படிக்க வேண்டியவை

<< >>

பிக்பாஸ் மோகன்லால்

மலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நேற்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதைப் பற்றி எழுதி எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சிறுகுறிப்பாவது எழுதாமல் இருப்பது பாவம் என்பதால்… தமிழைப் போலவே மலையாள பிக்பாஸும் பெரிய அறுவை. தமிழைப் போல அல்லாமல், தினமும் டாஸ்க். டாஸ்க் இல்லாமல் செல்ஃப் பிக்கப் எடுக்கவே இல்லை. தமிழிலும் முதல் பிக்பாக்ஸ் இப்படித்தான் ஆகியிருக்கவேண்டும்.

Share

வந்தார்கள் வென்றார்கள்

சின்ன வயதில் அதாவது 21 வயதில்! நான் விரும்பி வாசித்த முதல் அ-புனைவு புத்தகம் வந்தார்கள் வென்றார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திருநெல்வேலி டவுன் நூலகத்தில் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு வாசித்தேன். அதிலுள்ள படங்கள் ரொம்பவும் பிடித்துப்போய் அவற்றை மட்டும் கிழித்து எடுத்து வைத்துக்கொண்டேன். சில மாந்திரிகப் புத்தகங்களைப் படித்து பயந்து போய் இருந்ததும்

Share

சென்னை வானொலி 81

சென்னை ரேடியோ 81   நாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது

Share

காலச்சுவடு நடத்தும் ஆதிமுலம் இரங்கல் கூட்டம்

நாளை (26, ஜனவரி 2008) அன்று மாலை 6.00 மணிக்கு புக் பாயிண்ட் அரங்கில்.

Share

வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் – வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ் எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி, வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத் தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில், இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை. அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக, ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம் நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம் என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால் இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும் பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள் நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல் மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை. இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும் சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான் ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன் கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும் அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம் கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே ‘தமிழின் மரபை அறியாதவர்கள்’ என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் ‘சிறப்பாக’ இங்கு வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில் இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது, வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன் கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.] தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில் வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத் திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத் திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன் நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின் தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில் ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத் திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும் இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம். பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின் மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது. உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம் கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல் நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும் ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும் பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால் இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம் இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள் இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில் வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள் குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன் மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர் வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார் எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான் இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும் உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும் உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம் சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும். வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும் கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில் நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக் கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது, வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள் நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும் வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு, இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும் நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில் சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும். இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம். மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச் செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து, தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுக்களை ’15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்’ என்று சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும், அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது ‘செய்தி ஊடகம்’ என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம் மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.

சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால் பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/

பரவலான இணைய உலக பயன்பாடுகள்

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி

இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys) வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள் வலைப்பதிவுலகில் அடிக்கடி 🙂 :)) 😛 :> 🙁 :(( X-( 😀 போன்ற குறியீடுகளைச் சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள் இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

Share

நதியின் பக்கங்கள் – கவிதை

நீண்ட நாள்களுக்குப் பின்
புரட்டியபோது
அடையாளம் தெரியாமல்
சிதைவுற்றிருந்தது
பழம்புத்தகத்தின் பக்கங்களில்
தடங்கள்
எண்களை இணைத்து
சித்திரம் கூட்டுதல் போல
கோடுகளை ரொப்ப
புதிய தடங்கள்
காற்றெங்கும்
தீராத ஒலிகளை நிரப்பி
என் காலடி மண்ணை
அரித்துக்கொண்டோடுகிறது நதி

Share

புத்தகக் காட்சி – என் கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்

இந்தப் புத்தகக் காட்சியில் என் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். நான் பட்டியலிடும் புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவந்தவை மட்டுமல்ல, வந்து பல ஆண்டுகள் ஆன புத்தகங்களாகவும் இருக்கலாம். என் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்க்க, அதைப் பட்டியலிட்டிருக்கிறேன். அதேபோல், பட்டியலிடும் எல்லாப் புத்தகங்களும் நான் வாசித்தவை அல்ல. இன்னொரு விஷயம், சில புத்தகங்கள் என் நண்பர்கள், நான் அறிந்தவர்கள் எழுதியவை. அதையும் பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் இது என் சார்புள்ள பட்டியல். யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி. எனி இந்தியனின் புதிய வெளியீடுகள் நான்குமே முக்கியமான பதிவுகள் என்று நான் நினைப்பதால் அதையும் சேர்த்திருக்கிறேன்.

கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு (சரியான பெயரை பின்னர் சொல்கிறேன். மறந்துவிட்டது.)

Share

நாடக வெளியின் ‘வெளி நாடக இதழ்த் தொகுப்பு’ புத்தக அறிமுகக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல்

Share

மக்கள் தொலைக்காட்சியில் பரன் – இரானியத் திரைப்படம்

க்கள் தொலைக்காட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. உலகத் திரைப்படங்கள் வரிசையில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. எந்த திரைப்படங்கள் என்று ஒளிப்பாகிறது என்று கண்டறிவது பெரிய சங்கடமாக இருக்கிறது. தொலைபேசியில் கேட்டால் ‘மக்கள் பாருங்க, அதுல படம் எப்ப போடுவோம்னு சொல்லுவோம்’ என்கிறார்கள். இதனால் முக்கியமான இந்தப் படங்களைப் பார்க்காமல் போக நேரிடுகிறது. நேற்று சங்கப்பலகை பார்த்தபோது இந்தப் படம் பற்றிய அறிவிப்பைச் செய்தார்கள். பகிர்ந்துகொள்கிறேன்.

25-ஆம் தேதி இரவு 8மணிக்கு (கிறிஸ்துமஸ் அன்று) மஜித் மஜிதியின் பரன் திரைப்படம் தமிழ் சப்-டைட்டிலோடு ஒளிபரப்பாகிறது.

நான் பரன் படம் பற்றி எழுதிய ஒரு பார்வை – http://nizhalkal.blogspot.com/2007/11/majid-majidis-baran-iranian-movie.html

Share

தேவதேவனுக்கு விளக்கு விருது (2007) விழா அழைப்பிதழ்

Share

களியாட்டம் – மலையாளத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 04)

கேரளாவின் வடக்குப் பகுதியில் மரபாக வரும் களியாட்டம் என்பது தெய்வத்தின் ஆட்டம் (தெய்யம் அல்லது தெய்யாட்டம்) என்று நம்பப்படுகிறது. கண்ணகி போன்ற, உயிருடன் வாழ்ந்த மனிதர்களை தெய்யங்களாக வரித்து ஆடும் ஆட்டம் இது. சமூகத்தையும் தாங்கள் வாழும் கூட்டத்தையும் இந்தக் களியாட்டம் காக்கும் என்று நம்பினார்கள் இதை ஆடுபவர்கள். வேலன், மலையன், பெருவண்ணன் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களே களியாட்டத்தின் தெய்யங்களாக ஆடுகிறார்கள். இந்த மூன்று சாதிகளுமே ஒரே சாதியின் பல்வேறு பிரிவுகள்தான் என்று சொல்கிறார்கள். தெய்யத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் களியாட்டமே பின்னாளில் கதகளியாக மாறியது. இந்த வேர்களை நாம் தமிழில் காணலாம் என்றும் வேலன் வெறியாடலே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்களில் களியாட்டமாக உருமாறியது என்றும் சொல்கிறார்கள். பெருங்களியாட்டம் என்பது பல்வேறு தெய்யங்களின் வேடத்தையும் புனைந்து ஒருவரே ஆடும் ஆட்டம். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.

