நாயி நிரலு – கன்னடத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 05)

லோக் சபா சானலில் நாயி நிரலு (நாயின் நிழல்) என்ற கன்னடப் படம் நேற்று ஒளிபரப்பானது. எஸ். எல். பைரப்பாவின் நாவலை கிரிஷ் காசரவள்ளி இயக்கியிருக்கிறார்.

நேற்று படத்தைப் பார்த்தபோது, இது ஒரு சிக்கலான நாவல் போலத் தோன்றுகிறதே என்று நினைத்தேன். குறுநாவலே ஒரு திரைப்படத்துக்கான சிறந்த வடிவம் என்பது நேற்று மீண்டும் உறுதிப்பட்டது. ஒரு நீண்ட நாவலில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய நீளும் காலங்களும், தொடர்ந்த கதைத் திருப்பங்களும் திரைப்படத்தில் ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். கிரிஷ் காசரவள்ளி போன்ற இயக்குநரின் கைகளில் சிக்கியதால், அது ஓரளவு தப்பித்தது என்றும் சொல்லவேண்டும்.

நாவலின் மையமான மறுபிறப்பு (நன்றி: விக்கிபீடியா) என்கிற நம்பிக்கையிலிருந்து இப்படம் விதவையான ஒரு பெண்ணின் மையமாக மாறியிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது, இயக்குநர் தனக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டே தீரவேண்டும். அந்த வகையில் இயக்குநர் இத்திரைப்படத்தில், நாவலில் சொல்லப்பட்ட சில காட்சிகளைத் தவிர்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் இத்திரைப்படத்தின் மையம், ஒரு விதவைப் பெண்ணின் மீது குவிகிறது. அதன் பின்னூடாக ஒரு சிறந்த மாமனாரின் சித்திரம் மேலெழுவதையும் பார்க்கமுடிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மாமனாரின் சித்திரத்தைப் பற்றித் தெளிவாக எழுதமுடியாது. சிறந்த விற்பன்னராகவும், தன் மீது தீராத விசாரணையும் கொண்டவராகவும் வரும் இவரது பாத்திரத்தைப் படத்தைப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளமுடியும்.

ஏற்கெனவே நான் பார்த்த காசரவள்ளியின் Kraurya (கதை சொல்லி) திரைப்படம் பாவனைகள் இன்றி மிக நேரடியாகப் பேசிய படம். நாயி நிரலு பாவனைகள் அற்ற படம்தான் என்றாலும், மிக நேரடியான திரைப்படம் என்று சொல்லமுடியாது. படத்தைப் பார்ப்பவர்கள் தாங்களாக உருவாக்கிக்கொள்ளவேண்டிய தீர்மானங்களுக்கு நிறைய இடம் இருக்கிறது. ஒருவர் இத்திரைப்படத்தை மறுபிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள் சார்ந்த திரைப்படம் என்ற வகையில் பார்க்கலாம். இன்னொருவர் இத்திரைப்படத்தை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த திரைப்படம் என்று பார்க்கலாம். இன்னும் ஒருவர் இத்திரைப்படத்தை குடும்பத்துக்குள்ளான உணர்வுகளின் பிரச்சினையாகவும், ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் போராட்டமாகவும் பார்க்கலாம். இன்னொருவர் சமூகத்துக்கும் அது உண்டாக்கி வைத்திருக்கும் சம்பவங்களுக்குமான வெளியாகப் பார்க்கலாம். இவையெல்லாமே இப்படத்தில் அடங்கியிருக்கிறது என்றாலும், கிரிஷ் காசரவள்ளி நாவலில் எஸ்.எல். பைரப்பாவின் நாவலில் இருந்து சில குறிப்பிட்ட பகுதிகளை நீக்கிவிட்ட வகையில், இதனை விதவைகளின் உணர்வுகள் சார்ந்த பிரச்சினையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு இளம் விதவையுடன் வாழும் பிராமணக் குடும்பத்தைச் சுற்றி நடக்கிறது கதை. இளம் பிராமண விதவைதான் என்றாலும் அவளுக்கு வயதுக்கு வந்த, கல்லூரியில் படிக்கக்கூடிய மகள் உண்டு. சிறு வயதிலேயே திருமணம் ஆகிப் பிள்ளை பெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் அக்காலத்தில் உள்ள நிலையில், இந்த வயதுக்கு வந்த மகள் என்பதும், அவளது தாய் இளமையான விதவைத் தாய் என்பது முக்கியம் பெறுகிறது. வயதான, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார், குடும்பத்தைச் சுமக்கும் மாமனார். இறந்து போன தன் மகனின் மறுபிறப்பாக ஒருவன் பக்கத்து கிராமத்தில் பிறந்திருக்கிறான் என்று யாரோ ஒருவரின் மூலம் அறிகிறார் மாமனார். தன் மனைவியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின்பு அவனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் குணம் பெறுகிறார். தன் மகன்தான் அவன் என்று உறுதியாக நம்புகிறார் அவர். ஊரும் நம்புகிறது. ஆனால் விதவைப் பெண்ணோ வந்தவன் தன் கணவனல்ல என்று நினைக்கிறாள். ஊரும் மாமியாரும் வந்தவன் அவள் கணவனே என்று நம்பச் சொல்கிறது. ஒரு கட்டத்தில் அவளுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. அவளைத் தன் கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். இங்கே தொடங்குகிறது கதையின் பிரச்சினை.


