Archive for ஃபேஸ் புக் குறிப்புகள்

நவம்பர் மழை அனுபவங்கள்

2015 மழையின் போது நான் கிழக்கில் வேலையில் இருந்தேன். நவம்பர் 23ம் தேதி என நினைக்கிறேன். மதியம் 3 மணிக்கெல்லாம் மழை வெளுத்துக் கட்டப் போவது எனக்குப் புரிந்துவிட்டது. பைக்கை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு ஆட்டோவில் போகலாம் என்று ஓலாவில் புக் செய்யப் பார்த்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்கவில்லை. நிச்சயம் இன்று தவிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டேன்.

பி.ஆர்.மகாதேவன் அலுவலகத்துக்கு ஒரு வேனில் வருவார். அவருடன் சேர்ந்து வேனில் ஏறிப் போனேன். டிடிகே சாலையிலும் எல்டாம்ஸ் சாலையிலும் வேன் மிதந்துதான் சென்றது. மாம்பலத்தில் இறங்கிக்கொண்டோம். மழை கொட்டிக் கொண்டிருந்தது. இருவரும் ஒரு டீக்கடை பக்கம் ஒதுங்கி நின்றோம். டீ சாப்பிட்டோம். வடை இருந்தது, ஆனால் சாப்பிடவில்லை. 🙂

நானும் மகாதேவனும் நடந்து எப்படியோ டிரைனுக்குள் ஏறினோம். ஆலந்தூர் வரை டிரைன் மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. நான் மவுண்ட்டில் இறங்கிக் கொண்டேன். இறங்கி வந்து, மவுண்ட்டிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலையைப் பார்த்தால், நீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஏன் டிரைன் மெதுவாக வந்தது என்பது புரிந்தது.

மவுண்ட்டில் இருந்து மடிப்பாக்கம் செல்ல ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை. நீருக்குள் துழாவி துழாவி நடந்தேன். மடிப்பாக்கம் செல்ல 5 கிலோமீட்டர்! இந்த மழையில் எப்படி நடக்கப் போகிறோம் என்ற அச்சம். அரை கிலோமீட்டர் நடக்கவும் ஒரு ஆட்டோ அதிசயமாக வந்தது. மடிப்பாக்கம் என்றதும் வருகிறேன் என்றார். ஆச்சரியமாகி, வேறு யாரும் அந்த ஆட்டோவை மடக்குவதற்குள் ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

ஒரு சின்ன பெண் ஓடி வர, நான் ஆட்டோவில் ஏறிவிடவும், வருத்தமாகி நகன்றார். ஆட்டோக்காரர் என்னிடம், அவங்களையும் ஏத்திக்கவா என்று கேட்டார். அவங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே என்றேன். அந்தப் பெண் ஆயிரம் நன்றி சொல்லி ஏறிக் கொண்டார். பாதி ரூபாய் நான் கொடுத்துடறேன் என்றார். அதெல்லாம் பரவாயில்லை என்றேன். ஆட்டோக்காரர் முதலில் என்னை இறக்கிவிட்டுவிட்டு, அங்கே இருந்து கீழ்க்கட்டளை செல்ல வேண்டும். செல்லும் வழியெங்கும் மழை நீர். சின்ன சின்ன தெருக்கள் வழியாக நுழைந்து, ஒருவழியாக என்னை வீட்டில் இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர்.

அப்பாடி, பெரிய நிம்மதி என்று பெருமூச்சு விடும்போது அந்தச் சின்ன பெண் என்னிடம், ‘தேங்க்ஸ் அங்கிள்’ என்றாள்.

பின்னர் டிசம்பர் 2 வந்தது.

Share

விநோதக் கனவுகள்

சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில் அதுவும் மறந்து போகும்.

இனி இப்படி வரும் கனவுகளைப் பற்றிக் குறித்து வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. உண்மையாக வரும் கனவுகளை மட்டுமே குறிக்கப் போகிறேன். என் ஆசைகளை, கற்பனைகளை அல்ல! அடுத்த இருபது வருடங்களில் என்ன என்ன கனவுகள் வருகின்றன என்று பார்க்கலாம்.

நேற்று ஒரு கனவு. (இதை எழுதும்போது அதுவும் சட்டென மறந்துவிட்டது. பக்கென்று ஆகிவிட்டது. ஒருவழியாக அதைக் கண்டடைந்தேன்.) என் அம்மாவின் புத்தகம் ஒன்றை நான் பதிப்பித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் வெளிவந்து ஒரு வார காலம் ஆகியும் அது என் கைக்கு வரவில்லை. என் அம்மாவுக்குக் கோபம். புத்தகம் வந்து ஒரு வாரம் ஆகியும் கூட அதை என் கண்ல கூட காமிக்க மாட்டியா என்கிறார். உடனே நான் எங்கள் சேல்ஸ் டீமுக்கு போன் செய்கிறேன். எங்கம்மா எழுதின புத்தகத்தைக் கொடுத்து விடுங்க என்கிறேன். இவ்வளவுதான் நினைவிருக்கிறது. இதிலிருக்கும் ஆச்சரியங்கள் என்ன? என் அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதவே திணறுவார். அவர் ஏன் புத்தகம் எழுத வேண்டும்? அம்மா இறந்து 5 வருடங்கள் ஓடி ஏன் இப்படி ஒரு கனவு? அதைவிட ஆச்சரியம், புத்தகத்தின் பெயர் கொடுங்கோளூர் என்று ஆரம்பிக்கிறது. இந்த வார்த்தை கூட என் அம்மாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் கனவு கண்டது நாந்தானே!

முந்தாநாள் ஒரு கனவு. ஒரு ஊர். நடுவில் தங்கக் கோபுரம். எந்தத் தெருவில் சென்றாலும் அந்தக் கோபுரத்தைப் பார்க்கலாம். அப்போது அந்தத் தெருவில் ஒரு வீட்டில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. அசந்து போய் கேட்கிறேன். இளையராஜாவின் இசையில் உருவான பாடல். பாடியது புஷ்பவனம் குப்புசாமி. இந்தப் பாடலைப் பற்றி ஏன் யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்று எரிச்சலாகிறேன். இப்போதுதான் உங்களிடம் சொல்கிறேன்!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கனவு. மறைந்து போன ஒருவர் என் கனவில் வந்து சோகமாகவும் பின்பு அதிர்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்தார். இதை மறக்க நினைக்கிறேன் என்பதால் மேற்கொண்டு எழுதப் போவதில்லை.

