Tag Archive for வலம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

நம் சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மதிப்பு என்பது மிக உயர்ந்தது. தொன்றுதொட்டே அவர்கள் குருவென மதிக்கப்பட்டு தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்பட்டவர்கள். குரு என்பவர் எத்தகைய ஒருவராகவும் இருக்கமுடியும். நம் இன்றைய சமூகத்தில் நாம் குரு என்று நினைப்பது நம் ஆசிரியர்களையே. ஒவ்வொரு தனி நபரும் தன் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமுடியாத ஆசிரியர் என்று குறைந்தபட்சம் ஒருவரையோ அல்லது பலரையோ நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு எவ்வித பேதங்களும் தெரியாத வயதில் நம்முடன் இணைந்துகொள்ளும் ஆசிரியர்கள் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக உருக்கொள்வதில் வியப்பேதுமில்லை. இன்றும் நம் சிறுவயதில் நமக்குக் கற்பித்த குரு ஒருவரை நினைக்கும்போது நமக்கு எழும் எண்ணங்கள் நிகரற்றவை. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு இதுவாகவே இருக்கிறது. இதனாலேயே ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட சிறிய வீழ்ச்சி கூட மிகப் பெரிய சமூக வீழ்ச்சியாகவே விவாதிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த மனநிலைக்குப் பின்னே வைத்தே நாம் பார்க்கவேண்டியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம், அதிலும் இன்னும் சில நாள்களில் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம், பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததற்கு, ஆசிரியர்களின் மீதான இந்த ஒட்டுமொத்த மதிப்பீடும் ஒரு காரணம். இந்த மதிப்பீடு சரியா தவறா, தேவைதானா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதங்கள். யதார்த்தத்தில் இப்படியான ஒரு பொதுப்புத்தி நிச்சயம் இருக்கவே செய்கிறது.

ஜேக்டோ (பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) மற்றும் ஜியோ (அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இவற்றில் உள்ள ஒன்றிரண்டு கோரிக்கைகள் மிக முக்கியமானவையே. குறிப்பாக, இவர்களது ஓய்வூதியப் பணம் என்ன ஆனது என்பது பொதுவில் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அரசு இதற்கு ஒரு பதில் அளித்தது. இவர்கள் இப்படிப் போராட்டம் செய்திருக்காவிட்டால் அரசு நிச்சயம் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் இதனைப் பல காலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புமாறு அரசை நிர்ப்பந்திப்பது, நிச்சயம் செயல்படுத்த முடியாத ஒன்று.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, சுருக்கமாகச் சொன்னால், அரசு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது பெறும் சம்பளத்தில் பாதியை வாழ்நாள் முழுமைக்கும் (அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் வாழ்நாள் முழுமைக்கும்) மாதா மாதம் பெறுவது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (2003ல் இருந்து), அரசு ஆசிரியரின் (அனைத்து அரசு ஊழியர்களின்) சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை (12%) அரசும் ஊழியரும் ஓய்வூதியப் பணமாக செலுத்துவது; அதைப் பங்குச் சந்தையில் அரசே முதலீடு செய்வது; ஓய்வின்போது ஒட்டுமொத்த பணமாக அரசு ஊழியர் பெற்றுக்கொள்வது. மாதாமாதம் ஓய்வூதியமெல்லாம் இல்லை.

2003 முதல் வேலைக்குச் சேர்ந்தவர்கள் இதனை ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும்வரை அதற்காகப் போராடுவதும், சேர்ந்த பின்பு வேறு வகையில் போராடுவதும் சரியா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்விதான். அதேசமயம், இதைத் தவிர்க்கமுடியாது என்பதும் மிக மிக முக்கியமானதே. எனவே வேலைக்குச் சேர்ந்த பின்பு எப்படிப் போராடலாம் என்பதை விட்டுவிடலாம். அரசுக்கும் இதில் பெரிய பொறுப்பு உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இருந்த பல சலுகைகள் இப்போது இல்லை; அல்லது பெறுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ஓய்வூதியப் பணத்தில் இருந்து கடன் (லோன்) பெறுவது. அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் காலதாமதம். இவையெல்லாம் அரசுத் தரப்பில் இருக்கும் எப்போதைக்குமான சிக்கல்கள். ஆனால் அரசு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்வது இல்லை. அரசு ஊழியர்கள் சொன்னாலும், பொது மக்கள் எப்போதுமே ஒரு எரிச்சலில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அணுகுவதால், இதைக் கவனிப்பதோ ஏற்பதோ இல்லை.

எனவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டுமொத்தமாகத் தவறு என்றோ தேவையற்றது என்றோ சொல்லிவிட முடியாது.

அதேசமயம், அரசு ஊழியர்களின் போராட்டம் நிச்சயம் அவர்களது பணித் திறமையோடு நிச்சயம் சேர்த்தே பார்க்கப்படும். 30-01-2019 தேதியிட்ட தமிழ் தி ஹிந்து இதழில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்த வேலை நிறுத்தத்த்தின் போது அரசு ஊழியர்களின் செயல்பாடுகளைச் சொல்வ்வது வேலை நிறுத்தத்தைத் திசை திருப்புவது என்று சொல்லி இருக்கிறார். இதை நிச்சயம் ஏற்கமுடியாது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றுக்கு எதிராக அவர்கள் செய்யும் பணி, ஒப்பீட்டளவில் மற்றவர்களது வேலை மற்றும் சம்பளம் என எல்லாமும் விவாதிக்கப்படுவது நிகழவே செய்யும். விவாதிக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும் தாங்கள் எப்பேற்பட்ட ஒரு வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும். இதனால் பயன் இல்லாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.