ஜெயராஜ் இயக்கி சுரேஷ்கோபி, மஞ்சு வாரியர், பிஜூ மேனோன், லால் நடிப்பில் 1997ல் வெளியானது களியாட்டம் திரைப்படம். சேக்ஸ்பியரின் ஒதெல்லோவைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம். தமிழ்ப்படங்களைப் போல் மறைக்காமல் இதை படத்தின் ஆரம்பித்திலேயே காண்பித்துவிடுகிறார்கள். தெய்ய ஆட்டக்காரனான கண்ணன் பெருமலையன் தாமரையின் மீது காதல் கொண்டு அவளை மணக்கிறான். உயர்ந்த சாதியைச் சேர்ந்த தாமரை தன் சாதியையும் தன் தந்தையையும் மறுத்துவிட்டு கண்ணன் பெருமலையனை மணம் செய்துகொள்கிறாள். அப்போது தாமரையின் தந்தை சபையில் எல்லார் முன்னிலும் தன்னை வஞ்சித்ததுபோலவே ஒருநாள் தன் கணவனையும் தன் பெண் வஞ்சிக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை என்று சொல்லி, சந்தேகத்தின் விதையை விதைத்து வைக்கிறான். பனியன் தெய்யங்களில் நகைச்சுவை வேடமேற்பவன். கண்ணன் பெருமலையன் மீது இருக்கும் பொறாமையாலும் தெய்யத்தின் முக்கிய ஆட்டக்காரனாக மாறி, கண்ணன் பெருமலையனின் இடத்தைப் பிடிக்கும் எண்ணத்திலும், மலையன் மனைவிக்கும் காந்தனுக்கும் தவறான உறவிருப்பதாக மலையனிடம் சொல்கிறான். சந்தர்ப்பங்கள் இதை உறுதிப்படுத்த, அதை நம்பி தன் மனைவி தாமரையை, பெருங்களியாட்டம் நடக்கும் அன்று கொல்கிறான் கண்ணன் பெருமலையன். அவள் இறந்தபின்பே தன் மனைவி குற்றமற்றவள் என்றும் பனியனின் சதி இது என்றும் தெரிகிறது. பனியனின் கையையும் காலையும் முறித்துவிட்டு, தனக்கு அடுத்த தலைமை தெய்ய ஆட்டக்காரனாக காந்தனை நியமித்துவிட்டு, பெருங்களியாட்டத்தில் தெய்யமாகவே அவன் எரியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கிறான்.

ஒதெல்லோ போன்ற கதைகளை நம் சூழலுக்குப் படம் எடுக்கும்போது எப்படி அதை மாற்றவேண்டும் என்பதற்கு இப்படத்தை ஒரு மாதிரியாக வைக்கலாம் என்கிற அளவிற்கு மிகச் சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெய்ய ஆட்டக்காரர்கள் தங்கள் உடலெங்கும் வண்ணத்தை வரைந்துகொண்டு, அலங்காரமாக ஆழ்நிற வண்ணங்களுடன் அமைக்கப்பட்ட கிரீடங்களையும் கவசங்களையும் அணிந்துகொண்டு, கண்களைச் சுழற்றும் அழகும் புருவங்களை உயர்த்தும் அழகும் சிறப்பாக இருக்கும். இந்த அலங்காரங்களைச் செய்யவே கிட்டத்தட்ட பத்து மணிநேரம் வரை ஆகும் என்கிறார்கள். இரவில் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு தெய்யங்கள் ஆடும் காட்சியில் வண்ணங்களும் தீயின் பல்வேறு நிறங்களும் தங்கள் ஆளுமையை தீவிரமாகப் பறை சாற்றுபவை. இவற்றை எந்தவிதக் குறையுமில்லாமல் அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். படமெங்கும் இழையும் வண்ணங்கள் படத்திற்கு ஒரு தொடர்ச்சியைத் தருகின்றன. கண்ணன் பெருமலையனும் தாமரையும் வண்ணங்களோடு உடலுறவு கொள்கிறார்கள். தரையில் குங்குமம் மஞ்சளும் தங்கள் தீவிர நிறத்துடன் கலந்து சிந்துகின்றன. வண்ணமயமான பட்டின் மேல் உறவுகொள்கிறார்கள். பின்னர் அந்தப்பட்டே உறவுக்கான முன்னறிவிப்பாகிறது. கண்ணன் பெருமலையன் தாமரை காந்தனுடன் உறவுகொள்வதாக நினைக்கும் காட்சிகளைக்கூட அதே நிறங்களுடன் காண்கிறான். படமெங்கும் வண்ணம் பிரிக்கமுடியாமல் அழகாகக் கலந்துகிடக்கிறது.