என் அம்மாவின் மறைவை அடுத்த ஆறு மாதங்களில் தினம் தினம் அம்மாவின் கனவுதான். அதில் ஒரு கனவு வித்தியாசமானது. நானும் அம்மாவும் கல்லுப்பட்டியில் இருக்கிறோம். அங்கே ஊர்ச்சாத்திரை. நான் சின்ன பையனாக இருக்கிறேன். சாத்திரையில் திரை கட்டிப் படம் போடுகிறார்கள். நான் படம் பார்த்தே ஆகவேண்டும் என்கிறேன். கோவிலுக்குப் போகணும் என்கிறார் அம்மா. திடீரென்று அங்கே சாப்பாடு போடுகிறார்கள். நான் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரைக்கு முன்னால் படம் பார்க்க உட்கார, எழுத்து ஓடுகிறது. படம் பெயர் மூவர்! (இப்படி ஒரு படம் வந்ததாகக் கூட தெரியவில்லை!) ஒன்னு படம் பாரு, இல்லைன்னா சாப்பிடப் போ என்று யாரோ சொல்ல, என் அம்மா கோபமாகி, சின்ன பையன் படம் பாத்துக்கிட்டே சாப்பிட்டா என்ன என்று அவர்களைத் திட்டிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு கோபமாக நடக்கிறார். கட் செய்தால், நெல்லையப்பர் கோவிலின் வளாகத்தில் நடந்து வருகிறோம். நான் அதே சின்னப் பையன். ஆனால் அம்மா அவர் சாகும் தறுவாயில் இருந்த தோற்றம். வெளிறிய உள்பாவாடையை நெஞ்சுக்கு மேல் ஏற்றிக்கட்டி நடக்க முடியாமல் நடக்கிறார். படம் பாத்துட்டு வந்துருக்கலாம் என்கிறேன் நான். அம்மா முச்சு வாங்க நடந்து வந்து, பிரகாரத்தில் இருக்கும் படிகளில் இறங்கச் சிரமப்பட்டு அங்கே இருக்கும் கைப்பிடிச் சறுக்கில் சறுக்கியபடி வருகிறார். நான் அம்மா என்னாச்சு உனக்கு என்று அலறுகிறேன். இக்கனவு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

இனி இது போன்ற கனவுகள் அடிக்கடி வரலாம். என்னைத் தூங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Share

மலையாளக் கன்னடத் தமிழ்த் திராவிடனின் குறிப்புகள்

மலையாளக் கன்னடத் தமிழ்த் திராவிடனின் குறிப்புகள்.

2001ல் துபாயில் முதன்முதலாகக் கால் வைத்தபோது அது கேரளா என்று தெரியாது. திருநெல்வேலியில் இருந்து வந்திருப்பதால் அவனுக்கு மலையாளம் கொஞ்சமாச்சும் தெரிந்திருக்கும் என்பதெல்லாம் அநியாயக் கற்பனை. பி.வி.ஜான் என்னை புனலூரில் இண்டர்வ்யூ செய்தபோது, புனலூரின் லேசான தூறலும் குளுகுளு காலநிலையும் என்னை பொறாமை கொள்ள வைத்தாலும், மலையாளம் அவசியம் என்று நினைக்க வைக்கவில்லை. தமிழே எல்லா இடங்களிலும் போதுமானதாக இருந்தது. ஆனால் துபாயில் மலையாளம்தான் தாய்மொழி!

மலையாளம் பேசக் கற்றுக்கொள் என்று உடன்பிறவா சேச்சியும் சந்தோஷ் என்னும் நண்பனும் சொல்லப் போக, திக்கித் திணறி நான் சொன்ன பதில், ‘அரி கழிச்சு.’ என்ன சாப்பிட்ட என்று கேட்ட கேள்விக்கு, ரைஸ் என்று சொல்வதாக நினைத்து நான் சொன்ன பதில் இது. அரை மணி நேரம் சிரித்துவிட்டு, ‘சோறு கழிச்சு’ என்று சொல்லித் தந்தார்கள்.

அடுத்த மூன்று மாதத்தில் முழுக்க முழுக்க மலையாளம்தான் பேச்சு. நான் துபாயில் வேலைக்குச் சேர்ந்த அன்று லீவில் போன பி.வி.ஜான், மூன்று மாதம் கழித்து வந்தபோது நான் பேசிய மலையாளத்தைப் பார்த்து மிரண்டு போனார். ‘திருநெல்வேலின்றதால மலையாளம் முன்னாடியே தெரிஞ்சிருக்கும்’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.

தொடர்ந்து நண்பர்களிடம் மலையாளத்தில் மட்டுமே பேசுவது, வாராவாரம் மலையாள (நல்ல!) திரைப்படங்கள் பார்ப்பது, தொலைக்காட்சியில் தொடர்கள் பார்ப்பது என மலையாளம் பச்சக்கென சீக்கிரமே தொற்றிக்கொண்டது.

ஒன்றுமே தெரியாத மொழியைக் கற்றுக்கொள்வதுதான் ஒரு வகையில் சுலபம். மலையாளத்தில் நிறைய ஆதித்தமிழ் மற்றும் தற்காலத் தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பதால் வரும் குழப்பம் பெருங்குழப்பம்.

தந்தார்கள், கொடுத்தார்கள் என்பதை நாம் வரைமுறை இல்லாமல் பயன்படுத்துகிறோம். நம்மைப் பொருத்தவரை இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். அவந்தான் தந்தான் என்றும் அவந்தான் கொடுத்தான் என்று எழுதுவதில் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மலையாளத்தில் தெளிவாகத் திருத்தினார்கள், எனிக்கு அவன் தந்து, ஞான் அவனுக்கு கொடுத்து. எனக்குத் தந்தார்கள், நான் பிறருக்குக் கொடுத்தேன். ஆனால் இதை அப்படியே பின்பற்றுவது அத்தனை சுலபமாக இருந்திருக்கவில்லை. பின்னர் பிடித்துக்கொண்டேன்.

எதோ ஒரு திரைப்படத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு நடிகர் (அசோகன் என நினைக்கிறேன்) ‘அவன் முங்கி’ என்று சொல்லிவிட்டு இவரும் நீரில் முங்கிவிடுவார். தியேட்டர் சிரித்தது. அவன் முங்கினதுக்கு ஏன் சிரிக்கணும் என்று யோசித்தபோது, பின்னர்தான் புரிந்தது, முங்கி என்பதற்கு இன்னொரு அர்த்தம், ஆள் தலைமறைவாகிவிட்டான் என. நாம் பயன்படுத்தும் முங்கி என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு நேரடிப் பொருள் இப்போது இல்லையென்றாலும், யோசித்துப் பார்த்தால் முங்கி என்ற வார்த்தையின் பொருள் அதுவாக இருப்பதிலும் ஒரு நியாய இருக்கவே செய்கிறது.

அதேபோல் இன்னொரு வார்த்தை சம்மந்தி. இன்றளவும் அதைச் சட்னி என்று என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. தமிழில் சம்பந்திக்குப் பேச்சுவழக்கில் சம்மந்தி என்றிருக்க, இந்த சம்மந்தி புத்திக்குள் புகுவேனா என்று அடம் பிடிக்கிறது.

தமிழில் இல்லாத வார்த்தைகள் வேற்று மொழிகளில் இருக்கும்போது அதைப் பிடித்துக்கொள்வது எளிதாக இருக்கிறது. தமிழில் இருந்து, அதுவும் வேறு பொருளில் இருந்துவிட்டால் குழப்பிவிட்டுவிடுகிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் சுதர்ஸன் மூலம் கன்னட மெகா சீரியலை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய பணி வந்தபோது, ரொம்ப யோசித்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு என்றால் சந்தோஷமாக ஒப்புக்கொண்டிருப்பேன். நான் வீட்டில் பேசும் கன்னடம் வேறு, நிஜக் கன்னடம் வேறு என்பது என் அப்போதைய மனப்பதிவு. சரி என்று ஒப்புக்கொண்டு வேலையை ஆரம்பித்தேன்.

