டெல்லி கணேஷ் செய்யும் கொடுமை

டெல்லி கணேஷ் தமிழின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். பழங்கால துணை நடிகர்கள் போல, இக்காலத்தில் பெரிய நடிகர் பட்டாளம் இல்லை என்றாலும், அக்காலத்தில் மிக சிறப்பாக நடித்த பல்வேறு நடிகர்களுக்கு இணையாக மெச்சத்தக்க ஒரு நடிகர் டெல்லி கணேஷ். அவர் நடித்த எத்தனையோ படங்களில் அவரது அட்டகாசமான, யதார்த்தமான நடிப்பைப் பார்த்து அசந்திருக்கிறேன். இப்போது அவர் மெகா சீரியலில் நடிக்கும்போதும், அவர் மட்டும் தனித்துத் தெரிவதைப் பார்த்திருக்கிறேன். திருப்பாவை, கஸ்தூரி, செல்லமே என எல்லாத் தொடர்களிலும் இவரது நடிப்பு மட்டும் தனிப்பட்ட பாதையில் யதார்த்தமாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

நமக்கு ஒருவரை இத்தனை பிடித்துவிட்டால் கடவுளுக்குப் பொறுக்காது போல.

விஜய் டிவியில் ஞாயிறு காலை பத்து மணிக்கு வாங்க பேசலாம் என்றொரு நிகழ்ச்சி வருகிறது. பொதுவாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை நான் தவிர்த்துவிடுவேன். ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு தடவை பார்த்து நொந்து போயிருந்தேன். சரி, டெல்லி கணேஷுக்கு இது ஒரு திருஷ்டிப் பொட்டு என நினைத்துக்கொண்டு மறந்துவிட்டேன். இன்று மீண்டும் அதே நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது.

ஒய்.ஜி. மகேந்திராவின் பேட்டி. இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் டெல்லி கணேஷும் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்). புஷ்பவனம் குப்புசாமி என்னவோ முதலில் பாடுகிறார். ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார்தாசன், புஷ்பவனம் குப்புசாமி மூவருமே அலட்டல் மன்னர்கள் என்பது நாம் அறிந்ததே. இதில் பெரியார் தாசன் இப்படி எல்லாம் பேசிவிட்டு எப்படி பேராசிரியர் என்று வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்கிறார் என்பது தெரியவில்லை. சரி, அவருக்கு முடிகிறது சொல்லிக்கொள்கிறார். புஷ்பவனம் எப்போதுமே அலட்டல் என்பதால் அதிலும் பிரச்சினையில்லை. ஒய்.ஜி. மகேந்திரா என்றைக்குமே அதீத நடிப்பையும், அசிங்கமான முகபாவத்தையும், அலட்டலான பேச்சையும் கலை என்று நினைத்துக்கொண்டு வளர்ந்தவர். சிவாஜி கணேசன் எனக்கு குரு என்று சொல்லி அவரையும் கேவலப்படுத்துபவர். தான் கமலைவிட சிறந்த கலைஞன் என்று தனக்குத் தானே நினைத்துக்கொள்பவர். அவரைப் பற்றிப் பேச எனக்கு ஒனறுமே இல்லை.

ஆனால் இந்த டெல்லி கணேஷ்?

ஒய்.ஜி. மகேந்திரா, பெரியார் தாசன், புஷ்பவனம் மூவருமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக அவர் அலட்டும் அலட்டல் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எப்பேற்பட்ட கலைஞனின் வீழ்ச்சி இது? அதிலும் மிகவும் அசிங்கமாக சில சமயங்களில் அவர் பேசும்போது, அதை நகைச்சுவை என நினைத்துக்கொண்டு மற்றவர்கள் சிரித்து அந்தக் காட்சிக்கு நடிக்கும்போது பெரும் குமட்டல் ஏற்படுகிறது.

