Archive for கவிதை

இரண்டு கவிதைகள்

நான் எழுதிய இரண்டு கவிதைகள் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளன. வாசிக்க: http://solvanam.com/?p=19298

பிஞ்சுக் கதை

மொழியறியாக் குழந்தை ஒன்றின்
கதை கேட்கத் தொடங்கினேன்
நல்லவர்கள் மட்டுமே வரும் கதை
குழந்தையின் தலையைச் சுற்றி
தேவர்கள் பூவோடு காத்திருந்தார்கள்
ரோஜா கொண்டு வந்த கைகளைக் கண்டு
குழந்தை சிரித்துக் கொண்டது
மஞ்சள் நிறப் பூ மலர்ந்தபோது
முகம் விரிந்தது
இரண்டு கைகளை
தலைக்கு இணையாக ஏந்தி
பூக்களைப் பெற்றுக்கொண்டே இருந்தது குழந்தை
இடைவேளையாக
வீறிட்ட குழந்தைக்குப் பால் கொண்டு வந்தாள் அம்மா
தேவர்கள் காத்திருந்தார்கள்
மீண்டும் பூக்கள் சொரிய
குழந்தை சிரிக்கத் தொடங்கியது
உச்சகாட்சியாகக்
குழந்தையைப் பார்க்க
கடவுள் வந்திருந்தார்
அவரைக் காக்க வைத்துவிட்டு
நல்லவர்கள் கதையை
எனக்குத் தொடர்ந்தது பிஞ்சு

தழல்

அடி நெஞ்சின் ஆழக் கிடந்து
பல்லாண்டு ஊறி
பலம்கொண்ட வார்த்தைசெய்து
வீசியெறியப்பட்ட தழல்.
எங்கும் பற்றிக்கொண்டது
பைந்தழைகள் பற்றிக்கொண்டன
பசுமரம் எரியத் தொடங்கியது
வானெங்கும் தீ சூழ
எல்லாம் சிவப்பு நிறம்
எங்கும் செம்மை
கண்கள் காணுவதெல்லாம் செந்நிறம்
கண்களும் செம்மை கொண்டன
தழல் பரவ பரவ
என்னுடலும் தழலானது
அக்னியின் கோபத்தில்
என்னுடல் கிளர்ந்தபோது
அக்னிக்கும் எனக்குமான
சிறிய இடைவெளியும் அற்றுப்போனது
எல்லாம் ஒன்றானது
நீண்ட பெருமழையிலும்
விடாது எரிந்தது தீ
ஒரு வார்த்தையில்
உலகம் தீயானது
பசுமரத்தில் இடி விழுந்தது போல
இடி சொல்லாகுமா?
கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகளில்
இரண்டொரு கங்குகள் உருண்டன
தழலெறிந்தவனுக்கு
அவை அர்ப்பணம்.

Share

ஓட்டம் – கவிதை

மனத்தின் கீழே
மெல்லிய கசப்புப் போர்வைகளை அடுக்கி
மேலே படுக்க வைத்திருந்தான்
இன்சொல் என்னும் கடவுளை

அவளது கவனம்
எப்போதும் அந்தப் போர்வையில்தான்

கடவுளை விரட்டிவிட்டு
போர்வைகளுக்குள் திக்கின்றி அலையும்
பூனைக்குட்டிகளை
காதைப் பிடித்துத் தூக்கி வருவதில்
அவள் மிடுக்கி

கடவுளிலும் கசப்பிலும்
தன்னைக் காணும்தோறும்
நிர்வாணம் கூசி ஓடுவான் அவன்
வேட்டை நாயின் மூச்சிரைப்போடு

திரும்பிப் பார்க்க அஞ்சி
நிற்காது ஓடுகிறான்
யுகம் யுகமாக
கையில் ஒரு கல்லுடனும்
ஒரு முயலின் கலவரத்தோடும்.

Share

நான்கு கவிதைகள்

நன்றி: சொல்வனம்

காத்திருப்பு

வலையில் சிக்கி நெளியும்
மனதை விடுவிக்க நேரம் பார்த்து
காத்திருந்தாள் வேலையில்லாத பெண்ணொருத்தி
சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது
இருவரும் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்

அன்றொருவன் வந்திருந்தான்

அவனைக் கடவுள் என்றேன்
அன்று தெருவழியே ஒரு பிணம் சென்றது
சில மனிதர்கள் சென்றிருந்தார்கள்
நசுக்கப்பட்டுக் கிடந்தன சில மலர்கள்
மீன் கொண்டு வந்தவனை
கத்திக்கொண்டிருந்தது பூனை
மழையை எதிர்த்தன குடைகள்
அன்றுதான் அவன் வந்திருந்தான்
இத்தனையையும் அவன் கவனிக்கவில்லை
எல்லோருக்கும் ஒரே புன்னகை
மழையின் நீர்
எதிர்ப்பற்ற ஒரு மனிதன்
கிடைத்துவிட்ட வெறியில்
கலந்து தீர்த்தது மிக வேகமாய்
யாருமில்லாத தோரணையில்
அவனருகே கிடந்து
மீனைத் தின்றது பூனை

