Archive for அறிவியல் புனைகதை

மழை – அறிவியல் புனைகதை

சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் வசத்தில் அவன் இல்லை என்பது தெரிகிறது. சுரேஷன் நாயர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு விரலை வைத்திருந்த ஒல்லி ஆசாமியின் விரல் நாணயத்தோடு அங்குமிங்கும் நகர ஆரம்பித்தது.

S
U
C
C
E
S
S

சுரேஷன் நாயர் ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார். இந்தியா முழுவதும் அறியப்படும், எதிர்பார்க்கப்படும் அந்த விஞ்ஞானியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.

நாடெங்கும் தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அலறிக்கொண்டிருந்தன. புயல் சின்னம் உருவாகி இருந்தது. இன்னும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்கிற செய்தியெல்லாம் ஒளி(லி)பரப்பாமல் ஊடகங்கள் இன்னொரு முக்கியச் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தன. புயலை திட்டமிட்டு நகர்த்தும் முயற்சியின் முதல் சோதனை அன்று நிகழவிருக்கிறது. இதுவரை உள்கட்டங்களில் மட்டும் சோதனையில் இருந்த, ‘புயலை விருப்பப்பட்ட இடத்துக்கு மாற்றும் சோதனை’ இன்று முதன்முறையாக சோதிக்கப்பட இருக்கிறது.

சுரேஷன் நாயர் தலைமையில் நூற்று நாற்பது பேர் கொண்ட குழு வேகமாக இயங்கிக்கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் புயல் சின்னத்தை நகர்த்தி, கடலுக்கு நடுவில் அதை வலுவிழக்கச் செய்யவேண்டும். 920 மில்லிபார் உள்ள குறைவழுத்த காற்று மண்டலம். அதைவிடக் குறைந்த காற்றழுத்த தாழ்வை, விரும்பும் இடத்தில் உருவாக்கி, அதை நோக்கி குறைந்த காற்றழுத்தத்தை நகர வைப்பதுதான் அடிப்படை நோக்கம். குறைந்த காற்றழுத்தத்தைவிட மிகக்குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதில் வெற்றி அடைந்த சுரேஷன் நாயர் இத்திட்டம் நிச்சயம் வெல்லும் என்று நம்பினார். அறிவியல் பொய்த்தாலும் ஆவி சொன்னது பொய்க்காது என்று நினைத்துக்கொண்டார்.

மிகக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கவேண்டிய இடத்தைத் தேர்வு செய்து, அதற்கான வேலையை ஆரம்பித்தார். கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது அவருக்கு. ‘பகவதி’ என்று சொல்லிக்கொண்டார்.

சிறிய குன்றின் உச்சியில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தார். மேலே செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த தலைப்பாக்கட்டு பண்டாரம் காவிப் பல் தெரியச் சிரித்துக்கொண்டார். கைகளில் பற்ற வைத்திருந்த பீடியை ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டு தூரத்தில் நிற்கும் தூணில் உள்ள சிலையிடம் பேசினார்.

‘மழைய நிறுத்திடுவானுவளா மக்கா? கேக்கேன், நிறுத்திடுவானுவளாங்கேன்? கேட்டா அறிவியலும்பானுவோ. இன்னைக்கு நானும் பாக்கேன். மழ வல்லேன்னே இனிமே தலைப்பாக்கட்டு கிடையாதுங்கேன். என்னவே சிரிக்கீரு? பாரும், மழ வரும். புயல் வரும். ஒரு மசுரையும் ஒரு மசுராண்டியாலும் புடுங்கமுடியாதுங்கேன். தலப்பாக்கட்டா அறிவியலான்னு நானும் பாக்கேன்.’

கேமராக்கள் பளிச்சிட ஒளி வெள்ளத்தில் சுரேஷன் நாயர் பற்கள் தெரிய பேட்டி கொடுத்தார். மிகப் பெரிய வெற்றி. கரையைக் கடக்கும் புயல் கடலையே கடந்தது. கடலிலேயே மழை பெய்து, காற்றடித்து புயல் ஓய்ந்துவிட்டது.

‘இது ஒரு மிகப்பெரிய சாதனை. இச்சாதனையை இதுவரை எந்த நாடும் செய்ததில்லை. இச்சாதனையில் இந்தியா ஒரு முன்னோடியாக விளங்கும். ஒரு காற்றழுத்தத்தைவிடக் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் இதைச் சாதித்தோம். மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு நீர் ஓடுவதைப் போல, காற்று நாங்கள் சொன்ன திசைக்கு ஓடியது.’

சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டார். வெண்மை நிற மேகங்கள் மெல்ல மெல்ல தங்கள் நிலையிலிருந்து விலகி, சுரேஷன் நாயர் வட்டமிட்டிருந்த இடத்திற்குச் சென்றன.

‘இது ஒரு தொடக்கம்தான். இதை வைத்தே புயலையும் நாம் உருவாக்கமுடியும். தேவையான அளவு மழையையும் நாம் பெறமுடியும். இது அதற்கடுத்த பெரிய வெற்றியாக இருக்கும். செயற்கை மழைக்கு அவதிப்படவேண்டியதில்லை. ஒரு சின்ன காற்றழுத்தத் தாழ்வுநிலை. கொஞ்சம் நீராவி. மழை ரெடி.’

கேள்விகள் நாலா பக்கமும் இருந்து பாய்ந்துவந்தன.

’எல்லாம் பகவதி செயல்’ என்றார்.

‘மழையை நிறுத்தவே முடியாது என்று பலர் சொன்னார்கள். நானும் மரபிலும் இயற்கையிலும் நம்பிக்கை உள்ளவந்தான். ஆனால் அறிவியலின் சாத்தியங்கள் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவை. நீங்கள் கடவுளையும் அறிவியலையும் பிரிக்கவேண்டியதில்லை. எனக்கு அறிவியலும் பகவதியும் ஒன்றுதான்.’

‘மிகக்குறைந்த காற்றழுத்தத்தை எப்படி உருவாக்கினோம் என்பது ரகசியம். அணுக்கரு பிளவின் அடிப்படையிலான உயர் சோதனை அது. அதை மட்டுமே இப்போது சொல்லமுடியும். செலவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். தடுக்கமுடியாத புயல் தரும் அழிவையும் சேதத்தையும் விடக் குறைவுதான்.’

சுரேஷன் நாயர் ஓர் இந்திய முகமாக மாறத் தொடங்கியிருந்தார்.

கோவிலின் படிகளில் சோர்ந்து படுத்திருந்தார் தலப்பாக்கட்டு பண்டாரம். அவர் கண்களில் பெரும் மருட்சியும் பயமும் தெரிந்தன. தான் இப்படி தோற்போம் என்று அவர் நினைக்கவே இல்லை. இயற்கையையும் கடவுளையும் விஞ்சும் அறிவியலைப் பற்றித் தனக்குத் தெரியவில்லையே என்கிற கவலையும் கொஞ்சம் இருந்தது.

எதிரில் தூணில் இருந்த சிலை தன்னைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்ட பண்டாரம் நெக்குருகி ‘முருகா’ என்றார். இனியும் தான் தலைப்பாக்கட்டு கட்டக்கூடாது என்று எண்ணி, தலையில் கட்டியிருந்த துணியை எடுத்து தூர வீசினார். காற்றில் அவரின் தலைமயிர் பரவிப் பறந்தது. அப்படியே ஓர் ஓரத்தில் ஒண்டிப் படுத்துக்கொண்டார். சொல்லொணாத துயரத்தில் அதன் கண்களில் இருந்து நீர் வழிந்தது. ‘இனி வெள்ளமே இல்லை’ என்பதை நினைக்கவே அவருக்குக் கஷ்டமாக இருந்தது. தன் சிறுவயதில் திடீர் மழையில் தனக்குக் கிடைத்த சந்தோஷத்தையும், அந்நீரில் மிதந்த காகிதக் கப்பலையும் நினைத்துக்கொண்டார். ஆறு பொங்கிப் பிரவகித்து ஊருக்குள் வர, அனைவரும் முழங்கால் வரைக்கும் ஆடைகளைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு, தூரத்தில் எங்கும் பரவிக்கிடக்கும் வெள்ளத்தைப் பார்த்த சந்தோஷத்தை நினைத்துக்கொண்டார். இது எல்லாம் இனிமேல் கிடையாதா என்று நினைத்தபோது அவரது சோகம் எல்லை மீறியது.

எப்போது தூங்கினோம் என்று தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த பண்டாரத்தின் மீது நீர்த்துளிகள் பட்டன. எழுந்து உட்கார்ந்து வானத்தைப் பார்த்தார். ஒன்றிரண்டு நீர்த்துளிகள் வானத்திலிருந்து பொத்துக்கொண்டு வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. வலுத்த மழை மேலும் மேலும் வலுக்க, இதுவரை தான் காணாத ஒரு பேய் மழையைக் காணப் போகிறோம் என்பது பண்டாரத்திற்குப் புரிந்துபோனது.

சுரேஷன் நாயரின் குழு தீவிரவமாக ஆராய்ந்தது. எங்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமில்லை. இது புயலில்லை என்றார் சுரேஷன் நாயர். ஆனால் மழை கொட்டிக்கொண்டே இருந்தது. காற்று சுழன்றடித்தது. தீவிரமான மழை. விடாமல் இரண்டு நாள்கள் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. முக்கியச் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. எல்லா ஆறுகளிலும் வெள்ளம். நிறைய வீடுகளில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சுரேஷன் நாயர் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவினார். இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்கிற அறிக்கை மட்டும் வானிலைச் செய்தியாகச் சொல்லச் சொல்லிவிட்டுப் போனார்.

வீடுகளில் வெள்ளம் புகுந்த மக்கள் கோவிலின் படிகளில் ஏறி, மேலே உள்ள கோவிலில் தஞ்சம் பெற ஓடினார்கள். பண்டாரம் உறக்கச் சொன்னார், ‘மழய நிறுத்திட்டோம்னு சொன்னவன் அறிவாளி, மழ வரும்னு முன்னக்கூடியே இங்க வந்து நிக்கவன் பயித்தியக்காரனா, சொல்லுங்கல.’

