6th standard Tamilnadu stateboad Tamil book

ஆறாம் வகுப்புக்குரிய தமிழ்ப் பாட நூலை இன்று தரவிறக்கிப் பார்த்தேன். முழுமையாக ஆனால் மேலோட்டமாக ஓட்டிப் பார்த்ததில் –
 
* புத்தகம் நன்றாக வந்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம். பழமை புதுமை என்பதை ஓரளவுக்குச் சரியாக பகுத்து நிரவி இருக்கிறார்கள்.
 
* கடவுள் வணக்கம் இல்லை. தமிழ் வணக்கம் உள்ளது. புத்தகம் முழுக்க கடவுள் இன்றி இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது போன்ற பிரமை. புத்தர் பற்றி உள்ளது. வள்ளலார் பற்றி வரும்போது அவரது கருணையைச் சொல்கிறார்கள். தெரசாவைப் பற்றிச் சொல்லும்போதும் கருணையை மட்டுமே சொல்கிறார்கள். பொங்கல் பற்றிய பாடத்தில்கூட கதிவரனுக்கு நன்றி சொல்கிறார்கள், இயற்கையை வழிபடுகிறார்கள் என்று வருகிறதே ஒழிய, மறந்தும் பொங்கல் அன்று கடவுளை வழிபடுவார்கள் என்று சொல்லிவிடவில்லை. பராபரக் கண்ணியைக்கூட செக்யூலராகச் சொல்லி இருக்கிறார்கள். தாயுமானவரின் படம் பட்டையின்றி வெற்றுடலாக உள்ளது.
 
* காணி நிலம் வேண்டும் என்ற பாடல் உள்ளது. பாடலில் பராசக்தி என்று வருகிறது. பாடலின் பொருளில் பராசக்தி என்ற பெயர் இல்லை. 🙂
 
* சிலப்பதிகாரம், மணிமேகலை (நாடகவடிவில்) உண்டு.
 
* சிறகின் ஓசை – சிட்டுக்குருவி பற்றிய பாடம் இனிய அதிர்ச்சி. மகிழ்ச்சி. சலீம் அலியைப் பற்றிய குறிப்பும் உண்டு.
 
* கிழவனும் கடலும் புதினத்தின் ஒரு சிறிய பகுதி – காமிக்ஸ் வடிவில். அட்டகாசம்.
 
* முதல் எழுத்தும் சார்பெழுத்தும் – இதற்குத் தரப்பட்டிருக்கும் குறிப்புப் படம் (யானையும் பின் தொடரும் குட்டி யானைகளும்) நல்ல கற்பனை. அதேபோல் மொழி முதல் எழுத்துகள், இறுதி எழுத்துக்களுக்கான படமான புகைவண்டியின் படமும்.
 
* மூதுரைக்குப் பின்னே உள்ள நூல்வெளி பகுதில் இருக்கும் ஔவையார் நல்லவேளை பட்டை போட்டிருக்கிறார்.
 
* அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி ஒரு பாடம் உள்ளது.
 
* புத்தகத்தில் வரும் பெயர்கள் எல்லாம் ‘தூய்மையாக’ உள்ளன. இனியா, கணியன், கயல், முகிலன், செல்வன், வளவன், அமுதா, எழிலன், கரிகாலன்(!), மலர்க்கொடி, கவிதா, மாதவி. என்ன, பாத்திமா, பீட்டரும் உண்டு. ராமன், சிவனைத்தான் காணவில்லை.
 
* புதுமைகள் செய்த தேசமிது கவிதையில் இந்திய ஒருமைப்பாடு பேசப்பட்டுள்ளது.
 
* புத்தகம் முழுக்க பல விதங்களில் இடம்பெறுபவர் திருவள்ளுவர்.
 
* இணையச் செயல்பாடு என்று உரலி மூலம் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தி உள்ளார்கள். QR code உண்டு. பதினோறாம் வகுப்புப் பாடத்தின் QR codeஐ க்ளிக்கியபோது வீடியோ வந்தது. (அந்தக் கொடுமை பற்றி பின்னர்!) இந்த கோட்-ஐ க்ளிக்கினால் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
* உ.வே.சாமிநாதர் பின்னொட்டின்றி தோழராக இங்கேயும் தொடர்கிறார். ஆனால் நரசிம்மவர்மனை வர்மத்தோடு உலவ விட்டிருக்கிறார்கள். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வருகிறார்.
 
* எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் சிறுகதை ஒன்று இருக்கிறது.
 
நான் ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த முதல் பாடல் – கடவுள் வாழ்த்து – வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி பாடல். இன்றைய நவீன பாடத்திட்டத்தில் ஹிந்து மதக் கடவுள்களின் வாசம் முழு வீச்சில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று – பாஜக இந்திய அளவில் இதற்கிணையாக இப்படிச் செய்யவேண்டும் அல்லது முற்போக்காளர்கள் இப்படிப் பாடத்திட்டம் இருப்பதை ஒரே அளவுகோலில் இந்தியா முழுமைக்கும் ஏற்கவோ கண்டிக்கவோ வேண்டும்.
Share

சூழல் பேணல்

நான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.
 
பிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.
 
 
இன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.
Share

ரஜினியின் தூத்துக்குடி பயணம்

ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது. ரஜினி என்ற பெயர் மட்டும் போதுமானது என்பது இன்று மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை ரஜினி, நடிகரைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று சொன்னது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இது உண்மை என்றாலும் இந்நேரத்தில் இதைச் சொல்லக்கூடாது. ஆனால் ரஜினிக்கு இதெல்லாம் புதியது. மெல்ல மெல்லப் பழகுவார். பழக்குவார்கள். ஆனால் ரஜினியை மருத்துவமனையில் பார்த்தவர்கள் அவர் சொன்னதை உண்மை என்று நிரூபித்தார்கள். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகவும் கொஞ்சம் எரிச்சலாகவும் கூட இருந்தது.
ரஜினி தூத்துக்குடிக்குப் போகிறார் என்ற செய்தி வந்ததும், அங்கே அவருக்கு எவ்விதமான வரவேற்பு இருக்குமோ என்று ஒரு கணம் யோசிக்கவே செய்தேன். ஆனால் ஃபேஸ்புக் வேறு, நிஜ உலகம் வேறு என்பதை மீண்டும் உணர்த்தியது இன்றைய ரஜினியின் தூத்துக்குடி பயணம். அங்கே முற்போக்காளர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நடக்கவில்லை என்பதாலும், அங்கே ரஜினியை வருங்கால முதல்வர் என்றெல்லாம் அவர்கள் புகழ்ந்ததைப் பார்த்ததாலும், அடுத்த நான்கைந்து நாளைக்கு இன்னும் தீவிரமாக ரஜினியைத் திட்டித் தீர்ப்பார்கள் என்பது உறுதி.
மோதியைப் பிரதமராக்கியது போல ரஜினியையும் இவர்களே முதல்வராக்குவார்கள். யார் சென்றால் கூட்டம் வருகிறது, அது எந்த மாதிரியான கூட்டம், அது சொல்லும் செய்தி என்ன என்று புரிந்துகொள்பவர்களுக்கு ரஜினிக்கு இன்று கிடைத்த வரவேற்பின் உள்ளர்த்தம் புரியும். புரியாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விரும்பாதவர்கள் அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பவர்கள், நயந்தாரா வந்தாலும் இதே கூட்டம் வரும் என்று சொல்லிவிட்டு தப்பிப்பார்கள். தப்பிக்கட்டும்.

Share

இரும்புத் திரை

இரும்புத்திரை
 
ஸ்மார்ட் போன், ஆதார் அட்டை தகவல்கள் கசிவு போன்ற தகவல்கள் மக்களுக்கு உருவாக்கி இருக்கும் குழப்பத்தை அறுவடை செய்திருக்கிறது இத்திரைப்படம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டின் கட்டற்ற தகவல்கள் பரிமாற்றம் மற்றும் டிஜிடல் தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இருப்பது நிச்சயம் அவசியமே. ஆனால் இத்திரைப்படம் அது பற்றிய பெரிய குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் உருவாக்கிவிடுகிறது. அதையும் மிகக் கச்சிதமான திரைக்கதையின் மூலம் பார்வையாளர்களுக்கு பெரிய அச்சத்தை உண்டுபண்ணுவதில் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் நாளைய உலகத்துக்கு எதிரான ஒன்றே.
 
ஒரு திரைப்படமாக, மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். ஸ்மார்ட் போன் மற்றும் டிஜிடல் தகவல்கள் யாருக்கு அச்சத்தைத் தரவேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு, மத்தியத் தட்டு மக்களைச் சுற்றிக் கதையைப் பிண்ணியது பெரிய சாமர்த்தியம். இதுவே படத்தின் ஆதாரம். ஐநூறு கோடி உள்ளவனுக்குப் பணம் போவதும் வருவதும் வேறு வகையான பிரச்சினை. நாளை அப்பாவுக்கு ஆபரேஷன், அந்த நேரத்தில் ஐந்து லட்ச ரூபாய் வங்கியில் இருந்து எந்தச் சுவடும் இன்றிக் காணாமல் போவது, மத்தியத் தரத்துக்கு வேறு வகையான பிரச்சினை. எது மக்களை அதிகம் சென்றடையுமோ அதைக் கையில் எடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
 
இடைவேளை வரை படம் வேற லெவல். புதிய அலை இயக்குநர்கள் வந்த பிறகு திரைப்படங்களில் ஒரு கறார் தன்மையைப் பார்க்க முடிவதாக எனக்கு ஒரு உணர்வு. அல்லது கலகலப்பு 2 போல மிகக் கேவலமாகத் தரையில் இறங்கி அடிக்கும் படங்கள். இப்படி இல்லாமல் சாதாரணமாக ஒரு நல்ல படத்தைப் பார்க்கமாட்டோமா என்ற எதிர்பார்ப்பை கொஞ்சம் பூர்த்தி செய்கிறது முதல் பாதி .
 
