Archive for புத்தகப் பார்வை

ஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு!)

TACல் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கே வேலை செய்பவர்களுக்கென ஒரு தனி நூலகம் வைத்திருந்தார்கள். அதில் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்கள் அதிகம் இருக்கும். +2 முடிக்கும்வரை எங்கள் வீட்டுக் கெடுபிடியின் காரணமாக சுதந்திரமாக நிறையப் புத்தகங்கள் வாசிக்க முடிந்ததில்லை. வீட்டுக்குத் தெரியாமலும், கொஞ்சம் தெரிந்தும் வாசித்தவற்றில், பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களே அதிகம். கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கான தளைகள் அத்தனையும் அறுந்துவிட்டது போன்ற உணர்வு. வீட்டிலும் தண்ணீர் தெளித்துவிட்டார்கள். தொடர்ச்சியாகத் திரைப்படங்கள், தொடர்ச்சியாகப் புத்தகங்கள், இது போக கிரிக்கெட். இவைதான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த காலம் அது. டாக்-கில் வேலை கிடைத்ததும், அங்கே லைப்ரரி இருந்ததும் பெரிய வரம் போல ஆகிவிட்டது. ஒவ்வொரு எழுத்தாளராகக் குறித்துவைத்துப் படித்தேன். வரிசையாக சுஜாதா புத்தகங்கள். பல புத்தகங்கள் பிடித்திருந்தன. முக்கியமாக மனசில் நின்றது ஒரே ஒரு துரோகம்.

இப்போது கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருக்கிறது. ஐபோன் வந்தவுடன், அதில் பிடிஎஃப் பைலைப் படிக்கமுடிகிறதா என்று சோதித்தேன். நன்றாகவே வேலை செய்தது. முதலில் அதில் படிக்க எடுத்தது ஒரே ஒரு துரோகம். ஒருவகையில் ஐபோனில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி எழுதும் முதல் பதிவு இது. :)) (தமிழக அளவில், இந்திய அளவில்? உலக அளவில் இல்லை என்பதை மட்டும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் ஒப்புக்கொள்கிறேன். இதனை மறுத்து வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. :>)

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்தபோது அடைந்த அதே அனுபவங்களை மீண்டும் அடைவது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவுகள் என் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்திருக்கின்றன என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் மனத்தில் அப்படியே பதிந்துபோன பெண் சார்ந்த விஷயங்கள் ஒரே ஒரு துரோகத்தின் வழியாக மீண்டு வருவதைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நானே என் சலனப் படத்தைப் பார்ப்பது போல.

சுஜாதாவைப் பற்றிய விமர்சனமாகச் சொல்பவர்கள் சொல்வது – கொஞ்சம் கதை, கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண், கொஞ்சம் டெக்னிகல் சமாசாரங்கள் என்பார்கள். இந்தக் கதையும் அப்படியே. கொஞ்சம் கதை கொஞ்சம் செக்ஸ்தான். இதனால்தான் அவர் இளைஞர்களின் எழுத்தாளராக மாறிப் போனாரோ என்னவோ. ஆனால் அதைச் சொல்லும் நடையிலும், அந்த எழுத்தின் சில வரிகளில் சுஜாதா தொட்டுவிடும் அகமன ஆழங்களும் வேறு யாருக்கும் எளிதில் கைகூடாதவை. குறிப்பாக, இந்த நாவலில் ராஜியின் தன்பார்வையில் வரும் பகுதிகளைப் படிக்கும் எந்த ஒரு பெண்ணும் சுஜாதாவின் ரசிகையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.

ராஜி என்ற பெண்ணின் பார்வையில் விவரிக்கப்படும் அத்தியாங்களில் சுஜாதாவின் வீச்சு அபாரமானதாக இருக்கிறது. இளமையைத் தொலைத்த பிறகு முதிர் இளமையில் திருமணம் நடக்கும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக அவர் எழுதியிருக்கும் வரிகள் அசலானவை. திருமணம் என்ற ஒன்று நிச்சயமானதும் ஒரு பக்கம் அவள் மனத்தளவில் இளமையான பெண்ணாவதும், மறுபக்கம் அவரது முதிர்மனம் அதனை எச்சரிப்பதும் என சுஜாதாவின் ஆட்டம் அசரடிக்கிறது. முதலிரவு அறையில் சிறுவர்கள் ஓடி விளையாடுவதேகூட கூச்சமாக உள்ளது என்னும் வரி யதார்த்தத்தை சுஜாதா எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தங்க சொம்பை விழுங்கிவிட்டாற் போல என்னும் வரியில் நான் அசந்தே போய்விட்டேன். ஒட்டுமொத்த கதையில் ராஜியின் பெருமையை, ஏக்கத்தை, தவிப்பை இந்த ஒரு வரி விளக்கிவிடுகிறது.

அம்பலத்தில் சுஜாதா அரட்டையின்போது இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருந்தேன். அடுத்த கற்றதும் பெற்றதும் பகுதியில், தான் மறந்த புத்தகங்களை எல்லாம் என் வாசகர்கள் நினைவு வைத்துச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் யாரைச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என்னைத்தான் சொன்னார் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போது அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த நினைவு உறுதிப்பட்டிருக்கிறது. சம்பத்தின் நினைவுகளாக விரியும் பத்திகளில், ரஜினி வில்லனாக நடிக்கும்போது அவருக்குக் கிடைத்துவிடும் சுதந்திரம்போல, சுஜாதாவுக்கு ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பத் தொடர்ந்து ராஜியையும் சுந்தரியையும் மையமாக வைத்து பெண்களை ஒரு போகப் பொருள் என்னும் அளவுக்குச் சித்திரிக்கும் பகுதிகள் ஓர் உதாரணம். பதின்ம வயது ஆண்களுக்கு இளைஞர் ஒருவர் எழுதியது போலத்தான் இருக்கும். இதையேதான் சுஜாதா விமர்சனமாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. பெண்களைப் பற்றி அவர் மிகவும் மலிவாக சித்திரிக்கிறார் என. சம்பத்தின் எண்ணங்களை சுஜாதாவின் எண்ணமாக எடுத்துக்கொண்டால், சுஜாதாவை பிற்போக்காளராக்க இந்த நாவலிலும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுஜாதாவின் நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே தொடர் கதைகள். இதனால் வாரா வாரம் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக, சூழல் காரணமாக அந்த நாவலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையில் இவை நாவலின் தோல்விகளே. இதனைப் பெரும்பாலான சுஜாதா கதைகளின் உச்சக்கட்ட காட்சிகளில் காணமுடியும். பெரும்பாலும் ஒரு நாடகத்தன்மையுடன் முடியும். இந்த நாவலை முதலில் படித்தபோது இந்த நாவலை எப்படி முடிக்கப்போகிறார் என்பதுதான் என் கவனமாக இருந்தது. இப்போது மீண்டும் வாசிக்கும்போது, முடிவு முதலிலேயே தெரியும் என்பதால், அவசரம் எதிர்பார்ப்பு இன்றிப் படிக்க முடிந்தது. இதிலும் அந்த நாடகத்தன்மை சிறிய அளவில் எட்டிப் பார்ப்பதை இப்போதும் உணரமுடிந்தது. ஆனாலும் கடைசி அத்தியாயம் சிறப்பானதுதான்.

ஈ ரீடரில் படித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் ஃபாண்ட் இருந்திருக்குமானால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால், இதுவே படிக்கும்படியாகத்தான் இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், தட்டுப் பிழைகளைக் குறித்து வைக்க இயலவில்லை. இன்னொரு மொபைலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து பிழைகளைக் குறித்து வைத்தேன். கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகன்தான் எவ்வளவு நன்றிக்குரியவர்!

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-452-6.html

Share

ரகோத்தமனுடன் ஒருநாள்

ராஜிவ் காந்தி எத்தனை முறைதான் கொல்லப்படுவார் என்று நீங்கள் கேட்கலாம். நேற்று ரகோத்தமன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகிறேன். இவையெல்லாம் அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் இல்லை என்பதால் இதனை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக, கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் ரகோத்தமன் ஒரு விருந்து கொடுத்தார். அதில் அவராகச் சொன்னவையும், நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலாகச் சொன்னவையும்.

* சிவராசன் கைதாவதற்கு முன்பாக சிவராசனைப் போன்ற ஒருவரை சைதாப்பாட்டையில் கைது செய்தனர் போலிஸார். அவர் அப்போதுதான் திருமணம் ஆனவர், தேன் நிலவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர். அவரைப் பார்த்ததுமே ரகோத்தமன் சொல்லிவிட்டார், அவர் சிவராசன் இல்லை என. அவரும் ரகோதமனிடம், தான் சிவராசன் அல்ல என்று ஒரு கடிதம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்! அதற்கு ரகோத்தமன், ‘உங்கள் தேன் நிலவை தள்ளிப் போடுவது நல்லது. அல்லது நீங்கள் எங்கே போனாலும் உங்களை மக்களே அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தரும் கடித்தத்தையெல்லாம் ஒருவர் பார்க்கக்கூட மாட்டார், அதற்கு முன்பே அடி விழுந்துவிடும்’ என்றாராம். சிவராசன் இறந்த பின்பு, அந்த மனிதர் மீண்டும் ரகோத்தமனைச் சந்தித்து, ‘இப்ப நான் ஹனி மூன் போலாமா’ எனக் கேட்டாராம்.

