Tag Archive for பாஞ்சாலி

துகிலுரிதல்

எனக்கு அப்போது 13 வயது இருக்கலாம். மதுரையில் அழகரடியில் ஒரு சின்ன வீட்டில் இருந்தோம். வீட்டில் டிவி கிடையாது. எங்கள் காம்பவுண்ட்டில் இருந்த சந்திராக்கா வீட்டில் மட்டுமே டிவி உண்டு. அவர்களின் சௌகரியத்தைப் பற்றியெல்லாம் என்றுமே யோசித்ததில்லை. சனிக்கிழமை தூர்தர்ஷனில் வரும் ஹிந்திப் படங்களிலிருந்து ஞாயிறு வரும் கார்ட்டூன் வரை முக்கியமற்ற நிகழ்ச்சிகளைக்கூட அவர்கள் வீட்டில்தான் பார்ப்போம். அவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி பிடிக்காது என்பதே கிடையாது. அவர்கள் எதைப் பார்க்காமல் இருக்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவெடுத்தால்தான் உண்டு. தண்ணீர் பிடிக்கும்போது அவர்களோடு குடுமிப்பிடி சண்டை நடக்கும்; ஒரு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, தன்மானம் விட்டு அவர்கள் வீட்டுக்குச் சென்று டிவி பார்க்க வைத்துவிடும். அதெல்லாம் பொற்காலம்தான், சந்தேகமே இல்லை.

அப்போதுதான் சோப்ராவின் மகாபாரதம் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. ஞாயிறன்று காலையிலேயே தினமலரை வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துவிடுவோம். ஹிந்தியில் ஆயுஷ்மான் பவ என்பதைத் தவிர ஒன்றும் புரியாது. நாங்கள் நண்பர்கள் கிண்டலாக தோ புத்ர பவ என்று சொல்லிக்கொள்வோம். அவ்வளவுதான் எங்கள் ஹிந்தி. பாஞ்சாலியின் துகிலை உரியும் காட்சி அன்று. 13 வயதுக்கேயான குறுகுறுப்புடன் டிவி பெட்டி முன்பு உட்கார்ந்திருந்தேன். சுற்றி பொன்னம்மாக்கா, ஈஸ்வரியக்கா, நாகரத்னமக்கா என பெரியதும் சிறியதுமாக ஏகப்பட்ட அக்காக்கள் கூட்டம். என் தாத்தா, பாட்டி, அம்மா, அக்கா எனப் பெரிய கும்பலே அந்த 100 சதுர அடி வீட்டில் குழுமி இருந்தது. இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ஹிந்தித் தொடரைப் பார்க்க அன்று எப்படியும் 25 பேர் இருந்திருப்போம்.

துகிலுரியும் காட்சி என் வயதில் நான் எதிர்பார்த்ததைப் போல இல்லை. எங்கள் வயதொத்தவர்களெல்லாம் நமட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டோம். சிரிப்புடன் எங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தேன். அத்தனை அக்காக்கள் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து நின்றது. என்னால் நம்பவே முடியவில்லை. மெல்ல என் தாத்தாவைப் பார்த்தேன். இரும்பு மனிதர் அவர். அவரது கண்களும் சற்றுக் கலங்கி இருந்தது. நான் என்னைப் பற்றியே கேவலம் கொண்டேன். ஆனால் எனக்கு எவ்வித கண்ணீரும் எத்தனை முயன்றும் துளிர்க்கவில்லை. பாஞ்சாலியை என் தாயாகவோ என் தங்கையாகவோ யாராகவுமோ என்னால் அன்று யோசிக்கவே முடியவில்லை. ஆனால் அன்று அதனைப் பார்த்த அத்தனை நாற்பது வயதுக்காரர்களின் முகபாவங்களும் இன்னும் என் கண்முன்னே அப்படியே நிற்கிறது.

ஹரிகிருஷ்ணன் (இனி ஹரியண்ணா) எழுதி கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது – பாரதியாரின் பாஞ்சாலி சபதம்: விளக்கவுரையுடன். ஹரியண்ணா இதை பத்து வருடங்களுக்கு முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் எழுதினார். வழக்கம்போல எங்களது உற்சாகமின்மை காரணமாக பாதியில் நின்றது. ஒருநாள் அத்தனை பேரும் திடீர் உற்சாகம் கொள்ள மீண்டும் தொடங்கியது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் மீண்டும் தடைப்பட்டது. அப்போதே அதைப் புத்தகமாகக் கொண்டுவரவேண்டும் என்று நானும் ஆசிஃப்பும் பேசிக்கொண்டோம். நான் அப்போது துபாயில் இருந்தேன்.

இப்போது ஹரியண்ணாவுடன் வேறு என்னவோ பேசப்போக, பேச்சு இப்பக்கம் திரும்பியது. அவர் மீதமிருக்கும் பகுதிகளை முடித்துக்கொண்டு வர ஒப்புக்கொண்டு உடனே அதைச் செய்தும்கொடுத்தார். கிழக்கு பதிப்பகம் சார்பாக வருவதால், அதை நானே ப்ரூஃப் பார்க்க எடுத்துக்கொண்டேன் – வேறு யாரையும் எடுக்கவிடாமல் நானே ஓடிப்போய் கிட்டத்தட்டப் பிடுங்கிக்கொண்டேன். 🙂

வியாசரின் காலம்கடந்து நிற்கும் காவியத்தன்மையை அதே தரத்துடன், சில இடங்களில் விஞ்சியும் பாரதி படைத்திருக்கிறான். சந்தேகமின்றி மஹாகவி அவன். அதனை மிக அழகாக விளக்கியிருக்கிறார் ஹரியண்ணா. மேற்கொண்டு பலவற்றை அவரே முன்னுரையில் சொல்லுவார். முன்னுரை வரவும் பகிர்ந்துகொள்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், ஹரியண்ணாவின் இந்த விளக்கவுரை காலம் கடந்து நிறகப்போகும் ஒரு படைப்பு. புரியும் படிச் சொன்னால் – சான்ஸே இல்லை.

முழுக்கப் படித்தபோது பாரதியார் துகிலுரிதலைப் பற்றி எழுதும் காட்சிகளில் என்னையறியாமல் ஒரு புளகமும், கண்களில் கண்ணீர் துளிர்ப்பும் ஏற்பட்டன. என்னைச் சுற்றி நின்ற பொன்னம்மாக்காக்கள் நினைவுக்கு வந்தார்கள். என் தாத்தா நினைவுக்கு வந்தார். நான் இன்று பாஞ்சாலியை யாராக நினைக்கிறேன்? அக்காவாகவா? மனைவியாகவா? மகளாகவா? தெரியவில்லை. ஆனால் கண்ணீர் துளிர்த்தது உண்மை.

எனக்கு 7 வயது ஆகும்போது சேரன்மகாதேவியில் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதன் முதல் ஆண்டுவிழாவில் திரௌபதி வேடம் போட்டு நடித்த ஐந்து வயதுப் பெண் நினைவுக்கு வந்தாள். அன்று அவள் நடித்ததை அந்த ஊரே பேசியது. இதற்கெல்லாம் பின்னால் உள்ள அந்த வியாசனை நினைத்துக்கொண்டேன். என் கண்ணிலும் நீர் வர வைத்த பாரதியாரை நினைத்துக்கொண்டேன். இதைப் படிக்கும் ஒரு வாய்ப்பு தந்த அந்த இறையையும் ஹரியண்ணாவையும் நினைத்துக்கொண்டேன். அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்.

Share