Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Share

Comments Closed