தசாவதாரம் – ஒட்டாத முகங்கள்

இன்னும் விமர்சிக்க என்னவிருக்கிறது என்ற அளவிற்கு ஆளாளுக்கு விமர்சித்தாகிவிட்டது. தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்காதவர்களுக்கு வலைப்பதிவர்கள் சங்க அட்டை கிடைக்காது என்று கேள்விப்பட்டேன். தசாவதாரம் பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி, வலைப்பதிவாளர்கள் சங்கத்தில் என் பெயரை தக்க வைத்துக்க்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும் தசாவதாரம் பற்றிய எண்ணங்களைச் சொல்ல?

அடியேன் ரங்கராஜன் நம்பி என்கிற கமலின் கர்ஜனையில் நம்மை உள்வாங்கிக்கொள்ளும் படம், ரங்கநாதர் சிலை கடலுக்குள் வீசி எறியப்பட்டதும் தியேட்டரில் நம்மைத் துப்பிவிடுகிறது. மீண்டும் சுனாமியில் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. இந்த பத்து நிமிஷத்திற்காகத்தான் இவ்வளவு ஆர்பாட்டமுமா என்கிற எண்ணம் ஏற்பட்டுப்போகிறது. கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்கிற பொருளே அற்ற வாலியின் வரியில் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. சைவ மன்னன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. வைணவக் கடவுளான ரங்கநாதர் இல்லை என்றே சொல்லுகிறான். அப்படியிருக்க ஏன் கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது ரங்கராஜன் நம்பி பாடுகிறார் எனத் தெரியவில்லை. கேயாஸ் தியரி என்று கமல் கதையளக்க கிராஃபிக்ஸ் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது. உண்மையில் இந்த கேயாஸ் தியரிக்கும் ரங்கராஜன் நம்பியை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் சைவ வைணவ மோதலுக்கும் படத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. கமல் ஆரம்பத்தில் பேசத் தொடங்கும்போது நாம் 12ஆம் நூற்றாண்டுக்குப் போகவேண்டிய தேவையுள்ளது என்று சொல்லி என்னவோ காரணம் சொல்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்தவரை இந்த சைவ வைணவ மோதல் படத்திற்கு அவசியமே இல்லாத ஒன்று. பிராமணக் காட்சிகளின்மேல் கமலுக்கிருக்கும் காதல் நாம் அறிந்ததே. தொடர்ந்து நாத்திகக் கருத்துகளைச் சொல்லி வரும் கமல், தொடர்ந்து பிராமணர்கள் தொடர்பான காட்சிகளைத் தன் படத்தில் காண்பிக்காமல் இருப்பதில்லை. தனக்குத் தேவையான விளம்பரங்களைப் பெற இதுபோன்ற காட்சிகளையும், தனக்கு முற்போக்கு முகம் தரும் கருத்துகளைப் படம் முழுக்க அள்ளி வீசியுமிருக்கும் கமலின் பேனா மறந்தும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதம் பக்கம் திரும்பிடவில்லை. பேனா முனை முறிந்துவிடும் அபாயம் பற்றித் தெரிந்திருப்பதால், ‘இந்து மதமே அபயம்’ என்கிறார் கமல். ஸூடோ செக்யூலர்களின் தொடர் ஓட்டத்தில் கமலுக்கு இல்லாத இடமா, அன்போடு அழைத்து ஏற்றுக்கொள்கிறது ‘எவ்வளவு நல்லவண்டா’ மதம்.

கமலின் நடிப்பைப் பற்றியும் கமலின் கடும் உழைப்பைப் பற்றியும் சொல்லப் புதியதாக ஒன்றுமில்லை. அதே ஆர்வம், அதே அர்ப்பணிப்பு, அதே உழைப்பு. அசர வைக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முறை மேக்கப் கமலுக்கு ஒத்துழைக்க மறுத்திருப்பதுதான் ஆச்சரியம். தெலுங்கு பேசும் நாயுடுவும் புரட்சி செய்யும் தலித் கிறித்துவ போராளியும் கமலோடும் அதன் மேக்கப்போடும் ஒட்டிப்போவதுபோல் மற்ற வேஷங்கள் ஒட்ட மறுக்கின்றன. அவர் போட்டிருக்கும் ஐயங்கார் வேஷமும் எப்போதும்போல் ஒட்டிப்போகிறது, மேக்கப் இல்லாமலேயே. மொட்டைப் பாட்டியும் அவ்தார் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஷும் தங்கள் முகம் எப்போது பிய்ந்து விழுமோ என்கிற பயத்துடன் நடிப்பது போலவே இருக்கிறது. குரலில் வித்தியாசம் காண்பிக்கிறேன் என நினைத்துக்கொண்டு, சன் டிவி மூப்பனார் பேசிய தமிழுக்கே சப்-டைட்டில் போட்ட தேவையை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் கமல்.

உடல் மொழியைப் பொருத்த வரையில் பாட்டியின் குறுகலான உடலமைப்பை கடைசிவரை காப்பாற்றுவதில் கமல் ஜெயிக்கிறார். அதேபோல் தெலுங்கு நாயுடுவும் பூவரகனும் தங்கள் உடல்மொழியை சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். அவ்தார் சிங்கின் உடல்மொழியும் பேச்சும் செயற்கைத்தனமாக இருக்கிறது. இப்படி பத்துவேடங்களைப் பத்து பேர் செய்திருக்கிறார்கள் என்கிற எண்ணம்வர கமல் எடுத்துக்கொண்டிருக்கும் தீவிரமான உழைப்பு நிச்சயம் பாராட்டப்படவேண்டியதே. ஆனால் கதை? உலகம் சுற்றும் வாலிபன், குருவி என அதன் தொடர்ச்சியில் வந்திருக்கும் இன்னொரு அம்புலிமாமா கதை. ஒரு வணிகப்படத்திற்கு அம்புலிமாமா கதை போதுமானதே. எந்தவொரு படமும் பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாகச் செய்யும்போது வெற்றி பெறுகிறது. ஆனால் பெரும்பாலான வணிகப்படங்களில் இது சாத்தியமல்ல. ஆனால் அவை பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றாமல், பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு, படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையில் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடமால் கட்டிப்போடுவதில் பெரும் கவனம் கொள்கிறது. இதுவே கில்லி முதல் சிவாஜி வரையிலான வணிகப்படங்களின் முக்கிய நோக்கம். அந்த மூன்று மணி நேரத்தில் பார்வையாளர்களை லாஜிக் பற்றியோ படத்தில் தெரியும் சிறிய குறைகளைப் பற்றிப் பெரியதாக நினைக்கவோ நேரம் கொடுக்காமல், படத்தை செறிவாக அடைக்கப்பட்ட பண்டமாக மாற்றுவதில் தீவிர கவனம் கொள்கின்றன. இதைத் தவற விட்டிருக்கிறது தசாவதாரம். லாஜிக் ஓட்டையை அடிப்படையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதன்மேல் கட்டப்படும் காட்சிகளில் லாஜிக் தவறில்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது. திரைக்கதை ஆசிரியராக இதில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் கமல்.


அமெரிக்காவிலிருந்து வரும் வில்லன் கமலுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சந்து பொந்துகளும் தெரிந்திருக்கிறது. அவர் பைக் ஓட்டுவதுபோல் தமிழ்நாட்டில் யாரும் பைக் ஓட்டமுடியாது. அப்படி ‘ஓட்டியிருக்கிறார்’ கமல். இந்த வில்லன் கமல் செய்யும் அக்கிரமங்களுக்குச் சற்றும் இளைத்ததல்ல, பகுத்தறிவு பேசிக்கொண்டு திரியும், அறிவியல் முனைவரான இன்னொரு கமல் செய்யும் ஓட்டுதல்கள். எப்படியும் கீழே விழும்போது அங்கே கார்கோ இருக்கப்போகிறது, அதன் கம்பி தட்டி மயக்கமாகப் போகிறோம் என்பதை முடிவு செய்தபின்பு ஏன் அத்தனை இழுவை அந்தக் கிருமியும் கமலும் கார்கோவில் ஏற எனத் தெரியவில்லை. மிக நீண்ட காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. கார்கோவிலிருந்து வரும் முனைவர் கமல் வசம் ஒரு ஐடி கார்டு கூட இருக்கக்கூடாது. ரா பிரிவின் உயரதிகாரி கிட்டத்தட்ட ஒரு லூஸு. இரண்டு நிமிடங்களில் போலிஸிடம் சொல்லியிருந்தால் தீர்ந்திருக்கவேண்டிய பிரச்சினையை திரைக்கதையாளர் கமல் பெருமாளுக்குச் சொல்லிவிடுகிறார். கலிகாலம் என்று பெருமாளும் ஓடுகிறார். உண்மையில் பைத்தியகாரப் பாட்டியாக வரும் கமல் செய்யும் பைத்தியக்காரத்தானங்களே மிக்குறைவு என்னுமளவிற்குப் பைத்தியக்காரத்தனங்கள் செய்கிறார்கள் மற்ற எல்லாரும். இருநூறு முகவரிகளில் சரியாகச் சிதம்பரம் போகிறார்கள் வில்லன் கமலும் மல்லிகா ஷெராவத்தும். ஒரு போலிஸ் தப்பித்து ஓடுகிறார். அவர் சென்று யாரிடமும் சொல்வதில்லை அறிவியலறிஞரான கமல்தான் நல்லவர் என்று. அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? யாருக்கும் தெரியாது. நட்டநடுத் தெருவில் மல்லிகா ஷெராவத்தைச் சுடுகிறார் வில்லன் கமல். ஆனால் போலிஸ் அறிவியலறிஞரை தீவிரவாதியாக அறிவிக்கிறது. மல்லிகா ஷெராவத் மார்பையும் இடுப்பையும் பிருஷ்டத்தையும் ஆட்டிவிட்டு, கடைசியில் தலையையும் ஆட்டிவிட்டுச் சாகிறார். இவரால் வேறெந்தப் பயன்களும் இல்லை, ஐந்து நிமிடங்கள் குஜாலான காட்சிகள் இருந்தது என்பதைத் தவிர. ஜெயப்பிரதாவைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை, கொடுமை என்பதைத் தவிர. அவ்தார் சிங் சீக்கிரம் செத்தால் நல்லது என்பதுபோல நடிக்கிறார். இந்தக் கொடுமைகளிலிருந்து நம்மையும் படத்தையும் கொஞ்சம் காப்பாற்றுகிறது நாயுடு பாத்திரம். அவர் தமிழே அழகு. மொபைல் ரிங்டோன் என்று தெரியாமல் பாட்டை ரசித்து ஆடுமிடமாகட்டும், எப்படி போலிஸ் துன்புறுத்துவார்கள் என்று லெக்சர் கொடுக்குமிடமாகட்டும் சிரிப்பை வரவழைக்கிறார். அதேபோல் தலித் இளைஞனாக வரும் கமலின் நடிப்பும் கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. ஆனால் கதையமைப்பைப் பொருத்தவரை இக்கதாபாத்திரமும் அசாருதீன் மாதிரி வந்து யாருக்குமே புரியாமல் என்னவோ பேசும் அப்பாவி முஸ்லிமும் அவசியமே இல்லாத பாத்திரங்கள்.