அதேபோல் படமெங்கும் வரும் கேரளத்தின் மரபிசை. செண்டையும் தாளமும் படத்தில் எல்லாக் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில சாதாரண காட்சிகளில்கூட இந்த மரபிசை தேவையற்றுப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் உக்கிரம் கொள்ளும் காட்சிகளில் அதே உக்கிரத்தை இசையும் கொள்கிறது. இசையமைப்பாளர் கைதப்பரம் விஸ்வநாதன் பாடல்களையும் இதே மரபின் தன்மையோடு இசையமைத்துள்ளார். கண்ணாடிப் புழையொடு தீரத்து பாடலும் கதிவனூரு வீரனே பாடலும் இந்த வகையைச் சேர்ந்தவை. அதிகம் அறியப்பட்ட சிறப்பான பாடல் ‘என்னோடெந்தினா பிணக்கம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடைசி காட்சியில் தெய்ய ஒப்பனையோடு பெருமலையன் தாமரையைக் கொல்லும் காட்சியின் பின்னணி இசை உக்கிரம் கொள்ளவும் நெகிழ வைக்கவும் செய்கிறது.

மஞ்சு வாரியர் தாமரையாக நடித்திருக்கிறார். படத்தில் இவரது நடிப்பு வெகு இயல்பாகவும் ஆர்பாட்டம் இல்லாததாகவும் அமைதியானதாகவும் இருக்கிறது. அழகும் அமைதியும் கூடி விளங்கும் தாமரையைக் காணும்போது, தன் லட்சணமற்ற முகம் இவளுக்குத் தகுதியானதல்ல என்கிற எண்ணம் கண்ணன் பெருமலையனுக்கு ஏற்படுவது இயல்பே என்று பார்வையாளர்களே நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அழவேண்டிய காட்சிகளில் சட்டெனக் கண்ணீர் விடுவதும், தன்னைக் கொல்ல கணவன் நெருங்கும் நேரத்தில் பயத்தில் மிரள்வதும் அவனையே கட்டிக்கொண்டு கெஞ்சுவதுமென மஞ்சு வாரியர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘ஏடா புல்லே’ புகழ் மாஸ் ஹீரோவான சுரேஷ் கோபி கண்ணன் பெருமலையனாக நடித்திருக்கிறார். முதலில் ஒரு மாஸ் ஹீரோவுக்குள் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பற்றிய தேடல் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். இப்படத்தை தயாரித்ததும் சுரேஷ் கோபி என்னும்போது ஏற்படும் ஆச்சரியம் பலமடங்காகிறது. த்வீபா என்னும் கன்னடப்படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா என்ற போது இதே ஆச்சரியத்தை நான் அடைந்தேன். கண்ணன் பெருமலையனாக சுரேஷ்கோபி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் மிக மெதுவாகவும் ஆர்பாட்டமில்லாமலும் வரும் அவரது கதாபாத்திரம், தன் மனைவியின் மீதான சந்தேகம் வலுக்கொள்ள கொள்ள கடும் சீற்றம் கொண்டதாகவும் குழப்பம் கொண்டதாகவும் மாறுகிறது. அத்தனையையும் தன் முகபாவத்திலேயே வெளிப்படுத்துகிறார். பனியன் பெருமலையனிடம், பொது இடத்தில் காந்தன் எப்படியெல்லாம் தாமரையை தான் அனுபவித்ததைப் பற்றிச் சொன்னான் என்று சொல்லும்போது, சுரேஷ்கோபி வெளிப்படுத்தும் ஆத்திரம், அச்சம், அசிங்கம் என எல்லா பாவங்களும் அருமையாக இருக்கின்றன. அதன் வேகத்திலேயே அவருக்கு வலிப்பு வருகிறது. வலிப்பு வருபவனின் மூளை அடையும் சலனத்தை அவரது முகத்திலேயே நாம் பார்த்துவிடமுடிகிறது. அத்தனை கோபமும் சந்தேகமும் தாமரையைப் பார்த்ததும் அவருக்கு அடங்கிப் போகிறது. தன் மனைவி குற்றமற்றவளாகவே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் தலைதூக்க பெரும் குழப்பத்திலும் அமைதியிலும் அவர் ஆழ்வது சரியான இயக்கம். கடைசியில் தன் மனைவியைக் கொல்ல, பெருங்களியாட்டத் தெய்யத்தின் ஒப்பனையோடு அவர் வந்து கவிதைத்துவமாகப் பேசும் காட்சியும், தாமரை தான் குற்றமற்றவள் என்று கதறி அழுது அவனைக் கட்டிக்கொள்ளும்போது ஒரு கணம் கனிவு பொங்க மறுகணம் ருத்ரம் கொண்டு கொல்லும் காட்சியும் சுரேஷ்கோபியின் நடிப்பின் உச்சம் என்று சொல்லவேண்டும்.