தூரத்தில் கிடந்த துணியை எடுத்து மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார் பண்டாரம்.

Share

மூன்று பேர் – அறிவியல் புனைகதை

இந்தக் கதையை (கதையா, கட்டுரையா, கட்டுரைத் தன்மை அற்ற வெறும் அறிவியலா என்பது பற்றி போகப்போக நிறைய சொல்லியிருக்கிறேன், பொறுமை) மிகவும் சம்பிரதாயமாக ஆரம்பிக்கிறேன் என்பது எனக்கே புரிகிறது. சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் எதுவுமே அபத்தம் என்பது என் கருத்து. என்றாலும் இப்போது அப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு பல நாவல்களின் தொடக்கமும், சிறுகதைகளின் தொடக்கமும் இப்படி அபத்தங்களுடன் ஆரம்பித்திருப்பதை நினைத்துக்கொள்கிறேன். இன்றைய அறிவியல் உலகத்தில் – அறிவியல் வந்துவிட்டது, இனி யாரும் இதில் அறிவியல் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது எனச் சொல்லிவைக்கிறேன். ஆனால் இது அறிவியல் புதினமா அறிவியல் நிகழ்வா எனத் தொடங்கக்கூடும். இவர்கள் எதில்தான் தலையிடாமல் இருந்தார்கள்? ஒரு அறிவியல் கட்டுரை எழுதும் ஒருவனுக்கு இந்நாட்டில் நிகழும் அநீதியைப் பற்றிச் சொல்ல எனக்கே வெட்கமாக இருக்கிறது. இத்தனைக்கும், இது அறிவியல் யுகம்! சரி, நான் இதை ஒரு நிகழ்வாகச் சொல்கிறேன் எனவும் நீங்கள் அதை புனைவாகப் பார்க்கத் தொடங்குகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். முன்பு, வெகு முன்பு ஊமைப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், ஒருவர் திரையின் முன்னே தோன்றி கதையை விவரிப்பாராம். (என்னிடம் இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆதாரத்தைப் போட்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், அநீதி செய்யும் ஜூனியர்களுக்கு நான் இளப்பமா என்ன?) நம் மரபு பழைய எந்த ஒன்றையும் நிராகரிக்கக்கூடாது என்கிற கருத்தாக்கம் அடர்வு பெறுகிற சூழலில் நான் அதை நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகவே தோன்றுகிறது – அபத்தங்கள் இருக்கமுடியாது (-ஐ ஆரம்பித்து –ஐ முடித்துவிட்டேன். நான் சில கட்டுரைகளில் இதைத் தவிர்த்திருக்கிறேன். கட்டுரை எடிட்டர் கடுமையாகக் கோபப்படுவார். இந்த அறிவியல் கட்டுரையில் (பிராக்கெட்டுக்குள் பிராக்கெட், 🙂 ஸ்மைலியும் உண்டு, ஏனென்றால் அறிவியல் உலகமல்லவா!) அறிவியல் புனைகதையில், அறிவியலில், அறிவியல் கட்டுரையில் (சே, ஏதோ ஒரு எழவில், Hereafter ‘அறிவியல் கட்டுரை/கதை’ will be referred as ‘எழவு’) எடிட்டருக்குக் கோபப்பட பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பிராக்கெட் முடிக்கப்படாத, – முடிக்கப்படாத கோபங்கள் இருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது பிராக்கெட்டை ஏற்கெனவே முடித்துவிட்டேன், முதல் பிராக்கெட்டை முடித்துவிடுகிறேன்) என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால் நாம் அந்த அபத்த மரபை மட்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்துக்கொண்டே இருந்தோம்.

என் பிரச்சினை இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். என்னால் ஒரு விஷயத்தை ஒரு விஷயமாக மட்டும் சொல்லமுடியாது. அது முதல் பிரச்சினை. (இரண்டாவது பிரச்சினை என்ன என்பதை, முதல் பிரச்சினை தீர்ந்த பின்னர் சொல்கிறேன்.) இதன் மூல காரணம் என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். அக்காலங்களில் திண்ணைப் பேச்சு என்று ஒன்று உண்டு என்று சொல்வார்கள். அதுவே பின்னர் மின்னஞ்சல் பேச்சாகப் பரிமாணம் பெற்றது. அந்த திண்ணைப் பேச்சின் எச்சமே என்னுள் தேங்கிக் கிடக்கிறது. நான் அதிகம் பேசுவதால் எனக்கு வயதாகிவிட்டது என்றும், அறிவியல் பற்றிப் பேசுவதால் விஞ்ஞானி என்றும் நீங்கள் யூகித்திருக்கலாம். நாந்தான் சொன்னேனே, அறிவியல் உலகில் ஏன் அபத்தங்கள் இருக்கக்கூடாது என்று.

அக்காலங்களில் பாட்டிக் கதை என்று சொல்வார்கள். நானும் என் பணிக்காலத்தில் நடந்த ஒரு கதையையே உங்களிடம் சொல்லப்போகிறேன். இதுவரை சொன்னது ஒரு முன் தயாரிப்பு. உடலுறவில் முத்தம், தடவுதல் போன்ற முன் தயாரிப்பைப் போன்றதே இதுவும். பாட்டிக் கதையில் எடுத்த எடுப்பில் ஒருவர் கதைக்குள் செல்வதில்லை. ‘ஒரு ஊர்ல ஒரு’ என்கிற பிரயோகம் பன்னெடுங்கலாமாக இருந்தது என்று வாசித்திருக்கிறேன். அது வெறும் ‘ஒரு ஊர்ல ஒரு’ இல்லை. ஒரு முன் தயாரிப்பு. நான் மரபை மீட்டெடுக்கிறேன். இந்த ‘எழவிலும்’ நீங்கள் அதை மீட்டெடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நம் பழங்காலத்துத் திரைப்படங்கள் ஆரம்பிக்கும்போது ஒருவித மங்கல இசை வருமே, அது போன்ற ஒரு மங்கல இசையை நினைத்துக்கொள்ளுங்கள். நான் அந்த மூன்று பேரையும் அறிமுகப்படுத்தப் போகிறேன்.

ஒருவன் பெயர் வினோத். இன்னொருவன் பெயர் ஜீவன். மூன்றாமவன் பெயர் கண்ணையன். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. 🙂 முன்பு வெளிவந்த தமிழ் தினசரிகளில் இப்படி வந்ததை நீங்கள் இந்நேரம் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும்.) இந்த மூவரால்தான் பிரச்சினை.

விஷயம் சின்ன விஷயம்தான் என்றார் மேத்யூ. அவர்தான் தலைமை விஞ்ஞானி. நிரலியில் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பார் என்றார். ஒன்றும் புரியவில்லையா? முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென பிரச்சினைக்குள் செல்லும் வழக்கம் செத்துவிட்ட இன்றைய யுகத்தில், அதையும் ஒரு மரபெனக் கருதி புதுப்பிக்கிறேன் என வைத்துக்கொள்ளுங்கள்.

நான் நிரலியை முழுக்கப் பரிசோதித்தேன். துல்லியமாக இருந்தது. பிரச்சினைகளே இல்லை. மேத்யூவிடம் சொன்னேன். ‘தாயோளி’ என்றார். அவர்தான் எனக்கு இதுபோன்ற பழம் தெறிகளைக் கற்றுக்கொடுத்தது. அவர் சொல்லச் சொல்லத்தான் பழம் வார்த்தைகளையும், பழம் பழக்க வழக்கங்களையும் பற்றி தேடத் துவங்கினேன். இதனாலேயே என் கட்டுரைகள் பெருமளவில் கவனிக்கப்பட்டன. மரபு ரீதியான விஷயங்கள் இன்றைய நிலையில் முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில், நான் அவற்றை மீண்டும் எழுதத் தொடங்கியபோது, அவர்களுக்குள் இருக்கும் ஒரு விஷயமாகவே அதை வாசித்தவர்கள் கண்டடைந்தார்கள். அவர்களுக்குள் இருக்கும் மரபை மீட்டுவதன்மூலம் நான் அவர்களை மிக எளிதில் அணுகலாம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படித்தான் மேத்யூவைப் பின்னுக்குத் தள்ளி, எடிட்டரின் திட்டோடு, அதிக ராயல்டியையும் பெறத் தொடங்கினேன்.

மீண்டும் மூன்று பேர் பிரச்சினை. ‘நல்லா பாத்தியா’ என்றார் மேத்யூ. தவறுகள் இருந்தால் அதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுவார் மேத்யூ என்பது எனக்குத் தெரியும். நான் நிரலிகளைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம், அதில் தவறுகள் இல்லையென. இருந்தாலும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். என் மூளை எல்லாவற்றையும் உபயோகித்தேன். ஒன்றும் சரிப்பட்டுவரவில்லை. அந்த மூன்று பேரும் அப்படித்தான் இருந்தார்கள். எப்படி? முன்பு கொசு என்கிற ஒரு உயிரினம் இருந்தது என்பது நினைவிருக்கலாம். அதை விரட்ட ஒரு கொசுவர்த்தி என்கிற ஒரு விஷயமும் இருந்தது. அதற்கு சுருள் சுருளான ஒரு வடிவமும் இருந்தது. அதைப் போன்ற ஒரு சுருள் வடிவத்தைப் பின்னோக்கிய நினைவுக்கு ஒரு குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் அதி பழைய படங்களில். அதைக் கிண்டல் செய்து, அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த கொசுவர்த்திச் சுருளைச் சுற்றிக் காண்பிப்பார்கள். (எப்படி நான் ஆரம்பித்த இடத்திற்கு வரப்போகிறேன் என்பது எனக்கே குழப்புகிறது!) அப்படி நீங்கள் ஒரு கொசுவர்த்தியையும் அது உங்கள் கண்முன் சுற்றுவதாகவும் நினைத்துக்கொள்ளுங்கள். ஆம், உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப்போகிறேன்.