ஒரு அரசு ஆசிரியர் ஆவேசமாகப் பேசும் வீடியோ ஒன்றை அனைவரும் பார்த்திருக்கலாம். நாங்கள் ஏன் வேறு பணிகளைச் செய்யவேண்டும், நாங்கள் ஏன் வேலைக்குச் சேர்ந்த பின்னரும் தேர்வெழுதி வெல்லவேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். வேறு பணிகளைச் செய்வது அரசுக்கு நிச்சயம் தேவை. இதைத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் அரசின் ஓர் அங்கம். பொதுத் தேர்வுகளின் போது நீண்ட நாள் விடுப்பு கிடைக்கும் ஒரே துறை அது. அப்படியானால் அவர்கள் பயன்படுத்தப்படவே செய்வார்கள். ஏன் மீண்டும் மீண்டும் தேர்வெழுதவேண்டும் என்பது கொஞ்சம்கூடப் பொருட்படுத்த முடியாத கேள்வி. ஒவ்வொரு ஆசிரியருக்கும் (அரசு ஆசிரியர், தனியார்ப் பள்ளி ஆசிரியர் என்ற பேதமில்லாமல்) தெரியும், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எத்தனை சதவீதம் பேர் சராசரிக்கு மேல் தேறுவார்கள் என்று. உண்மையில் ஆசிரியர்களின் தகுதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதே என்னுடைய மனப்பதிவு.

தமிழ்நாட்டுக் கல்வியைக் குறித்த ஆய்வின் படி, கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமையைக் குறித்த புள்ளிவிவரம்:

  • ஐந்தாம் வகுப்பில் வார்த்தையை வாசிக்கத் தெரியாதவர்கள் தோராயமாக 32% பேர்.
  • ஆறாம் வகுப்பில் 23% பேர், ஏழாம் வகுப்பில் 15%, எட்டாம் வகுப்பில், 9% பேர்.
  • ஐந்தாம் வகுப்பில் கழித்தல் தெரியாதவர்கள் தோராயமாக 39% பேர்.

இன்னும் கூட்டல், பெருக்கல், வகுத்தல், வட்டிக் கணக்கு, செய்யுள் படித்தல், ஆங்கிலம் அறிவியல் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் தோராயமாக 37%. அரசு உதவி பெறும் பள்ளிகள் 19%. மீதி தனியார்ப் பள்ளிகள்.

ஜேக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தின்போது அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்களும் பங்குகொள்ளவேண்டும் என்றாலும், அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியோ ஆணையின்படியோ இவர்கள் நடந்துகொள்வார்கள். அதேசமயம் ஜேக்டோ அமைப்புக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். அப்படியானால் முழுக்க முழுக்கப் பங்கேற்றது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே. அதாவது, கிராப்புறங்களில் இருக்கும் மாணவர்களே இப்போராட்டத்தின் பலி.

பொதுவாகவே நம் கல்வி அமைப்பு என்பது, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளின் கல்வி அமைப்பு, முழுக்க முழுக்க ஆசிரியர்களைச் சார்ந்தது. பல்வேறு சமூக மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அரசுப் பள்ளி ஒன்றையே தனது விடுதலைக்கான வழி என்று நம்பி வரும் மாணவர்களே இப்பள்ளிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களைக் கையில் எடுத்து நல்ல கல்வி தரவேண்டிய பொறுப்பே அரசு ஆசிரியர்களின் முதன்மையான வேலை. நம் கல்வி அமைப்பின் இன்னொரு பிரச்சினை, தேர்வு நேரங்களில் மட்டுமே பொறுப்பாகப் படிப்பது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே காரணம். எனவே இந்தத் தேர்வு நேரத்தில் இப்படியான அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இதனால் பாதிப்படையப் போகும் கிராமப்புற மக்களுக்கு அரசு ஆசிரியர்களின் என்ன பதில் உள்ளது?

இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், பாதிக்கப்படப் போவது கிராமப்புற மக்கள் என்பதாலேயே அரசு ஊழியர்களுக்குப் பொது மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்பதுதான். இது கொடுமை என்றாலும், பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் படிப்பதால், இவர்களது பெற்றோர்கள் அரசுத் தரப்பையும் சரி, அரசு ஆசிரியர்கள் தரப்பையும் சரி, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் யாருக்கும் ஒரு ஆதரவோ எதிர்ப்போ பெரிய அளவில் உருவாகிவரவில்லை. அதேசமயம் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள், பொது மக்களின் மனதில், இவர்கள் இன்னும் சம்பளம் கூடுதலாகப் பெறவே போராடுகிறார்கள் என்ற எளிய எண்ணத்தை மட்டும் விதைத்துவிட்டது. இது அரசுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. போராட்டமும் பிசுபிசுத்துவிட்டது.