இரும்புத்திரை, முதல் பாதியில் கச்சிதமான வணிகப் படமாக வந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு, டிஜிடல் யுக அம்புலிமாமா சாகஸங்கள் என்னும் அளவுக்கு அலை பாய்கிறது. படத்தின் பலம் வசனங்கள். படு கூர்மை. ஒரு வணிகப்படத்துக்கு இதைப் போன்ற வசனங்கள் பெரிய அவசியம். நாம் சொல்வது தொழில்நுட்ப ரீதியாகப் பொய் என்றாலும், சாத்தியமே இல்லை என்றாலும், அதை மக்கள் நம்பும் அளவுக்கு பலமாக, தரவுகளுடன் சொல்வது போன்ற தோற்றத்தில் சொல்லவேண்டும். அதை அனாயசமாகச் செய்திருக்கிறார் ஆண்டணி பாக்யராஜ் (வசனம் இவர் என்று கூகிள் சொல்கிறது).படத்தின் அடுத்த பலம் அர்ஜூன். அத்தனை கெத்தாக இருக்கிறார். வில்லனாக நடிக்கவேண்டும் என்றால் ஒரு கெத்து தானாக வந்துவிடும் போல. (பல இடங்களில் இவரது குரல் ரஜினியின் குரல் போலவே உள்ளது.)) சமந்தா அழகின் இலக்கணம். ரோபோ ஷங்கர் கலகலக்க வைக்கிறார் – இரட்டை அர்த்தம் தொனிக்கும் ஒரே ஒரு காட்சி தேவையே இல்லாமல் வருகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அட்டகாசம்.
 
ஆதார் கார்ட், ஸ்மார்ட் போன்களில் நாம் பரிமாறிக் கொள்ளும் அதீதத் தகவல்களை ஒட்டி ஒரு திரைப்படத்தை இந்த அளவு சுவாரஸ்யமாக எடுக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. இதை ஒட்டி எங்கெல்லாம் தகவல்கள் கசிய முடியுமோ அத்தனையையும் ஒரு வலைப்பின்னலாக்கியது அபாரம். இயக்குநர் மித்ரன் பாராட்டப்படவேண்டியவர். இது முதல் திரைப்படம் என்கிறது கூகிள். பெரிய நம்பிக்கை தருகிறார். இயக்குநருக்கு வாழ்த்துகள்.
Share

பாலகுமாரன் – அஞ்சலி

பாலகுமாரன் – அஞ்சலி
 
பாலகுமாரன் எழுத்தைப் படித்தே நான் புத்தக வாசிப்புக்குள் வந்தேன். இளமையில் பாலகுமாரன் எழுத்தைப் படிப்பது ஒரு அனுபவம். ஒரு பெண்ணைக் காதலிப்பது போல, ஒரு பெண்ணின் உடல் தரும் கிளர்ச்சி போல, பாலகுமாரனின் எழுத்தை வாசிப்பதும் பெரிய கிறக்கத்தைத் தந்தது. தத்துவம் என்கிற பெயரில் பாலகுமாரன் சொன்னவை பாதி புரிந்தும் பாதி புரியாமல் இருந்தாலும் பாலகுமாரன் எழுத்தே ஒரு விஷயத்தின் பல்வேறு கோணங்களை யோசிக்கக் கற்றுத் தந்தது. தோல்வியை ஏற்றுக்கொள்ள, பழகிக்கொள்ள அரைகுறை புரிதலைத் தந்தது. பின்பு அதிலிருந்து மேலேறிச் செல்ல உதவியது. பாலகுமாரனின் பிற்கால எழுத்துகள் முழுவதும் ஆன்மிகமாகவிட்ட போது, மிக எளிதாக பாலகுமாரனைத் துண்டித்துக்கொள்ளவும் முடிந்தது. ஆனால் வாசித்த காலங்களில் உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர் பாலகுமாரனே என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருந்தது.
 
பெண்களைப் பற்றி பாலகுமாரன் எழுதியவை எல்லாமே ஆண் பார்வையாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு அந்த எழுத்து தரும் பரவசம் அளவற்றது. பெண்மையை உயர்த்தும் ஆண்மை என்பது தரும் கிறக்கம் அது. அதில் உண்மை இல்லாமல் இருந்திருக்கலாம், முழுக்க நாடகப் பாணியிலானதாக இருக்கலாம். ஆனால் அது மிக நெருக்கமாக இருந்தது. பெரும் ஈர்ப்பைத் தந்தது.
 
