Tag Archive for வாய்ப்பரசியல்

ஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும்

ஜீவா திரைப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். கிரிக்கெட் அரசியல் பற்றிய திரைப்படம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் திறமை இருந்தும் மற்ற சாதிக்காரர்களுக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்காததை அழுத்தமாகச் சொல்லும் படம். இது முக்கியமான விஷயமே. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஆடிய 16 பேர்களில் 14 பேர் பிராமணர்கள் என்பது தற்செயல் அல்ல. நிச்சயம் பின்னணி ஏதோ உள்ளது. அதைத் தெளிவாகக் காட்டிய வகையில், அதுவும் நெஞ்சைப் பிசையும் வகையில் காட்டியதால் மிக ஆழமாகவே இக்கேள்வி மனத்தில் பதிகிறது. 

முக்கியமான விஷயத்தைவிட்டு காதல் என்று சுற்றுவதற்கே பாதிப் படம் போய்விடுகிறது. நான் திரைப்பட விமர்சனமாக இதை எழுதவில்லை என்பதால் இந்த திரைப்பட கோணல்களையெல்லாம் விட்டுவிட்டு, அரசியலுக்குப் போகிறேன். படம் நெடுகிலும் மிகத் தெளிவான கிறித்துவப் பின்னணியை வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர், அந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர். ஹிந்துக் குழந்தை கிட்டத்தட்ட கிறித்துவனாகவே வளர்கிறது. எந்த அளவுக்கு? ஹிந்துப் பையனின் காதல் வெளியே தெரியவரும்போது பாதிரியார் கூப்பிட்டுப் பேசுகிறார். ஒரு ஹிந்துப் பையன் கிறித்துவ குடும்பத்தோடு பழகினாலே அவன் கிறித்துவன், எனவே நாம் ஒரு கிறித்துவக் குடும்பத்தை விசாரிப்பதைப் போலவே விசாரிக்கலாம் என்ற அளவுக்கு ஒரு பாதிரியாரும், அவன் கிறித்துவனே என்று ஒரு கிறித்துவ தம்பதி பெற்றோரும் நம்பும் அளவுக்கு! 

சீனியர் சூரி கிறித்துவர். கோச் கிறித்துவர். பக்கத்துவீட்டுக்கு வந்து சேரும் பின்னாள் காதலி கிறித்துவர்! பிராமணர்களுக்கு மட்டும் இடம் கிடைப்பது எப்படி தற்செயலல்ல என்று இயக்குநர் நம்புகிறாரோ, அதேபோல் சுசீந்திரனின் இந்த பின்னணித் திணிப்பு தற்செயலானதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலும் வெகுவான கிறித்துவ பின்னணி. கிறித்துவ பின்னணி வருவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. (நீர்ப்பறவை ஆழமான கிறித்துவப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆனால் அதில் அரசியல் இல்லை. நிஜமான பதிவு மட்டுமே இருந்தது.) ஆனால் தொடர்ந்து இயக்குநர் ஒருவரின் படத்தில் இப்படி வருமானால் அதை தற்செயல் என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?

அதிலும் ஒரு காட்சி வருகிறது. காதலுக்காக இரண்டு நிபந்தனைகள். ஒன்று, ஹீரோ மதம் மாறவேண்டும். இரண்டாவது, கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டும். அப்போது ஹீரோ சொல்கிறார், மதம் மாறுவது ஒரு பிரச்சினையில்லை. அதாவது வாயசைப்பில் இப்படி வருகிறது. டப்பிங்கில் மாற்றி இருக்கிறார்கள், மதம் மாறுவதை அப்புறம் பார்த்துக்கலாம் என்பது போல. ஸ்கிரிப்ட்டில் மிகத் தெளிவாகவே இயக்குநர் மதம் மாறுவது பிரச்சினையில்லை என்றே எழுதியிருக்கிறார். (பார்க்க: கடைசியில் உள்ள 11 நொடி வீடியோ.) கல்யாணத்துக்காக மதம் மாறுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள இயக்குநர் இப்படி சிந்திப்பாரென்றால், பிராமண ஆதரவுக் குழுக்கள் வேறெப்படி சிந்திக்கவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார்? இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை! ஏனென்றால் இயக்குநருக்கு அது பற்றிய அக்கறை இல்லை.

