no more blue print for Tamilnadu text books

அரசுத் தேர்வுகளில் ப்ளூ ப்ரிண்ட் என்ற ஒன்று இனி இருக்காது என்பது ஒரு தொடக்கம். ஆனால் இதுவே பெரிய தீர்வு அல்ல. ப்ளூ பிரிண்ட் என்பது, படிப்பில் மிகவும் பின் தங்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிய ஒன்று. ஐந்து மதிப்பெண்கள் கேள்வி, முதல் பாடத்தில் இருந்தும் அல்லது இரண்டாம் பாடத்தில் இருந்து வரும் என்று தெரியவந்தால், ஏதேனும் ஒரு பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்களையும் படிப்பதன்மூலம், இரண்டாவது பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளையும் படிக்காமல் விட்டுவிடலாம். ஏற்கெனவே படிக்கத் திணறும் மாணவர்களுக்கு இது கொஞ்சம் உதவும்.
 
ஆனால் இது எங்கெல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தியது? ப்ளூ பிரிண்ட் படி ஆசிரியர்கள் பாடம் நடத்தத் துவங்கினார்கள். இரண்டாம் பாடத்தின் ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளை நடத்துவது கடினம் என்றால், ப்ளூ பிரிண்ட்டைக் காரணம் காட்டி அதை நடத்தாமல் விட்டார்கள். இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை உண்டானது.
 
பதினோராம் வகுப்பின் ப்ளூ பிரிண்ட்டைப் பயன்படுத்தி, எவையெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் வருமோ அந்தப் பாடங்களை மட்டும் பதினோராம் வகுப்பில் எடுத்தார்கள். மற்றவற்றை எடுக்காமல் விட்டார்கள். இதனால் சில குறிப்பிட்ட பாடங்களை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் முற்றிலும் இழக்கும் நிலை உருவானது. இப்பாடங்களில் இருந்து கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்கப்பட்டால் பதில் சொல்லமுடியாமல் திணறும் நிலை உருவானது.
 
ப்ளூ பிரிண்ட் இனி இல்லை என்பது நல்ல சிறிய தொடக்கம். ஆனால் முழுமையாகச் செய்யவேண்டியவை – ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஒரு பாடத்தின் தேவையை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விதமும் அவசியமும், புத்தகத்தில் அச்சில் இருப்பது அல்ல ஒரு பாடம்; அது எப்படிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை ஆசிரியகளுக்கு விளக்கவேண்டிய அவசியம், பாடத்தை மனனம் செய்வதை விட்டுவிட்டு (அல்லது குறைந்த அளவில் மனனம் செய்து) புரிந்துகொண்டு படித்து பதில் அளிக்கவேண்டிய அவசியத்தை; இது இயலக்கூடிய ஒரு செயலே என்பதை ஆசிரியர்களுக்கு முதலில் உணர்த்தவேண்டியது – இவைதான் முக்கியம். மாணவர்களின் வீழ்ச்சிக்கு ஆசிரியர்களே காரணம். ஆசிரியர்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்படியாக மாணவர்களை உருவாக்கும் தேவையை அவர்களுக்குச் சொல்வதன் மூலமாகவுமே அடுத்த இடத்துக்கு நகரமுடியும்.
 
அதிகமாகப் படிக்கக் கொடுப்பது, நெட்டுரு போட்டு எழுதச் சொல்லி மார்க் வாங்க வைப்பது, அதிகமாக எழுதி வரச்சொல்லி வீட்டுப்பாடங்கள் கொடுப்பது, அதிக நேரம் பள்ளிகளிலேயே தங்க வைத்து படிக்க வைத்து மதிப்பெண்கள் வாங்க வைப்பது, பதினோராம் வகுப்பின் பாதியிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, ஒன்பதாம் வகுப்பின் பாதிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டுப் பாடங்கள் நடத்தி முடித்துவிட்டு அதிகமாக தொடர்ச்சியாகப் பரீட்சைகள் நடத்துவது – இந்த முறைகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் யுக்தியில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளும் நிபுணத்துவம் பெற்றுவிட்டன. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஆட்டுமந்தை ஆக்கப்பட்டார்கள். பல பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்கள் உள்ளார்கள். மேலே சொன்ன பள்ளியின் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் உடன்பாடு இருக்காது. ஆனால் அவர்களும்கூட மதிப்பெண் நெருக்கடிக்கு ஆளாகி ஒரு பள்ளி என்ன செய்யவேண்டும் என நினைக்கிறதோ அதை மட்டும் செய்யவேண்டிய அழுத்தம் உள்ளது. இதிலிருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு வர அரசு பல வகைகளில் முயலவேண்டும். மதிப்பெண்கள் பின்னால் அலையும் மனப்போக்கைத் தவிர்த்துவிட்டு, ஆசிரியர்கள் தாங்கள் புரிந்துகொண்டு மாணவர்களையும் புரிந்துகொள்ளச் சொல்லிப் பாடம் நடத்தும் முறை வராமல் நமக்கு விடிவுகாலம் இல்லை.
Share

Comments Closed