* சிவராசன் தேடுதல் வேட்டை உச்சத்தில் இருந்தபோது, யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், ‘சார், இந்த மாதிரி இடத்துல சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருக்கிற மாதிரி இருக்கு’ என்று தகவல் கொடுத்துவிடுவார்களாம்.

* ஒரு பெண்மணி ஜோதிடம் மூலம் சிவராசனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஜோதிடத்தில் அவர் எங்கோ கடலோரத்தில் மறைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி உடனே, ‘சிவராசனை பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன்’ என்று புகார் தந்துவிட்டாராம். போலிஸ் இந்தப் பெண்மணியுடன் இரண்டு நாள்கள் சிவராசனைத் தேடி பெசண்ட் நகர் பீச்சில் சுற்றியிருக்கிறது. (அந்த பீச்சில் சுண்டல் கூட கிடைக்காதே என நினைத்துக்கொண்டேன்!)

* வழக்கு விசாரணையின் போது, நளினி குழந்தையைப் பெற்றெடுத்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் போலிஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ ஓரிடத்துக்குப் போக முயன்றிருக்கிறார். அவர் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்று அலெர்ட் ஆன போலிஸ் அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. ‘இத்தனை நாள் அமைதியாக இருக்கும் முருகன் ஏன் திடீரென்று வயலெண்ட் ஆகவேண்டும்’ என நினைத்த ரகோத்தமன் அதனை முருகனிடமே கேட்டிருக்கிறார். தன் குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டார்களா எனக் கேட்டிருக்கிறார் முருகன். அதற்குத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்ன ரகோத்தமன், குழந்தையைப் பார்க்க முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை கையில் வைத்திருந்த பாட்டி, குழந்தையிடம் ரகோத்தமனைச் சுட்டிக்காட்டி, ‘இங்க பாரு மாமா வந்திருக்காங்க’ என்றாராம். ரகோத்தமன் தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த முருகன் கண் கலங்கி ரகோத்தமன் காலிலேயே விழுந்துவிட்டாராம்.

* நளினியின் காதல் ராஜிவ் கொலையில் பிரசித்தம் என்றால், இன்னொரு காதலும் அங்கே பிரசித்தமாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆண்களும் பெண்களும் ஒரே போல் வரிசையில் உட்கார வைப்படுவார்களாம். ஒருவருடன் இன்னொரு பேச அனுமதியில்லை. அப்போது காதல் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் போல. ஆதிரைக்கு விக்னேஷ்வரனும் கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்களாம்.

* மல்லிகையில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்களுக்கு இரவில் தடபுடலாக விருந்து நடக்குமாம். கிட்டத்தட்ட நூறு பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். எல்லாருக்குமே ராயல் டிரீட்மெண்ட்தானாம். இதிலேயே பலருக்கு உடல் பருத்துவிட்டதாம்.

* சுபா சுந்தரம் கனத்த உடல் உடையவராம். அவரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு ஒரு கட்டிலும் நாற்காலியும் வழங்கப்பட்டிருந்ததாம்.

* ஒரு கான்ஸ்டபிள் ஒருநாள் எதையோ மறைத்து எடுத்து வந்து சுபா சுந்தரத்துக்குக் கொடுத்திருக்கிறார். உஷாரான போலிஸ் அதனைப் பார்த்ததில், அதில் அசைவ உணவு இருந்ததாம். அந்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சுபா சுந்தரம் தாந்தான் அதனைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அசைவம் இல்லாமல் தங்களால் சாப்பிடமுடியாது என்றும் சொன்னாராம். ‘இனிமேல் ஏதேனும் தேவையென்றால் என்னிடமே கேட்கலாம்’ என்று சொன்ன ரகோத்தமன் அன்றே அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்தாராம். வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.

* சுபா சுந்தரத்துடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயகுமார். அவர் கொடுத்த துப்பின் பேரில் கொடுங்கையூரில் இருந்த அவரது வீட்டிலிருந்து, சிவராசன் புதைத்து வைத்திருந்த பல பொருள்கள் தோண்டி கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த தடித்த ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி. அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். பிஸ்டலை அதில் வைத்துவிட்டு, அகராதியை மூடிவிட்டால் அது பார்க்க புத்தகம் போலவேதான் இருக்குமாம்.

* விசாரணையில் இருந்த அனைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் வழங்கப்பட்டதாம்.

* நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் திடீரென்று எழுந்து நின்று, தான் நீதிபதியின் அருகில் சென்று பேசவேண்டும் என்றாராம். அலெர்ட்டான காவல்துறை கொஞ்சம் யோசிக்க, ரகோத்தமன் அவரை முன்னே வருமாறு அழைத்தாராம். ரகோத்தமன் அருகில் வந்த அவர், தான் நீதிபதியிடம் அருகில் சென்று பேசவேண்டும் என்று மீண்டும் சொன்னாராம். இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், நீதிபதியின் அருகில் சென்று, இரண்டு கைகளையும் தூக்கி, ‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்றிருக்கிறார். எல்லாரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, ‘எனக்கு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்துனக்கப்புறம் என்னால நல்லா நடக்கமுடியாது, ஊன்றுகோலே வேண்டாம்’ என்றாராம். அப்போதுதான் ஒட்டுமொத்த நீதிமன்றமே அவர் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து வந்ததைக் கவனித்ததாம். அனைவரும் டென்ஷனிலிருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்தார்களாம்.

* வழக்கு விசாரணையின்போது முதல்கட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்திக். அவரது உதவியாளர் ஒரு பிராமணராம். சித்திக் நல்ல நேரம், ராகு காலம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராம். அவரது உதவியாளர் சித்திக்குக்காக ஜோதிடம் பார்த்து வந்தாராம். அதன்படி, சித்திக் இந்த வழக்கின் தீர்ப்பை எழுதமாட்டார் என்று சொன்னாராம். அதேபோல சித்திக்குக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகச் சென்றுவிட்டாராம். வேறொரு நீதிபதிதான் ராஜிவ் கொலை வழக்குக்கு தீர்ப்பு எழுதினாராம்!

* போலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் ரகோத்தமனிடம் தனக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை என்றாராம். இதுவரை அவர் அப்படி சொன்னதில்லையே என்று ரகோத்தமன் கேட்டதற்கு அவர், ‘இதுவரை காவலில் இருந்த போலிஸ் நல்லா தூங்கிடுவார், நானும் தூங்கிடுவேன். இப்ப இருக்கிறவர் தூங்காம என்னயே கவனிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ என்றாராம். அன்றே அந்த போலிஸை வெளியில் காவலிருக்கச் சொன்னாராம் ரகோத்தமன். மீண்டும் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தூக்கத்தைத் தொடர்ந்தாராம்.

* ராஜிவ் கொலை செய்யப்பட்ட மறுநாள் இரவு சிவராசன் தங்கியிருந்த வீட்டில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாயாசம் செய்வதற்கு அரிசி வெல்லம் எதுவுமே இல்லை. பக்கத்து வீட்டில் அரிசி வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் டிவியில் ராஜிவ் கொலை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, இவர்களும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்து உண்டிருக்கிறார்கள்!

இனி நான் கேட்ட சில கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் வருவோம்.

* சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியைச் சந்தித்தேன். ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி தன்னுடைய கருத்துகளைச் சொன்னார். (அவரது கருத்துகளைப் பற்றி அவர் நிச்சயம் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) அதில் முக்கியமானது: ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய ஆவணமான போட்டோ, ஹிந்து கையில் கிடைத்த பின்புதான் போலிஸுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி ரகோத்தமன் எழுதியிருக்கிறார். ஆனால், சிவராசன் விபி சிங் விழா ஒன்றில் செய்த ஆயத்தம் குறித்த வீடியோ எப்படி ரகோத்தமனுக்குக் கிடைத்தது என்பது பற்றி எழுதவில்லை. அதைக் கொடுத்து ஞாநி. அப்போது ஞாநி ஃப்ரண்ட் லைனில் இருந்தார். ஒரு பத்திரிகையின் தவறான செயல்பாட்டைச் சொல்லும்போது, அதே போன்ற இன்னொரு பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டைச் சொல்லவேண்டும். இதுதான் ஞாநியின் வாதமாக நான் புரிந்துகொண்டது. இதில் நிச்சயம் உண்மை உள்ளது. ராஜிவ் புத்தகத்தில் நல்லது செய்யும் ஒவ்வொரு போலிஸின் பெயரும் வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ரகோத்தமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர், ‘ஆமா, ஞாநி (அதாவது ஞாநி என்.ராமிடம் கொடுத்து, என். ராம் ரகோத்தமனிடம்)கொடுத்தார். யார் மூலமாகக் கொடுத்தால் என்ன, அதைப் பற்றி நிச்சயம் அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். ஜெனியுன் கொஸ்டின்’ என்றார்.

* அடுத்து நான் கேட்டது – ரகோத்தமன் காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம், அது வாழப்பாடியாக இருக்கட்டும், மரகதம் சந்திரசேகராக இருக்கட்டும், ஒருவித நல்ல பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மீது யூகம் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால் வைகோவை யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் – என்பது தொடர்பானது. இதை அடிப்படையிலேயே மறுத்தார் ரகோத்தமன். வைகோவின் ‘புலிகளின் குகை’ பேச்சை நீங்களெல்லாம் கேட்டிருந்தால் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல, நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது. நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்திருப்பேன் என்றார். அவரது கருத்து, அவரது புத்தகத்தில் உள்ளதுபோலவே, அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் சொன்னதுபோலவே, மிகவும் உறுதியாக இருந்தது.

