தெய்வத் திருமகள் – காப்பி அண்ட் பேஸ்ட்

இந்தத் திரைப்படமே ஒரு மோசடி. ஐம் சாம் படத்தை அப்படியே உருவியிருக்கிறார்கள். இப்படி உருவிவிட்டு தனது பெயரை இயக்குநர் என்று போட்டுக்கொள்ள ஒரு மாதிரியான கல்நெஞ்சோடு பிறந்தால்தான் முடியும். விஜய் செய்த முதல் தவறு இது.

நான் இன்னும் ஐம் சாம் பார்கக்வில்லை. இந்தப் படம் பார்த்துவிட்டு வந்த இரவு யூ ட்யூபில் சும்மா அரை மணி நேரம் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது, இந்தப் படத்துக்கு ஐம் சாம் இயக்குநர் எத்தகைய ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் என்பதும், தமிழில் இதனை விஜய் எப்படி சீரழித்திருக்கிறார் என்பதும். அரை மணி நேரம் பார்த்ததுக்கே இத்தனை கோபம் வந்துவிட்டது. எனவேதான் இது. 🙂

யோசனை என்பதே இல்லை. ஐம் சாமின் ஹீரோவின் ஹேர் ஸ்டைலைக்கூடவா காப்பி அடிப்பார்கள்? ஐம் சாம் படத்தின் ஹீரோ மெண்டல்லி ரிடார்ட்டாக இருந்தாலும், அதிலும் அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருந்தது. இந்தக் குணமே அந்தப் படத்தின் பல கேள்விகளுக்கு லாஜிக்காக பதில் சொன்னது. ஆனால் தமிழ்ப்படத்தில் விக்ரமுக்கு கொஞ்சம்கூட மெச்சூரிட்டி இல்லை. இயக்குநருக்கு மெச்சூரிட்டி இருந்தால்தானே நடிகருக்கு வர! ஆனால் இதனை இயக்குநரின் தவறாகவே பார்க்கமுடியும்.

திரைக்கதை நன்றாக உள்ளது என்று சிலர் சொல்லியிருந்தார்கள். திரைக்கதை தமிழில் படு சொதப்பல். படத்தை ஓட்டத் தெரியாமல், விக்ரமுக்கும் தனது மனைவிக்கும் கள்ளத் தொடர்பு உள்ளதோ என்று பாஸ்கர் அலைகிறார். அதில் கொஞ்ச நேரம் காமெடி காட்சிகள். இதில் எதாவது லாஜிக் உள்ளதா? ஆனால் மக்களை சிரிக்க வைக்க வேண்டுமாம். சாட்சி சொல்லப் போகும் பாஸ்கரைக் கண்டுபிடிக்க இன்னொரு அரை மணி நேர அறுவை. இதுவே ஒரு கிரேஸி மோகன் படத்தில் வந்திருந்தால் அது வேறு. இந்தப் படம் அப்படிப்பட்ட படமா? விக்ரமுக்கு மெண்டல்லி ரிடார்ட். ஆனால் பாடத் தெரியும். குழந்தை பெற்றுக்கொள்ளத் தெரியும். இதற்கு ஒரு வசனமும் உண்டு, ஒரு சம்பவம் நடக்கும்போது அது என்னன்னு ஒருத்தருக்குத் தெரிஞ்சா போதாதான்னு. அவருக்குப் பிறக்கும் குழந்தை தன் அப்பாவை பைத்தியம் இல்லை என்று சொல்லும். ஐம் சாமில் ஒரு காட்சியில், ஒரு சிறுவன் கேட்கிறான், உங்க அப்பா மெண்டல்லி ரிடார்டா என்று. அவள் சொல்கிறாள், ஆமாம். அப்ப நீ என்கிறான் சிறுவன். அவள் இல்லை என்கிறாள். எத்தனை தெளிவான திரைக்கதை பாருங்கள். குழந்தை தன் அப்பா மெண்டல்லி ரிடர்ட் என்பதைப் புரிந்துகொண்டு, அதனை ஏற்றுக்கொண்டு பேசுகிறது. இத்தனை தெளிவு தமிழ்ப்படத்தில் இருக்கிறதா?

