Archive for புத்தகப் பார்வை

ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் படித்தேன். மிக எளிய வடிவிலான நாவல். முதல் சில நாவல்களில் இந்த உத்தி எளிமையானதும் வசதியானதும். பல்வேறு நிகழ்வுகளை மெல்ல புனைவுக்குள் அமிழ்த்தி பல அத்தியாயங்களில் உலவி சில அத்தியாங்களில் ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது. இந்த உத்தியைச் சரியாகவே செய்திருக்கிறார் சரவணன் சந்திரன். விறுவிறுவெனப் படிக்க வைக்கும் நடை கைகொடுக்கிறது. பல இடங்களில் சைவமான சாரு நிவேதிதாவைப் படித்தது போன்ற உணர்வு மேலோங்குகிறது. சந்திரன் பாத்திரம் கொள்ளும் உச்சம் மிக நன்றாக வெளிப்பட்டுள்ளது. சந்திரன் பற்றிய நேரடி விவரங்களே இல்லை என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. இதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
 
எனக்கு அலுப்புத் தந்தவை எவை என்று பார்த்தால், எவ்வித ஆழமும் இன்று சிலச்சிலப் பக்கங்களில் விரியும் தொடர்ச்சியற்ற சம்பவங்கள். நாவல் எழுதும் நாளில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டாரோ என்று எண்ணத்தக்க அளவுக்கு ஏகப்பட்ட சம்பவங்கள். வெகு சில பக்கங்கள் கொண்ட அத்தியாயங்களை கீரனூர் ஜாகிர் ராஜாவின் நாவல்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றுக்கிடையே உள்ள தொடர்பும் அந்தக் கதைகளின் வழியே உருவாகி வரும் ஒட்டுமொத்த சித்திரமும் அபாரமானதாகவும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும். இந்த உணர்வு இந்த நாவலில் கிடைக்கவில்லை. சில சாதிகளைப் பற்றியும் சில கட்சிகளைப் பற்றியும் அந்தச் சாதி என்றும் அந்தக் கட்சி என்றும் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. நாவலிலுமா இப்பிரச்சினை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
 
சரவணன் சந்திரனின் எழுத்து மிக நன்றாக இருப்பது நாவலின் பெரிய ப்ளஸ். தொடர்ந்து பல நாவல்கள் எழுதி முக்கியமான நாவலாசிரியராக வர சகல சாத்தியங்களை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. சரவணன் சந்திரனுக்கு வாழ்த்துகள்.
 
தமிழ் மகன் இந்நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள, சினிமாவில் நாயகர்கள் எடுத்துக்கொண்ட வில்லன்களின் உடைமைகள் பற்றிய குறிப்பு சுவாரஸ்யம்.
 
ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன், உயிர்மை பதிப்பகம்.
Share

அவன் காட்டை வென்றான்

அவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.

33958622

அவன் காட்டை வென்றான், கேசவ ரெட்டி, தமிழில்: எத்திராஜுலு, விலை ரூ 25.

Share

ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்

இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை – ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை.
oruthi_3101048h
இதை 60களில் ஜெமினிகணேசனை ஹீரோவாக வைத்து படமாக எடுத்திருந்தால் இன்னுமொரு சூப்பர்ஹிட் உணர்ச்சிகர காவியம் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். இதன் முடிவுக்காக சிலரால் புரட்சிகர சினிமா என்று போற்றப்பட்டிருக்கும் என்பதோடு, இரண்டு மனைவி கலாசாரத்தைப் புகுத்துகிறாரா என்று பலரால் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். இதை ஏன் ஜெயலலிதா இப்படி எழுதினார் என்பதை ஒட்டி ஜெயலலிதாவின் பின்னாளைய அரசியல் வாழ்க்கைக்கான அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டிருக்கும். நாவலாக வந்துவிட்டதால் இந்நாளைய தமிழர் மரபுக்கு இணங்க பெரும்பாலானோர் இதை வாசிக்கவே இல்லை. குடும்ப நாவல் இந்த மாதம் இதை வெளியிட்டதால் இதைப் படிக்க முடிந்தது. இது போக இன்னும் ஒரு நாவல் ஜெயலலிதா எழுதி இருக்கிறார் போல. அதையும் வாசிக்கவேண்டும். இந்த நாவலைப் படிக்கும்போது ஜெயலலிதாவை நினைத்து ஏனோ வருத்தமாக இருந்தது.
 
