OTT வழியாக வரும் திரைப்படங்கள்

கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின்போதே எழுத நினைத்தேன். படத்தின் விமர்சனம் தடம் மாறிப் போய்விடுமோ என்று எழுதாமல் விட்டேன். இந்தத் திரைப்படம் பார்க்க ஒரு காட்சிக்கு 199 ரூ. சென்னையில் தியேட்டருக்குப் போய் ஒரு படம் பார்த்துவிட்டு வர எல்லாச் செலவுகளும் சேர்த்து குறைந்தது 500 ரூபாய் வரை ஆகும். நேரமும் கணிசமாகவே ஆகும். வீட்டில் அமர்ந்து பார்த்தால் 199 ரூபாய் மட்டுமே. ஆனால் திரையரங்கு தரும் பிரமாண்டம் நிச்சயம் தவறிப் போகும். பெரிய தொலைக்காட்சி, 5.1 என்று இந்த அனுபவத்தைக் கொஞ்சம் நெருங்கலாம் என்றாலும், திரையரங்கு தரும் அனுபவம் அலாதிதான். அதேசமயம், பணமும் நேரமும் எத்தனை மிச்சம் என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படம் வந்தபோது கமல் இதைச் செய்ய நினைத்தார். அன்று நடந்த தவறு என்ன? சுருக்கமாகச் சொன்னால், பேராசை. ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய்! இது கமலின் முடிவா, டிஷ் நிறுவனத்தின் முடிவா என்பதெல்லாம் தெரியாது. ஒரு குடும்பத்துக்கே ஆயிரம் ரூபாய்தான் என்று யோசித்து அவர்களே சமாதானம் ஆகி இருப்பார்கள் போல. பொருட்படுத்தத் தக்க அளவுக்குக் கூட முன்பதிவு இல்லை. அத்திட்டம் கைவிடப்பட்டு, திரைப்படம் வழக்கம்போல் திரையரங்கிலேயே வெளியானது. இன்று க/பெ 199 ரூபாய்க்கு வந்திருக்கிறது.

அமேஸான் ப்ரைம் ஒரு மாதத்துக்கு 160 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு பல திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. எப்படியும் புதுத் திரைப்படம் ஒன்றாவது பார்த்துவிட முடிகிறது. வேற்று மொழிப் படங்களையும் பார்க்க முடிகிறது. அதை ஒப்பிட்டால் இந்த 199 ரூபாயே அதிகம் என்கிற தோற்றம் உருவாகி வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

டிஷ் வழியாகப் பார்க்கப்படும் படங்களில் பிரச்சினைகள் என்ன? டாடா ஸ்கையின் ஆன் டிமாண்ட் மூலம் படம் பார்த்தால், அப்படத்தை அந்தத் தினம் முழுக்கப் பார்க்கலாம். ஆனால் க/பெ அப்படிப் பார்க்க முடியவில்லை. ஒரு காட்சி மட்டுமே. அதாவது திரையரங்கில் பார்ப்பதைப் போலவே. அன்று திடீரென மழை பெய்து படம் தெரியாமல் போனால்? மின்சாரம் தடைபட்டால்? வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால்? பணம் போனது போனதுதான். திரையரங்கில் இப்பிரச்சினைகள் எல்லாம் இல்லை. வீட்டில் இந்த அத்தனை பிரச்சினைகளும் உண்டு. எனவே ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்பதை மாற்றவேண்டும்.

அதேபோல் எதாவது ஒரு சானலில் என்பதைக் கைவிட வேண்டும். ஏன் எக்ஸ்க்ளூசிவிட்டிக்குப் (தனியுரிமை) போகிறார்கள் என்றே தெரியவில்லை. அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு சானலின் வழியாகவும் படம் பார்க்க முடியும் என்கிற வசதி வரவேண்டும். ஒரு படம் பார்க்க கட்டணம் இவ்வளவு என்று மட்டுமே நிர்ணயிக்கவேண்டும். அதாவது இந்த ஓடிடி சானல்கள் திரையரங்குகளின் இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது 10% தள்ளுபடி கொடுத்து கூடுதல் பார்வையாளர்களைப் பெற முடிந்தால் அது அவர்கள் இஷ்டம். இப்படிச் செய்தால், டிஷ், அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு தளத்தின் வழியாகவும் பார்க்க முடியும் என்பதால், நிச்சயம் பார்வையாளர்கள் கூடுவார்கள்.

ப்ரைமில் கூட, இப்படி தனியுரிமை இல்லாமல் வெளியாகும் படங்களுக்குப் பணம் வசூலிக்கலாம். ப்ரைமில் இல்லாதவர்கள் ஒரு படத்துக்கு மட்டும் பணம் செலுத்திப் பார்க்க முடியும் என்ற வசதியைக் கொண்டு வரலாம். நெட்ஃப்ளிக்ஸிலும். ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு 50% தள்ளுபடி தரலாம். இப்படியெல்லாம் செய்தால் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு கூட்ட முடியும்.

எந்த ஒரு சானலில் படம் ஒளிபரப்பானாலும் மறுநாளே திருட்டுத்தனமாகப் படத்தைத் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்றாகிவிட்டது. அப்படி இருக்கும்போது, படத்துக்குக் குறைவான கட்டணத்தை வைத்துக் கூடுதல் பார்வையாளர்களைக் கொண்டு வர முயலவேண்டும். விஸ்வரூபம் பார்க்க 1000 ரூபாய் என்ற தப்பை, எதோ ஒரு சாதாரணப் படத்துக்கு 200 ரூபாய் என்று வைத்து, இன்னொரு வகையில் தவறு செய்யக் கூடாது. தேவை என்றால் முதல் நாள் மட்டும் 200 ரூபாய், மறுநாள் 100 ரூபாய் என்று கூட யோசிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்வையாளர்களைக் கூட்டுவது எப்படி என்று யோசிப்பது நல்லது. அதற்கு இந்தத் தனியுரிமை என்னும் எக்ஸ்க்ளூசிவிட்டி ஒழியவேண்டும். அதற்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒரே அணியில் வரவேண்டும். இதெல்லாம் நடக்குமா எனத் தெரியாது. நடக்காமல் இருக்கவே வாய்ப்பதிகம். அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வணிக நிறுவனங்களும் இப்படி நடப்பதை விரும்பாது, அனுமதிக்காது. ஆனால், எந்தத் திரையரங்கில் எந்தப் படம் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எப்படி இல்லையோ அது போல இந்த ஓடிடி உலகம் மாறாதவரை, திரைப்படங்கள் தங்களுக்கான நியாயமான சந்தையை முழுமையாகப் பெறப் போவதில்லை.

Share

Comments Closed