Tag Archive for MLWA

பள்ளியைக் காப்பாற்றுவோம்

ஒரு பெரிய சிறையிலிருந்து விடுபட்ட பறவையைப் போல MLWA பள்ளிக்குள் புகுந்தேன் என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. அதற்கு முன்புவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியை ஒரு சிறையைப் போலவே உணர்ந்தேன். ஒரு போலிஸுக்கும் திருடனுக்குமான உறவும் அணுகுமுறையையுமே அதுவரை நான் படித்துக்கொண்டிருந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் காண்பித்தார்கள். அப்பள்ளியைவிட்டு MLWA பள்ளிக்குச் செல்லும்வரை, பள்ளி என்பது சுதந்திரம் மிகுந்த இடம் என்பதுவும், பள்ளியில் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 13 வயதில் 8ம் வகுப்பில் MLWA பள்ளியில் சேர்ந்தபின்புதான் என் பள்ளி நாள்களின் வசந்த காலங்கள் ஆரம்பித்தன.


பள்ளி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லாமல் இருந்தது. முதல் ஒரு மாதத்தை ஒரு சந்தேகத்துடனேதான் கழித்தேன். போக போகத்தான் தெரிந்தது, MLWA பள்ளியில் அதிகம் யாரும் அடிப்பதில்லை என்று. அடிப்பதே இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் அஞ்சி நடுங்கவேண்டிய திருடனின் பயம் அப்பள்ளியில் இல்லை. MLWA என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி தந்த சுதந்திரம் மட்டுமே.

எத்தனை எத்தனை ஆசிரியர்கள். 

கிருஷ்ணன் என்றொரு ஆசிரியர் இருந்தார். சமூக அறிவியல் ஆசிரியர். ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு, ஹாவ் என்று ஏப்பம் விட்டு, கழுத்தை மேலிருந்து கீழாகத் தடவிக்கொண்டு, இந்திய நில அமைப்பைப் பற்றி வேதம் போலச் சொல்வது இன்னும் நினைவில் இருக்கிறது. புவியியலை மனப்பாடம் செய்யாமல், மனக்கண் மூலம் இந்தியாவை நினைவில் நிறுத்திப் படிக்கமுடியும் என்று தெரிந்ததே கிருஷ்ணன் சார் பாடம் எடுத்த விதத்தில்தான். அவர் வரலாற்றைச் சொல்லிக்கொடுத்த விதம் அலாதி. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அவரிடம் படித்திருந்தால் நான் கடந்த கால இந்திய வரலாற்றில் நிபுணன் ஆகியிருப்பேன்.

ஜான் என்றொரு சார். கணிதம் எடுப்பவர். சிலபஸை முடிப்பது, அதை மீண்டும் ரிவைஸ் செய்வது என அவர் செய்த மாயங்கள் என்றென்றும் நினைவில் நிற்கும். அவரைப் போல இன்னொருவர் மேத்ஸ் எடுக்க முடியாது என்றும், அவரே கணிதத்தின் கடைசிப் புள்ளி என்றும் அன்று நாங்கள் நம்பினோம். 

நார்மன் சார் – அன்பைத் தவிர எதுவுமே அறியாதவர். சிரில் மேரி டீச்சர் – அறிவியலை சொல்லித் தர அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. நாங்கள்தான் எதையுமே புரிந்துகொள்ளக்கூடாது என்று விறைப்பாக இருந்தோம். 

லக்ஷ்மணன் ஐயா – இன்று தமிழில் தெரியும் கொஞ்ச நஞ்ச இலக்கணமும் இந்த லக்ஷ்மணன் ஐயா இட்ட பிச்சைதான். அவர் இல்லை என்றால் தமிழில் ஒன்றுமே தெரியாமல் போயிருந்திருக்கும். 

கணேசன் ஐயா – இவர் வகுப்பறைக்குள் வந்தாலே நாங்கள் ஓ வென்று கூவுவோம். கிட்டத்தட்ட ரஜினியின் ஓப்பனிங் எண்ட்ரியை ஒத்தது இது. இவர் மாணவர்கள் மத்தியில் ஒரு ஹீரோ.

தர்மராஜ் சார் – இவர்தான் ஹெச் எம். இவர் வந்து நின்றாலே, பள்ளி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவோம். இவரிடம் அவ்வளவு பயம். 

இந்தப் பள்ளிகளின் நினைவுகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஒட்டுமொத்த நாஸ்டால்ஜியாவுக்குள் சிக்கி வெளியே வர இயலாமல் போய்விடும்.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு என்னை பழைய நண்பர் ஒருவர் அழைத்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நொடி அது. ஆனால் அம்மகிழ்ச்சி ஒரு நொடி மட்டுமே நீடிக்கும் என நினைக்கவில்லை. MLWA பள்ளியை மூடப் போகிறார்கள் என்றார் அவர். 