* அடுத்த கேள்வி ஒன்றை பா.ராகவன் கேட்டார். ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்ததைப் பற்றிப் பேசும் நீங்கள், ஜெயலலிதாவின் கூட்டம் ரத்து செய்வதைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது தொடர்பானது. ‘இப்படி நிறையச் சொல்வாங்க. ஆனா உண்மையைத்தான் நாங்க பேசமுடியும். மரகதம் சந்திரசேகர் நடத்தும் கூட்டத்துக்கோ சிதம்பரம் நடத்தும் கூட்டத்துக்கோ ஜெயலலிதா வரவே விரும்பவில்லை. அவர் வருவதாகச் சொன்னது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு. அதுவும் முடிந்தால் வருவேன் என்பது போன்ற ஒன்று. திட்டமெல்லாம் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முதல்நாளே ராஜிவ் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அதைப் போன்றதல்ல’ என்றார்.

* நான் கேட்ட இன்னொரு கேள்வி – சிவராசனைப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரைப் பார்த்த கணத்தில் அவர் இல்லை என்று உங்களால் சொல்லிவிடமுடிந்தது. அதற்குக் காரணமாக நீங்கள் சொன்னது, சிவராசனது புகைப்படம் உங்கள் மனதில் ஊறிவிட்டது என்பது. ஆனால் அதேபோல் சின்ன சாந்தன் உண்மையாகவே கைது செய்யப்பட்டபோது, ராஜிவ் கொலைக்கு சில நிமிடங்கள் முன்பாக ராஜிவுக்கு மாலையிடும் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது. அதற்கு, ‘சின்ன சாந்தனைக் கைது செய்தது வேறொரு குழு. சின்ன சாந்தன் திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப, தான் வரதராஜ பெருமாளைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்லவும், அது குறித்த விசாரணை என்ற கோணத்தில் போய்விட்டது. மேலும் இப்போது உள்ளது போன்ற ரிலாக்ஸான நேரத்தில் யோசனை செய்வது போன்றதல்ல அப்போதுள்ள நிலை. எப்போதும் ஒரு ஸ்டிரஸ் இருக்கும். சின்ன சாந்தன் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் புகைப்படத்தில் உள்ளது தாந்தான் என்று சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட போலிஸ் என்னிடம் சொன்னது. அப்போதுதான் எனக்கே சட்டென பிடிபட்டது அந்தப் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று. இது நடந்தது ராஜிவ் கொலை நடந்து 12 வருடங்களுக்குப் பின்பு! அந்தப் புகைப்படத்தில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். அதே முகச்சாயலில் உள்ள நான்கைந்து பேரை விசாரித்தும் இருக்கிறேன்’ என்றார்.

இப்படி பல செய்திகளைச் சொன்னார் ரகோத்தமன். இதில் ஏதேனும் பெயர்ப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் இருக்குமானால், அது என்னுடையதே அன்றி ரகோத்தமனுடையது அல்ல. அவர் தேதி முதற்கொண்டு மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு அவரது ரத்தத்திலேயே கலந்துவிட்டது!

அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்!

Share

சென்னை புத்தகக் கண்காட்சி 2010

சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற்றிய எனது பதிவு இட்லிவடையில்.

Share

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ராஜிவ் காந்தி கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில், நம்மைக் கடந்துகொண்டிருக்கும் பிம்பங்களைப் பற்றிய யாதொரு பிரக்ஞையும் இல்லாமல், நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் ஒரு புத்தகத்தை, சிறுவயதில் படித்த அனுபவம் மீண்டும் கிடைத்தது. இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும் வரை ஏதோ ஒரு சலனம் என்னைச் சுற்றி இருப்பது போலவே உணர்ந்தேன். தொடக்கம் முதல் இறுதி வரை அப்படி ஒரு வேகம். அர்த்தமுள்ள வேகம். நம்மைப் பதற வைக்கும் வேகம்.

நம் சமுதாயம் கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்த பழக்கம் உடையது. எனவேதான் சிறுவயதில் நமக்குக் கதை சொல்லி வளர்க்கும் பாட்டிகளும் தாத்தாக்களும் நமக்கு எப்போதும் பிடித்தமானவர்களாகவும், பிரியமானவர்களாகவும் ஆகிப் போய்விடுகிறார்கள். ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி சி.பி.ஐ. – ஓய்வு) ராஜிவ் கொலை வழக்கு என்னும் நிஜத்தை ஒரு கதையைப் போலச் சொல்லி, அனைவருக்குமான கதை சொல்லி ஆகிவிடுகிறார். கதை சொல்லல் என்றால், மிக எளிமையான கற்பனையோடு இயைந்த கதை அல்ல இது. ரத்தமும் சதையும் நிறைந்த மனிதர்களின் உயிரோடு கலந்துவிட்ட நிஜமான சம்பவத்தின் கதை சொல்லல். இது அத்தனை எளிமையானது இல்ல. எங்கிருந்து தொடங்குகிறோம் என்பதிலிருந்து, யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்பது தொட்டு, எங்கே எப்போது எப்படி முடிக்கிறோம் என்பது வரை எவ்விதக் குழப்பமும் இன்றி சொல்லப்பட வேண்டிய கதை. இக்கதையை கேட்கப் போகிறவர்கள் கோடான கோடி பேர் என்னும்போது, இதன் முக்கியத்துவம் இன்னும் கூடுகிறது. ஆனால் இதனை மிக எளிதாகக் கடக்கிறார் ரகோத்தமன்.

ராஜிவ் காந்தி கொலையை முதலில் விவரித்துவிட்டு – இப்படி விவரிக்கும்போதே மிக அழகாக, தேவையான எல்லாவற்றையும் சொல்கிறார் – மீண்டும் அதே நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் அதன் முன் பின் காரண காரியங்களோடு ஆழமாக அலசுகிறார். ராஜிவ் கொலை நிகழ்ந்ததும் மனதுக்குள் எழும் சந்தேகங்களை வெறும் சந்தேகங்களாக மட்டும் வைத்துக்கொண்டு, ஊகங்களை வெறும் ஊகங்களாக மட்டும் வைத்துக்கொண்டு, கையில் கிடைக்கும் துப்பை வைத்துக்கொண்டு சிபிஐ வழக்கை நகர்த்திச் செல்லும் விதம் பெரும் ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வொரு சமயத்திலும் ஏதோ ஒரு ஆச்சரியமான துப்பு சிபிஐக்குக் கிடைத்த வண்ணம் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

ஒரு வழக்கை விசாரித்தல் என்பது மிக எளிமையான காரியம் அல்ல என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது எப்படி அத்தனை எளிமையானது அல்ல என்பதனை விளக்குகிறது இப்புத்தகம். ராஜிவின் கொலையைப் பற்றிய இப்புத்தகம், இந்த வழக்கு விசாரணையின் எல்லா பரிமாணங்களையும் விளக்கும்போது, ஒரு முக்கிய வழக்கின் ஒட்டுமொத்த விஷயங்களையும் தெளிவாகச் சொல்லும் புத்தகம் என்னும் பரிமாணத்தை அடைகிறது. இது இப்புத்தகம் பெறும் மிக முக்கியமான அடையாளம்.

இதுவரை தமிழில் ஒரு வழக்கு விசாரணையின் சகல பரிமாணங்களையும் விளக்கும் புத்தகம் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அக்குறையை இப்புத்தகம் நீக்கியிருக்கிறது. அதுவும், உலகமே நோக்கிய ஒரு முக்கியக் கொலை வழக்கு ஒன்றில், தமிழில் இது நிகழ்ந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

சில திரைப்படங்களில் தீவிரவாதிகளின் சங்கேதக் குறிகள் பற்றிப் பேசி, அதைப் பார்த்துப் பழகிய மக்கள், இப்புத்தகத்தில் அச்சங்கேதக் குறிக்கான ‘கோட் ஷீட்’களைப் பார்க்கப் போகிறார்கள். அது மட்டுமல்ல, ராஜிவ் கொலைக்கு முன் கொலையாளிகள் சென்னை பூம்புகாரில் வாங்கிய சந்தன மாலைக்கான ரசீது உட்பட அனைத்தையும் இப்புத்தகத்தில் பார்க்கலாம். இத்தகைய சிறிய சிறிய விஷயங்கள் இப்புத்தகத்தை மிக சுவாரஸ்யமாக மாற்றுகின்றன. இத்தகைய சிறிய விஷயங்களே பின்னாளில் மிகப்பெரிய ஆதாரமாக அமைவதை, ஒரு நிஜமான வழக்கின் பின்னணியோடு பார்க்க முடிகிறது.

ஒரு வேகமான திரைப்படம் போலச் செல்லும் இப்புத்தகத்தில், சிறந்த காட்சிக்கான கூறுகளையும் பார்க்கலாம். ராஜிவ் காந்திக்கு மாலை அணிவிக்க அனுமதி பெறுவதற்கு கொலையாளிகள் செய்யும் பிரயத்தனம், மரகதம் சந்திரசேகரரின் வாய் பேசமுடியாத பேத்தி கொலையாளிகளின் படத்தைப் பார்த்து ஏதோ சொல்லும் காட்சி, ஒரு சிறுவன் பணத்தை மாடியில் இருந்து பறக்க விடும் காட்சி – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் புத்தகத்தை சுவாரயஸ்யமாக்கும் விஷயங்கள். இவைபோக நம்மைப் பதறவைக்கும் சம்பவங்களுக்கும் குறைவில்லை.

