7 days break

ஒரு வாரம் ஃபேஸ்புக் பக்கம் வராமல் இருக்கமுடிகிறதா என்று பார்க்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன். அதற்குள் பலர் போன் செய்து… ஒருத்தர்கூடவா போன் செய்து என்னாச்சு எனக் கேட்கமாட்டீர்கள்? கொடுமை. 🙂 யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது உறுதியானதும் இனிமேல் வராமல் இருந்தால் சிக்கல் என்றறிந்து உள்ளே வந்தேன்.

வெளியேறிய முதல் நாள் கைவிரல்கள் தொடுதிரையில் ஃபேஸ்புக் ஐகானையே தேடின. ஆனால் நான் அதில் க்ளியர் டேட்டா செய்திருந்தேன். இரண்டு மூன்று முறை தேடிப் பின்னர் மூளை கண்டுகொண்டது. மொபைலில், 8இன்ச் பேடில் என எல்லாவற்றிலும் ஃபேஸ்புக்கை நீக்கி இருந்தேன். 8இன்ச் பேடில் மட்டும் ஃபேஸ்புக் மெசஞ்சரை நீக்க மறந்திருந்தேன். அதையும் நேற்று நீக்கினேன்.

நிம்மதியாக பல வாரப் பத்திரிகைகளைப் படிக்க முடிந்தது. கிண்டிலில் புத்தகம் வாசிக்க முடிந்தது. (Ivory thones புத்தகத்தை போகன் படிக்கச் சொன்னார். சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஒரே நாயர் புராணம். நாயர் மத்வராக போகன் நாயராகிவிட்டாரா எனக் கேட்கவேண்டும் – சமநிலைக்காகத்தான்!) மன இறுக்கம் குறைந்தது போல இருந்தது. ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா, மனைவியிடம் எதாவது வம்பு வளர்க்கலாமா என்றெல்லாம் தோன்றத் தொடங்கியது. ஃபேஸ்புக் நம்மை சிறைபடுத்துகிறது என்பதைப் போலவே நம்மை ஆசுவாசப்படுத்துகிறது என்பதும் உண்மைதானோ?

இந்த யோசனை தோன்றிய நிமிடத்தில் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஒரு வீடியோவை வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார். அதில் நாம் எத்தனை முறை நம் ஆண்ட்ராய்ட் போனை அன்லாக் செய்கிறோம் என்று இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட 100 முறையாவது இருக்கும். அஃபிஷியலாகவும் சேர்த்துத்தான். இதை ஜெயக்குமாரிடம் சொல்லி, இதைக் குறைக்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன் என்று சொன்னேன். அவர் நான் சொன்னதில் இம்ப்ரஸ் ஆகி அவரும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் என நினைக்கிறேன்.

ஆனால் நான் வந்துவிட்டேன். 🙂

இடைப்பட்ட இந்த மூன்று நாளில், காலச்சுவடு ஆன்லைன் சந்தா செலுத்தி, அகா பெருமாள் எழுதிய கோபுரம் ஏறிக் குதித்து சாதல் கட்டுரை வாசித்தேன். டோண்ட் மிஸ்.

துக்ளக் இதழில், மாறன் சகோதரர்கள் டெலிபோன் எக்ஸேஞ்ச் வழக்கில் தப்பித்தது குறித்த கட்டுரை – பிரமாதம். இதையும் நிச்சயம் வாசிக்கவும்.

குமுதம் இதழில் ரஜினியின் ஆன்மிகப் பயணம் குறித்த கட்டுரை – ரசிகர்கள் வாசிக்கவும். குறைந்தபட்சம் அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவாவது.

நியூஸ் லாண்டரி பாட்காஸ்ட்டில் (ஹாஃப்தா) பழைய எபிஸோட் ஒன்றைக் கேட்டேன். கமல் அரசியல் நுழைவு குறித்து. கடுமையாக ஓட்டி இருந்தார்கள். அதே பாட்காஸ்ட்டில், காவிரி பற்றிய கட்டுரை (கட்டுரையா டாக்குமெண்ட்ரியா அல்லது இரண்டுமா எனத் தெரியவில்லை) எழுதியவர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது, விவேக் என நினைக்கிறேன்) பேசினார். கட்டுரைக்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது பற்றியும் ஜர்னலிஸத்தின் தேவை அது என்றும் சொன்னார். அக்கட்டுரை எங்கே கிடைக்கும் எனத் தேடவேண்டும். இவர் தமிழ்நாட்டுக்காரர். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற கருத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக கள ஆய்வை கர்நாடகாவில் இருந்து துவங்கி இருக்கிறார். முதல் பாகம் கர்நாடகாவில் காவிரி. இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் காவிரியாக இருக்கலாம். இது கட்டுரையா அல்லது யூ ட்யூப் வீடியோவா என்றும் தெரியவில்லை. இன்னொரு முறை கேட்டுப் பார்த்தால் புரியும்.

இனி அடிக்கடி இப்படி 2 அல்லது 3 நாள் பிரேக்கில் போக உத்தேசம்.

Share

Comments Closed