Tag Archive for துளிர்

அம்புலிமாமா, துளிர்

அம்புலிமாமா: கடந்த மூன்று மாதங்களாக அம்புலிமாமா வாசித்துவருகிறேன். அபிராமுக்காக அரவிந்தன் நீலகண்டன் சந்தா செலுத்தியிருந்தார். அதிலிருக்கும் கதைகளை அபிராமை வாசிக்கச் சொல்வதும், நான் அதை வாசித்து அபிராமுக்குக் கதை சொல்வதுமே நோக்கம். தமிழில் குழந்தைகளுக்கென நல்ல நூல்கள் வருவதாகத் தெரியவில்லை. எந்த வயதினருக்கு என்ன மாதிரியான புத்தகங்களை வாசிக்கத் தரவேண்டும் என்று முடிவெடுக்கக்கூடிய நிலையில், நம் முன்னே புத்தகங்கள் தமிழில் கொட்டிக் கிடக்கவில்லை. அம்புலிமாமா, பாலமித்ரா போன்றவற்றை நான் சின்ன வயதில், நூலகங்களிலும், அதை வாங்கும் நண்பர்கள் வீட்டிலும் காத்திருந்து வாசித்திருக்கிறேன். இன்று பாலமித்ரா வருகிறதா எனத் தெரியவில்லை. முதன்முதலில் சிறுவர் மலர் வந்தபோது அருமையான படக்கதைகள் வந்தன. இதற்காகவே வெள்ளி காலை எழுந்ததும் என் நண்பன் வீட்டுக்கு ஓடுவேன். எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் பேப்பரே வாங்கமாட்டார்கள். அவ்வளவு கஷ்டம். அப்போது எனக்கு 10 வயது இருக்கலாம்.

பின்பு கல்லுப்பட்டியில் படிக்கும்போது அங்கே இருக்கும் நூலகத்துக்குச் சென்று படிப்பேன். சரியாக இந்த அம்புலிமாமா, பாலமித்ராவை யாராவது எங்காவது ஒளித்து வைத்திருப்பார்கள். அதை நாம் கண்டுபிடித்து படித்துவிட்டு அடுத்தமுறை வந்ததும் படிக்க மீண்டும் அதை ஒளித்துவைத்துவிட்டு வரவேண்டும். மதுரையில் அழகரடியில் உள்ள நூலகத்திலும் அம்புலிமாமா, பாலமித்ராவுக்கு ஒரு பெரிய வரிசையே இருக்கும். கையில் கிடைப்பதே பெரிய விஷயம். 

இப்போதைய அம்புலிமாமாவைப் படிக்கும்போது இப்படி பழைய ஞாபகங்கள் வருகின்றன. ஹிந்து தர்மம் நோக்கிலான சிறுவர் கதைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே என் நோக்கம். அம்புலிமாமாதான் எனக்கு இருக்கும் ஒரே தேர்வு. 

மூன்று இதழ்கள் வாசித்ததில் இருந்து எனக்கு உருவான கருத்துகள். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தரத்தை அப்படியே காத்து வைத்திருப்பது ஒரு பெரிய சாதனை. சந்தேகமேயில்லை. அதிலும் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதையைப் படிக்கும்போது, முதல் சில வரிகளும், கடைசி சில வரிகளும் அப்படியே உள்ளதைப் பார்க்கும்போது, சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இன்று அபிராமில் பார்க்கிறேன். இரண்டாவது இதழ் வாசிக்கும்போது, போன மாசம் வந்த அதே கதைதாம்ப்பா என்று சொல்லிவிட்டான். பின்பு நான் விளக்கியதும்தான், ஆரம்ப வரிகள் ஒன்றாகவும், பிறகு கதை மாறியும் வரும் என அவனுக்குப் புரிந்தது. விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் இப்போது டிவியில் அச்சுபிச்சுத்தனமாக வருகின்றன. அதைப் பார்த்துப் பழக்கப்பட்ட சிறியவர்களுக்கு, இக்கதைகள் பிடிக்குமா அல்லது வெறுக்குமா எனச் சொல்லத் தெரியவில்லை. அபிராமுக்கு ஓரளவு பிடித்திருந்தது என்றே நினைக்கிறேன். கதைகள் கொஞ்சம் நீளம் என்றே நினைக்கிறான்.

