பொறம்போக்கு – ஓர் இந்திய சலாம்

மாவோயிஸ்ட்டுகளின் தோல்வியுற்ற பிரசார நாடகமாக வெளிவந்திருக்கிறது பொறம்போக்கு என்னும் பொதுவுடைமை. தமிழ்ப்படங்களின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு மாவோயிஸ்ட்டுகளின் எந்த ஒரு கொள்கையையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மிக ரகசியமாக வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்ற வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்றால் அந்த ரகசியத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் நம்மூர் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தா. பாண்டியனின் முகமும் நல்லகண்ணுவின் முகமும்தான். வெகுஜனம் நிச்சயம் ’இந்த நல்லகண்ணுவா இப்படி ஆளுங்களைக் கொல்ல அனுப்பி வைக்காரு’ என்று யோசித்து மெர்சலாகப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. 

விநோதமான தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது நீதிமன்றம். தூக்கிலிடுபவர் அனுபவசாலியாக இருக்கவேண்டுமாம். யமலிங்கத்தைக் கூட்டிவருகிறார்கள். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில், அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக, தூக்கிலிடும் வேலையைச் செய்தவர். அதனால் கடும் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில் யாரைத் தூக்கில் போட்டார் என்பதை கற்பனையில் விட்டுவிட்டார்கள். அஃப்சல் குரு, கசாப்பை எல்லாம் தூக்கில் போட்டவரை அழைத்துக்கொண்டு வந்து இந்த மாவோயிஸ்ட் தீவிரவாதியையும் தூக்கில் போட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் யமலிங்கத்தை அழைத்து வருகிறார்கள். தமிழனை தமிழனே தூக்கில் போடவேண்டும் என்ற தமிழ்த்தேசியம் உள்குத்தாக உள்ளதோ என்னவோ.

மெலோ டிராமா போல யமலிங்கத்தின் உளவியல் சிக்கல்கள் எவ்வித சீரியஸ்நெஸ்ஸும் இல்லாமல் அலைபாய்கின்றன. தூக்கில் போடக்கூடாது என்பதற்காகவே அவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார் என்பதெல்லாம் அம்புலிமாமாவில் வரவேண்டிய கதை. ஒரு தடவை அல்ல, கடைசி வரை உதவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு அவரையும் ஒரு மாவோயிஸ்ட்டாகவே காட்டியிருக்கலாம். காளியிடம் பேசும் யமலிங்கம் மாவோயிஸ்ட்டாக மாறுவதற்கு ஒரு அழகான பெண்ணே காரணம் என்று சுளுவில் திரைக்கதையை முடித்துவிட்டார்கள்.

தமிழ்த் திரைப்படங்களின் பெரிய சவால் திரைக்கதைகளில் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவது. இதுபோதும் என்ற நினைப்புடனேயே திரைக்கதை எழுதுவார்கள் போல. எவ்வித தர்க்கமும் இன்றி படம் முழுக்க காட்சிகள் நிரவிக் கிடக்கின்றன. படத்தின் மையம் என்ன என்பதிலேயே இயக்குநருக்குக் குழப்பம். ஒரே மாவோயிஸ்ட் படத்தில் இந்திய ராணுவத்தின் அராஜகம், தூக்கு தண்டனையை அறவே ஒழிக்கவேண்டிய அவசியம், சிறைக்குள்ளே நடக்கும் அராஜகங்கள், தமிழ்த்தேசியத்தின் புகழ்பாடுதல், சிறைக்கைதிகளின் மனிதாபிமானம் எனப் பலவற்றையும் போட்டுக் குதப்பி சிவப்பாகத் துப்பிவிட்டார். இதனால் இது என்ன மாதிரியான படம் என்பது யாருக்குமே புரியாமல் போய்விட்டது. என்னைப் பொருத்தவரை இது இயக்குநர் இந்த சமூகத்துக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய நல்ல விஷயம். ஏனென்றால் படத்தில் மக்களுக்குப் புரிந்தது ஒரே விஷயமாக மட்டுமே இருந்திருக்கமுடியும், அது ‘கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள்’ என்பது மட்டுமே.

