Tag Archive for பிரணாப்

தூக்கு

பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கடும் எரிச்சலாக இருந்தது. ஒரு காங்கிரஸ் ஜால்ரா என்பதாகவே என் மனப்பதிவு இருந்தது. ஆனால் கசாப், அப்சல் தூக்கு வரிசையாக நிறைவேற்றப்பட்டபோது ஆச்சரியமாகவே இருந்தது. உண்மையில் பாஜக அரசு அமைந்திருந்தால்கூட இத்தனை உறுதியாகச் செயல்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பேரும் இஸ்லாமியர்கள் என்பதால், ஒருவேளை பாஜக ஆட்சியில் இருந்து இந்தத் தூக்குகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், முற்போக்காளர்கள் இன்னும் கடும் வீச்சில் செயலாற்றியிருப்பார்கள்.

இரண்டு தூக்குமே சரியான காரணங்களுக்காக நிறைவேற்றப் பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையையும் நிறுத்தவேண்டும் என்ற வாதம் வலுப்பெற்று வருகிறது. இதை நான் ஏற்கவில்லை. கடவுள் தந்த உயிரை மனிதன் பறிக்கக்கூடாது என்பதில் இருந்து, காட்டுமிராண்டித்தனம் என்பது வரையிலான காரணங்கள். இவற்றையெல்லாம் மீறி ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை தரப்படுகிறதென்றால் அக்குற்றம் எத்தகையதாக இருந்திருக்கவேண்டும் என்றே பார்க்க நினைக்கிறேன். அஹிம்சையை போதித்த காந்தியைக் கொன்றவர்களுக்கு எப்படி தூக்குத் தரலாம் என்பதற்கான பதிலாக, காந்தி கொலை வழக்குத் தீர்ப்பில் சொல்லப்பட்ட பதில், காந்தி போன்ற அஹிம்சாவாதியைக் கூட ஒருவன் கொன்றுவிட்டு தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே கோட்ஸேவுக்கு மரணதண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தாராம். (எனது இந்தியா புத்தகத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார், விகடன் வெளியீடு.)

கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தூக்குத் தண்டனைகளைவிட, கடந்த இரண்டு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனைகள் இரண்டு மடங்கு என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது கடந்த இரண்டு மாதங்களில் 2 பேரைத் தூக்கிலிட்டதை இப்படிக் குறிக்கிறார்கள். மிக வசதியாக, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களைப் பற்றி இவர்கள் பேசுவதில்லை. அதேபோல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்பு, இறந்தவரின் கடைசிகால நிமிடங்களை விவரிப்பது, அவர்களது குடும்பம் படும் வேதனைகளைச் சொல்லி அனுதாபம் தேடுவது என்பதும் நிகழ்கிறது. எந்த ஒரு மனிதனின் சாவும் கொடுமையானதே. ஆனால் இவர்கள் தாங்கள் பிற மக்களைக் கொன்று குவிக்கும்போது, அவர்களின் கடைசி நிமிடங்களையோ அவர்களது குடும்பத்தின் கதறல்களையோ யோசிப்பதில்லை. இவர்களுக்கு இன்று வக்காலத்து வாங்குபவர்களும் அவர்களைப் பற்றிப் பேசுவதில்லை. தீவிரவாதத்தை பல காரணங்களுக்காக ஆதரிக்க நினைப்பவர்களின் எளிமையான முகமூடியே இந்த அனுதாபம். எனவே அதையும் நான் ஏற்கவில்லை.

எந்த எந்தக் குற்றங்களுக்குத் தூக்குத் தணடனை தரலாம், தரவேண்டாம் என எனக்கென ஒரு தனி மனப்பதிவு உள்ளது. இந்தியாவை அதிரவைக்கும் ராஜதுரோக குற்றங்கள் (கசாப், அப்சல்) கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிப்பது (சீக்கிய, இஸ்லாமிய, ஹிந்து மக்கள் கொல்லப்படுவதுபோன்ற குற்றங்கள்) ஒரு குறிப்பிட்ட இனத்தைக் கொன்றொழிப்பது (ராஜபக்ஷே) போன்றவற்றுக்குத் தூக்குத் தண்டனைதான் சரியான தண்டனை என்பது என் நிலைப்பாடு. இது ஒரு நீதிபதியின் கண்ணோட்டத்தில் எப்படி சாத்தியமாகிறது என்பது பெரிய விஷயம் என்பதும், என் சிந்தனை திண்ணைப் பேச்சு மாதிரி இருக்கிறது என்பதும் எனக்கே புரிகிறது. Issue based என்பதாகத்தான் இதுவரை தூக்குத் தண்டனை இருந்து வந்திருக்கிறது. அதுவும் சரியாகவே இன்றுவரை இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது.