உணவுக்கும் உடலுக்கும் பெண்ணுக்குமான சித்திரங்களை பாலகுமாரன் வரைந்து தள்ளினார். எல்லாவற்றின் அடிநாதமும் ஒன்றேதான் என இன்று யோசிக்கும்போது புரிகிறது. ஆனால் அன்றைய வாசிப்பில் ஒவ்வொன்றும் ஒரு தினுசாக இருந்தது. கண்ணீர் மல்கவே சில பக்கங்களை வாசிக்கவேண்டி இருக்கும். எத்தனை எத்தனை நாவல்கள்! ஒவ்வொரு வியாழக்கிழமையும் (என நினைக்கிறேன்) நாவல் டைம் அல்லது மேகலா வருவதற்காக அதிகாலையே பத்திரிகைக் கடையில் காத்து நின்றிருக்கிறேன். அன்புள்ள அப்பா, செந்தூரச் சொந்தம், திருப்பூந்துருத்தி, கடலோரக் குருவிகள், என்றென்றும் அன்புடன், கண்ணாடி கோபுரங்கள் என்று எத்தனையோ நாவல்களை மாத நாவல்களாக வாங்கியும் நூலகத்திலும் வாசித்துத் தள்ளினேன்.
 
அந்திமழை இதழுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலை மீண்டும் வாசித்தபோது என் இளமையின் அந்தரங்க நிமிடங்களை நானே திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு சந்தோஷமான திடுக்கிடலை உணர்ந்தேன். நமக்கு நிறைய வாசித்துவிட்ட உணர்வு பெருகும்போது பாலகுமாரன் தேங்கிவிட்டதாகத் தோன்றியதும் தோன்றுவதும் உண்மைதான். ஆனால் அந்த எழுத்துத்தான் என்னை அப்படிப் பிடித்துக்கொண்டது என்பதும் நிஜம்தான். யோசித்துப் பார்த்தால் பாலகுமாரன் ஒரு குறிப்பிட்ட வயதுக்காக எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த வயதொத்தவர்களைப் பிடித்துக்கொள்ளும் பூதம் போன்ற எழுத்து அது. இன்று சாகவாசமாக அதை விமர்சிக்கலாம். அது எளிது. ஆனால் அன்றைய தேதியில் அந்த பாலகுமாரன் தந்த கிளர்ச்சியை, அனுபவத்தை, தத்துவம் மீதான புருவ உயர்த்தலை எல்லாம் மறக்கவே முடியாது. என்றென்றும் நினைவில் இருப்பார் பாலகுமாரன்.
 
திரைத் துறையிலும் பாலகுமாரன் ஒரு வசனகர்த்தாவாக சாதனை செய்தார் என்பதே என் எண்ணம். இளையராஜா மற்றும் கமலுக்கு இணையாக அவர் குணாவிலும் என்றென்றும் தெரிவார் என்றே நம்புகிறேன்.
 
ஓம் ஷாந்தி.
Share

காலா பாடல்கள்

கபாலி படத்தில் – மாய நதி பாடலும் உலகம் ஒருவனுக்கா பாடலும் எனக்குப் பிடிக்காதவை. பிடித்தவை – நெருங்குடா பாடலும் வீரத் துரந்தரா பாடலும்தான். இதை மனத்தில் கொண்டு மற்றவற்றைப் படிக்கவும்.
 
காலாவில் முதல் பாடல் செம வெயிட்டுடா வெளியிடப்பட்ட போது ரொம்ப டிப்ரஸிங்காகவே இருந்தது. பிடிக்கவே இல்லை. நேற்று எல்லாப் பாடல்களும் வெளியிடப்பட்டன. அவற்றைக் கேட்டதில் (3 முறை கேட்டிருக்கிறேன்) –
 
நிக்கல் நிக்கல் – கிளம்பு கிளம்பு பாடல் மிக அட்டகாசம். இதுவே பெஸ்ட் இப்போதைக்கு. யார் வெச்சது யார் வெச்சது உங்க சட்டமடா அடுத்த கலக்கல். கிளம்பு பெஸ்ட்டா யார் வெச்சது பெஸ்ட்டா என்று இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே அட்டகாசம். நிலமே என் உரிமையின் பின்னணியில் வரும் (இஸ்லாமியப் பாடல்களின் சாயலுடன் வரும்) ஆலாபனை இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
இன்னொரு பாட்டில், ஒத்தையில நிக்கிற வேங்கடா தில்லிருந்தா மொத்தமா வாங்கடா என்பதைப் பாடலிலேயே வைத்தவிதம் அழகு.
 
சந்தோஷ் நாராயண் ரஜினியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். பாடல்கள், படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தைப் பெரிய அளவில் தூண்டுகின்றன. இந்த இசையமைப்பாளரை நேற்றைய விழாவில் ரஜினி மறந்தது ஆச்சரியம். (மறந்தாரா? கடைசியில் ரஜினி பேசுவதை மட்டுமே கேட்டேன்.) கடைசியில் அவரை அழைத்து மேடையில் சொல்லி சமாதானம் செய்தார். உண்மையில் சந்தோஷ் நொந்திருப்பார் என்றே நினைக்கிறேன். பிரச்சினையில்லை, இது வரலாற்றில் இடம் பெறும். 🙂
 
மாய நதி போலவே, கண்ணம்மா பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் மாயநதியைவிட இது பெட்டர்தான்.
 