பத்து வருடம் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒரு அரசு ஆசிரியரின் தோராயமான சம்பளம் நிச்சயம் 65,000 ரூபாய் இருக்கலாம். தலைமை ஆசிரியரின் சம்பளம் 85 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கலாம். எப்போதெல்லாம் மத்திய அரசு பே கமிஷனை நியமிக்கிறதோ அப்பொதெல்லாம் கூடுமான வரையில் தமிழக அரசும் அதை ஒட்டிய சம்பளத்தை அறிவித்துவிடுகிறது. காலதாமதமானாலும் முன்கூட்டிய தேதியிட்டு அறிவித்து ஈடுகட்டுவிடுகிறது. இந்நிலையில் போராட்டத்தில் சம்பள உயர்வையும் (அல்லது வேறுபாடுகளைக் களைவது) சேர்த்துக்கொண்டிருப்பது பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது.

3000க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் தேவையற்றதே. இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் குறைந்துவரும் நிலையில், தமிழ்வழிக் கல்வியின் ஆர்வம் குறைந்துவரும் நிலையில், பள்ளிகளை மூடுவது என்பது தவிர்க்கமுடியாதது. 35% பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றால் எப்படி அந்தப் பள்ளிகளில் சேர முன்வருவார்கள்? இந்த புள்ளிவிவரம் தனியார்ப் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் இது அரசுப் பள்ளிகளில்தான் அதிகம் என்பது வெளிப்படை. இந்நிலையில் மாணவர்களே இல்லாத அல்லது மாணவர்கள் குறைந்த பள்ளிகளை மூடுவது, குறைவான அளவில் உள்ள மாணவர்களை இன்னொரு பள்ளியோடு இணைப்பது எல்லாம் நிகழவே செய்யும்.

இதற்கான தீர்வு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதிலேயே உள்ளது. அரசு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதிலேயும் இருக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர்களோ, எங்களுக்கு ஏன் இன்னொரு தேர்வு என்று அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசுக்கு தன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை. பாடத்திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முனைப்பு, அரசுப் பள்ளிகளை ஆயத்தப்படுத்துவதில் இல்லை. மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி என்கிற மாயை.

மாணவர்களின் தரக் குறைப்பாட்டுக்கு அரசும் நிச்சயம் ஒரு காரணமே. ஆனால் தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தம் அராஜகம் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படும் என்று அரசு சொன்னதுமே பிசுபிசுத்துப் போய்விட்டது இந்தப் போராட்டம். தங்கள் வசதி என்று வந்ததும் ஆசிரியர்கள் உடனே வேலைக்கு வந்துவிட்டார்கள். இதில் கிண்டலுக்கு ஒன்றுமில்லை என்றாலும்கூட, மாணவர்களைக் குறித்தும் இவர்கள் யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் வலுப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

இந்தக் கூத்துக்கு இடையில் இன்னொன்றும் நிகழ்ந்தது. எனக்கு (நமக்கு!) அது இன்னமும் முக்கியமானது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணங்களில் ஒன்று, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன் நீதிபதி பரந்தாமன் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை நீதிமன்றம் பாகுபாடு காட்டாமல் அணுகவேண்டும் என்று மட்டும் சொல்லி, இப்போராட்டத்தில் சபரிமலை விவகாரம் தேவையற்றது என்று சொல்லவில்லை? கம்யூனிஸம். அரசு ஆசிரியர் சங்கங்களில் ஒன்று முற்போக்காளர்களின் சங்கம் என்ற பெயரில் இந்தக் கோரிக்கையை நுழைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அல்ல இது. எங்கே இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நுழைத்துவிடுவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். அனுபவம் மிக்கவர்கள். நல்லவேளையாக ஹிந்து ஆதரவு ஆசிரியர் சங்கம் ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது. ஒருவழியாக சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விஷயத்திலான கோரிக்கையைப் பொதுவில் பெரிய அளவில் ஜேக்டோ கொண்டு செல்லவில்லை என்பது ஆறுதல்.

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான நியாயமான கோரிக்கைகளை அரசு ஆராயவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ப்ரீகேஜி வகுப்புகளுக்குச் செல்வதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அளவில் இது எனக்குப் பெரிய விஷயமில்லை என்பதையும் சொல்கிறேன். ஆனால் ஆசிரியர்களின் உணர்வுக்கு மரியாதை அளிக்கவேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி தேர்ச்சி போதுமானது என்று மத்திய அரசின் வழிகாட்டும் குழு சொல்லி இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி தேர்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த வகுப்புகளுக்குச் செல்வதை ஏற்காதது நியாயமே. இந்த வருடம்தான் இது தொடங்கி இருக்கிறது என்பதால், எதிர்வரும் வருடங்களில் அரசு இப்பிரச்சினையைச் சரி செய்யும் என்றே தோன்றுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே சரியானது. அப்போதுதான் அடுத்த நகர்வாக அரசு ஆசிரியர்களின் தர மேம்படுத்துதலை மேற்கொள்ள முடியும்.

பொதுவாகவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் மிகவும் அரிதான காலங்களில் நடப்பது நல்லது. அதாவது வேலை நிறுத்தமே கூடாது என்ற வகையில் இருந்துவிடுவது இனி அவர்களுக்கு நல்லது. காலம் மாறி இருக்கிறது. வேலை நிறுத்தத்தை பொதுமக்கள் கொண்டாடின அல்லது ஏற்றுக்கொண்ட காலம் போய்விட்டது. நீதிமன்றமும் சரி, மக்களும் சரி, எந்த ஒரு அரசுத் தரப்பின் போராட்டத்தையும் இனி சட்டென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனடிப்படையில் தங்கள் தேவையை அரசுத் தரப்போடு பேசியோ, நீதிமன்றத்தை அணுகியோ அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்வது நல்லது. நீதிமன்றத்தின் தலையீடு என்பது அரசு நிகழ்வதற்கு சில பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆனால் அது குறித்துக் கவலை கொள்ளவேண்டியது அரசுதானே ஒழிய, அரசு ஊழியர்கள் அல்ல.

நன்றி: வலம் மாத இதழ்

Share

அறம் திரைப்படம்: இந்திய எதிர்ப்பு அரசியலின் மாதிரி

கலைக்கான படங்களில் பிரசாரமும் பிரசாரப் படங்களில் கலையும் முக்கியமானவை. உண்மையில் ஒரு கலைப்படத்தில் உள்ள பிரசாரத் தன்மையும் பிரசாரப் படத்தில் உள்ள கலைத்தன்மையும் ஒரு திரைப்படத்தின் விவாதங்களைப் பல முனைகளுக்கு எடுத்துச் செல்ல வல்லவை. கலைப்படத்தில் உள்ள பிராசரத்தையும் ஒரு பிராசரப் படத்தில் உள்ள கலைத்தன்மையையும் சேர்த்தோ தனித்தனியாகவோ எதிர்கொள்வது எளிதானதல்ல. இவை இரண்டும் சரியாகப் பொருந்திப் போகும் ஒரு படம், பிரசாரவாதிகளின் கனவாகவே இருக்கும்.

 

அறம் இப்படியானதொரு படம். இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை ஒரு தரமான திரைப்படம் என்று சொல்லும்படியான தன்மையுடன் இயக்குநர் கோபி நயினார் இயக்கி இருக்கிறார். எப்படி ஒரு திரைப்படத்தில், தவிர்க்கமுடியாத பிரச்சினைகளையும் இந்திய எதிர்ப்பையும் ஒரே புள்ளியில் இணைக்கமுடியும் என்பதை மிக அழகாகச் செய்து காட்டி இருக்கிறார்.

 

இந்த மாதிரியான படங்களின் அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், தரமான மற்றும் உணர்வு ரீதியான திரைப்படம் என்ற வகையில் மட்டும் புரிந்துகொள்ளும் சாமானியர்களை, மிக எளிதாக இந்திய எதிர்ப்பு அரசியல் அவர்களது பிரக்ஞை இன்றியே சென்று சேரும். இதுதான் இந்திய எதிர்ப்புப் பிரசாரப் படங்களின் நோக்கம். ஆனால் இதைச் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. கொஞ்சம் பிரசாரம் தூக்கினாலும் படத்தை சாமானியர்கள் நிராகரித்துவிடுவார்கள். பல படங்கள் இப்படி வெற்றுப் பிரசாரப் படங்களாகவே தேங்கிவிடும். கலைத்தன்மை மட்டும் அதிகரித்து மாற்றுத் திரைப்படமாகத் தோன்றினால் அது சாமானியர்களுக்கான படமல்ல என்கிற ஒரு கருத்து உருவாகிவிடும். பிரசாரப் படங்கள் சாமானியர்களிடம் இருந்து விலகுமானால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறாது. இரண்டும் இல்லாமல் அந்தரத்தில் அலையும் படங்களாகப் பல படங்கள் அமைந்துவிடும்.

 

இப்படி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், இந்திய எதிர்ப்பு என்னும் தன் நோக்கத்தைத் தெளிவாக பிரசாரம் செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

பொது மக்களுக்கு எதிரான ஒரு அரசு, அது எந்த அரசாக இருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியது. மக்களிடம் அந்த அரசுக்குரிய பிரச்சினைகளைக் கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். கூடவே அது பொதுமக்களின் கடமையும்கூட. ஆனால் எந்த அரசை எந்தக் காரணங்களுக்காக அம்பலப்படுத்துகிறோம் என்பது முக்கியமானது. காரணங்களைக் கண்டுகொண்டு அதற்குப் பொறுப்பான அரசை எதிர்ப்பதுதான் சரியான அரசியல். ஆனால் இங்கே முற்போக்கு என்னும் முகமூடியில் நடப்பதெல்லாம், எந்த அரசை எதிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு, பின்பு அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து உருவாக்கி அந்த அரசின் மீது சுமத்துவது.