 
இன்று புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் தாமதமாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலைக் கையில் எடுத்தது தவறாகப் போய்விட்டது!
Jpeg

Jpeg

 
துக்ளக் சோவை இன்னும் மறக்கமுடியவில்லை. இவரது நினைவுக்காக அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலை இரண்டு நாளுக்கு முன்னர் வாங்கினேன். விலை ரூ 120. பொக்கிஷம் என்ற க்ளிஷேவை இதற்குச் சொல்லலாம். பொக்கிஷம். கருணாநிதி மற்றும் எம்ஜியாரைத் துவைத்து எடுத்திருக்கிறார். 71ல் ஈவெரா ராமரை செருப்பால் அடித்தது போன்ற போஸ்டரை வெளியிட்டதற்காக தடைசெய்யப்பட்ட துக்ளக் இதழ் மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களும்; 1985ல் பி.எச். பாண்டியன் சட்டசபையில் ரகுமான் கானிடம் ‘தன்மையாகப்’ பேசியதை துக்ளக் இதழில் வெளியிட்டு (என நினைக்கிறேன்) உரிமைப் பிரச்சினைக்கு ஆளான பிரச்சினை மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களையும் முழுமையாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். அதுவும் கிட்டத்தட்ட துக்ளக் வடிவமைப்பில். பல இடங்களில் சோவைப் பற்றிய நினைவுகள் என்னைக் கலங்கடித்துவிட்டன. என்னவெல்லாம் செய்திருக்கிறார். 15.7.85 அன்று சோ துக்ளக்கில் எழுதியிருக்கும் தலையங்கத்தில்தான் எத்தனை தெளிவு, என்ன துணிவு. வாய்ப்பே இல்லை. அதன் கடைசி வரி, “என்ன நடந்தாலும் சரி, ஆனது ஆகட்டும், நானும் பார்க்கிறேன்.”
 
சோவின் கடைசி காலங்களில் அவரது வேகம் மிகவும் மட்டுப்பட்டுவிட்டது என்பதையும் ஜெயலலிதாவை அவர் தீவிரமாக ஆதரித்தார் என்பதையும் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ இதழைப் படிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயலலிதா மீது வைக்கப்பட்டும் பல குற்றச்சாட்டுகளுக்குத் தொடக்கப்புள்ளி எம்ஜியார் என்பதை இப்புத்தகம் பின்னணியில் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நெடுஞ்செழியன், பி.எச். பாண்டியன் போன்றவர்களுக்கு எதிர்விதத்தில் நேர் செய்யும் விதமாக வருகிறார்கள் ‘வணிக ஒற்றுமை’ பத்திரிகை ஆசிரியர் பால்ராஜும், பாளை சண்முகமும்.
 
இந்நூலில் உள்ள ஒன்றரைப் பக்க நாளேடு ஓர் உச்சம். தலைவர்களின் தீபாவளி வாழ்த்து கற்பனை அதகளம். கடவுளைக் கற்பித்த்வன் முட்டாள், காட்டுமிராண்டி என்று ஈவெராவின் சிலைக்குக் கீழ் உள்ள வாசகங்களை ஒட்டிய பிரச்சினைக்கு பதில் கூறும் முகமாக எழுதப்பட்ட கட்டுரையில், சென்னை ஆர்ச் பிஷப் பூஜ்யர் ஸ்ரீ அருளப்பாவின் கருத்தைச் சரியாகச் சேர்த்திருப்பது அட்டகாசமான சோ-த்தனம். ஐ லவ் சோ. ஐ மிஸ் ஹிம். 🙁
Share

காலம் 50வது இதழ்

காலம் 50 வது இதழ். ஒரு சிற்றிதழ், அதிலும் தீவிரமான சிற்றிதழ், 50வது இதழ் என்னும் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்வது நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று. யாரோ ஒருவரின் அர்ப்பணிப்பும் தியாகமும் இன்றி இச்சாதனை சாத்தியமே இல்லை. இந்த ஒருவருக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் நிச்சயம் உதவி இருப்பார்கள். அவர்களும் நினைவில் நிறுத்தப்படவேண்டியவர்களே. செல்வம் என்ற பெயரே எனக்கு காலம் செல்வம் என்றுதான் பரிட்சயம். காலம் இதழைத் தொடர்ந்து கொண்டு வரும் காலம் செல்வம் அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

காலம் இதழ் 50 – நிச்சயம் வாசிக்கவேண்டிய இதழ். 176 பக்கங்களில் 150 ரூபாய்க்கு வெளியாகி இருக்கும் இந்த இதழைத் தவற விட்டுவிடாதீர்கள்.

மரிய சேவியர் அடிகளாரின் பேட்டி முக்கியமான ஒன்று. என் கொள்கைச் சாய்வுகளில் வைத்துப் பார்த்தால், என் நண்பர்கள் இதில் கற்கவேண்டியது அதிகம் உள்ளது என்றே சொல்வேன். கிறித்துவம் எப்படி மக்களுடன் இயங்கி கலையினூடாக மக்களைத் தன் வசமாக்குகிறது என்பதை இதில் பார்க்கலாம். என் கொள்கைக்கு எதிர்ச்சார்பு கொண்டவர்கள் இக்கருத்தை நிச்சயம் எதிர்ப்பார்கள். அவர்களுக்கும் இப்பேட்டி ஒரு பொக்கிஷமே.

ஐயர் ஒரு அரிய வகை மனிதர் கட்டுரை – பத்மநாப ஐயருக்கு செய்யப்பட்டிருக்கும் மரியாதை.