விதவைப் பெண்ணுக்கும் வந்திருக்கும் இளைஞனுக்கும் ஏற்படும் உறவில் அவள் கருத்தரிக்கிறாள். மாதா மாதம் தலைமுடியை சிரைத்துக்கொள்ளும் சடங்கை இனிச் செய்ய மாட்டேன் என்கிறாள் விதவைப் பெண். இனி தான் விதவையல்ல என்று முடிவெடுக்கிறாள். இதுவரை தன் மகன் என்று நம்பி அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று சொன்ன மாமியார், அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்ல, அதுவரை தன் கணவன் என்று நம்பாமல் இருந்த விதவை பெண் அவனை வீட்டை விட்டு அனுப்பக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். வீட்டுக்கு அவனை அழைத்து வந்த தானே பிரச்சினையின் காரணம் என்று நினைக்கிறார் மாமனார்.

தன் மாமா வீட்டில் இருந்து படித்துவரும் விதவைப் பெண்ணின் மக்ள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அதிர்கிறாள். இத்தனைக்கும் விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கக்கூடாது, சமயச் சடங்குகள் கூடாது என்ற கருத்தோடு வளர்ந்த பெண் அவள். தன் அம்மா கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்று தெரிந்தவுடன் அவளுக்குப் பெரும் அதிர்ச்சியும், கோபமும் ஏற்படுகிறது. இத்தனைக்குப் பின்னும் அவளால் தன் அம்மாவை வெறுக்கமுடியவில்லை. தன் தந்தையாக வந்திருப்பவனை விரட்டிவிட்டால் தன் அம்மா தனக்குக் கிடைத்துவிடுவாள் என நினைக்கிறாள். ஆனால் அவனை வீட்டை விட்டு அனுப்ப அவளது அம்மா சம்மதிக்கவில்லை.

ஊராரின் நிர்ப்பந்தத்தால், யாருமற்ற ஒரு தீவுக்கு, தன் கணவனுடன் செல்கிறாள் அந்த விதவைப் பெண். தான் திருமணம் செய்துகொண்டும் விதவைப் பெண்; விதவைப் பெண்ணாக இருந்தும் திருமணம் ஆனவள் என்னும் குழப்பம் அவளைத் துரத்துகிறது. தான் சுமங்கலியும் அல்ல, அமங்கலியும் அல்ல என்பதுதான் உண்மை என்று நினைக்கிறாள். இதற்கிடையில் மகளின் கோபம் உச்சத்துக்குச் செல்கிறது. ஒரு கேஸ் கொடுத்து தன் தந்தை என வந்திருப்பவனை சிறையில் வைக்கிறாள். அதனால் அவன் கோபம் கொள்கிறான். தன்னைப் பார்க்கவரும் கர்ப்பிணி மனைவியைப் பார்க்க மறுக்கிறான். அவன் யாருமற்ற தீவில் போது, ஓடக்காரப் பெண்ணின் மீது மையல் ஏற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணை வைத்து, தன்னைக் கெடுக்க வந்ததாகப் பொய் சாட்சியம் சொல்லச் சொல்லி, அவனை நிரந்திரமாக உள்ளே வைக்கிறார்கள். இரண்டு வருடம் சிறைத்தண்டை என்று தீர்ப்பு வருகிறது. அக்கோபத்தில் தனக்குப் பிறந்த பெண்ணையும் பார்க்க மறுக்கிறான் அவன்.

