணாள் சென்.

தமிழ்த் தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் வணிகப் படங்களையே தந்து கொண்டிருக்க (இன்று எத்தனையாவது முறையாகவோ சன் டிவி தில் திரைப்படத்தைத் திரையிடுகிறது), முன்பெல்லாம் தூர்தர்ஷனில் பார்க்கக் கிடைத்துக்கொண்டிருந்த கலைப்படங்கள் மற்றும் விருதுப் படங்கள் காணக் கிடைக்காததாகின. இப்போது தூர்தர்ஷனில் எத்தனை மணிக்கு மாநில மொழித் திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்கிற விவரங்கள் கூடத் தெரிவதில்லை. சன் டிவியோ மற்ற லாபகரமான தொலைக்காட்சிகளோ இதைப் பற்றிய பிரக்ஞை ஏதுமற்றவர்களாகவும் லாபம் ஒன்றே குறிக்கோள் என்று செயல்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக, எல்லாத் தமிழ் ஒளிபரப்புகளையும் மிஞ்சி முதன்மை இடத்திலிருக்கும் சன் டிவி தனது லாபத்தில் ஒரு சிறு பங்கை விட்டுக்கொடுத்து, இதுபோன்ற கலைப்படங்களை ஒளிபரப்பியிருக்கலாம். அது பற்றிய எண்ணமே அவர்களுக்கில்லை என்பது கடந்த 14 ஆண்டுகளில் நமக்குப் புரிந்திருக்கும்.

இந்நிலையில் திரைப்படங்கள் என்கிற ஒன்றில்லாமலேயே ஒரு சானலை நடத்தலாம் என்கிற எண்ணம் வந்ததே பெரிய சாதனை. அதை மக்கள் தொலைக்காட்சி நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதன் அரசியல் செயல்பாடுகள், அரசியல் நிர்ப்பந்தகள் என்னவாக இருந்தபோதிலும், அதன் செயல்பாடு நிச்சயம் பாராட்டுதலுக்குரியதே.

இனி எப்போதும் காணவேமுடியாது என்று நான் முடிவுகட்டிவிட்ட படங்களில் (டெரரிஸ்ட், மல்லி, ஆயிஷா, குட்டி, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், குடிசை, நண்பா நண்பா, சங்கநாதம், உன்னைப் போல் ஒருவன்) ஒன்றான மல்லி திரைப்படத்தை கடந்த 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. எனக்கு சந்தோஷமான ஆச்சரியம். நிச்சயம் இது ஒரு சாதனை என்பதே என் எண்ணம். இதுபோன்ற திரைப்படங்களை இனி காணவே முடியாது என்கிற என் எண்ணம் உடைவது என்னை உணர்ச்சிவசப்பட்ட சந்தோஷத்தில் ஆழ்த்துவதைக் காணமுடிகிறது.

சுள்ளான் போன்ற வணிகப்படங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உரிமம் வாங்கும் தொலைக்காட்சிகள், அதில் ஒரு சிறுபங்கை மட்டும் செலவழித்து, சிறந்த பிறமொழிப்படங்களை அதன் தமிழ்மொழி சேர்ப்புடன் (சப் டைட்டிலுடன்) போடலாம் என்று என் நண்பரிடம் சென்ற வாரம் சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்காகத் தொலைக்காட்சிகள் தங்களது ப்ரைம் டைம் ஒதுக்கி அதிகம் நஷ்டப்படத் தேவையில்லை. பின்னிரவுகளில் ஒளிபரப்பியிருக்கலாம். ஆனால் இதுபற்றிய எண்ணமே எந்தவொரு தொலைக்காட்சிக்கும் இல்லை என்னும்போது இதைப்பற்றிப் பேசியே பிரயோஜனமில்லை. அந்நிலையை மாற்ற முயன்றுகொண்டிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி. மிகவும் சந்தோஷத்திற்குரிய விஷயம்.