தீரன் நௌஷாத்தின் கட்டுரை பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசுகிறது. பலருக்கு இக்குறிப்புகள் பின்னாட்களில் உதவலாம். 🙂

காயா – ஷோபா சக்தியின் சிறுகதை. இன்றைய காலங்களில் மிகக் காத்திரமான சிறுகதைகளில் எழுதுபவர்களில் முதன்மையானவர் ஷோபா சக்தி. அக்கதைகளின் வரிசையில் உள்ள கதை அல்ல இது. இது வேறு ஒரு வகையான கதை. இக்கதையை வாசித்ததும் எனக்கு மனரீதியாக ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அன்று இரவு முழுவதும் இக்கதை என் நினைவில் சுற்றிக்கொண்டே இருந்தது. மிக தொந்தரவு செய்யும் கதை. இத்தொகுப்பின் சிறந்த படைப்பு இது என்பதே என் தனிப்பட்ட ரசனை.

நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு என்ற ஒரு சிறுகதையை அசோகமித்திரன் அவரது நினைவிடுக்குகளில் இருந்து தேடி எழுதி இருக்கிறார்.

அமெரிக்க கடற்படையில் அன்னபூரணி அம்மாள் என்னும் கட்டுரை, அன்னபூரணி என்னும் கப்பலைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை. 1930ல் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட கப்பல் இது. மிக முக்கியமான கட்டுரை.

பொன்னையா கருணாகரமூர்த்தியின் Donner Wetter கதை, இரண்டு மனிதர்களின் அனுபவங்களை அவர்களுக்கிடையேயான கிண்டல்களைப் படம்பிடிக்கிறது. கதை முழுக்க ஒரு மெல்லிய புன்னகையும் இரு மனிதர்களின் ஈகோவும் பிணைந்து வருகின்றன.

திரைப்பட விழாக்கள் – அன்றும் இன்றும் என்ற கட்டுரை சொர்ணவேல் எழுதியது. பல தகவல்களைத் தரும் முக்கியமான கட்டுரை.

நாஞ்சில் நாடனின் ‘கூற்றம் குதித்தல்’ கட்டுரை வழக்கம்போல நாஞ்சில் நாடனின் தமிழ்த்திறமையை பறைசாற்றுவது.

சிறில் அலெக்ஸின் தீண்டுமை கட்டுரை, தொடுதல் பற்றிய அறிவியல் உண்மைகளை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது. மிக நல்ல கட்டுரை.

இவை போக இன்னும் சில கதைகளும் (எம் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழவன்) கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் கதைகளும் பல கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன.

காலம் 50 வது இதழ் சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு அரங்கு எண் 635 மற்றும் அந்திமழை அரங்கு எண் 299லும் கிடைக்கிறது.

Share

ஒரு கூர்வாளின் நிழலில்

சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் கூர்வாளின் நிழலில். பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூல் இது. தொடக்கத்தில் புலிகள் இயக்கத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் புலிகள் இயக்கத்தில் தன் வளர்ச்சியைப் பற்றியும் அதில் தனக்கும் தன் இயக்கத்தவர்களுக்கும் உள்ள சவால்கள், உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் எவ்வாறு வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது என்பதையும் விரிவாக விவரித்துள்ளார் தமிழினி. இப்பகுதியில் புலிகளின் மீதான தீவிரமான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு தான் சரணடைந்ததையும் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதையும் கடைசியில் சொல்கிறார்.

புலிகளைப் பற்றிப் பல குற்றசாட்டுகளைச் சொல்லி வந்தவர்களுக்கு இப்புத்தகம் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. புலிகளைப் பற்றி பல்வேறு அமைப்புகளாலும் மனிதர்களாலும் சொல்லப்பட்ட குற்றங்களுக்கு நேரடி சாட்சியமாக தமிழினி இருந்துள்ளார். அவற்றைப் பதிவு செய்துள்ளார்.

ஒருவரை ஒழித்துக்கட்டவேண்டுமென்றால் புலிகள் செய்வது மூன்று விஷயங்களை. அதாவது,

“தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார்”

என்பவையே ஆகும். தமிழினி இதைச் சொல்வது, மாத்தையாவின் விவகாரத்தை ஒட்டியே என்றாலும் ஓர் இந்தியனாக எனக்கு இந்திய அமைதிப்படையின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நினைவுக்கு வந்தன. மாத்தையா விவகாரம் பற்றி RAW வை மையமாக வைத்துப் புலிகள் கட்டிவிட்ட கதையையும் விவரிக்கிறார் தமிழினி.

“தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் ‘றோ’வின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘றோ’வின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.”

இயக்கத்தில் நிலவிய தனிமனித வழிபாட்டைப் பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார்.

“அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”, “எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.”

இயக்கத்தின் தோல்விக்கு தமிழினி சொல்லும் மிக முக்கியப் பிரச்சினை வரி விதிப்பு தொடர்பானது. நீண்ட காலப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக நினைத்தார்கள் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.

புலிகளின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, இயக்கத்தில் சேர விருப்பம் இல்லாதவர்களைக் கூட, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்வது. இதையும் தமிழினி உறுதி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்னிருந்த கேள்வி, மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானகோடி பணத்தைச் செலவு செய்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று சுருங்கிப் போனது

என்று இந்நூலில் தமிழினி சொல்கிறார்.

