படிக்க வேண்டியவை

<< >>

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில்! ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வாங்கிக் கேட்டுவிடுவேன்.

Share

என் பதிவும் கல்கி பத்திரிகையின் பதிலும்

கல்கி பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய ரமணின் பதிவு. எத்தனையோ லாம்கள். பதில் சொல்ல-லாம்தான். ஆனால் வழக்கை எதிர்கொள்ள எனக்கு இப்போது நேரமோ திடமோ பணமோ பின்புலமோ இல்லை. எனவே அவரது பதிலை என் டைம்லைனில் பதிந்து வைக்கிறேன். நண்பர்கள் படித்துக்கொள்ளுங்கள். மூத்த பத்திரிகையாளர் ஒருவர், ரமணனிடம் சொல்லி, அதை அவர் எனக்குச் சொல்லாமல் விட்ட அந்த நான்கெழுந்து வார்த்தைக்கும், வழக்கு வேண்டாம் என்றதற்கும் நன்றி.

Share

அந்நியன்

முனியப்பன் என்கிற வெங்கடேஷ் திருநெல்வேலியின் பஸ் ஸ்டாண்டில் கதிர்வேலைப் பார்த்தபோது, இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் அப்படியே தூக்கி வீசப்பட்டான். தன்னை இழுத்துப் பிடித்து நிகழ்காலத்துக்குக் கொண்டு வந்து, கதிவேலைப் பார்த்து ஒரு நொடி சிரித்து, இவன் வெங்கடேஷ் அவன் அடுத்த நொடியில் கண்டுபிடித்து அவனும் சிரித்து, ‘நீ எங்கல இங்க?’ என்ற கேள்விக்கு வெங்கடேஷ் சொன்ன பதில், ‘சீராளன் நம்பர் இருக்கால உன்கிட்ட?’

Share

கண்ணாடி – கவிதை

எப்போதும் எதையாவது

பிரபலித்துக் கொண்டிருக்கிறது

சில நேரங்களில் தேவையானதை

பல நேரங்களில் தேவையற்றதை

அன்றொருநாள் உள்நுழைந்த குருவியொன்று

இரண்டே நொடிகளில் சட்டென தரைதட்டியது

இரத்தச் சிதறல்களுடன்

கண்ணாடியில்தான் பார்த்தேன்

பின்பொருசமயம்

தங்கை அவசர அவசரமாய்

என் நண்பனுக்கு முத்தம் கொடுத்துப் போனாள்

செய்வதறியாமல் சலனங்களின்றி நானும் கண்ணாடியும்

இன்னொரு சமயம்

போர்வை கசங்கும் என் முதல் வேகத்தில்

ஒருவரை ஒருவர் விழுங்கிக்கொண்டிருந்தபோது

கண்ணாடி பார்த்துக்கொண்டிருந்ததை

நான் பார்த்தேன் கொஞ்சம் லஜ்ஜையோடு

இந்தக் கண்ணாடி அலுப்புக்குரியது

கால நேரங்களின்றி கட்டுப்பாடின்றி

பிரதிபலித்து பிரதிபலித்து

நாம் பார்க்காத நேரங்களில்

கண்ணாடி பிரதிபலிப்பதில்லை என்ற

புனைவை ஏற்றி வைத்தேன்

குறைந்தபட்சம் என் சுவாரஸ்யத்திற்காகவேணும்

Share

பழைய போட்டோ – கவிதை

கருப்பு-வெள்ளை வழுக்கைத்தலையரின்

விவரம் தெரியவில்லை யாருக்கும்

அம்மா யோசித்துக்கொண்டேயிருக்கிறாள்

அவர் சவால் விட்ட மேனிக்கு

கைகளைக் குறுக்கக் கட்டி

ஒரு சிரிப்பையும் சிந்தி.

முன்னும் பின்னும் தேடியதில்

ஒரு விவரம், மித்ரா ஸ்டூடியோ.

அம்மா முனகினாள்

அவர் வீட்டிலேயே மறந்திருப்பார்களென

மறுநாள் ·பிரேம் போட்டு

நடுக்கூடத்தில் மாட்டி வைத்தேன்

அம்மா மித்ரா ஸ்டூடியோவின்

நினைவுகளைச் சொல்லத் தொடங்கினாள்.

Share

பின்தொடரும் பூனைகள் – சிறுகதை

ஹையோ, புஸி எத்தன அழகு
புஸ¤புஸ¤ன்னு
லைட் எரியுற கண்ணோட
அப்படியே கட்டிக்குவேன்
பூனை என் செல்லம்

(வெங்கட், இரண்டாம் வகுப்பு, சித்ரா மெட்ரிகுலேஷன் பள்ளி)

ன்னை விடாது தொடரும் பூனைகள் போலவே நீங்களும் என்னைப் பின்தொடரப்போகிறீர்கள். இப்போது என்னுடன் என் எழாம் வயதில் இருக்கிறீர்கள்.

முதல் பூனை

என் பாட்டிக்குப் பூனை என்றாலே பிடிக்காது. அதன் உடலிலிருந்து உதிரும் மயிர் வீட்டிலுள்ள குழந்தைகளுக்குப் பல நோய்களை உண்டாக்கும் என்று சொல்லுவாள். பாட்டியின் செல்வாக்கை மட்டுப்படுத்தி வைப்பதில் என் அம்மா அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுவாள். வீட்டில் பூனையை வளர்க்க, பாட்டிக்குப் பிடிக்காது என்ற ஒரு காரணம் என் அம்மாவிற்குப் போதுமானதாய் இருந்தது. ஆனாலும் அம்மா என்னைப் பூனையின் பக்கத்திலேயே அண்ட விட மாட்டாள். என் அக்கா மட்டும் எந்தவிதத் தடையுமில்லாமல் பூனையைக் கொஞ்சுவாள். அதைப் பார்க்கும்போது என்னுள் ஏக்கம் பரவும்.

ஏனோ இந்தப் பூனை என்னை ஈர்க்கிறது. சாம்பல் நிறக்கோடுகளுடன் புசு புசுவென உரோமங்களுடன் முன் வலது காலை எச்சில்படுத்தி முகத்தைத் துடைக்கும் அழகைப் பார்க்கும்போது பூனையை அள்ளிக் கொஞ்சத் தூண்டும். மடக்கி வைக்கப்பட்ட படுக்கை விரிப்புகளில் நான்கு கால்களையும் மேலே தூக்கி பூனை ஆழ்நித்திரையில் இருக்கும்போது அது அறியாமல் பதுங்கிச் சென்று முகத்தை வைத்துப் பூனையை அழுத்திக் கொஞ்ச வெகுநாளாக எனக்கு ஆசை.

நான் பூனையின் அருகில் சென்றாலே யாராவது பார்த்துவிடுவார்கள். சமையலறையின் சன்னல் வழியாக அக்கா பார்த்துக் கத்துவாள். பாட்டி புலம்பத் தொடங்குவாள். பெரிய பிரளயத்துக்குப் பின் பூனை ஏகப்பட்ட வசவுகளைப் பெறுவதோடு அன்றைய தினம் கழியும்.

வீட்டில் யாருமே இல்லை என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு கொஞ்சச் செல்லும்போது பூனை இல்லாது போனதுமுண்டு.

இன்னும் சில சமயங்களில் நானே வாய்ப்பைக் கெடுத்துக்கொள்வேன். கொஞ்சம் அதீத ஈடுபாட்டுடன் கொஞ்சிவிடுவேன். பூனை மிகுந்த பயத்துடன் கொஞ்சம் கோபம் கலந்து புதுமாதிரியாகக் கத்தும். அந்தச் சத்தத்தை வைத்தே நான் பூனையைக் கொஞ்சுகிறேன் என்று அக்கா கண்டுபிடித்துவிடுவாள். பாட்டி, “அந்தச் சனியனைக் கொண்டு போய் விட்றுங்கடான்னா யாரு கேக்குறா? நா என்ன சொன்னாலும் எனக்கு எதிரா செய்யணும் அவளுக்கு..” என்று பூனையையும் என்னையும் விட்டுவிட்டு அம்மாவை வையத்தொடங்குவதோடு அன்றைய தினம் முற்றும்.

இப்போது வீட்டில் யாரும் இல்லை. என்னைப் பார்த்தவுடனே ஓடும் பூனை இன்று கொஞ்சம் நட்பு கலந்த குரலில் மிக மெலிதாக “மியாவ்” என்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தினம் பால் ஊற்றும் அக்கா இன்று மறந்துவிட்டாள் என்பதை யூகித்தேன். பூனை பசியிலிருக்கிறது. சமையலறையில் பாலைத் தேடி எடுத்துக்கொண்டுவந்து அதன் கிண்ணத்தில் ஊற்றினேன். சிறிது தயக்கத்திற்குப் பின் பருகத் தொடங்கியது. நாக்கு பாலை நக்கிக்கொண்டிருந்தாலும் அதன் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அதிக ஈர்ப்புச்சக்தியுள்ள கண்கள். கரும்பச்சை நிறத்தில் அதன் கண்களைப் பார்க்கும்போது நான் என் வசமிழக்கத் தொடங்கினேன். மெல்ல பூனையை நெருங்கினேன். அது பால் குடிப்பதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கியது. அதனருகில் அமர்ந்து தலையைத் தடவிக்கொடுத்தேன். மெல்லிய சத்தத்தில் அது உறுமுவது கேட்டது. நான்கைந்து முறைத் தடவிக்கொடுக்கவும் இயல்பாகி என் கைகளை உரச ஆரம்பித்தது. எனக்கு மிகுந்த சந்தோஷமாயிருந்தது. நாளை முதல் என்ன ஆனாலும் பூனைக்கு நான்தான் பாலூற்றவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அக்கா வரும்போது பூனை என்னைக் கொஞ்சுவதைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்ற என் எண்ணம் உறுதிப்படத் தொடங்கியது.