ஐபிஎல் பற்றிப் பேசும்போது, நடிகைகளைக் கட்டிப் பிடித்து உம்மா கொடுக்கலாம் என்றெல்லாம் டெல்லி கணேஷ் பேசுகிறார். முதலிலேயே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு நடிப்பதாக அவருக்குத் தோன்றலாம். ஆனால் இந்த நிகழ்ச்சி ஒரு நேர்காணலாகத்தான் மக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் டெல்லி கணேஷ் சொல்லும் ஆபாசமான வார்த்தைகள், கமெண்ட்டுகளெல்லாம் எத்தனை அருவருப்பாக உணரப்படுகிறது என்பதனை அவர் தெரிந்துகொள்ளவில்லை போல.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு ஒய்.ஜி. மகேந்திரா சரோஜாதேவியுடனான பேட்டியில், இதே போல மிக ஆபாசமாகப் பேசினார். ஏதோ ஒரு படத்தில் மலைப்பாம்பு சரோஜா தேவியைப் பிண்ணிப் பிணைவதாக ஒரு காட்சி. அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் சரோஜாதேவி. சம்பந்தமே இல்லாமல் ஒய்.ஜி. மகேந்திரா, ஐயோ அந்த மலைப்பாம்பாக நான் இருந்திருக்கக் கூடாதா என்று சொன்னார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அந்தப் பேரிளம்பெண் சரோஜா தேவி அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைத்தார். அதே ஒய்.ஜி இன்று பேட்டி கொடுக்கிறார். அவரிடம் கேள்வி கேட்கும் டெல்லி கணேஷ் இதே அளவுக்கு கேள்வி கேட்கிறார் நகைச்சுவை என நினைத்துக்கொண்டு. பின்பு அந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும்?

அதில் ஒய்.ஜி தன் அப்பாவைப் பற்றிச் சொல்லும் செய்திகளும், அதற்கு ஒத்து ஊதிக்கொண்டு டெல்லி கணேஷ் சொல்லும் செய்திகளும், மற்றவர்களால் மிக எளிதாக, ‘ஜாதித் திமிர்’ என்று சொல்லக்கூடிய அளவில்தான் உள்ளது என்பதையாவது அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. மற்றவர்களின் பெயரைப் புகழ்வதாக நினைத்துக்கொண்டு இவர்களே அவர்களை மீண்டும் ஜாதியக் கூண்டில் அடைத்துவிடுவார்கள் போல.

செல்லமே – ராதிகாவின் மெகா தொடரில் டெல்லி கணேஷ் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த துக்ளக் இதழில் டெல்லி கணேஷ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் தான் வில்லனாக நடிப்பது பலருக்குப் பிடிக்கவில்லை என்றும், இனிமேல் அதைச் செய்யமாட்டேன் என்றும் எழுதியிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. டெல்லி கணேஷ் இப்படிச் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வில்லனாக நடிப்பது அவ்வளவு எளிதாகப் புறந்தள்ளக்கூடியதா என்ன? இப்போது அவர் செல்லமே நாடகத்தில் வருகிறாரா இல்லையா எனத் தெரியவில்லை.

இப்படி சறுக்கிக் கொண்டிருக்கும் டெல்லி கணேஷ், தனது நடிப்பின் தரத்தைப் பற்றித் தானே அறிந்திருக்கவில்லையோ என்று பரிதாபப்படத் தோன்றுகிறது. அவரது நடிப்பு தமிழ் உலகம் கொண்டாடவேண்டிய ஒன்று. இது போன்ற சறுக்கல்களில் இருந்து விலகி, அவர் தனது நடிப்பில் கவனம் செலுத்துவது அவருக்கும், தமிழ் திரை உலகுக்கும் நல்லது.

http://www.youtube.com/watch?v=gPOrTmpul0s
இந்த சுட்டியில் சில வாங்க பேசலாம் நிகழ்ச்சிகளின் ஒளித்துண்டுகள் உள்ளன. தலையில் அடித்துக்கொள்ள விரும்புபவர்கள் இதனைப் பார்க்கலாம்.

Share

Comments Closed