போராடுவோம் மற்றும் தெருவிளக்கு பாடல்கள் – பல பாடல்களின் சாயலுடன் உள்ளன! குறிப்பாக ஹிப் ஹாப் தமிழாவின் பாடலைப் போன்று உள்ளது.
 
சட்டென்று எல்லாப் பாடல்களுமே ஒரே போல் தோன்றும். மெல்ல மெல்ல இது மாறும் – சிலருக்காவது.
 
பாடல்களில் என்னவோ 80களின் சாயல் தெரிவது போல் உள்ளது. என் பிரமையா எனத் தெரியவில்லை. சிறியதும் பெரியதுமாக 9 பாடல்கள் என்பது தரும் யூகமா என்றும் புரியவில்லை. படம் நாயகன் திரைப்படம் போன்ற ஒன்றாக இருக்க வாய்ப்பிருப்பதாக இன்னொரு பக்கம் தோன்றுகிறது.
 
ரஜினியின் அரசியல் வருகைக்கு ஏற்ப வரிகள் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. படத்துக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்பது நிச்சயம். ஆனால் அது எனக்குப் பொருட்டே அல்ல. 🙂 அண்ணாமலை திரைப்படம் வந்த சமயத்தில் ரஜினியின் ஒரு வரி பன்ச்சுக்காக தியேட்டரே அதிர்ந்தது நினைவுக்கு வருகிறது. இப்போது அப்படி அதிர வாய்ப்பு (ரசிகர்கள் ஷோ தவிர மற்ற ஷோக்களில்) குறைவுதான். ஆனால் இது அதிகம் பலன் தரும் என்றே யூகிக்கிறேன். வெற்றி நிச்சயம்.
 
ரஜினி திரைப்படம் எதிர்பார்ப்புக்கு நடுவேயும், தோற்றுப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கும் இடையேதான் வெளிவந்துள்ளது. முதல் முறையாக, ரஜினியின் அரசியல் அறிவிப்படை அடுத்து, வெறுப்புக்கு நடுவில் வெளியாகிறது. இந்த வெறுப்பும் ஃபேஸ்புக் அறிவாளிகளின் வெறுப்புதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இத்திரைப்படம் வென்றால், உடனே இது திரைப்படத்துக்கான வெற்றி மட்டுமே என்று சொல்வார்கள். தோற்றால், அரசியலிலும் தோல்வி என்பார்கள். நான் இரண்டையுமே நம்பவில்லை. இந்த வெற்றியும் அரசியல் வெற்றியும் வேறு வேறானவை. இரண்டிலும் ரஜினி வெல்வார் என்றே நினைக்கிறேன்.
 
அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நீங்கிய நிலையில் ரஜினி திரைப்படம் வெளியாவது, எனக்கு மிக முக்கியமானதாகவும் சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. எவ்விதப் படபடப்பும் இன்றிப் படம் பார்க்கலாம்.
 
ஒரே பிரச்சினை, இந்தப் படத்தில் ரஞ்சித் முன்வைக்கப்போகும் அரசியல். அது தலித் அரசியல் மட்டும் என்றால், நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது, பாராட்டப்படவேண்டியது. அதன் பின்னணியில் ஹிந்துத்துவ / ஹிந்து மத எதிர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஒரே எதிர்பார்ப்பு. மற்ற மதங்களைத் தூக்கிப் பிடிப்பதில் பெரிய பிரச்சினையோ கேள்வியோ இல்லை – ஹிந்து மதத்தைத் தூற்றாத வரை. காலா அறிவிப்பு வந்த தினம் முதல் இந்த ஐயம் கடுமையாக எழுந்துள்ளது. கபாலி வந்தபோது இந்த அச்சம் வரவில்லை. ஏனென்று தெரியவில்லை. ரஜினிக்கு இருக்கும் ஒரு அரசியல் பெரிய வட்டத்தை இப்படம் குறுக்காமல் இருந்தாலே, இப்படம் ரஜினிக்கு செய்திருக்கும் பெரிய நன்மையாக இருக்கும். பார்க்கலாம்.
 
காலா – காத்திருக்கிறேன்.
Share

ரீச் ஃபௌண்டேஷன் விருதுகள் 2018

ரீச் ஃபௌண்டேஷனின் விருது வழங்கும் விழா நேற்று (29-ஏப்ரல்-2018) அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் ஜி.கே.வாசன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன்.

* விழா மிகச் சரியாக 9.30க்குத் துவங்கியது.

