Tag Archive for விடுதலைப் புலிகள்

ஒரு கூர்வாளின் நிழலில்

சமீபத்தில் மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் கூர்வாளின் நிழலில். பதினெட்டு ஆண்டுகள் புலிகள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்த ஒரு போராளியான தமிழினியின் தன்வரலாற்று நூல் இது. தொடக்கத்தில் புலிகள் இயக்கத்தின்பால் தான் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதையும் புலிகள் இயக்கத்தில் தன் வளர்ச்சியைப் பற்றியும் அதில் தனக்கும் தன் இயக்கத்தவர்களுக்கும் உள்ள சவால்கள், உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றியும் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து புலிகள் இயக்கம் எவ்வாறு வீழ்ச்சிப் பாதைக்குச் சென்றது என்பதையும் விரிவாக விவரித்துள்ளார் தமிழினி. இப்பகுதியில் புலிகளின் மீதான தீவிரமான விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. போரில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு தான் சரணடைந்ததையும் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையானதையும் கடைசியில் சொல்கிறார்.

புலிகளைப் பற்றிப் பல குற்றசாட்டுகளைச் சொல்லி வந்தவர்களுக்கு இப்புத்தகம் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. புலிகளைப் பற்றி பல்வேறு அமைப்புகளாலும் மனிதர்களாலும் சொல்லப்பட்ட குற்றங்களுக்கு நேரடி சாட்சியமாக தமிழினி இருந்துள்ளார். அவற்றைப் பதிவு செய்துள்ளார்.

ஒருவரை ஒழித்துக்கட்டவேண்டுமென்றால் புலிகள் செய்வது மூன்று விஷயங்களை. அதாவது,

“தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார்”

என்பவையே ஆகும். தமிழினி இதைச் சொல்வது, மாத்தையாவின் விவகாரத்தை ஒட்டியே என்றாலும் ஓர் இந்தியனாக எனக்கு இந்திய அமைதிப்படையின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நினைவுக்கு வந்தன. மாத்தையா விவகாரம் பற்றி RAW வை மையமாக வைத்துப் புலிகள் கட்டிவிட்ட கதையையும் விவரிக்கிறார் தமிழினி.

“தலைவர் மேலிருந்த பக்தி விசுவாசத்தால் துரோகியான மாத்தையாவைக் கிருபன் அழித்ததாக நம்பும் போராளிகள் கிருபனையே தலைவராக ஏற்றுக்கொண்டு அவரின் கீழ் செயற்படுவதற்கு முன்வருவார்கள் என்பதுதான் ‘றோ’வின் உண்மையான திட்டம் எனவும் கூறப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘றோ’வின் கைப்பொம்மையாக்குவதற்குப் போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.”

இயக்கத்தில் நிலவிய தனிமனித வழிபாட்டைப் பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார்.

“அண்ணை சொல்லுறார், செய்யத்தானே வேணும்”, “எல்லாத்திற்கும் அண்ணை ஒரு திட்டம் வைத்திருப்பார்” என்பவையாகவே இருந்தன. இதனைப் பலரும் தனிமனித வழிபாடு எனக் குறை கூறினார்கள். உண்மையும் அதுதான்.”

இயக்கத்தின் தோல்விக்கு தமிழினி சொல்லும் மிக முக்கியப் பிரச்சினை வரி விதிப்பு தொடர்பானது. நீண்ட காலப் போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் தாங்கள் சுரண்டப்படுவதாக நினைத்தார்கள் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.

புலிகளின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, இயக்கத்தில் சேர விருப்பம் இல்லாதவர்களைக் கூட, வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்வது. இதையும் தமிழினி உறுதி செய்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரபாகரன் முன்னிருந்த கேள்வி, மக்களைப் பாதுகாப்பதா அல்லது கோடானகோடி பணத்தைச் செலவு செய்து சேர்த்திருந்த ஆயுதங்களைப் பாதுகாப்பதா என்று சுருங்கிப் போனது

என்று இந்நூலில் தமிழினி சொல்கிறார்.

மகிந்த ராஜபக்ஷே வெல்லவேண்டும் என்பதே புலிகள் இயக்கத்தின் விருப்பமாக இருந்தது என்பதை உறுதி செய்கிறார் தமிழினி. அதற்கான காரணம், புலிகள் தாங்கள் வென்றுவிடுவோம் என்று நம்பியதுதான். ஆனால் வரலாற்றில் நிகழ்ந்தது என்னவோ புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டதுதான்.

“மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும், இப்பிடி இவங்களோட பேச்சு வார்த்தையெண்டு இழுபட்டுக் கொண்டிருக்கிறதுக்கு சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்; அதுக்கு சரியான ஆள் இவர்தான்”

என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டதை பதிவு செய்திருக்கிறார்.

போரில் தப்பித்தால் போதும் என மக்கள் ராணுவத்திடம் தஞ்சமடையப் போகும்போது புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை இக்குறிப்பில் பார்க்கலாம்.

“சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது. அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது. இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’ எண்டு சொல்லிக் குழம்புதுகள். உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது” என்று புலம்பினார்.

சகோதர இயக்கத்தவர்களைக் கொன்றவர்களின் பரிணாம வளர்ச்சி, தன் சொல் கேட்காத தன் மக்களையே சுடுவதில் வந்து நின்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னொரு குறிப்பும் முக்கியமானது.