முதல் பத்து எபிசோட்களைப் பார்த்தேன். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலத்தான் இருந்தது. அப்போது ஒரு முடிவெடுத்தேன். உட்டாலக்கடியாக நாமாக குன்ஸாகப் புரிந்துகொண்டு எழுதக்கூடாது என்பதை அடிப்படை விதியாக வைத்துக்கொண்டேன். ஒரு வார்த்தை புரியாவிட்டால் கூட அடுத்த வார்த்தைக்குப் போகமாட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டு, அந்த வார்த்தையைத் தேடிக் கண்டுபிடித்து, அர்த்தம் தெரிந்துகொண்டுதான் அடுத்த வசனத்தையே கேட்பேன்.

இணையம் பெரிய அளவில் கைக்கொடுத்தது. கூகிள் டிரான்ஸ்லேட் ஒரு வரப்பிரசாதம். கன்னடம் எழுதவோ படிக்கவோ தெரியாது. ஆனால் எனக்கு அர்த்தம் வேண்டும். அதை ஆங்கிலத்தில் எழுதிக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். நாம் ஒரே எழுத்தில் க, க2, க3, க4 என எல்லாவற்றையும் எழுதிப் பேசி விடுகிறோம். எனவே ஆங்கிலத்தில் சரியான கன்னட உச்சரிப்பை எழுதுவதில் பெரிய சிக்கல் இருந்தது. அப்போது கூகிள் டிரான்ஸ்லேட் கைக்கொடுத்தது. வசனத்தைப் பேசினால் அதுவே டைப் செய்து அதன் உத்தேசமான மொழிபெயர்ப்பைத் தந்தது. பின்னர் ஒவ்வொரு வார்த்தையாகவும் தெரிந்துகொள்வேன்.

இதில் இருந்த அடுத்த சவால், பேச்சு வழக்கு வார்த்தைகளின் பயன்பாடு. கம்பி நீட்டிட்டான் என்றால் நொடிக்குள் புரிந்து சிரித்துவிடுகிறோம். ஆனால் தமிழ் தெரியாத ஒருவர் இதற்கு அர்த்தத்தை கூகிள் டிரான்ஸ்லேட்டில் தேடினால், கம்பியை நீட்டிவிட்டான் என்றே பொருள் சொல்லும். இதைத் தவிர்க்க உதவியது, கூகிள் தேடல். விதவிதமாக, ரகரகமாக கன்னடப் பேச்சு வழக்கை இணையம் முழுக்க கங்கிலீஷில் கொட்டி வைத்திருக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைப் பார்த்து வார்த்தை வளத்தைப் பெருக்கிக்கொள்வேன்.

வீட்டில் பேசும் கன்னடமும் நிஜக் கன்னடமும் ஒன்றில்லை என்றாலும், முக்கியமான ப்ளஸ் பாய்ண்ட் ஒன்று இருந்தது எனக்கு. அது இப்போதும் ஆச்சரியமான ஒன்றே. கன்னட வார்த்தைகளின் வேர் பெருமளவு சிதையாமல் அப்படியே இருப்பதால், கன்னடத்தின் வொக்காபுலரி எனக்கு மிக எளிதாகக் கிடைத்துவிட்டிருந்தது. மலையாளத்தில் நான் இதைப் பேசிப் பேசித்தான் கற்றேன்.

கூடவே, பல வார்த்தைகளை எப்படி வீட்டில் தவறாகப் பேசுகிறோம் என்பதும் புரிந்தது.

எங்கள் குடும்பத்தில் கணவனை மனைவி பாவா என்று அழைப்பது வழக்கம். உண்மையில் இது தெலுங்கர்களின் வழக்கம் (என்று நினைக்கிறேன்.) எங்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் இவ்வழக்கம் கிடையாது. றி என்று அழைப்பதே முறை. தமிழில் ஏங்க என்று சொல்வதற்கு இணையானது. அக்காவின் கணவனை பாவா என்று அழைப்பதும், அத்தைப் பையனை பாவா என்று அழைப்பதும்தான் முறை. சொந்தத்துக்குள்ளேயே திருமணம் என்ற ரீதியில், இதை கணவனுக்கும் பாவா என்று நீட்டிவிட்டார்கள். எனவே முதலில் இதைப் புரிந்துகொள்ளவேண்டி இருந்தது. இல்லையென்றால், அக்காவின் கணவனை இவள் கணவன் என்று நினைத்து, இல்லாத கதையை நாமே புரிந்துகொள்ளும் சிக்கல் இருந்தது.

அடுத்த வார்த்தை அவ்வா! அய்யகோ. இது தந்த கொடுமை ஒன்றிரண்டு அல்ல. நாங்கள் அவ்வா என்ற வார்த்தையைப் பாட்டிக்குப் பயன்படுத்துகிறோம். உண்மையில் அவ்வா என்றால் அம்மா என்றே பொருள். சில வீட்டில் அப்பாவை அண்ணா என்றழைப்பார்கள். அப்படி அல்ல, நிஜமாகவே அவ்வா என்றால், அன்பாக அம்மா என்று பொதுவாக அழைப்பதாகவே அர்த்தம். அஜ்ஜி என்றால்தான் பாட்டி. அஜ்ஜி என்றால் பாட்டி என்று முன்பே தெரியும். ஆனால் அவ்வா என்றால் அம்மா என்று தெரிந்துகொள்வதற்குள் தலை சுற்றிவிட்டிருந்தது.

அடுத்த வார்த்தை முந்தெ. தமிழில் முன்னால் என்றால், மிக முன்னால் அதாவது கடந்தகாலம் என்றே பொருள். நாங்கள் கன்னடத்தில் இந்த வார்த்தையையே பயன்படுத்திப் பேசப் பழகிக்கொண்டு விட்டோம். ஆனால் கன்னடத்தில் முந்தே என்றால் எதிர்காலம். முந்தின நில்தானா என்றால், அடுத்த நிறுத்தம். இப்போது எழுதும்போது கூட இது எனக்குக் குழப்பத்தைத் தருகிறது. அந்த அளவுக்கு முந்தெ என்பது எங்களுக்குள் முன்னால் என்ற பொருளில் ஊறிவிட்டிருக்கிறது.

இன்னொரு வார்த்தை தாழ்மை! தமிழில் தாழ்மை என்றால் பணிவு என்று பொருள். ஆனால் கன்னடத்தில் பொறுமை! தாழ்மை என்றொரு தமிழ்வார்த்தை இல்லாமல் இருந்திருந்தால் கூட, பொறுமை என்ற பொருள் தரும் கன்னட வார்த்தையை எளிதாக நினைவு வைத்திருந்திருக்க முடியும். ஆனால் இப்போதே ஒவ்வொரு தடவையும் கன்னடத்தில், ‘தாழ்மெ தாழ்மெ’ என்று வரும்போது, மனதுக்குள் ‘பணிவு பணிவு’ என்றும், அறிவில் ‘பொறுமை பொறுமை’ என்றுமே வருகிறது.