பூனையும் நானும் வெகு விரைவில் நண்பர்களானோம்.

தினம் காலையில் பூனைக்குச் சன்னதம் பிடித்த மாதிரி ஒரு பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். சமையலறையிலிருந்து ரேழிக்குப் பாயவும் ரேழியிலிருக்கும் கதவு வழி மேலேறி சேந்திக்குச் செல்லவும் அங்கே இருந்து கீழே குதிக்கவும் அதன் அட்டகாசம் சொல்லி மாளாது. நான் கையில் சிறிய குச்சியையோ அல்லது அம்மாவின் படுக்கையறையில் வாடிப்போய்க் கிடக்கும் பூநாரையோ எடுத்துக்கொண்டு ஆட்டுவேன். தூரத்திலிருந்து அதைப் பார்க்கும் பூனை பதுங்கிப் பதுங்கி நடக்கத் தொடங்கி ஓடிவந்து என் கையில் தாவும். ஒரு கட்டத்தில் மூச்சு வாங்கிச் சாயும். இரண்டே நிமிடத்தில் ஆர்வம் தாங்காமல் மீண்டும் பரபரப்பாக ஓடத் துவங்கும். பூனையின் காலை நேரங்கள் எனக்கு மிக உவப்பானவை. சில சமயங்களில் அக்கா நான் அன்றைய வீட்டுப்பாடத்தை எழுதாமல் பூனையுடன் விளையாடுகிறேன் என்று போட்டுக்கொடுப்பாள். அவளுக்குப் பொறாமை என நினைத்துக்கொள்வேன். அவளிடமும் சொன்னேன். மிகுந்த அலட்சிய பாவத்தோடு “பூனை உங்கூட வெளயாட மட்டுந்தான் செய்யும். ஆனா அதுக்கு நெசமாலுமே எம் மேலத்தான் பாசம்” என்றாள். அவள் அகந்தைக்குச் சிகரம் வைக்கிற மாதிரி ஒரு நாளும் வந்தது.

இரவில் ·பேனின் சத்தம் கர்ண கொடூரமானதாய் இருக்கும். கொஞ்சம் பெரிய மனுஷ தோரணையில் “அந்தச் சத்தம் இல்லைன்னா தூக்கம் வரமாட்டேங்குது” என்பாள் அக்கா.

அவள் உறங்கும்போது பார்க்கவே எனக்குப் பயமாய் இருக்கும். பாதிக்கண் திறந்து தூங்குவாள். வயதை மீறிய வளர்ச்சி அவளுக்கு என்று பக்கத்துவீட்டு லட்சுமணன் அவன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. சில தினங்களுக்கு முன்பு காலையில் வழக்கம்போல் பூனையுடன் விளையாட முனைந்தபோது அக்கா திட்டினாள். இனிமேல் பூனையுடன் அப்படி விளையாடக்கூடாது என்று சொன்னாள். அதற்கான காரணங்களைச் சொல்ல முற்றிலும் மறுத்துவிட்டாள். பாட்டியும் கூட, “பூனை பாவம், அதை உபத்திரவிக்காதே!” என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பூனையும் வழக்கத்திற்கு மாறாக பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்தது. கடந்த சில நாளாகவே பூனையிடம் காலை வேளைகளில் பரபரப்பில்லை என்றாலும் இன்று அதன் அமைதி அளவிற்கு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். யோசிப்பினிடையே தூக்கம் வரத் தொடங்கியது.

காலையில் வீட்டில் ஏகத்திற்கும் பரபரப்பு. ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. யாரிடமாவது கேட்டாலும் பதில் சொல்வார்கள் என்று தோன்றவில்லை. அக்கா ரேழியில் இருக்கும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் சென்று கட்டிலில் உட்கார்ந்துகொண்டேன். என்றைக்கும் இல்லாமல் அக்கா மீது பாசம் வருவதுபோல உணர்ந்தேன். உடனடியாக அதை மறுக்கவும் செய்தேன். அவளைத் தொட்டு அக்கா என்று அடிக்குரலில் கூப்பிட்டேன். நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த மறுவினாடி சொன்னாள்.

“நாந்தான் சொன்னேன்ல.. பூனைக்கு எங்கிட்டத்தான் பாசம் ஜாஸ்தின்னு.. நேத்து அது குட்டிப் போட்டிச்சு தெரியுமா.. உனக்கெங்க தெரியும். படுத்தா சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம பாதி வாயத் தொறந்துக்கிட்டு எச்சி ஒழுகிக்கிட்டு தூங்கத்தான் தெரியும்.. நேத்து நைட் பூனை வந்து என்னை முட்டி முட்டி எழுப்பிச்சு.. நாந்தான் கட்டிலுக்குக் கீழ இடம் ஒழிச்சுக் கொடுத்தேன். அழகா நாலு குட்டி போட்டுருக்கு.. பூனை உன்னை எழுப்பலை. என்னைத்தான் எழுப்பிச்சு.. தெரிஞ்சுக்கோ . இல்ல பாட்டி..” என்று பாட்டியையும் துணைக்கழைத்தாள். பாட்டி, “இந்த விஷயம்லாம் பொண்ணுங்களுக்குத்தான் புரியும்னு பொம்பளைப் பூனைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு.. அவனுக்கு என்ன தெரியும். நீ அவனை சும்மா சீண்டாத” என்றாள்.

கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். கருஞ்பச்சைக் கண்களுடன் இரண்டு முன்னங்கால்களை முன்னே நீட்டி, பின்னங்கால்களைப் பின்னே நீட்டி, பக்கவாட்டில் சாய்ந்து படுத்திருந்தது. மூன்று குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. ஒரு குட்டி மடியைத் தேடிக்கொண்டிருந்தது. நான்கு குட்டிகளும் கண் திறக்கவில்லை. தாய்ப்பூனை பெரிய சாகசத்திற்குப் பின் ஓய்வெடுக்கும் வீரன் மாதிரி சத்தம் இல்லாமல் மியாவ் என்று வாயை மட்டும் அசைத்தது. சாம்பல் நிறக்கோடுகளாலான புசுபுசுவென்று இருக்கும் அப்பூனையை ஏனோ என் ஆழ்மனதிலிருந்து வெறுத்தேன்.

எழாம் வயதில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துச் சொன்னதன் களைப்பை மீறி உங்களை என் பதினைந்தாம் வயதிற்கு அழைத்துச் செல்கிறேன்.

இரண்டாம் பூனை

பூனைகளை நம்பாதீர்கள் தோழர்களே
அவை ஆழ்மன அழுக்கின் சின்னங்கள்
உலகம் பெற்ற சாபத்தால்
பிறந்துவிட்ட சைத்தான்கள் பூனைகள்
பூனைகளின் கண்கள்
சைத்தான் கைகளிலிருக்கும் அப்பம்
அது உங்களை அவைபால் ஈர்க்கும்
நான் சொல்கிறேன் கேளுங்கள்
ஓ தோழர்களே
பூனைகளை நம்பாதீர்கள்
(வெங்கட், பத்தாம் வகுப்பு, ம.தொ.நல ஒன்றிய மேல்நிலைப் பள்ளி)

யதுக்கு மீறி வளர்ந்திருந்த அக்கா வயதுக்கு மீறிய காரியம் ஒன்றைச் செய்தாள். பக்கத்துவீட்டுக் கோவிந்தனுடன் ஓடிப்போனாள். வீட்டில் எல்லோரும் அக்காவைத் திட்டித் தீர்த்து அழுது புரண்டார்கள். “ஒரே பேத்தி.. வயத்துல சுமந்துக்கிட்டு இருக்கா.. அவளைப் பார்க்க ஒரு நாதி இல்ல.. நா ஏன் இன்னும் சாகாம இருக்கேனோ” என்ற பாட்டியின் புலம்பலைத் தொடர்ந்து, அதற்காகவே காத்திருந்த மாதிரி, எல்லோரும் மனம் கனிந்து அக்காவை வீட்டுக்குக்குள் ஏற்றினார்கள். வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்த அக்கா என் மேல் அளவு கடந்த பாசத்தோடு என்னிடம் அத்தானின் புகழைப் பாடுவாள். நான் பதில் சொல்லாமல் கேட்டுக்கொள்வேன். “நாலு வருஷத்துக்கு முன்னாடியே உன்ன வயசுக்கு மீறின வளர்ச்சின்னான் கோவிந்தன்” என்று நான் சொல்லவில்லை.

திடீரென ஒருநாள், “பூனையில்லாமல் வீடு வெறிச்ன்னு இருக்கு” என்று சொல்லி ஒரு பூனையை வீட்டுக்குள் கொண்டு வந்தாள். அத்தான் கோவிந்தன் சம்பந்தமே இல்லாமல் “பூனை ரொம்ப அழகு. உன்னை மாதிரியே” என்று சொல்லி வைத்தான்.

ஐந்து வயதில் என் மனச்சித்திரத்தில் உறைந்து போன பூனைக்கும் இதற்கும் அதிக வித்தியாசங்களில்லை. சாம்பல் நிறக்கோடுகள். கரும்பச்சைக் கண்கள். வெள்ளை நிறத்தில் மீசை. ஆனால் மடியில்லை. ஆண் பூனை. பூனைகளை நம்பக்கூடாது என்று எத்தனையோ முறை மனதுக்குள் சொல்லிக்கொண்டாலும் அதன் விளையாட்டில், அழகில் மெல்ல நான் என் நம்பிக்கையை இழந்தேன்.