திரும்பி வருவானா வரமாட்டானா என்கிற நிலையில் அதே தீவிலேயே தங்க தீர்மானிக்கிறாள் ஒரு மகளைப் பெற்றிருக்கும், ஒரு கணவனைப் பெற்றிருக்கும் அந்த விதவைப் பெண்.

இந்த நீண்ட கதைப் பின்னல் கொண்ட இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதிவரை, எல்லா சட்டகங்களிலும் ஒருவித சோகத் தன்மையை மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சோகம் நம்மைத் தொட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது தனது மகன் பற்றிய ஒரு தாயின் சோகமாக இருக்கலாம். இளம் விதவைக்கு அக்காலத்துச் சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் தரும் அழுத்தமாக இருக்கலாம். தாய்க்கும் மகளுக்குமான போராட்டமாகவோ, தனது மனதுக்குள்ளேயே தான் செய்துவிட்ட செயலை நினைத்து கிழவர் செய்துகொள்ளும் தர்க்கமகாவோ அது இருக்கலாம். இப்படித் தொடரும் சோகமே இத்திரைப்படத்தின் நிறம்.

இத்திரைப்படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லவேண்டும்.

தனது மகன் திரும்ப வந்துவிட்டான் என்று நினைத்துக்கொண்டு அவனோடு பாசமாகப் பழகும் ஒரு முதிய தாய், தன் மகனுக்காக தன் மருமகளை, விதவைக் கோலத்தை விடுத்து, ஒரே ஒரு தடவை வண்ணப் புடைவை ஒன்றை உடுத்திக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சும் காட்சி. மருமகள் தொடர்ந்து மறுக்கிறாள். ஆனால் தாயோ விடுவதாக இல்லை. மெல்ல மெல்ல அவள் மனதை மாற்றி, அவளை வண்ணப் புடைவை அணிவிக்கச் செய்கிறாள். ஆனால் பின்னர் மருமக்ளுக்கும் தன் மகனுக்கும் உறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், ஒன்றுமே செய்யமுடியாதவளாக மருமகளைப் பிடித்து உலுக்குகிறாள். அப்போது மருமகள் வைத்துக்கொண்டிருக்கும் சவுரி கையோடு வந்துவிடுகிறது. அப்போது அந்த முதிய தாய் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் சொல்லும் செய்திகள் ஏராளம்.

இன்னொரு காட்சி, மகளும் தாயும் சந்திக்கும் இடம். எப்படி தன் தாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாளோ அப்படி தாய் மாறியிருக்கிறாள். ஆனால் இந்த மாற்றம் வந்த விதம் வினோதமானது. இதனை ஏறக அந்த மகளால் முடியவில்லை. எப்படியாவது தன் தாயை மீட்கவேண்டும் என்று நினைக்கிறாள். அழகான வண்ணப் புடைவையுடன், தலை நிறைய முடியுடன், பூவுடன் அம்மாவைப் பார்க்கும்போது அவள் அழகாக இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த அழகுக்குப் பின் ஏதோ ஒரு வினோதம் இருப்பதை அவளால் ஏற்கமுடியவில்லை. எத்தனையோ கேட்டும் தந்தையாக வந்திருப்பவனை, தன்னைவிட வயதில் சிறிய தந்தையை, வெளியில் அனுப்ப மறுக்கிறாள் தாய். அதுவரை சமயச் சடங்குகளுக்கு எவ்வித மதிப்பும் தராத அந்த மகள், அவ்வருடம் தனது தந்தையின் மரண தினத்தை சிறப்பாகச் செய்துமுடிக்கிறாள். தனது தாயை ஏதோ ஒரு வகையில் பழிதீர்த்துவிட்ட மன நிம்மதி அவளுக்குக் கிடைக்கிறது.