* மெல்ல நடந்து வந்த மெலிந்த 85 வயது முதியவர் நாற்காலியில் அமர்ந்து இறை வணக்கப் பாடல்களைத் துவங்கினார். 85 வயதுக்குள்ளிருந்து வெளிவந்த கணீரென்ற குரல் என்னைக் கலங்கடித்துவிட்டது. மிகச் சிறப்பாக திருமுறை பாடல்களைப் பாடினார். அழுத்தம் திருத்தமாக வித்வான் குடந்தை லக்ஷ்மணன் அவர்கள் பாடியதைக் கேட்ட தமிழே மெய்மறந்து நின்றிருக்கும். அப்பெரியவருக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம்.


வித்வான் குடந்தை லக்ஷ்மணன்

* மிக முக்கியமான ஆளுமைகளுக்கு, நம் கலாசாரத்தைப் பேணும் மனிதர்களுக்குத் தேடித் தேடி விருது கொடுத்தார்கள். மாணவர்களுக்கு நம் கலாசாரத்தைப் பேண கற்றுத் தரும் ஆசிரியர் ராஜகுரு, சென்னை தினத்தின் முதுகெலும்பாக விளங்கிய ராஜா சீதாராமன் போன்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

* ராஜா சீதாராமன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால் அவரது 81 வயது தாயார் வந்து விருதைப் பெற்றுக்கொண்டது நெகிழ்வான தருணம்.

* ஜிகே வாசன் ரீச் ஃபௌண்டேஷனின் தேவையை, அவர்களது சேவையைப் பாராட்டிப் பேசினார்.

* அரவிந்தன் நீலகண்டன், நேரம் குறைவாகவே இருந்தால் சிறிய உரையை ஆற்றினார். இவரது உரை பலத்த வரவேற்பைப் பெற்றது. விழா முடிந்ததும் பலர், இவர் இன்னும் நிறைய நேரம் பேசி இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

* விருது பெற்றவர்கள் அனைவரும் சிற்றுரை ஆற்றினார்கள். இது முக்கியமான விஷயம். ராஜகுரு கொஞ்சம் நீண்ட உரையை ஆற்றினார். எப்படி மாணவர்களை ஒருங்கிணத்துச் செயல்பட்டார் என்பதை விளக்கினார்.

* கல்வெட்டாய்வாளர்/ஆய்வாளர் ராமசந்திரன் பலருக்கும் கல்வெட்டுகளைப் படிப்பது பற்றிப் பாடங்கள் எடுக்கிறார். அவரது 9 வது பாட்ச் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அடுத்த பாட்ச் ஜூன் இறுதியில் தொடங்குகிறது. விருப்பப்படுபவர்கள் ரீச் ஃபௌண்டேஷனை அணுகவும்.

* விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் நாட்டுப் பண்ணும் பாடினார்கள். தப்பித்தார்கள்.

* மதிய உணவுடன் விழா இனிதே முடிவடைந்தது. விழா மிக ரிச்சாக இருந்தது. ரீச் ஃபௌண்டேஷனுக்கும் விழாவுக்கு உழைத்தவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

* விருது பெற்றவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறிய ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல ஆடியோ வரவில்லை. போராடிப் பார்த்தார்கள். ஆடியோ முடியாது என்று சொல்லிவிட்டது. ஒவ்வொரு விழாவிலும் இதே போன்ற பிரச்சினைகளைப் பார்க்கிறேன். இதை எத்தனை சரி செய்துகொண்டு போனாலும் விழாவில் கழுத்தறுத்துவிடுகிறது. இந்த ஆவணப் படங்கள் திரையிடலும் நடைபெற்றிருந்தால் விழாவின் தரம் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும். இப்போதும் தாழ்வில்லை என்பது வேறு விஷயம். இந்த ஆவணப் படங்கள் ரீச் ஃபௌண்டேஷனின் தளத்தில் வெளியிடப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். விருப்பப்படுபவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.

* ரீச் ஃபௌண்டேஷனின் சார்பில் முன்பு யாளி ஒன்று இதழ் வந்துகொண்டிருந்தது. இப்போது அது வருவதில்லை என நினைக்கிறேன்.

* மனதுக்கு நிறைவான விழா. ரீச் ஃபௌண்டேஷனின் வலைப்பக்கம்: http://conserveheritage.org/

Share

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்

அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் – ஒரு தந்தையின் புலம்பல்

இரண்டு மாதங்களாகவே அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்துக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என அபிராம் சொல்லிக்கொண்டிருந்தான். ஏப்ரல் 27 காலா ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருந்தது. அப்ப அதுக்குத்தான முதல்ல போவ என்று சோகமானான். காலா ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதும் இந்தப் படத்துக்குப் போவது உறுதியானது அவனவளவில் பெரிய நிம்மதி.

