கிரேஸி மோகன் – அஞ்சலி

கிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலுடன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.

ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.

மூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.

எனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.

நடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.

தேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.

தமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.

Share

Comments Closed