ஆனால் இன்னொன்றில் அக்கறை உள்ளது. அபிராமணர்கள் என்ன சாதி என்று சொல்லக்கூடாது என்பதில் அக்கறை இருந்திருக்கிறது. நல்லது. போகட்டும். ஜீவாவின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கும் கதாபாத்திரம் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. தமிழகத்தில் இருந்து உருவான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் பெரும்பான்மை பிராமணர்கள் என்று தெரிந்துகொண்ட சுசீந்திரனுக்கு, இந்திய அளவில் தன் செல்வாக்கு மூலம் இன்னொருவனுக்கு வாய்ப்புத் தர முடியக்கூடிய ஒரு கிரிக்கெட்காரர் ஹிந்துவாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்திய அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமிய ஆட்டக்காரர்கள் எத்தனை பேர், அவர்களில் அத்தனை செல்வாக்குப் பெற்று, ரஞ்சி டிராஃபியில்கூட விளையாடியிருக்காத ஒருத்தனுக்கு ஐபிஎல் (படத்தில் சிபிஎல்) குழுவில் இடம்வாங்கித்தரும் அளவுக்கு உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் என்று ஒருவரைக் காட்டமுடியுமா? பிராமணர்களைச் சொல்லும்போது தரவோடு வருகிறவர், ஹிந்துக்களைப் புறக்கணிக்க எந்தத் தரவோடும் வருவதில்லை. இது புதியதல்ல. ஏற்கெனவே நன்கு போடப்பட்ட பாதை. அதிலே சுசீந்திரனும் மிக இலகுவாகச் செல்கிறார்.

குறைந்தபட்சம், இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலான தீவிரவாதம் பற்றியும் அதில் அதிகமான இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றியும் சுசீந்திரன் படம் எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் கிறித்துவர்களை நல்லவர்களாக வைத்ததுபோல் புதிய படத்தில் ஹிந்துக்களை அப்பாவி நல்லவர்களாக வைக்கவேண்டியதில்லை. இந்திய அப்பாவி பொதுஜன முஸ்லிம்களை நல்லவர்களாக வைக்கட்டும். உண்மையும் அதுதான், எனவே யதார்த்தமாகவும் இருக்கும். இப்படி வைத்தாவது அவரால் ஒரு படத்தை இயக்கிவிட முடியுமா என்ன? முடியும். செய்யட்டும். செய்யவேண்டும்.

இதை ஒட்டி வேறு சில வாய்ப்பரசியலைப் பார்க்கவேண்டும். திறமை இருந்தும் புறக்கணிப்படுகிற பிராமணர்களின் குமுறலைப் படமாக்கினால் அதுவே அந்த இயக்குநருக்குக் கடைசிப் படமாக இருக்கலாம். இடஒதுக்கீட்டில் கைவைக்கும் திரைப்படம் ஒன்றை எடுப்பது சாதாரணமானதல்ல. எதிர்ப்புக் கூட்டம் போட்டே சாகடித்துவிடுவார்கள். ஆனால் பிராமணர்களைத் திட்டி, ஹிந்துக்களைத் திட்டி படம் எடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான லாபம்கூட இருக்கலாம்! இதை எந்த ஒரு இடத்திலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஹிந்துத்துவ ஆதரவுத் திரைப்படம், அதிலும் கலை ரீதியாக மேம்பட்ட படம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்துத்துவப் படமே வராது, சரி, ஜஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ். அதைப் பாராட்டி ஒரு கட்டுரையை நீங்கள் எங்கேயும் பார்த்துவிடமுடியாது. எந்த இதழும் வெளியிடாது. ஒருவேளை நீங்கள் எழுதினால், கட்டுரையோடு அந்தப் பத்திரிகை உங்களையும் நிராகரிக்கும் அந்தப் படத்துக்கு எதிர்க்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.

ஏதேனும் ஒரு படம் வந்தால், ஒரே பத்திரிகையில் அதே படத்தை ஐந்து விதமாக விமர்சிப்பார்கள். ஐந்து விமர்சனங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். ஒரு பொது அடித்தளத்தைப் பெற்றிருக்கும். இந்த அடித்தள சமரசத்துக்குட்பட்டே நீங்கள் அந்தப் பத்திரிகையில் எழுத முடியும். சமரசமே இல்லாமல் கட்டுரை எழுதுவது என்று அந்த எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் குறைந்தபட்ச சமரசம் என்பது உங்கள் கொள்கையாக இருந்தால்மட்டுமே நீங்கள் அங்கே எழுதமுடியும். அடித்தளம் மறைந்திருக்கும், அது ஒன்றேயானது. மேலே கட்டுமானங்கள் மட்டும் விதம்விதமாக.

இது ஹிந்த்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிற இதழுக்கும் பொருந்தும். ஆனால் ஹிந்துத்துவ இதழ் இங்கே நடுநிலை இதழ் இல்லை. மற்றவை நடுநிலை இதழ்கள். சமரசமற்ற இதழ்கள். இதுவே முக்கியமான வேறுபாடு.

ஒரு ஐயாயிரம் பிரதி விற்க கஷ்டப்படும் இதழில் எழுதக்கூட இத்தனை வாய்ப்பரசியல் என்றால், கோடிகள் புரளும் விளையாட்டும் வாய்ப்பரசியல் இருக்காது என்று நம்ப யாருமே முட்டாளல்ல. ஆனால் வாய்ப்பரசியலை ஹிந்துக்களையும் பிராமணர்களையும் விமர்சிக்கப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சுசீந்திரனும் புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் அவரது படங்கள் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.


வாயசைப்பையும் டப்பிங்கையும் கூர்ந்து நோக்க.

Share