அறிவியலறிஞர் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். இசைக் ‘கலைஞர்.’ இவை இரண்டும் போதாதா நாத்திகக் கருத்துகளைப் பேச? படம் முழுக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் கமல் நாத்திகம் பரப்பித் தள்ளுகிறார். ஆனால் காட்சி அமைப்பைப் பார்த்தால் ஆத்திகத்தை ஆதரிக்கும் காட்சிகளாக வருகின்றன. ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று சொன்ன மறுநிமிடமே ‘ஆனா நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது’ என்று சொல்லிக் குழப்பும் ரஜினிக்கும் மேலாகக் குழப்புகிறது நாத்திகக் கருத்துகளும் ஆத்திகக் காட்சிகளும். கமல் எந்தப் பாலத்திலிருந்து எப்போது குதித்தாலும் எப்படியாவது ஒரு வண்டி வந்து அவரைக் காப்பாற்றிவிடுகிறது. எப்படி வண்டி வந்தது? அப்படி ஒரு வண்டியில் ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கமல் கடவுள் இருந்திருக்கலாம் என்பார். அந்தக் கல்லும் ஒரு கடவுள். அதுவும் சுனாமி வழியாக வந்து தன்னைக் கரைசேர்த்துக்கொண்ட கடவுள்.

பகுத்தறிவு பேசும் அறிவியலறிஞர் கமலுக்கு மூளை இல்லையோ என யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் வசனங்கள் கமலின் டாப் நகைச்சுவை. சுனாமியில் பத்தாயிரம் பேர் சாகிறார்கள். ஆனால் கிருமி பரவியிருந்தாலோ தமிழகமே, ஏன் இந்தியாவே இல்லாமல் போயிருந்திருக்கும். அப்படியானால் ஒரு பகுத்தறிவுவாதி எப்படி யோசிக்கவேண்டும்? நல்லவேளை சுனாமி வந்தது என்றுதான் யோசிக்கவேண்டும். ஆனால் அறிவியலறிஞர் கமலோ ராமசாமி நாயக்கரின் மகன். அவர் கேட்கிறார், பத்தாயிரம் பேர் செத்ததுதான் கடவுளோட செயலா என்று. அந்தப் பகுத்தறிவு நமக்கு வராது என்று ஏற்கெனவே புரிந்துவிட்டதால் அது பற்றிப் பேச ஒன்றுமில்லை என்பதும் தெரிந்துவிடுகிறது. பகுத்தறிவு அதோடு நிற்பதில்லை. ஒரு இஸ்லாமியர் சொல்கிறார், நாம இருநூறு பேர் மசூதிக்குள் இருந்ததால்தான் தப்பித்தோம் என்று. அப்போது அங்கே யாரும் கேள்விகள் எழுப்பவதில்லை, செத்த பத்தாயிரம் பேருக்கு என்ன பதில், அதுதான் அல்லாவின் கருணையா என்று. ஏனென்றால் பகுத்தறிவு பேசுபவராக வரும் கமல் பிறந்தது தமிழ்நாட்டில். அவர் எங்கு வேலைக்குச் சென்றாலும், என்ன டாக்டர் பட்டம் பெற்றாலும் அவருக்குத் தெரிவதென்னவோ தமிழகம் தந்த பகுத்தறிவு மட்டுமே. இந்து மதத்தை விமர்சிப்பது நடுநிலைமை, மற்றெந்த மதத்தையும் பாராட்டுவதும், விமர்சிக்காமல் இருப்பதும் முற்போக்கு என்பது கமலுக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டிருக்கிறது. அறிவியலறிஞர் கமலை நாயுடு விமர்சிக்கும்போது தேவையே இல்லாமல் கேட்கிறார், ‘நீ ஐஎஸ்ஐயா, அல் குவைதாவா’ என்று. என்னடாவென்று பார்த்தால், கடைசியில் ஒரு இஸ்லாமியரிடம் அதே கேள்வியைக் கேட்கவேண்டியிருக்கிறது. முதலில் ஒரு காட்சியில் இதைச் சொல்லாமல் கடைசியில் மட்டும் கேட்டுவைத்தால் வரும் எதிர்ப்பு எப்படியிருக்கும் என்பது கமலுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அரசியலில் இந்தப் பாகுபாடு கமலுக்கு இல்லை. உச்சகட்ட காட்சியில் கருணாநிதி வரப்போகிறார் என்றதுமே சுனாமியைப் பார்வையில் ஜெயலலிதா வந்துவிடுகிறார். ஏனென்றால் நிஜக்கமல் பிறந்ததும் தமிழ்நாடு என்பதால் அவருக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. இந்து மதத்தின் மீது வைக்கும் விமர்சன ‘தைரியம்’, அரசியலின் மீது கிடையாது. நல்லதுதான், இல்லையென்றால் அடுத்த ஆட்சியில் அடுத்த படம் வருமா என்பது யாருக்குத் தெரியும். ‘சண்டியரை’ ‘விருமாண்டியாக்கிய’வரிடம் மோத யாருக்குத் தைரியம் வரும்? மோதவேண்டுமென்றால் இருக்கிவே இருக்கிறது ஒரு ‘தமிழ்நாட்டு செக்யூலரின்’ வழி. பிறகென்ன கவலை?

வசனகர்த்தாவாக கமல் அதிகம் சொதப்பிய படம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு வசனம் என்பது அது பேசும் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது என்பதைக்கூடவா கமல் புரிந்துகொள்ளவில்லை? மிகவும் சீரியஸான கட்டங்களில் ஆளாளுக்கு கிரேஸித்தனமாக வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். அறிவியலறிஞரில் தொடங்கி, லூஸு பாட்டியிலிருந்து, அவ்தார் சிங் வரை எல்லாரும் நாயுடு மாதிரியே பேசிக்கொண்டு திரிகிறார்கள். போதாதற்கு நேரம்கெட்ட நேரத்தில் ஜோக்கடிப்பதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டும் நாகேஷும் கே.ஆர். விஜயாவும். இப்படி ஆளாளுக்குப் பேசும் வசனங்களில் படம் பல காட்சிகளில் கிரேஸி மோகன் நாடகம் போல ஆகிவிட்டது. இந்த சொதப்பலில் சில நல்ல வசனங்கள் நினைவுக்கு வராமலேயே போயிவிடுகின்றன. (‘உங்கள மாதிரி ஒரு தெலுங்கன் வந்து தமிழைக் காப்பாத்துவான் சார்’ – நான் ரசித்த வசனத்தில் ஒன்று.)

பின்னணி இசையில் பேரிசைச்சலே முதன்மை பெறுகிறது என்றாலும் மோசமில்லை. குறிப்பாக நாயுடு ‘தெலுங்கா’ என்று கேட்கும் காட்சியில் வரும் இசை. பாடலில் கல்லை மட்டும் கண்டால் பாடலும் முகுந்தா முகுந்தா பாடலும் நன்றாக இருக்கின்றன. முகுந்தா முகுந்தா பாடலில் தோல் பாவைக்கூத்து காட்டுகிறார் பிராமணரான அசின். எனக்குத் தெரிந்து எந்த பிராமணரும் தோல் பாவைக்கூத்து செய்வதில்லை. மண்டிகர் சாதியைச் சேர்ந்தவர்களே தோல் பாவைக்கூத்து செய்கிறார்கள்.

ஒளிப்பதிவின் குளுமை படம் முழுக்க வரும் கிராஃபிக்ஸில் காணாமல் போய் ஒருவித எரிச்சலே காணக் கிடைக்கிறது. நெட்டைக் கமல் வரும் பெரும்பாலான காட்சிகளில் அவர் தலை பாதி தெரிவதில்லை. நெட்டைக் கமலைப் பார்த்து பேசுவதாக நினைத்துக்கொண்டு ஆளாளுக்கு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுகிறார்கள். கிராஃபிக்ஸ் கோளாறு. அதிகம் செலவு செய்துவிட்டால் பிரம்மாண்டம் வந்துவிடாது என்பதற்கு குருவியும் தசாவதாரமும் உதாரணங்கள். சிவாஜி திரைப்படத்தின் பிரம்மாண்டம் அதன் செலவுகளில் மட்டுமில்லை, ஷங்கரின் திறமையில் உள்ளது.

பல லாஜிக் ஓட்டைகளுக்கு மத்தியில், நாத்திகப் பிரசாரத்திற்கு மத்தியில், ஒட்டாத மேக்கப்புகளூக்கு மத்தியில் கதையையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. அசின் நன்றாக நடித்திருப்பதும், நாயுடு கொண்டு வரும் சிரிப்பும் இல்லாவிட்டால் படத்தை குப்பையாகச் சேர்த்திருந்திருக்கலாம். கமலின் உழைப்பை மட்டும் மனதில் கொண்டு, மாறுவேடப் போட்டி பார்ப்பது போல் பார்க்கலாம்.

கடைசியாக ஒரேயொரு சந்தேகம். ‘தசாவதாரம்’ என்பது தமிழ் கிடையாது. எப்படி இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தந்தார்கள்? சிவாஜி படம் வந்தபோது அதற்குப் பெயர்ச்சொல் என்கிற விளக்கம் தரப்பட்டது. இதற்கு என்ன விளக்கமோ? பேசாமல் தன்னைப் புகழும் எந்தவொரு நடிகரின் படத்திற்கும் வரிவிலக்கு தரலாம் என்று அரசு அறிவித்துவிடலாம். கேள்விகள் எழாது.

மதிப்பெண்கள்: 41/100

Share

இந்தியாவைச் சுற்றிய வாலிபன்

மக்கள் தொலைக்காட்சியில் ‘உலக ரஷ்யத் திரைப்படங்கள்’ வரிசையில் ‘மூன்று கடல்களுக்கு அப்பால்’ (A Journey beyond three seas) படத்தைக் காண்பித்தார்கள். படத்தின் ஆரம்ப முன்னோட்ட சட்டங்களில் ரஷ்யப் படத்தின் கதாநாயகனின் படத்தோடு நர்கிஸ் படத்தையும் பத்மினி படத்தையும் காண்பிக்க, சற்று குழம்பிப் போனேன். ரஷ்யப் படத்தில் பத்மினியும் நர்கிஸ¤ம் நடித்திருக்க, அதைப் பார்ப்பது சந்தோஷமாகத்தான் இருந்தது.

15ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த முதல் ரஷ்ய யாத்ரிகர் அஃபனாஸி நிகிதியைப் பற்றிய படம் இது. அஃபனாஸி நிகிதி இந்தியாவில் சுற்றியலைந்தபோது இந்தியாவின் கலாசாரம், இந்தியாவில் அவர் கண்ட காட்சிகள் பற்றிய வர்ணனைகளுடன் இந்தியாவின் அன்றைய வர்த்தகம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். அவர் ரஷ்யா திரும்பியதும் என்ன ஆனார் என்பதை கண்டறிய இயலாமல் போகிறது. ஆனால் அவர் எழுதிய குறிப்புகள் அன்றைய ரஷ்ய அரசின் கையில் கிடைக்க, அதை பாதுக்காத்து வைக்கிறது அரசு. அதை அடியொற்றி எடுக்கப்பட்ட படம் இது.