மிக வெற்றிகரமான விழாவாக அதை அறிவித்தார் மேத்யூ. மனிதனை ரோபோவாக மாற்றிக் காண்பித்ததில் உள்ள தடைகளையெல்லாம் எளிதாகக் கடந்ததற்காக அவருக்கு பாரத் ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. (பாரத் ரத்னாவின் பெயரை இந்திய ரத்னா என்று மாற்றி, மரபை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக மீண்டும் அதை பாரத் ரத்னா என்று மாற்றினார்கள். இதுவரை இது தெரியாதவர்கள் அவர்களது பொது அறிவைக் கொஞ்சம் கூட்டிக்கொள்ளலாம். உபரித் தகவல், திண்ணைப் பேச்சு இப்படித்தான் பொதுஅறிவில் ஆரம்பிக்கும்!) அன்றிரவு நடந்த பார்ட்டியில் சில சந்தேகங்களை நான் கிளப்பினேன். அதில் ஆரம்பித்தது பிரச்சினை. இந்த சந்தேகங்களுக்காக நிறைய முறை பாராட்டியிருக்கிறார் மேத்யூ. அதைவிட அதற்காகத் திட்டியுமிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

நான் கேட்ட சந்தேகம் மிக எளியது. இந்த ரோபோவாக மாறிய மனிதர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் என்ன ஆகும் என்பதுதான் அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றார் மேத்யூ. ஏனென்றால் நிரலியில் அவை ஒன்றுக்கொன்று எதிரியாக உணரும் நிரலி சேர்க்கப்படவில்லை என்றார். எங்கும் அன்பு, எங்கும் சகோதரத்துவம், எங்கும் அமைதி என்று (தொப்பை குலுங்க, பிரெஞ்சு தாடி விரிய கண்ணாடியின் வழியே காணும் கண்களுடன் சிரித்தார் மேத்யூ என்று எழுதியிருப்பார் சுஜாதா என்னும் ஓர் எழுத்தாளர். அவரே தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கியவர் என்று சொல்லப்படுகிறது. 2000மாவது வருடங்களில் நிறைய எழுதி தள்ளியிருக்கிறார். அறிவியல் கதைகளின் முன்னோடி. அவர் செய்த அபத்தங்கள் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன். இப்போது உங்களுக்கு இன்னொன்று புரிந்திருக்கும், அபத்தத்தில் தொடரும் எதுவும் அபத்தத்திலேயே முடியவேண்டியதில்லை என.) அலுங்காமல் குலுங்கால் சிரித்தார் மேத்யூ. ஏனென்றால் அவருக்குத் தொப்பை இல்லை, பிரெஞ்சு தாடி இல்லை. (இலக்கிய வகை காவியம் ஆகவேண்டுமென்றால் அறுசுவை இருக்கவேண்டும் என்கிற தியரி நீண்ட நாளாக இருந்தது. அதை அடியொட்டி இப்போது உங்களுக்கு நகைச்சுவையை வழங்கிவிட்டதாக நம்புகிறேன். மீதி ஐந்து சுவைகளை இக்கட்டுரைக்கு எதிர்க்கட்டுரை எழுதப்போகும் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ தருவார். பொறுத்திருங்கள்.)

திடீரென மேத்யூ சொன்னார், ‘நாம் மோத வைத்துப் பார்த்தால்தான் என்ன?’ என்று. மீண்டும் முன்பொரு காலத்தில் என்று சொல்வதற்கு வருந்துகிறேன். என் ‘எழவு’ எதிரியான அநீதியாளர் ஜூனியர் மேத்யூ நான் எத்தனை முறை மரபு என்றும், முன்பொரு காலத்தில் என்றும் எழுதியிருக்கிறேன் என புள்ளி விவரங்களோடு வரக்கூடும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. (இந்த வரி வரவில்லை என்றால் என் கட்டுரையில் சுரத்தே இல்லை என்று அர்த்தம் என்று எடிட்டர் அடிக்கடிச் சொல்லுவார்.)

சோதனை தொடங்கியது. முதலில் ஒரு நிரலியைச் சேர்த்தோம். மூன்று பேரில் ஒருவனைப் பணக்காரனாகவும், இன்னொருவனை ஏழையாகவும் படைத்தோம். மூன்றாமவனை பிச்சைக்காரனாக்கினோம். மூவருக்கும் அவர்களின் கதாபாத்திரத்திற்கான வரையறையை அளித்தோம். அவர்களின் கீழ்க்கோப எல்லையை குறைத்தோம். மூவரையும் இரவு ஒரே அறையில் அடைத்தோம். இன்னும் சிறிது நேரத்தில் ‘ரணகளம் ரத்தபூமியாக’ மாறும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அறைக்குள்ளிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை. உள்ளே பார்த்தபோது மூவரும் அருகருகே உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் உறக்க நேரத்திற்கு முன்பாகச் சண்டை வந்திருக்கவேண்டும் என்பது எங்கள் நிரலியின் வரையறை. மேத்யூ மெல்ல நெற்றியைச் சுருக்கினார். சுருக்கங்கள் வழியே மெல்ல வியர்வை வழிந்து, பிரெஞ்சு தாடி இல்லாத அவரது ஒற்றை நாடியின் வழியே வழிந்து நெஞ்சில் சொட்டியது. மேத்யூ யோசித்தார், யோசித்தார், யோசித்துக்கொண்டே இருந்தார்.

மீண்டும் நிரலிகளையெல்லாம் என்னென்னவோ மாற்றினார். துப்பாக்கி, வெடிகுண்டு என எல்லாம் கொடுத்து ஒருவரை ஒருவர் பார்த்தாலே சுடவும், குண்டு எறியவும் நிரலி எழுதினார். ம்ஹூம். ஒன்றும் உதவவில்லை. மூவரும் இயல்பாகப் பேசிக்கொண்டார்கள். தூக்க நேரத்தில் சரியாக உறங்கத் தொடங்கினார்கள். சண்டை மட்டும் இல்லை.

மூன்று மனிதர்களும் இயல்பிலேயே ஆண்கள்தானா எனச் சோதித்தார். ஒருவேளை யாரேனும் ஒருவர் ஆணாக மாறிய பெண்ணாக இருந்தால், அதற்கான கூடுதல் நிரலியைச் சேர்க்க நினைத்திருப்பார் போல. ஆனால் இந்த நிரலி தேவையற்றது என்று ஏற்கெனவே நிராகரிப்பட்ட ஒன்றுதான். இருந்தாலும் யோசித்தார். இந்த நேரத்தில் ஒரு பழமொழி சொல்வதில், மரபை மீட்டெடுப்பதில் மகிழ்ச்சி எனக்கு. 🙂 பசிச்சவன் பழங்கணக்கப் பார்த்தானாம்.

மூவருமே பிறப்பிலேயே ஆண்கள்தான் என்பதும் ஊர்ஜிதம் ஆயிற்று. அதற்கு மேலும் நெற்றியைச் சுருக்க வழியில்லை என்பதை மேத்யூ உணர்ந்துகொண்டு, வேறொரு மேனரிசமாக கன்னத்தில் கைவைத்துக்கொண்டார். இதை சரி பார்க்காமல் அவர் வாங்கிய பாரத் ரத்னாவைத் திரும்பக் கொடுத்துவிடலாமா என்று யோசித்திருப்பார் என நினைக்கிறேன்.

இங்கே கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாருங்கள். இப்போது மேத்யூ நான் கண்டுபிடித்த பதிலை ஒட்டி பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டு மரணமடைந்துவிட்டார். அதில் அவர் எதிர்கொண்ட தகவல்கள் அவரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கவேண்டும் என்பது மட்டும் புரிகிறது. ‘இதை கவனிக்காம நாம நிரலி எழுதினதே தப்பு’ என்று அவர் புலம்பியிருக்கவேண்டும். இன்றைக்கு மேத்யூ இல்லாத நிலையில், ஒன்றுமே தெரியாமல் அநீதியாளர் ஜூனியர் மேத்யூ என்னை எதிர்த்துக்கொண்டிருக்கிற வேளையில், இக்கட்டுரை என்னை பாரத் ரத்னாவாக்கும் என்பது மட்டும் இப்போதே தெரிகிறது.

மேத்யூ நெற்றியைச் சுருக்காமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டிருந்த நேரத்தில், நான் பழம் இலக்கியங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு சில கல்வெட்டுக்களைப் படித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயம் எனக்குள் பிடிபட, கிட்டத்தட்ட மூன்று பேரையும் நோக்கி ஓடினேன். மேத்யூ நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் மூவரையும் பார்த்துச் சிரித்துவிட்டு அவர்களின் நிரலியை ஒவ்வொன்றாகப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த விஷயம் அதில் இல்லை. அந்த மூவரின் பூர்வத் தகவல்களைச் சேகரித்தேன். நான் நினைத்தது சரியாக இருந்தது.

மேத்யூவிடம் சொன்னேன். ‘உங்கள் பாரத் ரத்னாவிற்குப் பிரச்சினை இல்லை.’

‘அப்படியா?’

‘ஆம், ‘சண்டை போடு’ என்கிற பழைய நிரலியுடன், ஒரே ஒரு நிரலியை மட்டும் சேர்க்கிறேன், என்னாகிறது பாருங்கள்’ என்றேன். மூவரின் நிரல்களிலும் ஒரேஒரு நிரலியை மட்டும் சேர்த்தேன். அவர்கள் அந்த வரையறையை ஏற்றுக்கொள்ளச் செய்தேன். ஒரு அறைக்குள் அடைத்தோம். இரண்டு நிமிடங்கள்கூட இருக்காது, அடிதடி சத்தம். சரியான சண்டை. நாங்கள் நிரலியில் சேர்க்காத கெட்ட வார்த்தைகளெல்லாம் வருகிறதோ என்கிற சந்தேகம்கூட எனக்கு வந்தது.

