Section 375

Section 375 (Hindi) 18+ பதிவு. Spoilers ahead.

மீ டூ விவகாரம் வந்தபோதே மிகப் பரவலாக அலசப்பட்ட ஒரு விஷயம், பரஸ்பர ஒப்புதலுடன் நடக்கும் உறவு பின்னர் எப்படி பாலியல் அத்துமீறலாகக் கருதப்படலாம் என்பது. சில வழக்குகளில் ‘ஐந்து வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார்’ என்றெல்லாம் வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டாலும், ஒரு தடவை சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் கூட அது பாலியல் பலாத்காரமே என்பதுதான் இதிலுள்ள செய்தி.

நோ மீன்ஸ் நோ என்று சொன்ன பின்க் திரைப்படம் போல, இந்தத் திரைப்படமும் பாலியல் அத்துமீறலைப் பற்றிச் சொல்கிறது. ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே ஒரு பெண் பொய்யாக வழக்கைப் புனைகிறாள். டிஃபன்ஸ் தரப்பு எத்தனையோ ஆதாரங்களை வலுவாகக் காட்டியும், குற்றம் நடக்கவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க முடியாமல் போகிறது. எத்தனை முறை பரஸ்பர ஒப்புதலுடன் உறவு கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றதுக்கு வந்து பாலியல் பலாத்காரம் என்று சொன்னால், அதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள சட்டம் அறிவுறுத்துகிறது. அதன் அடிப்படையில் தீர்ப்பு வருகிறது.

சட்டம் சார்ந்த படங்களைச் செய்வதில் ஹிந்தி திரை உலகம் நிபுணத்துவம் பெற்றுவிட்டது என்று நினைக்கிறேன். மிக முக்கியமான படம் தல்வார் என்று சொல்லலாம். இன்னொரு முக்கியமான படம் ஆர்ட்டிகிள் 15. ஜாலி எல் எல் பி கொஞ்சம் கமர்ஷியலாக இருந்தாலும், மிக சுவாரஸ்யமான படம். பின்க்கும் அப்படியே. இந்தப் படமும். பின்க் மற்றும் செக்‌ஷன் 375ல் நமக்குப் புலம்ப பல விஷயங்கள் இருந்தாலும், பாலியல் ரீதியான பிரச்சினையில் சட்டத்தின் பார்வையை இந்தியா முழுக்க கொண்டு சென்றதில், இந்தப் படங்கள் மிக முக்கியமான பங்கை வகித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. A must watch movie.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை எங்கேயும் படம் அலைபாயவில்லை. நூல் பிடித்தாற்போல் செல்கிறது. ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. படத்தை மக்களுக்குக் கொண்டு செல்கிறேன் என்று, நேர் கொண்ட பார்வை செய்த அநியாய அக்கிரமங்களைச் செய்யவில்லை. தான் வக்கீல் மட்டுமே என்று உணர்ந்து நடிக்கும் நடிகர்கள். மிக முக்கியமான படம் இது.

Share

Comments Closed