Tag Archive for உளவு ஊழல் அரசியல்

ஊழல் உளவு அரசியல் – நம் சமூகத்தின் ஆவணம்

சவுக்கு சங்கர் எழுதிய ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகம், சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய அரசியலின் ஆவணமாகத் திகழ்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கி அமைச்சர்கள் வழியாக முதலமைச்சர் வரையிலும் காவல்துறை அதிகார்கள், நீதிமன்றம் என விதிவிலக்கில்லாமல் ஊழல் புரையோடியுள்ளது என்பது நமக்குத் தெரியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் இத்தகைய ஊழல் காட்சிகளைக் கண்டிருப்போம். இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் எப்போதாவது தோன்றியிருக்கலாம். திரைப்படங்களில் காட்டப்படுபவை எல்லாமே உண்மை என்பது மட்டுமல்ல, திரைப்படங்களில் காட்டப்படுபவையைக் காட்டிலும் உண்மை என்பது கூடுதலாக இருக்கமுடியும் என்பதற்கு இப்புத்தகம் சாட்சியாக அமைகிறது.

படித்தவர்களே ஊழலின் தொடக்கப்புள்ளியும் பூதாகரமான புள்ளியும் என்பதை இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரலாம். படிப்பு என்பது எத்தனை திறமையாக ஊழல் செய்யமுடியும் என்பதற்கான ஒரு தகுதியாகிறதோ என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியாது. இலக்கியவாதிகள் உட்பட எந்தவொருவரின் கையில் அதிகாரம் வந்தாலும் நமக்குக் கிடைக்கப்போவதென்னவோ இன்னொரு ஊழலும் இன்னுமொரு அதிகார துஷ்பிரயோகமும்தான்.

மிகச் சிறிய வயதிலேயே அரசு வேலைக்குச் செல்லும் சங்கர் பின்னாளில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிறைக்குச் செல்கிறார். எவ்வித அமைப்பின் துணையின்றி, சக மனிதர்களின் உதவியுடனும் தன் திறமையான காய் நகர்த்தலின் மூலம் எப்படி வெற்றி பெற்று விடுதலை அடைகிறார் என்பதை ஒரு நாவல் போலச் சொல்கிறது இந்நூல். ஒரு நாவலில் வரும் அத்தனை கற்பனை நிகழ்ச்சிகளுக்கும் ஈடான அடுக்கடுக்கான சம்பவங்கள் சங்கருக்கு நேர்ந்திருக்கின்றன. எந்நிலையிலும் தகர்ந்துபோகாமல் அவற்றை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் சவுக்கு சங்கர்.

இந்நூலில் யாரையும் சவுக்கு சங்கர் விட்டுவைக்கவில்லை. கிசுகிசு பாணியில் எல்லாம் சொல்லாமல் எல்லாரையும் பெயரையும் பதவியையும் குறிப்பிட்டே சொல்கிறார். இதைத் தொடர்ந்து இன்னும் என்ன என்ன பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளப் போகிறாரோ என்ற அச்சத்துடனேயே படிக்கவேண்டி இருக்கிறது.

ஜெயலலிதாவின் கருணாநிதியும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்னும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறார் சவுக்கு சங்கர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனக்குத் தேவையான அதிகாரிகளுக்கு ஜெயலலிதா இடம் வாங்கிக் கொடுத்திருப்பது தொடர்பான அத்தியாயங்கள் மிக முக்கியமானவை. நீதிமன்றத்தில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இவ்வழக்கு சொல்லும் செய்திகள் ஏராளமானவை. அண்ணா பல்கலைக்கழத்தின் கட் ஆஃப் மதிப்பெண்களின் தேவையும் ஜெயலலிதாவின் ஆதரவில் இடம் பெறும் அதிகாரிகளின் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அதிர்ச்சியை வரவழைக்கிறது.

அடுத்த வழக்கு, உபாத்யாய் மற்றும் திரிபாதி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் வெளியான வழக்கு. சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பது பின்னுக்குப் போய் உரையாடல் வெளியானதே முக்கியமான பிரச்சினையாக மாற்றப்படுகிறது. திமுகவின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை மற்றும் உபாத்யாய் ஆகியோரின் உரையாடலை சுப்பிரமணியம் சுவாமி வெளியிடுகிறார். உபாத்யாய் ஒரு நேர்மையான அதிகாரி என்று பலமுறை இப்புத்தகத்தில் சொல்கிறார் சவுக்கு சங்கர்.

இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட இருக்கும் சக ஊழியர்கள் இருவருக்கு உதவி செய்ய சவுக்கு சங்கர் முடிவெடுக்கிறார்; இதுவே தனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதாகச் சொல்கிறார் சவுக்கு சங்கர்.

இதற்குப் பிறகு வரும் அத்தியாயங்கள் படு விறுவிறுப்பானவை. அதிர வைப்பவை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்துக்குப் பிறகு இத்தனை விறுவிறுப்பான புத்தகத்தை நான் வாசிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் இவை அத்தனையும் ஒரு சக மனிதனுக்கு நடந்தது என்னும் எண்ணம் தரும் பதற்றத்தைச் சொல்லில் அடக்கமுடியாது.

விசாரணை அதிகாரிகள் எப்படி மிரட்டுகிறார்கள், எப்படி அடிக்கிறார்கள் என்பதையெல்லாம் பல பக்கங்களில் விவரிக்கிறார் சவுக்கு சங்கர். அதே நேரம் அவர்களுக்கு ஒரு வழக்கு பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதிகாரிகள் என்றில்லை, அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாருக்குமே ஒரு வழக்கைப் பற்றிய போதிய புரிதல்கள் இல்லை என்பதையும் தன் துறை சார்ந்த புரிதல்கூட இல்லை என்பதையும் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடும் அத்தியாயங்களும், சிறையில் சவுக்கு சங்கர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய அத்தியாயங்களும் நம் அதிகாரக் கட்டமைப்பின் முகத்தை நமக்குத் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமியை வழக்குக்குள் கொண்டு வருவதற்காகச் செய்யப்படும் முயற்சிகள் மிக சுவாரசியமானவை. ஆனால் நீதிமன்றம் சுவாமியை இவழக்குக்குள் கொண்டுவரத் தயாராகவே இல்லை.

வழக்கு எப்படியெல்லாமோ நடக்கிறது. வரிசையாக நீதிபதிகள் மாற்றப்படுகிறார்கள். அரசு மாறுகிறது. அரசின் நோக்கம் மாறுகிறது. அரசுக்கேற்ப ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. தேவையென்றால் விரைவுபடுத்தப்படுகிறது. எல்லாமே அரசின் முடிவுக்கேற்ப நடக்கிறது. ஒரு கட்டத்தில் இதே வேலையை சவுக்கு சங்கரும் அவரது வழக்கறிஞர்களும் தங்கள் தேவைக்காகச் செய்கிறார்கள். முடிவில் போதிய நிரூபணங்கள் இல்லாததால் சங்கர் விடுதலை ஆகிறார்.

சங்கர் விடுதலை ஆகும் தருணம் உண்மையிலேயே உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது.

*

ஒரு தன் வரலாற்றின் பக்கங்களில் உள்ள நிகழ்வுகளின் நம்பகத்தன்மை என்பது வரலாற்றைச் சார்ந்தும் சொல்பவரின் நம்பகத்தன்மை சார்ந்துமே அமையும். தன் வரலாற்றில் ஒருவர் சொல்வதை ஏற்கவேண்டும்; ஒருவேளை நாம் மறுக்க நேர்ந்தால் அதற்கான பின்னணி, ஆதாரம் என எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லவேண்டும். சங்கரின் புத்தகம் முழுக்க அவர் தொடர்பான விவரங்களின் எதிர்த்தரப்பின் குரல் இல்லவே இல்லை. இது சங்கரின் பிரச்சினை அல்ல. இந்நூலின் தேவையும் அல்ல. ஆனால் படிக்கும் நமக்கு எதிர்த்தரப்பின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது.