மேத்யூ ஆச்சரியம் பொங்க, ‘என்ன செய்தாய்’ என்றார்.

‘நீங்கள் ஜாதியை மறந்துவிட்டீர்கள். அவர்கள் மூவரும் ஒரே ஜாதி. அதை மாற்றினேன். ஒவ்வொருவருக்கு ஒரு ஜாதி என்று வைத்தேன். பிரச்சினை தீர்ந்தது’ என்றேன்.

இதை மரபின் மீட்சியாகப் பார்க்கவேண்டுமா, அல்லது தொடர்ச்சியாகப் பார்க்கவேண்டுமா எனத் தெரியாமல் மீண்டும் நெற்றியைச் சுருக்கிய மேத்யூவின் முகம் என் கண்முன்னே இன்னும் இருக்கிறது.

ஜூனியர் மேத்யூவிற்கு இதை சவாலாகவே சொல்கிறேன். ஒரே ஜாதியைச் சேர்ந்த மூன்று பேரை உன் நிரலியால் சண்டையிட வை, நான் என் சொத்தையெல்லாம் உனக்கு எழுதி வைக்கிறேன். சவாலுக்குத் தயாரா சின்ன பையா?

— சீவன், 24-11-2108

(பின்குறிப்பு: ஏய் எடிட்டர், இக்கட்டுரையில் ஏதேனும் கைவைத்தால், சில புதிய தெறிகளை உனக்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன். கவனம்.)

நன்றி: பண்புடன் குழுமம்

Share

சனி – சிறுகதை

ஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி நினைத்தபோது கேவலமாக இருந்தது. கனவில் கூட அவனால் சனியைப் பிடிக்க முடியவில்லை. அதன் சாயல் நன்றாக நினைவிலிருந்தது அவனுக்கு. ஆயிரம் எலிகள் அவன் முன்னே வந்து கெக்கலித்தாலும் அவனுக்கு பிரச்சினைக்குரிய சனியைக் கண்டுபிடித்துவிடமுடியும். பரம்பரை பரம்பரையாக வரும் பகையை கூட அவன் மன்னிக்கத் தயாராயிருந்தான். ஆனால் சனியை அவனால் மன்னிக்கமுடியாது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு இரவில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் அந்த எலி ஓடிவந்தது. அவன் அதை விரட்டுமுன்பு டிவியின் அடியிலுள்ள மேஜையின் கீழே புகுந்துகொண்டது. அவனால் அதை நம்பவேமுடியவில்லை. எப்படி ஒரு எலி ஓடிவந்து வீட்டிற்குள், அதுவும் கண்ணெதிரே இப்படி புகமுடியும்? உடனடியாக மேஜையைப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. அதிசயமாக இருந்தது அவனுக்கு. எலியைத் தேடு தேடென்று தேடினான். வீடெங்கும் தேடியும் எலியைக் காணவில்லை. அந்தத் தோல்வியை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி கண்முன் நுழைந்த எலி காணாமல் போகும்? களைத்து தூங்கத் தொடங்கியிருந்தபோது சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கிய ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் அன்று முழுவதும் உறங்கவே இல்லை. அந்த ஒலி அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பயத்தை கிளப்பிவிட்டிருந்தது. எத்தனை யோசித்தும் அந்தப் பயம் எங்கிருந்து தூண்டப்பட்டது என்பதை அவனால் கண்டடையவே முடியவில்லை. அதன் காரணகர்த்தாவான சனியின் மீது அவன் வெறுப்பு முழுதும் குவிந்தது.

மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. ஓய்ந்து படுக்கையில் விழுந்தபோது, அப்படுக்கையின் மெத்தையிலிருந்து சில பஞ்சுகளைப் பறக்கவிட்டு எலி பாய்ந்தோடியது. அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். வெளியில் சென்று வீரியமிக்க பூனை ஒன்றை வாங்கிவந்தான். வீட்டுக்குள் விட்டான். பூனை புதிய இடத்தைக் கண்டு மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. கடுமையாகக் கத்தியது. அதன் சத்தம் அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அந்த எலியை விடக்கூடாது என்று முடிவு செய்திருந்தான்.

பூனைக்கு வகைவகையாக முட்டையும் பிரெட்டும் வாங்கிக்கொண்டு வந்து பழகினான். பூனை முட்டையையும் அவனையும் மிகவும் நேசிக்கத் தொடங்கியது. பகலெங்கும் வீடைச் சுற்றும் பூனை, இரவில் அவன் வந்து தரும் முட்டையையும் பிரட்டையும் தின்றுவிட்டு அவனுக்கு முன்பே உறங்கியது. எலியைப் பிடிக்கவில்லை. அதேசமயம் எலியையும் வெளியில் காணவில்லை. ஆனால் எலி வீட்டை விட்டுப் போயிருக்காது என்று உறுதியாக நம்பினான் கஸி. அத்தனை எளிதான எலி அதுவல்ல என்பது அவனுக்குத் தெரியும். அந்த எலிக்கு பழங்கால மாய தந்திரங்கள் தெரிந்திருக்குமோ என்று கூட யோசித்த தினம் நினைவுக்கு வந்து கொஞ்சம் கூசிப்போனான். பக்கத்துவிட்டு நண்பனொருவன் பூனையைப் பட்டினி போட்டால்தான் எலியைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, மூன்றாம் வீட்டுக்காரன் “எதுக்கும் போலீஸ்ல சொல்லிடுங்கோ. இந்தக் காலத்து எலிங்கள அப்படி நம்பிடமுடியாதுன்னா” என்றார். அவன் முறைத்த முறையில் கொஞ்சம் பயந்து, “அது ·போன் பண்ணி உங்கள காலிபண்ணினாத்தான் உங்களுக்கு உறைக்கும்” என்று சொல்லி சிரித்துக்கொண்டே கதவைப் பூட்டிக்கொண்டார். அவர் சிரிப்பு கதவை மீறி வெளியில் வந்து அவன் கண்களைச் சிவப்பாக்கியது.

அன்று பூனையைப் பட்டினி போட்டான். ப்ளூ கிராஸ் நண்பர்களுக்குத் தெரிந்தால் அவனை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற பயம் ஒருபுறமிருக்க, எலியைக் கொல்லவே அவன் அந்த முடிவுக்கு வந்தான். பூனை மட்டும் அந்த எலியைப் பிடித்துவிட்டால் அதற்கு என்னென்ன உபசாரங்கள் செய்யப்போகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

அன்றிரவு பூனையைப் பட்டினி போட்டுவிட்டு படத்திற்குச் சென்றான். படத்தில் ஒரு எலி ஓயாமல் பூனையைத் துரத்தியது. ஏந்தான் இந்தப் படத்திற்கு வந்தோமோ என்று நொந்துகொண்டான். இடைவேளையில் பக்கத்திலிருக்கும் ஒருவரிடம் ‘எலியைத் துரத்தும் பூனைப்படம் எந்த தியேட்டர்ல ஓடுது’ என்று கேட்டான். கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டதாக முறைத்த அவர் கையிலிருந்த பாப்கார்னைத் திங்கத் தொடங்கினார். அவனுக்கு எரிச்சலாக வரவும் உடனே எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான்.

வீட்டின் கதவைத் திறக்கும்போது பூனை அவன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. டிவிக்குச் செல்லும் வயர்கள் அனைத்தும் துண்டு துண்டாகக் கிடந்தன. ·பிரிட்ஜுக்குள் அவன் வைத்திருந்த பிரெட் முழுதும் தூள் தூளாகிக் கீழே சிதறிக் கிடந்தது. இவனால் அக்காட்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு நிமிடம் பூனையின் மீது சந்தேகம் வந்தது. உடனே அப்படி இருக்கமுடியாது என்கிற முடிவுக்கு வந்தான் கைலியிருந்த டிக்கட்டைச் சுருட்டி பூனையின் மண்டையைக் குறிவைத்து எறிந்தான். பூனை அதிர்ச்சி அடைந்து எழுந்து அவனைப் பார்த்தது. அவந்தான் என்று தெரிந்தவுடன் லேசாகச் சிரித்துவிட்டு தூங்கிப் போனது. எப்படி பசியைத் தாங்கும் பூனை? நண்பன் சொன்னான், “நாலு நாளாவது சாப்பிடாம இருக்கும் பூனை. நாலு நாள் அப்படியே விடு, பார்க்கலாம் அது எப்படி எலிய பிடிக்காம இருக்குன்னு.”

இந்த எலியைப் பிடிக்க இன்னும் நாலு நாள் காத்திருக்கவேண்டும் என்பதே அவனுக்கு அவமானம் தரும் விஷயமாக இருந்தது. பூனைக்கு அதிகம் பசியை உண்டாக்கும் மருந்தை தேடி வாங்கிக்கொண்டு வந்தான். அதை பூனைக்குக் கொடுத்தான். அன்றிரவு பூனையை தனியே விட்டுவிட்டு, படத்திற்குச் சென்றான். எந்தப் படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் முதல் நாள் பார்த்த படத்திற்குத்தான் டிக்கெட் கிடைத்தது. அதைப் பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் என்று வீதியில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தான். ஒருவித எதிர்ப்பார்ப்போடு கதவைத் திறந்தான். வீடெங்கும் பூனையில் உடல்துண்டங்கள் சிதறிக்கிடந்தன.

