சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்

ஏர் டெக்கான் மற்றும் கேப்டன் கோபிநாத் என்ற பெயர்கள், இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவை. இன்று ஏர் டெக்கான் மூடப்பட்டிருந்தாலும், கேப்டன் கோபிநாத் கொண்டுவந்த புதுமையான யோசனையும் அதனால் விளைந்த பயனும் இன்றியமையாதவை. எதையுமே பெரிதாக யோசி, வித்தியாசமாக யோசி என்பதைச் செயல்படுத்திக் காண்பிக்கும் தொழிலதிபர்களே நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவர்கள். இன்றைய ஜியோ புரட்சியை இதனுடன் ஒப்பிடலாம். நாளை ஜியோ நஷ்டத்தில் மூடப்பட்டாலும், 4ஜி தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் சாமானியனுக்கும் கொண்டு சென்ற பெருமை ஜியோவையே சேரும். அப்படி ஒரு புரட்சியையே கேப்டன் கோபிநாத் செய்தார். ஜியோ செய்த புரட்சியையும் விட கடினமான புரட்சி என்று புரிந்துகொண்டால், கேப்டன் கோபிநாத்தின் சாதனை நமக்குப் புரியும். கேப்டன் கோபிநாத்தின் ஏர் டெக்கானும் நஷ்டத்தாலும் பிற சூழ்ச்சிகளாலும் மூடப்பட்டது. ஆனாலும் முன்னோடி கேப்டன் கோபிநாத்தின் சிந்தனைதான்.

எல்லா ஆர்வலர்களையும் போல கேப்டன் கோபிநாத்துக்கும் புத்தி ஒரு நிலையில் இருக்காது. விவசாயம், ஹெலிகாட்பர் சேவை, அரசியல் ஆர்வம், ஏர்டெக்கான் என்று அவர் என்னவெல்லாமோ செய்து பார்த்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை சந்தேகமே இல்லாமல் ஒரு திரைப்படத்துக்கு உரியதுதான். சோகம் என்னவென்றால், தமிழில் நாம் இன்னும் இதற்குப் பக்குவப்படவில்லை என்பதுதான். இத்தனைக்கும் ஒரு திறமையான இயக்குநரே படத்தை இயக்கி இருக்கிறார். அப்படி இருந்தும் இத்தனை சறுக்கல்.

படத்தின் ப்ளஸ்களை முதலில் வேகமாகப் பார்த்துவிடலாம். ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க முடிகிறது. மிகத் திறமையான நடிகர்களைத் தேடி தேடி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அச்யுத், பரேஷ் ராவல், பிரகாஷ் பெலவாடி என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சிறந்த நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் படத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு நடிக்கிறார்கள். தமிழ் நடிகர்களில் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, பூ ராமு என்ற திறமையான நடிகர்கள். திருஷ்டிப் பொட்டு என்றால், ஊர்வசி மற்றும் மோகன் பாபு. மோகன் பாபு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நாள்களிலேயே நடிக்கத் தெரியாது. இப்போதும் அப்படியே. சூர்யா என்னதான் நடிக்க முயன்றாலும், எனக்கு ஒட்டாது. இவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டுகிறார் அபர்ணா. அவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். அப்படி ஒரு நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் தரம். ஒவ்வொரு காட்சியும் தரமாக இருப்பதில் அத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் முள்ளும் மலரும் ஓடும் காட்சி, சூர்யா – அபர்ணாவின் காதல் காட்சிகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். சடங்குகளை முடித்துக்கொண்டு, பிரச்சினைக்குப் போகலாம்.

கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம்.

சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை.

கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’புத்தகத்தில் இருந்து.
ஆங்கிலத்தில் வந்த Simply Fly – A Deccan Odyssey புத்தகத்தின் தமிழாக்கம்.

கேப்டன் கோபிநாத் ஒரு தொழிலை ஆரம்பித்துச் செய்ய பல வகைகளில் கஷ்டப்படுகிறார். அவருக்கு உதவுவது அரசியல்வாதிகள்தான். எஸ்.எம்.கிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு, வெங்கய்யா நாயுடு (பாஜக), ராஜிவ் பிரதாப் ரூடி (பாஜக) என அனைவரும் பல வகைகளில் உதவி இருக்கிறார்கள் – கட்சி பேதமின்றி. விமானத்தின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி பிரச்சினை வரும்போது மத்திய அரசே ஏர் டெக்கானுக்குத் துணை நிற்கிறது. ஆனால் திரைப்படம் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. என்னவோ அரசியல் அரங்கில் அனைவரும் மாறன்களை ஒழித்துக் கட்டிவிட்டு கோஸ்வாமிகளை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள் என்று காண்பிக்கிறார்கள். சூர்யாவை பிராமணராகவே காட்டி இருந்தால், இந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியாது. மீறி எடுத்தால், இந்தப் படம் வெறும் தொழில் போட்டிப் படமாகி இருக்கும். திரைப்படக் குழு இதனை விரும்பவில்லை. கேப்டன் கோபிநாத் எதிர்கொண்டது தொழில்போட்டியைத்தான். ஆனால் சூர்யாவுக்காக இத்திரைப்படம் ஜாதிப் போட்டிகள் நிறைந்த படமாக மாறிவிட்டது!

வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பதே கேப்டன் கோபிநாத்தின் கனவு. எதோ ஒரு பேட்டியில் தற்செயலாக கோபிநாத் ‘வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல்’ என்று சொல்லப் போக, பத்திரிகை அதையே தலைப்புச் செய்தியாக்க, வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பது ஒரு ஸ்லோகனாக மாறிப் போனது. தமிழில் இந்த உடுப்பி ஹோட்டலை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டுவிட்டார்கள். கோபினாத்தை மாறனாக்கியவர்கள் இதனைக் கூட முனியாண்டி விலாஸ் ஆக்கி இருக்கலாம். ஆனால் இதை மாற்றுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதை மாற்ற வேண்டும், எதை மாற்றத் தேவையில்லை என்று தெளிவாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு கனவுக்குப் பின்னாலும் ஒரு தனிப்பட்ட சோகம் அல்லது உந்துதல் இருக்கும் என்கிற திரைப்பட பாலபாடத்தை இவர்களும் பின்பற்றி இருக்கிறார்கள். கேப்டன் கோபிநாத்தைப் பொருத்தவரை அவரது அப்பா ஒரு தெய்வம். தனது புத்தகத்தையே முதலாக அவர் தனது அப்பாவுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் இதில் சூர்யாவைப் புரிந்துகொள்ளாத அப்பாவாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். பின்னர் தன் மகனையே எண்ணிச் செத்தும் போகிறார். அவரைப் பார்க்க சூர்யாவால் முடியவில்லை. ஏன்? ஏனென்றால் அவரது கையில் பணமில்லை. எனவே விமானத்தில் பறக்க முடியவில்லை. இத்தனை பத்தாம்பசலித்தனமாக யோசித்திருக்க வேண்டாம். தொடர்ச்சியாக நீண்ட காட்சிகள் – அலுப்பைத் தருகின்றன. என்ன நடக்கப் போகிறது எனத் தெரியும் என்னும் திரைக்கதைக்கு இவையெல்லாம் தேவையா? அப்பாவைப் பார்க்க முடிந்திருந்தாலும் மாறன் விமானப் போக்குவரத்தை ஆரம்பித்திருப்பானே? அவனுடைய கனவே அதுதானே?

கேப்டன் கோபிநாத் தேர்தலில் நின்று தோற்றுப் போகிறார். பாஜக சார்பாகப் போட்டி இட்டார். வாஜ்பாயுடன் பிரசாரம் எல்லாம் செய்திருக்கிறார். 2019ல் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகப் போட்டி இடுகிறார். மீண்டும் தோற்கிறார். ஆனால் திரைப்படம் இந்தத் திக்கில் போகவே இல்லை. அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது, கோபிநாத்தின் காதலும் கல்யாணமும்தான். தேவைக்கு அதிகமாக அதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முதல் விமானப் பயணம் தோல்வியில் முடியும்போது கூட, மனைவியின் பிரசவம் என்றெல்லாம் சவ்வாக இழுக்கிறார்கள். ஒரு பயோ பிக் திரைப்படத்தில் சொந்தப் பிரச்சினைகளை எந்த அளவில் எங்கே நிறுத்தவேண்டும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

படம் மிக மெதுவாகப் போகிறது. எப்படா விமானம் ஒழுங்கா ஓடும் என்று கொட்டாவி வரும் அளவுக்கு மெல்லப் போகிறது. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள், காரணங்கள், நம்பிக்கைத் துரோகங்கள், பழிவாங்கல்கள், சூர்யாவின் ஒரே டெம்ப்ளேட் வசனங்கள் – இவையே இந்த தொய்வுக்குக் காரணம். எந்த ஒரு சாதாரண விஷயத்துக்கும் கூட சூர்யா தடதடவென ஓடுகிறார். அங்கே நாம் ஒரு தொழிலதிபரைப் பார்க்க முடிவதில்லை. சூர்யாவைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு பயோ பிக் திரைப்படத்தை எடுக்கும்போது திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றுவது முக்கியமானதுதான். அதற்காக யாரைப் பற்றிப் படம் எடுக்கிறோமோ அவரை முதல் காட்சியிலேயே கொலை செய்துவிட்டு ஆரம்பிக்கக் கூடாது. அப்படி ஒரு முயற்சியையே சூரரைப் போற்று செய்திருக்கிறது. சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்ததில் தொடங்கி இப்படியே யோசித்து, நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு சுயசரிதைத் திரைப்படத்தை நேர்மையற்ற படமாக்கி இருக்கிறார்கள்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

Comments Closed