 

இப்படிச் செய்வதிலாவது ஒரு குறைந்தபட்ச நேர்மை இருக்கவேண்டும். ஆசை வெட்கம் அறியாது என்பதைப் போல, மாநில அரசுக்குரிய பொறுப்புக்களைக் கூட மத்திய அரசின் குற்றப்பட்டியலில் சேர்ப்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. காரணம் மத்தியில் இருப்பது ஹிந்து ஆதரவு மற்றும் ஹிந்துத்துவ ஆதரவு அரசு. மோதியின் தலைமையிலான இந்த அரசைக் குறை சொல்வதுதான் ஒரே நோக்கம். இந்த நோக்கத்துக்காக எந்த ஒரு பிரச்சினையும் மத்திய அரசின் பிரச்சினையாகக் காட்ட போலி முற்போக்காளர்கள் தயாராகவே இருப்பார்கள். அவர்கள் பல வழிகளில் இதைச் செய்வார்கள். திரைப்படம் என்பது இன்னும் ஒரு ஊடகம். வலுவான ஊடகம். அதை நேர்மையற்ற முறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார் கோபி நயினார்.

 

*

 

ஒரு ஊரில் தண்ணீர் இல்லை, அந்த ஊரை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை, புறக்கணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஹிந்துத்துவவாதிகளும் இப்படியான ஒரு அநியாயத்தை ஏற்கப் போகிறார்களா என்ன? நிச்சயம் இல்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு முதன்மையான பொறுப்பு யாருக்கு உள்ளது? மாநில அரசுக்குத்தானே? ஆனால் ராக்கெட் விடும் மத்திய அரசுக்கு இதைப் பற்றி அக்கறை இல்லை என்கிற பிரசாரம் படம் முழுக்கப் பரப்பப்படுகிறது. அதைவிட முக்கியமாக மத்திய அரசுக்கான எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பாகிறது.

 

ஆழ்துளைக் கிணற்றுக் குழியில் குழந்தை விழுந்துவிடுகிறது. அடிக்கடி இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம். இது போன்ற செய்திகள் தரும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இதுபோன்ற செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரும் நான்கைந்து நாள் தூக்கம் இழந்து தவிப்போம். இப்படிக் குழந்தைகள் விழுவதும் இறப்பதும் பெரிய கொடுமை. இதற்கான பொறுப்பை உண்மையில் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு இதில் பொறுப்பே இல்லை என்பதல்ல. வேறொரு வகையில் மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்பது உண்மைதான்.

 

 

ஏன் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் உள்ளன என்பது முதல் கேள்வி. ஒவ்வொரு குழந்தை சாகும்போதும் எதாவது நிவாரணப் பணம் கொடுக்கும் அரசு, இதை ஒட்டுமொத்தமாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்விதான், அப்படி குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்ற, குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான கருவிகளை மத்திய மாநில அரசுகள் ஏன் கண்டுபிடிக்கவில்லை என்பது. இந்த மூன்றுமே முக்கியமானவைதான். கோபி நயினார் மூன்றாவது கேள்வியை மட்டும் மையமாக்கி மத்திய அரசை மட்டும் பொறுப்பாக்குகிறார். கருவிகள் கண்டுபிடிக்கப்படாதது இந்தியாவின் பொறுப்பற்ற தன்மை என்றாக்கி அத்தகைய இந்தியாவை எல்லா விதங்களிலும் எதிர்க்கலாம் என்பதை நோக்கிப் போகிறார்.

 

மத்திய அரசைப் பொறுப்பாக்குவதால் மாநில அளவில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் முதல் குஞ்சு குளுவான் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மாநில அரசியலில், அதுவும் கருணாநிதி ஜெயலலிதா அரசியலில் இருந்த வரை வெளிப்படையாக மாநில அரசியலைக் கேள்வி கேட்டு இவர்களுக்குப் பழக்கமில்லை. அதே பழக்கத்தை இப்போதும் தொடர்கிறார்கள்.

 

*

 

திண்ணைப் பேச்சுக்காரர்கள் வம்பளக்கும்போது எதாவது ஒன்றை எதோ ஒன்றுடன் கோர்த்துப் பேசுவார்கள் என்பதைப் பார்த்திருப்போம். ராணுவத்துக்குக் கோடி கோடியாகச் செலவழிக்கிறோம், ஆனால் தெருவில் பாதுகாப்பில்லை என்பது தொடங்கி, சைன்ஸ் சைன்ஸ்னு சொல்றாங்க, 21ம் நூற்றாண்டுன்னு சொல்றாங்க, ஒரு குழந்தையைக் காப்பாத்த முடியலை என்பார்கள். இதில் மேம்போக்கான நியாயம் உள்ளது என்பது சரிதான். ஆனால் நியாயம் மேம்போக்காக மட்டுமே உள்ளது என்பதுதான் பிரச்சினை.

 

இந்தத் திண்ணை வம்பின் ஒரு பரிமாணத்தை மட்டுமே இயக்குநர் அறம் படத்தில் காட்டி இருக்கிறார். பல கோடி ரூபாயில் ராக்கெட் விடும் அரசுக்கு ஒரு குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லை என்றால், ராக்கெட் ஒரு கேடா என்பதுதான் கம்யூனிஸ இயக்குநரின் புலம்பல். ராக்கெட் விடுவதும் அதனால் வரும் நன்மைகளை மக்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதும் வேறு. குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என்பது வேறு. ராக்கெட் விடுவதில் கவனம் செலுத்தும் அரசு குழந்தையைக் காப்பாற்ற கவனம் செலுத்தாது என்று சொன்னால் அது அயோக்கியத்தனமே. குழந்தையைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு ராக்கெட் விடுவது மோசடி என்பதும் இதற்கு இணையான இன்னுமொரு அயோக்கியத்தனமே.