சவுக்கு என்றொரு தளத்தில் யார் எழுதுகிறார் என்றே தெரியாமல் தொடர்ச்சியாகக் கட்டுரைகளும் அதிகாரிகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் வந்தபோது இணையம் முழுக்க சவுக்கு என்பவரின் நம்பகத்தன்மை குறித்துக் கடுமையாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்தும் கிசுகிசு என்று சொல்லப்பட்டது. இந்நூல் அந்த சந்தேகங்களுக்குப் பெருமளவில் பதில் சொல்லி இருக்கிறது. என்றாலும் எதிர்த்தரப்புக்கான பதில்கள் என்னவாக இருக்கும் என்னும் எண்ணத்தை அதற்கு இணையாக எழுப்பவும் செய்திருக்கிறது.

நம் அமைப்பில் ஒரு முக்கியமான அதிகாரி கூட புத்திசாலியாக இல்லையா என்கிற கேள்வி எழாமல் இல்லை. சில அதிகாரிகள் நல்லவர்களாகச் சொல்லப்படுகிறார்கள் என்றாலும் அவர்களது திறமை பற்றி, முக்கியமாக காவல்துறை அதிகாரிகளில் திறமையானவர்கள் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என வேறுபாடில்லாமல் அனைத்தையும் சங்கர் எழுதி இருக்கிறார் என்றாலும், எதோ ஒரு புள்ளியில் கருணாநிதியின் மீதும் திமுகவின் மீதும் சங்கருக்கு ஒரு சார்பு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட்டுகள் மேல் மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதை உணரமுடிகிறது. அவர்களே சங்கருக்குப் பல வகைகளில் உதவியும் இருக்கிறார்கள். இவ்வழக்கு தொடர்பாக இணையத்தில் சவுக்கு எழுதியபோது எப்படி அதிமுகவும் திமுகவும் மாற்றி மாற்றி அவற்றைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டன என்பதை, இப்புத்தகத்தைப் படித்துவிட்டு நினைத்துப் பார்த்தால், சிரிப்பே வருகிறது. ஏனென்றால் இந்நூலில் இரு தரப்பையும் சங்கர் துவம்சம் செய்கிறார்.

*

இந்நூல் சங்கரின் வழக்கை விவரிக்கிறது என்றாலும், எனக்கு வேறொரு வகையில் முக்கியமாகிறது. ஒரு வழக்கில் அதிகாரிகள் எப்படியெல்லாம் செயல்படமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது. என்னவெல்லாம் செய்து தனக்குத் தேவையானபடி வழக்கைக் கொண்டுசெல்லமுடியும் என்பதை இப்புத்தகத்தில் பார்க்கலாம். காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என நான்கு பக்கமும் இழுக்கப்படும் ஒரு தேராகவே ஒரு வழக்கு அமைகிறது. யார் கை ஓங்கும் என்பதைக் காலமே தீர்மானிக்கும் என்பதை இந்நூல் சொல்கிறது. இத்தனையையும் தாண்டி நாம் நீதியை அடையவேண்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அனைத்தின் மீதும் நம்பிக்கையின்மையை விதைக்கிறது சங்கரின் அனுபவங்கள்.

ஒரு தனிப்பட்ட அதிகாரி எதிர்த்து நின்றால் இவை அனைத்தையும் கடந்து வெல்லமுடியும் என்பதை நூல் சொல்கிறதுதான். ஆனால் அந்த அதிகாரிக்கு சங்கர் போன்ற மனத்திட்பம் இருக்கவேண்டும். உங்களை நிர்வாணப்படுத்தி ஆண்குறியில் அடித்தால், வெளியில் இருக்கும் அம்மாவுக்குக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கத்தாமல் இருக்கும் தைரியம் வேண்டும். வழக்குகளைப் பற்றி, வழக்கு செயல்படும் விதம் பற்றி, அவற்றில் உள்ள நுணுக்கங்கள் பற்றி, முன்பு நடந்த வழக்குகளில் இருந்த தீர்ப்புகள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு உதவ அரசியல் ஆதரவு உள்ள நண்பர்கள் வேண்டும். எதையும் எதிர்கொள்ள பின்புலம் வேண்டும். உங்களுக்குத் தகவல் சொல்ல எல்லா மட்டங்களில் ஆள்கள் இருக்கவேண்டும். நீங்கள் சொன்னதும் அதை நம்பி செய்தியாக வெளியிட பத்திரிகைகளின் ஆதரவு வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ஒரு பெரிய வலைப்பின்னலே இருக்கவேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வரம்பில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் அதே வகையான வலைப்பின்னல். இரண்டு வலைப்பின்னல்களுக்கு இடையேயான போட்டியாக மாறினால் மட்டுமே உங்களால் மீள முடியும். சங்கரைப் போல. நீங்கள் தனி மனிதர் மட்டுமே என்றால் எதிர்த்தரப்பின் வலைப்பின்னலில் சிக்கும் ஒரு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தனையும் இருந்து வென்றாலும் உங்கள் கேரியரில் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை. இன்னுமொரு முக்கியமான எண்ணம் எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு வழக்கில் சிக்கியவர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரியாக இருந்திருந்தால் எந்தப் பத்திரிகையாளர் அவருக்கு உதவி இருப்பார் என்பதுதான் அந்த எண்ணம். நினைக்கவே திகிலாக இருக்கிறது.

