புகார் நகரத்துப் பெருவணிகன் – முன்னோர் சொல்

சில நாவல்களைப் படிக்கும்போது ஒரு புல்லரிப்பு ஏற்படும். அது சில சமயம் வெகுஜன நாவலாக இருக்கும். சில சமயம் தீவிர இலக்கிய நாவலாக இருக்கும். எதனால் புல்லரிப்பு ஏற்படுகிறது என்பது நாம் என்ன படிக்கிறோம், நம் மனநிலை என்ன, நம் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பொருத்தது. இன்று சமூக ஊடகங்களில் எந்த ஒரு சீரியஸ் விஷயத்தையும் தொடர்ச்சியாகச் சொல்வதன் மூலம் அதைக் கேலிச் சொல்லாடலாக மாற்றிவிடலாம். எல்லையில் வீரர்கள் என்பதைச் சொல்லலாம். நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதைச் சொல்லலாம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றமாதிரிதான் சிலர் நடந்து கொள்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் எல்லா நேரங்களிலும் இந்தக் கேலிச் சொல்லாடல் அதன் நிஜமான நோக்கத்துடன் சொல்லப்படுவதில்லை.

ஒரு நாவல் முழுக்க, பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்படங்களில் பன்ச் வசனம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு படத்தின் வெற்றிக்கு அது உதவும் என்பதற்காகப் படம் முழுக்க பன்ச்சாக இருந்தால்? பிடிக்காது என்றுதானே நினைக்கிறீர்கள்? உண்மைதான். ஒருவேளை, அதாவது ஒருவேளை அப்படிப் படம் முழுக்க பன்ச்சாக இருந்து, அதுவும் மிகவும் நன்றாக இருந்துவிட்டால்? அது ஒரு கற்பனைத் திரைப்படமாக மட்டுமே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படி ஒரு கனவு நாவல்தான் புகார் நகரத்துப் பெரு வணிகன்.

உண்மையில் இது ஒரு பழிவாங்கும் படலம் உள்ள நாவல். பழி வாங்கும் படலம் நான்கு வரிகள் என்றால் நாலாயிரம் வரிக்குச் சொல்லப்படுபவை எல்லாம் தமிழனின் பெருமைகளே. கவனியுங்கள். தமிழின் பெருமை அல்ல. அதுவும் இருக்கிறது. ஆனால் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்படுவது தமிழனின் பெருமைதான். அதுவும் ஆதாரத்தோடு. அதுவும் விளக்கமாக. மிக முக்கியமாக எந்த ஒரு இனத்தின் மீதும் எந்த ஒரு பகுதியின் மீதும் வெறுப்பைத் தூவாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் இது கனவு நாவல் என்று புரிகிறதா?

எந்த ஒன்றைப் பற்றியும் விரிவான, மிக மிக மிக விரிவான செய்திகளைப் பட்டியலிட்டே தீருவது என்ற முடிவோடு நாவலை எழுதி இருக்கிறார் பா.பிரபாகரன். இவர் எழுதிய முதல் நூலான ‘குமரிக் கண்டமும் சுமேரியமும்’ ஒரு சூப்பர் ஹிட் புத்தகம். இந்த நூலில் பிரபாகரன் திகைக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில், ‘சாமி போதும்’ என்று அவரை அழைத்து வந்து காலில் விழுந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. படிக்கும் நமக்கு மூச்சு வாங்குகிறது. ஆனால் பிரபாகரன் அசருவதே இல்லை. விட்டால் இன்னும் ஆயிரம் பக்கங்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை அள்ளித் தெளித்துப் போய்க்கொண்டே இருப்பார் போல.

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை என்று சொன்னேன் இல்லையா? அது மிகைப்படுத்திச் சொன்னது அல்ல. சும்மா நானாக என் கற்பனையில் ஒரு உதாரணம் சொல்கிறேன். கப்பலில் பயணித்தார்கள். காற்று அடித்தது. திசையைப் பார்த்தார்கள். கப்பலோடி யோசித்தான். இந்த நான்கு வரிகளைச் சொல்ல வேண்டும் என்றால் பிரபாகரன் என்ன செய்கிறார் தெரியுமா? கப்பல் என்றால் அதில் எத்தனை வகை, என்ன என்ன வகை, ஒவ்வொன்றின் பெயர் என்ன என்று சொல்கிறார். பயணம் என்றால் எப்படிப்பட்ட பயணம் என்று ஒரு விளக்கம். காற்று என்றால் எத்தனை வகையான காற்று, எத்தனை வகையான திசை என்றெல்லாம் ஒரு பட்டியல். திசை என்றால் எத்தனை திசை என்று பட்டியல். கப்பலோடி என்றால், எத்தனை வகையான கப்பலோடிகள், ஒவ்வொருவரின் பெயர் என்ன, அவர்களுக்கு என்ன என்ன வேலை இப்படியான பட்டியல். நான் சொன்னது 1% கூட இல்லை! இப்போது யோசித்துப் பாருங்கள். நானூறு பக்க நாவலில் எத்தனை விளக்கங்கள் இருக்கும் என்று. எத்தனை பட்டியல் இருக்கும் என்று. கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியாவையே கையில் தந்துவிட்டார் பிரபாகரன். சேலை என்றாலும் பட்டியல், உணவு என்றாலும் பட்டியல், முலைக்கச்சை என்றால்கூட பட்டியல்தான். அவர் என்ன என்ன பட்டியல் இட்டிருக்கிறார் என்பதைத் தனியே தொகுத்தால் அவையே இருநூறு பக்கங்கள் வரும்.

ஈழம், சீனா என்றெல்லாம் செல்லும் நாவல், சீனாவைக் கொஞ்சம் நெருக்கமாகவே காட்டுகிறது. அதுவும் அந்தக் கால சீனா, அவர்களின் வணிகம், அவர்களின் வாழ்க்கை முறை என்று கொஞ்சம் விரிவாகவே சொல்கிறது. பட்டியலும் விளக்கமும் தமிழர்களுக்கு மட்டும் அல்ல, சீனர்களுக்கும் உண்டு!

தவறவிட்டுவிடக் கூடாத நாவல். தமிழர்களின் பெருமைக்கு மகுடம் தந்திருக்கிறார் பிரபாகரன். அதிலும் எந்த ஒரு மொழியையும் இகழாமல், இந்தியாவை வெறுக்காமல், நிஜமான தமிழ் உணர்வுடன் கூடிய நாவல் இது. இதற்காகவே இந்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தரப்படவேண்டும். அத்தனை முக்கியமான நாவல் இது. Dont miss it.

ஆன்லைனில் அச்சுப் புத்தகமும், இபுத்தகமும் கிடைக்கும். அமேஸான், ஃப்ளிப்கார்ட், டயல் ஃபார் புக்ஸில் தேடிப் பாருங்கள்.

Share

Comments Closed