இப்போது யாரும் என்னைத் தடுக்கவில்லை. என் இஷ்டப்படி பூனையுடன் விளையாடினேன். பூனைக்குப் பெயர் ஏதும் வித்தியாசமாக வைக்காமல் புஸி என்று அழைத்தோம். அது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கூட நான் “புஸி, பாஸ்! பாஸ்! பாஸ்!” என்றழைத்தால் தூக்கத்தைக் கலைந்துவிட்டு ஓடி வரும். நான் எப்போது அழைத்தாலும் அதற்கு எதாவது தின்னக்கொடுப்பேன் என்று புரிந்துவைத்திருந்தது.

என் கண்டிப்பும் அதற்குப் புரிந்திருந்தது. “ஏய்!” என அதட்டினால், தான் ஏதோ தவறு செய்கிறோம் எனப் புரிந்துகொண்டு அமைதியாகும். என் செருப்புச் சத்தம் கேட்கும்போதே சத்தமில்லாமல் வந்து காலை உரசும். அரைக்கண்ணைத் திறந்து வாலை செங்குத்தாக மேலே தூக்கி காலை உரசினால் அது கொஞ்சுகிறது என்று புரிந்துகொள்வேன். என் அக்காவிற்குப் பூனையைக் கொஞ்சுவதை விடவும் முக்கியமான வேலை அத்தானைக் கொஞ்சுவது. அதனால் பூனையை மறந்துவிட்டிருந்தாள்.

எப்போதுமே காலம் ஒரே போல் இருந்துவிடுவதில்லை. இதை மிகுந்த துயரத்துடன் சொல்கிறேன்.

வரண்டாவில் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தேன். பெரிய வராண்டா. இரண்டு மரத்தாலான தூண்கள் உண்டு. பூனை காலை நேரத்தில் வெறி பிடித்த மாதிரி விளையாடும்போது இந்தத் தூண்களில் ஏறி இறங்குவது வழக்கம். ஒரு தூணின் பின்னிருந்து தரையோடு தரையாக பூனையின் வால் ஒன்று அசைந்தது போல இருந்தது. புஸியின் பழக்கப்பட்ட சாம்பல் நிற வாலாகத் தெரியவில்லை. இருந்த இடத்திலிருந்து தலையை நீட்டி தூணின் அந்தப் புறம் பார்த்தேன். ஏதோ ஒரு வெள்ளைப்பூனையின் மேலே புஸி படுத்திருந்தது. வெள்ளைப்பூனையின் வால் வெண்மையும் சாம்பலும் கலந்த நிறத்தில் இருந்தது. புஸியின் வாய் வெள்ளைப்பூனையின் உச்சந்தலையைக் கவ்விக்கொண்டிருந்தது. புஸி தன் கால்களால் வெள்ளைப்பூனையைப் இறுக்கப்பிடித்துக்கொண்டிருந்தது. லேசான உறுமலையும் கேட்டேன். பொறி தட்டவும் புஸியின் அநாகரீகச் செயலில் கோபம் கொண்டு கையிலிருந்த நோட்டால், ஏய் என்று அதட்டிக்கொண்டே ஓங்கி அடித்தேன். எதிர்பாராத தாக்குதலால் பயமும் கோபமும் ஒருங்கே எழ, வழக்கமாக எழும் மியாவ் சத்தத்திலிருந்து முற்றிலும் வேறாக, நினைத்தாலே கிலியை ஏற்படுத்தவல்ல ஒரு சத்தத்துடன் சீறியபடி திரும்பியது. கோபத்தில் அதன் உடலெங்குமுள்ள மயிர்கள் விறைத்து நிற்க, கரும்பச்சைக் கண்கள் சீற்றத்தை உமிழ, கோபத்துடன் உர்ரென்றது.

இப்படிப் பூனையின் மயிர்கள் விறைத்துப் பார்ப்பது மிகச் சில சமயங்களில்தான்.

நான் கடைக்குச் செல்லும்போது என் கூடவே புஸியும் வரும். நாய்களைத் தெருவில் கண்டால் சட்டென அருகிலிருக்கும் மரத்தில் தாவி ஏறிவிடும் அல்லது திறந்திருக்கும் ஏதேனுமொரு வீட்டிற்குள் ஓடிவிடும். எதிர்பாராத ஒரு தருணத்தில் தெருநாய் ஒன்று புஸியை மடக்கிவிட்டது. நான் கல்லைத் தேடி ஓடினேன். புஸி செய்வதறியாமல் அங்குமிங்கும் நோக்கியது. மரமில்லை. எந்தவீட்டின் கதவும் திறந்திருக்கவில்லை. தான் மாட்டிக்கொண்டது அறிந்த பின்னர் எதிர்க்கத் துணிந்தது. அதன் உடலெங்கும் மயிர்கள் விறைத்தெழ, வால் மேல் நோக்கி செங்குத்தாக விறைப்பாக, வாலிலும் உரோமங்கள் சிலிர்த்தெழுந்து நின்றன. மிகுந்த கோபத்தோடு புஸ் என்ற சீறலோடு வலது முன்னங்கையின் பிளவுகளிலுள்ள நகங்களைக் காற்றில் கீறியது. இத்தனை வேகத்தை எதிர்பார்க்காத நாய் மெல்ல பின்வாங்கியது. இரண்டு முறை குரைத்துவிட்டு ஓடிப்போனது. அதைப் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் உறைந்துபோனார்கள். அதன்பின் புஸி தெருவில் மிகப்பிரசித்தம்.

அப்படியொரு சீற்றத்தை இப்போதும் சீறியது. அதன் வாயில் வெள்ளை நிறத்திலான கோரைப்பற்கள் மிக தீர்க்கமாகத் தீட்டப்பட்டு எதற்கும் தயார் நிலையில் இருப்பதாகத் தோன்றியது. இதனிடையில் வெள்ளைப் பூனை ஓடிவிட்டிருந்தது. நான் அதே இடத்தில் அசையாமல் அடுத்து என்ன செய்யவேண்டுமெனத் தெரியாமல் நின்றேன். பூனையின் சீற்றம் படிப்படியாகக் குறைந்தது. அதன் சிலிர்ப்படைந்திருந்த மயிர்கள் படியத் தொடங்கின. புஸியின் கோபம் தணிந்ததை அறிந்து, குனிந்து தடவிக்கொடுக்க முனைந்தேன். நான் மீண்டும் அடிக்க வருவதாக நினைத்த புஸி கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்காத வகையில் என் ஆள்காட்டி விரலை மிகக்கடுமையாகக் கடித்தது. நான் கையை உதறியும் கூட அதன் பற்கள் என் ஆள்காட்டி விரலை விடவில்லை. மீண்டும தன் உரோமங்கள் சிலிர்த்தெழ, கரும்பச்சைக் கண்கள் கனல் உமிழ, போருக்குத் தயாரான புலியின் உறுமலுடன் மிக ஆழமாகக் கடித்தது புஸி.

பூனை என்பது ஒரு மிருகம். மனதின் ஆழத்திலிருந்து ஒட்டுமொத்தப் பூனையினத்தையே வெறுத்தேன்

மூன்றாம் பூனை

பூனைகளுக்கும் எனக்கும் ஒத்துவராதென்பதை மிகத் தெளிவாக உணர்ந்தேன். எழாவது வயதிலும் பதினைந்தாம் வயதிலும் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நான் மறக்கவில்லை. எப்போதும் என்னைப் பூனைகளின் கரும்பச்சைக் கண்கள் துரத்திக்கொண்டேயிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

மூன்றாவது பூனையின் வரவு உஷாவின் மூலம் வந்தது. நான் அவளை எதிர்க்கவே முடியாத ஒரு அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண்டேன்.

பார்க்கும்போதெல்லாம் சிரித்த உஷாவின் அழகில் மிக எளிதில் வீழ்ந்ததை இப்போது என்னால் மடத்தனம் என்று ஒப்புக்கொள்ள முடிகிறது. அன்று இயலவில்லை. அன்று எப்படி அவள் கண்களை ஆழமாகப் பார்க்காமல் போனேன்?

அறியாமல் மோதிக்கொண்டபோது நான் சொன்ன “ஸாரி”களைப் புறக்கணித்து நாணத்துடன் சிரித்த நாளின் பின்பகலில் மீண்டும் இருமுறை வேண்டுமென்றே மோதினேன். அதுவரை நான் அறிந்திருக்காத என்னை அறிந்தேன். பஞ்சைக்கொண்டு செய்த அவள் உடலில் என் கைகள் எல்லையில்லாத வேகத்தில் எல்லையில்லாத சுதந்திரத்தோடு நீந்தின. பாதி மூடியிருந்த கதவின் இடையில் தள்ளி மிகுந்த வெறியுடன் அவளை முத்தமிட்டேன். மெலிதான உரோமங்கள் பரவியிருக்கும் கைகளை அழுந்தப் பிடித்தபோது அந்த ஸ்பரிசம் எனக்கு ஏற்கனவே பரிட்சயமான மாதிரி இருந்தது. அவளின் உடலெங்கும் என் மீது சரிந்திருக்க இருவரும் தன்னை மறக்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் எதிர்பாராத ஒரு கணத்தில் மிகக்குறைந்த இடைவெளியில் அவள் கண்களின் ஆழத்தை என் கண்கள் சந்தித்து மீண்டன. அன்று எல்லாம் அடங்கிய ஒரு நிசப்தம் என்னுள் பரவியதை இப்போதும் உணர்கிறேன். உஷா, “என்னாச்சு.. என்னாச்சு?” என்றாள். கரும்பச்சைக் கண்கள். மிக ஆழத்தில் மானசீகமாக நான் உணர்ந்தேன். அவை பூனையின் கண்கள். அதிக நெருக்கத்தில் மட்டுமே அறிய முடிந்தது. அவளுடன் எனக்கு உண்டான ஸ்பரிசத்தின் தன்மை கூட பூனையை என் கைகள் வருடும்போது உண்டானதை ஒத்ததுதான். அன்று அம்மா என்னிடம் “உஷாவை பிடிச்சிருக்கா?” என்றாள். அவளின் கண்கள் ஏதோ ஒரு கலக்கத்தைத் தருகின்றன என்றேன். “அவ கண்ணுக்கு என்ன குறைச்சல்? எவ்வளவு அழகு!” என்று சொன்னாள். அம்மாவிற்கு அவளின் கண்களை அதிக நெருக்கத்தில் பார்க்கும் அவசியம் நேராது.