மகிந்த ராஜபக்ஷே வெல்லவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாக இருந்தது என்பதை உறுதி செய்கிறார் தமிழினி. அதற்கான காரணம், புலிகள் தாங்கள் வென்றுவிடுவோம் என்று நம்பியதுதான். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்தது என்னவோ புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதுதான்.

“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்”

என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதை பதிவு செய்திருக்கிறார்.

போரில் தப்பித்தால் போதும் என மக்கள் ராணுவத்திடம் தஞ்சமடையப் போகும்போது புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இக்குறிப்பில் பார்க்கலாம்.

“சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.

சகோதர இயக்கத்தவர்களைக் கொன்றவர்களின் பரிணாம வளர்ச்சி, தன் சொல் கேட்காத தன் மக்களையே சுடுவதில் வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு குறிப்பும் முக்கியமானது.

“மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்துகொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.”

இந்நூலை எழுதியது ஒரு பெண் என்பதால், பல வரிகள் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது எதிர்காலம் பற்றிய தமிழினியின் சிந்தனைகள் மிக முக்கியமானவை. திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க புலிகள் இயக்கம் முடிவெடுத்தபோது, உயர் பதவியில் இருக்கும் வயதான போராளிகள் கூட, கையிழந்த கால் இழந்த பெண் போராளிகளை மணந்துகொள்ள முன்வரவில்லை என்பதைப் படிக்கும்போது ஏமாற்றமாகவே இருந்தது.

பெண் போராளிகளுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றிய தமிழினியின் ஒரு குறிப்பு:

குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.” 

இப்படிச் சொல்லும் தமிழினி ஒன்றைச் சொல்கிறார், இறுதிகட்டப் போரில் தப்பிச் செல்ல முடிவெடுக்கும் தலைவர்கள் குழுவில் ஒரு பெண் போராளி கூட இல்லை என்கிறார்.

அதேபோல் புலிகள் மீதான இன்னுமொரு முக்கியக் குற்றச்சாட்டு, இதே நோக்கத்தோடு போராடிய ஏனைய சகோதர இயக்கங்களைக் கொன்றொழித்தது. அது பற்றியும் இந்நூல் பல விஷயங்களைப் பதிவு செய்கிறது.

“ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.”

இன்னொரு இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கதறல் இப்படி இருந்திருக்கிறது.

“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.”

பாலியல் தொடர்பான விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் தமிழினி.

“அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.”

புலிகளைப் பற்றி இங்குப் பரப்படும் ஏகப்பட்ட பிம்பங்களுக்கு இந்நூல் கடும் எதிர்க்கருத்தை நேரடி சாட்சியமாக முன்வைக்கிறது. எல்லாத் தீவிரவாதத் தரப்பைப் போலவே புலிகள் தரப்பும் பல்வேறு படுகொலைகளைச் செய்திருக்கிறது. போட்டியில் வெல்ல சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்திருக்கிறது. உதவி அளித்த நாட்டின் முக்கியமான தலைவரைக் கொன்றிருக்கிறது. அவரோடு சேர்ந்து அப்பாவி மக்கள் உருத்தெரியாமல் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு உரிமைகள் போராளிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. விருப்பமே இல்லாதவர்களும் புலிகள் இயக்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் சொல்வதாக தமிழினி சொல்லியிருக்கும் இவ்வரிகளே புலிகளை சரியாக விளங்கிக் கொள்ளப் போதுமானவை:

“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள். ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான்.”

தமிழினின் இந்த வரிகளைப் பாருங்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கான பதில் இதில் உள்ளது.

ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.

 நான் யாழ்ப்பாணம் சென்று வந்ததைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இங்கே உள்ளன. (http://idlyvadai.blogspot.in/2010/09/1.html, http://idlyvadai.blogspot.in/2010/09/2.html, http://idlyvadai.blogspot.in/2010/09/1.html) அங்கே நாங்கள் சந்தித்த நண்பர் சொன்னதும் தமிழினி சொன்னதும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் புலிகளின் பேரைச் சொல்லி தங்கள் இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் அன்று நான் எழுதியபோது கடும் வசைகளையே பதில்களாகத் தந்தார்கள். இன்று ஒரு புத்தகமே மிக முக்கியமான ஒரு பதிப்பகத்தால் (காலச்சுவடு) வெளியிடப்பட்டிருக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்புத்தகத்தையும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கக்கூடும். ஆனால் உண்மைகள் என்னவோ தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டேதான் இருக்கும்.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000025292.html

இ புத்தகமாங்க வாங்க: கூகிள் ப்ளே

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share

சொன்னால் நம்பமாட்டீர்கள் – புத்தகப் பார்வை

சொன்னால் நம்பமாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, ரூ 160, சந்தியா பதிப்பகம், 200 பக்கங்கள்

மிக சுவாரஸ்யமான புத்தகம். சின்ன அண்ணாமலை சுதந்திரப் போராட்டங்களில் பங்குகொண்டு பலமுறை சிறை சென்றவர். ராஜாஜியுடன் நட்பு பாராட்டியவர். கல்கியுடன் நெருக்கமான நட்புடையவர். சிறந்த பேச்சாளர். இவரது நகைச்சுவை உணர்வே இவரது பலம். காந்தியை தன் தலைவராகக் கொண்ட இவர் தீவிர காங்கிரஸ்காரர். மேடைகளில் ஈவெராவை எதிர்த்து தீவிரமாகப் பேசியவர். இவரும் ம.பொ.சியும் 60களில் பல மேடைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தீவிரமாக எதிர்த்து வந்தார்கள்.