இன்னொரு வார்த்தை அக்கி. இதில் என்ன பிரச்சினை? அரிசிதானே. கன்னடத்தில் அ, ஹ அடிக்கடி மாறிக்கொள்ளும். பேச்சு வழக்கில். அப்ப, ஹப்ப (பண்டிகை) இப்படி. அப்படியானால் அக்கி என்றால் அரிசி, ஆனால் ஹக்கி என்றால் பறவை. இதில்லாமல், நாம் ஆத்தா (அம்மன்) என்று சொல்லும் சொல்லுக்கு இணையாகவும் அக்கி உத்தர கன்னடத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதைப் புரிந்துகொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இன்னொரு வார்த்தை, கை கொட்டு பிட்டா. அதாவது கை விட்டுவிட்டான் என்று பொருள். நேரடிப் பொருளாக, கை கொடுத்தான் என்றே புரிந்துகொள்ளத் தோன்றும். சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், பொருளே மாறிவிடும். கொஞ்சம் யோசித்தால், நம்மைக் குழப்பும் இப்படியான நிறைய வார்த்தைகள் சிக்கும்.

இன்னொரு வார்த்தை, பிரச்சினை. தமிழில் பிரச்சினை தெரியும். கன்னடத்தில் ப்ரெச்னே என்றால் கேள்வி! இதில் இன்னுமொரு உட்குழப்பமும் உண்டு. கன்னடத்தில் சம்சய என்றால் பிரச்சினை என்று பொருள். ஆனால் தமிழில் சம்சயம் என்றால் சந்தேகம் என்றொரு பொருளும் உண்டு!

இன்னொரு வார்த்தை, அனுமானம். தமிழில் அனுமானம் என்பதற்கு எப்படியோ ‘யூகம்’ என்ற பொருள் வந்துவிட்டது. கன்னடத்தில் அனுமானா என்றால் சந்தேகம். முன்பு தமிழிலும் அனுமானம் என்கிற வார்த்தை சந்தேகம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பல நூல்களில் பார்த்தேன்!

இன்னும் இன்னும் நிறைய கன்னட வார்த்தைகள் தெரிந்துகொள்ள, யூ ட்யூப்பில் சகட்டுமேனிக்கு கலந்துரையாடல்களைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. தேடித் தேடிக் கன்னடக் கெட்ட வார்த்தைகளையும் தெரிந்துகொண்டேன். அதனால்தான், நிகழ்காலக் கன்னடப் படம் ஒன்றைப் பார்த்தால் இப்போதெல்லாம் 99% வார்த்தைகள் புரிகின்றன. மலையாளம் போலவே.

கன்னட சீரியலில் திடீரென உத்தர கன்னடம் கேரக்டர் ஒன்று வந்தது. அதாவது நம் திருநெல்வேலி, மதுரைக்கு இருப்பது போன்ற ஒரு வட்டார வழக்கு. அசரடிக்கும் வழக்கு. சட்டெனப் புரியாது. நிறைய வார்த்தைகள் புதியதாகப் புழங்கும். இதற்காகவே, யூ ட்யூப்பில் தொடர்ந்து உத்தர கன்னட வார்த்தைகள் புழங்கும் கலந்துரையாடல்களைப் பார்த்தேன். உத்தர கன்னட வார்த்தைகளைப் பேசும் படங்களைப் பார்த்தேன். ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட எல்லா வார்த்தைகளும் புரிய ஆரம்பித்துவிட்டன.

எப்போது பிரச்சினை வருகிறது? செய்தி கேட்கும்போது அல்லது அரசர் காலத் திரைப்படங்கள் பார்க்கும்போது. இதையும் தொடர்ச்சியாக ஒரு மாதம் பார்த்தால், 90% வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு விடுவேன். தேவை வரவில்லை என்பதால் செய்யவில்லை.

கன்னடப் புத்தகங்களை ஒலியாகக் கேட்டுப் பார்த்தால், 50%தான் புரிகிறது. எனவே அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டேன்.

சீரியல்களில் உள்ள (நமக்கு!) ப்ளஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள்ளேதான் சுற்றிச் சுற்றி வருவார்கள். தமிழ் உட்பட. ஒரு குறிப்பிட்ட ஜானரில் மட்டும் 5% வார்த்தைகள் புதியதாக வரலாம். மற்றபடி எல்லாம் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும். எனவே கொஞ்சம் முயற்சி எடுத்துவிட்டால், பின்னர் அது எப்போதோ வங்கியில் போட்டுவைத்த வைப்பு நிதியைப் போல வட்டியைத் தந்துகொண்டே இருக்கும். ‘நீதானா எந்தன் பொன்வசந்தம்’ சீரியலை எழுதும்போது நான் எடுத்த முடிவு, அதாவது கன்னட சீரியலான ‘ஜொத ஜொதயலி’-யில் வரும் எந்த ஒரு கன்னட வார்த்தையும் புரிந்துகொள்ளாமல் போகக்கூடாது என்ற அந்த முடிவு, இன்று வரை உதவுகிறது.

எப்படித் தேடியும் அர்த்தம் கிடைக்காத வார்த்தைகளுக்கு, பெங்களூருவில் இருக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டு எனக்குச் சொல்லித் தந்த, டாக்டர் பிரகாஷ், உமா பிரகாஷ், ராகவேந்திரன் போன்ற நண்பர்களை அன்போடு நினைத்துக்கொள்கிறேன்.

இங்கே இன்னொன்றையும் சொல்லவேண்டும். தொலைக்காட்சி மெகா தொடர்களின் கலந்துரையாடலின்போது, தெலுங்கில் இருந்து தமிழுக்குக் கதை எழுதும் நண்பர் கேட்டார், ‘கன்னடம் தெரிஞ்சா கன்னடத்துல இருந்து தமிழ்ல எழுதறீங்க? இதென்ன புதுப்பழக்கம்? எனக்கெல்லாம் தெலுங்குல ஒரு வார்த்தை கூடத் தெரியாது!’ 🙂 சரியாக ஒரு வருடம் முன்பு, ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது, ‘வங்காள மொழியில் இருந்து தமிழுக்குச் செய்யுங்கள்’ என. நடுக்கம் பரவ, ‘ஒரு வார்த்தை கூடத் தெரியாதே சார்’ என்றேன். ‘க்ரியேட்டிவிட்டி முக்கியம். யூ கேன் மேனேஜ்’ என்றார்கள். 25 எபிசோட்கள் பார்த்தேன். டிவியை ம்யூட்டில் வைத்துப் பார்ப்பதும், சத்தத்தோடு பார்ப்பதும் ஒன்றுதான் என்ற அளவுக்கே எனக்குப் புரிந்தது. ஆனால் கதையைப் புரிந்துகொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ‘தெலுங்கு எனக்கு தெரியாது’ என்று சொன்ன நண்பரை நினைத்துக்கொண்டேன். நல்லவேளை, வங்கமொழி தப்பித்தது, அந்த ப்ராஜெக்ட் க்ளிக் ஆகவில்லை.