நான் திடமாக நம்புகிறேன். என்னைப் பூனையின் கண்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மறுதினம் உஷா பூனை ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். என்னுள் கலவரம் எழுந்து அடங்கியது. முதல்நாள் எதிர்பாராமல் (அல்லது எதிர்பார்த்து) கொடுத்த முத்தத்தின் ஈரத்திலிருந்து நான் எழுந்திருக்காததால் மிகுந்த உத்வேகத்துடன் பூனையின் வரவை எதிர்க்கமுடியாமல் போனது.

பிறந்து பதினைந்து நாள்களே ஆன குட்டி அது. முழுக்க முழுக்க வெண்ணிறத்தில் இருந்த அதைக் காதைப்பிடித்துத் தூக்கி “ரொம்ப சொரணையுள்ளது இந்தக் குட்டிதான்” என்றாள் உஷா. அந்தப் பூனைக்குட்டி வீல் வீல் என்று அலறிக்கொண்டே இருந்தது. முதலிலிருந்தே அந்தப் பூனையிடம் வெகு கவனமாக இருக்கத் தீர்மானித்திருந்தேன். வீட்டில் அம்மாவும் அக்காவும் உஷாவும் அதற்கு ராஜ உபசாரம் அளித்தார்கள். அக்காவின் பையன் பூனையின் ஒவ்வொரு அசைவையும் இரசித்தான். அவனது இருபத்தி ஏழாவது வயதில் பூனைகளைப் பற்றி முழுதும் அறிவான். கழிவிரக்கத்துடன் கூடிய கவிகள் வரைவான்.

பொதுவாகவே பூனைகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட சில தினங்களில் தாயை மறந்துவிட்டு சகஜமாகத் தொடங்கிவிடும். இந்தப் பூனை விதிவிலக்காய் இருந்தது. பாலைக் குடிக்கவே மறுத்துவிட்டது. அதன் உடல் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வருவதைப் பார்த்துப் பயந்துபோனாள் என் பாட்டி. “பூனை செத்தா பாவம். ரொம்ப குட்டியா இருக்கும்போதே தூக்கிட்டு வந்திருக்கக்கூடாது. கொண்டு போய் கொடுத்திரலாம். ஒரு மாசம் கழிச்சு திருப்பித் தூக்கிட்டு வரலாம்” என்றாள். உஷா நிறைய அழுதாள். அவளைவிட என் அக்கா பையன் கதறி கதறி அழுதான். “நான் செத்தா கூட இப்படி அழமாட்டான் போல இருக்கே” என்ற பாட்டியின் கேலிப்பேச்சு அவனை மேலும் சீண்ட கூடுதலாக அழத் தொடங்கினான். பூனையைக் கொண்டு போய் விடுவதை மாபாதகச் செயலாக நினைத்த உஷா அவளால் அதைச் செய்யமுடியாது என்று மறுக்கவும் அந்த வேலை எனக்கு வந்தது. நானும் மிகுந்த வருத்தப்படுவது போல காட்டிக்கொண்டு உள்ளூர மிகுந்த சந்தோஷத்துடன் பூனையைக் கொண்டுபோய் விடச் சம்மதித்தேன்.

எட்டு வீடுகள் அடங்கிய வளைவு அது. குறுகலாகச் செல்லும் சிறிய பாதை இரண்டு பக்கங்களிலும் நான்கு நான்கு வீடுகளுடன் விரிந்தது.கையில் நான் வைத்திருந்த பூனைக்குட்டி கத்திக்கொண்டே இருந்தது. பூனையின் வீடு எந்த வீடாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பூனையின் தொண்டை கிழியும் சத்தத்தைக் கேட்டேன். அது தாய்ப்பூனையின் கோபக்குரலாக இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்ததும் எனக்குள் பீதி ஏற்பட்டது. கையிலிருந்த குட்டியைக் கீழே போட்டுவிட்டேன். லேசாகத் திறந்திருந்த சன்னலின் வழியே தலையை நுழைத்து, பின் முழு உடலையும் நுழைத்து வெளி வந்தது தாய்ப்பூனை. அதன் கரும்பச்சை நிறக்கண்களைச் சந்திக்கும் தைரியம் எனக்கில்லை. எந்தவொரு யோசனையுமில்லாமல் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தது தவறு எனத் தெரிந்துகொண்டு, திரும்பி வேகமாக நடந்தேன். பூனையின் கண்கள் முதுகில் உறுத்த, திரும்பிப் பார்த்தேன். தாய்ப்பூனை நால் கால் பாய்ச்சலில் ஓடி வந்து என் காலைப் பிராண்டியது. காலை உதறிவிட்டு ஓடினேன். அடிக்குரலில் கத்திக்கொண்டு பின் தொடர்ந்து வந்து காலின் கட்டை விரலைக் கவ்வியது. மீண்டுமொருமுறை பலம் கொண்ட மட்டும் காலை உதறினேன். தூரத்தில் போய் விழுந்தது பூனை. விழுந்த வேகத்தில் எழுந்து என்னை நோக்கி வருவதைப் பார்த்து, இனியும் தாமதிக்ககூடாது என்று நினைத்து குறுகிய சந்தின் வழியே வெளியே ஓடினேன். அதற்குள் வளைவின் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் வந்து பூனையை விரட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தப் பூனையினமும் எனக்கெதிரான வன்மத்துடன் இருக்கின்றன. அதன் கரும்பச்சை நிறக்கண்கள் எப்போதும் ஒருவிதக் குரோதத்துடன் என்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பூனைகள் இல்லாத வீட்டில் காற்றில் அலைகிறது
அது உதிர்த்துவிட்டுப் போன அதன் ரோமமும்
அது கடித்த தடத்தில் மொய்க்க விரும்பும் ஈயும்
(வெங்கட், பூனை கடித்த இரவு)

நான்காவது பூனை

அனல் மிகுந்த நாளன்றில் துபாயின் விமானநிலையத்தில் என் கைக்கடிகாரத்தை ஒன்றரை மணிநேரம் குறைவாக்கி வைத்துக்கொண்டு யாரோ ஒருவனின் வரவுக்காகக் காத்திருந்தேன். முதல் வெளிநாட்டுப்பயணம் தந்த படபடப்பும் நம்மைக் கூட்டிக்கொண்டு போக யாரும் வராமல் போய்விடுவார்களோ என்கிற அசட்டுத்தனமான பயமும் அதிக வேர்வையை உமிழ்ந்துகொண்டிருந்தது.

அசப்பில் இந்தியனல்லாத ஒருவன் என்னை நெருங்கி “ஆப் வெங்கட் ஹே?” என்று என் பெயர் எழுதப்பட்டிருந்த அட்டையைக் காண்பித்தான் . “யெஸ்” என்றேன். அனாசயமான ஹிந்தியில் அலட்சிய பாவத்துடன் ஒருவித ஸ்டைலான உச்சரிப்பில் ஏதேதோ அடுக்கிக்கொண்டு போனான். அவன் அணிந்திருந்த கூலிங்கிளாசை வலது கையின் முட்டினால் அடிக்கடி தூக்கிவிட்டுக்கொண்டான்.

“Sorry. I do not know Hindi”

“Really? you indian yaar.. how come you dont know Hindi. Are you madarasi?” என்றான். பதில் சொல்லாமல் என் பெட்டியை எடுத்துக்கொண்டேன். அவன் சிரித்தான். “OK. You follow me!” என்று சொல்லி முன்னே சென்றான். விதவிதமான பெண்களையும் கார்களையும் ஓங்கி உயர்ந்து நிற்கும் பணக்காரமயமான கட்டடங்களையும் பிரமிப்போடு உள்வாங்கிக்கொண்டு நடந்தேன். பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் ஏறிக்கொள்ளவும் சீரான வேகத்தில் வண்டி ஓடத்துவங்கியது.

“Where are you from?”

“I am from Pakistan” என்றான். ஏதோ ஒரு FM ல் ஆங்கிலப்பாடலை ஒலிக்க வைத்தான். நான் அமைதியானேன். கையில் வைத்திருந்த சிறிய பைக்குள் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று மீண்டுமொருமுறை பார்த்துக்கொண்டேன். பாஸ்போர்ட் இருந்தது. கூடவே சிறிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றும் இருந்தது. “நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே விமானநிலையத்தில் வைத்து உஷா என் கைகளில் அவளின் போட்டோவைத் திணித்த ஞாபகம் வந்தது. அவன் அறியாத வண்ணம் பைக்குள்ளே இருந்த உஷாவின் போட்டோவைக் கூர்ந்து பார்த்தேன். மெல்ல மெல்ல உஷா மறைந்து பூனையின் சித்திரம் விரிந்தது. முக்கியமாய்க் கண்கள். கரும்பச்சை நிறத்தில் கண்களை மனதின் மிக ஆழத்தில் மீண்டும் கண்டேன். என் உடலில் சிறு நெருக்கம் பரவியது. மிக நெருக்கத்தில் அவள் உதட்டில் முத்தமிட்ட கணங்களும் சர்வ சுதந்திரத்துடன் அவள் உடலில் என் கைகள் பரவியபோது நான் உணர்ந்த பூனை உடலின் மிருதுத்தன்மையும் நினைவுக்கு வந்தன. என் பின்னே ஏதோ இரண்டு கரும்பச்சைக்கண்கள் கூர்ந்து பார்ப்பதாகத் தோன்றியது.