முதன்முறையாக ஒரு எலிக்குப் பயந்தான். மூன்றாம் வீட்டுக்காரர், “நான் தான் சொன்னேனே ஹா ஹா ஹா” என்று கெக்கலிப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஒரு சாயலில் அந்த எலியின் சாயல் அவர் முகத்தில் தெரிந்தது போல் இருக்கவும் கஸி அவரை முழுமையாக வெறுத்தான். பகக்த்துவீட்டு நண்பன், சில பெருச்சாலிகள் அப்படி துவம்சம் செய்வது உண்டென்றாலும், பூனையை எந்த எலியும் கொன்றதில்லை என்றும் சொன்னான். அவனுக்கு பயமாகவும் தன் மீதே கேவலமாகவும் இருந்தது. அன்றிரவுதான் அவன் கனவில் முதன்முதலாக எலி வந்தது. பக்கத்துவிட்டுக்காரனிடம் பேசும்போது அந்த எலியை சனி சனி என்று திட்டுவான். ஒருவாறாக அந்த எலியின் பெயரே சனி என்று ஆகிப்போனது.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு நாள்கள். வரிசையாக என்னென்னவோ செய்தான். சிலிண்டரில் ஒரு வாயு விற்கிறது என்றும் அதை பீய்ச்சினால் எலிகள் ஓடி வந்து செத்துவிழும் என்றும் சொன்னார்களென்று அந்த வாயுவை வாங்கிக்கொண்டுவந்து பீய்ச்சினான். கடுமையான செலவு பிடித்தது. தன் கையிலிருக்கும் பணம் முழுதும் செலவழிந்து தான் பிச்சை எடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே அதைச் செய்தான். சரியாக ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது, எதிர்த்த வீட்டு பகக்த்துவீட்டு எலிகள் எல்லாம் ஓடி வந்து செத்து விழுந்திருந்தன. ஆனால் சனியைக் காணவில்லை. அவனுக்கு சனியின் சாயல் நன்றாகத் தெரியும், சனி சாகவில்லை. சனியைக் காணவில்லை என்று நண்பனிடம் சொன்னான். அவன் சொன்னான், ‘எங்க வீட்டுல இப்ப எலியே இல்லடா. ரொமப் தேங்க்ஸ்டா’ எங்கிருந்தோ சனியின் அகங்காரச் சிரிப்பு வீட்டுக்குள் ஒலித்தது. தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.

தொடர்ந்து கனவுகளில் சனி அழிச்சாட்டியம் செய்தது. பக்கத்து வீட்டு நண்பன் இன்னொரு உபாயம் செய்தான். எங்கிருந்தோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வ்ந்து, அதிலுள்ள சில முறைகளைச் சொன்னான். கஸி சிரித்தான். எதை எதையோ துவம்சம் செய்துவிட்ட எலி இதற்கு எப்படி அகப்படும்? நண்பனின் வற்புறுத்தலில் சரியென ஒப்புக்கொண்டான்.

வீதிகளில் அலைந்து ஒரு மரத்தாலான எலிப்பத்தாயத்தையும் ஒரு வெங்காய வடையையும் வாங்கினார்கள். எலிப்பத்தாயம் விற்பவன் ஒரு கேலியோடு அதைக் கொடுத்தான். ‘இன்னும் இதுக்கு மதிப்பிருக்குதுன்றீங்க?’ கஸி அவனை முறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் சனியின் ஓட்டத்தை அவனால் உணர முடிந்தது. கையிலிருந்த வெங்காய வடையை முகர்ந்து பார்த்தான். அந்த மணம் சனியை அல்லாட வைக்கிறது என்பது புரிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இது மட்டும் சக்ஸஸ் ஆனால் எப்படி இருக்கும்? ஆரம்ப கட்டத்திலேயே இதைப் பயன்படுத்தியிருந்தால் எவ்வ்ளவு மிச்சமாகியிருக்கும்? நிறையப் பணம், ஒரு பூனையின் உயிர், கொஞ்சம் வயர், கொஞ்சம் பஞ்சு, நிறைய பிரட். எல்லாம் இப்போது வீணாகப் போய்விட்டது. என்றாலும் பரவாயில்லை. பிரச்சினை தீர்ந்தால் சரி.

இதுவரை அவன் எலிப்பத்தாயத்தில் வெங்காய வடையை வைத்ததே இல்லை. முதலில் சரியாக வைக்கவரவில்லை. பின்பு கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தியதும் அதன் எளிமையான சூத்திரம் பிடிபட்டுவிட்டது. லாகவமாக வெங்காய வடையை வைத்தான். பத்தாயத்தின் மேலே இருக்கும் கொக்கியை பத்தாயத்தின் முதுகின் மிக நுனியில் மாட்டி வைத்தான். சனி உள்ளே நுழைந்து வடையைத் தொட்டாலே போதும், சட். பின்பு அதை உண்டு இல்லையென்று ஆக்கிவிடலாம். நிறைய கேள்விகளைத் தயார் செய்துவைத்துக்கொண்டான். இதையெல்லாம் நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்கணும் என்பார்களே, அப்படி கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

இரவு மிகவும் மெல்ல வருவதுபோலத் தோன்றியது. ஏன் பகலில் சனி வ்ந்து வெங்காய வ்டையைத் தின்று தொலைக்கவில்லை?

இரவு வ்ந்த்ததும் சனிப்பத்தாயத்தை சரியான இடத்தில் வைத்துவிட்டு, மனதிற்குள் ‘சீ யூ’ சொல்லிவிட்டு, அறையைப் பூட்டிவிட்டு படத்திற்கு போனான். ஆச்சரியமாக அன்று விசிலடித்தான். அன்றைக்கு பூனை எலியைத் துரத்தும் படம். பூனை எலியைத் துரத்து துரத்தென்று துரத்தியது. திரையில் ஒன்றுமே திரையிடப்படாத நேரத்தில்கூட கைதட்டி ஆரவாரம் செய்தான். பக்கத்திலிருப்பவன் கடுப்பாகி ‘வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்’ என்றான். கஸி சிரித்துக்கொண்டே ‘சனி’ என்றான்.

சோதனையாக அன்று வீட்டிற்கு பஸ்ஸே கிடைக்கவில்லை. என்னவோ பிரச்சினை என்று போக்குவரத்தை நிறுத்தியிருந்தார்கள். நடந்தே வீட்டுக்கு வந்தான். உண்மையில் நடப்பதே அவனுக்குப் பிடிக்காது. அன்று அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெங்காய வடை தன்னைக் கைவிடாது என்று உறுதியாக நம்பினான். தனக்குப் பிடித்த பழமையான பாடலைப் பாடிக்கொண்டு நடந்தான். அப்போது பழமையை மிஞ்சக் கூடிய புதுமையென்று எதுவுமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு. அந்த நிமிடத்தில் பழமையின் மீது தீராத காதல் கொண்டான். பாரதியார் பாடல்களைத் திக்கித் திணறிப் பாடிப் பார்த்தான். நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான். பழைய காதலி சிலி நினைவுக்கு வந்தாள். பழமையால் நிரம்பிய புது உலகம் என்கிற சொற்றொடர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உலகமே மாறிப்போனது போல் உணர்ந்தான்.

வீட்டிற்குள் சென்று கதவைத் திறந்தான். சனிப்பத்தாயத்தில் சனி மாட்டிக்கொண்டு “லீவ் மீ லீவ் மீ” என்று கத்திக்கொண்டிருந்தது. கற்பனை ரொம்ப இனிமையாக இருந்தது. அந்த இனிமையை கொஞ்சம் அனுபவித்துவிட்டுக் கதவைத் திறந்தான்.

சனிப்பத்தாயம் காலியாக அவன் வைத்திருந்த மூலையில் கிடந்தது. ஓடிச்சென்று அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே வெங்காய வ்டையைக் காணவில்லை. ஒரு கடிதம் இருந்தது. “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று எழுதி, மிகவும் பரத்தலாக என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது.

“Better Luck Next Time”

With Luv,
Sani, The Boss.

-oOo-

(இது நச் போட்டிக்காக எழுதப்பட்டது.)

வகை: அறிவியல் புனைகதை.

Share

மஹான் – சிறுகதை

மிக நீண்டிருந்த அந்தக் குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இருநூற்றம்பைது ஆண்டுகளில் எனக்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளைத் தருமாறு ஸ்நெல்லிடம் கேட்டபோது அவன் முகம் விநோதமாக மாறியதைக் கவனித்தேன். அதை நான் விரும்பவில்லை என்பதையும் ஸ்நெல் உடனே கண்டுகொண்டான். வழக்கமாக அனுப்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பாமல், அதனைப் பிரதி எடுத்துக் கையில் தருமாறு சொன்னபோது அவன் கொஞ்சம் வெளிறியதாகவே தோன்றியது. மிக முக்கியமான அரசு விஷயங்கள் எக்காரணம் கொண்டும் பிரதமரின் மின்னஞ்சல் முகவரியைத் தவிர வேறெந்த முகவரிக்கும் அனுப்பப்படக்கூடாது என்பது சட்டம். என் சட்டம். மேதகு கஹானி வதேராவின் சட்டம். அதுவும் ஸ்நெல் போன்ற உயர் அரசுப் பதவியில் இருப்பவரது மடல்கள் வேறெங்கும் அனுப்பப்படவே கூடாது. பிரமதராகிய நானே கேட்டபோது ஸ்நெல்லால் அதை மறுக்கமுடியவில்லை. மீறி மறுத்தால் இந்த அறிவியல் யுகத்தில் அவன் பிறந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போகச் செய்துவிடமுடியும். இதைப் போல அரசாங்க எதிரிகள் பலரை ஸ்நெல்லே முன்னின்று கொன்றிருக்கிறான். அதனால் அவன் மறு பேச்செதுவும் பேசாமல் ஒத்துக்கொண்டான்.

அந்தக் குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். அது ஸ்நெல்லின் முன்னுரையுடன் ஆரம்பித்தது.

* மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு. கஹானி வதேராவுக்கு என் மரியாதையான வணக்கங்கள். வேறு வழியில்லாமலேயே இந்தப் பிரதியை உங்கள் கைகளில் தருகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இதன் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் வரையில்தான் என்னுயிருக்குப் பாதுகாப்பு இருக்கும். இதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்றாலும் உங்களின் மேதகு கவனத்திற்குக் கொண்டுவருவது என் கடமையாகிறது.