ஐம் சாமில் மெண்டல்லி ரிடார்டாக இருப்பவரை வெறும் பைத்தியமாகக் காட்டி நோகடிக்கவில்லை. அவர் தன் குழந்தையுடன் சேர்ந்து வீட்டில் பாடங்களைப் படிக்கப் பார்க்கிறார். ஆனால் தமிழில்? விக்ரம் பைத்தியமேதான். அவருக்குத் தெரிந்ததெல்லாம் கையைத் தூக்கி தூக்கிப் பேசுவதுதான். அதுவும் மிஸ்டர் பீன் மற்றும் சிப்பிக்குள் முத்து கமலின் உடல் மொழியே.

அடுத்து வரும் கோர்ட் காட்சிகள். அனுஷ்காவின் கேரக்ட்ரை இத்தனை கேணத்தனமாக யாரும் உருவாக்க முடியாது. கூடவே வரும் கிறுக்கன் கேரக்டராக சந்தானம். இன்னொரு கிறுக்கனாக வரும், உதவும் வக்கீல். அத்தனை பெரிய வக்கீல் நாசரிடம் இருக்கும் உதவியாளரை தனக்கு வேவு பார்க்கச் சொல்வார்களாம். அப்படியாவது அவன் வேவு பார்த்துச் சொன்னது என்ன என்றால், ஒன்றுமே இல்லை. இதை வைத்துக்கொண்டு அரை மணி நேரம் குட்டிக்கரணம்.

அடுத்து நாசர் கேரக்டர். மிகப் பெரிய வக்கீலாம். ஆனால் அவருக்கு விகரமை மனநிலை சரியில்லாதவர் என்று கோர்ட்டில் நிரூபிக்கத் தெரியாதாம். ஏனென்றால் அனுஷ்காதான் ஹீரோயின். இவர் என்ன செய்வார்! தலையெழுத்து. கடைசியில் விக்ரம் மெண்டல்லி ரிடார்ட் இல்லை என்று ஒப்புக்கொண்டு விடுவாராம். விக்ரமும் குழந்தையும் சந்திக்க ஒரு மணி நேர அவகாசமாம். அந்தக் காட்சியில்தான் எத்தனை குழப்படி! அதில் விக்ரம் ஓடி வந்து விழும் காட்சி அப்படியே ஐம் சாமில் உள்ளது. தமிழ்த்தனமாக விழக்கூடவா தமிழனுக்குச் சுயபுத்தி இல்லை?

கோர்ட்டில் இரண்டு பேர் லூசுத்தனமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவர் நாமம் போட்டிருக்கிறார், இன்னொருவர் பட்டை அடித்திருக்கிறார். ஏன், அங்கே சைவ வைணவ விவாதமா நடக்கிறது?

மெண்டல்லி ரிடார்ட் விக்ரம்தான் பாட்டுப் பாடி நம்மைக் கொல்கிறார் என்றால், வக்கீலும் விக்ரமுடன் டூயட் பாடுகிறது. இந்த தமிழ் சினிமா விளங்கவே விளங்காதா? எந்த ’நல்ல பட’ இயக்குநராவது இப்படி ஒரு டூயட் காட்சி வைப்பாரா? கேட்டால் சமரசம் என்பார்கள்.

கடைசி காட்சியில் விக்ரமே குழந்தையை ஒப்படைத்துவிடுவாராம். கொடுமை. யார் மெண்ட்டல்லி ரிடார்ட்? நாமா? விக்ரமா?

விக்ரமுக்கும் குழந்தைக்குமான அன்னியோன்யம் குழந்தையின் பார்வையில் சரியாகப் பதியப்படவே இல்லை. உண்மையில் அதுதான் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றிருக்கும். அது இல்லாததால் கிளைமாக்ஸில் ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது. (இதுதான் நடக்கும் என்று யூகம் செய்துவிடும் என்னைப் போன்றவர்களுக்கு அதுவும் மிஸ்ஸிங்!) மனதில் ஒரு பதற்றம் ஏற்படவில்லை.