திடீரென ப்ரேக்கை அழுத்தினான் பாகிஸ்தானி.

“Oh God!”

“What happened?” என்றேன். “ஷிட்!” என்று சொல்லிக்கொண்டே பாகிஸ்தானி ஓங்கி ஸ்டியரிங்கில் குத்தினான். வண்டியின் ஹாரன் ஒருமுறை ஒலித்து அடங்கியது.

“Poor cat!” என்று சொல்லிவிட்டு வண்டியை மீண்டும் இயக்கினான். Cat என்கிற வார்த்தையைக் கேட்டதும் சில்லிட்டு மீண்டேன். பூனையின் நினைவு தந்த அச்சத்தில், திரும்பி காரின் பின் கண்ணாடி வழியாக என்னை விட்டு விலகி ஓடும் சாலையைப் பார்த்தேன். பூனை ஒன்று அடிபட்டுக் கிடந்தது. உடல் நசுங்கி, இரத்தம் பீறிட்டு, கண்கள் பிதுங்கிக் கிடந்தது. அடுத்த வண்டி இன்னொரு முறை நசுக்கவும் துண்டுகளாகச் சிதறியது அப்பூனை.

பாகிஸ்தானி மீண்டும் “poor cat!” என்றான். மிக வேகமாக “No!” என்றேன்.

“What?” என்று சொல்லிக்கொண்டே அவன் அணிந்திருந்த கூலிங்கிளாஸைக் கழட்டினான். அவனுக்குப் பூனைக்கண்கள் இருக்குமென்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னையுமறியாமல், “Your eyes…” என்று இழுத்தேன்.

“மேரி ஆங்கே..” – அதற்குமேல் என்னால் தொடரமுடியாத நீண்ட வாக்கியத்தினை ஹிந்தியில் சொன்னான்.

“Sorry.?!”

“Oh! You donno hindino! My eyes are cat’s eyes!” என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினான்.

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

“நா ஒன்ன விட்டுடுவேன்னு நினைக்காத, அத்தனை லேசுல என்கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது”

எதிரொலிப்பது உங்களுக்குக் கேட்கிறதா? கேட்டால் கவனமாக இருக்கவும்.

பூனைகள்; எங்கும் பூனைகள்
எப்போதும் அவை இரையை எதிர்பார்த்து.
இரை, சில நேரங்களில் எலியும்
சில நேரங்களில் எதுவும்
பூனைகளைப் பூனைகளில் மட்டும் பார்க்காமல்
கண்ணில் படும் எல்லாப் பொருள்களிலும் பாருங்கள்.
ஒரு எலியில் கூட “பூனைமை” புலப்படும்.
(வெங்கட், எதிரொலித்த நொடியில் மனதில் தோன்றிய வரிகள்)

“பின் தொடரும் பூனைகள்” என்ற சிறுகதை தமிழோவியம்.காமில் வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்

மூன்றாம் பக்கம்

இறுதிப்பக்கம்

Share

சைக்கிள் முனி – என் பார்வை


சைக்கிள் முனி, சிறுகதைத் தொகுப்பு, இரா. முருகன், கிழக்குப் பதிப்பகம்.


ஒன்பது சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு.

முதல் கதை சாயம். கதை சொல்லும் நேர்த்தியில் இக்கதையே மற்றக் கதைகளை விட முன்னுக்கு வருகிறது. மற்றக் கதைகளெல்லாம் ஒரு “கதையை” தன்னகத்தே கொண்டிருக்கும்போது “சாயம்” மட்டுமே கதையில்லாத, ஒரு காட்சி விவரிப்பையும் அதைத் தொடர்ந்து எழும் சந்தேகங்கள், கேள்விகள், பதில்கள் என்பதை உள்ளிட்ட மன நிகழ்வுகளாகவும் விரிகிறது. கதை சொல்லியின் பார்வையில் கதை நிகழ்வதால் இது மிகவும் யதார்த்தமாகவும் இருக்கிறது. கடைசி வரியில் ஒரு புன்னகை நம் இதழ்களில் விரிவதையடுத்து இந்தக் கதை மனதுள் ஒட்டிக்கொள்கிறது.

“சில்லு” அறிவியல் புனைகதை. அறிவியல் யுகத்தில் நடக்கும் சில்லுப் பதிப்பில் தவறு என்கிற கற்பனையே அழகுதான். மூன்றாம் அத்தியாத்தோடு கதை முடிந்திருந்தால் ஒரு “நச்” கதையாக இருந்திருக்கும். (ஆனால் கதைக்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும்!) அதற்குப் பின்னும் கதை வளர்ந்துகொண்டு போவது தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் கதை செல்லும் வேகமும் நம்மைக் கொஞ்சம் அந்நியப்படுத்துகிறது.

“சைக்கிள் முனி” கதையில் முனி பேசுகிறது. பாலன் கடைசியில் “உங்க மகளை விட்டு வேலைக்கு அனுப்பாதீங்க” என்னும்போது முனி பேசுவதை நம்பும் பாலனின் சித்திரம் கண்முன் வருகிறது. வறுமையைச் சொல்கிறது.

“கருணை” கடைசியில் ஒரு அதிர்ச்சியை முன்னிறுத்தி அதை வைத்து நடக்கும் கதை. முடிவைக் கொண்டு முதலில் சொல்லப்படும் விஷயங்களை ஊகித்து பச்சாபத்தை வரவழைத்துக்கொள்ளவேண்டிய, அதிகம் பயன்படுத்தப்பட்ட வடிவம். “காலையில் பசியாறாமல் வந்திருக்கவேண்டாம்” வரியின் அழகும் “இடது தோள்பட்டையில் உன் நகம் பதிந்த தடம் அப்படியே இருக்கட்டும்” வரியின் அழகும் ஒட்டுமொத்தக் கதையில் இல்லை.

“முக்காலி” கதை பாங்காக்கில் நடக்கும் சா·ப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஒருவனின் கதை. “மூன்று விரல்” நாவலில் வரும் ஒரு அத்தியாத்தைத் தனியே எடுத்து வைத்தது போன்று இருக்கிறது. ” ஓ.கே. ஓ.கே. அப்ப பையன் வேணுமா?” என்கிற வரி மறக்கமுடியாத வரி. “மூன்றுவிரல்” நாவலை மறந்துவிட்டுப் பார்த்தால் இந்தச் சிறுகதை

நல்ல ஒன்றே. சா·ப்ட்வேர் நிபுணன் அடிக்கவேண்டியிருக்கும் ஜல்லியை நகைச்சுவைத் தெறிப்புகளூடே கண்முன் கொண்டு வருகிறது.

“ஒண்டுக் குடித்தனம்” – பேய் விடாமல் மனிதனைத் துரத்தும் மிகுபுனைவு. சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் மிக சுமாரான கதையாக இதைத்தான் சுட்டவேண்டும்.எந்தவொரு விரிவும் ஆழமும் இல்லாமல் வெறுமனே சொல்லப்பட்டிருக்கிறது. மற்றக் கதைகளில் தெறிக்கும் நகைச்சுவையும் இதில் இல்லை.

“பாருக்குட்டி” . சிறுவயதில் குலசேகர பாண்டியனும் கதை சொல்லியும் மலையாளம் படித்த பாருக்குட்டியின் ப்ரெஸ்ட் கேன்சருக்கான ஆபரேஷனில் …. நீக்கப்பட்டதோடு கதை முடிகிறது. ….. என்றுதான் ஆசிரியரும் சொல்கிறார்! கதையில் அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவை இரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக “தான் அல்பமாகப் பன்னிரண்டு ரூபாய் அறுபது பைசா கடன் வாங்கிய வரலாற்றை” எழுதச் சொன்னதையும்

“கடலின் அக்கர கோனாரே”வையும் சொல்லவேண்டும்.

“ஸ்டவ்” ஜோசியம் சொல்கிறது. மடத்தனத்தை எள்ளலோடு சொல்லும் கதை என்றாலும் கதையில் நம்பகத்தன்மை கொஞ்சம்கூட இல்லாததால் அதிகம் இரசிக்கமுடியவில்லை.

“தரிசனக்கதை”யில் தெய்வத்தின் அலுப்பு நல்ல சுவாரஸ்யம். “மெக்கானிக் வர்ற வரைக்கும் கொட்டு கொட்டுன்னு முழிச்சிக்கிட்டு” இருப்பதும் “நான் எப்ப சொன்னேன்?”ம் அசத்தல் வரிகள். பூசாரி குறிசொல்லியதற்கெல்லாம் தெய்வத்தைச் சுட்டுவது பற்றிய மிக நுட்பமான அழகான விவரிப்புகள். நல்ல சிறுகதை. “ஸ்டவ்” போலவே இதுவும் ஒரு

நம்பகமில்லாத ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் கதையின் நடையும் தெய்வத்தின் புலம்பலைச் சொல்லும்விதமும் “தெய்வம் பேசியது” என்று இன்னும் பலர் சொல்வதைக் கேட்கமுடிவதாலும் கதையில் ஒன்றிவிடமுடிகிறது.

“சாயம்”மும் “தரிசனக்கதை”யும் சிறுகதைத் தொகுப்பைப் படித்த பின் மனதில் தங்குகின்றன. “ஸ்டவ்”வும் “ஒண்டுக்குடித்தனம்”மும் சுத்தமாக விலகி நிற்கின்றன.