 

எல்லோருக்கும் ஏற்பில்லாத நீர்ப் பற்றாக்குறை, ஆழ் துளைக் கிணறு பிரச்சினைகளையெல்லாம் ராக்கெட் விடுவதோடு தொடர்புபடுத்தி மத்திய அரசையும் எனவே இந்தியாவையும் அதை ஆதரிப்பவர்களையும் அராஜகவாதிகளாகச் சித்திரிக்கிறார் இயக்குநர்.  ராக்கெட் விடுபவர்களை ஆதரிப்பவர்களும் நீர்ப்பற்றாக்குறையையும் ஆழ் துளைக் கிணற்றில் குழந்தைகள் இறக்கும் பிரச்சினையை எதிர்க்கத்தானே செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அதோடு ராக்கெட் விடுவது என்னவோ ஒரு அவசியமற்ற வேலை என்பதான எண்ணத்தை வெகுஜனங்களின் மத்தியில் விதைக்க பெரிய அளவில் மெனக்கெடுகிறார். இவை எல்லாமே ஆபத்தான மற்றும் நியாயமற்ற போக்குகள்.

 

இந்தப் போக்குகளின் ஊடே இன்னும் இரண்டு அநியாயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஒன்று, ஐஏஎஸ் அதிகாரி முட்டாள்தனமாக உணர்ச்சிப் பெருக்கில் செயல்படுவதுதான் சரி என்பதோடு, யோசித்து யதார்த்தமாகச் செயல்படும் அரசு ஊழியர்கள் எல்லாம் முட்டாள்கள், அநியாயக்காரர்கள், கொலைகாரர்கள் என்கிற பார்வையைப் படம் நெடுகிலும் கொண்டு வந்தது. இன்னொன்று, அறிவியல் என்பதே அவசியமற்றது, மாறாக அசட்டு நம்பிக்கையே தேவையானது என்ற பார்வை.

 

ஐஏஎஸ் அதிகாரியாக நயன்தாரா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கான வாழ்நாள் வேடமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இந்த ஐஏஎஸ் கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கும் விதம், ஒரு கம்யூனிஸ்ட்டின் கனவு என்பதைத் தாண்டி எந்த வகையிலும் யதார்த்தம் கொள்ளவில்லை. குழந்தை உயிருக்குப் போராடும்போது மக்களின் கண்ணீர் துடைக்கிறேன் என்று அரசு ஊழியர்களையே கேள்வி கேட்பதும் மக்களோடு சேர்ந்துகொண்டு இன்னொரு குழந்தையை உள்ளே செலுத்துவது என்று முட்டாள்தனமான முடிவெடுப்பதும் என இந்த கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினியோ அஜித்தோ தன் எதிரிகளை ஆயிரம் பேரை ஒரே ஆளாகத் தூக்கிப் போட்டு மிதிக்கும் கற்பனைகள்கூட ஆபத்தில்லாதவை. அவற்றில் முட்டாள்தனம் மட்டுமே உண்டு, அதற்குப் பின்னால் அரசியல் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஐஏஎஸ் கதாபாத்திரத்தின் அசட்டுத் துணிச்சலுக்குப் பின்னே, ஆளும் வர்க்கத்தின் மீது நம்பிக்கையின்மையை விதைக்கும் அரசியல் உள்ளது. ஆளும் வர்க்கம் புனிதமானது அல்ல. அதே சமயம் அந்தப் புனிதத்தன்மையைக் கேள்வி கேட்பது முட்டாள்தனத்தின் வழியாகவோ, மக்களை உணர்வுரீதியாக மட்டுமே தூண்டிவிடும் முயற்சிகளின் வழியாகவோ இருக்கக்கூடாது. கோபி நயினார் எவ்விதத் தர்க்கமும் இன்றி இந்தியாவின் அறிவியல் முயற்சிகளைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் மனம் போன போக்கில் மட்டுமே அணுகுகிறார்.

 

மத்திய அரசுக்கு எதிரான ஒரு போக்கு ஒருவேளை சிலருக்கு ஏற்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அதை அப்படியே இந்தியாவுக்கு எதிராகக் கட்டமைக்கவேண்டும் என்பது மட்டுமே கோபி நயினாரின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. மத்திய அரசுக்கு எதிரானவர்கள் இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது அவர்கள் சொல்லும் கருத்துக்கும், இந்தியாவின் மீது வெறுப்பைக் கொண்டிருப்பவர்கள் அதே கருத்தைச் சொல்லும்போது அது எதிர்கொள்ளப்படும் விதத்துக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே தீரும்.