மக்கள் தொலைக்காட்சி திரைப்பட வாசனையே ஆகாது என்றிருந்தபோது, திரைப்படங்கள் அப்படி ஒதுக்கப்படவேண்டியவை அல்ல என்கிற எண்ணம் எனக்கிருந்தது. நல்ல கலைப்படங்களை ஒளிபரப்பினால் அதில் தவறில்லை என்கிற என் எண்ணத்தை ஈடேற்றத் துவங்கியிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

அதன் செய்திகளில் சன் டிவி போலவோ ஜெயா டிவி போலவோ கேவலமான அரசியல் செய்யப்படுவதில்லை. அதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. இலங்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் காண்பிக்கிறார்கள், ஒரு பிரசார நெடியுடன். அதேபோல் ஆட்டோ சங்கர் தொடரின் உருவாக்கம். சதாம் பற்றிய செய்திகளில் காணப்படும் பிரசாரம். இதெல்லாம் மக்கள் தொலைக்காட்சியில் அரசியல் நம்பிக்கை மற்றும் கொள்கை சார்ந்த விஷயங்கள்; விவாதத்திற்குரியவை. இவையின்றிச் செயல்படும் என்று மக்கள் தொலைக்காட்சியை நாம் எதிர்பார்க்கமுடியாது. அதைவிடுத்துப் பார்த்தால் மக்கள் தொலைக்காட்சி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இன்றிரவு மிருணாள் சென்னின் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதற்கான முன்னோட்டத்தில் தமிழ் சப்டைட்டில் காண்பித்தார்கள். படம் முழுவதும் தமிழ் சப்டைட்டில் வரும் என்று நினைக்கிறேன். வராவிட்டாலும் பரவாயில்லை, இதுபோன்ற திரைப்படங்களை வாரம் ஒன்றாக மக்கள் தொலைக்காட்சி அவசியம் ஒளிபரப்பவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். தமிழ், கன்னட, மலையாள, ஹிந்தி, பிறமொழிக் கலைப்படங்களை சிறுபத்திரிகைகள் மூலமாக மட்டுமே வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டுகிறது. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பங்களை மக்கள் தொலைக்காட்சி தொடர்ந்து வழங்குமானால் அறிவுலகில் மக்கள் தொலைக்காட்சிக்கு சிறந்த பெயர் கிடைக்கும். இதனால் அவர்கள் அடையப்போகும் லாபம் ஒன்றே ஒன்றுதான். கலைப் பிரக்ஞை வளர்ச்சிக்கு சில முயற்சிகளை நல்குவது. இதைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சி செய்யுமென எதிர்பார்க்கிறேன்.

மிருணாள் சென்னின் பெயரை சிறுபத்திரிகைகளில் மட்டுமே கண்டு பழகிய எனக்கு இன்று அவர் திரைப்படத்தைக் காணப்போகிறோம் என்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. பார்க்கலாம். படத்தைப் பற்றிய தகவல்களுக்கு: http://mrinalsen.org/ekdin_achanak.htm

மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்.

Share

வேட்டையாடு விளையாடு – திரைப்பார்வை

இதற்கு விமர்சனம் எழுதுவது நேரவிரயம் என்று தெரிந்தும் அதைச் செய்கிறேன்! இறை என்னை மன்னிக்க. 🙂

* கமலுக்கு நடிக்க மறந்துவிட்டது. சிரிப்பது, பேசுவது, சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தன்மை. யதார்த்தம் என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் கண்டடைவது நலம்.

* கதையே இல்லை என்பது இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்!

* பின்னணி இசை தேவையில்லாமல் பல இடங்களில் ஒலிக்கிறது. தேவையற்ற இடங்களில் மௌனமே சிறந்த இசை. இதை மறந்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். படம் முழுக்க இரைச்சலோடு பின்னணி இசை. இருந்தாலும் இந்தக் கேடுகெட்ட படத்திற்கு தேவைக்கு அதிகமாகவே செய்திருக்கிறார் ஹாரிஸ். பாடல்கள் நன்று.

* காக்க காக்க-வில் வரும் எடிட்டிங் உத்திகள் இந்தப் படம் முழுவதும் இடம்பெற்றுத் தலைவலியை உண்டாக்குகின்றன. உத்திகளை எத்தனைத்தூரம் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கௌதம் புரிந்துகொள்ளவேண்டும்.

* கமல் இனி பரீக்ஷார்த்தத் திரைப்படங்களில் மட்டும் நடிப்பது அவருக்கு நல்லது. அவர் அவரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். குறைந்தபட்சம் அவர் மீது மிகவும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்து, அவரது ரசிகர்கள் என்கிற போர்வையில் சிக்காத, நல்ல ரசனையுள்ள மக்களை நினைத்தாவது அவர் இதைச் செய்யவேண்டும்.