சின்ன அண்ணாமலை தன் வாழ்க்கையின் சுவையான குறிப்புகளை எளிய தமிழில் நகைச்சுவை ததும்பும் வார்த்தைகளில் எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். புத்தகம் நெடுக பல்வேறு குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகள், சிவாஜி கணேசன், எம்ஜியார் போன்ற நடிகர்கள் பற்றிய சில நினைவுகள், காந்திஜி பற்றிய சில தெறிப்புகள் எனப் பலவகையான பதிவுகள் இதில் உள்ளன. குறிப்பாக, ராஜாஜி – காமராஜ் பற்றி இவர் எழுதியிருப்பதன் வாயிலாக நமக்கு உருவாகி வரும் ஒரு சித்திரம் மிகவும் முக்கியமானது.

படிப்பவர்கள் மென்நகை புரியும்வண்ணம் பல வரிகள் இந்நூலில் காணப்படுகின்றன. அண்ணாத்துரை முதல் பலர் அரசியல் எதிர்த்துருவங்களில் இருந்தபோதும் இவரது பேச்சில் உள்ள நகைச்சுவையைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளது இந்நூலில் பதிவாகியுள்ளது.

சில இடங்களில் சின்ன அண்ணாமலை செய்யும் விளையாட்டுத்தனமான செய்கைகள் இவரைப் பற்றிய வினோதமான சித்திரத்தைத் தருகின்றன. குறிப்பாக தாராசிங் – கிங்காங் குத்துச் சண்டையில் அதிக வசூல் வரவேண்டும் எனபதற்காக, போட்டிக்கு சில நாள் முன்பாக இவர் சொல்லி வைத்து ஏற்பாடு செய்யும் போலிச் சண்டை. இப்படியும் செய்வார்களா என்று படிப்பவர்களை அசர வைக்கிறது. ஆனால் உண்மையில் அப்படி நடந்திருக்கிறது. அதைச் செய்தவரே அதைப் பதிவு செய்திருக்கிறார்.

காங்கிரஸைக் காப்பாற்ற சிவாஜி கணேசனின் ரசிகர்கள் காங்கிரஸுக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி, காங்கிரஸுக்காக இவர் செய்த காரியங்களைப் பட்டியலிட முடியாது. ஆனால் ராஜாஜி காங்கிரஸில் இருப்பதை விரும்பாத காமராஜர், ராஜாஜி முதல்வர் ஆனதும், திமுகவின் எதிர்ப்பிரசாரத்துக்கு எதிராக எதையும் செய்யாமலிருப்பதை இவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்கும் காமராஜர் மீது மாறாத அன்பும் மரியாதையும் உடையவர். ஆனாலும் காங்கிரஸைக் காப்பாற்ற ராஜாஜிக்கு ஆதரவாக மபொசியுடன் இணைந்து காமராஜுக்கு எதிராகப் போகிறார். பின்னாளில் அதே மபொசியும் ராஜாஜியும் திமுகவுடன் இணைந்து காங்கிரஸை தமிழ்நாட்டில் பலவீனமடையச் செய்த முரணையும் பதிவு செய்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தின் போது பட்டப்பகலில் இவரை சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிறையைத் தகர்த்து இவரை விடுவித்ததை விலாவாரியாக எழுதி இருக்கிறார். இதுபோன்று பட்டப்பகலில் சிறை உடைக்கப்பட்டு கைதி ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் விடுவிக்கப்பட்டதே இல்லை என்று குறிப்பிடுகிறார். காந்திஜியின் ஹரிஜன் இதழை தமிழில் கொண்டு வருகிறார். தமிழ்ப்பண்ணை என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிடுகிறார். மபொசியின் விற்காத புத்தகம் ஒன்றை மொத்தமாக வாங்கி அட்டையை மாற்றி நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டு விற்றுக் காண்பிக்கிறார். வ.உ.சி பற்றிய அதே புத்தகத்தை மபொசியை வைத்து விரிவாக எழுத வைத்து அதிக விலையில் மீண்டும் வெளியிடுகிறார்.

