English titles Vs Tamil films

சேரன் தனது அடுத்த படுத்திற்கு “டூரிங் டாக்கீஸ்” என்று பெயர் வைத்திருக்கிறார். சட்டென்று மனதில் நிற்கும் பெயர்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சேரன் துபாய் வந்திருந்தபோது “ஆட்டோகிரா·ப்” என்கிற பெயரை ஏற்கனவே வைத்துவிட்டதாகவும் துபாய் வந்து தூய தமிழில் பேசிக்கொள்ளும் ஆசி·ப் உள்ளிட்ட நண்பர்களைச் சந்தித்தித்திருந்தால் அப்படி ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைத் தவிர்த்திருப்பாரெனவும் சொன்னதாகத் தெரிகிறது. (மரத்தடியில் முன்பு ஆசி·ப்உள்ளிட்ட மடல் இப்படிச் சொல்கிறது). இப்போது எடுக்கப்போகும் படத்திற்கும் “டூரிங்டாக்கீஸ்” என்று ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்.

தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தவறு என்று பா.ம.க. உள்ளிட்ட பலஅமைப்புகள் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வணிக ரீதியில் எடுக்கப்படும் படங்கள் எல்லா வகையிலும் மக்களைக் கவர்வதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ளும். அப்போது படங்களின் பெயர்களைத் தமிழில் வைக்கவேண்டும் என்றோ தமிழில் வைக்கக்கூடாது என்றோ யோசிக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. எந்தப் பெயர் பொருத்தமானதாகவும் சட்டென்று கவரக்கூடியதாகவும் இருக்குமோ அதை வைக்கிறார்கள்.

எச்சூழ்நிலையிலும் தமிழில் மட்டுமே பெயர் வைப்போம் என்கிறவர்களை மெச்சும் நேரத்தில் தமிழில் படத்திற்குப் பெயர் வைக்காதவர்களைத் தமிழுணர்வு அற்றவர்களாக சிலர் அறிவிக்க முயல்வதை ஏற்கமுடியவில்லை. தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைப்பதையும் தமிழுணர்வையும் முடிச்சு போடுவது வேடிக்கையானது. தமிழுணர்வைத் தமிழ்ப்படங்களில், அதுவும் “நியூ” மாதிரியான தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் ஏன்பெயர் வைக்கவில்லை என்று வாதம் செய்வது ஒரு வகையில் தமிழ் எதிர் உணர்வு. இன்னும்சொல்லப்போனால் “நியூ” மாதிரியான படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்காததை, தமிழில் பெயர் வைப்பதைக் கட்டாயமாக்க முயல்பவர்கள் பாராட்டவேண்டுமென்பேன்.

சேரனுக்கு வருவோம். சேரன் “டூரிங் டாக்கீஸ்” என்று படத்திற்குப் பெயர் வைப்பதில் என்னளவில் எந்தவிதமான எதிர்ப்புமில்லை. “டூரிங் டாக்கீஸ்” நல்ல பெயர்; சட்டென்று மனதைக் கவரும், மனதில் நிற்கும், பழைய நினைவுகளைக் கிளறிவிடும் பெயர்தான். ஆனால் துபாயில் அப்படிச் சொல்லிவிட்டு, அதை மறந்துவிட்டு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எப்படி ஏற்பது? குறைந்தபட்சம் துபாயிலேயே தன்னிலையை விளக்கியிருக்கவேண்டும். “ஆட்டோகிரா·ப் படத்துக்கு நினைவேடுன்னு பேர்வெச்சா நீங்க மட்டும்தான் பார்ப்பீங்க” என்று ஆசி·பிடம் சொல்லும்போதே “உங்களைச் சந்தித்திருந்தால் அந்தப் பெயர் வைத்திருக்கமாட்டேன்” என்று சொல்வதைத் தவிர்த்திருக்கவேண்டும். அவர் பேச்சுவாக்கில் சொன்னாரா, சீரியஸாகச் சொன்னாரா என்பது ஆசி·ப்பிற்கே வெளிச்சம்.

தமிழ்ப்படங்களுக்குத் தமிழிலிலேயே பெயர் வைப்பது நல்லது. அதே சமயம் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது தமிழ்த்துரோகம்; கடுங்குற்றம் என்பதை என்னால் ஏற்கமுடியாது. ஆனால் அதைப் பாவமென்றோ தவறென்றோ ஒப்புக்கொள்கிறவர்கள் மீண்டும் ஆங்கிலப்பெயரை வைக்காமல் இருக்கவேண்டும்.

Share

Comments Closed