முக்கியமாக வைகோ பற்றிய அத்தியாயத்தைச் சொல்லவேண்டும். ரகோத்தமன் இப்புத்தகத்தில் எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை. தமிழக அரசியல்வாதிகள் – வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர் உட்பட – நியாயமாக விசாரிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்கிறார். அதுமட்டுமல்ல, இவர்கள் தற்போதும் விசாரிக்கப்படலாம், அதற்கான வாய்ப்பு இன்னும் அப்படியே இருக்கிறது என்றும் சொல்கிறார். ஜெயின் கமிஷனுக்கு, சிபிஐ ராஜிவ் கொலையில் விசாரித்ததன் தகவல்கள் தரப்படவில்லை என்கிறார். இப்புத்தகம் வெளி வந்திருக்காவிட்டால், இவையெல்லாம் நமக்குத் தெரியாத செய்திகளாகவே காற்றில் போயிருக்கும்.

இப்புத்தகத்தைப் படித்துவிட்டு, நளினி, ஹரிபாபுவின் காதல் பற்றிப் பேசாவிட்டால் முழுமை பெறாது. ‘சீனா விலகும் திரை’ புத்தகத்தைப் படித்த போது அதில் ஒரு வரி என்னை ஈர்த்தது. சீனாவின் முழுமையான ஜனநாயகம் செக்ஸின் வழியாக வந்தது என்பது போன்ற வரி, ஒரு பத்திரிகையாளரின் நோக்காக வெளிப்பட்டிருந்தது. நீண்ட நாள் சிந்திக்க வைத்த அந்த வரியைப் போலவே, இப்புத்தகத்தில் வரும் ‘அவரை அடிக்காதீர்கள்’ என்னும் நளினியின் வரியும் சிந்திக்க வைத்தது. நளினிக்கும் முருகனுக்கும் இடையேயான காதலே இவ்வழக்கை உடைத்திருக்கிறது என்றுகூடச் சொல்லிவிடலாம். ஹரிபாவுக்கு சாந்தி எழுதிய கடிதமும் இதே உருக்கத்துடன், ஆழமான எதிர்பார்ப்புடன் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதமும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த ராஜிவ் கொலை என்பது நன்கு திட்டமிடப்பட்டு நடந்தது என்ற போதிலும், இது கொலையாளிகளின் வெற்றியா என்று யோசித்தால், வருத்தம் தோய இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நிஜமாக இது ஓர் இந்தியத் தோல்வி. பெரும்பாலான இந்திய மனங்களில் புரையோடிப் போயிருக்கும், இந்திய தேசிய குணமான அலட்சிய மனோபாவமே ராஜிவ் காந்தியைக் கொன்றது எனலாம். இதற்கு உதவியிருப்பது – உளவுத் துறையின் இயலாமை.

ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பு, ராஜிவ் காந்திக்கு யார் யாரால் ஆபத்து ஏற்படலாம் என்று உளவுத்துறை சொன்ன பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் இல்லை. ராஜிவ் இறந்த பின்பு, சிபிஐ கொலையாளிகள் விடுதலைப் புலி அமைப்பினர்தான் என்று ஆதாரத்தோடு நெருங்கிவிட்ட நிலையிலும் கூட, விடாமல் உளவுத்துறை ‘இதற்கும் விடுதலைப் புலி அமைப்பிற்கும் தொடர்பு இல்லை’ என்று சொல்லி வந்திருக்கிறது! ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த விமானம் தாமதமாக வருவது கொலையாளிகளுக்குத் தெரிந்திருக்கும் நேரத்தில் காவல்துறைக்குத் தெரிந்திருக்கவில்லை!

ராஜிவ் காந்தி என்னும் ஒரு முன்னாள் பிரமருக்குத் தரப்பட்ட பாதுகாப்பின் லட்சணம் உலகம் பார்க்காதது. மாலையிட வரும் நபர்களை சாதாரண மெட்டல் டிடெக்டர் வைத்துச் சோதித்திருந்தாலே இப்படுகொலையைத் தவிர்த்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார் ரகோத்தமன். ‘ஹியூமன் பாம்’ என்னும் சிடி ஒன்றை ரகோத்தமன் தயாரித்து வெளியிட்டிருந்தார். அதில் ராஜிவ் கலந்துகொண்ட பூந்தமல்லி கூட்டத்தைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தேன். அதிலும், முன்னாள் பிரதமருக்கு, கொலை செய்யப்படலாம் என்ற ஆபத்து எப்போதும் சூழ்ந்துள்ள முக்கியத் தலைவர் ஒருவருக்குத் தரப்படும் பாதுகாப்பின் லட்சணத்தைப் பார்த்தேன். இது போன்ற சிக்கல்களை, தலைவர்களும் தொண்டர்களின் மீதான அன்பு என்ற பேரில் தாங்களே தருவித்துக்கொள்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், இக்கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியே, நமது அதிகாரிகளின் ரத்தத்தோடு கலந்துவிட்ட அலட்சியம் என்னும் மனோபாவம்தான் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.

புத்தகம் என்கிற அளவில் இப்புத்தகத்தில் உள்ள குறைகளைச் சொல்லவேண்டும் என்றால், இப்புத்தகத்தில் வரும் நாடகத்தனமான சில வசனங்களைச் சொல்லலாம். சில இடங்களில் தோன்றும் இதுபோன்ற தன்னிலை வெளிப்பாடுகள், இப்புத்தகத்தின் சீரியஸ்தன்மையைக் குறைக்கிறது. அதுவே, ஒரு வாக்குமூலமாக வெளிப்படும்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதையும் சொல்லவேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கு பற்றிய புத்தகம், கொலை வழக்கு சதி பற்றிய பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் அதே வேளையில், சில புதிய சர்ச்சைகளையும் உருவாக்கும் வாய்ப்புள்ளது.

ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்,
ஆசிரியர்: ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி – சிபிஐ ஓய்வு)
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் 100
தொடர்பு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18. தொலைபேசி: 4200-9601.

(நன்றி: புத்தகம் பேசுது மாத இதழ்.)

Share

ஒரு மோதிரம் இரு கொலைகள் – புத்தகப் பார்வை

சிறுவயதில் சில துப்பறியும் நாவல்கள் படித்திருக்கிறேன். எல்லா நாவல்களிலுமே ஏதேனும் ஒரு தவறை கொலையாளி செய்திருக்கவேண்டும் என்பதே விதி. அதை வைத்துக்கொண்டு ஆராய்வார் ஏதேனும் ஒரு துப்பறியும் ஆசாமி. பரத்-சுசிலா, விவேக்-ரூபலா போன்ற, ஒரே மாதிரியான துப்பறியும் ஆசாமிகள் என்னை துப்பறியும் கதைகளில் இருந்தே விரட்டினார்கள். சுஜாதாவின் கணேஷ் வசந்த் கொஞ்சம் மாடர்னாக துப்பறிந்தார்கள். பல அறிவியல் ரீதியான விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் வழியே சுஜாதா பேசிக்கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் இந்தக் கதைகளும் எனக்கு போரடிக்க ஆரம்பித்தன. சுஜாதா போன்ற ஒருவர் இதுபோன்ற கதைகள் எழுதுவதில் நேரம் செலவழிப்பது தவறு என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு மோதிரம் இரு கொலைகள் என்னும் ஆர்தர் கோனன் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதை ஒன்றைப் படித்தேன். 1887ல் எழுதப்பட்ட இக்கதையைத் தமிழில் பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்திருக்கிறார்.

வழக்கம்போல ஒரு கொலை, அதில் விடப்படும் தடயங்கள், அதை காவல்துறை தவறாக ஆராய, ஷெர்லாக் ஹோம்ஸ் சரியாகத் துப்பறிந்து கொலையாளியைப் பிடிக்கிறார். கொலைக்கான காரணமும் கொலை செய்யப்படும் விதமும் மிகத் தெளிவாக விவரிக்கப்படுகின்றன.

ஆர்தர் கோனன் டாயில் எழுதிய முதல் துப்பறியும் கதை இது. இதில்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் முதன்முதலாகத் தோன்றுகிறார். எடுத்த எடுப்பிலேயே ஷெர்லாக் ஹோம்ஸை ஆகச் சிறந்த துப்பறியும் நிபுணராக டாயில் அறிமுகப்படுத்தும் விதம் அசர வைக்கிறது. வாட்சன் வாயிலாக, வாட்சனின் பிரமிப்போடு வாசகர்களின் பிரமிப்பையும் ஹோம்ஸ் மீது குவிப்பதில் டாயில் கவனமாகச் செயல்பட்டு வெற்றியும் பெற்றுவிடுகிறார். ஒரு கட்டத்தில் ஷெர்லாக் ஹோம்ஸை மறக்காத வாசகர்கள் அதனை உருவாக்கிய டாயிலை மறந்துவிடுவது பற்றி நினைத்துப் பார்த்தால், டாயிலின் கதாநாயக உருவாக்கம் நமக்குப் புரியும். புள்ளியியல் கணக்குகளின் வழியாகவும், பொது அறிவின் வழியாகவும் டாயில் இதைச் சாதிக்கிறார். பிற்காலத்தில் சுஜாதாவும் இதே போன்ற வகையிலேயே கணேஷ்-வசந்தையோ அல்லது தன் கதையின் நாயகன் நாயகியையோ உச்சத்துக்குக் கொண்டு செல்வதை நாம் பார்க்கமுடியும். செர்லாக் ஹோம்ஸ் தத்துவமும் பேசுகிறார். கொலையாளி கைது செய்யப்பட்டதும் தொடங்கும் இரண்டாவது பாகம், முதல் பாகத்தின் எழுத்தின் நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆழமான விவரணைகளுடன் தொடங்குகிறது. சாதாரண காரணத்தைச் சொல்ல விரும்பாத ஹோம்ஸ், மார்மோன்களின் கலாசாரம் தொடங்கி, அதில் நடக்கும் விஷயங்களைக் கொலையின் முக்கியக் காரணமாக்குகிறார்.