படம் முழுக்க ஓவர் ஆக்ட்சிங் செய்தால் மக்களுக்குப் பிடித்துவிடும் என்பது நம் மரபு. அப்படியே செய்திருக்கிறார் விக்ரம். பைத்தியமாக நடிப்பது சும்மா அசட்டுத்தனமாக அலட்டுவது என்று நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், நம்ம ஊர் மெண்டல்லி ரிடார்டுகளெல்லாம் அழகானவர்களாகவும் அப்சரஸ்களாகவும் உலவும் ரகசியமும் புரிபடுவதில்லை. கமல், ஸ்ரீதேவி, ராதிகா, அஞ்சலியில் வரும் குழந்தை – இப்படி மெண்டல்லி ரிடார்டுகள் அழகானவர்களாகவே இருந்துவிடுகிறார்கள். ஆனால் விக்ரமுக்கு நண்பர்களாக வரும் 3 மெண்டல்லி ரிடார்டுகளில் ஒருவர்கூட அழகில்லை. அது எப்படி அப்படி ‘அமைந்துவிடுகிறது’ எனத் தெரியவில்லை.

இந்தத் திரைக்கதை படத்தை மனத்தில் வைத்து எழுதப்படவில்லை. மக்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் சுயம் இல்லை. தமிழில் வரும் பெரும்பாலான படங்களில் சுயம் இல்லை. குறைந்தபட்சம் உலகெங்கும் எடுக்கப்படும் கதையை இங்கே எடுக்கிறார்கள் என்றாவது அமைதிகொள்ள முடிந்தது. இப்படத்தில் ஒரு படத்தையே அப்படியே சுட்டிருக்கிறார்கள். இது நிச்சயம் ஏமாற்று வேலை. அத்திரைப்படத்துக்கான கிரெட்டிட்டைக் கொடுக்கவில்லை என்பது இது மோசடியே என்பதை நிரூபிக்கிறது.

மோசமான திரைப்படங்களுக்கு மத்தியில் சுமாரான படங்களை வரவேற்பதே நமது தலைவிதி ஆகிவிட்டது. அதனால்தான் அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், மைனா எல்லாம் பெரிய வரவேற்பைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுப் போகிறது. அழகர்சாமியின் குதிரை, மைனாவிலாவது மண் சார்ந்த சுயம் என்பது கதையளவில் இருந்தது. இதில் அதுவும் இல்லை.

இத்திரைப்படத்தின் சில ப்ளஸ்கள்: ஒரு முயற்சி என்ற அளவில் – மனதைக் கல்லாக்கிக்கொண்டு – வரவேற்பது. குழந்தையாக வரும் பெண்ணின் மாசு மருவற்ற முகமும் அதன் நடிப்பும். கிளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் விக்ரமின் நடிப்பு. ஆரிரோ ஆராரிரோ எனும் நெஞ்சை அள்ளும் பாடல். (இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைச் சுட்டிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இயக்குநர் ஜாடிக்கேத்த நல்ல ஜிவி பிரகாஷ் மூடி!) நல்ல ஒளிப்பதிவு. நாசர், அனுஷ்கா, அமலா பாலின் நடிப்பு. இவ்வளவுதான். இதை இவர்கள் எந்தப் படத்திலும் செய்துவிடுவார்கள்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டேயானாலும், தெய்வத் திருமகள் போன்ற ஓர் அப்பட்டமான காப்பியை நாம் வரவேற்பதுகூட நிச்சயம் தவறுதான். கலைக்கு செய்யும் அவமரியாதை.

Share

Facebook comments:


3 comments

 1. Thiruvengadam says:

  All of us would not have facility of SEEING & UNDERSTANDING an earlier version which you referred. Nothing can be produced without an earlier one. Let us welcome for NEW VENTURE even if is a COPY as invented by you.

 2. பாரதி மணி says:

  ஹரன்: உங்களோடு எனக்கு முழு உடன்பாடுண்டு. ஒரு தகவல்: இது என் பெருமையை பறைசாற்ற அல்ல!

  இந்தவருடம் Directorate of Film Festivals, Indian Panorama-வுக்கு என்னையும் ஒர் ஜூரியாக நியமித்திருந்தார்கள். பெங்காலி, ஹிந்தி, மராத்தி போன்ற படங்களுடன் ஒப்பிடும்போது, தமிழன் என்ற முறையில் வெட்கப்படவைத்தது. 210 படங்களைப்பார்த்து, 26 சிறந்த படங்களை இந்தியன் பனோரமாவுக்கு தேர்ந்தெடுக்கவேண்டும்.நீங்கள் ரிதுபர்ணோ கோஷின் Abohamaan, மற்றும் Ami Aadu, I am Kalam போன்ற படங்களை எப்படியாவது பார்த்துவிடவேண்டும்!