குழந்தைகள் பார்க்கும் சானல்கள் அத்தனையிலும் விடாமல் விளம்பரம் துரத்திக்கொண்டிருந்தது. கூகிளில் தேடி இப்படம் பற்றிய அனைத்து விவரங்களையும் அபிராம் தெரிந்து வைத்திருந்தான். கூடவே நண்பர்களிடம் பேசியதில் இருந்தும். பேட் மேன் சூப்பர்மேன் எல்லாம் வரமாட்டாங்களா என்று தெரியாமல் கேட்ட தினத்தில்தான் நான் இதைக் கண்டுபிடித்தேன். அவெஞ்சர்ஸ் என்றால் யார், மார்வெல் என்ற நிறுவனம், அது இது என அள்ளி அடித்தான். இதெல்லாம் பெரிய அறுவையான புள்ளிவிவரங்கள் என்ற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டேன். ஒருவழியாக நேற்று படத்துக்குப் போனேன்.

*

ஏற்கெனவே பேட் மேன் வெர்சஸ் சூப்பர் மேன் தந்த சூடு ஞாபகம் இருந்தது. இந்தப் படத்தில் வரிசையாக அவெஞ்சர்கள் வந்தவாறு இருந்தார்கள். படத்திலும் சரி, பார்க்கவும் சரி, சரியான கூட்டம். குடும்பத்துடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அத்தனை பெற்றோர்களும் என்னைப் போலவே விழித்துக்கொண்டுதான் தியேட்டரில் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு அவெஞ்சர் தோன்றும் காட்சியிலும் கைத்தட்டும் விசிலும் காதைப் பிளந்தன. நிஜமாகவே சொல்கிறேன். நான் கொஞ்சம் பயந்துவிட்டேன். இது என்ன ஊர், ஏன் இப்படி மாறிப் போனது என்றெல்லாம் குழப்பம். என் பக்கத்து சீட்டில் இருந்த பையன் ஒவ்வொரு அவெஞ்சரின் வருகையின்போதும் சரியாக அந்த அவெஞ்சரின் பெயரையும் அந்த நடிகரின் பெயரையும் சொல்லிக்கொண்டே இருந்தான். ஆச்சரியமாக இருந்தது. ஸ்பைடர் மேன், ஐயன் (சாதி அல்ல!) மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா தவிர எந்த அவெஞ்சரும் எனக்குப் பழக்கமில்லை. ஆண்ட் மேன், ஸ்ட்ரேஞ்ச், தோர் மேன், ப்ளேக் பேந்தர், விசன், ப்ளாக் விடோ, ஃபால்கன், மார்வெல் எனப் பலரை இப்படத்தில்தான் கண்டுகொண்டேன். இத்தனை பேருக்கும் தனித்தனியே படங்கள் இருக்கின்றனவாம். மார்வெல் காமிக்ஸின் சாதனை பெரியதுதான். ப்க்கத்தில் இருந்த வாண்டுகளெல்லாம் இவர்களை நம் வீட்டுச் சொந்தக்காரர்கள் போல, இவனைத் தெரியலையா என்று தம் பெற்றோர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தன.

*

அவெஞ்சர்ஸ் படம் சூப்பர்மேன் வெர்சஸ் பேட்மேன் அளவுக்கு மோசமில்லை. முதல் ஒரு மணி நேரம் கொஞ்சம் அப்படி இப்படிப் போனாலும் கடைசி ஒரு மணி நேரத்தில் மிரட்டி எடுக்கிறார்கள். பூமியைப் போன்ற பல கிரகங்கள். அத்தனையிலும் நடக்கும் கதை. இதைவிட விளக்கமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அத்தனை அவெஞ்சர்ஸையும் காண்பிக்கவேண்டி இருப்பதால் திரைக்கதை அங்குமிங்குமாக ஓடுகிறது. எந்த நேரத்தில் எந்த அவெஞ்சர் இன்னொரு எந்த அவெஞ்சரைக் காப்பாற்ற வருவார் என்பது திரைக்கதை எழுதியவருக்கே தெரியாது என நினைக்கிறேன்.

ஹல்க்கை காமெடி பீஸாக்கிவிட்டார்கள். தோரை உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இந்தப் படத்திலும் ஸ்பைடர் மேன் ஐயன் மேனிடம் கெஞ்சிக்கொண்டே இருக்கிறார். தானோஸ் அதிரடி. படமே இவர் தோளில்தான். மிகப் பெரிய அளவில் வில்லனைக் காட்டி, அவர் முன் அனைத்து அவெஞ்சர்ஸ்களும் பிச்சை எடுக்கும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

ஏற்கெனவே ஒரு ரத்தினக் கல்லைப் பெற்றுக்கொண்டுவிட்ட தானோஸ் மீதி ஐந்து கல்லை எடுக்கப் போராடுவதுதான் கதை. அப்படி எடுத்துவிட்டால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஆளும் சக்தி வந்துவிடும். தானோஸின் நோக்கம் ஒன்றுதான், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களில் (!) பாதி பேரைக் குறைப்பது. குறைக்கும் வழி கொலைகள். இதை எதிர்த்து அவெஞ்சர்ஸ் போராடுகிறார்கள். ஆறு கல்லையும் தானோஸ் அடைகிறார். பின்னர் என்ன ஆகிறது? இன்னும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.