அஃபனாஸி நிகிதி தன் தாய்நாட்டிலிருந்து வர்த்தகப் பயணமாக ஈரான் வழியாக இந்தியா வந்தடைகிறார். (முதல் இருபது நிமிடங்கள் நான் பார்க்காததால் ஈரானில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.) ஈரானில் அவர் கொண்டுவந்த பொருள்கள் எல்லாம் களவு போகின்றன. மிஞ்சுவது ஒரு குதிரை மட்டுமே. அழகான அக்குதிரையுடன் இந்தியாவில் நுழைகிறார் அ·பனாஸி. இந்தியாவிற்கு வரும் முதல் ரஷ்ய யாத்ரிகர் அவர். இந்தியச் சந்தைகளில் நடக்கும் கேளிக்கையில் ராம கதையை ஆடிப் பாடுகிறார்கள் மக்கள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அ·பனாஸியின் குதிரை களவு போகிறது. அந்தக் குதிரையைத் திருடியது அந்நகர ஆளுநராகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் ராமகாதை பாடியாடும் சாது. ஆளுநரிடம் சென்று தனது குதிரையைத் திரும்பக் கேட்கிறார் அ·பனாஸி. இஸ்லாமிய அரசின் பிரதிநிதியாக அங்கு ஆளும் ஆளுநர் அ·பனாஸியைத் தன் படையில் சேர்ந்துவிடவும் மதம் மாறவும் நிர்ப்பந்திக்கிறார். அப்படிச் செய்தால் மட்டுமே அவருக்கு அவரது குதிரை திரும்பக் கிடைக்கும் என்றும் சொல்கிறார். என்ன ஆனாலும் தான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறமுடியாது என்று சொல்கிறார் அ·பனாஸி. நான்குநாள்கள் கெடு தரும் ஆளுநர் அதற்குள் மதம் மாற ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லது அஃபனாஸி ஏதேனும் வேலை தேடிக்கொண்டு அவன் அங்கு வாழத் தேவையான உத்தரவாதத்தை யாரேனும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார். அ·பனாஸிக்கு சாது ஒரு உபாயம் சொல்கிறார். இரண்டு நாளில் நகருக்கு வரும் தலைவரிடம் சென்று முறையிட்டால் பலன் கிடைக்க வழியுண்டு என்கிறார். அதேபோல் அ·பனாசியும் தலைவரின் வழியை மறித்து உதவி கேட்கிறார். தலைவர் ஏற்கெனவே அ·பனாசியை அறிந்தவர். அவர் ரஷ்யா சென்றிருந்த சமயத்தில் அவருக்கு உதவியர் அஃபனாஸி என்பதால் ஆளுநரிடம் அ·பனாசி தன் நண்பன் என்றும் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்யவேண்டியது ஆளுநரின் கடமை என்றும் உத்தரவிடுகிறார். குதிரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு இந்தியாவைச் சுற்றத் தொடங்குகிறார் அ·பனாஸி.

இதற்கிடையில் பாம்பு கடித்து சாகக் கிடக்கும் சாம்பா என்கிற பெண்ணைக் காப்பாற்றுகிறார் அ·பனாஸி. கடும் மழைக்காலத்தில் குதிரையில் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் சாம்பாவின் வீட்டில் தங்குகிறார். அங்கு அவருக்கும் சாம்பாவிற்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால் நாடு, மதம் போன்ற பிரிவினைகளுடன் அவளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு, காதலை வெளியில் சொல்லாமல், மழைக்காலம் கழிந்தவுடன் மீண்டும் புறப்படுகிறார் அ·பனாஸி.

செல்லும் வழியில் ஒரு கோயிலுக்குள் செல்ல முயல்கிறார். அவர் வெளிநாட்டவர் என்பதால் தடுக்கிறார்கள். சாது அங்கு வந்து தத்துவங்களை எடுத்துக்கூறி, தடுத்தவர்களிடம் உண்மையை விளக்க, அ·பனாஸியை கோயிலுக்குள் அனுமதிக்கிறார்கள். சாதுவிற்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுகிறார் அ·பனாஸி.

வேறொரு ஊரில் வேறொரு பெண்ணைச் சந்திக்கிறார் அ·பனாஸி. அவர் ஒரு சிறந்த நடனப் பெண். அந்த ஊரில் சில காலம் வசிக்கும் அஃபனாஸி தன் குதிரையை விற்று அதற்கு மாற்றாகத் தங்க நாணயங்கள் பெற்றுக்கொள்கிறார். அந்த ஊரின் வைஸ்ராயைச் சந்தித்து ஊரின் மோசமான நிலையை எடுத்துச் சொல்கிறார். அவரைச் சந்திப்பதற்கு நடனப்பெண் உதவுகிறாள். வைஸ்ராயிடம் ஊரில் முதலாளிகள் கொழுத்திருக்கவும் தொழிலாளிகள் ஏழைகள் வாடவுமான நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அ·பனாஸி. ரஷ்யாவில் அப்படி இல்லையா என்று ஏளனத்தோடு கேள்வி கேட்கும் வைஸ்ராயிடம், உலகெங்கும் இதே நிலைதான் என்று ஒப்புக்கொள்ளுகிறார் அ·பனாஸி. வைஸ்ராய் அவனை மதித்து, ரஷ்ய அரசுக்கு ஒரு கடிதமும் கொடுத்தனுப்புகிறார். நடனப்பெண்ணிடம் சொல்லிவிட்டு வேறு இடம் நோக்கிக் கிளம்புகிறான் அ·பனாஸி. அவன் மீது ஒருதலையாகக் காதல் கொள்ளும் நடனப்பெண் மனம் உடைந்துபோகிறாள்.

அ·பனாஸியின் மனம் ரஷ்யாவையும் அவனது அம்மாவையும் நினைத்து ஏங்குகிறது. மீண்டும் நாடு திரும்ப முடிவெடுக்கிறான். வரும் வழியில் சாம்பாவின் வீட்டுக்குச் சென்று மறைந்திருந்து பார்க்கிறான். சாம்பா தூளியில் தனது குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறாள். ஏக்கத்தோடு பார்க்கும் அ·பனாஸி, தன்னிடமுள்ள தங்க நாணயங்களை அவள் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு வெளியேறுகிறான்.

அவனிடம் பணம் இல்லாததால் அவனைத் தங்கள் படகில் ஏற்றிக்கொள்ள வணிகர்கள் மறுக்கிறார்கள். அவன் மாலுமியாக வருகிறேன் என்று சொல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அங்கு உடல்நலமில்லாமல் படுத்துக்கிடக்கும் சாதுவைச் சந்திக்கிறான். அவர் அவனுக்கு மீண்டும் உதவுகிறார். பாட்டுப்பாடி காசு சேர்த்து அவனுக்குத் தருகிறார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, இந்தியாவைப் பற்றிய நல்ல விஷயங்களை ரஷ்யா முழுதும் எடுத்துச் சொல்வேன் என்று கூறிவிட்டு, படகேறுகிறார் அ·பனாஸி.

உலகின் முதல் பயணக்கட்டுரையாக (உறுதியாகத் தெரியாது) இருக்கும் சாத்தியமுள்ள இப்புத்தகத்தை வாசித்திருந்தால் இப்படம் தந்த அனுபவங்களைவிடக் கூடுதலாகப் பெற்றிருக்கமுடியும் என்பது உண்மை. படம் ஒரு திக்கில்லாமல் அலைவதுபோல் ஆகிவிட்டது. உலகத் திரைப்பட வரிசையில் இதை எப்படிச் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவிற்கு வரும் முதல் ரஷ்யன் அ·பனாஸி. ஆனால் அவருடன் எல்லாரும் ரஷ்யமொழியில் பிளந்துகட்டுகிறார்கள். சாம்பா (நர்கிஸ்) அவரிடம் ரஷ்யமொழியில் பேசுகிறார். ஆனால் ஹிந்தியில் பாட்டுப்பாடுகிறார். நடனப்பெண் (பத்மினி) கதையும் இதே. ரஷ்யமொழியில் பேசிவிட்டு, ஹிந்தியில் பாட்டுப்பாடி மயக்கம் போட்டு விழுகிறார். அஃபனாஸி செல்லும் ஊராக பிடார் என்கிற ஊரை மட்டுமே சொல்கிறார்கள். அவர் எந்த ஊருக்குப் போகிறார், யாரைப் பார்க்கிறார் என்பதற்கான விவரங்கள் சரியாக இல்லை. கடைசியில் எங்கேயிருந்து கப்பலேறுகிறார் என்பதும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று ஒரு காட்சியில் விஜயநகரப் பேரரசைப் பார்த்திருக்கிறேன் என்கிறார் அ·பனாஸி. அடுத்த காட்சியில் அவர் இருக்கும் இடம், விஜய நகரப் பேரரசின் கட்டடக்கலையில் உருவான கோபுரங்களைக் கொண்டதாக இருக்கிறது. இன்னொரு காட்சியில், ராம், கிருஷ்ணா என ஒலிக்கும் கோயிலுக்குள்ளிருந்து மூன்று பட்டை போட்ட சைவர்கள் ஓடிவருகிறார்கள். சாது பாட்டுப் பாடிச் சொன்னதும் உடனே அயல்நாட்டவரைக் கோயிலுக்குள் அனுமதித்துவிடுகிறார்கள். சாது தானும் ஒரு அயல்நாட்டவன் என்கிறார். எங்கெங்ல்லாமோ போகிறது படம்.

நர்கிஸ¤க்கும் பத்மினிக்கும் அதிகக் கவலைகள் இருந்திருக்காது. இந்தியப் படங்களில் செய்த அதே அதீத நடிப்பு, அதே அதீத சோகம், அதே காதல் தோல்வி, கையை மடித்து முழங்கையைக் கொண்டு கண்ணை மறைத்துக் கதறல். நர்கிஸை ரஷ்யாவிற்குக் கூட்டிச் சென்றால் செலவு என்று நினைத்தார்களோ என்னவோ, நர்கிஸ¤ம் கதாநாயகனும் ரஷ்யாவைப் பார்க்கும் கனவுக் காட்சியை செட்டில் எடுத்து சேர்த்து ஒட்டிவிட்டார்கள். நர்கிஸ¤ம் பத்மினியும் தாங்கள் ரஷ்யப்படங்களில் நடித்ததாகச் சொல்லிக்கொள்ளலாம். இறந்தபின்பு அவர்களுக்கு குறிப்பெழுத உதவியாக இருந்திருப்பது இணையத்தின் மூலம் புரிகிறது. லதா மங்கேஷ்கரும் ரஷ்யப் படத்தில் பாடல்கள் பாடியிருக்கிறார். சும்மா இல்லை, அதுவும் ஹிந்திப்பாடல்!

அஃபனாஸியை இஸ்லாத்திற்கு மாறச் சொல்லும்போது அவர் அதை மறுக்கிறார் என்று படம் சொல்கிறது. ஆனால் கூகிளில் தேடினால், அவர் கடைசி காலத்தில் இஸ்லாமியராக வாழ்ந்ததற்கான சாத்தியங்களே அதிகம் என்று வருகிறது. அவர் இந்தியாவில் இருந்தததால் ரஷ்யாவில் எப்போது கிறிஸ்துமஸ் வருகிறது எனத் தெரியாமல் ஈத்தையே கொண்டாடினார் என்றெல்லாம் சொல்கிறது கூகிள். அவரது பயணக்குறிப்பின் கடைசிப் பக்கங்களில் காணக்கிடைக்கும் அராபிய தொழுகைக் குறிப்புகளில் இருந்தும், உடைந்த அராபிய எழுத்துகளிலிருந்தும் அவர் இஸ்லாமியராக மாறியிருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தோன்றுகிறது என்கிறது கூகிள்.

அஃபனாஸியின் வெண்கலச் சிலையொன்று ரஷ்யாவில் இருக்கிறது. இதற்குப் பின்னான ஒரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்கிறது விக்கிபீடியா. ரஷ்யாவின் அமைச்சர் ஒருவர் இந்தியாவைப் பார்வையிட்டபோது, அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவரிடம் இந்தியாவின் முதல் ரஷ்ய யாத்ரிகர் பற்றிக் கேட்டாராம். அவரது சிலையை தங்கள் நாட்டில் நிறுவியிருந்ததாகச் சொன்னாராம் அமைச்சர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு சிலையில்லை. ரஷ்ய அமைச்சர் உடனடியாகத் தனது நாட்டுக்குத் தொடர்புகொண்டு, நேரு அடுத்தமுறை இந்தியா வருமுன் அந்தச் சிலையை உடனடியாக நிறுவவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதன்படி நிறுவப்பட்டதாம் அச்சிலை.

