Tag Archive for சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற புத்தகத்தின் பெயர் மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் இப்புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன். 2005ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அலைகள் வெளியீட்டகம் புத்தக அரங்கில் இப்புத்தகத்தைப் பார்த்தேன். அலைகள் வெளியீட்டகத்தின் மற்ற புத்தகங்கள் எல்லாம் எனக்கு பயத்தை ஊட்டுவனவாக இருந்தன. எனவே இப்புத்தகமும் இப்படி இடதுசாரி புகழ்ச்சியைத் தூக்கிப் பிடிக்கும் புத்தகமாக இருக்கும் என்று நினைத்து வாங்காமல் விட்டுவிட்டேன். அடுத்தடுத்த புத்தகக் கண்காட்சிகளிலும் இப்படியே.

wrapper_sathi_vazhakkugal

ஒரு புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் இந்தப் புத்தகத்தைக் கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்தார்கள். அப்போதெல்லாம் விஜயபாரதம் அரங்கில் யாரையுமே எனக்குத் தெரியாது. எப்படி இந்தப் புத்தகத்தை இங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கவும் எனக்குக் கூச்சமாக இருந்தது. உடனே அலைகள் வெளியீட்டகம் ஸ்டாலுக்குப் போனேன். அங்கேயும் இதே புத்தகம் இருந்தது. அப்படியானால் இது இடதுசாரி உயர்வுநவிற்சிப் புத்தகமா, ஆமென்றால் அதை ஏன் விஜயபாரதம் விற்கிறது என்றெல்லாம் எனக்குக் குழப்பம். உள்ளே புரட்டிப் பார்த்ததில் பல சுவாரஸ்யமான வழக்குகளும், காந்தியைப் பற்றி விமர்சனங்களும் கண்ணில் பட்டன. அப்போதும் வாங்காமல் வந்துவிட்டேன்.

பின்பு ஒருமுறை அரவிந்தன் நீலகண்டன் இந்தப் புத்தகத்தை சிலாகித்துப் பேசினார். இனிமேல் தைரியமாக இந்தப் புத்தகத்தை வாங்கலாம் என்று முடிவு கட்டி, அன்றே அப்புத்தகத்தை வாங்கினேன்.

இப்போது கிழக்கு வெளியீடாக பிரபல கொலை வழக்குகள் என்றொரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. இப்படி ஒரு புத்தகம் வரவேண்டும் என்று உழைத்ததன் முழுப் பங்கும் மருதனையே சாரும். தமிழ்பேப்பரில் நானும் அவரும் எடிட்டர்களாக இருந்தபோது, கொலை வழக்குகள் பற்றி வக்கீல் ஒருவர் எழுதப்போகிறார் என்று மருதன் சொல்லவும், எனக்கு மீண்டும் சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் புத்தகம் நினைவுக்கு வந்தது. அப்போதும் அதை வாசித்தேன்.

கடந்த சில தினங்களாக மீண்டும் இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

பிரபல கொலை வழக்குகள் புத்தகம் போல, சரித்தரத்தை மாற்றிய சதி வழக்குகள் புத்தகம் எவ்விதமான சட்டப் பார்வையையும் கொண்டிருக்கவில்லை. மேலும் சுதந்திரத்துக்கு முற்பட்ட சதி வழக்குகளை மட்டுமே ‘சரித்திரத்தை மாற்றிய சதிவழக்குகள்’ புத்தகம் பேசுகிறது. எனவே எல்லா சதி வழக்குகளும் இந்திய சுதந்திரத்தோடு பிணைந்துகொண்டுள்ளது. இது புத்தகத்துக்கு ஒரு பொதுப்பார்வையையும் தந்துவிடுகிறது.’1961முதல் 1977 வரை பாரதம் இதழில் சில பகுதிகளும், பின்னர் 40 வாரங்களுக்கு சுதந்திரம் இதழிலும் இக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் போரில் தமிழகச் சதி வழக்குகள் என்ற பெயரில் வெளிவந்த புத்தகத்தில் இதிலிருந்த சில கட்டுரைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். அலைகள் வெளியீடாக 2001ல் சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள் என்ற பெயரில் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இப்போதும் கிடைக்கிறது.

இந்திய சுதந்திரம் என்றாலே காந்தி என்ற பெயர் மட்டுமே தெரியும் என்பவர்கள் நிச்சயம் வாசிக்கவேண்டிய நூல் இது. பெயர் தெரியாத எண்ணிலடங்கா தியாகிகளுக்கு இந்த நூல் அர்ப்பணம் என்று நூலாசிரியர் சமர்ப்பணத்தில் சொல்லியிருக்கிறார். இந்நூல் முழுமைக்கும் அப்படிப் பெயர் தெரியாத பல சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நாம் பார்க்கலாம். கூடவே காந்தியின் முக்கியத்துவத்தையும் நாமே உணர்ந்துகொள்ளமுடியும். இந்நூலில் காந்தியைத் தவிர்க்கமுடியாமலும் அதே சமயம் புகழமுடியாமலும் உள்ள தவிப்பை நாம் மிக எளிதாகக் கடந்துவிடமுடியும்.

index_sathi_vazakkugalபடிக்கும்போதே ஒருவித வீராவேசத்தைக் கொண்டு வரும் எழுத்து நடையில் இப்புத்தகம் உள்ளது. அதேசமயம் அது தறிகெட்டு மேலெழும்பி வெற்று உயர்வுநவிற்சி வாக்கியங்களாகவும் ஆகிவிடவில்லை. பல்வேறு சிறிய சிறிய ஆனால் அரிய குறிப்புகள் நூல் முழுவதும் உள்ளது. ஒருவித இடதுசாரி நோக்கில் எழுதப்பட்டிருப்பதால், காந்தியைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம் காந்தியின் முக்கியத்துவத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் ஆசிரியர். காந்தியைப் பற்றி பல்வேறு தலைவர்கள் சொன்ன எதிர்க்கருத்துக்களையெல்லாம் மிக முக்கிய ஆவணங்களாகக் கருதி அவற்றை மொழிபெயர்த்து இந்நூலில் சரியான இடத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதில் ஒன்று இங்கே:

சௌரி சௌரா சம்பவத்தை அடுத்து காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டபின்பு, நேரு எழுதுவது இது. (காக்கோரி சதி வழக்கில் இது கொடுக்கப்பட்டிருக்கிறது.)

“இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில், மக்கள் அடக்குமுறை தாளாமல் பலாத்காரத்தை உபயோகித்து விட்டார்கள் என்பதற்காக, இந்திய சுதந்திரப் போராட்டத்தையே ஒத்திவைப்பதா? ஆம் என்றால், காந்திஜி கூறும் அகிம்சைக் கொள்கையில் எங்கோ ஒரு பெரிய கோளாறு இருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த மகத்தான தேசத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கும், அகிம்சைக் கோட்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து உதறி பாடம் நடத்தி, ஒவ்வொருவரையும் அகிம்சாவாதியாக மாற்றிய பின்னர்தான் போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றால், இம்மாதிரி பலாத்காரச் சம்பவங்கள் இனி ஒரு போதும் நடக்காது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் போராட்டம் நடத்தவேண்டும் என்றால் அது ஒரு காலத்திலும் சாத்தியப்படாது.

அப்படியே சாத்தியப்பட்டாலும் அதற்குப் பிரிட்டிஷ் போலிசார் நம்மோடு ஒத்துழைப்பார்களா? சாத்வீகமாகப் போராடும் தொண்டர்கள் மீது ஆத்திரத்தைக் கிளறிவிடும் அடக்குமுறைகளை ஏவாமல் இருப்பார்களா? இதற்கான உத்தரவாதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தரமுடியுமா? அதுவும் கைக்கூலிகள் தாங்கலே இம்மாதிரி வன்முறைச் செயல்களைச் செய்துவிட்டுப் பழியை நமது இயக்கத்தின் மீது போடுவதை நம்மால் தடுக்க இயலுமா? ஒருக்காலும் முடியாது.

இந்தியா முழுவதிலும் எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவமே நடக்காது என்ற உத்தரவாதம் ஏற்பட்டால்தான் இயக்கத்தைத் தொடரமுடியும் என்று காந்திஜி கருதுவாரானால் அவரது இயக்கமும் சரி; அகிம்சைப் போராட்டமும் சரி, ஆயிரம் ஆண்டுகளானாலும் வெற்றி பெறப் போவதில்லை. ஒரு அடிமை நாட்டு மக்களிடமிருந்து, அடச்க்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அப்படிப்பட்ட உத்தரவாதத்தைப் பெற எவராலும் முடியாது.”

 

இதுபோன்ற பல குறிப்புகள் இந்நூல் முழுவதும் குவிந்து கிடக்கின்றன. இதில் வரும் வழக்குகளின் விவரங்களையெல்லாம் மனத்தில் இருத்திக் கொள்ளவே முடியாது என்றே நினைக்கிறேன். அத்தனை வழக்குகள் கையாளப்பட்டுள்ளன. 32 வழக்குகள் பற்றி மிக விவரமாக 432 பக்கங்களுக்கு விரிகிறது இந்த நூல். ஆய்வு செய்து எழுதப்பட்டிருந்தாலும், மிக அடிப்படையான தேசப்பற்றை முதன்மையாக வைத்தே இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் அறிந்துகொள்ளவேண்டிய, ஆனால் பெயர் கூடத் தெரியாத, தூக்குக் கயிற்றில் தன் உயிரைவிட்ட பல தலைவர்களைப் பற்றிப் படிக்கும்போது மயிர்க்கூச்செறிவதைத் தவிர்க்கமுடியவில்லை. புத்தகத்தின் நடைகூட மயிர்க்கூச்செறியும் விதமாகவே உள்ளது. நிச்சயம் வாசிக்கவேண்டிய புத்தகம்.

15 வயதில் இருக்கும் ஒரு பையனுக்கு இந்நூலில் உள்ள சில தேர்ந்தெடுத்த வழக்குகளை அறிமுகப்படுத்தினால் அவன் நிச்சயம் இந்திய தேசியத்தின் பக்கம் வர வாய்ப்புள்ளது. இந்தியாவா, இன்னும் இருக்கிறதா, இன்னும் இருக்கணுமா என்ற ஃபேஸ்புக் புரட்சியாளர்களுக்கு மத்தியில் இது போன்ற புத்தகங்களைப் படிப்பது மட்டுமே இந்திய தேசியத்தை மாணவர்கள் மனத்தில் பிடித்துவைக்கும். நாட்டுப்பற்று என்பது பிற்போக்குத்தனமானது அல்ல, இந்திய தேசியம் என்பது வாய்ப்பந்தல் வழியே எதிர்கொள்ளமுடிந்துவிடும் சிறுமைகொண்ட கற்பிதம் அல்ல, அது உயர்வானது என்பது புரிய வழிவகுக்கும். நம் மாணவர்கள் திடீர் குபீர் இடதுசாரிக் கருத்துகள் வழியே (நாசமாகப்) போகாமல் இருக்க நாம்தான் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். கூடவே நூலில் தெரியும் சில செக்யூலர்த்தனமான வாசகங்களையும் பொறுத்துக்கொள்ளவேண்டும்.

சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள், அலைகள் வெளியீடு, சிவலை இளமதி, 240 ரூ.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-814-1.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share