ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

நம் சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மதிப்பு என்பது மிக உயர்ந்தது. தொன்றுதொட்டே அவர்கள் குருவென மதிக்கப்பட்டு தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்பட்டவர்கள். குரு என்பவர் எத்தகைய ஒருவராகவும் இருக்கமுடியும். நம் இன்றைய சமூகத்தில் நாம் குரு என்று நினைப்பது நம் ஆசிரியர்களையே. ஒவ்வொரு தனி நபரும் தன் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமுடியாத ஆசிரியர் என்று குறைந்தபட்சம் ஒருவரையோ அல்லது பலரையோ நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு எவ்வித பேதங்களும் தெரியாத வயதில் நம்முடன் இணைந்துகொள்ளும் ஆசிரியர்கள் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக உருக்கொள்வதில் வியப்பேதுமில்லை. இன்றும் நம் சிறுவயதில் நமக்குக் கற்பித்த குரு ஒருவரை நினைக்கும்போது நமக்கு எழும் எண்ணங்கள் நிகரற்றவை. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு இதுவாகவே இருக்கிறது. இதனாலேயே ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட சிறிய வீழ்ச்சி கூட மிகப் பெரிய சமூக வீழ்ச்சியாகவே விவாதிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த மனநிலைக்குப் பின்னே வைத்தே நாம் பார்க்கவேண்டியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம், அதிலும் இன்னும் சில நாள்களில் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம், பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததற்கு, ஆசிரியர்களின் மீதான இந்த ஒட்டுமொத்த மதிப்பீடும் ஒரு காரணம். இந்த மதிப்பீடு சரியா தவறா, தேவைதானா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதங்கள். யதார்த்தத்தில் இப்படியான ஒரு பொதுப்புத்தி நிச்சயம் இருக்கவே செய்கிறது.

ஜேக்டோ (பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) மற்றும் ஜியோ (அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இவற்றில் உள்ள ஒன்றிரண்டு கோரிக்கைகள் மிக முக்கியமானவையே. குறிப்பாக, இவர்களது ஓய்வூதியப் பணம் என்ன ஆனது என்பது பொதுவில் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அரசு இதற்கு ஒரு பதில் அளித்தது. இவர்கள் இப்படிப் போராட்டம் செய்திருக்காவிட்டால் அரசு நிச்சயம் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் இதனைப் பல காலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புமாறு அரசை நிர்ப்பந்திப்பது, நிச்சயம் செயல்படுத்த முடியாத ஒன்று.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, சுருக்கமாகச் சொன்னால், அரசு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது பெறும் சம்பளத்தில் பாதியை வாழ்நாள் முழுமைக்கும் (அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் வாழ்நாள் முழுமைக்கும்) மாதா மாதம் பெறுவது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (2003ல் இருந்து), அரசு ஆசிரியரின் (அனைத்து அரசு ஊழியர்களின்) சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை (12%) அரசும் ஊழியரும் ஓய்வூதியப் பணமாக செலுத்துவது; அதைப் பங்குச் சந்தையில் அரசே முதலீடு செய்வது; ஓய்வின்போது ஒட்டுமொத்த பணமாக அரசு ஊழியர் பெற்றுக்கொள்வது. மாதாமாதம் ஓய்வூதியமெல்லாம் இல்லை.

2003 முதல் வேலைக்குச் சேர்ந்தவர்கள் இதனை ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும்வரை அதற்காகப் போராடுவதும், சேர்ந்த பின்பு வேறு வகையில் போராடுவதும் சரியா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்விதான். அதேசமயம், இதைத் தவிர்க்கமுடியாது என்பதும் மிக மிக முக்கியமானதே. எனவே வேலைக்குச் சேர்ந்த பின்பு எப்படிப் போராடலாம் என்பதை விட்டுவிடலாம். அரசுக்கும் இதில் பெரிய பொறுப்பு உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இருந்த பல சலுகைகள் இப்போது இல்லை; அல்லது பெறுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ஓய்வூதியப் பணத்தில் இருந்து கடன் (லோன்) பெறுவது. அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் காலதாமதம். இவையெல்லாம் அரசுத் தரப்பில் இருக்கும் எப்போதைக்குமான சிக்கல்கள். ஆனால் அரசு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்வது இல்லை. அரசு ஊழியர்கள் சொன்னாலும், பொது மக்கள் எப்போதுமே ஒரு எரிச்சலில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அணுகுவதால், இதைக் கவனிப்பதோ ஏற்பதோ இல்லை.

எனவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டுமொத்தமாகத் தவறு என்றோ தேவையற்றது என்றோ சொல்லிவிட முடியாது.

அதேசமயம், அரசு ஊழியர்களின் போராட்டம் நிச்சயம் அவர்களது பணித் திறமையோடு நிச்சயம் சேர்த்தே பார்க்கப்படும். 30-01-2019 தேதியிட்ட தமிழ் தி ஹிந்து இதழில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்த வேலை நிறுத்தத்த்தின் போது அரசு ஊழியர்களின் செயல்பாடுகளைச் சொல்வ்வது வேலை நிறுத்தத்தைத் திசை திருப்புவது என்று சொல்லி இருக்கிறார். இதை நிச்சயம் ஏற்கமுடியாது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றுக்கு எதிராக அவர்கள் செய்யும் பணி, ஒப்பீட்டளவில் மற்றவர்களது வேலை மற்றும் சம்பளம் என எல்லாமும் விவாதிக்கப்படுவது நிகழவே செய்யும். விவாதிக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும் தாங்கள் எப்பேற்பட்ட ஒரு வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும். இதனால் பயன் இல்லாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.

ஒரு அரசு ஆசிரியர் ஆவேசமாகப் பேசும் வீடியோ ஒன்றை அனைவரும் பார்த்திருக்கலாம். நாங்கள் ஏன் வேறு பணிகளைச் செய்யவேண்டும், நாங்கள் ஏன் வேலைக்குச் சேர்ந்த பின்னரும் தேர்வெழுதி வெல்லவேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். வேறு பணிகளைச் செய்வது அரசுக்கு நிச்சயம் தேவை. இதைத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் அரசின் ஓர் அங்கம். பொதுத் தேர்வுகளின் போது நீண்ட நாள் விடுப்பு கிடைக்கும் ஒரே துறை அது. அப்படியானால் அவர்கள் பயன்படுத்தப்படவே செய்வார்கள். ஏன் மீண்டும் மீண்டும் தேர்வெழுதவேண்டும் என்பது கொஞ்சம்கூடப் பொருட்படுத்த முடியாத கேள்வி. ஒவ்வொரு ஆசிரியருக்கும் (அரசு ஆசிரியர், தனியார்ப் பள்ளி ஆசிரியர் என்ற பேதமில்லாமல்) தெரியும், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எத்தனை சதவீதம் பேர் சராசரிக்கு மேல் தேறுவார்கள் என்று. உண்மையில் ஆசிரியர்களின் தகுதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதே என்னுடைய மனப்பதிவு.

தமிழ்நாட்டுக் கல்வியைக் குறித்த ஆய்வின் படி, கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமையைக் குறித்த புள்ளிவிவரம்:

  • ஐந்தாம் வகுப்பில் வார்த்தையை வாசிக்கத் தெரியாதவர்கள் தோராயமாக 32% பேர்.
  • ஆறாம் வகுப்பில் 23% பேர், ஏழாம் வகுப்பில் 15%, எட்டாம் வகுப்பில், 9% பேர்.
  • ஐந்தாம் வகுப்பில் கழித்தல் தெரியாதவர்கள் தோராயமாக 39% பேர்.

இன்னும் கூட்டல், பெருக்கல், வகுத்தல், வட்டிக் கணக்கு, செய்யுள் படித்தல், ஆங்கிலம் அறிவியல் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் தோராயமாக 37%. அரசு உதவி பெறும் பள்ளிகள் 19%. மீதி தனியார்ப் பள்ளிகள்.

ஜேக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தின்போது அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்களும் பங்குகொள்ளவேண்டும் என்றாலும், அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியோ ஆணையின்படியோ இவர்கள் நடந்துகொள்வார்கள். அதேசமயம் ஜேக்டோ அமைப்புக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். அப்படியானால் முழுக்க முழுக்கப் பங்கேற்றது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே. அதாவது, கிராப்புறங்களில் இருக்கும் மாணவர்களே இப்போராட்டத்தின் பலி.