யாரோ ஒரு இந்திய இயக்குநரிடம் கருத்துக் கேட்டுப் படம் எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. இந்தியப் படங்கள் மாதிரியே அலைகிறது இப்படம். எதற்கெடுத்தாலும் ஹிந்தியில் பாடிக்கொல்கிறார்கள். (ஹிந்தியில் வெளியான பர்தேஸி இந்தப் படத்தின் மொழிமாற்றமா, மறுஆக்கமா எனத் தெரியவில்லை.) படம் வந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் இருக்கவேண்டும். படத்தின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. இசையும் அப்படியே. இந்தியக் காட்சிகளில் சீன இசைபோன்று வந்தாலும், பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. இந்திய நிலப்பரப்பு தெரிந்தவுடன் இசைக்கும் வேதங்களோடு சேர்ந்த பின்னொலியும், தொடர்ந்த மழைக்காட்சிகளும் அருமை. ஆனால் மக்கள் தொலைக்காட்சி இதை உலகத் திரைப்படங்கள் வரிசையில் வைத்ததைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. இதுவரை உலகத் திரைப்படங்கள் வரிசையில் ஒரு தமிழ்ப்படம் கூட ஒளிபரப்பாத மக்கள் தொலைக்காட்சி (அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழ்த்திரைப்படங்களின் தரம் அப்படித்தானிருக்கிறது என்றாலும்) இப்படத்தைவிட பல விதங்களில் மேன்மையான தமிழ்ப்படங்களான வீடு, சந்தியா ராகம், உன்னைபோல் ஒருவன் படங்களை ஒளிபரப்பலாம். ஒருவேளை இப்படத்தின் மூலமான பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தில் ஏமாந்துவிட்டார்களோ என்னவோ.

கட்டுரைக்கு உதவிய சுட்டிகள்.

http://en.wikipedia.org/wiki/A_Journey_Beyond_the_Three_Seas
http://en.wikipedia.org/wiki/Afanasy_Nikitin

Share

மியாவ்

மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதுதல் அவசியம்.

சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒருமுறை பின்ஜன்னலுக்குக் கீழிருந்து வருவது போலவும் ஒருமுறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கும் மாடிப்படியின் கீழிருந்து வருவது போலவும் பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என் மகன் ஓடிவந்து பூனை அவனைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் பாலை ஊற்றிக்கொண்டு, ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்துக்கொண்டும், இரண்டு உதடுகளைக் குவித்து பூனைகளை அழைக்க நாங்கள் மரபாகப் பயன்படுத்தும் ஒலியை எழுப்பிக்கொண்டும் பூனைக்குட்டிகளைத் தேடினேன். ஏற்கெனவே பூனை என் விரலைக் கடித்த அனுபவம் இருந்ததாலும், பூனை நாயொன்றை விரட்டும் காட்சியை நேரில் கண்டிருந்ததாலும் கொஞ்சம் அஞ்சி அஞ்சியேதான் அவற்றைத் தேடினேன்.

பொதுவாகவே பூனைகள் நன்றி அற்றனவாகவும் திருட்டுக்குணம் கொண்டனவாகவும் சித்திரிக்கப்படுகின்றன. பூனைகள் தங்கள் உலகைப் பொதுவில் காட்டாதவை. அவை அவற்றிற்கே உரிய உலகை தங்களோடு ஒளித்துவைத்து வெளியில் அலைபவை என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டது. அதில் உண்மையும் உண்டு. ஒரு பூனை தன் குட்டிகளை ஓரிடத்தில் ஏன் ஒளித்து வைக்கிறது என்பது அந்தப் பூனையைத் தவிர யாருக்கும் தெரியாத மர்மமாகத்தான் இருக்கமுடியும். நான் தேடிக்கண்டடைந்த பூனைக்குட்டிகளும் எங்கள் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் சந்தின் மேல் உள்ள ஸ்லாப்பில் கிடக்கும் பழஞ்சாக்கு ஒன்றில் அண்டிக்கிடந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, கண் திறக்காமல் தாயைத் தேடும் அப்பூனைக்குட்டிகளை நான் பார்த்த மாத்திரத்தில், அவை எனக்குப் பிடிதுப்போயின. என் மகன் விடாமல் ‘பூனக்குட்டி பூனக்குட்டி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நான் மூடப்பட்டிருந்த கிணறு ன்றில் கால்வைத்து மேலேறி மெல்லப் பூனைக்குட்டிகளை வருட யத்தனித்த நேரத்தில் கொஞ்சம் சீறலும் கோபமுமாக பெரிய பூனை ஒன்று குரல் கொடுத்தது. உடலெங்கும் ரோமங்கள் குத்த்திட்டு நிற்க – பூனைக்கல்ல, எனக்குத்தான். பூனையின் குரலில் கொஞ்சம் பயந்துவிட்டேன்! – நான் முகம் வெளிறிப் பூனையைப் பார்த்தேன்.

பூனையின் முகங்கள் பலவேறானவை. மிகவும் தீர்க்கமான முகம் முதல், முக்கோண முகமாக, அசமந்த முகத்துடன், எப்போதும் பயந்தது போலவே இருக்கும் முகத்துடன் எனப் பல்வேறு பூனைகளை நான் கண்டிருக்கிறேன். இந்தப் பூனையின் முகம் அருளற்றது. தீர்க்கமற்றது. அதன் முகத்தில் எப்போதும் ஒரு கோபம் இருந்தது. கண்களில் எப்போதும் ஒரு மருட்சியிருந்தது. வீட்டில் வளர்க்கப்படாமல் தான்தோன்றியாக வளரும் பூனைகள் எப்போதுமே ஒரு பயத்துடனும் எப்போதும் எங்கேயாவது ஓடிவிட யத்தனிக்கும் ஒரு நினைப்புடன் அலைவது போலவே இருக்கும். இந்தப் பூனையும் அப்படியோர் எண்ணத்துடன் என்னை முறைத்துப் பார்த்தது. நான் கொண்டு போயிருந்த பாலை குட்டிகள் குடிக்கப்போவதில்லை. இருந்தாலும் அங்கு வைத்துவிட்டு வந்தேன். மறுநாள் பார்த்தபோது ஒரு சொட்டுப் பால் இல்லாமல் ப்ளாஸ்டிக் கப் காலியாக இருந்தது. அதைக் குடித்த நன்றிகூட இல்லாமல் அந்தப் பெரிய பூனை வழக்கம்போல் ஏதோ ஒரு கோபத்துடன் என்னைத் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

தொடர்ந்து இரண்டு மூன்று நாள்களுக்கு வேலை விட்டுச் செல்லவும் முதல் வேலை, என் பையனை அழைத்துக்கொண்டு குட்டிகளுக்குப் பால் வைப்பது என்கிற பெயரில் பெரிய பூனைக்குப் பால் வைப்பது என்பதாகிவிட்டது. நான் மறந்தாலும் என் பையன் என்னிடம் ‘பூன என்ன கூப்பிடுது, பால் கேக்குது’ என்று கூட்டிக்கொண்டு போய்விடுவான். ஒருநாள் பூனைக்குட்டிகளின் சத்தத்தையே காணவில்லை. ஒரு தாய்ப்பூனை குட்டிப் பூனைகளின் இடத்தை ஏழு தடவை மாற்றும் என்று என் அம்மா சொல்வாள். அப்படி இடம் மாற்றப்பட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். சில நாள்களுக்குப் பின்பு மீண்டும் பூனைக்குட்டிகளின் சத்தம். பூனைக்குட்டிகள் இரண்டு வீட்டின் பின்புறத்திலுள்ள சிறிய சந்தில் கீழே இருந்து கத்திக்கொண்டிருந்தன. மேலே ஸ்லாப்பில் இன்னொரு குட்டி இருக்கும் என்று தேடியபோது அந்தக் குட்டியைக் காணோம். தாய்ப் பூனையையும் காணவில்லை. குட்டிகள் கொஞ்சம் வளர்ந்திருந்தன.

இப்போது குட்டிகளுக்கே பால் வைக்கத் தொடங்கினேன். என்னைப் பார்த்ததும் எதிர்த்திசையில் ஓட்டமெடுத்தன இரண்டும். நான் ‘புஸி பாஸ் பாஸ்’ என்று கூப்பிடும்போது, நான் ஏதோ கெட்டவார்த்தையில் திட்டுவதாக நினைத்த அப்பூனைக்குட்டிகள் மிரண்டு விழித்தன. என் மனைவி தூரத்திலிருந்து, ‘புஸி பாஸ் பாஸ்னா எனக்கே புரியல, புஸி பால் பால்னா அதுக்குக் கொஞ்சமாவது புரியும்’ என்று சொல்லிவிட்டு, அவளே உரக்கச் சிரித்துக்கொண்டாள். இரண்டடி எடுத்துக் கொஞ்சம் அருகில் சென்றால், பூனைக்குட்டிகள் சீறின. பாலை வைத்துவிட்டு, கையைக் காண்பித்துவிட்டு, அதன் கண்ணில் படாமல் ஒளிந்து நின்றதும், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்து குடித்தன. தட்டில் வைத்த பாலைக்கூடக் குடிக்கத் தெரியாத குட்டிகள் அவை. பாலைத் தரையில் தட்டிவிட்டுப் பின்பு நக்கின. என் பையன் ஜாலி ஜாலி என்று குதித்தான்.

ஒருநாள் இரவு 8 மணி வாக்கில் தொடர்ந்து ஒரு குட்டியின் மியாவ் சத்தம் கேட்டது. வெளியிலிருந்து நாயின் குரைப்புச் சத்தமும் கேட்டது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள். பால் எடுத்துக்கொண்டு போனாலும் குடிக்கப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நாயின் விநோதமான சத்தம் திடீரென என்னுள் ஒரு படபடப்பை ஏற்படுத்த தலைதெறிக்க வீட்டின் பின்பக்கம் ஓடினேன். ஒரு கையளவே ஆகாத குட்டியொன்று சுவரோடு சுவராக ஒடுங்கி, கத்தலுடனும் சீறலுடனும் நாயைப் பார்த்துப் பயந்துபோயிருக்க, நாய் அப்பூனைக்குட்டியைப் பார்த்து விடாமல் குரைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தெருநாய் ஏன் அப்பூனைக்குட்டியைக் கடிக்கவில்லை என்பது புரியவில்லை. குட்டிப்பூனையின் சீறல் அந்நாய்க்கு விநோதமாகப்பட்டிருக்கவேண்டும். நாயின் வாயில் பட்ட பூனை பிழைப்பது அரிது. மேலும் நாய்கள் பூனையின் சீறலுக்குப் பயந்து நிற்கும் என்பதும் நிச்சயமல்ல. தெருநாய் என்பதால் எதற்கோ பயந்துகொண்டு குரைத்தலோடு நின்றுவிட்டது போல. கையில் கிடைத்த கம்பொன்றைத் தூக்கி எறிந்தேன். குரைத்துக்கொண்டு ஓடியது நாய். பூனை பிழைத்தது மறுபிழைப்புதான். அன்றிலிருந்து பூனை அங்கேயேதான் இருக்கிறது. இன்னொரு குட்டி எப்போதாவது வரும், போகும்.

