கேளாய் த்ரௌபதாய்

கேளாய் த்ரௌபதாய் என்ற ஆவணப் படம் – சஷிகாந்த் அனந்தசாரி இயக்கியது. இன்று எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடைபெறுவதாக அறிந்தேன். அதன் போஸ்டர் கவனத்தைக் கவரவும் இன்று செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அதன் ட்ரைலரை இணையத்தில் பார்த்தபோது அது கூடுதல் ஆர்வம் தருவதாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்கு நானும் மருதனும் சரியாக மியூசியம் தியேட்டரில் இருந்தோம்.

அப்போதுதான் அங்கே ப்ரொஜக்டரை அமைத்துக் கொண்டிருந்தார்கள். இயக்குநர் கொஞ்சம் டென்ஷனாக இருப்பதாகத் தெரிந்தது. இயக்குநர் கொண்டு வந்திருந்த பென் ட்ரைவில் எதோ பிரச்சினையோ என்னவோ. அவர் வைத்திருந்த கேசட்டும் ஓடவில்லை என்று நினைக்கிறேன். எப்படியோ லேப் டாப்பில் இருந்த வீடியோவை ப்ரொஜக்டரில் இணைத்து, கொஞ்சம் போராடி, ஒருவழியாக படத்தைச் சரியாகத் திரையில் தெரிய வைத்தார்கள்.

அடுத்து ஆடியோ! என்ன செய்தாலும் சத்தம் சரியாகக் கேட்கவில்லை. மொபைலில் இருக்கும் ‘உண்மை சொன்னால் நேசிப்பாயா’ பாடலை ஸ்பீக்கரில் இணைத்தால் மிகத் துல்லியமாகப் பாடுகிறது. ஆனால் டாக்குமெண்ட்ரியின் ஆடியோவை சரியாக அது ஒலிபரப்பவில்லை. லேப்டாப்பில் எதோ பிரச்சினை என நினைக்கிறேன். இப்படியே முக்கால் மணி நேரம் ஆகிவிட்டது. இயக்குநர் நொந்துபோய்விட்டார். என்னங்க இது ஒழுங்கா செக் பண்ணி கொண்டு வரமாட்டீங்களா என்று மியூசியத்தின் பொறுப்பாளர்களை அவருக்கே கேட்காத குரலில் கேட்டுக்கொண்டிருந்தார். எதோ ஒரு கேபிள் இல்லாததுதான் பிரச்சினை என்று ஒரு பொறுப்பாளர் கண்டுபிடித்தார்.

அதற்குள் இந்த வெளியீட்டைப் பார்க்க வந்திருந்த ஒருவர் சத்தம் போட ஆரம்பித்தார். நாட்டுப்புறக் கலைக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று கேட்டார். இயக்குநர், இது எதிர்பாராத பிரச்சினை என்று விளக்கினாலும், அதெல்லாம் மத்த எல்லாமே ஒழுங்கா நடக்குது, மலையாளம் ஹிந்தி பெங்காலி எல்லாம் பிரச்சினை இல்லை, எங்களுக்கு மட்டும் பிரச்சினையா என்றார். தான் (நாட்டுப்புறக் கலை நிகழ்த்தும்) அந்த கம்யூனிட்டியில் இருந்து வருவதாகவும் இது இந்திய அரசின் பிரச்சினை என்றும் சொன்னார். பொறுப்பற்ற தனம் என்றெல்லாம் சொன்னார். மீண்டும் எல்லாவற்றுக்கும் இந்திய அரசே காரணம் என்றார். ஆடியோவுடன் போராடிக்கொண்டிருந்த இளைஞர் பொறுமையாக, இதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை, இது ஒரு டெக்னிகல் பிரச்சினை என்றார். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டார் அந்தக் கோபக்காரப் போராளி.

அத்துடன் நிறுத்தி இருக்கலாம். உண்மையில் அங்கே இருந்த அனைவருக்குமே இந்த ஆடியோ பிரச்சினை எரிச்சல் தருவாதகவே இருந்தது. ஒரு கூத்து தொடர்பான ஆவணப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தையே சிதைத்துவிட்டது. மருதன் பேயறைந்தது போலவே உட்கார்ந்து இருந்தார். அந்நேரத்தில் அந்தப் போராளி, “சரி இதெல்லாம் போதும். யாரு டைரக்டர்? அவரை பேசச் சொல்லுங்க கேப்போம். லைட்ஸ் ஆன், மைக் ஆன்” என்று சொல்லவும், இயக்குநர் தானே அந்த டைரக்டர் என்று சொன்னார். உடனே போராளி, “ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நம்ம கலாசாரம் எப்படி இருந்தது தெரியுமா தெரியாதா? நீங்க எடுத்தா எப்படி இருக்கும்? அதுதான் இதுலயே தெரியுதே… அப்ப நாம ஆடி பாடி பறவித் திரிந்தோம். அதெல்லாம் இருக்கா?” என்றெல்லாம் சொல்லத் துவங்கினார். உடனே நான், “என்னங்க இது, அவர் பேச்சைக் கேக்காமலயே இப்படி பேசுறது சரியா?” என்று குரல் கொடுத்தேன். அதுதான் இவங்க பிரிபரேஷன்லயே தெரியுதே என்று சொல்லிவிட்டார்.

ஒருவழியாக லேப்டாப்பை மாற்றி திரையிடலைத் துவங்கினார்கள். இயக்குநர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்தார். ஆனாலும் ஆடியோ தெளிவாக இல்லை. கூத்துக் கலைஞர்கள் பாடும்போது பின்னால் ரயில் ஓடும் சத்தம், ஃபேன் ஓடும் சத்தம், ஏரோப்ளேன் ஓடும் சத்தம் என என்னவெல்லாமோ கேட்டது. இந்தியப் பாரம்பரியத்தைக் காட்டி மருதனை நைஸாக ஹிந்துத்துவம் பக்கம் லவட்டிக்கொண்டு வரலாம் என்று பார்த்தால், ஆடியோ தந்த எரிச்சல் நான் மருதனுடன் கம்யூனிஸம் பக்கம் போய்விடுவேன் என்ற அச்சம் முளைத்த நேரத்தில் மருதனும் நானும் வெளியேறினோம்.

பாவம் இயக்குநர். இந்த அநியாயத்தை மியூசியத்துக்காரர்கள் செய்திருக்கக்கூடாது. இது போன்ற திரையிடலுக்கு அதன் ஆடியோ ரொம்ப முக்கியம். இணையத்தில் ஹெட்ஃபோனில் கேட்டபோது கூத்துக் கலைஞர்களின் குரலில் ஈர்க்கப்பட்டே நான் இத்திரையிடலுக்குச் சென்றேன். அவசியமானதே சரியாக இல்லை என்றால் அதைத் தொடர்ந்து பார்த்து என்ன செய்வது என்று எண்ணித்தான் பார்க்காமல் வந்தேன்.

ஒரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து போராடி விளம்பரம் செய்து எல்லாரும் வந்து உட்கார்ந்திருக்கும்போது இது போன்ற பிரச்சினைகள் தரும் மன அழுத்தம் சொல்லமுடியாதது. எனக்கு இதில் சில அனுபவங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நினைவுக்கு வந்தன. ஆனாலும் அங்கே உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு ஒலி இரைச்சலாக இருந்ததால் வெளியேறிவிட்டேன். மீண்டும் திரையிட்டால் பார்க்கவேண்டும்.

Share

Comments Closed