நாங்கள்

நாங்கள் என்றொரு திரைப்படம் வந்தது. 1992ல். சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். 1991ல் நான் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வீடுமாற்றிக்கொண்டு வந்துவிட்டோம். ஆனாலும் மதுரையின் மீதிருந்த காதலும் ஈர்ப்பும் குறையாமல் இருந்த காலகட்டம். எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மதுரைக்குப் போய்விடுவேன். அங்கே இருந்த நண்பர்களுடன் படத்துக்குச் செல்வது ஒரு பொழுதுபோக்கு. அந்தமுறை எந்த நண்பரும் வீட்டில் இல்லை. நாங்கள் இருந்த வளைவுக்குச் சென்று அங்கிருந்தவர்களைப் பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, வேறு என்ன செய்வது என்று தெரியாமல், நான் மட்டும் தனியாகக் கிளம்பி மதி தியேட்டரில் ‘நாங்கள்’ படம் பார்க்கப் போனேன். இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம், இளையராஜா.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ‘பாடு குயில்களே பாச மலர்களை’ பாடலைக் கேட்டபோது, அதுவரை மறந்திருந்த பாடல் நினைவுக்கு வந்தது. அப்படியே நான் மதுரைக்குச் சென்றது, படம் பார்த்தது என எல்லா நினைவுகளும். மதுரையில் அந்த வயதில் பார்த்தபோதே அந்தப் படம் படு குப்பை என்ற எண்ணம் வந்ததை நினைத்துக்கொண்டேன். அப்போது தீபிகா மகாபாரதத்தில் மிகப் பிரபலமாகி இருந்தார். அவர், சிவாஜி, பிரபு என ஏகப்பட்ட பேர் இருந்தும், இருந்ததாலேயே படுகுப்பையாக அந்தப் படம் இருந்தது.

இந்த நாங்கள் திரைப்படம் நான்கைந்து நாள்களுக்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சரி, பழைய நினைவுகளுக்காகவும், ‘பாடடி குயிலே’ பாடலுக்காகவும் பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கினேன். இந்தப் படத்தை எப்படி அந்தக் காலத்தில் பொறுமையாகப் பார்த்தோம் என்ற ஆச்சரியம் எனக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை.

இன்னொரு அதிர்ச்சி, வசனம் மகேந்திரன். மகேந்திரன் எப்படி இப்படி ஒரு மோசமான படத்துக்கு மோசமான வகையில் வசனம் எழுதினார் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். ஒருவேளை வேறொரு மகேந்திரனாக இருக்குமோ என்று விக்கியில் பார்த்தால், கதை மகேந்திரன் என்றிருக்கிறது. ஆனால் வசனம் மகேந்திரன் என்று படம் சொல்கிறது. என்னதான் மோசமான கதையாக இருந்தாலும் மகேந்திரன் போன்ற ஒருவர் எவ்வித ஒரு ‘பளிச்’சும் இல்லாமல் இப்படி வசனம் எழுதமுடியுமா என்ற சோகம் இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை. அந்த வயதிலேயே மகேந்திரன் எனக்கு மிகப் பிடித்த இயக்குநர். இருந்தும் அன்று மதுரையில் படம் பார்க்கும்போது எப்படி மகேந்திரன் பெயரைத் தவற விட்டேன் என்பதுவும் பிடிபடவில்லை. 🙂

Share

Comments Closed