perarivaalan-murugan-santhan

தூக்குத் தண்டனையைப் பொருத்தவரை, குற்றத்தின் தண்டனை, அது நிகழ்ந்த காலம், அக்குற்றத்தின் இன்றைய தீவிரம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம். குற்றத்தின் இன்றைய தீவிரம் என்பதை மையப்படுத்தும்போதுதான் வீரப்பன் சகா நால்வருக்கும், ராஜிவ் கொலையில் காத்திருக்கும் மூவருக்கும் தூக்குத் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

வீரப்பன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்காதவை. எத்தனையோ பொதுமக்கள், போலிஸ் அதிகாரிகளைக் கொன்று குவித்துள்ளார். ஆனால் 2004ல் வீரப்பன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இன்று வீரப்பன் சகாக்களுக்குத் தூக்குத் தரப்படுவது எந்த விதத்தில் சரியான தீர்ப்பாக இருக்கப்போகிறது என்பது புரியவில்லை. நீதிமன்றம் தூக்கு என்று அறிவித்த வரையிலும் சரி. ஆனால் பிரணாப் கருணை மனுவை ஏற்றுக்கொண்டிருக்கலாம் – அக்குற்றம் இன்றைய நிலையில் எவ்வித பின்விளைவையும் ஏற்படுத்தாது என்ற நிலையை அடைந்துவிட்டதைக் கருத்தில் கொண்டு. வீரப்பனை தமிழ்த்தியாகியாக உருவகித்து, அவரது சகாக்களைப் பாதுகாக்க சிலர் முனைகிறார்கள். வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கர்நாடகா வாலாட்டுமா என்று பொறுப்பட்டுப் பலர் பேசுகிறார்கள். தமிழர் நிலைப்பாட்டை முன்வைத்து வீரப்பன் சகாக்களைக் காக்க முயல்கிறார்கள். இது எதுவுமே சரியானதல்ல. ஆனாலும் இந்நிலையிலும் வீரப்பன் சகாக்களுக்கு தூக்குத் தேவையல்ல என்பதே என் நிலைப்பாடு.

ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்குத் தரப்பட்டிருக்கும் தூக்குத் தொடர்பாக என் நிலைப்பாடும் இதுவே. புலிகள் இன்று வேரறுக்கப்பட்டுவிட்ட நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், இந்த மூவருக்குத் தூக்கு என்ன சாதிக்கப்போகிறது? பிரபாகரனோ வீரப்பனோ உயிருடன் இருந்து அவர்களது பயங்கரவாதமும் நடைமுறையில் இருக்குமானால் நாம் வேறு மாதிரியாகச் சிந்திக்கவேண்டியிருக்கும். இப்போது அச்சூழல் இல்லை. (ராஜிவ் கொலைவழக்கில் தூக்குக்குக் காத்திருக்கும் மூவரும் குற்றமிழைக்காதவர்கள், எனவே விடுதலை செய்யப்படவேண்டும் என்ற வாதத்தை ஏற்கவில்லை. உண்மையில் இந்த வாதம்தான் அவர்களுக்கு எதிராகத் திரும்பும் என்று தோன்றுகிறது. குற்றமிழைத்தவர்கள் என்றாலும், இன்றைய நிலையில் தூக்கு தேவையில்லை, ஆயுள் தண்டனை போன்றவற்றைப் பரிசீலிக்கக் கோருவதே பொது மக்களின் ஆதரவைப் பெற்றுத் தரும் என்பதோடு சரியானதாகவும் இருக்கும்.)

ஒருவேளை நால்வருக்கும் மூவருக்கும் தூக்கு நிறைவேற்றப்பட்டால், கசாப் அப்சலோடு சேர்த்து 9 தூக்குகள். பிராணப்பை நினைத்தால் கொஞ்சம் கலவரமாகவே இருக்கிறது. வீரப்பன் சகாக்களுக்கு இன்று தூக்கு நிறைவேற்றப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. அப்படி நினைவேற்றப்பட்டால், இந்தியாவின் உலக முகம் தொடரும் தூக்குகளால் நிர்ணயிக்கப்படுமோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது. அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே தூக்கு, அதிலும் கடைசிவரை கருணை மனு செய்யும் வாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருக்கும் ஒரு ஜனநாயக நாட்டுக்கு இம்முகம் ஏற்புடையதல்ல. தேவையற்ற தூக்குகளை நிறுத்தி, மிக அரிதான வழக்குகளுக்கு தூக்கு வழங்குவதே சரியானது.

வெறும் நியாயங்களோடு எல்லாம் முடிவடைந்துவிடவில்லை என்பதற்காகத்தான் கருணையின் வழியே முடிவைத் தீர்மானிக்கும் வசதியை உலகநாடுகள் வைத்திருக்கின்றன என்பதை நாம் நினைத்துக்கொள்ளவேண்டும்.

Share