கேசரி – ஹிந்தித் திரைப்படம்

கேசரி (ஹிந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கதை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.

ஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வரிக்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.

சிறுவர்கள் பார்க்கவேண்டிய படம்.

Share

Comments Closed