  தமிழில் போட்டிக்கு வந்த படங்களில் சில: யோகி, சிங்கம். அமீர் யோகியை எப்படி துணிச்சலுடன் விருதுக்கு அனுப்பினாரென்றே தெரியவில்லை! ஜூரிகளெல்லாம் கேனையர்கள்!

  சிங்கம் பார்த்த மற்ற மாநில ஜூரிகள், “மணி ஸாப்! ஏன் இந்த நல்ல நடிகரை வீணடித்திருக்கிறார்கள்?’ என கேட்டார்கள். அந்த மசாலாவும் இப்போது ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்த Singham’ ஆக உருமாறியிருக்கிறது! யாரிடம் சொல்லி அழ?

  தெய்வத்திருமகள் படத்தில் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்குமாவென்று விக்ரம் கேட்டார். என்ன பதில் சொல்ல? நீங்கள் நன்றாக “நடித்திருக்கிறீர்கள்” என்பது தான்.

  தமிழ்ப்பட இயக்குநர்கள் படத்துக்கு விருது கிடைக்காவிட்டால், விருதுக்கமிட்டியை குறை கூறி எந்த பயனுமில்லை. அங்கே தமிழுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. இது உறுதி! பல வருடங்கள் உடனிருந்து பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

  சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

  மன்னிக்கவும்…….நீண்ண்டு விட்டது!

  பாரதி மணி

 3. ஓகை நடராஜன் says:

  I am Sam படத்தையும் பார்த்தேன். மிக நல்ல படம் என்றாலும் இதில் பல ஏரண ஓட்டைகள் உள்ளன. 7 வயது குழந்தையைவிட போல அப்படத்தில் வரும் பெண்குழந்தையின் அறிவு முதிர்ச்சி அதிகமாக இருக்கிறது. அவ்வளவு முதிர்ச்சியான குழந்தை தன் தந்தையின் இயலாமை மற்றும் எல்லைகளை சற்றும் உணராமல் இருப்பது நெருடலாக இருக்கிறது. மிகச் சிறந்த வசனம் மற்றும் நடிப்பில் படம் ஒரு நல்ல அனுபவத்தைத் தருகிறது.

  ஹபி தெய்வத் திருமகளைக் கரித்துக் கொட்டியிருப்பது அவருடைய தமிழ்ப்பட விமர்சன நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. தெதி I am Samன் தழுவல் என்று விகடன் எழுதியிருக்கிறது. இதைப் பலரும் அறிந்திருக்கிறார்கள். இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதில் காப்புரிமை மற்றும் உரிமைத் தொகை பிரச்சனைகள் வரலாமென்பதால் விஜய் அதை பகிரங்கப்படுத்தவில்லை என்று யூகிக்கலாம். ஆனால் இதை மோசடி என்று சொல்வதைவிட கருத்துத் திருட்டு என்று சொல்லலாம். தெதி I am Samன் மையக் கருத்தை வைத்துக் கொண்டு வேறு பாதையில் பயணித்திருக்கிறது. தமிழ்ச் சூழலுக்காக ஏராளமான மாற்றங்களை கதையில் செய்திருக்கும் விஜய் சில நுணுக்கமான வேறுபாடுகளைச் செய்திருக்கிறார்.

  கிருஷ்ணா ஓடிப்போன ஒரு மனைவியால் வந்த ஏமாற்றத்தை அனுபவித்திருக்கவில்லை. அவர் நகர சூழலில் வசிக்கவில்லை. வசித்திருக்கவில்லை. கிராமத்தில் வாழும் ஒரு பழங்குடி அல்லது அடித்தட்டு சமூகத்து மனிதன். சாம் அப்படியெல்லாம் இல்லவே இல்லை. சாம் 7 வயதுக்கான முதிர்ச்சி உடையவர். கிருஷ்ணா 5 வயதுக்கான முதிர்ச்சி மட்டுமே உடையவராகவே படத்தில் அழுத்தமாக சித்தரிக்கப்படுகிறார். ஹபி கூறுவதைப் போல கிறுஷ்ணா சாமைப் போல இருந்திருந்தால்தான் தப்பு.