* கமல் உடல் பெருத்துவிட்டது. உடல் கமலோடு ஒத்துழைக்கவே இல்லை. குறிப்பாக சண்டைக்காட்சிகளில். நேற்று வந்தவர்கள் எல்லாம் பின்னி எடுத்துக்கொண்டிருக்க, இவர் சிவாஜி ஸ்டைலில் நின்ற இடத்திலிருந்தே அடித்துப் பந்தாடுவது நல்ல காமெடியாக இருக்கிறது. வில்லனைத் துரத்திக்கொண்டு ஓடும் காட்சிகளில் தடுமாறுகிறார்.

* கமல் காக்கிச்சட்டையில் நடந்து வரும் காட்சி மிடுக்கற்றுத் தோற்றமளிக்கிறது. இதில் மட்டும் எப்படி கமல் கச்சிதமாக யதார்த்தத்தைக் கௌவிக்கொண்டார் எனத் தெரியவில்லை. 🙂

* படத்தில் லாஜிக் என்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. எந்தப் பிணத்தைப் புதைத்து வைத்தாலும் கமல் அரைமணி நேரம் முதல் ஐந்து மணி நேரங்களில் கண்டுபிடித்துவிடுகிறார். சரியான ரீல். ரஜினியின் ஹீரோயிஸத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் இல்லை. ஆனால் ரஜினிக்கு எடுபடும், கமலுக்குச் சறுக்கும்.

* கமலும் ஜோதிகாவும் நேரம் காலம் தெரியாமல் காதலித்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறார்கள்.

* கமல் படம் முடியும் தருவாயில் திடீரென்று ‘ராகவன் ஆபரேஷன் பிகின்ஸ்’ என்று சொல்லி அதிர்ச்சிக் குண்டைப் போடுகிறார். அடுத்த சீனிலேயே ஜோதிகாவுடன் காதல் வசனம் பேசுகிறார். இதுதான் ஆபரேஷன் ஆஃப் ராகவனா?

* வில்லன்கள் என்ன எழவிற்கு கை விரலை வெட்டித் தொங்க வைக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. படம் பார்ப்பவர்களை மிரட்ட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாயிருக்கவேண்டும்.

* வில்லன்கள் லூசு மாதிரி வருகிறார்கள் போகிறார்கள். கடைசியில் போயும் சேர்கிறார்கள்.

* ஜோதிகா ஒரு பாடலில் திடீரென்று ஒரு குழந்தையுடன் வருகிறார். இது பற்றி முன்பே படத்தில் வசனம் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

(இன்னொரு முறை பார்த்தால் தெரியும். ஆனால் இந்தக் கொடுமையை இன்னொரு முறை அனுபவிக்க முடியுமா?) அட இதுவேறயா என்கிற எண்ணம் எழுகிறது.

* படத்தின் முதல் காட்சி பிரத்யேகமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அந்த ஒரு காட்சியிலேயே இந்தப் படம் இப்படித்தான் அமையும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அப்படி ஒரு காட்சி! என் கண்ணைப் பிடுங்கிக்கோ என்று சொல்லி சட்டென சென்னைத் தமிழ் பேசி, மறைமுகமாக, படம் பார்க்க வந்திருப்பவர்களை “இப்பமே ஓடிடுங்கப்பா” என்று மிரட்டுகிறார் கமல். இதே போல் அமைந்து எனது வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்ட இன்னொரு படம் ‘வால்டர் வெற்றிவேல்.’

* வசனங்கள் சில இடங்களில் பளிச்சென்றும் பல இடங்களில் சொதப்பலாயும் அமைந்துள்ளன. கமல் ஒரு காவல் துறை அதிகாரியைப் பார்த்து அவரால்தான் இந்தப் பிரச்சினையே ஆரம்பித்தது என்கிறார். அடுத்த நொடியில், இருந்தாலும் அவன் ஏற்கனவே பல கொலைகள் செய்திருக்கிறான் என்கிறார். இப்படியாக நிறைய உளறல்கள், நிறையக் குளறுபடிகள் படம் முழுக்க இலவசம்.

* பம்மல் சம்பந்தம்ம, வசூல் ராஜா, மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற வரிசையில் இன்னொரு கமல் (பாடாவதி) படம். உண்மையான கமல் படம் எப்போது வரும் என்று தெரியவில்லை. நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது என்பதுதான் முக்கியமாக வருத்தப்படவேண்டிய விஷயமாக இருக்கிறது.

* 29 மதிப்பெண்கள்.

பஞ்ச்: இந்தப் படம் வராமலேயே இருந்திருக்கலாம்.

Share