இன்னொரு நாள் நான் வீட்டுக்குள் நுழைந்தவுடன் என் பையன் என்னிடம், ‘இன்னைக்கு பூனைக்குட்டி வீட்டுக்குள்ள வந்திட்டு’ என்றான். என் ஷ¥வை நக்கியது அவனுக்குப் பிடிக்கவில்லை போல. அதையே சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் பால் ஊற்றுவோம். நானும் என் பையனும் பூனைக்குட்டிகளின் கண்களில் இருந்து மறைந்து பின்னரே பூனைக்குட்டிகள் பாலைக்குடிக்கும். உண்மையில் பூனையின் உலகம் வேறானதுதான். ஏனென்றால் அதிகம் ஓடத் தெரியாத குட்டிகள்கூட திடீரெனப் பகலில் எங்கு காணாமல் போகின்றன, எப்போது வருகின்றன, திடீர் மழையில் எங்கு ஒதுங்குகின்றன, ஏன் திடீரென மௌனம் காக்கின்றன, ஏன் திடீரென விடாமல் கத்துகின்றன என்பது எதுவும் புரிவதேயில்லை. வீட்டில் வளரும் பூனைகள் இப்படி தானாக வளரும் பூனைகளிலிருந்து வெகுவாக வேறுபட்டவை. வீட்டில் வளரும் பூனைகள் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும்வரை விடாமல் கத்தும். ஓரளவு நம்முடன் பரிச்சயம் ஏற்பட்டபின்பு, காலையும் மாலையும் பால் ஊற்றும் சமயங்கள் நீங்கலாக அவை கத்துவதே இல்லை.

இரவில் உங்கள் படுக்கையில் படுக்கும் பூனைகள், நீங்கள் ஒருக்களித்துப் படுக்கும்போது அசைந்து கொடுத்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் உங்கள் குழந்தையைப் போல, தன்னைப் பாதுகாத்துக்கொள்பவை. எக்காரணம் கொண்டும் அவை தூக்கம் கலைத்துவிட்டு ஓடுவதில்லை. அல்லது அதன் மேலேவிழும் உங்கள் கையைக் கடிப்பது இல்லை. காலை நேரங்களில் வீட்டுப் பூனைகள் அடையும் பரபரப்பு என்றென்றும் ரசிக்கத்தக்கது. ஒரு பூவையோ ஒரு ஈர்க்குச்சியையோ நீங்கள் ஆட்டும்போது, மிகக் கூர்மையாக அதைப் பார்த்து, அவை பதுங்கி -அப்படிப் பதுங்கி அமரும்போது விடாமல் வாலை ஆட்டும் அழகு ரசிக்கத்தக்கது – பின் சடாரெனப் பாயும் அதன் வேகமும் விளையாட்டு ஆர்வமும் பிரமிக்கத்தக்கது. இவற்றையெல்லாம் தெருப்பூனைகள் செய்வதில்லை. அல்லது யாரும் தெருப்பூனையிடம் இப்படி விளையாடுவதில்லை. ஒரு தெருப்பூனையை வீட்டுப் பூனையாக்குவது குறித்து யோசிக்கிறேன். ‘பூன நம்ம வீட்டுக்கு ராசிதான், ஆனாலும் எதுக்கு இப்ப’ என்ற குரல்கள் என் வீடெங்கும் ஒலிக்கும் என்பது தெரியும். அதனால் யோசனையாகவே இருக்கிறது. மட்டுமின்றி, பூனையின் ரோமங்கள் வீட்டிலிருக்கும் குழந்தையின் உடல்நிலைக்கு ஆரோக்கியமானதல்ல என்பதும் ஒரு கருத்து. இப்படிப்பட்ட யோசனைக்கிடையில் தெருப்பூனையாகவே காலம் கழித்துவருகின்றன இரண்டு பூனைக்குட்டிகள்.

இந்த இரண்டு பூனைக்குட்டிகளின் முகம்கூட அருளற்றதாகவும் பதற்றம் நிறைந்ததாகவுமே தோன்றுகிறது. பதற்றம் அதற்குத் தொடர்ந்து கிடைக்காத உணவின் காரணமாக இருக்கலாம். அருளற்ற முகம் நிச்சயம் அதன் தாயிலிருந்தும் மரபு மரபாக தொடர்ந்து அலையும் தெருப்பூனைகளிலிருந்து வந்ததாகவே இருக்கவேண்டும். நான் அப்பூனையை வீட்டுக்குள் கொண்டு வராததற்கு, இந்த அருளற்ற முகம்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இக்கணத்தில் உணர்கிறேன்.

முதலிலேயே தலைப்பைச் சொல்ல நினைத்தேன். ‘பொழுதுபோகாத பூனைகளும் காய்ச்சல்காரனின் கசாய முயற்சிகளும்.’ ஆம், கடுமையான காய்ச்சலன்றுதான் இக்காவியத்தை நான் இயற்றினேன்.

தொடர்புடைய சுட்டிகள்: 🙂

பின் தொடரும் பூனைகள்

Share

மூன்று கவிதைகள்

அன்பு

வீடெங்கும் அன்பு சூழ
அன்பே பிரதானம்,
அப்படியே ஆகுக.
அன்பைப் பற்றியே
எழுதத் தொடங்கினேன்
அடித்தல் திருத்தல்களில்
கிழித்தெறியப்பட்ட
காகிதப் பந்தில்
பயந்து கலைகிறது
தடித்த பல்லி
வாயில் கௌவிய
ஒரு பூரானோடு.


நாம்

நான் அழகனாக இருந்தேன்
மெல்ல வால் வளர்ந்தென
அதிர்ந்த நேரத்தில்
கொம்பும் முளைத்திருந்தது
மேலெங்கும் ரோமங்கள் முளைக்க
பற்களை மறைக்க
பிரயத்தனப்பட்ட நேரத்தில்
ஒரு பெண்ணை எதிர்கொண்டேன்
அவள் அழகாக இருந்தாள்…


கதை நேரம்

தாழ்வாரத்தின் சரிவிலிருந்து
கொட்டிக்கொண்டிருக்கிறது மழைநீர்
கதைக்குள் அமிழ்ந்துவிட்ட வண்ணத்துப்பூச்சி
அதன் பக்கங்களுக்குள் பரவி மேய
உயிர்ப்போடு விளங்கியது புத்தகம்
பக்கங்களுக்குள் சிக்கிக்கொண்ட
வண்ணத்துப் பூச்சி இறந்துவிட்டபோதிலும்
ஆவியுடன் காத்துக்கொண்டிருக்கும்
ஒரு கோப்பை தேநீர்
மேற்பரப்பில் தேடிக்கொண்டிருக்கிறது
என் முகத்தை
தூரத்திலிருந்து பரவும்
இனம்புரியாத மணம்
எல்லாவற்றின் மீதும் கவிய
தன் இருப்பின் கர்வத்தோடு
புரள்கின்றன பக்கங்கள்

மேலே உள்ள மூன்று கவிதைகளும் வார்த்தை ஏப்ரல் 2008 இதழில் வெளியானவை.

Share

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

(இது அரசுக்கெதிரான நடவடிக்கை அல்ல.)

Share

வார்த்தை மாத இதழ் வெளியீடு & எனி இந்தியனின் புதிய புத்தகங்கள் வெளியீடு

Share

வசியம் – சிறுகதை

டும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. ‘தானா வேர்த்தா நல்லதுடே’ என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அரைத்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன. எப்படியும் சோலை இரவு வருவாள் என்று நினைத்து ஏங்கிக் கிடந்து, காமம் தலைக்கேறி குதியாட்டம் போட்டு அடங்கி அவள் வராமல் மனதெங்கும் பெரும் கோபத்தோடு, உறங்கிப்போவதும் சிறு சத்தம் கேட்டு விழிப்பதுமாகக் கழிந்த இரவுகள் அவருக்கு இப்போதுகூட பெரும் எரிச்சலைத் தந்தது.

ஜாடைமாடையாகப் பேசி ஒருவழியாக தன் மனதில் இருப்பதை அவளுக்குச் சொல்லிவிட்டதாகவே நம்பியிருந்தார் பூபதியாப்பிள்ளை. ஐந்து வருட கொதிப்பை ஒருவழியாகச் சொல்லி முடித்ததில் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. பட்டென உடைத்துச் சொல்லமுடியாவிட்டாலும் ஜாடைமாடையாகச் சொன்னதே பெரிய வெற்றி என நினைத்தார். ஒருவழியாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “ராத்திரி வேல கொஞ்சம் கெடக்கு, வந்துடு’ என்று சொல்லிவிட்டு வந்திருந்தார். நாகம்மை ஆச்சி வீட்டுக்கு வர காலை ஆகும் என்று அவருக்குத் தெரியும். அவள் சுருக்கக் கிளம்பினாலே ஒருநாள் ஆகும். ஆனால் அன்று இரவு சோலை வரவில்லை.

காலையில் நாகம்மை எப்போதும் விடும் பெருமூச்சோடு வீடு வந்து சேர்ந்தாள். நாகம்மையின் உலகம் பெருமூச்சால் ஆனது. எதற்குப் பெருமூச்சு விடுவாள் என்றில்லை. தன் கணவன் பூபதியாப்பிள்ளையை நினைத்தால் ஒரு பெருமூச்சு. தன் அண்ணன் நெல்லையப்ப செட்டியாரை நினைத்தால் ஒரு பெருமூச்சு. சோலை வேலைக்கு வரவில்லை என்றால் ஒரு பெருமூச்சு. பெருமூச்சை விட்டவுடனேயே அந்த விஷயம் அவள் அளவில் முடிவுக்கு வந்துவிடும். பூபதியாப்பிள்ளைஅரசல் புரசலாக பிள்ளை சோலைக்காக கிடந்து அலைவது பற்றித் தெரிந்திருந்தது. அதை அறிந்த தினம் அதற்கும் ஒரு பெருமூச்சு விட்டாள். இன்னும் சில பெருமூச்சுகளுடன் சமையலைச் செய்து முடித்து பூபதியாப்பிள்ளையைச் சாப்பிட அழைத்தாள். தோளில் கிடந்த துண்டைக் கொண்டு வேர்வையைத் துடைத்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தார். அவர் மனம் வேறெங்கோ அலைந்துகொண்டிருந்தது. பருப்புத் துவையலும் கீரைக்கூட்டும் அவர் கவனத்தைக் கவரவே இல்லை. நாகம்மை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் உண்டதும் தட்டை எடுத்துக்கொண்டு கழுவப் போனாள்.

வாசலில் குடுகுடுப்பைக்காரன் சத்தம் கேட்டது.

‘நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’

நாகம்மை ஆச்சி உள்ளிருந்து சத்தம் கொடுத்தாள். “புள்ள பொறந்த வீடு.”

‘இப்படி ஊர ஏமாத்தற வரைக்கும் எந்தப் புள்ள இங்க பொறக்கும்’ என நினைத்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை.

“ஜக்கம்மா சொல்றா நல்ல காலம் பொறக்குது. ஐயா மனசுல இருக்கிற வாட்டம் நீங்குது.”

‘என்னத்த’ என்று சலித்துக்கொண்டார் பூபதியாப்பிள்ளை. நாகம்மை ஆச்சி கோபத்துடன் ‘சொன்னா போறதில்ல’ என்று வெளியே வந்தாள். குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பையை அடித்தபடி அடுத்த வீட்டுக்கு நகர்ந்தான்.