படத்தின் உச்சகட்டக் காட்சி மிக முக்கியமானது. தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். மகளின் கையில் தன் தாய்க்குப் பிறந்த குழந்தை இருக்கிறது. மகள் தன் தாயிடம் எப்போதும் கேட்டுவந்த அதே கேள்வியை மீண்டும் கேட்கிறாள். ‘வந்தவனை அப்பா என்று நீ நிஜமாகவே நம்பினாயா?’ என்று. இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் அதனைத் தவிர்க்கும் தாய் அப்போது பேசுகிறாள். ”ஊரெல்லாம் வந்தவனை உன் அப்பா என்றார்கள். ஆனால் என் கணவன் என்று ஏற்க மறுத்தார்கள். உன் பாட்டி அவனைத் தன் மகனாக நினைத்தாள். ஆனால் என் கணவனாக ஏற்க மறுத்தாள். ஊருக்கும், பாட்டிக்கும் எல்லாருக்கும் ஒரு பார்வை இருந்தது. எனக்கும் ஒரு பார்வை இருந்தது.” இடைமறித்து மீண்டும் மகள் கேட்கிறாள். ‘நீ அவனை அப்பா என்று நம்பினாயா’ என்று. அப்போது அவள், ‘ஒரு போதும் நான் நம்பியதில்லை’ என்கிறாள். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறாள் மகள். இக்காட்சியின் வழியே நீளும் மனப்பிரதிகள் ஏராளம். இக்காட்சியே அதுவரை படத்தைப் பீடித்திருந்த பெரும் சோகத்துக்கும், நீள நீளமான காட்சிகளுக்கும் ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது. இக்காட்சியில் வரும் கூர்மையான வசனங்கள்தான் இப்படத்தை விதவைகளின் மனப்போராட்ட பிரதியாகவும் மாற்றுகிறது.

தகப்பனாக மறுபிறப்பில் வரும் அவன் பிறந்தது முதலே ஏதோ ஒரு மனக்கோளாறில் இருப்பதாகவே காட்டப்படுகிறது. மிக முக்கியமான நேரங்களில், அவன் குயிலுடன் பேசிக்கொண்டிருக்கிறான். தனது தந்தையின் பெயரை மட்டும் சரியாகச் சொன்னதால், அவன் மறுபிறவி என்று நம்பிவிடுவதாக இத்திரைப்படத்தில் காட்டப்படுகிறது. அவன் சில கேள்விகளுக்குச் சரியாகவும், பல கேள்விகளுக்குத் தவறாகவும் பதில் சொல்கிறான். ஆனாலும் கிராம மக்கள் அவன் சரியாகச் சொல்லும் பதிலை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் மறுபிறவிதான் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாவலில், அவன் மறுபிறவிதான் என்பதற்கான சில காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று விக்கிபீடியா சொல்கிறது. கிரீஷ் காசரவள்ளி ஒரு நேர்காணலில் இதனை உறுதிப் படுத்துகிறார். நாவல் ஒருவனின் மறுபிறப்பை மையப்படுத்த, தான் கருப்பும் அற்ற வெள்ளையும் அற்ற நிறங்களில் உலவும் மனிதர்களை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

ஒரு நாவல் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள சவால்கள், சங்கடங்கள் இத்திரைப்படத்திலும் தெரிகின்றன. ஆனால் நல்ல திரையாக்கம், அருமையான ஒளிப்பதிவு, யதார்த்தமான நடிப்பு என்று மிகக் கச்சிதமாக அமைந்திருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் பொலிவு பெற்றுவிடுகிறது. இதுவே இத்திரைப்படத்தை முக்கியமானதாகவும் மாற்றுகிறது, நம்மைப் பார்க்கவும் வைக்கிறது.

Share

Comments Closed