Tag Archive for சரவணன் சந்திரன்

பார்பி – சரவணன் சந்திரன்

பார்பி (நாவல்), சரவணன் சந்திரன், கிழக்கு வெளியீடு, ரூ 150

நான் வாசிக்கும், சரவணன் சந்திரனின் இரண்டாவது நாவல். கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது.

கோவில்பட்டி/திருநெல்வேலியில் வளரும் ஒருவன் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறும் கதை என்று ஒருவரியில் சொல்லலாம். ஆனால் இந்த ஒருவரிக்குள் இருக்கும் போராட்டங்கள், அவமானங்கள், வறுமை, பெண்ணுடல் ஈர்ப்பு, சாதிப் பிரச்சினை, பாலியல் தொல்லைகள், அரசு வேலைக்கான அவசியம், உயரிடத்துக்குப் போவதற்காகச் செய்யவேண்டிய கூழைக்கும்பிடுகள் போன்ற பல முனைகளை இந்த ஒரு வரி தட்டைப்படுத்திவிடக்கூடும் என்பதால் அப்படிச் சொல்லாமல் இருப்பதே நல்லது, சரியானது.

பார்பி என்ற ஒரு பொம்மையைத் திருடி அதையே தன் நாவலின் உயிராக மாற்றிக்கொண்டுவிட்டு பின்னர் எந்த ஒன்றையும் அந்த பார்பியுடன் இணைத்துவிடுகிறார் சரவணன் சந்திரன். அதேபோல் மிக சாகவாசமாக நாவலின் நிகழ்வுகளையெல்லாம் பல இடங்களில் ஓடவிட்டு, இடை இடையே ஓடவிட்டு, நம் கவனம் கலையும் நேரத்தில் சட்டென இவரது கோச்களில் யாரேனும் ஒருவர் சொல்லும் கருத்தைக் கொண்டு மைதானத்தில் பிணைத்துவிடுகிறார். இந்த நிகழ்வுகளில்தான் சாதிப் பிரச்சினை முதல் வட இந்திய தென்னிந்திய ஹாக்கி வீரர்களின் பிரிவுகள் வரை அனைத்தையும் விவரிக்கிறார்.

கோவில்பட்டி திருநெல்வேலியில் ஹாக்கி இந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. ஹாக்கி நட்சத்திர வீரர்களின் பெயர்கள் நாவலில் சொல்லப்படும்போது இன்றைய ஹாக்கியின் வீழ்ச்சியை உணரமுடிகிறது.

தன்னிலையில் செல்லும் நாவல் என்பதால் நாவல் முழுக்க சொல்லப்படும் நிகழ்ச்சிகளில் ஒரு உணர்வுபூர்வ பந்தம் இருப்பதை உணரமுடிகிறது. கூடவே எந்த ஒரு பெண்ணையும் அக்கா என்று அழைப்பதும் தன்னைப் பற்றிய பிம்பங்களை நாயகன் கதாபாத்திரம் உருவாக்குவதும் உடனேயே அதை உடைப்பதுமென கோல்போஸ்ட்டை வெகு வேகமாக முன்னேறுகிறார்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், ரோலக்ஸ் வாட்ச் நாவலில் பல கதை மாந்தர்களின் கதைகளுக்கிடையே ஒரு மைய இழை சரியாக உருவாகிவரவில்லை. பல இடங்களில் சென்றதால் நாவல் பல இழைகளின் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பார்பியிலும் அப்படித்தான் என்றாலும் ஒருமை ஒன்று கைகூடி வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நாவலில் சொல்லப்படும் விஷயங்களில் இருக்கும் ஹாக்கி விளையாட்டு தொடர்பான புதுத்தன்மை மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவே மற்ற அனைவரும் நோக்கப்படும் விதம்.

இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வறுமையும் உணவுக்கான அலைச்சலும் மிக முக்கியமானவை. எந்த ஒரு வறுமைக்காரனின் கொதிப்பும் இதுவாகவே இருக்கும்போது, அங்கிருந்து தொடங்கும் ஒரு விளையாட்டுக்காரரின் வெறி பல மடங்கு அதிகமானதாக இருக்கும். ஏனென்றால் அதற்கான தேவையும் அவசியமும் விளையாட்டுக்காரனுக்கு உள்ளது. இதை நாவல் முழுக்கப் பல இடங்களில் பார்க்கலாம்.