பூபதியாப்பிள்ளை குடுகுடுப்பைக்காரன் உடலெங்கும் போர்த்திக்கிடந்த சீலைகளைப் பார்த்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்துடன் அவனைச் சுற்றியிருந்தது. குடுகுடுப்பைக்காரனின் நெற்றியில் குங்குமமும் செந்தூரமும் நீண்டிருந்தது. முருகலான மீசை கூரிய நுனியுடன் வெளி நீட்டிக்கொண்டிருந்தது. பலமுறை தட்டப்பட்ட செப்புத் தகட்டுக் கோடுகள் போல அவன் முகமெங்கும் வரிகள் நிரம்பியிருந்தன. நாகம்மை முணுமுணுத்துக்கொண்டே ‘பச்சப் புள்ளய கொன்னுப்புடுவானுக’ என்றாள். எந்தக் குழந்தைக்காக நாகம்மை விசனப்படுகிறாள் என்பது பிள்ளைக்கு விளங்கவில்லை. காலார நடந்துவரலாம் என்றெண்ணி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். குடுகுடுப்பைக்காரனைக் கடந்து செல்லும்போது அவரது கவனம் முழுதும் அவன் மேலும் அவன் சொல்லும் வார்த்தைகள் மேலும் படிந்திருந்தது. அடுத்தவீட்டிலும் தவறாமல் சொன்னான், ‘நல்ல காலம் பொறக்குது, ஜக்கம்மா சொல்றா, குழந்தையாட்டம் தோள்ல ஒக்காந்து சொல்றா கேட்டுக்க.’

கிராமத்தில் காலை ஆனதற்கான அறிகுறியாக வெயிலைத்தவிர எதுவும் தெரியவில்லை. காந்தி சிலைக்குப் பின்னுள்ள தோட்டத்தில் பொது டிவி ஓடிக்கொண்டிருந்தது. சில பையன்கள் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவர்களின் ஆனந்தம் அவருக்குள் பெரிய சோகத்தை எழுப்பியது. மேலும் அங்கிருக்க விரும்பாமல், தாமிரபரணி செல்லும் மருத மரங்கள் அடங்கிய சாலையில் நடக்க ஆரம்பித்தார். மருத மரங்கள் அவருக்காகவே அசைந்து காற்றைத் தந்தது என்கிற கற்பனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு மரம் தனக்காக அசைகிறது, ஆனால் வீடெங்கும் கூலி வேலை செய்து பிழைக்கும் சோலை அசையவில்லை. சோலையின் பிடிவாதம் இவ்வளவு இருக்குமென அவர் எதிர்பார்க்கவில்லை. புடைவையைக் கால் தெரிய உடுத்தி, இடுப்பு தெரிய கொசுவத்தைச் சொருகியிருக்கும் சோலையின் தோற்றத்தை நினைத்தாலே அவருக்கு நிலைகொள்ளாது. வேலை செய்ய வீட்டுக்கு ‘பொம்பள’ வருகிறாள் என நினைத்தவருக்கு சோலையைப் பார்த்த மாத்திரத்தில் பொறி கலங்கியது போலிருந்தது.

பூபதியாப்பிள்ளையின் பெண் மோகத்தை நாகம்மை அறிந்தே வைத்திருந்தாள். ‘நம்ம மாதிரி கெடயாது, இவிங்க சாதிய நம்பப்புடாதுல்லா. அதுக்குத்தான் தலதலயா அடிச்சுக்கிட்டேன். ‘செட்டி’லயே பாப்போம்னு’ என்றார் நாகம்மை ஆச்சியின் அண்ணன். ஒரே தெறிப்பாக பூபதியாப்பிள்ளை ‘ஊருக்குள்ள இவன் எத்தன கூத்தியா வெச்சிருக்கான்னு எனக்குத்தாம்ப்ல தெரியும்’ என்று சொல்லிவிட்டார். நாகம்மைக்கு இரண்டுமே முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் ‘ஆம்பளைங்கன்னா இப்படித்தாம்ல’ என்று பக்கத்துவீட்டு மாமி சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டாள். ‘ஒழுக்கம் பொம்பளைக்குத்தாம்பில வேணும்’ என்பார் பூபதியாப்பிள்ளை. அதைக் கேட்டு வாயொழுகச் சிரிப்பார்கள் சுற்றியிருப்பவர்கள்.

ஆற்றுக்குப் போகும் வழியில் பதநீர் விற்றுக்கொண்டிருந்தான் மருதன். அவருக்குத் தாகம் தலைக்கேறி இருந்தது. இதுவாவது தணியட்டும் என்கிற எண்ணத்தில் ‘பதநி ஊத்துல’ என்றார். மருதன் ஊர் விஷயங்களைப் பேசிக்கொண்டே பனை ஓலையை வாட்டமாக மடித்து அவரிடம் கொடுத்தான். “குறுக்கிப் பிடிச்சுக்கிடுங்க” என்றான். “ரொம்ப குறுக்கிட்டீங்கன்னா கிழிஞ்சிடும்” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு அவரைத் திட்டுவது போலிருந்தது. “தெரியும்ல, வியாக்யானம் வெக்காம ஊத்துடே” என்றார். நுங்கு வெட்டிப் போட்டான். தாகம் கொஞ்சம் அடங்கியது. குடித்து முடித்தவுடன் அதை வாங்கி தன் காலுக்கருகில் போட்டுக்கொண்டான். “நாய் நக்கக்கூடாது கேட்டேளா.” பின்பு தன் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி, “தனிமரத்துக் கள்ளு இருக்கு வேணுமா அண்ணாச்சி” என்றான். பூபதியாப்பிள்ளை கொஞ்சம் யோசித்து, “இல்லடே வேணாம்” என்றார். யோசனையாக, “கொஞ்சம் வாயேண்டே நடப்போம்” என்றார். மருதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. கருப்பந்துறைக்கு சமீபத்தில் போன முக்கியமானவர்களைக் கேட்டுவிட்டு, தன் போக்கில் செல்லும் பூபதியாப்பிள்ளை இன்று அவனை கூட நடக்க அழைப்பதை அவனால் நம்பவேமுடியவில்லை. அவன் தூரத்தில் இருந்த பையனை அழைத்து கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கூட நடந்தான்.

“ஒடம்பெல்லாம் எரியுதுடே. அதான் பதனி குடிச்சேன். பதனி குளிர்ச்சிதான?”

“நேரத்த பொருத்துங்க அண்ணாச்சி. வெடியக் காலேல குடிச்சேள்ன்னா குளிர்ச்சி. இப்பம் குடிச்சேள்னா சூடு.”

“ஓ. இம்பிட்டு கத கெடக்கா. சரில. உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நெனச்சேன். ஒங்கப்பனுக்கு வசிய மருந்து செய்யத் தெரியும்ணு ஊருக்குள்ள பேச்சு கெடக்கே. அது நெசந்தானா?”

“எல்லாம் கதை அண்ணாச்சி. எங்க அம்மாளயே கடசி வரைக்கும் கூட வெச்சிக்கத் தெரியாம சீப்பட்டான். நீங்க வேற.”

“ஏ, பொம்பள சமாசாரத்துக்காக கேக்கலடே. பொதுவாவே வசியம் பத்திக் கேட்டேன்னு வெய்யி.”

“அட நீங்க வேற. வசியம்ன்றதே எதுக்குங்கீய? மேற்படிக்குத்தான்றது ஒரு கணக்கு.”

“அப்படீங்க?”

“பின்ன? என்ன விஷயம்னு சொல்லணும். அப்பத்தான் மேக்கொண்டு பேசமுடியும்.”

மெல்ல பெரிய மனிதனின் தோரணையை மருதன் உடுத்திக்கொண்டான். அதை பூபதியாப்பிள்ளை கவனித்தாலும் கவனிக்காதவாறு பதில் சொன்னார்.

“இம்புட்டுத்தானா? காசக் கொடுத்து வாட்டீன்னா வாரா. அதுக்கெதுக்கு வசியமருந்து எளவெல்லாம்?”

“அம்புட்டு சுளுவில்லடே. கிராதகி. ஆமா அவளுக்கு எம்பிட்டு வயசுல இருக்கும்? இருபத்தஞ்சு இருபத்தாறு இருக்குமா? நாஞ்சொல்றது புரியாமயா கெடக்கு? எளவு மானத்த விட்டுப்புட்டு வாயிலேயே சொல்லிட்டேங்கேன், ராத்திரி வாட்டீன்னு. என்னயே போயிட்டு வாவேங்களே, அத கொஞ்சம் யோசிச்சு பாருங்கேன்.”

“அப்படி சொல்லுதேளா. அதுவுஞ் சரிதான். கூலி வேலி செய்ற கழுத சிலிப்பிக்குதோ.”

“திட்டாதடே.”

பூபதியாப்பிள்ளை கொஞ்சம் வருத்தத்தோடு சொன்னதாகப்பட்டது மருதனுக்கு. லேசான நாணம் கூட இருந்ததோ? அவரைத் திட்டியிருந்தால்கூட தாங்கிக்கொண்டிருப்பார் என்று நினைத்தான் மருதன். இந்த மனிதரிடம் எப்படியும் பணம் தேறும் என்கிற நினைப்பு அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கூடவே, சோலையிடம் சொல்லி அவளை எச்சரித்து வைக்கவும் முடிவு செய்தான்.

“அப்ப வசியமருந்துதான் காரியங்கேளா?”

“நா சொல்லலடே, உங்கிட்ட கேக்கேன். வசியமருந்துங்காங்களே, அது சரிப்படுமாங்கேன்.”

“எனக்கு அதப்பத்தி ரொம்ப தெரியாது கேட்டேளா. ஆனா ஒண்ணு, செய்யிறவன் செஞ்சான்னா அதுக்கு இணை இல்லன்னு கேட்டிருக்கேன். கூனியூர்ல ராமையா இருந்தாம்லா? ஞாபகம் இருக்கா? பைத்தியம் புடிச்சு அலைஞ்சு கெடந்து செத்தானே… அவங்கிட்டேர்ந்து வசிய மருந்த வெச்சித்தான் சொத்தப் பிடுங்கினதாப் பேச்சு.”

கொஞ்சம் பயந்த மாதிரி பிள்ளை “அப்படியா” என்றார்.

“என்ன இப்படி கேக்கிய. செஞ்ச பார்ட்டி பெரிய பார்ட்டி. சேர்மாதேவி மசானத்துக்குள்ள அலைவானே குடுகுடுப்பக்காரன். அவந்தான் மருந்து செஞ்சது. வெசயம் தெரிஞ்சவன்னு பேச்சு.”

“அப்படீங்க?”

“பின்ன? ராமையா பய எதிர்மருந்து வெக்கேன்னு யாரோ ஒருத்தன்கிட்ட வாங்கி வைக்க, என்னாச்சுங்கீய? பயித்தியம் பிடிச்சுட்டு. அதுக்குத்தான் சொல்றது வெசயம் தெரிஞ்சவனா இருக்கணும்னு.”

‘நம்ம ஊர்ல ஒரு குடுகுடுப்பைக்காரன் அலைதானே, அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ’ என்று கேட்க வந்ததை சட்டென அடக்கிக்கொண்டு, “சரி விடுல. நமக்கெதுக்கு இந்த வினையெல்லாம். வந்தா வாரா, வராட்டி போறா, நமக்கா நஷ்டம். காசு கொடுத்தா கோடி பொம்பளைங்க. என்னாங்க?” என்று சொல்லிவிட்டு, “நீ சோலியப் பாரு. நா அப்படியே வூட்டுக்குப் போறேன்” என்று சொல்லிக் கிளம்பினார். இப்படி திடீரென்று பிள்ளை வெட்டிக்கொண்டது மருதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை வைத்து கொஞ்சம் பணம் கறக்கலாம் என்று நினைத்திருந்தது ஏமாற்றமாகிவிட்டது.

பூபதியாப்பிள்ளை வேகவேகமாக தெருவுக்குச் சென்று அங்கு குடுகுடுப்பைக்காரன் இருக்கிறானா என்று பார்த்தார். அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. வசிய மருந்தை குடுகுடுப்பைக்காரன் செய்வான் என்று ஏன் தனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டது என்பது குறித்து வருந்தினார். வேகவேகமாக நடந்து வந்ததில் அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது. நாற்பது வயதில் இந்த அலைச்சல் தேவையா என்று தோன்றியது. தேவைதான் என்று உடனே முடிவுக்கு வந்தார்.

