கமல் 10

01. ஹிந்து எதிர்ப்பு அரசியல் இந்த மோடிமஸ்தான் நாட்டில் எடுபடாது. எல்லாம் அவாளின் இந்தியா. இந்த இந்தியாவை அவாள் மட்டுமே ஆளவேண்டும், கருப்புச் சட்டைக்காரன் ஆளமுடியாது. இது முன்பே தெரிந்ததுதான்.
 
02. கமலின் அரசியல் ப்ளாட்டோவின், ஷியோதகோவின்(இனிமேல்தான் இவர் பிறக்கவேண்டும்) கருத்துகளோடு ஒப்பு நோக்கத்தக்கது. நம் மக்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்களுக்கு ஊழல்வாதிகளே சரியானவர்களே அன்றி கமல் போன்ற தத்துவம்சார் அரசியல் அறிஞர்கள் அல்ல.
 
03. கமலின் திரைப்படங்களையே புரிந்துகொள்ளாதவர்கள் கமலின் அரசியலையா புரிந்துகொள்ளப் போகிறார்கள்? பாவம் கமல், இவர்களை நம்பி இறங்கினால்? ஆனால் கமலுக்கு இது புதிதல்ல.
 
04. இயல்பிலேயே மக்கள் ஊழல்காரர்கள்தான். இவர்களுக்குத் தலைமையாக இன்னொரு ஊழல்வாதியே வரமுடியும். எக்கேடும் கெட்டுப் போகட்டும் இத்தேசம். இந்தியா ஒருநாளும் உருப்படாது. தனித்தமிழ்த்தேசமே தீர்வு. தோற்றது தமிழ்நாட்டில்தானே என்று கேட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன். யோசித்துப் பார் முட்டாள்களே.
 
05. கமலுக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு ஓட்டும் நேர்மைக்கானது. இதிலிருந்து தொடங்குவோம். அடுத்த பத்து வருடத்தில் கமலே முதல்வர். இத்தோல்வியே வித்து.
 
06. கமல் திரைப்படம் எடுக்கும்போது செய்யும் தவறை அரசியலிலும் செய்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தை எடுத்துவிட்டு அப்படம் தோல்வி அடைந்தாலும் திரைக்களத்தை அடுத்த கட்டத்துக்கு அசராமல் நகர்த்துபவர் கமல். அரசியலில் நூறு வருடங்களுக்கு முன்பான அரசியலை முன்னெடுத்துவிட்டார். அரசியலை அடுத்த பல கட்டங்களுக்கு கொண்டு போய்விட்டார். இனி கமலுக்கு முன் கமலுக்குப் பின் என்றே அரசியல் பேசப்படும். வெற்றி தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல
 
07. மக்களைத் தயார் படுத்துவது அரசியலில் முக்கியம். மக்களை தயார் படுத்துபவர்கள் ஒருபோதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. உலக வரலாற்றில் நாம் இதைப் பார்க்கலாம். மக்கள் கமலைத் தோற்கடித்ததற்கான காரணம் புரிந்ததா?
 
08. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் இதுவரை இந்தியாவில் எவ்விதப் புரட்சிகரமான மாற்றமும் வந்ததில்லை. மோடியின் வெற்றி நினைவு வருகிறதா?
 
09. கருணாநிதி மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றார். கமலின் தோல்வி என்ன சொல்கிறதென்றால், மக்கள் சோற்றாலும் சேற்றாலும் அடிக்கப்பட்ட பிண்டங்கள் என்பதையே. எங்கே போகிறது இத்தேசம்.
 
10. கமலின் தோல்வி கமலின் தோல்வி அல்ல. மக்களின் தோல்வி, நேர்மையின் தோல்வி. இதனால் கமலுக்கு ஒரு இழப்பும் இல்லை. இலவசத்தை எதிர்பார்த்து பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்களுக்கு இந்த தியாகமெல்லாம் புரியாது. டாட்.
 
நோட் பண்ணி வெச்சிக்கோங்கப்பா. கமலின் கட்சி, கமல் நிற்கும் ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து, எதிர்கால மதிமுக/தேமுதிகவாக விழிக்கும்போது, பயன்படுத்திக்கொள்ளலாம். காப்பிரைட் இல்லாத பிரதி. இலவசம். முற்றிலும் இலவசம்.
Share

Comments Closed