சட்டகம்

பதின்ம வயதிலிருந்து
சட்டகம் செய்துகொண்டிருக்கிறேன்
அளவு கச்சிதம் தப்பியதே இல்லை
அதன் உள்முனைகளில்
சிக்கிக் கொண்டுவிடும் மனிதர்கள்
பின் மீறி வெளியே சென்றதே இல்லை
அதை எப்படிச் சிறிதாக்கினாலும்
விரும்பி வந்து புன்னகையுடன்
தன்னை அடைத்துக்கொண்டார்கள் அவர்கள்
சுற்றித் திரியும் மனிதர்கள்
கழுத்தெல்லாம் என் தயாரிப்புப் பொருள்
அலுத்துப் போகிறது எனக்கு.
இதோ இப்போது சொல்கிறேன்,
நான் இனி சட்டகம் செய்யப்போவதில்லை
உங்களுக்கான ஒன்றை
நீங்களே கொண்டு வந்துவிடுங்கள் ப்ளீஸ்.

தேடல்

தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை
விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?

யாரோ சொன்னதாகத்தான் நினைவு
யார் சொன்னதென நினைவில்லை
எப்போது என்பதும் நினைவில்லை
ஆனால் சொல்லின் காலத்தெளிவும்
சொல்லியின் தொனியும்
இன்னும் பசுமையாக
நானேதான் நினைத்தேனா
என் மனசுக்குள் இருந்துகொண்டு
நானேதான் பேசிக்கொண்டேனா
தெரியாமல் விழுங்கமுடியுமா
குழப்பமே எஞ்சுகிறது
தெளிவாக வரிசையாக
யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?
நிச்சயம் கனவில்லை
யார் சொல்லியிருந்தாலும்
இப்போது யாரிடமிருந்தாலும்
அச்சொல் என்சொல்

Share

கிவிஞர்களை விரட்டுவோம் – 1

தினம் ஒரு கவிதை என்று எழுதிவிடலாம் என்றுதான் நினைத்தேன். கொஞ்சம் ‘செட்’ ஆகவில்லை. கவிதை என்று எழுதுவார்களாம். அதுவே கிவிதை போலத்தான் உள்ளது. மீண்டும் அதனைக் கிவிதை என்று வேறு ஒரு மாதிரி எழுதுவார்களாம். அதுவும் கிவிதை போலவே இருக்குமாம். நாங்களெல்லாம் சுணுக்குடனேயே போரிட்டு வளர்ந்தவர்கள்!

இன்றைய கவிதைகளில் பல கவிதைகள் சொற்கூட்டாகவும், வார்த்தைகளின் வளைப்பாகவும் உள்ளன என்பது உண்மையே. பொருட்படுத்தத்தக்க விமர்சனமே. ஆனால் எந்த ஒரு படைப்பிலக்கியத்திலும் இந்தப் பிரச்சினை என்பது இருந்தே தீரும். கட்டுரைகளிலும், கதைகளிலும் நாம் இன்று காண்பது என்ன? விவாதங்கள் என்பதில் நாம் காண்பது என்ன? சிறுகதை என்பது இன்று எதில் வேண்டுமானாலும் எழுதலாம் என்று தொடங்கி, எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று தொடங்கி, அதில் எல்லாமே இருக்கிறது. ஆனால் நாம் கவிதையை மட்டும் பிடித்துக்கொண்டு கிவிதை என்கிறோம். ஏனென்றால், நாம் கவிதை மட்டுமே எழுதுவதில்லை என்பதால் இருக்கலாம்.

முதலில் கிவிதை ஒன்றைப் பார்ப்போம்.

வக்கற்றவர்கள்

கல்யாணம் செய்துகொண்டு வாழ வக்கில்லை
திருமணம் சமூகத் தேவையல்ல என்றிடவேண்டும்
குழந்தையை கண்டித்து வளர்க்க வக்கில்லை
குழந்தைச் சுதந்திரம் தேவை என்றிடவேண்டும்
கணினி பயன்படுத்த வக்கில்லை
பேப்பர் பேனா போல வருமா என்றிடவேண்டும்
புத்தகம் படிக்க வக்கில்லை
நேரமே இல்லை என்றிடவேண்டும்
கருத்தை மறுக்க வக்கில்லை
அதில் ஒன்றுமே இலலை மறுக்க என்றிடவேண்டும்
மிக்ஸி கிரைண்டர் வாங்க வக்கில்லை
அம்மி, ஆட்டுக்கல் உடற்பயிற்சி என்றிடவேண்டும்
கடைசி இரண்டுவரிகள்
சரிதான், அதேதான்.