ரவில் அடிக்கடி எழுந்து தண்ணீர் குடிப்பதும் மூத்திரம் கழிக்கப்போவதுமாக இருந்த அவரைப் பார்த்து நாகம்மைக்கு பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் “ஆம்பிளைங்க” என்று முணுமுணுத்துக்கொண்டே படுத்துக்கிடந்தாள். பெருமூச்சு விட்டாள். எட்டு முழப்புடைவையை உடலெங்கும் சுற்றி, வியர்வையோடு படுத்துக் கிடக்கும் நாகம்மையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது பூபதியாப்பிள்ளைக்கு. அவள் புடைவையை ஒரு அவசரத்திற்கு அவிழ்க்கக்கூட முடியாது என்பதை நினைக்கும்போது அவருக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவளது வியர்வையும் பெருமூச்சும் நினைவுக்கு வரும்போதே கோபம் வரும் பிள்ளைக்கு. ‘என்னத்துக்கு இம்புட்டு பெருமூச்சு விடுதா ஒரு பொம்பளை?’ நாகம்மை உறங்கும்வரை காத்திருந்துவிட்டு, நடுச்சாமம் தாண்டிய பின்பு சத்தமில்லாமல் வெளியில் வந்தார்.

நள்ளிரவுக்குப் பின் தெருவைப் பார்த்ததே இல்லை என்று உரைத்தது அவருக்கு. தூரத்தில் படுத்துக்கிடந்த இரண்டு நாய்கள் அவரைத் தலைதூக்கிப் பார்த்தன. பின்பு படுத்துக்கொண்டு விட்டன. “நாய்க்குக்கூட சட்ட இல்லியோ” என்று நினைத்துக்கொண்டு, சத்தமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போனார். மருதமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தன. ‘ரெண்டு பக்கமும் முனிசிபாலிட்டி காரனுவோ லைட்டு போட்டு விட்டானுவோ’ என்று நினைத்துக்கொண்டார். கருப்பந்துறைக்குள் நுழையுமிடத்தில் வெட்டியான் உட்கார்ந்திருந்தான். அவரைப் பார்த்து “எவம்லே இங்க வாரது? அதுவும் உசுரோட” என்றான். பூபதியாப்பிள்ளைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. “குடிகாரத் தாயோளி, செருப்பால அடிப்பேன். கொஞ்சம் தண்ணி உள்ள போய்ட்டா மருவாதி வாயில வராதோ” என்றார். வெட்டியான் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு, “சொல்லுங்க சாமி” என்றான். எப்போது வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவான் போல இருந்தது. “ஏல, இங்க எங்கல குடுகுடுப்பைக்காரன் இருக்கான்?” என்றார். வெட்டியான் “என்னது” என்றான். மீண்டும் கேட்டார் பிள்ளை. அவன் மீண்டும் என்னது என்றான். பிள்ளைக்கு ஆத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. ‘சரி போ, நா போய் தேடிக்கிறேன்” என்றார். அவன் குடிபோதையில் “இங்க எதுக்கு குடுகுடுப்பக்காரன் வாரான்? சொன்னா செருப்பால அடிப்பேம்பான். ஏல எரிக்கிற இடத்துல குடுகுடுப்பக்காரன் வருவானால” என்று சொல்லி தொப்பென்று கீழே விழுந்தான். அவனை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, மசானத்தைத் தாண்டி நடந்தார். தூரத்தில் ஒரு குடிசை கண்ணுக்குப் பட்டது. குடுகுடுப்பைக்காரன் அங்குதான் இருக்கவேண்டும் என நினைத்து நடையை எட்டிப்போட்டார்.

தூரத்தில் ஏதோ ஒரு உருவம் தன் குடிசையை நோக்கி வருவதைப் பார்த்த குடுகுடுப்பைக்காரன் என்னென்னவோ திட்டினான். வாயில் வராத வார்த்தைகளையெல்லாம் சொல்லி “தூ தூ” என்று துப்பினான். சைத்தான் சைத்தான் என்றான். கொஞ்சமும் பயப்படாமல் உருவம் பக்கத்தில் வரவும் அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது. பிள்ளை குடிசைக்கருகில் வரவும், குடிசையிலிருந்து கொலுசுச் சத்தத்தோடு ஒரு உருவம் முக்காடு போட்டுக்கொண்டு ஓடியது. அதைப் பார்த்ததும் பிள்ளைக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“எலே ஊரு விட்டு பொழக்க வந்த பய யார நாயிங்க.”

கண்கள் இரண்டையும் உருட்டி, என்ன சொல்வதென்று தெரியாமல் வந்தவர் யாரென்று புரியாமல் தன் புருவங்களைச் சுருக்கி ஞாபக அடுக்குகளில் தேடினான் குடுகுடுப்பைக்காரன். தான் குடித்திருப்பதால்தான் அவர் யாரெனத் தெரியவில்லை என நினைத்தான்.

‘என்ன முழிக்க. நாந்தாம்ல முதத்தெரு பண்ணையாரு.”

“இந்தக்காலத்துல பண்ணையாரா?”

“குடிச்சுக்கெடந்தாலும் நக்கல் போலயோ. சரில. கொஞ்சம் பேசணும்னு வந்தேன்.”

நடுஇரவில் போதையேற்றிக்கொண்டு பெண் மீது பாயக்கிடந்தவன் சாத்தான் என நினைத்து அலறியதில் கொஞ்சம் போதை இறங்கியிருந்தது. பண்ணையார், பேசணும் என்கிற வார்த்தைகள் குளறல் போல அவன் நெஞ்சுள் இறங்க, இன்னும் கொஞ்சம் போதை இறங்கி, “இதான் நேரமா சாமி” என்றான்.

“ஊர் சுத்துற ஒன்ன எங்கல பிடிக்க? ஒம் வீடு இங்கதாம்ல கெடக்கு? அப்ப இங்கத்தான் வருவான்.”

அவன் பெண் ஓடிய திசையில் ஏக்கமாகப் பார்த்துவிட்டு, “சொல்லுங்க” என்றான்.

“ஒம் பேரு என்னல?”

“கம்மாளனுங்க.”

“வசிய மருத்து செய்யத் தெரியுமால ஒனக்கு?”

பக்கத்தில் கிடந்த கயிற்றுக் கட்டிலை இரண்டு தடவை தட்டிவிட்டு அதில் உட்கார்ந்துகொண்டார் பிள்ளை. ஒருவன் தொடர்ந்து படுப்பதனால் ஏற்பட்ட கயிற்றுக்குழியில் சட்டென அவரது உருவம் அமிழ்ந்தது. இதில் எப்படி இன்னொரு பெண்ணோடு படுப்பான் என யோசித்தார்.

“என்னத்தல பதில காணோம்?”

“வயசுக்காலத்துல செஞ்சிருக்கேன். இப்பல்லாம் எவன் கேக்கான் அதை? ஊரு ஊரா பிச்ச எடுத்து பொழப்ப ஓட்டிக்கிட்டு கெடக்கோம்.”

“ஒஞ்சோகத்த இப்ப அளக்காத. நா ஒனக்கு வேண்டிய காசு தாரேன். வசிய மருந்து செய்வியால?”

காசு என்றதும் அவன் கொஞ்சம் யோசித்தான். நடு ராத்திரியில் வசிய மருந்த்துக்கு அலையும் இந்தக் கிறுக்கனிடம் இருந்து நிறைய கறக்கலாம் என்று நினைத்துக்கொண்டு, “அதுக்கு ரொம்ப செலவாகும் சாமி.”

“செலவப்பத்தி கவலப்படாத. நான் பாத்துக்கிடுதேன். ஆனா ஒண்ணு. வசிய மருந்து வேல செய்யணும்.”

“அது பெரிய காரியமில்ல சாமி. வசிய மருந்து நா செஞ்சா சக்கம்மாவே ஒனக்குத் தொணயா வந்து நிப்பா.”

“ஏல, காரியமாத்தான் சொல்லுதியால? இல்ல காசக் கறந்துப்பிட்டு பல்லக்காட்டுவியா?”

“என்ன சாமி இப்படி சொல்லிட்டிய? என் வாக்கு பலிக்காம போயிருக்கா? வசிய மருந்தோட வசிய மந்திரமும் இருக்கு. ரெண்டயும் ஒனக்கு தாரேன். எப்பேற்பட்ட பொம்பளையும் பின்னாடி நடப்பாங்கேன்.”

பூபதியாப்பிள்ளை நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, “பொம்பளைக்கில்லல. ஒருத்தன் நம்மகிட்ட வாலாட்டுதான். அவன நம்ம காலச் சுத்தி நாய் மாதிரி வரவைக்கணும். அதுக்குத்தான்” என்றார்.

வெற்றிலை போட்டுப் போட்டுச் சிவந்த நாக்கையும் காரை படிந்த பல்லையும் காட்டிக்கொண்டு, “நம்பிட்டேன் சாமி” என்றான். முன்பணமாக ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார். “சாமி துட்டு எப்படியும் அஞ்சு ஆறு ஆயிடும்.”

“அவ்ளோ ஆகுமால?”

“பின்ன என்ன நினைக்கிய? என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?” யாருக்கும் புரியாத வகையில் ராகத்தோடு இழுத்து கம்மாளன் சொல்ல ஆரம்பித்தான். “சுட்டி வேர் நின்று சிணுங்கி நிலம் பறண்டி நாவடிக்கி கொன்றை வேர் கொல்லங்க கோவைக் கிழங்கு வென்றி தரும் ஆனை வணங்கி அழிஞ்சில் முறை மசக்கி பூனை வணங்கி புழுக்கை வேர் ஏனையுள்ள சீதேவியார் செங்கழுநீர் திகைப்பூடு மாதிகராமான வழக்குவெல்லி பாதிரிவேர் ஆடையொட்டியோடே சுவரொட்டி ஆன தண்டைப் பூடு சுற்றி மேற்படர்ந்த புல்லுருவி மூடு கட்டும்…..”

“எல என்ன சொல்லுத நீ? ஒண்ணும் வெளங்கலியே…”

எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கம்மாளன் கண்ணை மூடிக்கொண்டு தீவிரமாக அவன் வாய் நாலாத்திசையும் அசைய கர்ண கொடூரமான குரலில் தொடர்ந்தான்.

“வெட்டி வேர் பூலாங்கிழக்கு லாமிச்சம்வேர் தட்டிலாக் கொண்டோ சனைக் கிழங்கு கிட்டும் கடை மருந்து குங்குமப்பூ கஸ்தூரி மஞ்சள் சடை மாஞ்சி நாகன மஞ்சட்டி அடைவுபெறு செங்கழுநீர்க் கொட்டமொடு தேவதாரம் அரத்தை தங்கு பச்சைக் கற்பூரம் சாதிக்காய் பொங்கும் அவின் புழுகு சட்டமிவை அத்தனையும் கூட்டிக் கவின் பெற தூளாக்கிக் கலந்து குவிந்ததொரு…”

“ஏல நிறுத்துங்கேம்லா” என்று அவன் சத்தத்தை மீறி அலறினார் பிள்ளை. பெரும் தவம் கலைக்கப்பட்ட முனிவனைப் போல கம்மாளன் கண்ணைத் திறந்து பார்த்தான்.

“இம்புட்டு விஷயம் இருக்கு. இதென்னா சுளுவா சேக்க?”