மலேசியாவில் தன் நகைச்சுவை உணர்வால் தப்பிப்பது, எழுத்தாளர் நாடோடியாக நடித்து கடைசியில் தானே ஏமாந்து போவது, வீரபாண்டிய கட்டபொம்மன், திருடாதே, கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களில் இவரது பங்களிப்பு, அண்ணாத்துரையுடன் ரயிலில் பயணம் செய்யும்போது நடக்கும் பேச்சுகள், ஈவெரா முன்னிலையிலேயே அவரை விமர்சிப்பது என பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்துநேசன் பற்றிய ஒரு கட்டுரையில் ‘அஞ்சலிக்கு அது இருக்கா’ என்பது தொடங்கி அதை ராஜாஜி எதிர்கொண்ட விதம் வரை, தொடர்ச்சியாக எல்லா மஞ்சள் பத்திரிகைகளும் ஒழிக்கப்பட்டது வரை வரும் கட்டுரை ரசனைக்குத் தீனி இடும் ஒன்று.  சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டது, அறுபதுகளின் அரசியல் பங்களிப்பு, அறுபதுகளின் திரைப்படங்கள் எனத் தொடர்ச்சியாக வரும் விவரங்கள் சலிப்பில்லாத தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ என்று சொல்லி பல விஷயங்களைப் பதிவு செய்யும், காவி கதர் உடை அணிந்து வாழ்ந்த ஒரு தேசப் பற்றாளரின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அது இத்தனை சுவாரஸ்யமாக இன்றும் விரைவாகப் படிக்கும் தமிழில் இருக்கும் என்பதை படித்தால் நம்பிவிடுவீர்கள்.

Share

வீர சிவாஜி

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வீர சிவாஜி’ புத்தகத்தைப் படித்தேன். 104 பக்கங்களே உள்ள, இரண்டு மணி நேரத்தில் படித்து முடிக்க இயலும் மிகச் சிறிய புத்தகம். சிவாஜியைப் பற்றிய கதைகள் பலவற்றை நாம் சிறு வயதில் இருந்தே படித்திருப்போம். அதில் எவற்றுக்கு ஆதாரம் உண்டு எவற்றுக்கு இல்லை என்பதே இன்றுவரை நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கதைகள் தரும் சுவாரஸ்யமும் சிவாஜிக்கு அவை கொண்டு வரும் ஒரு பிம்பமும் அசாதாரணமானது. இத்தனை கதைகளும் பல ஆதாரத்துடன் கூடிய நிகழ்வுகளும் உள்ள ஒரு முக்கியமான அரசனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஏன் இத்தனை சிறிய புத்தகமாக நூலாசிரியர் கே.ஜி.ஜவர்லால் எழுதியிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

HQ-TCgAAQBAJ

இப்புத்தகத்தின் முக்கியத்துவ என்பது – மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. சிவாஜியின் அப்பா தாத்தா காலத்தில் உள்ள முக்கியமான நடைமுறைகள், அன்று இருந்த நிலப்பகுதியைப் பற்றிய முக்கியமான விளக்கங்கள், அதோடு தொடர்புடைய சிவாஜியின் நிகழ்வுகள், சுல்தான்கள்-முகலாயர்களுக்கு இடையே இருந்த பிரச்சினைகள், இவற்றை சிவாஜி கையாண்டவிதம் என எல்லாமே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் மிக வேகமாக, இன்றிரவே இக்கதையைச் சொல்லி முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் சொல்வது போன்ற ஒரு தோற்றத்தில் சொல்லப்பட்டுள்ளன. இன்னும் கொஞ்சம் நிதானமாக விளக்கமாக எழுதி இருந்தால் இப்புத்தகம் இன்னும் முக்கியமானதாக ஆகியிருக்கும்.

சிவாஜி ராம்தாஸ் உறவு, சிவாஜி அப்சலைக் கொன்ற விதம், சிவாஜி முகலாயர்களின் சிறையில் இருந்து தப்பிப்பது, சிவாஜியின் கோட்டையிலிருந்து தன் மகனுக்கு உணவளிக்க தப்பித்த ஒரு தாய், துண்டாகிப் பறக்கும் சாயிஷ்டா கானின் கட்டைவிரல் எனப் பல்வேறு கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. இவையெல்லாம் நம் சிறுவயது நினைவுகளைக் கிளறுகின்றன. பல இடங்களில் இக்கதைகளுக்கான மாற்று ஏதேனும் இருந்தால் அதையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த வகையில் சிறுவர்களுக்கான மிக முக்கியமான நூலாக இதைச் சொல்லலாம். இந்த விடுமுறையில் இதை என் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லப் போகிறேன். ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ என்ற புத்தகத்தை சிறுவயதில் படித்த நண்பர் ஒருவர் இப்போதும் அதைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதை நினைவுகூர்கிறேன். உண்மையில் அது முக்கியமான புத்தகமே. ஒருவித மயிர்க்கூச்செறியும் நடையில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் பல்வேறு தகவல்கள் அதில் உண்டு. அதேபோன்ற ஒரு புத்தகம் இது.

இப்புத்தகத்தில் சொல்லாமல் விடப்பட்ட, சொல்லி ஆதாரம் இல்லாத விஷயங்கள் என்று முக்கியமாக நான் கருதுபவை மட்டுமே இங்கே.