இனிமேல் எனது 3 கவிதைகளை வாசிக்க சொல்வனம் செல்லுங்கள்.

முக்கியமான பின்குறிப்பு: உங்கள் கவிதையைவிட கிவிதை நன்றாக உள்ளது என்பது போன்ற கமெண்ட்டுகள் பிரசுரிக்கப்படமாட்டாது.

 

பாற்கடல்
வெண்ணிறக் குதிரைகள்
மிடறு நிமிர்த்தி பாய்ந்தோடுகின்றன
புரண்டு படுக்கிறான் மகன்
விஷ்ணுவின் புன்னகையை ஏந்தி
தொப்புள்கொடியில் லக்ஷ்மியைத் தாங்கி
வாயிடுக்கில் ஒழுகும் நீரில்
மிதக்கிறது என் கட்டில்
கட்டிப் பிடித்துக்கொள்கிறாள்
கனவின் நிறத்தில்
மலர்ந்த மனைவி
என்ன நீர்ச்சத்தம் என்கிறாள் அம்மா
அலைகளுக்கு இடையே
ஆயிரம் ஆயிரமாய்
மிதந்து வருகின்றன
அந்த இரவில்
அப்போது மலர்ந்த
தாமரை மலர்கள்
ஒரு மலரை எடுத்து
விஷ்ணுவுக்கு வைத்தேன்
எங்கேயோ ஒலிக்கிறது மணிச்சத்தம்

 


ஒளி
நீண்ட நேரம்
சூரியனை நோக்கி இருந்துவிட்டு
கொஞ்சம் ஒளியை
பைக்குள் போட்டுக்கொண்டு
உடல் அதிர நடந்தேன்
அந்தியில்
பச்சை இலைகள்
சூழ்ந்திருந்த தோட்டத்துள்
எனக்கு முன் சென்று
என்னை வரவேற்றது ஒளி
நீரில் மூழ்கினால்
என்னைச் சுற்றி
தங்க வெளிச்சம் பரப்பியது
என் பையிலிருந்த சூரியன்
இரவில் உறங்கும்போது
என் உடல் ஒளிர்ந்ததைக் கண்டேன்
மனமெங்கும் சூழ்ந்திருந்த
திசையறியா வேதனை
எங்கோ ஓட
உலகெங்கும்
வெளியெங்கும்
மனமெங்கும்
மின்னின
மறுநாள் காலை
ஒளியைத் திருப்பிக் கேட்க
வீட்டுக்குள் நுழைந்தது சூரியன்
நான் குளிரத் தொடங்கினேன்
என் வெளிச்சத்தில்
இன்னும் பிரகாசமாக சூரியன்

 


மகுடி
வாயின் வழியாக
பாம்புக் குட்டிகள்
வந்த வண்ணம்
எவனோ ஊதும்
மகுடிக்கு என் ஆட்டம்
ஊரெங்கும்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
கண்ணாடியில் என் முகமேகூட
வரைகலையில் மாற்றிவிட்ட மனிதன்போல
பத்தியாகவும் வாலாகவும்
மொழு மொழு உடலாகவும் தெரிகிறது
பாம்பிலிருந்து பாம்புக்குட்டிகள்
தோன்றுவது இயற்கையே
என்கிறது ஓர் அசரிரீ
மகுடிக்காரன் நிறுத்தினால்
என் பத்தி சுருங்கலாம்
பாம்புக்குட்டிகள் வீடடையலாம்
ஆனால்
நிற்பதே இல்லை மகுடிக்காரனின் இசை

Share

நான் – கவிதை

பிரிந்திருந்த ஐந்தாம் நாளில்
மெல்ல முளைத்தது சோகம்
முதன் முதலில் கண்ட காலங்கள்
புன்னகை மட்டும் பரிமாறிக்கொண்ட நிமிடங்கள்
மெல்ல தொடங்கி
தீவிரமாகத் தொட்டுக்கொண்ட நேரங்கள்
இரண்டு நாள் செல்ல
சோகம் நிறம் மாறி
மூர்க்கத்துடன் காமம்
எங்கோ நின்று அலைக்கும்
வீடு நோக்கித் திறந்து கிடந்தன கண்கள்
கதவு திறந்து உள்ளே நுழையவும்
என்னைப் பிடித்துக் கொள்கிறது
சுயமுனைப்புடன்
நான் போகும்போது விட்டுப்போன
நானென்னும் சுயம்.