 

இந்த எதிர்ப்பில் பிற்போக்குத்தனமான கருத்துகளைச் சொல்வதோடு உதவ வரும் அரசு இயந்திரங்களையும் கேலி பேசுகிறார் இயக்குநர். தன் மனைவி மயக்கம் போட்டு விழும்போது மருத்துவர்களின் உதவி தேவையில்லை என்பதை நியாயப்படுத்தும் இயக்குநர் சொல்ல வருவது என்ன? யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம் என்றொரு கிராமம் எல்லா சமயத்திலும் முடிவெடுக்க முடியுமா? இத்தனைக்கும் ஒரு குழந்தை குழியினுள்ளே விழுந்ததும் அனைத்து அரசு இயந்திரமும் விழுந்தடித்துக்கொண்டே அங்கே வருகிறது. அங்கேயே நிற்கிறது. இப்படிக் குழந்தை விழுந்தால் அதைக் காப்பாற்றத் தேவையான வசதிகளும் கருவிகளும் இல்லை என்று அந்த அரசு இயந்திரமும் கவலைப்படத்தான் செய்கிறது. இதையெல்லாம் தன்னை அறியாமலேயே படத்தில் பதிவு செய்திருக்கிறார் கோபி நயினார்.

 

இத்தனைக்குப் பிறகும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தின் பங்களிப்பையும் சிறுமைப்படுத்தும் விதமாகவும் மறைக்கும் விதமாகவும் இந்திய எதிர்ப்பு இந்தப் படத்தில் மையச் சரடாகப் பின்னப்பட்டுள்ளது. காவல் துறையின் உதவி, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, இந்திய அரசு அதிகாரியான ஐஏஎஸ்ஸின் அர்ப்பணிப்பு (மடத்தனமாக நடந்துகொண்டபோதும் உள்நோக்கம் குழந்தையைக் காப்பாற்றுவதுதான்) என எல்லாவற்றையும் பின் தள்ளி, இந்திய எதிர்ப்புக் குரலும் அறிவியலைக் கிண்டலடிக்கும் அறிவீனக் குரலும் ஓங்கி ஒலிக்கின்றன.

 

இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் குடித்துவிட்டு, குழியினுள் விழுந்த குழந்தையின் தந்தையைப் பார்த்தும் காவல்துறையைப் பார்த்தும் பேசிக்கொண்டே இருக்கும். குழந்தையின் தந்தையைப் பார்த்து, இவங்க நம்ம குழந்தையைக் காப்பாத்த மாட்டாங்க என்றும் அறிவியலின் கண்டுபிடிப்புகளைக் கேலி செய்தும் புலம்பிக்கொண்டே இருக்கும். அக்கதாபாத்திரம் வேறு யாருமல்ல, முற்போக்காளர்கள் என்ற பெயரில் அவநம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கும் நபர்களின் உருவம்தான். இந்திய எதிர்ப்பையே எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கும் நபரின் பிரதிபலிப்புதான் அந்தக் கதாபாத்திரம். ஒருவகையில் அவர் இயக்குநர் கோபி நயினார்தான்.

 

*

 

1990ல் மாலூட்டி என்றொரு மலையாளத் திரைப்படம் பரதன் இயக்கத்தில் வெளிவந்தது. தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்து பரவலாகக் கவனம் பெற்றது. அச்சு அசலாக ‘அறம்’ திரைப்படத்தின் அதே கதைதான். ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட செல்லக் குழந்தை ஆழ் துளைக்காகத் தோண்டப்பட்ட கிணற்றுக் குழியில் விழுந்துவிடும். அதை எப்படித் தூக்குகிறார்கள் என்பதே கதை.

 

 

‘அறம்’ திரைப்படத்தைப் போலவே முதல் காட்சிகளில் கணவன் மனைவியின் கூடல் காட்சிகளெல்லாம் வரும். மாலூட்டியில் அக்காட்சிகள் மிகுந்த செயற்கைத்தனத்துடன் இருக்கும். ‘அறம்’ படத்தில் இக்காட்சிகள் மிக யதார்த்தமாக உள்ளன. இக்காட்சிகளில் வரும் நடிகை, இப்படத்தின் கதாநாயகி நயன்தாராவின் நடிப்பையும் தாண்டிச் செல்கிறார். ‘அறம்’ படத்தைப் போலவே ‘மாலூட்டி’ படத்திலும் காவல்துறை, அரசு இயந்திரம் என எல்லாரும் சேர்ந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றுவார்கள். எனவே ‘அறம்’ திரைப்படம் கதை மற்றும் திரைக்கதை என்ற வகையில் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. ஆனால் அக்களத்தைத் தன் அரசியலுக்குத் தேவையான வகையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ‘மாலூட்டி’ படத்தில் இத்தகைய அரசியல் எதையும் பரதன் முன்வைக்கவில்லை. ஒரு கடினமான நேரத்தில் பொது மக்கள் சொல்லும் குறைகளும் புலம்பல்களும் காட்டப்படத்தான் செய்தன. ஆனால் அப்படியே அவை வளர்ந்து இந்திய வெறுப்புத் தோற்றத்தைக் கைக்கொள்ளவில்லை. அங்கேதான் ‘அறம்’ அரசியல் படமாகிறது.