படத்தில் வண்ணங்களையும் ஒப்பனையையும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஒப்பனை கலைத்தபின்பும்கூட சுரேஷ் கோபியின் கண்களில் தெரியும் கருவளையமும் கரும்பொட்டும் வெகு அழகு. அதேபோல் குழப்பத்தின் உச்சியில் மலையுச்சி நோக்கி ஓடி கதறும் பெருமலையன் முன்பு அவனது மூதாதையர்கள் மானசீகமாகத் தோன்றுவதும், அவன் நிகழுலகிற்குள் வரும்போது அங்கு பணியன் நிற்பதும் சிறப்பான காட்சிப்படுத்தல். பணியனாக வரும் லாலும் காந்தனாக வரும் பிஜூ மேனோனும் பணியனின் மனைவியாக வரும் பிந்து பணிக்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தானும் மலையன் கூட்டத்தில் ஒருவனென்றாலும் தனக்கு தெய்யம் கட்ட முடியவில்லை என்னும் கோபத்தை ஒரு சாதாராண மனிதனுக்குரிய வகையில் லால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வண்ணங்களைப் போலவே தீயும் அதன் நாவுகளும் தீப்பொறிகளும் தொடர்ச்சியான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. பெருமலையன் முதலில் தாமரையைச் சந்த்திப்பது தீமிதிக்கும்போது ஏற்பட்ட காயத்துக்கு பின். தெய்ய ஆட்டத்தில் ஒப்பனையுடன் தீ மிதிக்கும் காட்சிகள் முக்கியமானவை. தீப்பொறிகள் சிதறி விழுவதை ஒளிப்பதிவு செய்திருக்கும் விதமும் எரியும் பெருந்தீயின் செந்நிறத்தில் தென்படும் எல்லா கதாபாத்திரங்களும் செம்மை கொள்வதை படத்தில் கொண்டு வந்திருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. தாமரையை பெருமலையன் கொல்லும் காட்சிகளில் வீடெங்கும் ஒளிரும் விளக்குகள். நெருப்பில் தொடங்கும் படம், கண்ணன் பெருமலையன் தன் தவறை உணர்ந்து இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்கிற எண்ணத்தில் நெருப்பில் அமிழ, நெருப்பின் கோரப் பசி அவனை விழுங்கி மேலும் கொளுந்துவிட்டு எரிய, நெருப்பிலேயே முடிகிறது. ஜெயராஜின் வண்ணங்களின் மீதான மோகத்தை கண்ணகி திரைப்படத்திலும் பார்க்கமுடியும். அப்படத்தில் வரும் சேவலின் நிறமும் அதன் உக்கிரமும் கடைசியில் லாலுக்கும் நந்திதா போஸ¤க்கும் மாற்றப்படும்.

இப்படத்தில் கதிவனூரு வீரன் என்கிற தெய்யத்தின் ஆட்டத்தையே கண்ணன் பெருமலையன் ஏற்கிறான். கதிவனூரு வீரன் பற்றிய கதை எங்கும் கிடைத்தால் எனக்கு அறியத் தரவும். நிச்சயம் மரபில் வந்த கதை ஒன்றிருக்கும். அதை அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் திரைப்படத்தை maebag.com என்கிற வலைத்தளத்தில் இருந்து வாங்கினேன். விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளவும். முக்கியமான விஷயம், எனக்கு இந்நிறுவனத்தைப் பற்றித் தெரியாது. கூகிளில் தேடி, நான் ஆர்டர் செய்தேன், எனக்கு சரியாக படத்தை அனுப்பிவிட்டார்கள். அதனால் இதை ஒரு தகவல் என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ளவும்

.

Share