Tag Archive for EWS

கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு

தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.

கட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.

அம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?

முதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள்? இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.

இன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.

EWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.

ஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்? அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால்! இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள்? 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா? அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.

இப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.

8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.

க்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.

ஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.

  • ஹரன் பிரசன்னா

தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கம்:
https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215186778051424

Share