ஒன்றிரண்டு ஒரு பக்கக் கதைகள் வருகின்றன. அவற்றை உடனே படித்துவிடுகிறான். இந்த ஒரு பக்கக் கதைகளின் பிரச்சினை, வரிகளை உடைக்காமல் நீளமாக எழுதுவது. கமா போட்டு எழுதிக்கொண்டே போய்விடுகிறார்கள். ஐந்திலிருந்து எட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் இருப்பது நல்லது. என்ன ஆரம்பித்தோம், எங்கே முடிகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்வதில் ஏழு வயது அபிராமுக்குச் சிக்கல் உள்ளது. படிக்க படிக்க சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒரு பக்கக் கதைகளை இன்னும் அதிகம் தந்தால் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள நான்கைந்து பக்கக் கதைகளை படித்துவிடுகிறான். அதில் சிக்கல் வருவதில்லை. பள்ளியில் தரப்பட்ட பயிற்சி காரணமாக இருக்கலாம். பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றிருந்தபோது, பல நல்ல சிறுவர் ஆங்கில நூல்கள் 50% தள்ளுபடியில் கிடைத்தன. அள்ளிக்கொண்டு வந்தேன். சிறிய அழகான புத்தகமாக, நான்கைந்து பக்கங்களில் ஒரு கதைகள். இப்படி 10 கதைகள் அடங்கிய ஒரு புத்தகம். இதுபோல 20 புத்தகங்களாவது வாங்கியிருப்பேன். ராமாயணம், மகாபாரதம் படக்கதைகள் கிடைத்தன. வாங்கவில்லை. அடுத்தமுறை வாங்கவேண்டும். படக்கதைகள் போல சிறுவர்களுக்குப் பிடித்துப்போவது வேறொன்றில்லை. புத்தகத்தைப் படிப்பது மகிழ்ச்சி தருவது என்பதைவிட, நாம் புத்தகம் படிக்கிறோம் என்ற கர்வமே அபிராமுக்கு அதிகம் உள்ளது. 🙂

அம்புலிமாமாவின் இன்னொரு பயன், இதிலிருக்கும் கதைகளைப் படித்துவிட்டு கலந்துகட்டி நாமாக ஒரு கதையை உருவாக்கி தினம் சொல்லிவிடலாம். அந்த வகையில் அம்புலிமாமாவுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

படக்கதைகள் அபாரம். படக்கதைகளில் உள்ள வரிகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கிறார்கள் போல. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். 

அம்புலிமமாவின் இதழ் வடிவம் மாறியிருக்கிறது. கல்கி தந்த கலாசாரா ஷாக்கெல்லாம் இல்லை. பெரிய சைஸிலும் இதழ் நன்றாகவே உள்ளது. ஒரு முக்கியமான சௌகர்யம், எழுத்துரு கொஞ்சம் பெரிதாக உள்ளது. சிறுவர்கள் படிக்க ஏதுவாக இருக்கிறது. ஜனவரி சிறப்பிதழ் மட்டுமே வடிவம் மாற்றப்பட்டுள்ளதா, முழுக்கவே இதழ் வடிவம் மாற்றப்பட்டுவிட்டதா எனத் தெரியவில்லை. ஃபிப்ரவரி இதழ் இன்னும் வரவில்லை. இதழ் எப்போது கைக்குக் கிடைக்கும் என்றே தெரிவதில்லை. இது ஒரு குறை.

நகைச்சுவைத் துணுக்குகள் வருகின்றன. சில துணுக்குகள் அபாரம். சில புளித்துப்போனவை. ஆனாலும் சிறுவர்களுக்கு புன்னகையைப் பூக்க வைக்கும் என்பது நிச்சயம்.

ஆங்கிலத்தில் சந்தாமா ஜூனியரை அபிராமுக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம் என்றிருக்கிறேன். ஆன்லைனில் சந்தா செலுத்த: www.chandamamashop.com. சந்தா செலுத்துபவர்கள் கவனத்துக்கு, 40 முதல் 45 நாள்கள் ஆகுமாம் முதல் இதழைப் பெற.

துளிர். நான் 8ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு துளிர் அறிமுகமாகியது. மதுரையில் என் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ஓர் இதழை இலவசமாகக் கொடுத்தார்கள். அந்த இதழ் நல்ல இதழ் என்று ஆசிரியர்கள் சொன்னார்கள். அதற்குப் பின்பு துளிர் இதழைப் படித்ததில்லை. அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறேன் துளிர் என்ற பெயரை. ஆனாலும் இதழ் பற்றிய ஒரு நல்ல எண்ணம் மனத்தில் இருந்தது. சரி, அதையும் வாங்குவோம் என்று அபிராமுக்காக சந்தா செலுத்தினேன். ஏண்டா வாங்கினோம் என்ற எண்ணத்தைத் தந்திருக்கிறது துளிர். யாருக்காக இதழ் வருகிறது, என்ன பேசுகிறோம், என்ன நோக்கம் என எல்லாவற்றிலும் குழப்பமே எஞ்சுகிறது. இது எந்த வயதினருக்கு என்பதை இன்னும் என்னாலேயே யூகிக்கமுடியவில்லை. இதையும் 3 இதழ்கள்தான் படித்திருக்கிறேன். இன்னும் 3 இதழ்கள் பார்த்துவிட்டு மேலே சொல்கிறேன். முதல் 3 இதழ்கள் தந்த அனுபவம் அத்தனை நன்றாக இல்லை என்பதை மட்டும் சொல்லி வைக்கிறேன். இத்துடன் சேர்த்து ஓர் ஆங்கில இதழுக்கும் சந்தா செலுத்தினேன். அது குப்பை.

Share