தூக்கு தண்டனை கூடாது ஆனால் ராணுவத்தில் யாரையும் கொத்து கொத்தாகக் கொல்லலாம், ஆயுதங்கள் வாங்கக் கூடாது ஆனால் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் ரகரகமாக ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற மாவோயிஸ்ட்டுகளின் சிந்தனையை படத்தில் தெளிவாகக் காண்பித்து அசரடிக்கிறார் இயக்குநர். தூக்கு தண்டனை உயிர்க்கொலைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறாரா அல்லது தூக்கு தண்டனையையே எதிர்க்கிறாரா என்பதில் இயக்குநருக்கு அக்கறை இல்லை. தூக்கு பெற்ற ஒருவர் நிரபராதி என்பதால் அவரைத் தூக்கில் போடக்கூடாது என்று மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் தூக்கு தண்டனையை அறவே எதிர்ப்பவர்கள், ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனை தரப்படக்கூடாது என்றே வாதிடவேண்டும். இதைப் பற்றியெல்லாம் இயக்குநருக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 12 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூகிள் (மேம்போக்கான தேடல்தான், சரியாகத் தேடவேண்டும்) சொல்கிறது. அதிலும் சமீப காலங்களில் மிக அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கே இத்தனை கூப்பாடு. ஒருவேளை நிறுத்திவைக்கப்பட்டுள்ள தூக்குக்காக எடுக்கும் காவடியாக இருக்கலாம். தங்கள் கொள்கையோடு சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்கு என்று வரும்போது மட்டுமே, ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையை எதிர்ப்பது நம் பகுத்தறிவுவாதிகள் வழக்கம். அதிலும் அவர்கள் நிரபராதிகள் என்ற பிலாக்கணத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். இதிலும் மாவோயிஸ்ட்டு தீவிரவாதி ரொம்ப நல்லவர். அறிவாளி. அழகானவர். கிட்டத்தட்ட பகத்சிங். ஆனால் கருணையற்ற இந்திய அரசாங்கம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துவிட்டது. 

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எல்லாருமே நிரபராதிகள் என்று வெள்ளை அடித்துவிட்டார் இயக்குநர். சிறையில் ஒருவர்கூட கெட்டவர் இல்லை. இந்த அரசாங்கம் அநியாயத் தீர்ப்பினால் அவர்களை உள்ளே வைத்திருக்கிறது என்பதே இபப்டம் சொல்லும் செய்தி. அதிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட காந்திகள் அல்லது பகத்சிங்குகள். இப்படி ஒரு கருத்தைச் சொல்லிப் படமெடுக்கும் தைரியம் தமிழ் இயக்குநர்களுக்கு மட்டுமே வரும்.

இயக்குநர் அழுத்தமாகச் சொல்ல விரும்பாத, ஆனால் அதன் போக்கிலேயே வெளிப்பட்டுவிட்ட சில விஷயங்கள் உள்ளன. ஐ பி எஸ்ஸாக வரும் ஷாமின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக ஒரு நேர்மையான அதிகாரியை கண்முன் வைக்கிறது. கடைசி நொடி வரை இக்கதாபாத்திரம் தன் கடமையில் இருந்து இம்மியும் பிசகவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட கடமையை மிகத் தெளிவான திட்டமிடல் மூலம் செய்து காட்டுகிறார் இந்த ஐ பி எஸ். இந்திய நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து ‘உங்களைப் பார்த்தா பைத்தியக்காரத்தனமா தெரியுது’ (நினைவிலிருந்து சொல்கிறேன்) என்று அவர்களது இஸத்தையே கேள்விக்குள்ளாக்கி, மாவோயிஸ்ட்டு தலைவரை தூக்கில் தொங்கவிட்டு இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு ஒரு இந்திய வணக்கம். 

மாவோயிஸ்ட்டுகளை நம்பினால் என்ன ஆகும் என்பதும் இப்படத்தில் மறைமுகமாகக் காட்டப்படுகிறது. தங்கள் வேலை முடிந்ததும் மாவோயிஸ்ட்டுகள் அடுத்த கொலை ப்ராஜெக்ட்டுக்குப் போக, எமலிங்கம் பைத்தியமாகத் தெருவில் திரிகிறார். இதுவும் சமூகத்துக்குத் தேவையான நல்ல செய்தியே. மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் என்றே சொல்வதால், கம்யூனிஸ்ட்டுகளை நம்பினால் லூஸாத்தான் திரியணும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். நல்ல விஷயம்.