“வாயு” குறுநாவல் முகம்சுழிக்க வைக்கும் பல பிரயோகங்களைக் கொண்டிருந்தாலும் இரசிக்கும்படியாகவே இருக்கிறது. குளோரியா அம்மாளின் வறுமை கதையினூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைக் கூர்மையாக உள்வாங்கிக்கொள்ளும் திறன் கதையில் தெரிகிறது. “கழிவறை உபயோகித்தவர்கள், சுத்தம் செய்து காகிதத்தில் துடைத்துப்போட்டு வெளியேறும்போது ஈர மினுமினுப்போடு தெரியும் கைகளை குளோரியா அம்மாள் அறிவாள்” அதில் ஒன்று. (ஆண்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய மற்ற நாடுகளில் பெண்களை அனுமதிக்கிறார்களா?)

கதைகள் முழுவதிலும் உள்ள ஒரு பொதுத்தன்மை நகைச்சுவை. இதுவே இரா.முருகனைத் தனித்தும் காட்டுகிறது. எல்லாக் கதைகளிலும் தெறித்துவிழும் ஒற்றை வரிகள், சம்பாஷணைகள் மெல்லிய நகைச்சுவையை வரவழைத்துவிடுகின்றன. அதேபோல் கதைகளில் வரும் சம்பவ விவரிப்புகளும் கதாபாத்திர விவரிப்புகளும் கூடுதலும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் தேவையான அளவு சொல்லப்பட்டிருக்கிறது. கதைகளின் வேகமும் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இன்னொரு விஷயம். வேகம் என்று சொல்லும்போது ஒரு வார்த்தையில் ஒட்டுமொத்த சூழலைக் கண்முன் கொண்டு வரும் உத்தி அலுப்பை ஏற்படுத்துவதையும் சொல்லவேண்டும். வெளிநாடுகளில் வாழ்ந்த அனுபவம் சில கதைகளில் உதவியிருக்கிறது. கதையின் களத்தை “ஸ்டவ்” மாதிரியோ “ஒண்டுக்குடித்தனம்” மாதிரியோ இல்லாமல் யதார்த்தச் சூழ்நிலையிலோ அல்லது கொஞ்சம் அதிகமான நம்பகத்தன்மையுடனோ தேர்ந்தெடுத்தால் இதைவிட சிறப்பான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இரா.முருகனிடமிருந்து நிச்சயம் வரும் என்று சொல்லலாம்.

Share

ஆங்கோர் நட்பு – கவிதை

நீ காய் நகற்றவேண்டிய வேளை

உன் நீண்ட நேர யோசனையின் பின்னே

தொடர்கிறது என் கவனம்

சில நாள்களாய்

வெற்றிச்சுகத்தைவிட

மற்றவரின் தோல்வியில் சுகம் காணும் குரூரம்

காய் நகற்றத்தொடங்கியதை

நானும் உணர்கிறேன்

இப்படி வெட்டிக்கொள்வதைக் காட்டிலும்

வெவ்வேறு கட்டங்களிலிருந்து கைகுலுக்கிக்கொள்ள

இருவருமே விரும்புவதை

நிகழவிடாமல்,

சாய்கின்றன நமது சிப்பாய்கள்

நமது தன்முனைப்புக்கான போட்டி நிற்கும்வரை

தொடரப்போகும் ஆட்டங்களில்

உன்னை வீழ்த்த நானும்

என்னை வீழ்த்த நீயும்

சிறைபடாமல் இருக்கும்பொருட்டு

எனது பொய்க்குதிரையையும் யானையையும்

நான் கைவிடத் தயாராகும்போது

நீயும் இறங்கிவரத் தயாராகவேண்டுமென்பதே

உனது நினைவும்

நிஜத்தில்

போட்டியென்ற ஒன்றில்லை என்று சொன்னாலும்

இருவரின் கையென்னவோ

வாளன்றைச் சுழற்றியபடியேதான்.

முடிவில்லாமல்

உனக்கும் எனக்குமான சதுரங்கம்.

Share

தலைமுறை

என் தாத்தாவிற்கு தனது எழுபதாவது வயதில் சம்பாதித்து எங்களைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தம் இருந்தது. அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். தனது கடைசிக்கால ஆசிரியப்பணியில் இரண்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். மீண்டும் சம்பாதிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது அவர் உடனே தேர்ந்தெடுத்தது தனிப்பயிற்சியாகத்தான் இருக்கமுடியும். ஒன்றிரண்டு மாதங்களிலேயே நிறைய மாணவர்கள் அவரிடம் தனிப்பயிற்சிக்குச் சேர்ந்தனர். அவர் ஆங்கிலம் நடத்தும் பாணியே அலாதியானது. தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்கள் பலருக்கு ஆங்கிலம் என்றாலே என்ன என்று தெரியாது. அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்கு என் தாத்தா மேற்கொண்ட முயற்சிகளைச் சொல்லி மாளாது. சளைக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லித்தருவார். அதுவரை இல்லாத வழக்கமாக காலை நான்கரைக்கும் தனிப்பயிற்சிக்கு வரவேண்டும் என்று சொன்னார். தனிப்பயிற்சிக்கு வந்த மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியமும் எரிச்சலும் ஒருசேர எழுந்தது. மாணவர்கள் வீட்டில் அதிசயித்துப்போனார்கள். இதுவரை அந்தப் பகுதியில் – அப்போது மதுரையில் இருந்தோம் – யாரும் காலை நான்கரைக்குத் தனிப்பயிற்சி சொல்லித்தந்ததில்லை. நான்கரைக்குத் தனிப்பயிற்சி ஆரம்பிக்கும். தாத்தா மூன்றரைக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, ஒரு கா·பியோ டீயோ சாப்பிட்டுவிட்டு, தனிப்பயிற்சி நடக்கும் இடத்தைத் தூற்று, மேஜை விளக்கு வைத்து, நான்கு மணிக்குத் தயாராகிவிடுவார். நான்கரைக்கு வரவேண்டிய பையன்கள் ஐந்துமணிக்குத்தான் வரத் தொடங்குவார்கள். ஆனாலும் என் தாத்தா எல்லா நாளிலும் சரியாக நான்கு மணிக்கே தயாராகிவிடுவார். இது எங்கள் தூக்கத்திற்கும் இடஞ்சலாகத்தான் இருக்கும். ஆனாலும் தாத்தாவை எதிர்த்து ஒன்றும் பேசிவிடமுடியாது. தாத்தா முடிவெடுத்துவிட்டால் அதை மாற்ற யாராலும் முடியாது. சரியோ தவறோ அவர் நினைத்ததை அவர் செய்துகொண்டே இருப்பார். உறுதியுடன் செய்வார். இறுதிவரை செய்வார்.

எங்கேனும் ஊருக்குச் செல்லவேண்டுமென்றால் புகைவண்டியின் நேரத்தைக் கேட்டுக்கொள்வார். வண்டி வரும் நேரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே அங்கிருக்கவேண்டும் என்பது அவர் கொள்கை. ஒருமணி நேரமாவது தாமதமாக வரவேண்டும் என்பது வண்டியின் கொள்கை. அவருடன் ஊருக்குச் செல்லும் தினங்களில் இரண்டு மணிநேரம் புகைவண்டி நிலையத்தில் தவித்துக்கிடப்போம் நேரம் போகாமல். சில சமயம் எரிச்சலில் நான் கத்தியிருக்கிறேன். ஆனாலும் அவர் மசிய மாட்டார். ஒரு மணிநேரத்திற்கு முன்பு போயே ஆகவேண்டும்.

அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது துணியையும் என் பாட்டியின் துணியையும் அவரே தன் கைப்படத் துவைப்பார். அவர் நடை தளர்ந்து போகும்வரை, கிட்டத்தட்ட 65 ஆண்டுகள், அதாவது அவரது எழுபத்தி எட்டாவது வயது வரை இதைச் செய்தார். துவைப்பது என்றால் வாஷிங் மெஷின் துவைத்தல் அல்ல. பளீரென்ற வெண்மைக்குச் சான்று என்றால் என் தாத்தாவின் வேட்டி, சட்டைகளைத்தான் சுட்டமுடியும். அப்படி ஒரு வெண்மை. ஒரு நாள் அணிந்த துணியை மறுநாள் அணியமாட்டார். ஒரு சிறிய பொட்டாக அழுக்குப் பட்டுவிட்டாலும் அதைத் துவைக்கும்வரை அவருக்கு ஆறாது. கடைசி காலங்களில் அவர் இதையே எங்களிடமும் எதிர்பார்க்க, எங்களால் அப்படிச் செய்யமுடியாமல் போனது. துணிகளைச் சேர்த்தெடுத்து, வாஷிங் மெஷினில் போட்டு, காலரை ஒரு கசக்குக் கசக்குவதே எங்களுக்குத் தெரிந்த துவைக்கும் முறை. இதைத் தாத்தாவால் ஏற்கமுடியவில்லை. ஆனாலும் அவருக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.

தாத்தாவின் குணநலன்கள் எனக்குக் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னிடமில்லை. அவரைப் போல் என்னால் விஷயத்தை முழுமையாக அணுகமுடியவில்லை. (புத்தகம் படிக்கும் விஷயத்தையும் எழுதும் விஷயத்தையும் தவிர!) நானும் சில வருடங்கள் மாணவர்களுக்குத் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். ஐந்து மணிக்கு தனிப்பயிற்சி சென்றால் நான்கு அம்பத்தைந்துக்குத்தான் நான் தயாராவேன். தாமதம் இருக்காது. ஆனால் ஏதேனும் சிறு தடங்கல் ஏற்பட்டால் தாமதாகிவிடும் அபாயம் உண்டு. நெருக்கிப் பிடித்துத்தான் தயாராவேன். ஐந்து மணிக்குப் பேருந்து என்றால் நான்கே முக்காலுக்குத்தான் பேருந்து நிலையத்தில் இருப்பதை விரும்புவேன். போகும் வழியில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அந்தப் பேருந்தைப் பிடிக்கமுடியாமல் போய்விடும்.