பொதுவாகவே நம் கல்வி அமைப்பு என்பது, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளின் கல்வி அமைப்பு, முழுக்க முழுக்க ஆசிரியர்களைச் சார்ந்தது. பல்வேறு சமூக மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அரசுப் பள்ளி ஒன்றையே தனது விடுதலைக்கான வழி என்று நம்பி வரும் மாணவர்களே இப்பள்ளிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களைக் கையில் எடுத்து நல்ல கல்வி தரவேண்டிய பொறுப்பே அரசு ஆசிரியர்களின் முதன்மையான வேலை. நம் கல்வி அமைப்பின் இன்னொரு பிரச்சினை, தேர்வு நேரங்களில் மட்டுமே பொறுப்பாகப் படிப்பது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே காரணம். எனவே இந்தத் தேர்வு நேரத்தில் இப்படியான அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இதனால் பாதிப்படையப் போகும் கிராமப்புற மக்களுக்கு அரசு ஆசிரியர்களின் என்ன பதில் உள்ளது?

இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், பாதிக்கப்படப் போவது கிராமப்புற மக்கள் என்பதாலேயே அரசு ஊழியர்களுக்குப் பொது மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்பதுதான். இது கொடுமை என்றாலும், பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் படிப்பதால், இவர்களது பெற்றோர்கள் அரசுத் தரப்பையும் சரி, அரசு ஆசிரியர்கள் தரப்பையும் சரி, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் யாருக்கும் ஒரு ஆதரவோ எதிர்ப்போ பெரிய அளவில் உருவாகிவரவில்லை. அதேசமயம் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள், பொது மக்களின் மனதில், இவர்கள் இன்னும் சம்பளம் கூடுதலாகப் பெறவே போராடுகிறார்கள் என்ற எளிய எண்ணத்தை மட்டும் விதைத்துவிட்டது. இது அரசுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. போராட்டமும் பிசுபிசுத்துவிட்டது.

பத்து வருடம் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒரு அரசு ஆசிரியரின் தோராயமான சம்பளம் நிச்சயம் 65,000 ரூபாய் இருக்கலாம். தலைமை ஆசிரியரின் சம்பளம் 85 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கலாம். எப்போதெல்லாம் மத்திய அரசு பே கமிஷனை நியமிக்கிறதோ அப்பொதெல்லாம் கூடுமான வரையில் தமிழக அரசும் அதை ஒட்டிய சம்பளத்தை அறிவித்துவிடுகிறது. காலதாமதமானாலும் முன்கூட்டிய தேதியிட்டு அறிவித்து ஈடுகட்டுவிடுகிறது. இந்நிலையில் போராட்டத்தில் சம்பள உயர்வையும் (அல்லது வேறுபாடுகளைக் களைவது) சேர்த்துக்கொண்டிருப்பது பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது.

3000க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் தேவையற்றதே. இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் குறைந்துவரும் நிலையில், தமிழ்வழிக் கல்வியின் ஆர்வம் குறைந்துவரும் நிலையில், பள்ளிகளை மூடுவது என்பது தவிர்க்கமுடியாதது. 35% பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றால் எப்படி அந்தப் பள்ளிகளில் சேர முன்வருவார்கள்? இந்த புள்ளிவிவரம் தனியார்ப் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் இது அரசுப் பள்ளிகளில்தான் அதிகம் என்பது வெளிப்படை. இந்நிலையில் மாணவர்களே இல்லாத அல்லது மாணவர்கள் குறைந்த பள்ளிகளை மூடுவது, குறைவான அளவில் உள்ள மாணவர்களை இன்னொரு பள்ளியோடு இணைப்பது எல்லாம் நிகழவே செய்யும்.

இதற்கான தீர்வு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதிலேயே உள்ளது. அரசு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதிலேயும் இருக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர்களோ, எங்களுக்கு ஏன் இன்னொரு தேர்வு என்று அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசுக்கு தன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை. பாடத்திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முனைப்பு, அரசுப் பள்ளிகளை ஆயத்தப்படுத்துவதில் இல்லை. மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி என்கிற மாயை.