* நீங்கள் சில குறிப்புகள் கொடுத்து அதன் அடிப்படையில் இக்கட்டுரையைத் தயார் செய்யச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் கேட்டிருந்த விவரங்கள் அனைத்துமே நீங்கள் முன்னரே அறிந்தவைதான். மேதகு பிரதமரின் கட்டளைக்கிணங்கி அவற்றைத் தந்திருக்கிறேன்.

* ஒரு வசதிக்காக 2100-ஆம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன்னரே நமது நாடு அறிவியலின் அதிகப் பயன்பெறு நாடாக மாறிவிட்டபோதும், 2100-ஆம் ஆண்டிலிருந்து தொடரும் ஆண்டுகளையே நமது நாட்டின் அதி வேக வளர்ச்சி ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கீகரித்தன. அதனால் 2100-ஆம் ஆண்டிலிருந்தே தொடங்குகிறேன்.

* 2100-ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத ஓர் அறிக்கையை, அன்றையப் பிரதமராக இருந்த திரு.சஞ்சீவ் சிங் வெளியிட்டார். திரு. சஞ்சீவ் சிங் வெளியிட்ட அறிக்கை நமது பாரதத்தையே ஸ்தம்பிக்க வைத்தது எனலாம். எதிர்க்கட்சிகள் மற்றும் அரசு ரகசியக் குழுக்களின் முடிவை மீறி, அவர் அந்த அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் நடக்கும் விஷயங்கள் ஒரு வெளிப்பாடான தன்மை கொண்டிருக்கவேண்டும் என்ற அவரது கொள்கை அவ்வறிக்கையை வெளியிடச் செய்தது. அதன்படி 1930 ஆண்டு தொடக்கத்திலிருந்து, முக்கியமான ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவற்றின் க்ளோன்களை நாம் நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட முடியும் என்றும் அதற்கான முயற்சிகள் பரிசீலனைக் கட்டத்தைத் தாண்டி, வெற்றி பெற்றிருக்கிறது என்று அரசின் சார்பாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பினால் அவரது ஆட்சி பறிபோனது. அதைத் தொடர்ந்து வந்த அரசுகள் க்ளோனிங் முறைப்படி புதிய படி-உயிரிகள் தயாரிக்கும் திட்டத்தைத் தடை செய்தன.

* 2220-ஆம் ஆண்டைப் பற்றிய சில குறிப்புகளைக் கேட்டிருந்தீர்கள். அப்போது பாரதப் பிரதமராக இருந்தவர் தற்போதைய எதிர்க்கட்சியின் ஸ்தாபகரான திருமதி.ரேணுகா பிஸ்வால். அவர் க்ளோனிங் உருவாக்கத் தேவையான மரபணுக்களைச் சேகரித்து வைத்திருக்கும் மையம் [Clone and Bio-Technology Institute of Pune] புனேவில் இருந்தது என்றும் அது அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அறிவித்தார். மேலும், மரபணுக்களைச் சேகரித்து வைப்பதுவோ, க்ளோனிங் முறையில் படி-உயிரி தயாரிப்பதுவோ, மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவித்தார்.

* 2276-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப்போரில் உலகம் பெரும் நாசங்களைச் சந்தித்தது. அப்போது உங்கள் தந்தையார் பிரதமராக இருந்தார். உலக வல்லரசுகளாக இருந்த பெரும் நாடுகள் தங்கள் சாவுமணியைத் தாமே அடித்துக்கொண்டன. சுமார் ஏழரை ஆண்டுகள் நீடித்த அப்போர், அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டதால் ஒரு முடிவுக்கு வந்தது. உலகின் ஜனத்தொகையில் 36% மடிந்ததாக ஐ.நா.வின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் லேசான சேதத்துடன் தப்பித்துக்கொண்டன.

* 2285- ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் உங்கள் தந்தையார் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் வெற்றி பெற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் அறிவியல் துறை அசுர வளர்ச்சி கண்டது.

* 2289-ஆம் ஆண்டு, கத்தாரில் நடந்த ஒரு மாநாட்டில் பங்கேற்க உங்கள் தந்தை மேதகு ரஜதேவ் வதேரா சென்றிருந்தபோது, அவரைப் போன்ற மனிதர் ஒருவரை டில்லியில் பார்த்ததாக எதிர்க்கட்சிகள் புரளியைக் கிளப்பின. அதைத் தொடர்ந்து க்ளோனிங் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது. தன்னைப் போல க்ளோனிங் உருவாக்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் பரப்பிய குற்றச்சாட்டை மேதகு ரஜதேவ் வதேரா வன்மையாக மறுத்தார்.

* 2290-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மேதகு ரஜதேவ் வதேரா பெரும் தோல்வி அடைந்தார். க்ளோனிங் விஷயத்தை எதிர்க்கட்சிகள் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டன. தோல்வியினால் துவண்ட மேதகு ரஜதேவ் வதேரா, அதே ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்குப் பின்னரும் அவரது க்ளோனிங் பற்றிய புரளிகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஆனாலும் அவரது அறிவியல் மற்றும் உயிரியல் துறைகளின் மீதான தீர்க்க தரிசனத்தை முன்னிறுத்தி, உலக நாடுகள் அனைத்தும் அவரை “நவீன பாரதத்தின் தந்தை” என்று அங்கீகரித்தன.

* 2298-ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் உங்கள் தலைமையில் நமது கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 22 ஆண்டுகள் நீங்கள் தொடர்ந்து பாரதத்தின் பிரதமராக, யாராலும் அசைக்க முடியாத நிரந்தரத் தலைவராக நீடித்து வருகிறீர்கள். நீங்கள் அறிவியல் துறையில் செய்த சாதனைகள் மகத்தானவை.

* நமது அறிவியல் யுகத்தில் உலகமே நம்மைத் திரும்பி நோக்கியது 2303-ஆம் ஆண்டில்தான். அந்த ஆண்டுதான் க்ளோனிங் முறைப்படி படி-உயிரி செய்வது தவறல்ல என்ற கொள்கை முடிவை நமது அரசு அறிவித்தது. அதை அறிவித்த நாளே உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாளாக நீங்கள் பிரஸ்தாபித்துக்கொண்டீர்கள். உலகில் முதன்முதலாக, க்ளோன் உயிரி உருவாக்கப்படுவது தவறல்ல எனக் கொள்கை முடிவெடுத்த நாடு நமதே. மேலும் 1930-ஆம் ஆண்டுமுதல் முக்கிய ஆளுமைகளின் மரபணுக்கள் சேமிக்கப்படுகின்றன என்றும் அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் [CBTI of Pune] அவற்றை இன்னும் பாதுகாத்து வருகிறது என்றும் அறிவித்தீர்கள். முன்னாள் பிரதமர் திருமதி. ரேணுகா பிஸ்வால் 2220-ஆம் ஆண்டு அறிவித்தது போல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் அழிக்கப்படவில்லை என்றும் அறிவித்தீர்கள். இதுவரை ஆண்ட எல்லாக் கட்சிகளும் இத்திட்டத்திற்கு மறைமுக ஆதரவைக் கொடுத்தன என்றும் இனியும் மரபணு சேமிப்புத் தொடரும் என்றும் அறிவித்தீர்கள். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களை அறிவியல் வன்கரம் கொண்டு அடக்கியது நமது அரசு. க்ளோன் முறைப்படி படி-உயிரி தயாரிக்கப்படுவதை எதிர்த்த அனைத்து மனிதர்களும் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து க்ளோன் எதிர்ப்புக் கலவரம் மெல்ல அடங்கியது. நமது நாடும் அறிவியல் யுகத்தில் ஆழமாகத் தன்னைப் பதித்துக்கொண்டது.

* பல முற்காலத் தலைவர்களை ஒத்த க்ளோனிங் மாதிரிகளைப் பற்றிய கட்டுக்கதைகளும் புரளிகளும், திரைப்படங்களும் இப்போதும் நம் நாட்டில் உலவி வருகின்றன. ஆனால் நம்முடைய அரசு கொள்கை முடிவாக ஏற்றுக்கொண்டதே ஒழிய, எந்தத் தலைவரின் உயிர் மாதிரியையும் உருவாக்கவில்லை என்பதே உண்மை.

இன்னும் நீண்டு கொண்டு செல்லும் அறிக்கை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. ஸ்நெல் என்னைச் சந்தோஷப்படுத்தும் குறிப்புகளை மட்டும் தந்திருக்கிறான் போல. அவனைத் தொலைபேசியில் அழைத்தேன்.

“மேதகு பிரதமருக்கு என் வந்தனங்கள்”

“நான் கேட்பதற்குச் சுருக்கமாய்ப் பதில் சொல். க்ளோனிங் முறைப்படி உயிரிகள் நமது அரசில் உருவாக்கப்படவே இல்லை என்கிறாயா? உண்மையச் சொல்.”

“மேதகு பிரதமர் அறியாததல்ல…”

“எனக்குத் தேவையற்ற விளக்கங்கள் வேண்டாம். நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்.”

“நான் நேரில் வருகிறேன்” என்றான் ஸ்நெல்.

ஐந்து நிமிடங்களுக்குள் ஸ்நெல் வந்தான். யாராலும் வேவு பார்க்கமுடியாத என் ரகசிய அறைக்குள் சென்றோம்.

“ஸ்நெல், எத்தனை க்ளோன்களை இதுவரை நாம் உருவாக்கியிருக்கிறோம்?”

“நீங்கள் மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாததல்ல…”

“சரி விஷயத்திற்கு வருகிறேன். நீ நினைப்பது போல நான் கஹானி வதேரா அல்ல”

ஸ்நெல் அதிந்து, “க்ளோன்?” என்றான். நான் தலையசைத்தேன். ஸ்நெல்லுக்கு வேர்த்தது. அவனது கவனமெல்லாம், நான் எப்படித் தப்பினேன், எப்படி இங்கு வந்தேன், நிஜமான கஹானி வதேரா என்ன ஆனான் என்பது பற்றியே இருந்தது.

