Tag Archive for பாரம்

பாரம் – அபாரமான திரைப்படம்

2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழில் பாரம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. அந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் பற்றிய பதிவில் ‘பாரம்’ என்ற படத்தைக் கேள்விப்பட்டதே இல்லை என்று எழுதி இருந்தேன். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலை என்கிற முக்கியமான திரைப்படம் அந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அதேசமயம் ஒருவேளை இந்த ‘பாரம்’ திரைப்படம் நல்ல படமாக இருக்குமானால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன் என்றும் எழுதி இருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பு ‘இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்’ என்ற ஒரு படத்துக்கு விருது தரப்பட்டது. அந்தப் படத்தைப் பற்றியும் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. இப்படி கேள்விப்படாத ஒரு படத்துக்கு, பின்பு எப்போதும் பார்க்க இயலாத ஒரு படத்துக்கு ஏன் விருது வழங்குகிறார்கள் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன். இதில் சில படங்களைப் பார்க்கவே முடியாது என்பது இன்னொரு பக்கம். (உதாரணம்: உச்சிவெயில்.) அதேசமயம் சில நல்ல படங்களும் அமைந்துவிடும். காக்கா முட்டை, மறுபக்கம் போல.

அமேஸான் ப்ரைம் புண்ணியத்தில் நேற்று பாரம் திரைப்படத்தைப் பார்த்தேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நம்பிக்கையின்மையின் உச்சத்தில்தான் பார்த்தேன். ஆனால் படம் மிக நன்றாக இருக்கிறது. விருது தரப்பட்டது நியாயமான ஒன்றே.

தலைக்கூத்தல் என்ற பெயரில் நடக்கும் அநியாயமான ‘கருணைக் கொலை’யை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் உள்ள ஆச்சரியங்கள் என்ன?

விருதுத் திரைப்படங்கள் யதார்த்தம் என்ற போர்வையில் மிக மெதுவாக நகரும். இத்திரைப்படமும் மிகவும் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் உண்மையான யதார்த்தத்துடன். வலிந்து இழுத்துக்கொண்ட செயற்கையான யதார்த்தம் அல்ல. மெதுவாக நகரும் படம் என்றாலும் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை படம் எவ்வித விலகலும் இல்லாமல் நேர்த்தியாகப் போகிறது. நம்மைப் பார்க்க வைக்கிறது. அதுவும் சுவாரஸ்யத்துடன்!

மலையாளத்தில் உள்ள பல திரைப்படங்கள் மிக யதார்த்தமாக இருக்கும். மிக முக்கியமான விஷயம், மலையாளப் படத்தில் நடிப்பவர்கள் ஒவ்வொருவரும் மிக நன்றாக நடிப்பார்கள். சமீபத்தில் ஈ மா யோ என்றொரு திரைப்படம் மலையாளத்தில் வந்திருந்தது. படமாக்கப்பட்ட விதமும், அதில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பும் அத்தனை அசலாக இருந்தது. அதேபோன்று ஒரு தமிழ்த் திரைப்படத்தைச் சொல்லவேண்டுமானால் ‘பாரம்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஈ மா யோ அளவுக்கு நுணுக்கமான ஒரு திரைப்படம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் பாரம் திரைப்படம் கொஞ்சம் புனைவுக்குள்ளும் கொஞ்சம் யதார்த்த உலகின் பிரச்சினைக்குள்ளும் பயணிக்கிறது. ஒரு தமிழ்ப்படத்திலும் அத்தனை நடிகர்களையும் இத்தனை இயல்பாக நடிக்க வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.

கலைப்படங்களுக்கே உரிய அலட்டல்கள், போலித் தனங்கள் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். ஒரு கதாபத்திரம் திடீரென்று போராட்டம் என்றெல்லாம் சொல்லவும், பிறகு என்னவெல்லாம் இந்த இயக்குநர் கொண்டு வருவாரோ என்று நினைத்தேன். ஆனால் கதாபத்திரத்தின் தன்மைக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது புரிந்தபோது நிம்மதியானது.

நல்ல படத்தை எடுக்கும் பெரும்பாலான முற்போக்கு இயக்குநர்கள் எங்காவது எதிலாவது எதாவது அரசியலை நுழைத்து, ஒரு நல்ல படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் செய்வார்கள். இந்த வெற்று ஜம்பத்துக்குள் எல்லாம் இயக்குநர் போகவில்லை. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை, எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகவே இல்லை.

குறைகளை வலிந்து தேடினால் சில விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, மிக அழகாக யதார்த்தமான வசனங்கள் துல்லியமான வட்டார வழக்கில் சொல்லப்படும்போது திடீரென்று முதியவர் பாத்திரம் தான் ஒரு மின்மினிப் பூச்சி, விட்டில் பூச்சி அல்ல என்பது. இந்த சிறிய விலகலைத் தவிர்த்திருந்திருக்கலாம். இரண்டாவது, நியாயத்துக்காகப் போராடும் ஒரு மனிதனின் குடும்பத்தை ஒரு ஊரே எரிச்சலாகப் பார்ப்பது போல் காட்டி இருப்பது. இதைக் கொஞ்சம் ஓவர் டோஸாகக் காட்டிவிட்டார் என்று தோன்றியது. இந்த இரண்டுமே அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் வரும் காட்சிகள் மட்டுமே. எனவே இவை பெரிய குறை அல்ல. மூன்றாவது, இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் வரும் டாக்குமெண்ட்ரி தன்மை. ஆனால் இப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநர் சிரத்தை எடுத்துக்கொண்டிருப்பதும் தெரிகிறது. அதையும் மீறி வரும் சின்ன டாக்குமெண்ட்ரி தன்மையையும் தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆதாரக் கருத்தே ஒரு பிரசாரம் என்ற வகையில்தான் உள்ளது என்பதால் இப்படியே இருக்கட்டும் என இயக்குநர் நினைத்திருந்தால் அதில் நியாயம் உள்ளதுதான்.அதேபோல் மருமளின் பெயர் ஏன் ஸ்டெல்லா என்பது புரியவில்லை. தேவையற்ற விலகல் இது. இன்னொரு முக்கியமான விவாதத்துக்குரிய விஷயம், இந்தத் தலைக்கூத்தல் என்பது எந்த சமூகத்தில் நடைபெறுகிறது என்பது.

தமிழில் சந்தியா ராகம், வீடு, மேற்குத் தொடர்ச்சி மலை வரிசையில் வைக்கலாம் என்ற அளவுக்கான அபராமான படம் பாரம். நிச்சயம் பார்க்கவும். அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.

பின்குறிப்பு: நான் எழுதிய கதைகளுள் எனக்குப் பிடித்தமான ஒன்று ‘யாரோ ஒருவனின் வானம்.’ என் ‘சாதேவி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ளது. இதை ஒட்டிய கதைதான். வாசித்துப் பார்க்கலாம். கிண்டிலில் கிடைக்கிறது.

Share