* அப்சல் கானைக் கொல்ல உதவி புரிந்தவர் ஒரு பிராமணர் என்று ஒரு தியரி உண்டு. அவர் சிவாஜியிடம் தூதாக வந்ததாகவும், சிவாஜி பாரத உணர்வை பாரத மேன்மையை எடுத்துச் சொல்லி அவரை மாற்றியதாகவும் ஒரு பார்வை உண்டு. அதைப் பற்றிய குறிப்பு இப்புத்தகத்தில் இல்லை.

* சிவாஜியின் முடிசூட்டு விழாவுக்கு மறுத்த பிராமணர்கள் பற்றிய குறிப்பு இல்லை. ஒருவேளை, இவற்றுக்கு ஆதாரம் இல்லை என்று ஆசிரியர் நினைத்தால், மற்ற விவரங்களை குறிப்பிடுவதுபோல இவற்றைக் குறிப்பிட்டுவிட்டு இவற்றுக்கான ஆதாரம் இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம்.

* அப்சல் கான் கொன்ற தன் 64 மனைவியர் பற்றிய குறிப்பு இல்லை.

* 84ம் பக்கத்தில் இப்படி ஒரு பத்தி வருகிறது. “என்னதான் இந்து மதத்துக்காகப் போராடினாலும் சிவாஜி காலத்து செக்யூலரிஸமும் இப்போது போலத்தான் இருந்தது. ஒரு முஸ்லிம், ஒரு இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அவருக்கு நீதித்துறை தண்டனை தரக்கூடாது என்று சட்டமே போட்டிருந்தாராம்.”

மேலே உள்ள பத்தியில் உள்ள முதல் வரி சற்றேறக்குறைய உண்மையே. இதற்கான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் அதை இக்காலத்து போலி செக்யூலரிசத்துடன் ஒப்பிடமுடியாது. உண்மையான ஹிந்து ராஜ்ஜியம் என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது என்ற சிவாஜியின் நினைப்பே இதற்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். ஹிந்து வேல்யூ என்பதை சிவாஜி பல இடங்களில் மெய்ப்பிக்கிறார். குறிப்பாக போரில் கைது செய்யப்படும் இஸ்லாமியப் பெண்களை அவர் கண்ணியமாக நடத்திய விதம் தொடர்பாக ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவை இந்நூலிலும் தரப்பட்டுள்ளன. எனவே சிவாஜியின் நடத்தையை இக்காலத்து செக்யூலரிஸத்துடன் ஒப்பிடமுடியாது. அது உண்மையான செக்யூலரிஸம்.

இதைவிட முக்கியமானது அடுத்த வரிகள். ஒரு முஸ்லிம் இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அதற்கு தண்டனை தரக்கூடாது என்பது நிச்சயம் இக்கால போலி செக்யூலரிஸம்தான். ஆனால் இப்படி சிவாஜி சொன்னதற்கான ஆதாரம் இந்நூலில் தரப்படவில்லை. அதற்கான ஆதாரத்தை நூலாசிரியர் வழங்கியிருக்கவேண்டும். இது மிகத் தெளிவாக சட்டமாகச் சொல்லப்பட்டதா, அல்லது சிவாஜி வேறு யாருக்கேனும் எழுதிய கடிதத்தில் இருந்து ஊகித்து அறியப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளாமல் இதை மேலும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. இந்நூலின் மிகப்பெரிய சறுக்கல் என்று நான் நினைப்பது, இவ்வரிகளுக்கான ஆதாரங்கள் தரப்படாததையே.

இந்நூலின் இன்னொரு குறை – வரலாற்று சம்பவங்களை நாவல் பாணியில் உரையாடலாகச் சொல்வது. பெரும்பாலும் இது இந்நூலில் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் சில இடங்களில் இப்படி வருவது இப்புத்தகத்தின் நம்பகத்தன்மையையும் சீரியஸ்நெஸ்ஸையும் கடுமையாகக் குறைக்கிறது. அல்லது இப்படி பேசியதற்கான நேரடி தன்குறிப்பு ஆதாரங்கள் இருந்தால் அதைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் விவரணைகளாக மட்டுமே இவற்றைச் சொல்லவேண்டும். அதேபோல் தேவையற்ற உதாரணங்கள், அதிலும் குறிப்பாக நடிகர் நடிகைகள் அல்லது தற்கால நிகழ்வுகளோடு இணைவைத்துச் சொல்லப்படும் உதாரணங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் அல்லது மிகக் கவனமாகக் கையாளவேண்டும். இவை ஒன்றிரண்டு இடங்களில்தான் வருகின்றன என்றாலும் இதில் கவனம் கொள்வது அவசியமானது.

மற்றபடி வீர சிவாஜியைப் பற்றித் தெரிந்துகொள்ள உருப்படியான முக்கியமான நூலாகவே இதைக் கருதுகிறேன்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789351351726.html

இபுத்தகம் வாங்க: கூகிள் புக்ஸ்

Share

கெடை காடு

ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவல் படித்தேன். முன்பே வாங்கி வைத்திருந்த நாவல். அப்போது காவ்யா வெளியீடாக வந்தது. தற்போது டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது.