அதற்கு மறுநாளே இன்னொரு அழைப்பு, ‘தெலுங்கில் இருந்து தமிழுக்கு’ என்றார்கள். ‘வங்க மொழியையே தெறிக்க விட்டாச்சு, தெலுங்குலு என்னலு இருக்குலு’ என்று 25 எபிசோட்கள் பார்த்தேன். ஆச்சரியமான ஆச்சரியம், 70% புரிந்தது. இந்த சீரியல் கிடைத்தால், இன்னும் 3 மாதத்தில் தெலுங்கை 90% புரிந்துகொள்ள முயற்சி எடுக்கவேண்டும், இனி என் தாய்மொழி தெலுங்கு என்று நினைத்துக்கொண்டபோது, தெலுங்கு செய்த புண்ணியம், அந்த ப்ராஜெக்ட்டும் டிராப் ஆனது.

கொரியன் திரைப்படத்தைத் தமிழில் எழுதும் வாய்ப்பு வந்தால் உடனே எனக்குச் சொல்லுங்கள், ஏனென்றால், கொரிய மொழி என்று தவறில்லாமல் தமிழில் கூட எனக்கு எழுத வராது.

Share

கோவிட் 19 தடுப்பூசி

தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பயப்படுகிறார்கள். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேரடியாக, மறைமுகமாக அதன் மீது நம்பிக்கையின்மையைப் பரப்பிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. அறிவியலை விட இயற்கையே சுத்தம் என்றொரு தியரி இங்கு உண்டு. அதிலும் சில குழுக்கள் தமிழ்நாட்டில் இதையே முழு மூச்சாகச் சொல்கின்றன. இரண்டு வருடம் முன்பு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று காரணங்களைப் பட்டியலிட்டார். தடுப்பூசி என்கிற மருந்தின் உலகளாவிய லாபி, அதன் பின்பு வந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதால் உலகம் முழுக்க அத்தடுப்பூசி நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் பணத்தின் மதிப்பு என என்னவெல்லாமோ பேசினார். கேட்கும் யாரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பின்பு அது அவரது மனத்துக்குள்ளே அவரறியாத ஒரு இடத்தில் இருந்துகொள்ளும். இதைப் போல கொரோனா தடுப்பூசி வரும்போது, அப்போதும் சில குரல்கள் அதைப் போடாதே என்று சொல்லும்போது, விவேக் போன்ற ஒரு நடிகர் அதிர்ச்சியாக மரணமடையும்போது, மனதுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் நினைவிலி எண்ணம் தான் மட்டுமே சரி என்னும் ஆங்காரத்துடன் எழுந்து வரும். தமிழ்நாட்டில் இப்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் அரசியல் தேவைகளுக்காக தடுப்பூசியைப் பழித்தவர்கள் இன்று மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

முதலில் இப்படி இருக்கும், பின்னர் போக போகப் போட்டுக்கொண்டு விடுவார்கள், இது சின்ன பிரச்சினை என்றே நான் நினைத்தேன். ஆனால் இப்போதும் நிறைய பேருக்குத் தயக்கம் உள்ளது. மக்கள் மனதில் இருக்கும் முட்டாள்தனங்களைக் கீழே உள்ளபடி தொகுக்கலாம்.

– தடுப்பூசியால் பலனே கிடையாது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரத்தானே செய்கிறது.

– தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குத்தான் கொரானா வந்திருக்கிறது.

– தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மட்டும்தான் ஒருவர் இறந்திருக்கிறார். என் மாமாவின் சித்தியின் ஒன்றுவிட்ட சகோதரியின் சம்பந்திக்கு இப்படி ஆனது.

– தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு வரும்.

– தடுப்பூசி என்று உடலுக்குள் செலுத்தப்படுவது கொரோனா கிருமிதான். எனவே கொரோனா வந்தது போலவே உடல் பாதிக்கப்படும்.

– தடுப்பூசி என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு லாபத்துக்காக செய்யப்படும் பிரசாரம்.

– தடுப்பூசி போட்ட பின்பு குடித்தால் மாரடைப்பு வரும், எனவே போட வேண்டாம்.

– யார் வந்து கேட்டாலும் தடுப்பூசி போட்டாகிவிட்டது என்று சொல்லிவிடலாம், யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படிப் பல காரணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

தடுப்பூசி போட்ட பின்பு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தடுப்பூசி போடாமல் இறந்தவர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? இன்றைய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. எப்படியும் உயிர் போகப் போகிறது என்று நினைத்து தடுப்பூசியை கைவிடுவதற்குப் பதிலாக, அதே பயத்துடனாவது போட்டுத் தொலையுங்கள். உங்களைத் தடுப்பூசி காப்பாற்றும்.

போலியோ சொட்டு போட்டதும் குழந்தை மரணம், ஒரு தடுப்பூசி போட்டதும் சிறுவன் மரணம் என்ற கதைகள் எல்லாம் நம் நாட்டில்தான் சாத்தியம். என் மகளுக்கு 6 வயதாக இருந்தபோது ஒரு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் இதே பிரசாரம். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவள் பள்ளிக்குச் சென்று தடுப்பூசி போடப் போனேன். சுத்தமாகக் கூட்டமே இல்லை. அரசு இலவசமாகத் தந்த தடுப்பூசி. இந்த பிரசாரத்தால் பள்ளி ஆசிரியர்கள் பயந்து போய், அனைவரிடமும் என் முழு சம்மதத்துடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறேன் என்று ஒரு தாளில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி இருந்தார்கள். எந்த நாளில் தடுப்பூசி போடப்பட்டதோ அந்த நாளில் 70% குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. அத்தனை பெரிய பிரசாரம் நடந்தது. நான் என் மகளுக்குப் போட்டுக்கொண்டேன். அன்று மீதி இருந்த 30% குழந்தைகளுக்கும் போடப்பட்டது. ஒரு குழந்தைக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த லட்சணத்தில்தான் நாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்று அரசின் மீது பழியைப் போடுகிறோம், கொஞ்சம் கூட அறிவோ வெட்கமோ இல்லாமல்.

ஒருவகையில் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. நேரடியாக, மறைமுகமாக இந்தத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை இல்லை என்றே அவர்கள் பேசினார்கள். இன்று வந்து யோக்கியன் போல, அப்படியெல்லாம் இல்லை என்று பூசி மெழுகினாலும், இதுவே உண்மை. ஒரு நல்ல விஷயம், இன்று நிலைமையைப் புரிந்துகொண்டு, தடுப்பூசியின் தேவையைப் பேசத் துவங்கி இருக்கிறார்கள்.

அரசு என்னவெல்லாம் செய்யலாம்.

– அனைத்து நடிகர் நடிகைகளிடம் 30 நொடி வீடியோ பைட் வாங்கி அதை அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பச் செய்யலாம். (முக்கியமாக இந்த நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தவேண்டும். பாதி பிரச்சினை இவர்களால்தான்!)

– மதக்குருமார்கள் அனைவரிடமும் இதேபோல் பைட் வாங்கி ஒளிபரப்ப வேண்டும்.

– அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இதேபோல் வீடியோ வாங்கி அதை அனைத்து தொலைக்காட்சிகளில் சமூக ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டும்.

– கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட்ட அனைத்து பிரபலங்களிடமும் வீடியோ பைட் வாங்கி ஒளிபரப்பவேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தமிழ்நாடு இத்தனை பின் தங்கி இருப்பது நல்லதல்ல. அபாயமானது.