“எல்லாத்தயும் கைல வெச்சிருக்க மாட்டியா? சரி, செஞ்சுக் குடு. இத என்னல செய்யணும்? சாப்பாட்டுல சேத்து சாப்பிட்டா போதுமால?”

கம்மாளன் மசானம் அதிரச் சிரித்தான். மீண்டும் கண்ணை மூடி, கன்னக்கதுப்பு வரிகள் விரிந்து சுருங்க, அவனுக்கே உரிய குரலில் ராகத்தோடு தொடர்ந்தான்.

“புற்றுப் பெருங்கரையான் புன்னை நிணம் பாம்பு விஷம் வற்றிக் கிடந்த மரவட்டை முற்றிய செவ்வரணையின் கொழுப்பு சேரவே அம்மியிலிட்டு” என்று சொல்லி நிறுத்தி, “திம்பேளா?” என்றான். அவருக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. “ஏல ஒனக்கு வசிய மருந்து நெசமா தெரியுமால? இல்ல வாந்தி மருந்து செய்தியா? ஒண்ண நம்பலாமால? காச வாங்கிட்டு ஏமாத்திப்புடமாட்டியே?” கம்மாளன் “பின்ன, வேல எளப்பம்னு நெனச்சேளா?” என்றான். “சரி நாளக்கித் தருவியா” என்றார். காத்திருந்தது போல கண்ணை மூடி பல்லைக் கடித்து கண்களை உருட்டி மீண்டும் பாடத் தொடங்கினான்.

“ஒவ்வொரு நாளைக்கு ஒரு சாமம் எவ்வமற கூட்டி ஒரு மாதம் அரைத்து குணம் பார்த்து வாட்டமில்லா செண்பகப்பூ மல்லிகைப்பூ சூட்டுகின்ற முல்லைப்பூ ஓலைப்பூ முற்றுமிதி பாகல் பூ வில்லைப் பூ வாசமிகவூட்டி வல்லதொரு காடேறி ஒன்பதுநாள் காளி சிவம் பத்துநாள் ஈடாம் அகோரம் இருபதுநாள் நாடுகின்ற மோகினி நாற்பது நாள் முற்றும் உருவேற்றி…”

இடையிடையில் ‘ஏல நிறுத்துங்கேம்லா’ என்றார் பிள்ளை. கம்மாளன் நிறுத்தவில்லை. பெரும் காற்றடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது அவன் பாடியதை நிறுத்தியபோது. “வெசயம் தெரிஞ்சவந்தாம் போல இருக்கு. என்னமோ நெனச்சிப்பிட்டோ ம்” என்று நினைத்துக்கொண்டு, “அப்ப மூணு நாலு மாசம் ஆகுங்க?” கம்மாளன் தலையாட்டினான்.

“சரில, பாட்டெல்லாம் சொல்லி காசப் பிடுங்கலாம்னு பாக்காத. வெசயம் நடக்கணும். அம்புட்டுதான்.”

“சாமி, என் தோள்ல பாரு சாமி. ஒங்கண்ணுக்குத் தெரியாது. என்னாங்க? சக்கமா சாமி, கொளந்தயா ஒக்காந்து கெடக்கா. குறி சொல்றவன் வாயி சாமி. ச்ரவன பிசாசினி மந்திரம்னு கேட்டிருக்கியா? சக்கம்மா கொளந்தயாட்டம் ஒக்காந்து குறி சொல்வா. பேச்ச மாத்தினோம் பிசாசினியாயிடுவா.”

“எனக்கெங்க ஒன் சக்கம்மாவும் தெரியுது பிசாசும் தெரியுது. என்னத்தயோ செய்யி.” போகும்போது, கம்மாளன் தனக்கு நிஜமாக வசிய மருந்து தயாரிக்கத் தெரியும் என்ற நம்பிக்கை கொள்ளுமளவுக்கு “ஏல, வெசயம் தெரிஞ்சவம்தாம்லே நீயி” என்று சொல்லிவிட்டுப் போனார். கம்மாளன் மௌனமாக அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பூபதியாப்பிள்ளையின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறியிருந்தன. நாகம்மைக்கு ரொம்ப யோசனையாக இருந்தது. பின்னர் ‘ஆம்பிளைங்க’ என்று நினைத்துக்கொண்டு அவரைப் பற்றி யோசிப்பதையே முற்றிலுமாக நிறுத்தினாள். பிள்ளை அர்த்த ராத்திரியில் குளித்தார். தனியறையில் உட்கார்ந்து விடாது ஏதோ மந்திரம் ஜபித்தார். அந்த அறைக்குள் யாரையும் வரக்கூடாது என்று சொல்லி, அவரே பெருக்கி அவரே மொழுகினார். அவரது கையில் வசிய மந்திரம் எழுதிய காகிதமும் வசிய மந்திர யந்திரமும் எப்போதும் பத்திரமாக இருந்தன. “இந்த மந்திரத்த 1008 தடவ சொல்லி, யந்திரத்த யார்கிட்ட கொடுக்கீயளோ அவங்க ஒங்களுக்கு வசியம்தான், சக்கம்மா வாக்கு இது. தப்பாதுங்கேன்.” அந்த நாளுக்காகக் காத்திருப்பதில் பெரும் ஆனந்தமும் சந்தோஷமும் அடைந்தார் பிள்ளை. ஐந்து வருடங்களைத் தள்ளி அவருக்கு நான்கு மாதத்தைத் தள்ளுவது பெரும் பாடாக இருந்தது. அன்று இரவு கம்மாளன் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் வசிய மருந்தை வைத்து சோலையை அடைந்துவிடலாம் என்கிற நினைப்பே அவருக்கு சந்தோஷமாக இருந்தது. வசிய மருந்தோ மந்திரமோ ஏதாகிலும் ஒன்று சரிப்பட்டு வரும் என்று நம்பினார். விடாமல் மந்திரத்தை ஜெபித்தார்.

“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”

ருதன் சோலையைச் சென்று பார்த்தான். அதுவரை அவளது உடல்வாகு பற்றி அவன் தனியாக யோசித்ததில்லை. ஒரு நிமிடம் ஊன்றிக் கவனித்தபோது ஏன் பூபதியாப்பிள்ளை கிடந்து அலைகிறார் என்பது புரிந்தது. அவளிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தான்.

“நா கேக்கணும்னு நினைச்சேன். பண்ணையார்னு சொல்லிட்டு திரியுதானே பூபதியாப்பிள்ள, அவன் எப்படி ஆளுன்னு நீ நெனைக்கட்டி?”

“வாட்டி போட்டின்ன பல்லு பேந்திடும்.”

பூபதியாப்பிள்ளை சொல்வதுபோல் இவளிடம் சீக்கிரத்தில் காரியம் நடக்காது என்பது புரிந்தது. மெல்ல சுதாரித்துக்கொண்டு,

“அட தங்கச்சிய கூப்பிட்ட மாதிரின்னு வெச்சுக்கோ.”

“இப்ப எதுக்கு ஒனக்கு அவசியமில்லாத கேள்வி?”

“இல்ல, கொஞ்ச காலமா பிள்ளைவாள் வசிய மருந்து அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரியறதா கேள்வி. நடுசாமத்துல கருப்பந்துறைக்கு வாரதும் குடுகுடுப்பைக்காரனோட கும்மாளம் அடிக்கிறதும்… கேள்விப்பட்டியா?”

“ஊர்ல எவன் எங்க போறான்னு பாக்க சோலி எனக்கெதுக்குங்கீரு?”

“அதில்ல, வசிய மருந்தே உனக்காகத்தான்னு பேச்சு.”

சோலைக்குக் கொஞ்சம் புரியத் தொடங்கியது. பூபதியாப்பிள்ளையின் உருளும் கண்களும் ஒருநாள் இரவு சம்பந்தமே இல்லாமல் வீட்டுவேலையாக வரச் சொன்னதும் நினைவுக்கு வந்தன.

“எவ சொன்னா? நாக்க அறுத்துப் போடுவேன்னு சொல்லு” என்று சொல்லி விருட்டென்று நடக்கத் தொடங்கினாள். அன்று எப்போதும்போல் நாகம்மை ஆச்சி விட்டில் வேலைக்குப் போனாள். நாகம்மை எதையும் சொல்லாமல் ஏனங்களையெல்லாம் போட்டுவிட்டு, கொல்லைப்புறத்தில் சென்று அமர்ந்துவிட்டு முந்தானையால் விசிறிக்கொண்டாள். வீடெங்கும் நோட்டம் விட்டாள் சோலை. பிள்ளைவாளைக் காணவில்லை. துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யும் சாக்கில் அவரது அறைக்குள் நுழைந்தாள். அறையின் சுவரில் ஒரு யந்திரத்தின் படம் ஒட்டப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த அறையில் அதற்கு முன்னர் அதைப் பார்த்த நினைவில்லை. கொஞ்ச நாளாகவே நாகம்மை ஆச்சி அவளை அந்த அறையைப் பெருக்க விடுவதில்லை என்பதை வைத்தும் பூபதியாப்பிள்ளையின் மேயும் கண்களை வைத்தும் சில விஷயங்களை யூகித்து வைத்திருந்தாள். ஆனால் கொஞ்சம் கூடப் பிடி கொடுக்காமல் இருக்க நினைத்திருந்தாள். ‘ஒரு பொம்பளைக்காக ஒரு ஆம்பிளை இம்புட்டு செய்வானா?’ யோசனையாக இருந்தது சோலைக்கு. பூபதியாப்பிள்ளையை நினைக்கவே பாவமாக இருந்தது. அங்கிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து தலை திருத்திக்கொண்டாள்.

ம்மாளன் நெருப்பு வெளிச்சத்தில், தன் கையிலிருக்கும் வசிய மருத்தைக் காண்பித்துச் சத்தமாகச் சொன்னான். “சாதாரணப்பட்ட மருந்தில்ல சாமி. முன்னோருங்க சொன்னதையெல்லாம் ஒண்ணுவிடாம போட்டு பெசலா செஞ்சது. வத்திக் கெடக்குற மரவட்டைக்கு எம்பிட்டு அலைஞ்சேன்னீங்க? சும்மா சொல்லப்பிடாது, அதிர்ஷ்டம் வேணும் சாமி. ஒமக்கு இருக்கு அது. இப்போ இதுக்கு மயங்காதவ எவ இருக்காங்கேன்? இத கொஞ்சம் மறச்சி வெச்சிக்கிட்டு அவகிட்ட போய் நில்லு. அப்புறம் பாரு சாமி சேதிய.”

“பொம்பளைக்கில்லன்னேம்லல?”

பற்கள் தெரிய “நம்பிட்டேன்” என்றான். கைகள் நடுங்க, மிகுந்த நம்பிக்கையுடன் எல்லாத் தெய்வங்களையும் வேண்டியபடி, உதடுகள் வசிய மந்திரத்தை ஜெபிக்க, அவன் கொடுத்த வசிய மருந்தை வாங்கினார்.

“ஓம் நமோ பகவதே மங்களேஸ்வரீ சர்வமுகராஜனீ சர்வகரம் மாதங்கீ குபாரிகே லகுலகு வசம் குரு குரு ஸ்வாஹா”

-முற்றும்.

நன்றி: யுகமாயினி, ஏப்ரல் 2008

Share

வெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் – அறிவிப்பு

நாடக வெளி வழங்கும் தமிழ் நாடகம்

ஊழிக்கூத்து

எழுத்து, இயக்கம்: வெளி ரங்கராஜன்

30.03.2008
ஞாயிறு மாலை 7 மணி
அலையான்ஸ் ப்ரான்சேஸ் அரங்கம்
24, காலேஜ் ரோடு, சென்னை – 6.

Share