நான் மிக இரசித்துச் செய்யும் விஷயத்தில் கூட என்னால் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படமுடியவில்லை என்றே நினைக்கிறேன். வயது ஒரு காரணமாக இருக்கலாம். என் தாத்தா என் வயதில் இப்படி இருக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும். அவர் என் வயதில் மிக அதிகமான பொறுப்புடனும் அதிக அர்ப்பணிப்பு உணர்வுடனும்தான் இருந்தார் என்று அவர் உட்பட பலர் சொல்லியிருக்கிறார்கள்.

இது என் தவறு மட்டும்தானா அல்லது இந்தத் தலைமுறையின், அதாவது என் தலைமுறையின் தவறா எனத் தெரியவில்லை. எல்லா விஷயங்களும் கைக்கெட்டும் தொலைவில் இருப்பதால் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோமோ என்கிற எண்ணம் எனக்கு எப்போதும் மேலிடும். தாத்தாவிற்குக் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருந்தது. அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வை அவர் அளிக்காதிருந்தால் ஒன்றிரண்டு பையன்கள் தனிப்பயிற்சியிலிருந்து விலகும் அபாயம் இருந்தது. அது குடும்பத்தில் வரவு செலவில் உதைக்கும் நிலை இருந்தது. அதனால் அவருக்கு அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் இருந்ததோ என்றும் யோசிக்கிறேன்.

அதை ஒன்றை மட்டுமே காரணமாகச் சொல்லிவிடமுடியாது. அர்ப்பணிப்பு உணர்வு என்பது பிறப்பிலேயே இருக்கும் ஒன்று என்று நினைக்கிறேன். என்னிடமிருக்கும் அலமாரியை ஒருநாள் சுத்தம் செய்வேன். அதன்பின் அதை எப்போதும் சுத்தமாகவே வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தேவையற்ற காகிதங்களைச் சேர விடக்கூடாது என்றும் நினைத்துக்கொள்வேன். ஆனால் என்னால் அதில் வெற்றி பெற முடிந்ததே இல்லை. ஒருவகை சோம்பேறித்தனமும் அலட்சிய மனப்பான்மையும் தலைதூக்க, என் அலமாரி பழைய நிலைக்கே திரும்பும். இப்படி ஒரு அலட்சியத்தையும் சோம்பேறித்தனத்தையும் என் தாத்தாவிடம் பார்த்ததில்லை.

உறங்கும்போது விரிக்கும் விரிப்பில் ஒரு சிறு சுருக்கம்கூட இல்லாதவாறு நான்கு முனைகளையும் இழுத்து இழுத்து விடுவார் என் தாத்தா. நான் ஒருநாள் கூட இதைச் செய்ததில்லை. ஆனால் என் சித்தியின் பையன் இதைச் செய்கிறான். அவனை அறியாமலேயே செய்கிறான். அப்படியானால் (perfection) கனகச்சிதத்தை எதிர்பார்ப்பது பிறப்பிலேயே நிறுவப்படுவதா?

இதே அர்ப்பணிப்பு உணர்வையும் கனகச்சிதத்தையும் நம்முடைய முன்தலைமுறையில் அதிகம் பேரிடம் காணமுடிகிறது என்றே உணர்கிறேன். என் வயதையொத்த பல நண்பர்களும் கொஞ்சம் சீனியர்களும் உள்ளிட்ட நம் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் என்னையொத்தே இருப்பதைக் காண்கிறேன். ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு உள்ள இடைவெளியில் அர்ப்பணிப்பு உணர்வும் கனகச்சிதத்தை நோக்கிய நகர்தலும் அடிபட்டுப்போனதா? அல்லது தனிமனிதன் சார்ந்த விஷயமா? நம் தலைமுறைகளில் பலர் இன்னும் அதே கனகச்சிதத்தன்மையோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும்தான் இருக்கிறார்களா?

எனக்கென்னவோ இல்லை என்றுதான் படுகிறது.

கடந்த தலைமுறையில் உள்ள நமது முன்னோர்களுக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வும் செயலாற்றும் தீவிரமும் நம் தலைமுறையில் குறைந்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். நினைத்த மாத்திரத்தில் எல்லாம் கிடைக்கும் வாழ்க்கையும் வறுமையைக் கொஞ்சம் கடந்துவிட்ட வாழ்க்கை முறையும் இந்த அர்ப்பணிப்பு உணர்வைக் குறைத்து நம்மனதுள் அலட்சியத்தன்மையை வளர்த்துவிட்டது என்றேதான் நினைக்கிறேன். இதில் பணத்தின் அருமையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு ரூபாயின் மதிப்பு நமக்குத் தெரிவதே இல்லை. இன்றும் என் அம்மா ஒரு ரூபாயைப் பெரிதாக நினைக்கிறாள் என்று எனக்குத் தெரியும். எனக்கும் அவளுக்குமான இடைவெளி இந்த ஒரு ரூபாயால் மிகப்பெரியதாவதைப் பார்க்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்தில் எனக்கும் அந்தப் பொறுப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் வருமா இல்லை என் வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்குமா என்கிற என் கவலையே எனக்கு இப்போது முதன்மையானதாக இருக்கிறது.

இதை எழுதவேண்டுமென்று மூன்று மாதங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

Share

தூவானம் – அ.யேசுராசாவின் பத்திகளின் தொகுப்பு – என் பார்வை


தூவானம், அ.யேசுராசா, மூன்றாவது மனிதன் பப்ளிகேஷன், கொழும்பு


“விமர்சன மனநிலைக் கண்ணோட்டம் என்னிடம் எப்போதும் இருந்துவருகிறது. அது அடிமனதிலும் பதிந்து வெளிப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்குமென்றுதான் சொல்லலாம். படைப்பாளிகளிடம் இத்தகைய நிலை இருக்கவேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கிறேன்” – அ.யேசுராசா.

பொதுவாகவே பத்திகள் படிக்க சுவாரஸ்யமானவை. அவை தொடர்ந்து வாசகனுக்கு நிகழ்காலத்தின் நிகழ்வுகளையும், எழுதுபவனின் அனுபவத்தையும், ஒரு படைப்பின் அறிமுகத்தையும் விவாதத்தையும் முன்வைக்கின்றன. சமூகக்கோபங்களைப் பத்திகளில் பரவலாகக் காணலாம். காலங்கடந்து அந்தப் பத்திகளையோ பத்திகளின் தொகுப்பையோ வாசிக்கும்போது அவை ஒரு பதிவாகவும் அமைவதைக் காணலாம். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் இதே வேலையைச் செய்துவருகிறது. திசை வாரவெளியீட்டில் அ.யேசுராசா எழுதிய பத்திகளின் தொகுப்பே “தூவானம்.”

பத்தி எழுத்துகள் ஆழமான விமர்சனமல்ல என்ற முன்னுரையோடே தொடங்குகிறது நூல். அ.யேசுராசாவின் பத்திகளில் எழுத்தாளர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள். ஓவியம் போன்ற கலைகள் இலங்கையில் கண்டுகொள்ளப்படவில்லை என்பதான கோபம் இருக்கிறது. சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நல்ல திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நல்ல கவிதைகள் பற்றிய பதிவு இருக்கிறது. மிகவும் தெளிவான சிக்கலற்ற மொழியால் எழுதப்பெற்ற பத்திகள் அடங்கிய சுவாரஸ்யமான தொகுப்பு “தூவானம்.”

உமாவரதராஜன் என்னும் இலங்கை எழுத்தாளரைப் பற்றிய குறிப்பொன்றில் சுஜாதா அவரைப் பற்றிச் சொன்னதையும் பதிவு செய்திருக்கிறார் அ.யேசுராசா. தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளை யேசுராசா தொடர்ந்து வாசித்திருக்கிறார். அங்கங்கே தேவையான இடங்களில் குறிப்புகளைக் தந்துவிட்டுச் செல்கிறார்.

ஓவியம் பற்றிய குறிப்பில் இலங்கையில் ஓவியம் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் பரவலைப் பெற்றிருக்கவில்லை என்று சொல்லும் யேசுராசா சிங்களர்கள் மத்தியில் ஓவியக்கலை செழித்து வளர்கிறது என்று குறிக்கிறார். தமிழ்நாட்டில் ஓவியத்தின் பரவல் என்னவென்பதை என்னால் யூகிக்கமுடியவில்லை. நவீன ஓவியங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த பயிற்சிகள் தமிழ்நாட்டில் எந்த அளவில் தரப்படுகிறது என்று யோசித்தாமானால் நாமிருக்கும் நிலைமையின் மோசம் புரியும்.