Share

வழி – கவிதை

வழி என்னும் கவிதை சொல்வனத்தில் பிரசுரமாகியுள்ளது. வாசிக்க இங்கே சொடுக்கவும்.

http://solvanam.com/?p=10807

வழி

மீண்டும் கடக்கவியலாத
ஆற்றின் பாதையில் செல்கிறேன்
கணம்தோறும் நடந்துவிடும்
செயல்களைத் திருத்திக்கொள்ளும்
வாய்ப்பு மறுக்கப்படும்
வழியென்றறிந்து
கவனமாக அடி வைக்கிறேன்
கண்கூசும் ஒளியில்
நடைபிறளும் நேரமும்
வரலாறென்றாகிவிடும்
சோகத்தைக் கொண்டு
நீண்டு செல்கிறது அச்சாலை.

Share

சொல்வனத்தில் எனது கவிதைகள்

சொல்வனம்.காம் வலைத்தளத்தில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. சொல்வனத்துக்கு எனது நன்றி. கவிதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

ஆங்கென் நட்பு

சட்டெனத் தோன்றி மறைந்தது
திடீரென்று ஒரு குரல்
ரொம்ப பழகிய
ஒருவனுடையது என்பது நிச்சயம்
அவனாயிருக்குமோ இவனாயிருக்குமோ என
நினைத்துப் பார்த்ததில்
மறந்து போன எல்லா நண்பர்களும்
ஞாபகம் வந்து போனார்கள்
யாரென்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
இன்னும்.

பசும் புல்வெளியில் சுற்றும் சக்கரம்

எங்கேயிருந்தும்
ஒளி கசிய முடியாத
இருள் அறை முழுதும்
சுற்றிப் படந்திருக்கின்றன
என் நினைவுகள்
வழியில் திரும்பும்
பஸ்ஸொன்றிலிருந்து
கண நேரம் பார்த்த முகம் முதல்
ஆழ்ந்து அமிழ்ந்துபோன
நிர்வாணத்தின் தலைவரை
இறக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன
சுவரில் மோதிய வண்ணம்
கசிவைத் தேடியவண்ணம்
மெல்ல பசியத் தொடங்குகிறது அறை
புல்வெளியின் மணத்தோடும்
பசும் குழந்தையொன்றின் பால் மணத்தோடும்

தெருவோரம் நடப்பவன்

வீட்டுக்குள்ளே இருந்து
தெருவில் நடப்பவனைப் பற்றிய
சித்திரங்களை உருவாக்கி வைத்திருந்தேன்.
கந்தல் துணியை நிரடியபடி நடந்தபோது
அவனுக்காக நான் பரிதாபப்பட்டிருந்தேன்
அக்குள் சொறிந்து முகர்ந்தபோது
அருவருப்படைந்திருந்தேன்
ஒன்றுமில்லாத வெளியைப் பார்த்துச் சிரித்தபோது
ஆச்சரியப்பட்டிருந்தேன்
இன்று இதோ அவன் வருகிறான்
இன்றைய சித்திரம்
அவன் என்னை எப்போதும்போல் பார்த்து
கடப்பதாக இருக்கிறது.

Share

கடல் சிறுமியாக மாறிய கதை – கவிதை

கடல் சிறுமியாக மாறிய கதை

ஓட்டமும் நடையுமாக
கடற்கரையைக் கடந்த நாளில்
தற்செயலாகக் கவனித்தேன்
ஒரு சிறுமி கையில் பொம்மையுடன்
கடலோடு பேசிக்கொண்டிருந்தாள்.
வானெங்கும் பறந்துகொண்டிருந்த பட்டங்கள்
திக்கற்றுத் திரிந்தன
சிறுமியின் வார்த்தைகளைப் போல
ஆர்பரித்துக்கொண்டிருந்த கடல்
மெல்ல அடங்கத் தொடங்கியது
வீட்டுத் தோட்டத்தில்
வளரத் தொடங்கியிருக்கும் ரோஜா பதியனைப் பற்றி
அவள் சொல்லத் தொடங்கியபோது
கரையெங்கும் ரோஜாவின் வாசம்
அம்மாவின் மீது குற்றச்சாட்டு அத்தியாயத்தில்
நூலொன்று அறுந்து
தலைகுத்திக் கீழே விழுந்தது
சிரித்துக்கொண்டிருந்த பட்டம்
மெல்ல இருட்டத் தொடங்கி வானில் நட்சத்திரங்கள் தோன்றின
அவள் பொம்மைக்கு நட்சத்திரங்களைக் காட்டினாள்
செல்ல நாய்க்குட்டிக்கு சில முத்தங்களைக் கொடுத்தனுப்பினாள்
கரையின் இங்கு இடுக்குகளையெல்லாம்
கொஞ்சலால் நிரப்பிக் கொண்டிருந்தாள் சிறுமி
கடல் தன்னை மறந்து
சிறுமியோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க
பொம்மை அலைந்துகொண்டிருக்கும் கடலாய்
மாறிப் போயிருந்தாள் சிறுமி.

Share