முதல் நாவலிலேயே மிகத் தெளிவான திரைக்கதையை வைத்திருக்கிறார் டாயில். குறிப்பாக கொலையாளியை ஒரு ஹீரோவாக அவர் உருவாக்கும் விதம் முக்கியமானது. கொலையாளி கொலையை உடனே செய்துவிடவில்லை. அங்கேயும் ஒரு வாய்ப்பு தருகிறார். இரண்டு மாத்திரைகளில் ஒன்று விஷம் தோய்ந்தது. இன்னொன்று விஷமற்றது. கொலை செய்யப்படப்போகிறவர் முன்பாக நீட்டுகிறார் கொலையாளி. இன்றைய திரைப்படங்கள் வரை இந்த உத்தி நீண்டு வருவதை நாம் கவனிக்கலாம். நாயகனோ எதிர் நாயகனோ உடனே கொலை செய்வதையோ செய்யப்படுவதையோவிட ஒருவித ஹீரோயிசத்தைச் செய்வதை அன்றே தொடங்கி வைத்திருக்கிறார் டாயில். கொஞ்சம் தர்க்கம் கொண்டு பார்த்தால், பல காலமாக கொலைவெறியோடு அலையும் ஒரு மனிதன் இப்படி செய்வானா என்கிற சந்தேகம் வருகிறது. வாசகர்களுக்கு வரும் இந்த நம்பிக்கையின்மையின் விலை கதையின் சுவாரஸ்யமாக மாறுகிறது.

ஆங்கிலத்தில் படித்துப் பார்த்தேன். ஒப்பிட்டுப் படித்துப் பார்த்தேன். ஆங்கில நடை மிகக் கடுமையாக இருக்கிறது. 1890களில், கிட்டத்தட்ட நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் நடை எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்துவிடலாம். தமிழில் அது மிகச் சிறப்பாகவே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கேண்டீட் நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருந்த பத்ரி, இந்நாவலையும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். இன்னும் சீர்ப்படுத்தவும், திருத்தவும் சில இடங்கள் உள்ளன. அவையெல்லாம் அடுத்த பதிப்புகளில் களையப்படலாம்.

சுஜாதாவை நேரில் சந்தித்தபோது ‘இனியும் நீங்கள் கணேஷ்-வசந்த் நாவலையெல்லாம் எழுதவேண்டுமா’ என்று கேட்டேன். அதே போன்ற கேள்வி ஒன்று இப்போதும் ஓங்கி நிற்கிறது. சிறப்பாக மொழிமாற்றம் செய்யும் பத்ரி, இதுபோன்ற நாவல்களை மொழிபெயர்ப்பதைவிட, தமிழுக்கு மிகத் தேவையான நூல்களை மொழிபெயர்ப்பது நல்லது. ஆழமான கற்பனையையும், பொழுது போக்கையும் மையமாகக் கொண்ட இக்கதைகளைக் காட்டிலும், வாழ்க்கையை விசாரணை செய்யும் நூல்களையும், மிக முக்கிய வரலாற்று நூல்களையும் மொழிபெயர்ப்பு செய்வதில் பத்ரி கவனம் செலுத்துவது தமிழுக்கு நல்லது. இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கதைகள் தமிழில் இருப்பது தேவையில்லை என்று கூறமுடியாது என்றாலும், இவற்றைவிட முக்கியமான நூல்களின் தேவை இருக்கும்போது, இவற்றில் செலுத்தப்படும் கவனம் ஒரு வகையில் அவசியமற்றது என்பது என் எண்ணம்.

ஒரு மோதிரம் இரு கொலைகள்,
ஆர்தர் கோனன் டாயில்,
தமிழில்: பத்ரி சேஷாத்ரி,
விலை: 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
புத்தகத்தை வாங்க: http://nhm.in/shop/978-81-8493-142-6.html

Share

ஒலிக்காத குரல்கள் – கோபி கிருஷ்ணனின் ‘உள்ளே இருந்து சில குரல்கள்’

சொல்வனம் இணையத்தளத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.

கட்டுரையை வாசிக்க: http://solvanam.com/?p=248

Share

கம்பிகளின் வழியே கசியும் வானம் (மாலனின் ’என் ஜன்னலுக்கு வெளியே’ புத்தக வெளியீடு)

என் ஜன்னலுக்கு வெளியே நூலை ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ’ஒலி’ பண்பலையின் சாமிநாதன் மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். (மகாலிங்கம் பெயரைத் தவறாக எழுதியதற்கு வருந்துகிறேன்.) பத்ரி சேஷாத்ரி புத்தகத்தை அறிமுகம் செய்துவைத்தார்.

மாலனின் பல்வேறு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான ‘என் ஜன்னலுக்கு வெளியே’ நூலை வெளியிட்டுப் பேசிய ஜென்ராம், தான் அரசியல் மற்றும் சமூகம் வகைகளில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளை மட்டுமே வாசித்ததாகவும், அதைப் பற்றி மட்டுமே பேசப்போவதாகவும் தெரிவித்தார். அடிப்படையில் ஒரு புத்தகத்தை விமர்சிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்ட ஜென்ராம், என் ஜன்னலுக்கு வெளியே புத்தகத்தில் உள்ள பல்வேறு கட்டுரைகளைப் பற்றிய தன் கருத்துகளைச் சொன்னார். தான் எழுதிய கட்டுரைகளில் எப்படி மாலனின் கட்டுரைகள் எப்படி ஒன்றுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதை ஒப்பிட்டுப் பேசிய அவர், மாற்றுக் கருத்தை முன்வைக்க இன்று ஓர் எழுத்தாளர் இருப்பதே மகிழ்ச்சியான விஷயம் என்றார். சேது சமுத்திரம் பற்றிய மாலனின் கட்டுரை ஒரு வித்தியாசமான கோணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். மாலனோடு ஒத்துப்போகமுடியாத கருத்துகளையும் சொன்ன ஜென்ராம், விவாதத்தின் மூலம் எதையும் நிறுவிவிடமுடியாது என்றும் அதற்கு உதாரணமாக அசோகமித்திரனின் ‘ரிக்‌ஷா ரிஷ்கா’ கதையைக் குறிப்பிட்டார்.

மாலன் ஏற்புரை வழங்கினார். சிங்கப்பூர் தமிழ்முரசுவில் தான் எப்படி எழுத நேர்ந்தது என்பதைச் சொல்லிய மாலன், சொல்லாத சொல் கட்டுரைத் தொகுப்பில் தொடக்கத்தில் இருக்கும் அறிமுகக் குறிப்பின் பின்னணி, அவை இக்கட்டுரைகளில் இல்லாததன் பின்னணி என்பதையெல்லாம் விவரித்தார். ஜென்ராம் பேசும்போது, சேது சமுத்திரத் திட்டக் கட்டுரையின் மூலம் தனக்கு ஒரு ஹிந்துத்துவ முத்திரை விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டதை நினைவுகூர்ந்த மாலன், இது போன்ற முத்திரைகளைப் பல்லாண்டு காலமாகத் தான் எதிர்கொண்டு வந்திருப்பதாகவும், அதனால் தனக்கு எருமைத்தோல் வந்துவிட்டதாகவும் சொன்னார். தான் ஜனகணமன நாவல் எழுதியபோது ஆர்.எஸ்.எஸ். ஆள் என முத்திரை குத்தப்பட்டதாகவும், அப்போது எழுதிய வேறொரு படைப்பை முன்வைத்து நக்ஸல் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டதாகவும், ஒரே நேரத்தில் ஒருவர் எப்படி இந்த இரண்டுமாகவும் இருக்கமுடியும் என்று தனக்கு விளங்கவில்லை என்றும் சொன்னார். சமீபத்திய வரலாறான பாரதியின் வரலாற்றைக் கூட நம்மால் இன்னும் சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை என்றும், மேடைக்கு மேடை மேம்போக்காக, பாரதி யானையால் மிதிபட்டு இறந்தார் என்றும் பேசுகிறார்கள் என்றும் சொன்ன மாலன், இதன் மூலம் பத்தி எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தைச் சொன்னார். இன்னும் சிறிது நேரம் தொடர்ந்த மாலனின் பேச்சை அடுத்து கலந்துரையாடல் தொடங்கியது.