மாணவர்களின் தரக் குறைப்பாட்டுக்கு அரசும் நிச்சயம் ஒரு காரணமே. ஆனால் தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தம் அராஜகம் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படும் என்று அரசு சொன்னதுமே பிசுபிசுத்துப் போய்விட்டது இந்தப் போராட்டம். தங்கள் வசதி என்று வந்ததும் ஆசிரியர்கள் உடனே வேலைக்கு வந்துவிட்டார்கள். இதில் கிண்டலுக்கு ஒன்றுமில்லை என்றாலும்கூட, மாணவர்களைக் குறித்தும் இவர்கள் யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் வலுப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

இந்தக் கூத்துக்கு இடையில் இன்னொன்றும் நிகழ்ந்தது. எனக்கு (நமக்கு!) அது இன்னமும் முக்கியமானது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணங்களில் ஒன்று, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன் நீதிபதி பரந்தாமன் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை நீதிமன்றம் பாகுபாடு காட்டாமல் அணுகவேண்டும் என்று மட்டும் சொல்லி, இப்போராட்டத்தில் சபரிமலை விவகாரம் தேவையற்றது என்று சொல்லவில்லை? கம்யூனிஸம். அரசு ஆசிரியர் சங்கங்களில் ஒன்று முற்போக்காளர்களின் சங்கம் என்ற பெயரில் இந்தக் கோரிக்கையை நுழைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அல்ல இது. எங்கே இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நுழைத்துவிடுவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். அனுபவம் மிக்கவர்கள். நல்லவேளையாக ஹிந்து ஆதரவு ஆசிரியர் சங்கம் ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது. ஒருவழியாக சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விஷயத்திலான கோரிக்கையைப் பொதுவில் பெரிய அளவில் ஜேக்டோ கொண்டு செல்லவில்லை என்பது ஆறுதல்.

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான நியாயமான கோரிக்கைகளை அரசு ஆராயவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ப்ரீகேஜி வகுப்புகளுக்குச் செல்வதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அளவில் இது எனக்குப் பெரிய விஷயமில்லை என்பதையும் சொல்கிறேன். ஆனால் ஆசிரியர்களின் உணர்வுக்கு மரியாதை அளிக்கவேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி தேர்ச்சி போதுமானது என்று மத்திய அரசின் வழிகாட்டும் குழு சொல்லி இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி தேர்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த வகுப்புகளுக்குச் செல்வதை ஏற்காதது நியாயமே. இந்த வருடம்தான் இது தொடங்கி இருக்கிறது என்பதால், எதிர்வரும் வருடங்களில் அரசு இப்பிரச்சினையைச் சரி செய்யும் என்றே தோன்றுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே சரியானது. அப்போதுதான் அடுத்த நகர்வாக அரசு ஆசிரியர்களின் தர மேம்படுத்துதலை மேற்கொள்ள முடியும்.

பொதுவாகவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் மிகவும் அரிதான காலங்களில் நடப்பது நல்லது. அதாவது வேலை நிறுத்தமே கூடாது என்ற வகையில் இருந்துவிடுவது இனி அவர்களுக்கு நல்லது. காலம் மாறி இருக்கிறது. வேலை நிறுத்தத்தை பொதுமக்கள் கொண்டாடின அல்லது ஏற்றுக்கொண்ட காலம் போய்விட்டது. நீதிமன்றமும் சரி, மக்களும் சரி, எந்த ஒரு அரசுத் தரப்பின் போராட்டத்தையும் இனி சட்டென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனடிப்படையில் தங்கள் தேவையை அரசுத் தரப்போடு பேசியோ, நீதிமன்றத்தை அணுகியோ அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்வது நல்லது. நீதிமன்றத்தின் தலையீடு என்பது அரசு நிகழ்வதற்கு சில பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆனால் அது குறித்துக் கவலை கொள்ளவேண்டியது அரசுதானே ஒழிய, அரசு ஊழியர்கள் அல்ல.

நன்றி: வலம் மாத இதழ்

Share

Comments Closed