Tag Archive for வாஸவேச்வரம்

வாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்

 

வாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு? தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.

கிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.

40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது.  பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள்? கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.

கதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.

புராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே. 

ஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.

நாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது. 

மிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.

வாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html

Share