“இந்த நாட்டின் நன்மையைக் கருதி, கஹானி வதேரா இனியும் பிரதமராகத் தொடர்ந்தால், நாட்டில் ஜனநாயகம் என்பதே ஒழிந்துவிடும் என்று யூகித்து, இந்தத் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாகச் செயல்படுத்தினோம்”

“நாங்கள் என்றால்…?”

பெயர்களைச் சொன்னேன். ஸ்நெல்லால் நம்பவே முடியவில்லை.

“நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் மேதகு கஹானி வதேராவின் அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள். அவர்களா?!”

“அதனால்தான் இந்தத் திட்டம் சாத்தியமாயிற்று. அரசின் அதி ரகசியக் குழுவின் அங்கத்தினர்கள் வேவு பார்க்கப்படுவதில்லை என்பதை நீ அறிவாயே…!”

நான் தொடர்ந்தேன்.

“அந்தக் காலத்தில் மகன் தகப்பனுக்குக் கொள்ளி வைப்பானாம். கஹானி வதேராவுக்கு அவன் தகப்பன் ரஜதேவ் வதேராவே கொள்ளி வைத்தான். பாரதத்தின் முதல் க்ளோன் யாரென்று தெரியுமா? நான் தான். கஹானி வதேரா பிறந்த உடனேயே நானும் உண்டாக்கப்பட்டேன். இருவருக்கும் ஒரே வயது, ஒரே உருவம். ஆனால் எண்ணங்கள் மட்டும் வெவ்வேறு. கஹானி வதேராவின் பல திட்டங்கள் நாட்டைச் சீரழிப்பதாயும் அவனைத் தவிர வேறு யாரும் நாட்டின் தலைவனாக முடியாது என்பதைச் செய்யும் நோக்கம் உடையதாயும் அமைந்ததை நீ அறிந்திருப்பாய். இந்தியாவில் கிராமங்களே இருக்கக்கூடாது என்பதற்கு அவன் மேற்கொண்ட ஆபரேஷனில் எத்தனைக் கிராமங்களும் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் அழிந்தார்கள் என்பது நீ அறிந்ததுதானே? ஒரு புள்ளி விவரக் கணக்கு 22 கோடி மக்கள் இறந்ததாகத் தெரிவிக்கிறது. அவர்கள் பிறந்து உயிர் வாழ்ந்ததற்கான தடயங்கள் கூட இல்லை.”

இதைச் சொல்லும்போதே எனக்குப் பதறியது.

“நீ அவனை எதிர்த்துப் பேசினால், நீ இம்மண்ணில் பிறந்ததற்கான அடையாளமே தெரியாமல் போகச் செய்யும் அளவிற்கு இந்நாட்டில் அறிவியல் மற்றும் உயிரியல் துறைகள் அவனுக்கு ஒத்துழைக்கத் தயாராய் இருக்கின்றன. அதற்குப் பயந்துதானே என்னிடம் இந்தப் பிரதிகளை மின்னஞ்சலுக்கு அனுப்பாமல் என்னிடம் தந்தாய்?”

ஸ்நெல் தலையாட்டினான்.

“இப்படி நேரும் என்று முன்னரே உணர்ந்த எங்கள் குழு என்னைப் பயிற்றுவிக்கத் தொடங்கியது. எனக்கு இருந்த சில மனத் தடைகள் மெல்ல மெல்ல நீங்கத் தொடங்கின. நானே என் மன அளவில் கஹானி வதேராவாக மாறத் தொடங்கினேன்.”

“திரைப்படம் பார்ப்பது போல இருக்கிறது”

“எனக்கும் அப்படித்தான். ஆனால் எனக்கு இப்போது தெரியவேண்டியது ஒரே ஒரு விஷயம். ரஜதேவ் வதேரா எத்தனை க்ளோன்களை உருவாக்கினான்? மூன்று க்ளோன்களை உருவாக்கியதாகச் சில வாய்மொழிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதற்கான விவரங்களோ தடயங்களோ இல்லந. முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மூன்று க்ளோன்கள் உருவாக்கப்பட்டதாக நான் யூகிக்கிறேன். ஒன்று நான். மற்ற இருவர் யாரென்று தெரியுமா? எங்கள் குழுவால் அதைக் கண்டறிய முடியவில்லை.”

“அது மேதகு கஹானி வதேராவுக்குத்தான் தெரியும்.”

“நீ என்னை நம்பவில்லை என்று நினைக்கிறேன். நிஜமாக நான் கஹானி வதேரா இல்லை. நான் அவரது க்ளோன். கஹானி வதேராவை உனக்குக் காட்டுகிறேன் வா” என்று அருகில் இருக்கும் ஒரு ப்ளாஸ்மா திரையின் சுவிட்சை அழுத்தினேன். திரை ஒளிர்ந்தது. ஒரு கண்ணாடிப் பேழையில் குழந்தை போல கஹானி வதேரா உறங்கிக்கொண்டிருந்தான்.

“இந்த விவரம் போதுமா, இல்லை என் குழுவைச் சேர்ந்த மற்றவர்களையும் உன்னிடம் பேசச் சொல்லட்டுமா”

“வேண்டாம். நான் சொல்கிறேன். மூன்று க்ளோன்கள் என்பது தவறு. மொத்தமே இரண்டு க்ளோன்கள்தான் உருவாக்கப்பட்டன. ஒன்று நீங்கள். இன்னொன்று காந்தி.”

“காந்தி?”

“இன்றுவரை மஹாத்மா என்று போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் காந்தி. மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. 1948-இல் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி. நம் கட்சியின் ஸ்தாபகராக நாம் அங்கீகரித்திருக்கும் காந்தி. மக்கள் மனத்தில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும் காந்தி.”

எனக்குத் தலை சுற்றியது.

“அவரை ஏன் உருவாக்கினான் ரஜதேவ் வதேரா?”

“நீங்கள் சொன்ன விஷயங்களில் நிறையத் தகவல் பிழைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விளக்குகிறேன். இவை கஹானி வதேராவின் சட்ட இலக்கணப்படி ராஜதுரோகமாகும். இருந்தாலும் சொல்கிறேன். நம் நாட்டின் நன்மையைக் கருதி”

ஸ்நெல் சொல்லத் தொடங்கினான்.

“முதல் க்ளோன் நீங்கள். அதை உருவாக்கியது ரஜதேவ் வதேரா. காந்தியின் க்ளோன் வைக்கப்பட்ட இடத்தில் நீங்கள் இல்லை. உங்களை ரகசியமான இடத்தில் வைத்திருந்தார் ரஜதேவ் வதேரா. அது எந்த இடம் என்று எனக்குத் தெரியாது. இரண்டாவது க்ளோன் மஹான் காந்தி. அதை உருவாக்கியது கஹானி வதேராதான். ரஜதேவ் வதேரா அல்ல. அதற்கான காரணம் விநோதமானது. என்னதான் சர்வாதிகார ஆட்சி செய்தாலும், ஏதேனும் ஒரு காலத்தில் மக்கள் பெரும் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்றே எதிர்பார்த்தான் கஹானி வதேரா. அப்போது இந்தக் காந்தி க்ளோனை வைத்து ஒரு நாடகம் நடத்தி மக்களை அமைதிப்படுத்த முடியும் என்று நம்பினான். அதற்குக் காரணம், கடந்த ஆயிரம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த தலைவர் காந்திதான் என்று தனிப்பட்ட அளவில் தீவிரமாக நம்பியதே. அதனால் காந்தியால் பெரும் கலகத்தைக் கட்டுக்குக் கொண்டுவரமுடியும் என்பதில் உறுதியாக இருந்தான் கஹானி வதேரா. இப்படி ஒரு எண்ணத்தை அவனுக்குத் தந்தவர்கள் அவன் மிக நம்பும் அறிவியல் மற்றும் உயிரியல் தொழிநுட்பப் பிரிவைச் சேர்ந்த கஹானி வதேராவின் தீவிர விசுவாசிகள். மக்கள் காந்தியின் மீது வைத்திருக்கும் அன்பும் பிம்பமும் அபரிமிதமானது. இன்னும் எங்கேனும் ஒரு மூலையில் காந்தியைப் பற்றிய மக்களின் ஏக்கக் குரலைக் கேட்கமுடியும். அவரைப் போன்ற ஒரு பிம்பம் பாரதத்தில் தோன்றாதா என்று ஏங்குவதைக் காணமுடியும். ஆனால் காந்தியின் க்ளோன் வளர வளர கஹானி வதேராவின் எண்ணம் வலுவிழந்தது. காந்தியின் க்ளோன் தான் ஒரு மஹானின் க்ளோன் என்பதை அறிந்த பிறகு, காந்தியைப் பற்றிய வரலாற்றையும் சாகசங்களையும் படித்த பிறகு, அன்பு, ஆன்மிகம், அஹிம்சை என்று பேச ஆரம்பித்துவிட்டான். கஹானி வதேராவுக்கு எதிரான தனது கருத்துகளையும் கூற ஆரம்பித்துவிட்டான். உயிரியல் தொழிநுட்பப் பூங்காவில் கஹானி வதேராவின் அறிவியல் மய வேகத்தை எதிர்த்து ஒருமுறை உண்ணாவிரதம் கூட இருந்தான். இவன் வெளியில் வருவது ஆபத்து என்பதை உணர்ந்த கஹானி வதேரா காந்தியின் க்ளோனை ஆழ் மயக்கத்தில் ஆழ்த்திவிட்டான். காந்தியின் க்ளோனை கஹானி வதேரா கொன்றுவிடுவான் என்றே நான் எதிர்பார்த்தேன்.”

“ஸ்நெல் நன்றி. இனி நான் பார்த்துக்கொள்கிறேன்”

“என்ன செய்யப் போகிறீர்கள்?”