ஆறாவது கல்லை அடையும் காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன. அதேபோல் தன் வளர்ப்பு மகளை பலி கொடுக்கும் காட்சி மிக நன்றாக உள்ளது. படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை கிராஃபிக்ஸ்தான். எதோ ஒரு தனியான உலகத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டு வருகிறார்கள். தானோஸ் இறுதிக் காட்சியில் இறுக்கமான முகத்துடன் பிரபஞ்சத்தைப் பார்த்தவண்ணம் அமரும் காட்சி பல விஷயங்களைச் சொல்கிறது. கவித்துவமாக தானோஸைப் படைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க இருட்டில் நடக்கிறது. சில காட்சிகள் மட்டுமே வெளிச்சத்தில் தெரிகின்றன. அவெஞ்சர்ஸ் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் காமெடிக் காட்சிகள், இப்படத்தையே சுவாசமாகக் கொண்டிருப்பவர்களுக்குக் கூடுதலாகப் புரியும். தமிழ் டப்பிங்கில் பாகுபலியையெல்லாம் சேர்த்து கைத்தட்டு வாங்கிக் கொள்கிறார்கள். தமிழில் பார்க்காமல் ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என்றே நினைக்கிறேன். சில வழக்கமான, ஹெல்மெட் மண்டையா என்பதைப் போன்ற வசனங்களைத் தவிர மற்றவை பாதகமில்லை. இந்த ஹெல்மெட் மண்டையா வசனத்துக்கு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வாண்டு வானம் வரை குதித்தான். மீண்டும் மீண்டும் ‘ஹெல்மெட் மண்டையனாம்ப்பா’ எனச் சொல்லிக்கொண்டே இருந்தான். சரியாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கிறார்கள். அல்லது ட்யூன் செய்து வைத்திருக்கிறார்கள்.

*

ஒரு படம் பார்த்து முடித்ததும் அதைப் பற்றி அதிகம் பேசக்கூடாது என்று வீட்டில் ஒரு சின்ன சட்டம். நேற்று அந்த சட்டத்தைக் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அபிராமிடம் பேசினேன். ஏனென்றால் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால். இடைவேளையின்போதே மெல்ல கூகிளில் நோட்டம் விட்டிருந்தேன். அபிராம் அடித்து முழக்கினான். எப்படிடா இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட என்று சொன்னதுக்கு அவன் சொன்ன பதில் – நானெல்லாம் ஒண்ணுமே இல்லைப்பா, திருநெல்வேலில அரவிந்த் இதைவிட அதிகம் சொல்லுவான். அரவிந்த் என் அண்ணா பையன். இன்னும் என் தங்கை பையன்களுடனெல்லாம் பேசினால்தான் தெரியும், அவெஞ்சர்ஸ் எந்த அளவுக்கு நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கிறார்கள் என.

குழந்தைகளுக்கான சானல்களே இவர்கள் நம் சமூகத்தில் இத்தனை தீவிரமாக வெற்றிகரமாக நுழைந்தற்கான வழி என நினைக்கிறேன். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு வெற்றி பெறுகிறார்கள். படத்தையும் ஏனோ தானோ என்று எடுப்பதில்லை. மிகக் கச்சிதமான திட்டமிடல். அசுர உழைப்பு. ‘கேமராவுக்கும் கிராஃபிக்ஸுக்குமே காசு சரியா போச்சு’ என்கிறான் அபிராம். உண்மைதான். எல்லாமே உச்சம்தான். பாகுபலி முதல் பாகத்தைப் போல அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் முடிந்திருக்கிறது. பல விஷயங்கள் தெளிவாகவில்லை. பாகுபலியைக் கொன்றது யார் என்பது போல, காற்றில் உதிரும் அவெஞ்சர்ஸ்க்கு என்ன ஆச்சு என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. மீண்டும் ரத்தினக் கற்கள் கைக்கு வருமா? விஷன் திரும்ப வருவானா? அவெஞ்சர்ஸ் 2ல் இவையெல்லாம் தெரிய வரும் என்று நான் சொன்னபோது, இது அவெஞ்சர்ஸ் 3, அடுத்து அவெஞ்சர்ஸ் 4 என்ற பதில் கிடைத்தது. நேக்கு தெரிஞ்சதெல்லாம் ரஜினி கமல் புளிப்பு மிட்டாய் என்று காலம் ஓடிவிட்டது. ஆனால் இந்தப் பொடியன்கள்… இன்னும் முழித்துக்கொண்டிருக்கிறேன்.

*

மடிப்பாக்கம் குமரன் தியேட்டரில் ஏப்ரல் 27ம் தேதி இரண்டு தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டிருந்தன. தியா மற்றும் பக்கா. அவெஞ்சர்ஸ்க்கு வந்த கூட்டத்தை அடுத்து, எல்லாக் காட்சிகளுமாக இந்தப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்கள். சுவரொட்டிகளைப் பார்த்து ஏமாற வேண்டாம். 

*

Share