கஷ்டப்பட்ட ஏழைகள் அதிகம் படிக்கும் பள்ளி. சில வருடங்களுக்கு முன்பாக வேறொரு மேனேஜ்மெண்ட் கையில் போயிருக்கிறது. புதிய நிர்வாகம் என்று அறிகிறேன். பள்ளியை மூடிவிட்டு, நல்ல விலைக்குச் செல்லும் அந்த இடத்தை விற்று, காம்ப்ளக்ஸ் போன்ற ஒன்றைக் கட்டுவது அதன் நோக்கம் போல. இதை செய்துமுடிக்க நிர்வாகம் முதலில் செய்தது, புதிய மாணவர்களின் சேர்க்கையை நிறுத்தியது. இப்படி நிறுத்தியதுமே இப்பள்ளியை மூடப் போகிறார்களாம் என்ற பேச்சு அப்பகுதி முழுவதும் பரவிவிடும். அவர்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது.

நான் MLWAல் படித்தபோது, 1200 பேர் படித்ததாக என் நினைவு சொல்கிறது. ஆண்டு 1990. இப்போது 200 பேர் படிப்பார்களா என்பதுகூடத் தெரியவில்லை. கண்முன்னே இப்படி ஒரு பள்ளி சீரழிக்கப்படுவது கடும் மனவருத்தத்தை அளிக்கிறது. பாரம்பரியம் மிக்க ஒரு பள்ளி, வெறும் லாப நோக்கத்திற்காக இடிக்கப்படுவது ஏனென்று தெரியவில்லை. இப்பள்ளியைச் சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. வெளிப்படையாக அங்கிருக்கும் ஆசிரியர்கள் பேசமுடியாத ஒரு நிலையும் உள்ளது.

தற்போது இப்பள்ளியை மீட்டெடுக்கும் ஒரு முயற்சிக்கு ஓரளவு ஆதரவு கிட்டியுள்ளது. இவர்கள் இப்பள்ளியைக் காப்பாற்றுவார்கள் என்று அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள், அப்பள்ளியில் படித்த என்னைப் போன்ற அலுமினி மாணவர்கள் நம்புகிறார்கள். இது நடக்கவேண்டும்.

ஒரு மேனேஜ்மெண்ட் பள்ளியை இப்படி நினைத்தால் மூடிவிடலாம் என்ற அளவில் மட்டுமே நம் சட்டங்கள் இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கிறது. பள்ளி என்பது வெறும் பள்ளியல்ல என்ற கிளிஷேக்கள் இவர்கள் முன் எடுபடாது என்றாலும், இந்த கிளிஷேக்களைச் சொல்லாமல் சில சமயம் உணர்வுகளைச் சொல்லிவிடமுடிவதில்லை. பள்ளி என்பது வெறும் பள்ளி மட்டுமல்ல. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளி உருவாக்கும் மாணவர்களின் நினைவுகளில் அப்பள்ளி வாழும்தோறும், தொடர்ந்து நல்ல மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு பள்ளி தந்துகொண்டிருக்கும் காலம்தோறும் அது ஒரு சமூகத் தொகுப்பாக மாறுகிறது. இப்படிப்பட்ட பள்ளியை இடிக்க எப்படி புதிய நிர்வாகம் முடிவெடுத்தது என்று தெரியவில்லை. உலகுக்கு அன்பை போதிக்கும் பள்ளியை இடிப்பது, மனிதர்களின் உணர்வுகளைக் கொல்வதற்கும் எனவே மனிதர்களைக் கொல்வதற்கும் ஒப்பானது என்பதை மறந்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

மால்கள் கட்டவும், காம்பளக்ஸ் கட்டவும் பணம் மட்டும் இருந்தால் போதும். எந்த இடத்திலும் கட்டிக்கொள்ளலாம். அல்லது தேவையான இடத்தில் கட்டிக்கொண்டுவிடலாம். ஆனால் ஏற்கெனவே பல ஆண்டுகளாக ஓரிடத்தில் இருக்கும் பள்ளியை இடிப்பது என்பது இத்தனை எளிதானதல்ல. அப்பள்ளியில் படிக்கும் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த கஷ்டப்பட்ட ஏழை மாணவர்கள் எங்கே செல்வார்கள், என்ன ஆவர்கள் என்பதெல்லாம் ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், எப்படி பள்ளியை மூட முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பள்ளியும் ஒரு விற்பனைப் பண்டமே என்னும் அர்ப்பணிப்பற்ற ஒரு கணக்கே இதன் காரணமாக இருக்கவேண்டும்.

கடந்த வாரங்களில் புதிய தலைமுறை இதழில், இப்பள்ளியின் மீட்சி குறித்து வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு, பள்ளியின் மறுகட்டுமானத்துக்கு பலரும் பணம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்தைவிட, அனைவரின் ஆதரவின் மூலம் பள்ளியை இடிக்காமல், மூடாமல் இருக்கச் செய்வதே உடனடி அவசியம். 

இப்பள்ளியை மீட்க அரசு ஆவண செய்யவேண்டும். செய்யும் என்று நம்புகிறேன். 

நண்பர்கள் கவனத்துக்கு – இப்பதிவை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு செல்லுங்கள். ஃபேஸ்புக் மூலமும் டிவிட்டர் மூலமும் பலரைச் சென்றடைந்தால் நல்லது. நீங்கள் செய்யும் உதவிக்கு நன்றி.

தனிப்பட்ட முறையில் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். இப்பள்ளியின் நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆசிரியர்களின் பங்களிப்பு அபரிதமானது. இப்பள்ளியைக் காக்கவேண்டும்.

இப்பள்ளியின் ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/mlwaschoolmadurai

Share