முதல் கேள்வியே அவரது இலக்கிய முகம் சார்ந்ததாக அமைய, அதற்குப் பதில் சொன்ன மாலன் தான் என்னதான் எழுதினாலும் தான் அடிப்படையில் ஒரு வாசகனே என்று சொன்னார். வலைப்பூக்களின் தொடக்க காலத்தில் அதை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான மாலன் தற்போது வலைப்பூக்களைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை கொண்டிருப்பதாகத் தோன்றுகிறதே என்று நான் கேட்டபோது, தனக்கு இன்னும் வலைப்பதிவுகளின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், தனது நம்பிக்கையின்மை வலைப்பதிவுகளின் திரட்டி மீதானது மட்டுமே என்றும் குறிப்பிட்டார். சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கேள்விக்கு, அது சுற்றுப் புறச் சூழல் சார்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்றால், அத்திட்டம் தேவையில்லை என்றும், அது செலவு ரீதியாகக் கட்டுப்படி ஆகாது என்றால் அதனால் பயனில்லை என்றும், அது ஹிந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால் அந்த நம்பிக்கையை ஏன் நிராகரிக்கவேண்டும் என்றும் மூன்று கோணங்களில் பேசினார். ராமன் இருந்தாரா இல்லையா என்றால் கண்ணகி இருந்தாரா இல்லையா என்று தான் எதிர்க்கேள்வி கேட்க விரும்புவதாகவும், கண்ணகிக்கு சிலை வைத்தல் ஒரு நம்பிக்கை என்றால், ராமர் பாலமும் அத்தகைய ஒரு நம்பிக்கையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் கேட்டார் மாலன். சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதே என்ற கருத்தைச் சொன்ன லக்கிலுக்கின் ஆதாரத்தை மாலன் மறுத்து, முதலில் பண உதவி செய்வதாக இருந்த வங்கி, இத்திட்டம் பொருளாதார ரீதியில் சாத்தியமானதில்லை என்று பின்வாங்கிவிட்டதை மாலன் குறிப்பிட்டார். பவளப் பாறைகள் 30 கி.மீ. வரை உள்ளதாகவும், அதில் மிகச் சில மீட்டர்களில் உள்ள பவளப் பாறைகள் மட்டுமே அழிய நேரிடும் என்றும் அதனால் பெரிய சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தல் இல்லை லக்கிலுக் சொன்னார். இதனால் மீன்வளம் குறையும் என்று தான் நம்பவில்லை என்றார் லக்கிலுக். மாலன், சுற்றுப்புறச் சூழலா, ஒரு திட்டமா என்றால் தனக்கு சுற்றுப்புறச் சூழலே முக்கியம் என்றார்.

சன் நியூஸில் இருந்தவரை கருணாநிதியை விமர்சித்து எழுதியதில்லை என்றும் ஆனால் சன் நியூஸிலிருந்து விலகியவுடன் கருணாநிதிக்கு எதிரான கட்டுரைகள் (மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவை) எழுதியது பற்றிய மாலன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்வியை நான் கேட்டேன். தான் சன் நியூஸில் இருக்கும்போதே கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பதாகவும், தான் எழுதிய கட்டுரைகளைப் பார்த்துவிட்டு அன்றே கருணாநிதி தனது அதிருப்தியைச் சொல்லியிருப்பதாகவும் சொன்னார் மாலன். ஒரு விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‘நம்மை விமர்சித்து எழுதும் மாலன்’ என்றுதான் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், சன் நியூஸிலிருந்து விலகியபின்பு அவர் எழுதிய ‘இலவச வண்ணத் தொலைக்காட்சி சரியா’ என்பது பற்றிய கட்டுரை என்றும், மாறன் சகோதரர்கள் பற்றியது அல்ல என்றும் சொன்னார். ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு தான் செயல்பட்டதாகவும், அப்போதும் தனது கருத்துகள் தன்னுடனே இருந்ததாகவும் விவரித்தார் மாலன். (என்னால் இக்கருத்தை ஏற்கமுடியவில்லை. ஒரு நிறுவனத்தில் இருக்கும்போது, அந்நிறுவனத்தின் கருத்தை ஏற்பதும், ஓர் எழுத்தாளனின் அந்தரங்கக் குரலும் வெவ்வேறானது. குறைந்தபட்சம், அந்நிறுவனத்துக்கு எதிரான கருத்துகள் இருந்து, அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளையோ, அந்நிறுவனத்தின் அரசியல் சார்ந்த கருத்துகளையோ ஏற்பது என்பது முற்றிலும் வேறானது. இங்கேதான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு எக்ஸுக்கும், மாலன், ஞாநி போன்ற எழுத்தாளர்களுக்கும் பெரிய வேறுபாடு வருவது. மேலும் இதைப் பற்றி விவரிக்கவேண்டுமானால், மாலன் எழுதிய கட்டுரைகளை முழுவதும் வாசித்தபின்பே முடியும்.)

பதிப்பக உலகத்தில் அந்நாளைய, இன்றைய, எதிர்காலம் பற்றிய கேள்வி வந்தது. அந்நாளில் அசோகமித்திரனின் ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகம் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், அதனால் அசோகமித்திரனிடமே கேட்டதாகவும், மாடிக்கு மாலனை அழைத்துச் சென்ற அசோகமித்திரன், அங்கே ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பித்து, ‘எத்தனை வேணும்’ என்று கேட்டதாகவும் குறிப்பிட்ட மாலன், இன்று அந்நிலை மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார். மௌனியின் முதல் சிறுகதைப் புத்தகம் வர அவர் எவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது என்று சொன்ன அவர், இன்று பெரும்பாலான பதிப்பகங்கள் ‘நூலக ஆர்டரை’ நம்பி இல்லை என்றார். புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் பற்றி நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய புத்தகக் கண்காட்சிகளில் முன்பு போல் சமையல் புத்தகங்களும், ஜோதிட புத்தகங்களும் அதிகம் விற்பதில்லை என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். கிழக்கு, தமிழினி போன்ற பதிப்பகங்களினால், நாவல் சிறுகதை கவிதை என்பதை மீறி இப்போது பல வகைப்பாடுகளில் புத்தகங்கள் கிடைப்பதைப் பற்றிச் சிலாகித்தார். இங்கே சில கருத்துக்களைச் சொல்லி, மாலனின் சந்தோஷத்தைக் கெடுத்து ஒரு குரூர சந்தோஷத்தை நான் அடையவேண்டியிருக்கிறது. 🙂

மாலன் அசோகமித்திரனின் வீட்டில் பார்த்த ‘வாழ்விலே ஒருமுறை’ என்பதைப் போன்ற இலக்கியப் புத்தகங்களின் நிலை இன்றும் அப்படியே உள்ளது என்பதுதான் உண்மை. கொஞ்சம் முன்னேறி இருக்கலாம். ஆனால் அன்று அசோகமித்திரன் வீட்டில் இருந்த நிலையே அந்நியமானது என்கிற அளவிற்கு இலக்கியப் புத்தகங்களின் விற்பனை வெகுவாக அதிகரித்துவிடவில்லை. அன்று இலக்கியப் புத்தகத்தையும், இன்று வெகுஜன புத்தகத்தையும் மனதில் வைத்து மாலன் எடை போடுகிறாரோ என்றும் தோன்றுகிறது. ‘இன்னும் பத்து வயதில் என் அக்காவை விட பெரியவனாகிவிடுவேன்’ என்கிற ஒரு சிறுவனின் நம்பிக்கைக்குச் சமமானதுதான், புத்தகக் கண்காட்சியில் விற்கும் இலக்கியப் புத்தகங்களின் விற்பனையும். இலக்கியப் புத்தகங்களின் விற்பனை எந்த வேகத்தில் அதிகரிக்கிறதோ, அதைவிட அதிகமான வேகத்தில் ஜோதிட, சமையல் புத்தகங்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாக இலக்கியப் புத்தகங்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது என்பதில் மட்டுமே நாம் மகிழ்ச்சி கொள்ளமுடியும். அதேபோல், பதிப்பகம் மற்றும் நூலக ஆர்டர் சார்ந்தது. கிழக்கு, ஆனந்தவிகடன் மற்றும் சில பெரிய எழுத்தாளர்களைக் கையில் வைத்திருக்கும் ஒரு சில பதிப்பகங்கள் இன்றைய நிலையில் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆர்டரை நம்பியே இருக்கின்றன. இதை எப்படி விளக்கலாம் என்றால், பெரிய பதிப்பகங்கள், நூலக ஆர்டர் நம்பி இல்லை என்றாலும் கூட, நூலக ஆர்டரை ஒதுக்குவதில்லை; அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கின்றன. அப்படியானால், மற்ற சிறிய பதிப்பகங்களின் நிலையை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். அதனால் நூலக ஆர்டர் விஷயத்தில் இன்னும் பல விஷயங்களை நாம் நிச்சயம் செய்யவேண்டியிருக்கிறது. காலச்சுவடு இதழில் கண்ணன் சொன்னதுபோல, ‘எடைக்கு எடை போடுவதைவிடக் கொடுமையாக புத்தகங்கள் நூலகத்தில் வாங்கப்படுவதைப்’ பற்றி நிச்சயம் யோசிக்கவேண்டும்.

