Tag Archive for பதிப்பாளர் புலம்பல்

பதிப்பாளர் குரல் :-)

சில பதிப்பாளர்களின் மீதான குறைகளை வாசகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அது உண்மையாக இருக்குபட்சத்தில் அதை பதிப்பாளர்கள் திருத்திக் கொள்ளவேண்டியது பதிப்பாளரின் கடமை.

அதேபோல் பதிப்பாளர்கள் வாசகர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். இங்கே இருப்பவை எனக்குத் தனிப்பட்டுத் தோன்றியவை.

* தள்ளுபடி 10% மட்டுமே. கூடுதலாகக் கேட்டுப் பார்ப்பது ஒரு வகை, போராடுவது ஒருவகை. ஒரு வாடிக்கையாளர் போராட ஆரம்பித்தால் பத்து வாடிக்கையாளருக்கு பில் போடமுடியாமல் போகலாம்.

* ஏழு வருஷத்துக்கு முன்னாடி வந்தப்ப எனக்கு கூட டிஸ்கவுண்ட் கொடுத்தாங்க என்று ஒருவர் சொல்வதை பில்லிங் கவுண்ட்டரில் இருப்பவரால் புரிந்துகொள்ளவே முடியாமல் போகலாம் என்பதைக் கொஞ்சம் எதிர்பார்த்திருங்கள்.

* சரியாக பில்லிங் கவுண்ட்டர் அருகில் வந்ததும் போனை எடுத்துப் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு பில் போட்டால்தான் அடுத்தவருக்கு பில் போடமுடியும். ‘நீங்க போடுங்க பணம் தர்றேன்’ என்று சொல்லிவிட்டு போன் பேசுவதைவிட, பணத்தை செலுத்திப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, அடுத்த அரங்குக்குள் நுழைவதற்கு முன்பு ஓரமாக நின்று மணிக்கணக்கில் பேசுவது நல்லது, உதவிகரமானது.

* உடன் வந்திருக்கும் நண்பரிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தின் அருமை பெருமைகளை புத்தகம் பில் போட்டபின்பு சொல்லலாம். பில் கவுண்ட்டரில் நின்றுகொண்டு அத்தனையும் சொல்லும்போது பின்னால் பில் போடக் காத்திருக்கும் வாசகர்களுக்கு இடையூறாகலாம்.

* பில் போட்டு முடித்ததும் பணத்தை தாங்கள் கொண்டு வந்திருக்கும் அனைத்துப் பைகளிலும் தேடாதீர்கள். முதலிலேயே தோராயமாக பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு ரூபாய் மிச்சம் தரவில்லை என்றால், இப்படி ஒவ்வொரு பில்லுக்கும் ஒரு ரூபாய்னா, ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் அப்படியானால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியிலும் எத்தனை கோடி ஊழல் என்று அங்கே நின்று சுஜாதா போல வாதிடாதீர்கள். சரியான சில்லறை வேண்டுமென்றால் சரியான சில்லறையைக் கையில் வைத்திருப்பது நல்லது. எளிய உபாயமும் கூட.

* பெரிய பை கொடுத்தா ஈஸியா கொண்டு போக உதவியா இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பெரிய பெரிய துணிக்கடைகள்கூட 2000 ரூபாய்க்கு மேல்தான் பெரிய பை தருகிறார்கள். புத்தக விற்பனையாளர்களைப் பற்றிக் கொஞ்சம் கருணையுடன் யோசித்துப் பாருங்கள்.

* பில் போடும் முன்னரே கொஞ்சம் தூரத்தில் ஒரு எழுத்தாளரைப் பார்த்துவிட்டு புத்தகம் கையெழுத்து வாங்கும் ஆர்வத்தில் அப்படியே ஓடிவிடாதீர்கள். நீங்கள் வந்து பில் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில்லாமல் இல்லை. ஆனால் அதுவரை உங்களையே பார்த்துக்கொண்டிருப்பது கடினம்.

* கி.ராஜநாராயணன் போன்ற மூத்த எழுத்தாளரைப் பார்த்து, போகன் சங்கர்தான நீங்க, நிறைய படிச்சிருக்கேன் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். எழுத்தாளருக்கு அடுத்தபடியாக, ஒரு பதிப்பாளருக்கே இதன் அபத்தமும் கஷ்டமும் அதிகம் புரியும்.

* பத்து கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த கிரெடிட் கார்டுக்கு எந்த பின் நம்பர் என்பதை பதினோரு முறை கிரெடிட் கார்ட் மெஷினில் போடாதிருப்பது பெரிய உதவி. ஒவ்வொரு கார்டுக்கும் இப்படிக் கணக்குப் போட்டால் நிஜமாக எனக்கே தலை சுற்றுகிறது.

* கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை என்றால் ப்ளான் பி வைத்திருங்கள். இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பக்கத்து கடைல போட்டேன் என்ற உங்கள் நிலைப்பாடு நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு பில் கவுண்ட்டரில் இருக்கும் எளியர் என்ன செய்யமுடியும்! கிரெடிட் கார்ட் மிஷின் ஓகே என்று சொன்னால் மட்டுமே அவர் புத்தகத்தைத் தரமுடியும்.

* அமெரிக்கன் கார்ட் கிரெடிட் கார்ட் மிஷின்களில் வேலை செய்யவில்லை என்றால், ஏன் எதற்கு எப்படி என்று பில் கவுண்ட்டரில் இருப்பவரிடம் பல விதமான அறிவுசார் கேள்விகளை எழுப்புவது உளவியல் ரீதியிலான தாக்குதல் என்பதை உணருங்கள்.

* எந்நேரத்திலும் கிரெடிட் கார்ட் மிஷின் வேலை செய்யாமல் போகும் சகல சாத்தியமும் உண்டு. ‘என்னங்க இவ்ளோ பெரிய புக் ஃபேர் நடத்துறீங்க, கிரெடிட் கார்ட் மிஷின் கூட இல்லையா’ என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தீர்வு இல்லை. தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று பணம் வைத்திருங்கள்.

* புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் ஆயிரம் குறைகள் உண்டு. அதைப் பொறுத்துக்கொண்டு நீங்கள் புத்தகம் வருகிறீர்கள் என்பது உண்மை. அதற்காக தமிழ் உலகும் பதிப்பாளர் உலகும் கடமைப்பட்டிருக்கிறது. இதன் எதிர்முனையும் உண்மை. பதிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ் உலகும் கடமைப்பட்டிருக்கிறது. இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

* புத்தகக் கண்காட்சி அரங்கில் முக்குக்கு முக்கு குடிநீர் வைத்திருக்கிறார்கள். கூட்டம் அதிகம் இருக்கும்போது அங்கு நீர் இல்லாமல் போவது இயல்புதான். இதை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது சரிதான். அதே சமயம், நீங்களும் கையில் தேவையான குடிநீருடன் வருவது உங்களுக்கு உதவலாம்.

* புத்தகக் கண்காட்சியில் நண்பர்களுடன் அரட்டை என்பதும் ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அதை அரங்குக்குள் புத்தகத்தோடு சேர்ந்து நின்றுகொண்டுதான் செய்யவேண்டும் என்பதில்லை என்பதையும் நினைவில் வைக்கலாம்.

* ஒரு புத்தகம் எங்கே இருக்கிறது என்று அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொரு அரங்கில் கேட்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருவேளை அவர் தெரியவில்லை என்றாலோ, அல்லது எந்தப் பதிப்பகம் என்று தவறாகச் சொன்னாலோ மீண்டும் தேடி வந்து ‘இதுகூட ஒழுங்கா சொல்லமாட்டீங்களா’ என்று சொல்லாமல் இருக்கலாம்.

* புரோட்டா செய்வது எப்படி என்ற புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை முதல் அரங்கில் இருந்து கடைசி அரங்கு வரை எல்லோரிடமும் கேட்காதீர்கள். க்ரியா கீழைக்காற்று அரங்குகளில் இக்கேள்வியைக் கேட்பது குறித்து கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள்.

* புத்தகக் கண்காட்சியில் நான்கைந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது நல்லது. நாப்பது ஐம்பது செல்ஃபி எடுக்காதீர்கள், ப்ளீஸ்.

* பத்து ஸ்டால் கடந்து நடக்கும்போது கால் வலி வந்தால் உட்கார அங்கே இடம் கிடையாது. வெளியே சென்றுதான் உட்காரவேண்டும். எனவே நன்றாக நடக்க முடியும் என்ற உறுதியுடன் உள்ள நண்பரை மட்டும் அழைத்துக்கொண்டு வாருங்கள். இல்லையென்றால் புத்தகக் கண்காட்சி அனுபவமே எரிச்சல் மிக்கதாக ஆகிப் போகும்.

* செல்ஃபோனை தொலைப்பவர்கள், கடைசியாக பில் போட்ட அரங்கில் தேடுவது இயல்பு. ஆனால் அங்கேயே நின்று எங்கே செல்ஃபோன் என்று போராடுவதில் ஒரு பயனும் இல்லை. உங்கள் செல்ஃபோன் உங்கள் உரிமை, உங்கள் செல்ஃபோனை பத்திரமாக வைத்திருப்பது உங்கள் கடமை.

* இதில் எதையுமே நீங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வந்து புத்தகம் வாங்குங்கள். அதுதான் அடிப்படைத் தேவை.

Share