“மக்கள் மத்தியில் தமது குடும்பங்களுடன் கலந்திருந்த அவர்கள் மீண்டும் இயக்கத்தின் செயற்பாடுகளுடன் வந்து இணைந்துகொள்ளாது விட்டால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியான ஓரிரு சம்பவங்கள் கடற்புலிப் போராளிகள் மத்தியில் நடந்தன.”

இந்நூலை எழுதியது ஒரு பெண் என்பதால், பல வரிகள் பெண்களுக்கே உரிய பிரச்சினைகள் பற்றி எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர்களது எதிர்காலம் பற்றிய தமிழினியின் சிந்தனைகள் மிக முக்கியமானவை. திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க புலிகள் இயக்கம் முடிவெடுத்தபோது, உயர் பதவியில் இருக்கும் வயதான போராளிகள் கூட, கையிழந்த கால் இழந்த பெண் போராளிகளை மணந்துகொள்ள முன்வரவில்லை என்பதைப் படிக்கும்போது ஏமாற்றமாகவே இருந்தது.

பெண் போராளிகளுக்குத் தரப்படும் பயிற்சிகள் பற்றிய தமிழினியின் ஒரு குறிப்பு:

குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்திற்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிலுநர்கள் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத் தவறான முன்னுதாரணங்களாகவே இருந்தன.” 

இப்படிச் சொல்லும் தமிழினி ஒன்றைச் சொல்கிறார், இறுதிகட்டப் போரில் தப்பிச் செல்ல முடிவெடுக்கும் தலைவர்கள் குழுவில் ஒரு பெண் போராளி கூட இல்லை என்கிறார்.

அதேபோல் புலிகள் மீதான இன்னுமொரு முக்கியக் குற்றச்சாட்டு, இதே நோக்கத்தோடு போராடிய ஏனைய சகோதர இயக்கங்களைக் கொன்றொழித்தது. அது பற்றியும் இந்நூல் பல விஷயங்களைப் பதிவு செய்கிறது.

“ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.”

இன்னொரு இடத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் கதறல் இப்படி இருந்திருக்கிறது.

“எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே கொன்னு போட்டுதே” என்று அவர்கள் கதறினார்கள்.”

பாலியல் தொடர்பான விஷயங்களில் கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் முகம் சுளிக்க வைக்கின்றன. திருமணத்திற்கு முன்னதாக அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது என்று குறிப்பிடுகிறார் தமிழினி.

“அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் இயக்கத்தைச் சாராத ஆண்களுடன் பாலியல் தொடர்புகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றத்திற்காகவே இயக்கத்தின் ஒழுக்க நடைமுறைகளுக்கமைவாக அவர்களுக்கு அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் செயலோடு தொடர்பு கொண்டிருந்த ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.”

புலிகளைப் பற்றி இங்குப் பரப்படும் ஏகப்பட்ட பிம்பங்களுக்கு இந்நூல் கடும் எதிர்க்கருத்தை நேரடி சாட்சியமாக முன்வைக்கிறது. எல்லாத் தீவிரவாதத் தரப்பைப் போலவே புலிகள் தரப்பும் பல்வேறு படுகொலைகளைச் செய்திருக்கிறது. போட்டியில் வெல்ல சகோதர இயக்கங்களைக் கொன்று குவித்திருக்கிறது. உதவி அளித்த நாட்டின் முக்கியமான தலைவரைக் கொன்றிருக்கிறது. அவரோடு சேர்ந்து அப்பாவி மக்கள் உருத்தெரியாமல் சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடு என்ற பெயரில் பல்வேறு உரிமைகள் போராளிகளுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. விருப்பமே இல்லாதவர்களும் புலிகள் இயக்கத்தில் சேரக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் சொல்வதாக தமிழினி சொல்லியிருக்கும் இவ்வரிகளே புலிகளை சரியாக விளங்கிக் கொள்ளப் போதுமானவை:

“புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை. நாங்கள் ஒரு படுகொலைப் பட்டியலைக் கொடுத்தால் அவர்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைப் பட்டியலுடன் வருவார்கள். ஆகவே இப்படியான விடயங்களைக் கிண்டிக் கிளறுவது இரண்டு தரப்புக்கும் பிரச்சனையான விடயமாகத்தான்.”

தமிழினின் இந்த வரிகளைப் பாருங்கள். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துக்கான பதில் இதில் உள்ளது.

ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்துப் போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எனக்கு உணர்த்தின.

 நான் யாழ்ப்பாணம் சென்று வந்ததைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இங்கே உள்ளன. (http://idlyvadai.blogspot.in/2010/09/1.html, http://idlyvadai.blogspot.in/2010/09/2.html, http://idlyvadai.blogspot.in/2010/09/1.html) அங்கே நாங்கள் சந்தித்த நண்பர் சொன்னதும் தமிழினி சொன்னதும் எப்படி ஒத்துப் போகிறது என்பதைப் பாருங்கள். ஆனால் புலிகளின் பேரைச் சொல்லி தங்கள் இருப்பை நிலைநிறுத்த விரும்புகிறவர்கள் அன்று நான் எழுதியபோது கடும் வசைகளையே பதில்களாகத் தந்தார்கள். இன்று ஒரு புத்தகமே மிக முக்கியமான ஒரு பதிப்பகத்தால் (காலச்சுவடு) வெளியிடப்பட்டிருக்கிறது. புலிகள் பேரைச் சொல்லி தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இப்புத்தகத்தையும் பல காரணங்களைச் சொல்லி மறுக்கக்கூடும். ஆனால் உண்மைகள் என்னவோ தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டேதான் இருக்கும்.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000025292.html

இ புத்தகமாங்க வாங்க: கூகிள் ப்ளே

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share