100-00-0002-258-9_b-01

நாவலின் சிறப்பு, கதை என்று எதுவுமில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு மாடுகளைப் பத்திக்கொண்டு போய் குள்ராட்டி என்னும் மலைக்காட்டுக்குச் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதனூடாகச் சொல்லப்படும் பல்வேறு நினைவுகள், சிறு கதைகள், நிகழ்வுகள் இதுதான் நாவல்.

இதனால் ஒட்டுமொத்த நாவலும் விவரணைகளாகவே இடம்பெறுகின்றன. காட்டையும் ஊரையும் அதன்வழியே கோனார்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஏக்நாத். இதில் இன்னும் சிறப்பு என்பது, நாவலின் விவரணைகளில் பயன்படுத்தப்படும் தமிழும் வார்த்தைகளும்தான். அப்படியே மண் மனம் கமழ, காட்டு மணம் கமழ மிகப் பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேச்சு வழக்கில் நெல்லை வட்டார வழக்கு சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. வட்டார வழக்கின் பயன்பாட்டை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி இருப்பது அழகு. இல்லையென்றால் முழுமையாக நாவலில் உட்புகமுடியாமல் போயிருக்கலாம். இவ்வழக்குக்கு ஈடாக கதை சொல்லியின் நடை அமர்க்களப்படுத்துகிறது.

நாவலின் காலம் 70கள் என்று கொள்ளுமாறு பல குறிப்புகள் உள்ளன. இன்று வாசிக்கும்போது காட்டில் வசிப்பது குறித்த ஏக்கத்தைக் கொண்டு வருவதில் இந்நாவல் வெற்றி பெறுகிறது என்றே சொல்லவெண்டும். (இந்த இடத்தில் தேவையில்லை என்றாலும் ஒன்று – நாவலில் ஓரிடத்தில் அனைவரும் சிவாஜி எம்ஜியார் பாடல்களைப் பாடும் இடம். அதுவும் எதோ ஒரு ஏக்கத்தைத் தந்த ஒன்றே.)

சில குறைகள் என்று பார்த்தால் – நாவல் வெறும் கதை சொல்லல் என்ற போக்குக்கு மேல் எழவே இல்லை. நாவலின் பின்னணியாக எவ்வித அரசியல் வரலாற்றுப் பின்னணியும் வரவில்லை. இப்படி நிச்சயம் வரத்தான் வேண்டுமா என்பது ஒரு பக்கம். இப்படி வராததால் நாவல் மிக மிக நேர்க்கோட்டுப் பாதையில் வெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஒன்றாகக் குறுகிப் போய்விடுகிறது. இன்னொரு குறை என்றால், வாசகர்களை ஊகிக்கவிடாமல் அதை நாவலாசிரியரே சொல்வது. இதனால் ஒரு வைரமுத்துத்தனம் நாவலில் வந்துவிடுகிறது. கெடைக்குப் போய்விட்டு நாள்கழித்து வரும் மகனுக்கு அம்மா கோழி அடித்துக் குழம்பு வைக்கிறாள் என்பதே போதுமானது. பல நாள் நல்ல சாப்பாடு சாப்பிடாதவனுக்கு எந்த ஒரு தாயும் செய்வது இதைத்தான் என்பது யாருக்கும் புரியும். தாயுள்ளம் இதை ஏற்கெனவே அறிந்திருந்தது என்று எழுதுவது ஒரு திணிப்பு. இதை வாசகனே புரிந்துகொள்ளும்போது வரும் ஒரு இன்பத்தை இவ்வரிகள் குலைக்கின்றன. இதைப் போன்ற பயன்பாடு நாவல் முழுக்க பல இடங்களில் வருகிறது. உச்சிமகாளியின் காதல் முயற்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கெடையை மேய்த்துக்கொண்டு காட்டைப் பற்றிய சித்திரங்களில் ஊர் பற்றிய நிகழ்வுகள் அதிகம் சொல்லப்படுவதும் ஒரு வகையில் சலிப்பே. கோனார்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த சித்திரம் நாவலில் உருவாகி வந்தாலும், மற்ற சாதிகளைப் பற்றிய விரிவான பதிவோ அவர்களுடனான உறவின் எல்லைகளோ சொல்லப்படவில்லை. எல்லா சாதியும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பது போன்ற சித்திரம் ஒன்று மட்டும் எப்படியோ மேலோட்டமாக உருவாகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாவல் நம்மைக் காட்டுக்குள் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய ஏக்கம் எல்லா நவீன மனங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை இந்நாவல் சரியாகப் பிடித்துவிடுகிறது. அந்தக் காட்டைப் பற்றிய விவரணைகளில் நாவலாசிரியர் சொல்லும் பல விஷயங்கள், எத்தனை தூரம் இவர் காட்டைப் படித்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது. காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதுவது அல்ல, காட்டிலேயே வாழ்ந்து எழுதுவது. அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியமான பதிவுதான்.

நாவலை வாங்க: http://www.nhm.in/shop/1000000022589.html

Share