பூனையின் உயிர்த்தெழுதல்

எத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.

ஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.

முதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.

ஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.

ஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.

ஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்தேன். சத்தமே இல்லை. இடையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், ‘பூனை செத்துக் கிடக்குது.’

என் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் ‘என்னாச்சுப்பா’ என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு ‘செத்துப்போச்சா’ என்றான். என் மனைவி உடனே ‘சாகலை. நாளைக்கு வரும்’ என்று சொல்லி வைத்தாள்.

மறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் ‘அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே’ என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், ‘பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை’ என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் ‘ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத’ என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.

பின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.

லோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.

வீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.

நான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், ‘வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.’ அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். ‘அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க’ என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். ‘பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.’ ‘எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு’ என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.

பூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென்றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.

வீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். ‘எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.

பூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் ‘பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.


நன்றி: பண்புடன் குழுமம்

Share

Comments Closed