Share

அப்பாவும் வாக்மேனும்

இன்று ஹனுமன் ஜெயந்தி. காலை எழுந்ததும் எதோ நினைவுக்கு வர யூ ட்யூபில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான் பாடல்களைக் கேட்கலாம் என்று கேட்க ஆரம்பித்தேன். அப்பாவின் நினைவு வந்துவிட்டது.

ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் பாலமுரளி கிருஷ்ணா பாடிய கேசட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். இன்னும் அந்த கேசட்டின் முகப்பு அட்டை கூட நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவுக்கு வாக்மேனில் பாட்டு கேட்பது என்றால் அத்தனை இஷ்டம். சங்கராபரணம் திரைப்படம் போன்று பாடல்கள் உலகத்திலேயே கிடையாது என்பது அவரது தீர்மானமான அபிப்பிராயம். இப்படிச் சில எண்ணங்கள் அவருக்கு உண்டு. இரு கோடுகள் மட்டுமே உலகில் மிகச் சிறந்த படம், எந்த ஒரு படம் அல்லது எந்த ஒரு மெகா சீரியல் அல்லது எதிலாக இருந்தாலும் சரி, அதில் வரும் நீதிமன்ற வழக்குக் காட்சிகள் அனைத்துமே மிகச் சிறப்பானவையாகவே இருக்கமுடியும் என்று உறுதியாக இருந்தார். விதி படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகளை நூறாவது முறை கேட்கும்போது கூட முதல்முறை அடையப் போகும் அதிர்ச்சியைவிட அதிக அதிர்ச்சியுடன் கேட்பார். ஆம், விதி, பாகப் பிரிவினை, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்றவை எங்கள் வீட்டில் சக்கை போடு போட்ட கேசட்டுகள். மொத்தத்தில் அப்பா மிக எளிமையான வெள்ளந்தியான மனிதர். இன்றைய உலகின் மிகக் கறாரான வரையறையின்படி சொல்வதென்றால் ஏமாளி.

23ம் புலிகேசி படத்தையும் அப்படி புகழ்ந்து தள்ளினார். அப்பாவுக்கு ஒன்று பிடித்துவிட்டால் அவ்வளவுதான்! அம்மா ‘அதிவிஷ்ட்டு அனாவிஷ்ட்டு’ என்பாள். 
அப்போதெல்லாம் சிடி வந்துவிட்டது என்பதால் அந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்றார். ஆனால் எனக்கோ அதை ஒரு படமாகப் பார்க்கப் பிடிக்கவில்லை, அதேபோல் காட்சிகளாகப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்டது. இருந்தாலும் பரவாயில்லை என்று, அவர் பல தடவை கேட்டுக்கொண்ட பிறகு, 23ம் புலிகேசி சிடி வாங்கினேன். வழக்கம்போல திருட்டு சிடிதான்! பீச் ஸ்டேஷனுக்குப் போன சமயத்தில் அப்பாவின் நினைவு வந்து வாங்கிக்கொண்டு வந்து தந்திருந்தேன். ஆர்வமாக அதைப் பார்க்கத் துவங்கினார். குடும்பத்தில் அனைவரும் பார்த்தோம். அப்போதெல்லாம் விசிடி என்பதால் இரண்டு சிடி இருக்கும். முதல் சிடி நன்றாகவே ஓடியது. இரண்டாவது சிடி ஓடவில்லை! அதைப் போய் மாற்றிக்கொண்டு வரவும் எனக்கு முடியவில்லை. நான் அப்போது ராமாபுரத்தில் இருந்தேன். கடைசி வரை பார்க்காத இரண்டாவது சிடியையே சொல்லிக்கொண்டிருந்தார்!

ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் என் அப்பாவுக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஹனுமான் பாடல்களைக் கொண்டு வந்து தரவும், அப்பா அதை வாக்மேனில் கேட்டார். வாக்மேனில் கேட்பதற்கென்றே பாடல்கள் இருக்கின்றன, இதையெல்லாம் கேட்டால் வாக்மேனுக்கே அசிங்கம் என்றெல்லாம் சொல்வேன். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டைப் போட்டுக்கொண்டு தலையை தலையை ஆட்டிக்கொண்டிருப்பார். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள்கூட தலையை அப்படி ஆட்டமாட்டார்கள். அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் சுத்தமாகத் தெரியாது. ஆனால் எப்படியோ தலையை ஆட்டுவதும் தாளம் போடுவதும் மட்டும் பிடிபட்டுவிட்டது!

வீட்டில் அப்போது சோனி டேப் ரிக்கார்டர் வாங்கினோம். திருநெல்வேலியில் இருந்த சமயம். டேக்-கில் பணி நிரந்தரம் ஆகி வந்த முதல் மாதச் சம்பளத்தில் வாங்கினேன். 3,200 ரூபாய். அதில் முதலில் போட்ட கேசட், சங்கரா பரணம். அடுத்து போட்டது இந்த ஹனுமான் பாடல்களைத்தான். காலையில் அடிக்கடி இந்த கேசட்டைப் போடுவோம். முதலில் பாடல்கள் அத்தனை வசீகரமாக இல்லாதது போலத்தான் தோன்றியது. என்ன பாட்டு இதெல்லாம் என்றுதான் கேட்கத் தொடங்கினேன். பல தடவை கேட்டு கேட்டு பாடல்கள் மனதில் தங்கின. அது எனக்குப் பிடித்துவிட்டது என்பதேகூட மிகப் பின்னால்தான் தெரிந்தது. அப்பா போய், பல ஆண்டுகளுக்குப் பிறகு எதோ ஒரு கோவிலில் இந்த கேசட்டில் உள்ள பாடல் ஒன்றைக் கேட்டபோது சட்டென அடுத்தடுத்த வரிகள் ஞாபகம் வந்து, ஒரு பக்தி வந்து, இந்தப் பாடல்கள் இத்தனை பிடிக்குமா என்று ஆச்சரியமாகிவிட்டது. அதேபோலவே ஊத்துக்காடு பாடல்களும். குறிப்பாக யேசுதாஸ் பாடியவை. இப்போது பித்துக்குளி முருகதாஸ் பாடியதைக் கேட்டு, யேசுதாஸ் பாடியதைவிட அதிகம் பிடித்துவிட்டாலும், யேசுதாஸ் பாடல்களைக் கேட்கும்போது பழைய நினைவுகள் வந்துவிடுகின்றன. அப்படி வெறித்தனமாகக் கேட்டிருக்கிறேன். இப்படி இன்னும் மிகச் சிறிய வயதின் நினைவைத் தரும் மற்றுமொரு பாடல், பித்துக்குளி முருகதாசின் ‘பச்சை மலை வாகனனே’ பாடல். மார்கழி மாதத்தில் திருநெல்வேலி டவுனில் பெருமாள் கோவில் தெருவில் ஐந்து வயதில் சுற்றிக்கொண்டிருக்க வைத்துவிடும்.