மிக எளிய நாவல். ஒருகட்டத்தில் பெண்ணுடல் மீதான தீரா வேட்கையும் அதற்குச் சமமான, மிடில் க்ளாஸ் வளர்ப்புக்கே உரிய தயக்கமும், மோகமுள் நாவலின் உச்சத்துக்குக் கொண்டு போகுமோ என நினைத்தேன். அப்படித்தான் ஆனது, கூடுதலாக இரண்டு அத்தியாங்களுன். இந்தக் கடைசி இரண்டு மிகச் சிறிய அத்தியாயங்கள் நாவலுக்கு ஓர் அழகியல்தன்மையைக் கொண்டுவருகிறது.

மொத்தத்தில் மிக எளிய அழகிய நாவல். இனி எழுதப் போகும் நாவலில் சரவணன் சந்திரன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டியது என்று ஒன்றைச் சொல்லவேண்டுமானால், முன்னுரையில் அரவிந்தன் சொன்னதைத்தான்.

ஹரன் பிரசன்னா

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184938500.html

Share

ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் படித்தேன். மிக எளிய வடிவிலான நாவல். முதல் சில நாவல்களில் இந்த உத்தி எளிமையானதும் வசதியானதும். பல்வேறு நிகழ்வுகளை மெல்ல புனைவுக்குள் அமிழ்த்தி பல அத்தியாயங்களில் உலவி சில அத்தியாங்களில் ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது. இந்த உத்தியைச் சரியாகவே செய்திருக்கிறார் சரவணன் சந்திரன். விறுவிறுவெனப் படிக்க வைக்கும் நடை கைகொடுக்கிறது. பல இடங்களில் சைவமான சாரு நிவேதிதாவைப் படித்தது போன்ற உணர்வு மேலோங்குகிறது. சந்திரன் பாத்திரம் கொள்ளும் உச்சம் மிக நன்றாக வெளிப்பட்டுள்ளது. சந்திரன் பற்றிய நேரடி விவரங்களே இல்லை என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. இதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
 
எனக்கு அலுப்புத் தந்தவை எவை என்று பார்த்தால், எவ்வித ஆழமும் இன்று சிலச்சிலப் பக்கங்களில் விரியும் தொடர்ச்சியற்ற சம்பவங்கள். நாவல் எழுதும் நாளில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டாரோ என்று எண்ணத்தக்க அளவுக்கு ஏகப்பட்ட சம்பவங்கள். வெகு சில பக்கங்கள் கொண்ட அத்தியாயங்களை கீரனூர் ஜாகிர் ராஜாவின் நாவல்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றுக்கிடையே உள்ள தொடர்பும் அந்தக் கதைகளின் வழியே உருவாகி வரும் ஒட்டுமொத்த சித்திரமும் அபாரமானதாகவும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும். இந்த உணர்வு இந்த நாவலில் கிடைக்கவில்லை. சில சாதிகளைப் பற்றியும் சில கட்சிகளைப் பற்றியும் அந்தச் சாதி என்றும் அந்தக் கட்சி என்றும் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. நாவலிலுமா இப்பிரச்சினை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
 
சரவணன் சந்திரனின் எழுத்து மிக நன்றாக இருப்பது நாவலின் பெரிய ப்ளஸ். தொடர்ந்து பல நாவல்கள் எழுதி முக்கியமான நாவலாசிரியராக வர சகல சாத்தியங்களை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. சரவணன் சந்திரனுக்கு வாழ்த்துகள்.
 
தமிழ் மகன் இந்நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள, சினிமாவில் நாயகர்கள் எடுத்துக்கொண்ட வில்லன்களின் உடைமைகள் பற்றிய குறிப்பு சுவாரஸ்யம்.
 
ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன், உயிர்மை பதிப்பகம்.
Share