  படத்தில் வரும் கள்ளத்தொடர்பு சந்தேகத்தை கேலி செய்கிறார் ஹபி. கிராம வாழ்க்கையில் இதெல்லாம் சர்வ சாதாரணம். அதிலும் கூட அந்தக் கதாபாத்திரம் காட்டும் தவிப்பும் புரிதலும் ஒரு மனிதக் கூறைக் காட்டுவதாகவே என்னால் பார்க்க முடிந்தது.

  படத்தில் வரும் சிறுமி 5 வயது தமிழ்நாட்டுக் குழந்தைத் தனத்தை மிகையில்லாமல் காட்டுவதுபோல் பாத்திரப் படைப்பு அமைந்திருப்பது நிறைவான ஒரு அம்சம். ஆனால் இதையே ஹபி 7 வதுக்கும் மேலான முதிர்ச்சியுடையதாகக் காட்டப்படும் 7 வயது குழந்தையுடன் ஒப்பிட்டு முதிர்ச்சி இல்லை என்று குறை கூறுகிறார். அந்தக் குழந்தைக்கும் இந்தக் குழந்தைக்கும் இடையே திரைக்கதைகளில் உள்ள 2 வயது வித்தியாசத்தை விழுங்கி ஜீரணித்துவிட்டு ஏவ் என்ற ஏப்ப சத்தத்துடன் இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிரார் ஹபி.

  அனுஷ்காவின் பாத்திரப்படைப்பு கேனத்தனமாக இருக்கிறது என்று கூறுகிறார். இங்கே அந்த பாத்திரப் படைப்பில் மிக நுட்பமான வேறுபாடு செய்யப்பட்டுள்ளதையே தப்பிதம் என்று விமர்சிக்கிறார். இந்த வக்கில் அனுஷ்கா அந்த வக்கிலைப் போல இருந்திருந்தால்தான் தப்பு. அப்படத்தின் வக்கில் அனுபவமிக்க நல்ல வசதியில் இருக்கும் நிறைய கட்டணம் வாங்கும் ஏராளமான வாடிக்கையாளர் வைத்திருக்கும் பிரபல வக்கில். தெதியிலோ வழக்குக்கு ஆள் பிடிக்க அல்லாடும் அனுபவமில்லாத இளம் வக்கில். இப்படியொரு வக்கில் கிருஷ்ணா போன்ற பாத்திரத்தையும் அவருடைய வினோத வழக்கையும் சந்திக்கும்போது கேனத்தனம் வராமல் இருந்தால்தான் தப்பு.

  அனுஷ்கா விக்ரமுடன் டூயட் பாடுவதாக ஹபி சொல்கிறார். என்னளவில் அது டூயட் இல்லை. வேண்டா வெறுப்பாக அந்த வழக்கை எடுத்துக் கொள்ளும் வக்கில் அனுஷ்கா கிருஷ்ணாவின் சுபாவத்தைப் புரிந்து கொள்ளும்போது அவருக்குள் ஏற்படும் ஒரு விதமான ஈர்ப்பை வித்தியாசமான காட்சியமைப்புகள் கொண்ட ஒரு பாடல் காட்சியால் சொல்கிறார் விஜய். அனுஷ்கா உண்மையான அக்கறையுடன் அவ்வழக்கில் ஈடுபட ஆரம்பிப்பதை இப்பாடல் காட்சி தெளிவாக்குகிறது.

  மூலப் படத்தைப் போலல்லாமல் இப்படத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு போடப்படுகிறது. இதுவும் நுட்பமாக செய்யப்பட்டிருக்கும் ஒரு வேறுபாடே. அப்படத்தில் தந்தையும் மகளும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு அவர்களின் உறவு நெருக்கத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறார்கள். ஆனால் இங்கு கடைசி கட்சி வரை அவர்கள் சந்திக்காமலே அவ்வுறவின் நெருக்கம் புரிய வைக்கப்படுகிறது. இதனால் ஹேபியஸ் கார்ப்பஸ் புத்திசாலித்தனமாக இங்கே திரைக்கதையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

  இப்படம் ஹபி மாதிரியான ஆட்களுக்கானது அல்ல.

Leave a Reply to Thiruvengadam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*