படத்தின் லாஜிக் ஓட்டைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. படமே லாஜிக் ஓட்டை என்பது ஒருபுறமிருக்க, லாஜிக் ஓட்டைகளுக்கு மேல்தான் ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறுத்தப்பட்டுள்ளது. . இதில் காதல் பாடல்கள், காதல் ஏக்கம் வேறு. மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு காமம் ஆகாது என்ற கம்யூனிஸ விதி ஏதேனும் உண்டா எனத் தெரியவில்லை. மாவோவின் களியாட்டங்களெல்லாம் நடிப்பா? 🙂 இளம் மாவோயிஸ்ட் தலைவரும் இளம் பெண் தலைவரும் மனிதவெடிகுண்டாக இறக்கப்போகும் நாளுக்கு முதல்நாள் என்ன செய்வார்கள் என்ற தேவையற்ற கேள்வியைக் கொண்டு வரும் இயக்குநர், அதற்கான சரியான பதிலைச் சொல்லாமல் நட்டாற்றில் விட்டுவிட்டார். அவர்கள் இருவரும் உறவுகொண்டார்கள் என்று காட்டிவிட்டால் புனிதத்தன்மை போய்விடுமா என்ன? அல்லது அப்படி ஒரு காட்சியே இல்லாவிட்டால் சாதாரண தமிழன் விறுவிறுப்பு இல்லாமல் படம் பார்க்கமாட்டானா என்ன? என்ன எழவோ, ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் நாடகத்தன்மையை மீறிய ஒரு சீரியஸ்தன்மை வெளிப்படவே செய்கிறது. அதுமட்டுமே இத்திரைப்படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமாவது பார்க்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

உண்மையில் இத்திரைப்படத்தை மிகச் சிறப்பான திரைப்படமாக எடுத்திருக்கலாம். தூக்கிலிடுபவனின் மனப்போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கலாம். அதற்கு நம்பிக்கை அளிக்க, இந்திய மக்கள் அதிகம் எதிர்கொண்ட, பழக்கப்பட்ட, யதார்த்தத்தில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளான அப்சல் குரு அல்லது கஸாப்பை மையப்படுத்தியே எடுத்திருக்கலாம். லால் சலாம் இயக்குநருக்கு இதை எடுப்பதிலும் மனத்தடை. வெகுஜன இஸ்லாமியர்களின் மனம் கோணிவிட்டால் என்ன செய்வது? அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் இஸ்லாமிய ஆதரவுக்கு பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? ஒரு படத்தை பிரசாரப் படமாக எடுக்க எத்தனை பேரை திருப்திப்படுத்தவேண்டியுள்ளது! எந்தக் கேள்வியும் கேட்காமல் படம் பார்க்கவேண்டுமென்றால் இந்தியாவைத் திட்டிப் படமெடுப்பதுதான் எளிதானது. இதைத்தான் இந்த ஊடகம் பழக்கி வைத்திருக்கிறது. என்ன கொடுமை என்றால், ஊடகம் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இல்லை என்றெல்லாம் இப்படத்தில் பேசிக் கொல்கிறார்கள்.

இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், மாவோயிஸ்ட்டு தலைவரைத் தூக்கில் இடுவதுதான். எத்தனை லால் சலாம் சிந்து பாடினாலும், இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கராவாதிகள் ஆலோசனை சொன்னாலும், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிகழுமென்றால் அந்த இயக்கத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை இந்தியா நிச்சயம் நிறைவேற்றியே தீரும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள். இயக்குநர் இதை விரும்பிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதை இப்படித்தான் புரிந்துகொள்வார்கள் என்பதால் இயக்குநருக்கு மீண்டும் ஒரு இந்திய சலாம். தூக்குத் தண்டனை தரப்படும் மாவோயிஸ்ட்டு தலைவர் தூக்கில் தொங்கியதும் படம் பார்க்கும் யாருக்கும் எவ்வித மன வருத்தமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அந்தத் தலைவரின் கதாபாத்திரத்தை இயக்குநர் தெளிவாக நிலைநிறுத்தவில்லை. வெறும் செயற்கையான பிரசார நெடி தூக்கலான வசனங்கள் மூலமும், சாகசக் காட்சிகள் மூலமும் காட்டிவிட்டார். அப்படி பச்சாதாபம் வராத வகையில் படத்தை எடுத்திருப்பது இப்படத்தின் ஆதார செய்திக்கே எதிரானது. ஆனாலும் அதற்கும் மீண்டும் ஒரு இந்திய சலாம்.

சில அவசரத் தீர்ப்புகள்:

விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம்.

ஆர்யா ஓகே, மோசமில்லை.

ஷாம், கார்த்திகா – நடிக்கவே வரவில்லை.

இசை – கொடுமை. ஒரே ஒரு ஹிந்திப் பாடல் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்ததுபோல் காதில் விழுந்தது, ஆனால் நான்கு வரிகளே படத்தில் வந்தது.

Share

Comments Closed