இன்று ஹனுமன் ஜெயந்திக்காக பாலமுரளி கிருஷ்ணாவின் பாடலைக் கேட்கவும் இந்த நினைவுகள் எல்லாம் வந்துவிட்டன. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பாக இந்தப் பாடல்களைக் கேட்கிறேன். யூ ட்யூப் என்கிற ஒன்றுக்கு நாம் எத்தனையோ கடமைப்பட்டிருக்கிறோம். இந்தப் பாடல் கேசட்டை முன்பு வாங்கிக் கொடுத்த ஜெயக்குமார் ஸ்ரீனிவாசனுக்கும்.

Share

ரஜினி கமல் அரசியல்

ரஜினி கட்சி ஆரம்பித்தபோது இருந்த நம்பிக்கையும் ஆர்வமும் எனக்கு பின்னர் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. சில சமயம் மீண்டும் ஒரு ஆர்வம் வரும். ரஜினி எதாவது என் கருத்துகளுக்கு எதிராக சொல்வார். அதுவும் அவர் இத்தனை நாள் தன்னை எப்படி முன்னிறுத்திக்கொண்டாரோ அதிலிருந்து முற்றிலும் விலகிப் போவதான கருத்தாகவும் இருக்கும். இப்போது அவர், தேவைப்பட்டால் கமலுடன் இணைந்து செயலாற்றுவேன் என்று சொல்லி இருக்கிறார். கொடுமை. (நான் வீடியோவைப் பார்க்கவில்லை, தமிழ் தி ஹிந்துவில் வந்திருக்கும் செய்தியைப் பார்த்தே சொல்கிறேன்.) ரஜினி அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதே என் கணிப்பு. ஆனால் இப்படி கமலுடன் எல்லாம் இணைந்து வந்தால் உள்ள ஓட்டும் போய்விடும். அதுமட்டுமல்ல. கமலின் அரசியலை ஏற்றுக்கொள்வது ரஜினி தனக்கும் தன் ரசிகர்களுக்கும் அவரை நம்பியவர்களுக்கும் செய்யும் துரோகம். நட்பு என்ற ஒரு வஸ்து எப்படி வேண்டுமானால் இருந்துத் தொலைக்கட்டும். ஆனால் இதெல்லாம் ஓவர். ஓவர் என்பதோடு, அவர் சொல்லி வந்த கருத்துகளுக்கும் நம்பிக்கைக்கும் செய்யும் துரோகம். தொடர்ந்து தவறுகளை மட்டுமே செய்வதில் ரஜினி ஏன் இப்படி மும்முரமாக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கமலுடன் கூட்டணி என்றால், ‘மாநிலத்தில் ரஜினி மத்தியில் மோடி’ என்று, ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன நாளில் நான் சொன்ன கருத்தை பின் வாங்கிக்கொள்கிறேன். 🙂 ரஜினி மூலம் எப்படியோ ஐந்து வருடங்களுக்குப் பிறகாவது ஹிந்து உணர்வுடன் மக்கள் வாக்களித்து பாஜக 2ம் இடத்துக்காவது வரும் என்ற, மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கும் ஆசையும் இந்த அறிவிப்போடு நாசமாகப் போவதை நினைத்தால் வேதனையாகவே இருக்கிறது. எப்படியோ, நாரோ சேர்ந்த பூவும் நாறும் என்பதை ரஜினிக்குச் சொல்லுங்கள்.

பிகு: தரக்குறைவான விமர்சனங்கள் நீக்கப்படும்.

Share

நம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்

இது அப்துல்லாவின் பதிவு. இதைப் படித்துவிடுங்கள். முக நூலில் இல்லாதவர்களுக்காகவும் சேமிப்புக்காகவும் அப்துல்லா எழுதியதை இங்கே பதிகிறேன்.

ஏதாவது நல்ல நாள், கெட்டநாள் வந்துட்டா போதும். உடனே இந்த ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க எதுனா “நம்மில் எத்னி பேருக்கு தெரியும்” டைப் கதையை தூக்கிகிட்டு கிளம்பிருவானுங்க. இன்றைக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்சியின் தந்தை எனப்படும் டாக்டர்.விக்ரம் சாராபாயின் பிறந்தநாள். காலையில் எனது ஸ்கூல் வாட்ஸ் அப் குரூப்பில் கீழ் காணும் செய்தி வந்தது!

————————————-+———————-+—————

திமுக விட்ட ராக்கெட்

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும். கிழக்கு கடற்கரையில் இருந்து ஏவப்படும் ராக்கெட் எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.

பின் ஏன் இஸ்ரோ ஆந்திராவில் அமைக்கப்பட்டது? இது தமிழ் நாட்டிற்கு எதிராக சதியா?

விக்ரம் சாராபாய் மேல் சொன்ன காரணங்களுக்காக கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். மப்பில் இருந்த அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட தண்ணி பார்ட்டி அமைச்சர் மதியழகன்.

கண்டு கொள்ளுவோம் கழகங்களை

இன்று விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்த நாள்.

————————————–+———————+—————-

இதுல காமெடி என்னன்னா ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது 1971 இல் செப்டம்பர் மாதம்.

ஆனால் அறிஞர் அண்ணாவோ 1969 இலேயே இறந்து போனார். செத்து போன அண்ணாவை விக்ரம் சாராபாய் போயி சொர்கத்துல பார்க்க நினைச்சாரோ என்னவோ!!!

இதுல இன்னொரு காமெடி என்னன்னா.. கதை சொல்லப்பட்ட அன்றைய காலகட்டத்தில் மதியழகன் சபாநாயகராக இருந்தார். அமைச்சராக அல்ல! எந்தத் திட்டத்திற்கும் எவரும் சபாநாயகரைச் சந்திக்கவே மாட்டார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பி.ஜே.பி பாய்ஸ். அடுத்தவாட்டி கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாங்க 🙂

#நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும்?

என்னவோ காலையில் கண்ணில் படவும் இது பொய்யாகத்தான் இருக்கவேண்டும் என்ற முடிவுடனேயே அப்துல்லா இணையத்தில் தேடி இருக்கவேண்டும். 1971 என்ற வருடம் கண்ணில் பட்டதும், அண்ணாதுரை இறந்தது 1969 என்பது இவருக்கு மனப்பாடமாகத் தெரியும் என்பதாலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

பொதுவாக அப்துல்லா இப்படி எழுதுபவர் அல்ல. நல்லவர். நண்பர். ஆனாலும் சரியான தகவலைச் சொல்லவேண்டும் என்பதற்காக இப்பதிவு.

அவர் ஷேர் செய்திருக்கும் கட்டுரை வலம் இதழில் வெளியானது.

ஆமருவி தேவநாதன் எதையும் வம்படியாகப் பரப்புபவர் அல்ல. அதோடு வலம் இதழ் ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதாது. முடிந்த வரை இதில் கவனம் எடுத்தே செய்கிறோம். அப்படியும் சில பிழைகள் வருவதுண்டு என்றாலும், இதைப் போன்ற , இல்லாத ஒன்றை கட்டி எழுப்பும் வேலைகள் வரவே வராது.

இன்று மதியமே இதைப் போட நினைத்தேன். சரியான ஆதாரத்தோடு போடுவோம் என்பதற்காக இப்போது.