அடுத்து வாரிசு அரசியல் பற்றிய கேள்வியைக் கேட்டார் லக்கிலுக். ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதிலும் வாரிசு அரசியல் இருக்கும்போது, மக்கள் அதை அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக ஊடகங்கள் மட்டுமே அலட்டிக்கொள்கின்றன என்றும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரே ஒரு வாரிசு கூட அரசியலில் நிலைக்கமுடியும் என்றும், யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரம் எனப் பார்க்கலாமா என்றும் கேட்டார். லக்கிலுக். இதற்கு ஜென்ராம், மாலன் இருவருமே பதிலளித்தனர். ஜென்ராம், உட்கட்சி விவகாரம் என்றாலும், அதை பார்த்து கருத்துச் சொல்ல விமர்சிக்க தனக்கு உரிமை இருக்கிறது என்றும், ஓர் உட்கட்சி முடிவிலேயே ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார், அவரின் கட்சியை அடிப்படையாகவைத்தே தான் அவரைத் தேர்ந்தெடுப்பதால், உட்கட்சி விவகாரம் பற்றிய விமர்சனம் தேவையாகிறது என்றார். மாலன், உட்கட்சிகளில் நடக்கும் வன்முறை விமர்சனத்துக்குரியது என்றால் அவர்களின் அரசியலும் விமர்சனத்துக்குரியது என்றார். ஜென்ராம், ஜெயலலிதாவோ கருணாநிதியோ உட்கட்சியைக் கூட்டி முடிவெடுக்கிறார்கள் என்றால் அது, அவர்கள் ஜனநாயகத்தின் மீது கொண்டிருக்கும் காதலால் அல்ல, மாறாக, அரசியல் சட்டத்தின் தேவையைக் கருதி மட்டுமே என்று விளக்கினார். மக்கள் மன்றம் என்பதே போலியானது என்றும், மக்கள் மன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால், ஜெயலலிதா ஊழலற்றவர் என்று தொடங்கி, மோடி வரையில், நாளை அத்வானி வென்றால் அவர் வரையில் அவரவருக்கு வேண்டிய வகையில் இதை ஏற்கவேண்டியிருக்கும் என்றும், இது சரியானது அல்ல என்பதால் மக்கள் மன்றம் போலியானது என்றும் நான் சொன்னேன். மக்கள் மன்றம் போலியானது என்றால் ஜனநாயகமே போலியானதா என்பது போன்ற கேள்வியை லக்கிலுக் கேட்க முனைந்தார். ஆனால் அதற்குள் வேறு வேறு கேள்விகளில் இக்கேள்வி சிதைந்து போனது.

உண்மையில் மக்கள் மன்றம் என்கிற கருத்துவாக்கம் போலியானது என்றே நான் நம்புகிறேன். மக்கள் மன்றம் என்கிற கருத்துருவாக்கம் உள்ளீடற்றது. அங்கே எளிய சமன்பாடுகள் மூலம் நிறுவப்பட்ட நிரலி சிந்திப்பது இல்லை. ரத்தமும் சதையுமுமான மக்கள் சிந்திக்கிறார்கள். இதைக் கொஞ்சம் யதார்த்தமாக்கினால் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை என்று சொல்லிவிடலாம். இந்திய மக்கள் மன்றம் என்பது, அறிவாளிகளாலும், சிந்தனையாளர்களாலும் நிரம்பியது என்று நான் நம்பவில்லை. கட்சி அடிப்படையிலும், தனிநபர் அரசியல் அடிப்படையிலுமே இன்றைய மக்கள் மன்றம் பெரும்பாலும் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறது. அதனால்தான் பெரும் ஊழலில் சிக்கித் தவித்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சிக்கு வருவதும், பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஓர் அரசியல்வாதி டெபாசிட் இழப்பதும் நடக்கின்றன. நாம் மக்கள் மன்றம் என்கிற கருத்தை ஒற்றைப் பரிமாணத்தோடு ஏற்க முனைந்தோமானால், இவற்றை எல்லாமே ஏற்கவேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது. அதனால் மக்கள் மன்றம் என்கிற கருத்தை முன்வைக்கும் அரசியல்வாதிகள் எல்லாமே, தங்களுக்கு வேறு பதில் இல்லாத நிலையில் இதைக் கையில் எடுக்கிறார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். வாரிசு அரசியல் விமர்சனத்தைத் தகர்க்க கருணாநிதியும், ஊழல் குற்றச்சாட்டைத் தகர்க்க ஜெயலலிதாவும் இந்த மக்கள் மன்றம் என்கிற கருத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள். மேலும் அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தின் மீது வைத்திருக்கும் ‘நம்பிக்கை’ நாம் அறிந்ததே! மக்கள் மன்றத்தின் வழியாக ஜனநாயகத்தை நாம் அடைந்தோமானால், ஜனநாயகத்தை நான் ஏற்கிறேன். மக்கள் மன்றம் வலுவில்லாதபோது, அதன் வழியாக உருவாகும் ஜனநாயகம் எப்படி வலுவானதாக இருக்கும் என்றால், இருக்கும் மோசமான வழிகளில் தீமைகள் குறைந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுவதுபோல, (இங்கே ஜெயலலிதாவும் கருணாநிதியின் உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!) மக்கள்மன்ற ஜனநாயகத்தைவிடச் சிறந்த மாற்று ஒன்று இன்று நம்மிடம் இல்லையாததலால் அதை ஏற்கவேண்டியிருக்கிறது என்று கொள்ளலாம்.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் அவரை வாரிசு அரசியலின் வெளிப்பாடு என்று இன்று சொல்லமாட்டேன். ஆனால், மாலன் எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் சொன்னதுபோல, வாரிசு அரசியல் என்பது வாரிசுகள் அரசியலுக்குள் வருவதில் இல்லை, மாறாக, அவர்கள் எப்படி அரசியலுக்குள் வருகிறார்கள் என்பதில் இருக்கிறது. வாரிசு அரசியலை முன்வைத்து ஒருவர் வந்தாலும், அவர் தாக்குப் பிடிப்பது அவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பு, திறமை போன்றவற்றால்தானே என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதுவும் ஏற்கமுடியாததே. வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கும்போது, மற்றவர்களின் தலைமைப்பண்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அறியமுடியாமல் போய்விடுகிறது. இதை மாலன் தெளிவாகச் சொன்னார். அதனால் ஸ்டாலின் இன்று வாரிசு அரசியலுக்காகக் கேள்வி கேட்கப்படமுடியாதவர்; ஆனால் அதுவே கனிமொழிக்கோ, தயாநிதி மாறனுக்கோ எப்படி பொருந்தும் என்று யோசிக்கலாம். அதேபோல், வாரிசு அரசியலுக்கு கருணாநிதியை மட்டுமே குறை சொல்வதும் சரியல்ல. காங்கிரஸ், பாமக, தேமுதிக, சமக என யாருக்குமே வாரிசு அரசியல் பற்றிக் குறை சொல்லத் தகுதி இல்லை என்பதே உண்மை.

இந்த வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளோடு நேற்றைய மொட்டைமாடிக் கூட்டம் முடிவுக்கு வந்தது. நேற்று ஒரு ஐம்பது பேர் கலந்துகொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் திங்கள் கிழமை வேலை நாள், விளம்பரங்கள் இல்லை, அப்படியும் ஐம்பது பேர். மெல்ல மெல்ல எப்படியும் நூறு பேர் வருவார்கள் என்கிற இலக்கை மொட்டைமாடிக் கூட்டம் அடைந்துவிட்டால், பல்வேறு விஷயங்களைச் சோதித்துப் பார்த்து, பத்ரியையும் பாராவையும் சோதிக்கலாம். அது விரைவில் நடக்கும் என்றே தோன்றுகிறது!

பின்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சியில் ரொம்ப பிசியாக இருப்பதால் பதிவு கொஞ்சம் சிறியதாகிவிட்டது.

Share

செங்குதிரையும் இருட்பாம்பும் (நாள் 5)

செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட முத்துராமன் பெற்றுக்கொண்டார். இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை ப்ரவாஹன் வெளியிட கணேசன் பெற்றுக்கொண்டார்.

முகில் எழுதிய செங்கிஸ்கான் நூலை இகாரஸ் பிரகாஷ் வெளியிட்டுப் பேசினார். வரலாற்றில் தனக்கு அதிக அறிவு இல்லை என்பதால் இந்த நூலை வெளியிட்டு எப்படி பேசுவது என்று யோசித்ததாகவும் அதற்கான சில ஆயத்த முயற்சிகளைச் செய்ததாகவும் பிரகாஷ் கூறினார். இணையத்தில் செங்கிஸ்கான் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும், செங்கிஸ்கான் குறித்த ஆவணப் படம் ஒன்றைப் பார்த்ததாகவும், அதன் பின்னரே இந்த நூலில் அவரால் எளிதில் அவரைப் பொருத்திக்கொள்ளமுடிந்தது என்றும் பிரகாஷ் சொன்னார். செங்கிஸ்கானின் போர்த்தந்திரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய பிரகாஷ், செங்கிஸ்கானின் வெற்றிக்கான முறைகளாக பத்துக் கட்டளைகளைக் குறிப்பிட்டுச் சொன்னார். பொதுவாக கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்களின் நடை, பா.ராகவனின் பாதிப்பில் இருக்கும் என்றும், ஆனால் இப்புத்தகத்தின் நடை அதிலிருந்து விலகி இருப்பதை தன்னால் கவனிக்கமுடிந்தது என்றும் குறிப்பிட்டார். முகிலின் உழைப்பைப் பற்றிப் பாராட்டிய பிரகாஷ், இந்நூல் மிக எளிமையான முறையில், மிக அழகாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்றும், இதற்காக உழைத்த முகிலைப் பாராட்டியும் பேசினார்.