“பொறுத்திருந்து பாருங்கள்”

* * *

இரண்டு நாள்களில் எங்கள் குழு ஒரு திட்டத்தைத் தயாரித்தது. அதற்கு ஆபரேஷன் – அஹிம்சா என்று பெயரிட்டோ ம். அதன்படி, காந்தியின் க்ளோனை விடுவிப்பது என்றும், கஹானி வதேராவாகிய நானே அவரை எங்கள் கட்சியின் தலைவராக்குவது என்றும், அவரது தலைமையின் கீழ் பாரதம், அறிவியல் மயத்திலிருந்து குறைந்து மீண்டும் பசுமைக்கும் அன்புக்கும் அஹிம்சைக்கும் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும் காந்தியின் க்ளோன் பதவி ஏற்றதும் யாரும் அறியாதவாறு கஹானி வதேராவைக் கொல்லவும் முடிவு செய்தோம். அனைவரும் கைகுலுக்கிக் கொண்டோ ம். ஆபரேஷன் – அஹிம்சா ஆரம்பமானது.

ஆனால் விஷயம் நாங்கள் நினைத்தவாறு எளிதாக இருக்கவில்லை. காந்தியின் க்ளோனை எளிதில் விடுவித்துவிட்டோ ம். கஹானி வதேராவே சொல்வதாக எண்ணி, உயிரியல் தொழில் நுட்பப் பூங்காவின் இரகசிய அதிகாரிகள் மிக ஒத்துழைத்து, காந்தியின் க்ளோனை வெளிவிட்டார்கள். கஹானி வதேராவின் ஒவ்வொரு அசைவிற்கும் அறிவியல் நிழலுலகம் எப்படி அசைகிறது என்பதைப் பரிபூர்ணமாக உணர்ந்தேன். நம் நாட்டைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற என் எண்ணம் வலுத்தது. ஆனால் காந்தியின் க்ளோன், காந்தி போலவே இருந்தான், மனத்தளவிலும். இந்த யுகத்திலும் இப்படி ஒருவன் இருக்கமுடியுமா என்று அதிசயக்க வைத்தான் காந்தியின் க்ளோன். தனக்குப் பதவி மோகம் இல்லை என்றும் தான் பதவியில் அமரப்போவதில்லை என்றும் மிக உறுதியாகக் கூறத் தொடங்கினான். எங்கள் குழு அவனுக்குப் பெரும் விளக்கம் அளித்தது. ஒருவழியாக அவன் எங்கள் ஆபரேஷன் – அஹிம்சாவிற்குச் சம்மதித்தான்.

* * *

நாடே அல்லோகோலப்பட்டது. உலகின் முதல் மனித க்ளோனாக காந்தியின் க்ளோன் அறிவிக்கப்பட்டது. தங்கள் ஆதர்ச நாயகனை நேரில் பார்த்த அனைத்து மக்களும் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார்கள். “மஹான் காந்தீ மஹான்” என்ற பழம் பிராந்தியப் பாடல் பல இடங்களிலும் ஒலித்தது. காந்தியின் க்ளோனைக் காண [இனி காந்திஜி, எங்கள் பாரதத்தின் பிரமராகப் போகும் மாண்புமிகு காந்தியின் க்ளோனை இனி அப்படித்தான் என்னால் அழைக்கமுடியும்] நாடெங்கும் ஜனத்திரள் திரண்டது. அறிவியல் மயத்திலிருந்து, எந்திரத் தனத்திலிருந்து நாட்டைப் பசுமைக்கும் சுபிக்ஷத்திற்கும் கூட்டிச் செல்ல காந்திஜியினாலே மட்டுமே முடியும் என்று அனைவரும் பிரஸ்தாபித்தார்கள். பழம் படங்களிலிருந்து கண்டுகொண்ட சில மனிதர்கள் குல்லா கூட வைத்திருந்தார்கள். நாடே மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர் நிஜமான சந்தோஷத்தில் திளைத்திருந்தது.

அதிகாரப்பூர்வமாக எங்கள் கட்சியின் தலைவராகக் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் எங்களைப் பாராட்டின. எங்கள் இந்த முடிவு, நாட்டில் நிஜமான ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் என்றும் பாராட்டினார்கள். மீண்டும் க்ளோன் முறையில் படி-உயிரி தயாரிப்பதைத் தடை செய்யவும் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திஜியும் நானும் இதை வெகுவாக ஆதரித்தோம். மேலும் இனிமுதல் தனிமனிதனைத் தொடரும் அறிவியல் நிழலுலகம் செயலிழக்கப்படுகிறது என்றும் தனிமனிதனின் தனிப்பட்ட செயல்கள் கண்காணிப்பு உள்ளிட்ட ஜனநாயகத்திற்கு விரோதமான எதையும் அரசு செய்யாது; ஊக்குவிக்காது என்றும் அறிவிக்கப்பட்டது. அது அன்று முதலே நடைமுறைக்கு வரவேண்டும் என்று காந்திஜி விரும்பினார். ஏகமனதாக எல்லாக் கட்சிகளும் அதை ஆதரிக்க, நான் கையெழுத்திட [நான் கையெழுத்திடும் முதலும் கடைசியுமான சட்டம் இதுதான் என்பதை எண்ணிக்கொண்டேன்] கஹானி வதேராவின் கடைசிச்சட்டம் இதுவெனப் பத்திரிகைகள் எழுதின. மேலும் கஹானி வதேராவுக்கு ஞானோதயம் வர காந்திஜி வேண்டியிருக்கிறது என்றும் எழுதின. காந்திஜியும் நானும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டோ ம். நான் மெல்ல அவர் காதில், “க்ளோன்களின் யுகம் க்ளோன்களால் முடிவுக்கு வருகிறது” என்றேன். அவர் தலையசைத்தார்.

வரும் ஞாயிறன்று காந்திஜி நம் பாரதத்தின் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

எங்கள் ஆபரேசன் அஹிம்சாவின் அடுத்த கட்டத்தைச் செயல்படுத்த ஆயத்தமானோம். காந்திஜிக்கும் தெரியாத திட்டம் இது. எங்கள் திட்டப்படி சனி அன்று இரவு நிஜமான கஹானி வதேராவை வதம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். உண்மையில் எங்கள் குழு அதற்கான நிமிடங்களுக்காகக் காத்திருந்தது. சரியாக அன்றிரவு எட்டு மணிக்கு நாங்கள் கஹானி வதேராவை மறைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்றோம். அவன் ஆழ் நித்திரையில் இருந்தான். ஒரு ஊசி மூலம் கொல்ல ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் அவனை உயிர்ப்பித்து, அவனிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி, அவனைக் கொல்லவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கஹானி வதேரா ஆழ் நித்திரையிலிருந்து எழுப்பப்பட்டான். எங்களைப் பார்த்ததும் உயிரில்லாமல் சிரித்தான். என்னைப் பார்த்து “ஹாய்” என்றான். எனக்குப் பாவமாக இருந்தது. “உன்னைக் கொல்லப் போகிறோம்” என்றேன். “நீயே உன்னைக் கொல்வது, எனது அரசின் சாதனை” என்றான் முனங்கியவாறே. அருகிலிருந்த எங்கள் குழுவைச் சேர்ந்த உயிரியல் அதிகாரிகள், அவன் உயிர்ப்பித்த காந்தியின் க்ளோனை வைத்தே நாட்டைச் சுபிக்ஷமாக்கப் போவதாகச் சொன்னார்கள். மெல்லப் புன்னகை செய்தான். சரியாக 8.06க்கு அவனுக்கு மரண ஊசி ஏற்றப்பட்டது.

“என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றான் கஹானி வதேரா.

சில விநாடிகளில் அவன் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான். என் உருவம் என் கண் முன்னே இறக்கும் அதிசய நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

* * *

ஞாயிற்றுக்கிழமை.

நாடே கோலாகலத்தில் மூழ்கியிருந்தது. இடுப்பில் வேட்டி மட்டும் கட்டி, மூக்குக் கண்ணாடி அணிந்த அரைக்கிழவர் பாரதப் பிரதமராகப் போகும் அந்தக் கனவு நிமிடங்களுக்காக இந்தியாவே காத்திருந்தது. உலகின் அனைத்து நேச நாடுகளும் தத்தம் பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற அரங்கில் காத்திருந்தார்கள். எதிர்க்கட்சிகள் கூட அத்தனை உற்சாகமாய் இருந்தன.

காந்திஜி வாய் நிறையப் புன்னகையுடன் பாராளுமன்றக் கட்டிடத்தை நோக்கி நடந்துவந்தார். வழியெங்கும் அவருக்கு மலர்கள் தூவப்பட்டன. சிரித்த முகத்துடன் காந்திஜி அதை ஏற்றுக்கொண்டார். சிறிது நாளில் காந்தியின் க்ளோன் காந்திஜியாகவே மாறிவிட்டதை நினைத்து எனக்குச் சந்தோஷமாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

இன்னிசை கீதங்கள் முழக்கப்பட்டன. யானைகள் அணிவகுத்து நின்று மலர் தூவின.

அமைதியான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு யானைக்கு மதம் பிடித்திருக்கவேண்டும் என்றே நினைத்தேன் நான்.

திடீரென்று கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு மனிதன் எந்திரத்துப்பாக்கியுடன் காந்திஜியை நோக்கி முன்னேறி வந்தான்.

“ஐ’ம் ஸாரி காந்திஜி” என்று சொல்லி அவரை நோக்கிச் சுட்டான்.

காந்திஜி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தார்.

அனைவரும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். நான் அவனை நோக்கி ஓடினேன். அனைவரும் அவனைப் பிடித்து உலுக்கி யாரென்று கேட்டார்கள்.

அவன், “நாதுராம் கோட்ஸே” என்றான்.

சிதறியிருந்த ரத்தத் துளிகளில் கஹானி வதேராவின் முகம் தோன்றி, “என்னை இந்நாடு மறக்கவே முடியாது” என்றது.

* * *

Share