 

*

 

‘அறம்’ திரைப்படத்தில் அரசு இயந்திரத்தின் மெத்தனப் போக்கில் மனம் வெறுத்துத் தன் வேலையை ராஜினாமா செய்யும் ஐஏஎஸ் அதிகாரி எம்எல்ஏ ஆகிறார். அல்லது முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ ஆகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் கொள்கைகளைப் பார்த்தால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டாகவே இருக்கமுடியும் என்று யூகிக்கலாம். அல்லது சுயேச்சையாக வென்றிருக்கலாம் என்று தர்க்கம் செய்யலாம். எப்படி இருந்தாலும் அது இயக்குநரின் கனவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அரசு அதிகாரி அரசுக்கு எதிராக மனம் நொந்து அரசுப் பணியில் இருந்து விலகி அரசின் அங்கமாகவே மாறும் ஒரு கனவு. உண்மையில் இந்தக் கனவு இன்றும் சாத்தியம் என்பதுவே இந்தியா நமக்களித்திருக்கும் கொடை. ஆனால் இயக்குநர் இந்தக் கனவைச் சொல்ல இந்திய எதிர்ப்புக்கான களத்தை அமைத்துக்கொள்கிறார். ராக்கெட் விடுவதைக் கேலி செய்யும் காட்சிகள் உணர்வு ரீதியாக மக்களைத் தன்வயப்படுத்த மட்டுமே. உண்மையில் நமக்குத் தேவை, ராக்கெட் விடுவதும்தான், இனி ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிடாமல் இருப்பதும்தான். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பதும், ஒன்று நிகழும் வரை இன்னொன்று நிகழ்வது ஒரு கேடா என்று சொல்வதும், அறிவுபூர்வமான தர்க்கங்களல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். இந்தப் புரிதல் இருந்தால் மட்டுமே அறம் போன்ற திரைப்படங்கள் விரிக்கும் வலையில் விழாமல் இருக்கமுடியும்.

Share

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை.

இந்தக் கட்டுரையில் அரவிந்தன் நீலகண்டன், தொண்டன் பத்திரிகையை சந்திரஹாஸ வாளுடன் ஒப்பிடுகிறார். பொதுவாகவே அரவிந்தனின் இது போன்ற ஒப்பீடுகள் மிக ஆழமான ஒன்றாக இருக்கும். வரலாற்றில், புராணத்தில், இந்திய/ஹிந்து மரபில் இருக்கும் ஒன்றுடன் வரலாற்றைப் பிணைப்பது அவரது பாணி. இதன் மூலம் அவர் வெளிக்கொண்டு வர நினைக்கும் வரலாற்றுடனான மரபில் உரையாடலை அவர் தொடர்ந்து தரப்போகும் உதாரணங்களில் நிலைநிறுத்துவார். எனவே இது வெறும் ஒப்பிடுதல் என்கிற வாள் சுழற்றலைத் தாண்டிச் சென்றுவிடும். இந்தக் கட்டுரையும் இப்படியே.

தொண்டன் இதழ் முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை என்பதுவே அரவிந்தன் சொல்லித்தான் நான் அறிந்துகொண்டேன். தொண்டனின் தேவையையும் அருமையையும் திருவிக போன்றவர்களின் கூற்று மூலம் முன்வைப்பதும் நல்ல சாதுர்யமான பாணி. தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்னும் சமீபக் கூச்சல்களுக்கெல்லாம் முன்பே பதில் சொல்லி வைத்தது போல் அமைகின்றன இக்குறிப்புகள்.

ஹிந்து மதமும் தமிழும் இப்போதுதான் முற்போக்காளர்களாலும் திராவிட அரசியல்காரர்களும் பிரிக்கப்படுகின்றன. சமீப பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட இரண்டும் ஒன்றாகக் கலந்தே கிடந்தன. கே ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலர் அல்ல) நடத்தி இருக்கும் இப்பத்திரிகை இதை உரக்கச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது.

நாம் இந்துக்கள் அல்ல, திராவிடர்கள் என்பவர்களுக்கு தொண்டன் பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு கட்டுரையை ஹிந்துத்துவத்தின் சாசனம் என்றே அரவிந்தன் நீலகண்டன் குறிக்கிறார். மிக முக்கியமான கட்டுரை அது.

உண்மையில் இன்று வலம் பத்திரிகை செய்ய நினைக்கும் ஒன்றை பல மடங்கு வீரியமாக அன்றே செய்திருக்கிறது தொண்டன் பத்திரிகை. இதனால்தான் வலம் இதழ் மிகவும் பேலன்ஸிங்காக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள் போலும். திராவிடர்களே அன்றி ஹிந்துக்கள் அல்ல என்பவர்களை தொண்டன் இதழ் இப்படிச் சொல்கிறது – “இனவேற்றுமையைவிட இந்து மத அழிப்பே அவர்கள் ஆர்வம்”. ஆலயப் பிரவேச சட்டத்துக்கு இந்த இதழ் துணை நின்றிருக்கிறது. தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், ”ஆலயப் பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல், கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத் துணிந்த கிழவியில் செயலை ஒத்திருப்பதாக” எழுதுகிறார்.

அரவிந்தன் நீலகண்டனின் முக்கியமான கட்டுரை.

எனவே… இதுபோன்ற நல்ல கட்டுரைகளை வாசிக்க வலம் இதழுக்கு சந்தா செலுத்துங்கள். நல்ல இதழ்களை ஆதரியுங்கள்.

Share