குணசேகரன் எழுதிய இருளர்கள் ஓர் அறிமுகம் நூலை வெளியிட்டு ப்ரவாஹன் பேசினார். ப்ரவாஹன் (ஆய்வாளர், Sishri.org) சிறந்த பேச்சாளர் என்பதை நான் அறிவேன். அதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யும் வண்ணம் மிகச் சிறப்பாகப் பேசினார். ஒரு இண்டலெக்சுவல் தன்மையோடு, நூலை மிக ஆழமாக விமர்சனம் செய்தார். இருளர்கள் போன்ற ஒரு சமூகத்தைப் பற்றிய ஒரு நூல் நிச்சயம் தேவை என்கிற நிலையில் கிழக்கு பதிப்பகத்தின் முயற்சியையும் அந்நூலின் ஆசிரியர் குணசேக்ரனின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்நூலில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினார். இது போன்ற ஒரு மானுடவியல் சார்ந்த புத்தகத்தை வெளியிடும்போது, பதிப்புக்குழு இன்னும் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும், புத்தகத்தின் துறைசார்ந்த ஒருவரிடம் கொடுத்து புத்தகம் பற்றிய கருத்துகளைப் பெறவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இன்றைய நிலையில் ஒரு கருத்து ஒரு புத்தகத்தில் வந்துவிட்டாலே அது உண்மை என்று நம்பப்படுகிறது; அதனால் இதுபோன்ற புத்தகங்களில் அதிகம் கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆரியப் படையெப்டுப்புப் பற்றிப் பேசிய ப்ரவாஹன், அது இப்புத்தகத்தில் தவறாகக் கையாளப்பட்டுள்ளது என்று சொன்னார். தஸ்யுக்கள் எனப்படுபவர்கள் இருளர்களாக இருக்கமுடியாது என்று குறிப்பிட்டார். பல்வேறு நிலங்களில் அலைந்து திரிந்தவர்கள் என்று சொல்லப்படும் இருளர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்ததாக நூலாசிரியர் எழுதியிருப்பதும் சரியல்ல என்றார். அதேபோல் இருளர்கள் கடல்கன்னிகளை வழிபடும் மரபு ஒன்று உள்ளது என்றும், அதுபற்றி இப்புத்தகத்தில் குறிப்புகள் இல்லை என்றும் அது விடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. இருளர்கள் பற்றிய கேள்விகள் தொடங்கின. தரவுகள் இல்லை என்று சொல்லி மறுத்துப் பேசிய ப்ரவாஹன் அதற்கான தரவுகளைத் தராமல் யூகத்தில் மட்டுமே பேசியதாகவும், ஆனால் அந்த யூகம் ஓர் ஆசிரியருக்கு மறுக்கப்படுவது ஏன் என்றும் லக்கிலுக் கேட்டார். பதிலளித்த ப்ரவாஹன், ஒரு நூல் எழுதப்படும்போது ஒரு கருத்தைச் சொல்ல முற்படும்போது அதற்கான தரவுகளோடு எழுதவேண்டும் என்று தான் சொன்னதாகவும், தான் பேசும்போது கூட ஒரே ஒரு கருத்தை மட்டுமே (கடல் கன்னிகள் சார்ந்தது) யூகத்தின் அடிப்படையில் சொன்னதாகவும், அதையும் தான் வெளிப்படையாகக் குறிப்பிட்டதாகவும் சொன்னார். மேலும், தரவுகளோடு ஒப்பிடவேண்டிய, தரவுகளைக் கேட்கவேண்டிய விஷயங்களைக் கூட, ஆசிரியரின் குறைகளாகச் சொல்லாமல், அதை பதிப்புக்குழுவின் குறைகளாகவே முன்வைத்ததாகக் குறிப்பிட்டார். ஆரியப் படையெடுப்பு என்பது நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா அல்லது ஆரியப் படையெடுப்பு நடந்ததற்கான காரணங்களை மறுப்பதன்மூலமே அது நடக்கவில்லை என்கிறீர்களா, தஸ்யுக்கள் என்பவர் யாராக இருக்கமுடியும் என்ற கேள்விகளைக் கேட்டேன். ஆரியப்படையெப்பு பற்றி மிக நீண்ட விளக்கங்களைத் தரமுடியும் என்றும், அதற்கான தரவுகளைத் தான் தயாராக இருப்பதாகச் சொன்ன ப்ரவாஹன், தஸ்யுக்கள் என்பவர்கள் நிஷகாதர்களாகவே இருக்கமுடியும் என்று குறிப்பிட்டார். மூவேந்தர்கள் திராவிடர்களா என்பன போன்ற கேள்விகளுக்கும் விரிவாக பதிலளித்தார். மானுடவியல் ஆய்வுமூலம் வெளியாகும் கருத்துகளைக் கொண்டு இனம் பற்றிய முடிவுக்கு வரலாமா என்பது பற்றிய கேள்விக்கு, மானுடவியலில் நடந்த பல்வேறு ஆயுவுகளை வெளியிடாமல் இந்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் அது வெளிக்கொண்டுவரும் முடிவுகள் அதுவரை இருந்த கருத்தியல்களை உடைக்கும் என்பதால் இப்படி ஒரு நிலை என்பதாகவும் கனடா வெங்கட் குறிப்பிட்டார். (நான் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறேனா என்பது தெரியவில்லை. இது பற்றிய நீண்ட விவாதம் நிகழ்ந்தது. கல்வெட்டாய்வாளர் இராமசந்திரன் தனது கருத்துகளைச் சொன்னார். தொல்லியல் ஆய்வு, பாப்ரி மசூதி, இந்திரா காந்தி என நீண்ட இந்த விவாதத்தை ஒலிப்பதிவாகக் கேட்டுக்கொள்ளவும். வெங்கட்ரமணன் மிகச் சிறப்பாகப் பேசினார். ) இருளர்கள் புத்தகத்தை இருளர்கள் பார்த்தார்களா, எப்படி உணர்ந்தார்கள் என்று கேட்டபோது, இருளர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்புத்தகத்தின் மூலமாகவே சாதிச் சான்றிதழ் பெற முடிந்தது என்றும், இருளர் இனத்தைச் சேர்ந்த இன்னொருவர் இப்புத்தகத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டியதாகவும் (இன்னும் ஒரு கருத்தைச் சொன்னார் குணசேகரன். மறந்துவிட்டது.) சொன்னார்.

செங்கிஸ்கானின் கேள்விகள் தொடங்கின. செங்கிஸ்கான், பின்பு நெப்போலியன், பின்பு ஹிட்லர் என வரிசைப்படுத்திக்கொண்டால், செங்கிஸ்கானின் முக்கியத்துவம் என்ன, அவர் ஏன் போற்றப்படவேண்டும், அவரது போர்முறைகள் என்ன என்ற பத்ரியின் கேள்விக்கு முகில் விரிவாகப் பதிலளித்தார். போர்முறைகளே செங்கிஸ்கானின் மிக முக்கியமான பங்கு என்றும், சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றாக்கியது, வென்ற இனக்குழுக்களில் இருந்தே ஒரு குழந்தையைத் தத்து எடுத்து செங்கிஸ்கானின் தாய் வளர்த்தது போன்ற முறைகளைக் குறிப்பிட்ட முகில், இந்த தந்திரமுறைகளே செங்கிஸ்கானை முக்கியமானவராக்குகிறது என்றார். செங்கிஸ்கான் என்கிற பெயர் ஏன் வந்தது என்ற கேள்விக்கு செங்கிஸ்கான் என்பது நீல ஓநாய்களின் தலைவன் என்ற பொருள் என்று சொன்னார் முகில். அப்போது குறுக்கிட்ட அதிஷா (ஆதிஷா அல்ல!), செங்கிஸ்கான் என்றால் இடியோடு தொடர்புடைய பெயர் என்றும், இடியால் வென்றதால் அப்பெயர் வந்ததாக ஒரு கருத்து உண்டு என்றும், மங்கோலியப் படையெடுப்புக்குப் பின்னர் சவுதி வெற்றிக்குப் பின்னர் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் செங்கிஸ்கானுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்பில்லை என்றார் முகில். கான் என்பது அரசன் என்ற பொருளில் வழங்கப்படுவதாகச் சொன்னார். செங்கிஸ்கான் என்ற பெயரே, ஜிங்கிஸ்கான் என்பதுபோன்ற பல்வேறு உச்சரிப்பில் அழைக்கப்படுவதாக விவரித்தார்.

நேற்றைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு தோழர் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பி இந்தக் கேள்வியைக் கேட்க சொன்னார். ‘ஆஞ்சநேயர் இருளரா?’

நான் எதாவது இப்படி கேட்கப்போக, அதற்கான தரவுகள் இருக்கின்றன என்று ப்ரவாஹன் ஆரம்பித்துவிட்டால் என்னாகும் என எனக்கு வந்த பயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டேன்.

(இந்தக் கூட்டத்தில் பேசியவை, கேள்விகளின் மீதான கலந்துரையாடல் போன்றவற்றை நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன். அதனால் தவறுகள் இருக்கலாம். எனவே பத்ரி பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒலித்துண்டைக் கேட்பது மட்டுமே மிகச் சரியானதாக இருக்கும்.)

அனைத்து தோழர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் ஹனுமந்த ஜெயந்தி வாழ்ந்த்துகள்!!!

Share