இவர் சொல்லி இருக்கும் கருத்து, நம்பி நாராயணன் எழுதிய நூலில் உள்ளது. நூலின் பெயர்: அவர் எழுதப் புகுந்தது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி. எனவே இந்த சின்ன விஷயத்தில் அவர் பொய் சொல்ல முகாந்திரமே இல்லை. அப்படியே அவர் சொன்னதில் ஏதேனும் தகவல் பிழைகள் இருப்பதாக திமுக நிரூபித்தால், அது தகவல் பிழை மட்டுமே ஒழிய, ஆர் எஸ் எஸ் புரட்டு அல்ல! நம்பி நாராயண் புத்தகத்தில் உள்ள அந்தப் பக்கங்களை ஸ்க்ரீன் ஷாட்டாக இணைத்திருக்கிறேன்.

அப்துல்லாவின் இடுகைக்கு 400+ லைக்குகள், 50+ ஷேர்கள். எனவே இப்பதிவையும் அதற்கு இணையாக வைரலாக்குங்கள். இல்லையென்றால் வழக்கம்போல திமுகவின் பொய்களே வரலாறாகும். அவர்கள் சொன்னதை கம்யூனிஸ்ட்டுகள் பரப்புவார்கள். அதை திகவினர் பரப்புவார்கள். பின்பு அதையே திமுகவினர் ஆதாரமாகக் காட்டுவார்கள். நான்கு சோனகிரிகள் தொலைக்காட்சிகளில் பேசித் திரிவார்கள். இப்படித்தான் வரலாற்றில் அவர்கள் நிற்கிறார்கள்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அப்துல்லா. 🙂

பின்குறிப்பு: பல நாள்களாகப் படிக்க நினைத்த புத்தகம். இதற்காகப் படிக்க ஆரம்பித்து நெருப்புப் போலப் பறக்கிறது. இதைத் தமிழில் கொண்டு வருபவர்கள் அழியாப் புகழ் பெறுவார்கள். அப்துல்லாக்கு நன்றி. 🙂

Share

சில உணவனுபவங்கள்

* முதன்முதலில் அந்த உணவின் பெயரைக் கேள்விப்பட்டபோது ச்சை என்றிருந்தது. புழுக்கு. இன்னைக்கு எங்காத்துல புழுக்காக்கும் என்று கேட்டபோது, காதில் சரியாகத்தான் விழுந்ததா என்றிருந்தது. எல்கேஏ மலம் ரேஞ்சுக்கு அந்த இருபது வயதில் திரும்ப திரும்பக் கேட்டேன். சிரிப்பு ஒரு பக்கம், அருவருப்பு ஒரு பக்கம். பாலக்காட்டு பிராமணர்களின் உணவு போல. அதைக் கொண்டு வந்து அந்த நண்பர் தந்தபோது அதைத் தொடவே இல்லை. அடுத்த முறை பெயரை மாற்றிச் சொல்லிக் கொடுத்தார். உண்ட பின்பு சொன்னார், அதுதான் புழுக்கு என்று.

* கடந்த வாரம் அப்பாவின் திதியின்போது மடிப்பாக்கம் நவபிருந்தாவன மடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே நிவேதனம் வித்தியாசமாகவும் சுவையானதாகவும் இருந்தது. மக்காச்சோளம், மாதுளம் பழம், தேங்காய், ஜீனி கலந்த பிரசாதம். அவர்கள் பரிமாறும்போது அசுவாரஸ்யமாகக் கொஞ்சம் போதும் என்று சொல்லிவிட்டேன். சுவைத்தால் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் கேட்கவும் முடியவில்லை. மறுநாளே வீட்டில் செய்து உண்டோம்.

* சீராளன் கறி என்றொரு நண்பர் சொன்னார். என்னது அது என்று கேட்டபோது, அதன் கதையைச் சொன்னார். வெள்ளாளர்களின் சிறப்புக் கறி போல. அதன் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டதும் அந்தப் பெயரை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. பிள்ளைக் கறி கேட்ட நினைவில் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல. புழுக்கு ச்சை என்றிருந்தது என்றால், சீராளன் கறி என்ற பெயர் பதற வைத்துவிட்டது. இப்போதும்.

* எத்தனையோ ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குப் பிடித்ததில்லை. அந்த கம்பெனி பெட்டர், இது பெட்டர் என்பார்கள். அதிலிருக்கும் வினிகர் மனம் எனக்குச் சுத்தமாக ஆகாது. வினிகர் இல்லாத ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்காது. திருநெல்வேலியில் குரு ஊறுகாய் என்று ஒன்று உண்டு. அதில் கடாரங்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். இதே கம்பெனியின் மற்ற ஊறுகாய்கள் அத்தனை சுவையாக இருக்காது. இந்த இரண்டு மட்டும் நன்றாக இருக்கும். இந்த ஊறுகாய் சென்னையில் கிடைப்பதில்லை. மதுரை, திருச்சியில் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. திருநெல்வேலியிலிருந்து யாராவது வாங்கி வந்தால்தான் உண்டு.

* சென்னையில் மாரிஸ் ஹோட்டல் என்று ஒன்று உண்டு. இந்தக் கடையைப் போல் காய்கறி பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை. எப்போதும் நான்கு காய்கறிகள் உண்டு. அதனுடன் வெங்காய சம்பலும் தனியாகத் தருவார்கள். சில சமயம் கீரைக் கூட்டும் இருக்கும். தமிழ்நாடு முழுக்க எந்தக் கடையிலும் இந்தக் கடை போலப் பரிமாறி நான் பார்த்ததில்லை. முதல்முறை வைக்கும்போதே நிறைய வைப்பார்கள். நிறைய என்றால் நிறைய. இன்றும் சென்னையில் பல கடைகளில் ஸ்பூனில் பரிமாறுவார்கள். சரவண பவன் பார்சலில் காய்கறி எல்லாம் ஸ்பூன் அளவுக்குத்தான் இருக்கும். அதிகம் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு அது உத்திரிணி அளவுக்கே தெரியும். மாரிஸ் கடையில் அப்படியெல்லாம் இல்லை. இரண்டாவது முறை கேட்டால் முதல்முறையைவிட அதிகம் பரிமாறுவார்கள். பேலியோ பற்றித் தெரிந்துகொண்டு அதிகம் காய் உண்ண ஆரம்பித்தபின்பு ஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் பொரியல் கூட்டு கூடுதலாகக் கேட்க அவமானமாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அவர்களும் சளைக்காமல் ஒரு சொட்டு மட்டுமே பரிமாறுவார்கள். ஆனால் சாதம் மட்டும் கொட்டுவார்கள். எனக்குத் தெரிந்து இத்தனை விதமான காய்கறிகளை இந்த அளவுக்குப் பரிமாறும் ஒரே கடை சென்னையின் மாரிஸ் கடைதான். ராயப்பேட்டையில் விஐபி கடை என்று ஒன்று. ஒப்பீட்டளவில் இங்கேயும் காய்கறி நிறையவே பரிமாறுவார்கள். ஆனால் சுவையிலும் அளவிலும் மாரிஸுக்குப் பக்கத்தில்கூட வரமுடியாது. மாரிஸின் சுவை அதீத சுவையல்ல. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுக்காத மாதிரியான சுவை. நினைக்கும்போதே சென்று உண்ண ஆசையைத் தரும் இடம் மாரிஸ்.

Share