இந்நிலையில் ஒரு சாமானிய அரசு ஊழியன் எதைத் தேர்ந்தெடுப்பானோ அதையே இன்றும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறான். ஒரு சாமானியனால் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாகும் இந்நூலே, ஒரு சாமானியன் வெற்றி பெற எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதற்கும் உதாரணமாகிறது. ஏன் அரசு ஊழியன் தன் பணிக்காலத்தைச் சிக்கலில்லாமல் முடிக்க மட்டுமே நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நூலில் உள்ளவை எல்லாமே உண்மைதானா என்பது எப்படி உறுதி இல்லையோ அதே போல் இன்னொரு உறுதியான விஷயம், நம் சமூகத்தில் இதெல்லாம் நிச்சயம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதே நேரத்தில், எவ்விதக் குற்றமும் செய்யாத, எவ்வித அரசியலும் செய்யாத, எல்லா வகையிலும் அப்பாவியான ஒருவனை, அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருப்பவர் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றாலும் ஒட்டுமொத்தமாக அவனைக் குற்றவாளி ஆக்கிவிடமுடியாது என்னும் நம்பிக்கை எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதன் பலம், இன்னும் அதிகார-துஷ்பிரயோகம்-செய்பவர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது. பலவீனம், தனக்குப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக எப்போதும் வளைந்து நெளிந்து செல்ல அரசு ஊழியர்கள் தயாராக இருப்பது. இதில் மிகக் கவலையான விஷயம், இந்நிலையில் ஒரு அமைப்பு இருக்கக்கூடாது என்பது.

இந்நூலில் போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் முக்கியமானவை. சிறைச்சாலையின் நிலை அவற்றில் மிக முக்கியமானது. கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த கைதிகளுக்குத் தரப்பட்ட சிறப்புச் சலுகை மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. இன்னொரு விஷயம், காவல்துறை குற்றம் சாட்டப்பவர்களை விசாரிக்கும் முறை. அதேபோல் ஒரு குற்றவாளி எப்படி அரசியலுக்கு வருகிறார் என்னும் விஷயம். அவர்களுக்குள்ளான கோஷ்டி மோதல், பழிவாங்கல். இப்படிப் பல விஷயங்கள் இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. எவ்வகையிலும் புத்தகத்தின் முக்கிய நோக்கத்தைச் சிதைக்காமல் இவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார் சங்கர். சங்கரின் எழுத்துத் திறமை அசரடிக்கிறது. மிக நேர்த்தியான எழுத்து. அங்கங்கே தெறிக்கும் கிண்டல்கள் ரசிக்க வைக்கின்றன. இத்தனை வேதனைக்கு மத்தியிலும் சங்கர் இப்படி எழுதிச் செல்வது ஆச்சரியமளிக்கிறது.

புரையோடிக் கிடக்கும் நம் சமூகத்தின் பிரதிபலிப்பே இப்புத்தகம். எல்லா வகையிலும் இது முக்கியமான ஆவணமாகிறது.

ஆன்லைனில் இப்புத்தகத்தை வாங்க: http://www.nhm.in/shop/9788184938357.html

கிண்டிலில் வாசிக்க:https://www.amazon.in/xB8A-xBB4-xBB2-xBCD-Arasiyal-ebook/dp/B078XYHNW5/ref=tmm_kin_swatch_0?_encoding=UTF8&qid=1520605634&sr=8-1

Share