தூர்தர்ஷனில் கலைப்படங்கள் என்னும் பதிவு மிக சுவாரஸ்யமானது. தூர்தர்ஷனில் மாநில மொழித்திரைப்படங்கள் வரிசையில் எல்லா மொழிகளிலும் இருந்து கலைப்படங்களைத் தேர்ந்தெடுத்து முன்பு ஒளிபரப்பினார்கள். அது தூர்தர்ஷனின் பொற்காலம். ஆங்கில துணைத் தலைப்புகளுடன் (Sub title) ஒளிபரப்பாகிய அத்திரைப்படங்களைத் தவறாமல் பார்த்தவர்களின் இரசனை கொஞ்சம் மேம்பட்டிருக்கும் என்பதில் ஐயமே இல்லை. அப்போது ஒளிபரப்பான “அக்கரே”, “காற்றத்தே கிளிக்கூடு”, “புருஷார்த்தம்”, “சிதம்பரம்” போன்ற மலையாளப்படங்களையும் கன்னடம், வங்காளம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள பல கலைப்படங்களையும் பார்த்து அது பற்றிய தனது கருத்துகளைப் பதிந்திருக்கிறார் யேசுராசா. உலகின் பல்வேறு மொழிகளிலிருந்தும் வெளிவரும் பல்வேறு கலைப்படங்களைப் பற்றிய பார்வை யேசுராசாவிற்குத் திரைப்படங்கள் பற்றிய கூர்மையான, ஆழமான புரிதலை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. சிங்களப் படங்கள் பற்றிய பதிவிலும் இதே நேர்த்தியைக் காண முடிகிறது.

கவிதைகள் பற்றிய பதிவில், “இலங்கைப் பத்திரிகையின் வாரவெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் தரமற்ற படைப்புகளே கவிதைகள் என்கிற பெயரில் – இடம் நிரப்பிகளாகவும் – வெளியிடப்படுகின்றன” என்கிறார். அதற்கு அவர் யூகிக்கும் காரணம், “இக்கவிஞர்களில் பலரும் பெரும்பாலும் வாசிப்புப் பழக்கம் அற்றவராகவே இருப்பார்கள். அவர்களின் கண்களில் கிடைக்கக்கூடிய கவிதைகளில் பெரும்பாலானவை இத்தன்மையனவாக இருப்பதும் அவற்றையே முன்னுதாரனமாகக் கொண்டு இவர்கள் எழுத முனைவதும் ஒரு முக்கியக்காரணியாகலாம் என்று நினைக்கிறேன்” என்கிறார். தமிழ்நாட்டிற்கும் அவர் குறித்திருக்கும் நிலையிலிருந்து அதிக மாறுபாடில்லை. “விரிவும் ஆழமும் தேடி”யிலும் சுந்தரராமசாமி கிட்டத்தட்ட இதே கருத்தையே

முன்வைக்கிறார். வவுனியா திலீபன் என்னும் கவிஞரைப் பற்றிய பதிவில் “தென்னகக் கவிஞர்களான நா.காமராசன், மு.மேத்தா, வைரமுத்து போன்றோரின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவாறு தவிப்பதும்” தெரிகிறது என்பதை ஒப்புகிறார். (திலீபனின் கவிதைத் தொகுப்பில் கவித்துவமான வரிகள் என்று சொல்லி யேசுராசா சொல்லியிருக்கும் வரிகளில் எந்தவிதமான கவித்துவமும்

தென்படவில்லை. அவை வெறும் வசன கவிதைகளாகத்தான் இருக்கின்றன. அதையும் கோடு காட்டியிருக்கிறார் யேசுராசா.)

கவிதைகள் பற்றிய கருத்துகள், கலைப்படங்கள் பற்றிய பதிவுகள், அப்போதைய நிகழ்வுகளும் அதை ஒட்டிய நினைவுகளும் என “தூவானம்” படிக்க சுவாரஸ்யம் மிக்கதாகத்தான் இருக்கிறது. தெளிவான நடை ஒரு பலம். சில விஷயங்களின் பின்புலம் (தமிழ்நாட்டு வாசகர்களுக்குப்) பிடிபடாமல் போகும் அபாயம் இருக்கிறது. “க.நா.சு. சில குறிப்புகள்” என்ற எம்.ஏ.நு·ப்மானின் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடும்போது கைலாசபதியின் மீதான நு·ப்மானின் குறிப்பினை

எடுத்தாள்கிறார். யேசுராசா, கைலாசபதியின் உறவு எத்தகையது என்பது புரியாததால் குழப்பமே மிஞ்சுகிறது. இதேபோல் “வாசகரெல்லாம் வாசகரல்ல” என்ற பதிவில் ஒரு எழுத்தாளர் பேசியதைப் பற்றிய அங்கதம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த எழுத்தாளர் அவர், என்ன பிரச்சனை என்பது போன்ற விவரங்கள் இல்லை. இவையெல்லாம் பொதுவாக, “பத்தி”களின் தோல்விகள் போல. குறும்பா பற்றிய பதிவில் இப்படிச் சொல்கிறார். “இலக்கிய உலகில் நிலவி வரும் குழு மனோபாவத்தினால் குறிப்பிட்ட காலம் வரை இவர் (ஈழத்து மஹாகவி) உரிய இடத்தைப் பெறவில்லை. எம்.ஏ.நு·ப்மான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் அக்கறை எடுத்துச் செயற்பட்டதன் விளைவாக அவரது நூல்கள் பல வெளிவந்ததோடு அவரது கவிதா ஆளுமையின் முக்கியத்துவமும் தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது” என்கிறார். என்ன விதமான குழு மனப்பான்மை நிலவியது என்பது பற்றிய புரிதல் எனக்கில்லை. இலக்கிய உலகில் குழுமனப்பான்மையும் போட்டியும் எல்லாவிடத்தும் இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது.

“வாசகரெல்லாம் வாசகரல்ல” பத்தியில் “குமுதம், ராணி, கல்கி, ஆனந்தவிகடன் இரசிகர்கள் – சாண்டில்யன்களை, புஷ்பா தங்கதுரைகளை, சுஜாத்தாக்களை, இராஜேந்திரகுமார்களை, குரும்பூர்க் குப்புசாமிகளைத்தான் இரசிப்பார்கள்” என்று போகிற போக்கில் சொல்லிப்போகிறார். சுஜாதாவின் இலக்கியப் பங்கு விவாததிற்குரியது என்றாலும் குரும்பூர்க்குப்புசாமிகளுடன் சேர்க்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. மேலும் ஆசிரியரே உமா வரதராஜன் பற்றிய பதிவில் சுஜாதாவை

மேற்கோள் காட்டுகிறார். அப்போது “குரும்பூர் குப்புசாமி”ப் பட்டியலில் இல்லாத சுஜாதா சில பக்கங்கள் (வாரங்கள்) கழித்து எப்படி அப்பட்டியலில் சேர்ந்தார் என்பதை யேசுராசாதான் சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்தத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க வைக்கும், சுருங்கச் சொல்லப்பட்ட பதிவுகள். கூரான விமர்சனங்கள். நவீன கவிதைகளைப் பற்றிய சிறந்த புரிதல். கலைப்படங்கள் மற்றும் கலைகளைப் பற்றிய அறிமுகங்கள். இவையே “தூவானம்” எனலாம்.

மிகப்பிடித்த சில வரிகளும் மேற்கோள்களும்.

“எழுதுகிறவரெல்லாம் எழுத்தாளரல்ல என்பது போல், வாசிக்கிறவனெல்லாம் வாசகன் அல்ல”-ஜெயகாந்தன் சொன்னதாக மேற்கோள்.

“பொதுவாக நான் கதைகள் எழுதும்போது, வெறுமனே கற்பனை நயத்தைக் கருதி எழுதுவது வழக்கமேயன்றி ஏதேனும் ஒரு தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுதும் வழக்கமில்லை. தர்மபோதனைக்கு வியாஸங்கள் எழுதுவேன். கதையென்றெடுத்தால் கற்பனைப் புனைவையே அதில் நான் முக்கியமாகக் கருதுவேன்.” — பாரதி சொன்னதாக மேற்கோள்.

பயணம்

=======

காலிலே தைத்த

…..முள்ளினைக் கழற்ற

ஒரு

கணம் திரும்பவும்

…..காதலியோடு என்

ஒட்டகம் எங்கோ

…..ஓடி மறைந்தது!

ஒரு கணம்

…..திரும்பிய கவனம்;

ஒரு நூற்றாண்டாய்

…..நீண்டது பயணமே.

மேலே சொன்ன கவிதை, சுதந்திர போராட்டத் தலைவர்களில் ஒருவரான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவரது சுயசரிதையில் எழுதியதின் மொழிபெயர்ப்பு. “ஒரு கணம் திரும்பிய கவனம்” என்கிற வரி பல்வேறு அர்த்த விரிவுகளை தன்னுள் ஏற்படுத்துவதாகச் சொல்கிறார் யேசுராசா. எனக்கும்.

பின்குறிப்புகள்:

[1] இந்தப் புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்த லண்டன் பத்மநாப ஐயருக்கு நன்றி பல.

[2] புத்தகத்தில் “ஏகாப்பட்ட” அச்சுப்பிழைகள்.

Share

இந்தப் பூக்கள் விற்பனைக்கு (கவிதை)

மரத்தடி யாஹூ குழும போட்டிக்கு உள்ளிட்ட கவிதையைப் படிக்க சொடுக்கவும்.

இவர் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். இவர் யாரென்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளர் என்பது மட்டும் தெரிகிறது. நான் இரண்டு பேரைச் சந்தேகித்து வைத்திருக்கிறேன். அவர்களாக இருக்குமா என்று தெரியவில்லை.

அவர் எழுதிய கடிதத்தில் “அவர் முகமூடி அல்ல என்றும் அதை நான் எனது வலைப்பதிவில் சொல்லவேண்டும்” என்று கேட்டுக்கொன்டிருந்தார்.

சொல்லிவிட்டேன்.

அவர் ஏன் என்னிடம் இதைச் சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் சந்தேகிக்கும் நபர்கள்தானோ என்று என் சந்தேகம் வலுப்பெறுகிறது. அப்படி இல்லாமல் போனால் ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கவேண்டியிருக்கும்.

Share